(Publishing Perspectives என்ற தளத்தில் Izidora Angel எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்)
நான் இப்போது நியூ யார்ககிலுள்ள ராசஸ்டரில் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஜெனேசி ஆற்றை நோக்கியுள்ள சூட் ஒன்றில் தங்கியிருக்கிறேன்- பொன்னும் பழுப்பும் கலந்த இந்த ஆறு மனதுக்கு உகந்ததாய் இருக்கிறது. என் ஜன்னலிலிருந்து யுனிவர்சிடி ஆப் ராசஸ்டரின் அழகிய கேம்பஸ் தெரிகிறது- ஆலய மணி ஓசை ஒவ்வொரு முறை ஒலிக்கும்போது அதன் பசுமை கூடுகிறது; நான் என்னிடமிருந்த அத்தனை மோல்ஸ்கைன் நோட்டுப் புத்தகங்களையும் இங்கு கொண்டு வந்திருக்கிறேன், எவ்வளவு தேவைப்படும் என்று சொல்ல முடியாது. எனக்குப் பிடித்த பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களைக் கணிசமான அளவில் அடுக்கி வைத்திருக்கிறேன், படைப்பூக்கம் பெறும் நோக்கத்தில்: எம்எஃப்கே ஃபிஷர், வர்ஜினியா ஜஹாரிவா, ஜோன் ரிவர்ஸ், கிம் கார்டன் (இங்கே, ராசஸ்டரில்தான் இவர் பிறந்திருக்கிறார் என்பதைப் பின்னர் அறிகிறேன்). மூன்று வாரங்களாக இங்கு நான் எழுதிக் கொண்டும், வாசித்துக் கொண்டும், மொழிபெயர்த்துக் கொண்டும் இருக்கிறேன்.
எலிசபெத் கொஸ்தோவா பவுண்டேஷன் மற்றும் ஒப்பன் லெட்டர்ஸ் புக்ஸ் தயவில் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களுக்கான ரெசிடென்சி ப்ரோகிராமில் நான் இங்கு வந்திருக்கிறேன். என்னை கவனித்துக் கொள்பவர்கள், எதற்கும் அசராத சாட் போஸ்ட்- இவர்தான் ஓப்பன் லெட்டர்ஸ் பதிப்பகம் நடத்துகிறார்-, மற்றும் லாத்விய மொழிபெயர்ப்பாளரும் பதிப்பகத்தின் எடிட்டோரியல் டைரக்டருமாகிய கைஜா ஸ்ட்ராமானிஸ், இனிமையானவர் இவர்.
நான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூலின் பெயர், த சேம் நைட் அவெய்ட்ஸ் அஸ் ஆல்: டயரி ஆஃப் நாவல், இதை எழுதியவர் ஹ்ரிஸ்தோ கராஸ்தோயனோவ். தனித்தன்மை கொண்ட இந்த எழுத்தாளர், இப்போதுதான் இன்னுமொரு முக்கியமான பல்கேரிய விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.
நான் பல நாட்களாக இந்த அறைக்குள் பூட்டிக் கொண்டு இருக்கிறேன். கண்மூடித் திறக்கும் நேரத்தில் இன்னுமொரு மணி நேரம் ஆகிவிட்டிருக்கிறது. எழுதும்போது, காலம் காணாமல் போகிறது. வகுப்புகளுக்குச் செல்கிறேன், மொழிபெயர்ப்பில் உள்ள நூல்கள் பற்றி அங்கு விவாதிக்கும் இளம் இலக்கிய ஆர்வலர்களை நேசிக்கிறேன், எனக்குப் பொருத்தமான விஷயம் இது. எழுதுகிறேன். “பட்டப்படிப்பு முடித்ததும் கோடையில் எதுவும் செய்யப் போவதில்லை, என் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளப் போகிறேன்,” என்றெல்லாம் பேசுகிறேன். அதற்கு அதைவிட அதிக காலம் எடுத்துக் கொள்ளும், என்று சிரிக்கிறேன். அவர்களூம் வாசிக்கிறார்கள், எப்போதும் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள், நான் எழுதியதில் ஒரு பகுதியை விவாதத்துக்கு எடுத்துக் கொள்கிறார்கள், எனது அகந்தை சிறிது அடிவாங்கிச் சற்றே சிறுக்கிறது. மீளச்செயல் வகைகள்.
