– கெர்ரி ப்ரௌன் (Kerry Brown) –
ஓப்பன் டெமாக்ரசி என்ற தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்
சீன அரசியல்வாதிகள் சீனாவின் மரபார்ந்த கலாசார மகத்துவத்தைச் சுட்டிக்காட்டி உரையாற்றுவதைச் சமீப காலமாக அடிக்கடி பார்க்க முடிகிறது. நவீன சீனாவின் விளம்பரமாகவும் அதற்கு உலகளாவிய சக்தியாக விளங்கும் தகுதி இருக்கிறது என்று நிறுவவும் அதன் கலாசாரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் இவர்கள்.
அதிலும் குறிப்பாக, இன்aறைய தலைமுறையைச் சேர்ந்த இரு தலைமை கோட்பாட்டியலாளர்கள்- சீன பிரதமர் சி ஜின்பிங்கும் சீன அரசின் பிரச்சார தலைவர் லியு யுன்ஷானும் பண்டைக்கால கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் பற்றிய குறிப்புகளை மிக அதிக அளவில் கையாண்டு உரையாற்றுகின்றனர். ஏதோ ஒரு வகையில் தாமும் இந்த “மாபெரும் மரபின்” சந்ததியினர் என்று தம்மை முன்னிறுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. வெளியுலகம் தம் மரபை இன்னும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்- கன்பூஷியஸ் இன்ஸ்டிட்யூட் போன்ற நிறுவனங்களைக் கொண்டு இந்த மரபை உலகெங்கும் எடுத்துச் செல்லவும் தம் ஆற்றல்களைச் சீன அரசியல்வாதிகள் செலவிடுகின்றனர்.
தன்னைப் புரட்சிகரமானதாகக் காட்டிக்கொள்ளும் கட்சியொன்று சீன கலாசாரத்தின் சாரம் என்று ஓரளவு மரபார்ந்ததாய் உள்ள பார்வையை விளம்பரப்படுத்திக் கொள்வது நவீன சீனாவின் பெரும் முரண்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் சீனாவின் பெருந்தலைவர்கள் சீன கலாசாரம், அதன் முக்கியத்துவம், பொருள் என்று அத்தனை வலியுறுத்திய பின்னும் ஒரு கேள்வி நம்முன் நிற்கிறது- அவர்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்? வழக்கப்படியான கன்பூசியஸ் சிலைகள், அவர் பற்றிய உரைகள் போன்றவற்றில் ஓரளவுதான் அர்த்தம் இருக்கிறது. உண்மையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை கொண்ட அதன் எழுத்துப்பிரதிகளின் பெருந்தொகையே சீன இலக்கியத்தின் தனித்துவ இயல்பை உணர்த்துவதாய் இருக்கிறது. இன்றும் சீனாவின் சிந்தனையை நெறிப்படுத்தும் கூட்டு வரலாற்று நினைவை விரிவான அளவில் புரிந்து கொள்ளும் வாய்ப்பை அதன் தொல் இலக்கிய மரபே நமக்கு அளிக்கிறது.
சீனா தன் “சிறப்பு” என்று சொல்லிக் கொள்ளும்போது, அதன் கலாசார மரபுக்கு வெளியே இருப்பவர்கள் அத்தகைய பெருமிதங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நம் கலாசாரத்துக்கு என்று சில மதிப்பீடுகளும் விமரிசன அளவைகளும் வைத்துக்கொண்டு, சீனாவை அணுகும்போது அவற்றையே வேறு விதமாகக் கையாள்வதுமான இரட்டைப் பார்வை கொள்ளக்கூடிய அபாயம்கூட இருக்கிறது.
