வண்ணக்கழுத்து 13: இரண்டாம் சாகசம்

”ரசெல்தார் மேலோட்டமான காயங்களிலிருந்து குணமடைந்த பின்பு நாங்கள் இரண்டாவது முறை போர்முனைக்கு கொண்டு செல்லப்பட்டோம். இந்த முறை அவர் என்னுடன் ஹிராவையும் எடுத்துக் கொண்டார். அப்போதே நாங்கள் கொண்டு செல்லப்போகும் செய்தி மிக முக்கியமானது என்பதைப் புரிந்து கொண்டேன். இரண்டு பேரிடம் நம்பிக்கை வைத்தால் இருவரில்ஒருவராவது செய்தியைக் கொண்டு சேர்ப்பார்களே.

“குளிர் கடுமையாக இருந்தது. ஏதோ பனிப்பிரதேசத்தில் வாழ்வது போல உணர்ந்தேன். எப்போதும் மழை பெய்துகொண்டிருந்தது. தரை மிக மோசமாக இருந்தது. ஒவ்வொரு முறை தரையில் கால் வைக்கும் போதும், புதை மணலைப்போல சகதியில் சிக்கிக் கொண்டது, பிணத்தின் மீது கால் வைத்தது போல சில்லிட்டது.

“இப்போது நாங்கள் ஒரு புதிய இடத்தை வந்தடைந்தோம். அது பதுங்கு குழி அல்ல. ஒரு சிறிய கிராமம். அதைச் சுற்றிலும், எரிந்து கொண்டிருக்கும் அழிவின் அலை வீசியது. அது எதோ புனிதமான முக்கியமான இடம் அந்த மனிதர்களின் முகத்தைப் பார்க்கையில் தெரிந்தது. கிட்டத்தட்ட அந்த இடத்தின் எல்லாக் கூரைகளையும், சுவர்களையும், மரங்களையும் சாவின் சிவப்பு நாக்குகள் தீண்டியிருந்த போதும், அந்த இடத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை. திறந்த வெளியில் இருப்பதை நான் பெரிதும் விரும்பினேன். சாம்பல் நிற வானத்தை கீழே, மிகவும் கீழே பார்க்க முடிந்தது. இன்னமும் எந்த குண்டும் விழுந்திருக்காத வெண்பனி நிலத் துண்டைகளையும் பார்க்க முடிந்தது. அத்தனை குண்டு வீச்சுக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் நடுவில், பெருங்காற்றில் சிதைந்த பறவைக்கூடுகள் போல வீடுகள் நொறுங்கிப் போயிருந்த இடத்தில், எலிகள் ஒவ்வொரு பொந்தாக ஓடின, சுண்டெலிகள் பாலாடைக் கட்டிகளைத் திருடி ஓடின, ஈக்களைப் பிடிக்க சிலந்திகள் வலைகள் பின்னின. மனிதர்கள் சக மனிதர்களால் கொல்லப்படுவதில் பொருட்படுத்த ஒன்றுமில்லை,, அன்று வானைச் சூழ்ந்திருந்த மேகங்களைப் போலவே அதில் கவலைப்பட ஒன்றுமில்லை என்றபடி அவை பாட்டுக்கு தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன.

“சிறிது நேரம் கழித்து குண்டுவீச்சு நின்றது. அந்தக் கிராமம், அதாவது எஞ்சிய கிராமம், அந்தத் தாக்குதலில் தப்பித்துவிட்டது போலப்பட்டது. மேலும் மேலும் இருண்டது. வானம், நான் என் மூக்கை அதில் நுழைக்கும் அளவிற்கு மிகவும் கீழே இறங்கியிருந்தது. என்னுடைய ஒவ்வொரு சிறகையும் குளிர் பிடித்துக் கொண்டு, என் உடம்பிலிருந்து அவற்றை பிய்க்கத் துவங்கியது. எங்கள் கூண்டில் அசையாது உட்கார்ந்திருப்பது முடியாத காரியம் என்பதை உணர்ந்தேன். எங்களைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள நானும் ஹிராவும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டோம்.