மக்களோடும் மொழியோடும் தனித்துவமிக்க உறவு
பல்கேரியாவில் கராஸ்தோயனோவ் காத்திருக்கிறார், என் கேள்விகள் அனைத்துக்கும் பதில் தந்தாகி விட்டதா என்று உறுதி செய்து கொள்கிறார். எழுத்தாளருக்கும் அவரது மொழிபெயர்ப்பாளருக்கும் உள்ள உறவு அந்தரங்கமானது, தனித்தன்மை கொண்டது. ஒரு வகையில் அவர்கள் இணையாசிரியர்கள், மொழிபெயர்க்கப்பட முடியாத இடைவெளிகளில் பாலமிடுபவர்கள்- பண்பாட்டு இடைவெளிகள், கடந்தகாலம், எதிர்காலம். மிக நன்றாகச் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பும் ஒரு பொருள் விளக்கம். அதன் நுண்மைகள் மிகப் பரந்தவை, துல்லியமான மொழிபெயர்ப்பு என்பது துவக்கத்திலேயே சாத்தியமற்றுப் போகிறது.
கராஸ்தோயனோவின் புத்தகம் லெனின் மரணத்தையொட்டிய பெருங்காட்சியைக் குறிப்பிடுகிறது. லெனினை அவர் “போல்ஷவிக்குகளின் வோழ்த்” என்று அழைக்கிறார். வோழ்த் என்ற சொல்லின் பொருள்- குடித்தலைவர், ஆன்மீக மீட்பர், குரு. இதில் கல்ட் என்பதன் உணர்த்துதல் இருக்கிறது. கம்யூனிசம் அவ்வாறாகவே இருந்திருக்கிறது, (இப்போதும் இருக்கிறது). ஆனால் என் அகராதிகள் எல்லாம் எளிமையாக, “தலைவர்”, அல்லது, “குடித்தலைவர்” என்று மட்டுமே குறிப்பிடுகின்றன.
மொழிபெயர்த்தல் ஏன் இந்த அளவுக்கு இதயத்தைப் பிளப்பதாய் இருக்கிறது?
முதல் விஷயம், பல்கேரிய மொழி பழமையானது, சற்றே குழப்பமானது, சிக்கலானது. அங்கு வினைச்சொல்லை இணைத்து காலத்தை உணர்த்தலாம்- நடந்ததாய்ச் சொல்லப்படும் நிகழ்வு, ஆனால் இன்னும் முற்றுப் பெறவில்லை, கடந்த காலத்துக்குரிய வினை, அதைச் சொல்பவர் இன்னும் முற்றுப்பெறாத நிகழ்வைப் பார்த்திருக்கவில்லை. இத்தனை பொருளும் ஒற்றை இடைச்சொல்லால் உணர்த்தப்படுகிறது. நான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூல் பல்கேரியாவின் மிகவும் இருண்ட, குழப்பங்கள் நிறைந்த 1920களுக்குரிய காலகட்டத்தைப் புனைவு வடிவில் விவரிக்கிறது. இதன் பிரதான பாத்திரங்கள், எழுதித் தீராத கவிதைகளுக்குரிய கவிஞர் ஜியோ மிலாவ் மற்றும் மிகவும் தீவிரமாகத் தேடப்படும் அரசின்மைவாதி ஜியார்ஜி ஷைதானோவ் இருவரும் உண்மையில் வாழ்ந்தவர்கள். மிகவும் கவனமான ஆய்வுகளைப் பயன்படுத்தி கராஸ்தோயனோவ் தன் பாத்திரங்களை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார் (பின்னர் கொலை செய்கிறார்). ஆனால், அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்க அவர் அங்கிருந்திருக்க வாய்ப்பில்லை- எனவேதான் இந்த நூல் முழுவதும் நடந்ததாய்ச் சொல்லப்படும் ஒன்றைப் பாராதவன் அது இவ்வாறே நடந்தது என்று உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான நுண்விவரம்- ஆனால் ஆங்கிலத்தில் உண்மையாய் இப்படிதான் நடந்தது என்ற மெய்ம்மை உணர்வுடன் நான் இதை மொழிபெயர்த்தாக வேண்டும். இது எல்லாம் இவ்வாறே நடந்தது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். அல்லது?