“மீண்டும் துப்பாக்கிச் சூடு துவங்கியது. இந்த முறை அனைத்து திசைகளிலிருந்தும். எங்கள் சின்ன கிராமம் எதிரியால் சூழப்பட்ட தீவாக ஆகிவிட்டது. எல்லாவற்றையும் மூடுபனி போர்த்தியிருக்க, எதிரிகள் பின் பக்கத்திலிருந்து எங்களுடைய தொடர்பை துண்டித்துவிட்டார்கள். பிறகு, ஏவுகனைகளை வீசத் துவங்கினார்கள். மதியம் கழிந்து அதிக நேரம் இருக்காது, ஆனாலும் இமாலய இரவைப் போலவே, இருட்டாகவும் நசநசப்பாகவும் இருந்தது. இன்னும் இரவாகவில்லை என்பதை மனிதர்கள் எப்படி அறியக்கூடும் என்று யோசித்துப் பார்த்தேன்.. என்ன இருந்தாலும் மனிதர்கள் பறவைகள் அளவிற்கு விஷயம் தெரிந்தவர்கள் அல்லவே.

“எங்களுடைய செய்திகளைக் கொண்டு செல்வதற்காக நானும் ஹிராவும் திறந்துவிடப்பட்டோம். நங்கள் மேலே பறந்தோம். ஆனால், அதிக தூரம் செல்ல முடியவில்லை. சீக்கிரமே அடந்த பனியினால் விழுங்கப்பட்டோம். எங்கள் கண்கள் எதையும் பார்க்க முடியவில்லை. ஒரு குளிர்ந்த ஈரப்பதம் மீக்க திரை ஒன்று எங்கள் கண்களை அழுத்தியது. ஆனால், நான் இதைப் போல ஒன்றை எதிர்பார்த்துதான் இருந்தேன். போர்க்களத்திலோ இந்தியாவிலோ இப்படிப்பட்ட நேரத்தில் நான் என்ன செய்வேனோ அதையே செய்தேன். நான் மேலே பறந்தேன். ஒரு சமயம் இன்னும் ஒரு அடி கூட மேலே செல்ல முடியாது என்பது போலத் தோன்றியது. என் இறக்கைகள் ஈரமாகி இருந்தன. என் மூச்சு, தொடர்ந்த தும்மல்களால் தடைப்பட்டது. எக்கணமும் செத்து விழுந்துவிடப் போகிறேன் என்று நினைத்தேன். புறா கடவுளர்களின் உதவியால், இப்போது என்னால் சில கஜம் வரைக் காண முடிந்தது. எனவே, நான் மேலே பறந்தேன். இப்போது என் கண்களில் எரிச்சலை உணர்ந்தேன். என் கண்கள் குருடாவதிலிருந்து தப்பிக்க, புழுதிப்புயலில் ஊடே பறக்கும் போது நான் பயன்படுத்தும் என்னுடைய இரண்டாவது கண் இமையை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்பதை திடீரென்று, உணர்ந்தேன். ஏன் என்றால், நாங்கள் மூடுபனிக்கிடையே இல்லை. மனிதர்கள் பரப்பிவிட்ட, மட்டமான வாடை கொண்ட, கண்களை அழிக்கும் புகை அது. யாரோ ஊசியால் கண்களிலேயே குத்தியது போல என் கண்கள் வலித்தன. என் கண் திரை மூடியிருக்க, மூச்சைப் பிடித்துக் கொண்டு நான் போராடி மேலே ஏறினேன். என்னுடன் வந்து கொண்டிருந்த ஹிராவும் மேலே ஏறினான். அந்த வாயுவால் மூச்சடைத்து சாகும் நிலைக்கு வந்துவிட்டான் அவன். ஆனால், அவன் தன்னுடைய போராட்டத்தை நிறுத்திக் கொள்ளப்போவதில்லை. கடைசியில் அந்த விஷவாயுவைத் தாண்டி நாங்கள் மேலே பறந்தோம். அங்கே காற்று சுத்தமாக இருந்தது. என் கண்களின் திரையைத் திறந்து, சாம்பல் நிற வானத்தை நோக்கினேன். அங்கே எங்களுடைய படைவரிசை தெரிந்தது. நாங்கள் அதை நோக்கிப் பறந்தோம்.

”எங்கள் இடம் நோக்கி பாதி தூரம் சென்றிருப்போம், அப்போது உடம்பு முழுக்க கருப்புச் சிலுவை போட்டுக் கொண்டிருந்த ஒரு கொடூர கழுகு எங்கள் அருகே பறந்து, பக் பஃப், பக் பஃப், பாப் பா… என்று எங்கள் மீது நெருப்பை உமிழ்ந்தது. நாங்கள் குனிந்து கொண்டோம். எங்களால் முடிந்ததைச் செய்தோம். அதன் பின்பக்கம் பறந்து சென்றோம். அந்தப் பக்கத்திலிருந்து அந்த இயந்திரங்களால் எங்களைத் தாக்க முடியவில்லை. அந்த இயந்திரக் கழுகின் வாலுக்கு மேலே நாங்கள் பறந்து செல்வதை நினைத்துப் பாருங்கள். அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது வட்டமடிக்கத் துவங்கியது. நாங்களும் வட்டமடித்தோம். அது குட்டிக்கரணம் போட்டது. நாங்களும் போட்டோம். நிஜமான கழுகைப் போல் இல்லாமல், அதனுடைய வால் ஒரு செத்த மீனைப் போல விறைப்பாக இருந்தது. அதை அசைக்கமுடியாமல், அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதன் முன்னே மறுபடி சென்றால், அந்த நொடியிலேயே கொல்லப்படுவோம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

“நேரம் போய்க்கொண்டிருந்த்து. அந்த இயந்திர கழுகின் வாலுக்கு மேலேயே காலம் பூராவும் சுற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை நான் உணர்ந்தேன். நாங்கள் கிளம்பி வந்த, விஷவாயு சூழப்பட்ட கிராமத்தில் ரசெல்தாரும் எங்கள் நண்பர்களும் இருந்தார்கள். அவர்களின் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு உதவி கிடைக்கவும் நாங்கள் எங்கள் செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

“அப்போது அந்த இயந்திரக் கழுகு ஒரு தந்திரம் செய்தது. அது தன்னுடைய இடம் நோக்கி திரும்பிப் பறந்து சென்றது. அது எங்களைச் சுடாமல் இருக்கும் பொருட்டு, அதன் வாலுக்கு மேலேயே பறந்து சென்று எதிரியின் எல்லைக்குள் நுழைய நாங்கள் விரும்பவில்லை. குறி பார்த்துச் சுடுபவர்கள் அங்கு எங்களைச் சுட்டு வீழ்த்தி விடுவார்கள். இப்போது நாங்கள் எங்கள் இடம் நோக்கி பாதி தூரம் வந்துவிட்டோம், எங்கள் எல்கையும் கண்களுக்குத் தெரிகிறது, எனவே நாங்கள் கவனமாக இருப்பதில் அவ்வளவு அக்கறை செளுத்தவில்லை. அந்த இயந்திரக் கழுகிடமிருந்து திரும்பி எங்களால் முடிந்த அளவு வேகமாகப் பறந்தோம். ஒவ்வொரு முறை இறக்கையை அடிக்கும் போதும் மேலே உயர்ந்தோம். நாங்கள் இப்படிச் செய்த உடனே, அந்த பரிதாப மிருகம் திரும்பி எங்களைத் தொடர ஆரம்பித்தது. அதிர்ஷ்டவசமாக, அதற்கு கொஞ்சம் நேரம் பிடித்தது. இப்போது நாங்கள் எங்கள் எல்கைக்கு மேலே பறக்கிறோம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், அந்தக் கழுகும் எங்கள் உயரத்திற்கு வந்து, எங்களை நோக்கி நெருப்பைக் கொட்டியது, பஃப் பஃப் பாப் பா. இப்போது நாங்கள் குனிந்து மூழ்க நிர்பந்திக்கப்பட்டோம். நான் ஹிராவை எனக்கு கீழே பறக்கச் செய்தேன். அது அவனை பாதுகாத்தது. அப்படியே நாங்கள் பறந்தோம். ஆனால், விதி என்பது விதியே தான். எங்கிருந்தோ ஒரு கழுகு வந்து எதிரியை நோக்கிச் சுட்டது. நாங்கள் இப்போது பாதுகாப்பாக உணர்ந்தோம். நானும் ஹிராவும் அருகருகே பறந்தோம். அப்போது நான் தவிர்த்த ஒரு குண்டு அவனுடைய இறக்கையை முறித்தது. பாவம்! ஹிரா காயம்பட்டுவிட்டான். அவன் வட்டமடித்து ஒரு உடைந்த வெள்ளி இலையைப் போலே காற்றின் ஊடே கீழே விழுந்தான். நல்லவேளை எங்கள் எல்லையில் விழுந்தான். அவன் இறந்துவிட்டதைக் கண்டதும், இரண்டு கழுகுகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையைக் காணத் திரும்பிக்கூட பார்க்காமல், நான் மின்னல் வேகத்தில் பறந்தேன்.