பல்கேரிய வாக்கியங்களின் அமைப்பை உடைத்து ஆங்கிலத்திலும் அதே அளவுக்கு வலுவான உணர்வுகள் கொண்ட ஆங்கில வாக்கியங்களாய் மாற்றுவது நாற்பது புஷ்அப்புகள் செய்வதற்குச் சமம். வலிமிகுந்த அனுபவம், ஆனால் மேன்மையாய் உணரச் செய்கிறது. ஒரு நாள், நாம் இன்னும் நன்றாகச் செய்கிறோம். ஆனால் சில சமயம் நாம் அழுகிறோம், திட்டுகிறோம்- வித்துக்கிணையான, இரக்கமற்ற நபகோவ்வின் “மொழிபெயர்ப்புக் கலை” என்ற கட்டுரை ஆவியாய் நம்மைப் பீடிக்கிறது:
“நரகத்தை நோக்கிய அடுத்த அடி மொழிபெயர்ப்பாளனால் எடுத்து வைக்கப்படுகிறது- புரிந்து கொள்ளும் அக்கறையில்லாமலோ அரைகுறையாய் பாவித்துக் கொண்ட வாசகர்களுக்கு புரியவைக்க முடியாதது போலிருப்பதாலோ அவன் வேண்டுமென்றே சில வார்த்தைகளையோ பகுதிகளையோ மொழிபெயர்க்காமல் கடந்து செல்லும்போது; அவனது அகராதியின் வெற்றுப் பார்வையை மனசாட்சியின் உறுத்தல்கள் ஏதுமின்றி ஏற்றுக் கொள்கிறான்; பாண்டித்தியத்தை ஆசாரத்துக்கு உட்படுத்துகிறான்; எழுத்தாளனைவிட தனக்கு அதிகம் தெரிந்திருப்பதாய் நினைப்பதால் அவனைவிடக் குறைவாகத் தெரிந்தால் போதும் என்ற நிலைக்கு ஆயத்தமாய் இருக்கிறான்”.
பொருள் காப்பதற்காகப் போராடினால் மட்டும் போதாது, நாம் அதன் ஓசை நயத்துக்கும் நியாயமாய் நடந்து கொள்ள வேண்டும், என்கிறார் நபகோவ். பல்கேரிய மொழியில் ஒற்றை அசைகள் கொண்ட உணர்வு வெளிப்பாட்டுக் கும்பல் ஒன்று இருக்கிறது, அவற்றை ஒன்றாய்க் கோர்க்கும்போது, மகத்தான ஆற்றல் கொண்டு வேகமெடுக்கும் மொழிபெயர்க்கவே முடியாத உணர்ச்சி நிலைச் சொற்றொடர்கள் உருவாகின்றன- “அ, கக் லி புக் நெ!” என்தில் சற்றே விரோதமான, தீச்சாயல் உண்டு- அது ஆயிரக்கணக்கான ஆண்டுகால பயன்பாட்டால் உருவானது- “அது சரி!” என்று மொழிபெயர்ப்பது அதற்கு நியாயம் செய்யும் என்று நினைத்தே பார்க்க முடியாது.
ரஷ்யர்கள் தங்கள் அரசகுலத்தவர்களுக்கு பிரெஞ்சு சொற்றொடர்கள் தருகின்றனர், மொழிபெயர்ப்பாளர்கள் அவற்றை சாய்வெழுத்துகளில் எழுதி முடித்துக் கொள்கின்றனர். வாசகர் ஓரளவுக்கு பிரெஞ்சு பேசத் தெரிந்தவர் என்று எத்ர்பார்க்கப்படுகிறது. ஆனால் பல்கேரிய மொழியில் பிரெஞ்சு சொற்களைவிட துருக்கியச் சொற்கள்தான் அதிகமிருக்கின்றன. இது அரசகுல ரத்தம் ஓடுகிறது என்று கண்காட்டுவதைவிட, ஆட்டோமான் பேரரசுக்கு ஐநூறு ஆண்டுகாலம் அடிமைகளாக இருந்து ஆன்மீக வதைபட்டதை நோக்கி தலைகுனிவதாகவே இருக்கிறது. போடுர்சென், என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம். அது “துருக்கியனாதல்” என்றோ முகமதின் பெயரால் கிறித்தவத்தைக் கைவிடக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ பொருள்படும். ஓர் உவமையாக, அது மீண்டும் கண்டெடுக்கப்பட முடியாத வகைளில் ஒருவன் தொலைந்து போதலைக் குறிக்கும். இதை எப்படி மொழிபெயர்க்க முடியும்?
இது தவிர பல்கேரிய மொழியில் ஆயிரக்கணக்கான அடியாழ நிறப்பிரிகையாய் எச்சங்கள் உள்ளன- இவற்றுக்கு இணையான ஒற்றைச்சொல் ஆங்கிலத்தில் கிடையாது (இதயத்தைப் பிளக்கும் இன்னும் பல காரணங்கள்), இவை உயிரற்றவற்றுக்கு ஆண் பெண் என்ற பாலினம் அளிக்கின்றன. பல்கேரிய மொழியில் மரணம் ஒரு பெண் (இதிலென்ன ஆச்சர்யம்), ஆனால் ஆங்கிலத்தில், ஆம், பால் அடையாளமற்றது. ஆனால் கராஸ்தோயனோவ் முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் குண்டுவீச்சின் துகள் தாக்கி கவிஞனின் வலக்கண் சிதைக்கப்பட்டு அவனது மண்டையோட்டின் ஒரு பகுதி இழக்கப்படுவதைத் தொடர்ந்து மரணம், “அவனைத் தன் இறுக்கிய அணைப்பில் ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் வைத்திருந்தாள்” என்று எழுதும்போது, மரணத்தைப் பெண்ணாக்க வேண்டும்.
மொழிபெயர்க்க எவ்வளவு நேரமாகும், என்று என்னிடம் பலர் கேட்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள், என்று பதில் சொல்ல விரும்புகிறேன், அதிலும் குறிப்பாக கராஸ்தோயனோவின் முத்திரை வாக்கியங்கள்- ஒன்பது வரிகளுக்கு நீண்டு செல்லும் அவை ஒவ்வொன்றும் மொழிபெயர்க்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளலாம், எடுத்துக் கொள்கின்றன். ஆனால் எனக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இல்லை. கராஸ்தோயனோவ் குரலுக்குள் என் குரலைக் காண மூன்று வார கால அவகாசம்தான் இருக்கிறது.