“நான் எங்கள் இடத்தை அடைந்தவுடன், தலைமைத் தளபதியிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர் என் முதுகைத் தட்டிக் கொடுத்தார். அந்த வயதான மனிதர் அந்த காகிதத் துண்டைப் படித்துவிட்டு, சில்வண்டு போல் ஓசை எழுப்பிக்கொண்டிருந்த அதிசய வஸ்துக்கள் சிலவற்றைத் தொட்டு ஒரு கொம்பை எடுத்து அதில் என்னவோ உறுமினார். இதைக் கண்டு, முதன் முறையாக ஒரு முக்கியமான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இப்போது கோண்ட் என்னை என்னுடைய கூண்டிற்கு கொண்டு போனார். அங்கு, ஹிராவை நினைத்துக் கொண்டு நான் உட்கார்ந்திருக்க, எனக்கு கீழே இருக்கும் பூமி மொத்தமும் அதிர்ந்த்தை உணர்ந்தேன். வெட்டுக்கிளிகள் போல இயந்திரக் கழுகுகள் பறந்தன. அவை ஊளையிட்டன, இரைந்தன, குரைத்தன. கீழே, நிலத்திலிருந்து, எண்ணற்ற உலோக நாய்கள் வெடித்து உறுமின. பிறகு, காட்டிலிருக்கும் ஒட்டு மொத்த புலிகளுக்கும் பைத்தியம் பிடித்துவிட்டதைப் போல, அடர்ந்த குரலில் ஊளைச் சத்தம் கேட்டது. கோண்ட் என் தலையைத் தட்டிக் கொடுத்து, ‘இன்று நீ காப்பாற்றிவிட்டாய்’ என்றார். எனக்கு தான் நாள் ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இருண்ட சாம்பல் நிற வானத்திற்கு கீழே, மரணம் ஒரு டிராகனைப் போலவே சுற்றிக் கொண்டும் அலறிக் கொண்டும், தன் பிடியிலிருந்த அனைவரையும் கசக்கிக் கொண்டும் இருந்தது. அடுத்த நாள் பயிற்சிக்காக எங்கள் தளத்திற்கு பக்கத்தில் பறந்த போது, என் கூண்டிலிருந்து ஒரு மைல் தொலைவிற்குள் நிலம் குண்டுகளால் துளைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். எலிகளாலும் சுண்டெலிகளாலும் கூடத் தப்பிக்க முடியவில்லை. டஜன் கணக்கில் அவை கொல்லப்பட்டு, பிய்த்து எறியப்பட்டிருந்தன. என்ன ஒரு சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பதை இதிலிருந்தே நீங்கள் அளவிட்டுக் கொள்ளலாம். ஓ! எத்தனைக் கோரம். எனக்கு துக்கமாக இருந்தது. இப்போது ஹிராவும் செத்துப் போய்விட்டான். நான் தனிமையாகவும் சோர்வாகவும் உணர்ந்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.