ஐஸ்லாந்தின் புகழ்பெற்றவர்களைச் சந்தித்தல்…
காற்று வாங்கலாம் என்று என் அறையை விட்டு வெளியேறும்போது அசாதாரணமான அனுபவங்கள் எனக்கு அருளப்படுகின்றன. கடந்த சில நாட்களின் இரு மாலைப் பொழுதுகள் எழுத்தாளரும் கொரில்லா அரசியல்வாதியும் ஸ்டாண்ட் அப் காமிக்கும் நடிகருமான ஜோன் நாருடன் இனிமையாய்க் கழிந்தன. மூன்று பகுதிகளாக வெளிவரவிருக்கும் அவரது அருமையான தன்வரலாற்றின் முதல் புத்தகம், த இந்தியன், விற்பனை தொடர்பாக புக் டூர் செய்து கொண்டிருந்தவர் ராசஸ்டரில் சில நாட்கள் தங்கியிருந்தார். அதை ஐஸ்லாந்திக் மொழியிலிருந்து லிட்டன் ஸ்மித் ஆங்கில மொழியாக்கம் செய்திருக்கிறார்.
இப்போதுதான் டெக்சாஸில் ரெசிடென்சி முடித்து வருகிறார் நார், அந்த மாநிலத்தின் தவறவிடமுடியாத உருவத்தை தன் புஜத்தில் கருப்பு மையில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார் அவர். நாங்கள் ஒன்பது பேர்- எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மனிதர்கள்- டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். வைன் குடிக்கிறோம், கூஸ்கூஸுடன் ப்ரேய்ஸ்ட் பீஃபும் சிக்கன் டிக்கா மசாலாவும் பரோஸ்சிடோ உறையிட்ட ஆர்டிசோக் இதயங்களும் கொண்ட விருந்துத் தட்டுகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.
நான் கேள்விப்பட்ட அளவில் மிகுந்த வெற்றிபெற்ற கொரில்லாத் தாக்குதலாக அமைந்த ஜோனின் அனுபவங்கள் குறித்து விசாரிக்கிறேன். 2008ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட நிதிநிலைச் சிக்கலைத் தொடர்ந்து அவர் பகடியாய் ஒரு கட்சி துவங்கினார், கேலியாய் பிரச்சாரம் செய்தார், ஐஸ்லாந்தின் தலைநகரும் மிகப்பெரும் நகருமான ரெய்க்ஜாவிக் நகர மேயராக வெற்றியும் பெற்றார்- அவரே சொல்வது போல், “நான் உட்பட அனைவருக்கும் அது ஒரு அதிர்ச்சியாய் இருந்தது”. அவர் அந்நகரை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றியிருக்கவும் கூடும். இப்போது ஒரு பேச்சிருக்கிறது- வற்புறுத்தல் என்றும் சொல்லலாம்- அவர் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட வேண்டுமென்கின்றனர். அவர் போட்டியிடக் கூடும், அல்லது, அது வேண்டாம் என்றும் சொல்லலாம். ஆனால் பல நூல்கள் எழுதியுள்ள இவர், அவற்றில் சில நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, குழந்தைப் பருவத்தில் அறிவு வளர்ச்சி குன்றியவராய், தன் பெயரைக்கூட எழுத முடியாத அளவுக்கு கடும் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவராக இருந்தார் என்பதைப் பார்க்கவேண்டும், அவரே என்னிடம் இதைத் திரும்பத் திரும்பச் சொன்னார்.
போதாமைகள்? எல்லாம் உன் மனதில்தான்.
ஆக, நபகோவ் எவ்வாறு மொழிபெயர்த்தார்? அவரும் சொல்வதாயில்லை. “இரவின் கடுமையான பொழுது அதை எதிர்கொள்வதில் கழிந்தது. ஒருவழியாய் அதை மொழிபெயர்த்தேன்; ஆனால் இங்கு என் மொழிபெயர்ப்பை அளித்தால், ஒரு சில குற்றம் குறையற்ற விதிகளைக் கடைபிடித்தால் போதும், பூரணத்துவம் அடையப்படக்கூடும் என்பதை வாசகர் சந்தேகிக்க அது இடம் கொடுத்துவிடும்”
புஷ்கினின் ஒற்றை வரியைப் பற்றி மட்டுமே அவர் பேசியிருக்கிறார்.