ஆனால் இதுபோன்ற ஒரு முரண்பாடு சீனாவின் உள்ளும் வெளியேயும் பலரிடம் காணப்படுகிறது- சீனா மெய்யாலுமே “மாறுபட்டதுதான்” என்று சொல்வதில் அவர்களுக்கு அலுப்பதேயில்லை. எனவே அதைப் புரிந்து கொள்ள முழுக்க முழுக்க வேறு தனி கருவிகள் வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்போது சீனாவின் மரபார்ந்த கலாசாரத்தின் புகழ் பாடும் பீஜிங் அரசியல்வாதிகளுக்கு இது போன்ற அணுகுமுறை மிகவும் உசிதமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். சீனா “மற்றவர்கள் போலில்லை” என்று அவர்கள் இப்போது அதிக அளவில் சொல்லிக் கொள்கிறார்கள், சீனாவின் சட்ட அமைப்பு, விழுமியங்கள் குறித்து விமரிசனம் செய்யும்போதும், அதன் நிர்வாக அமைப்பு நிலைக்கக்கூடிய சாத்தியம் பற்றியும் கேள்வி எழுப்பும் அந்நியர்களைப் புறம்தள்ளவும், சீனாவின் “அசாதாரண தனித்துவம்” என்ற வாதம் உதவுகிறது. “எங்களை எங்கள் மதிப்பீடுகளின்படி புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மதிப்பீடுகளை எங்கள் மேல் திணிக்க வேண்டாம்” என்பது அவர்களது பதிலாய் இருக்கிறது.
தனி உலகம்
![]()
இப்படி தனி மகத்துவம் கொண்டாடுவது அதற்கேயுரிய ஆபத்துகள் கொண்டிருப்பது தெளிவு. இதற்கேற்றச் சிறந்த முறிமருந்து ஓர் ஆளுமையிடம் உண்டு- இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் அனைவரையும்விட இவர் “மரபார்ந்த ஐரோப்பிய” மற்றும் “மரபார்ந்த சீன” கலாசாரங்களில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார்- சியான் ஜோங்ஷு (Qian Zhongshu).
1998ல், தன் 88ஆம் வயதில் மறைந்த சியான் ஜோங்ஷு (1949க்கு சற்று முன்னர்), நவீன சீன இலக்கியத்தின் மிக முக்கியமான நாவலை எழுதினார்- Cities Besieged. ஆனால் அவர் எழுதியதில் மிக ஆழமான படைப்பு அவரது சிறு கட்டுரைகள் கொண்ட பெருந்தொகுப்பு: அதை அவரால் 1979ல் கலாசார புரட்சி முடிவுக்கு வந்தபின்தான் பதிப்பிக்க முடிந்தது. 1990களின் பிற்பகுதியில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு, Limited Views: Essays on Ideas and Letters என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்டது.
சியான் பல மொழிகளைத் தேர்ந்தவர் என்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. அவர் தன் தாய் மொழி சீனத்துக்கு அப்பால் – ஆங்கிலம், ஸ்பானிஷ், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளை – விரிவாகவும் ஆழமாகவும் வாசித்திருந்தவர். அவரது கட்டுரைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன- ஹென்றி பீல்டிங் முதல் கிறிஸ்தோபர் மார்லோ, கத்தே, ஜூசெப்பெ உங்கரெட்டி என்று பலரையும் ஏராளமாக மேற்கோள் காட்டுகிறார். அதே சமயம் சீன எழுத்தாளர்களையும் அவர்களது காலகட்டம் கடந்து தொடுகிறார்- ஆவணப்படுத்தப்பட்ட கவிஞர்களில் முதலான்வரான சி யான் முதல் அமானுடத்தைக் கவிதையில் எழுதிய ஹான் வம்ச கவிஞர் ருவான் ஜி, தன் தலைமுறையைச் சேர்ந்த லின் யுசேங் என்று அனைவரையும் மேற்கோள் காட்டுகிறார். எனினும் இவர் தன் மேதைமையை வெளிப்படுத்திக் கொள்வதில் அலங்காரமோ ஆடம்பரமோ சிறிதும் இல்லை. இவரது கட்டுரைகளில் நம் கருத்தைக் கவரும் விஷயம் இதுதான்- தனித்துவமிக்க கலாசார மரபுகள் தம் வேறுபாடுகளை இழக்காதபோதும் ஆழமான ஒற்றுமை கொண்டிருத்தலுக்கான இணைபுள்ளிகளை சியான் அடுத்தடுத்த கட்டுரைகளில் தொடர்ந்து சொல்லிச் செல்கிறார்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம், “உயரத்தின் துயரம்” என்ற கட்டுரையில் காண முடிகிறது. இதில் சியான் டாங் மற்றும் சாங் வம்ச அரசர்களின் காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள் மலைச்சிகரம் ஒன்றை அடையும்போது உணர்ந்து வெளிப்படுத்தும் சோக உணர்வை எழுதுகிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், அவர் இதே உணர்வை பீல்டிங்கின் பதினெட்டாம் நூற்றாண்டு நாவலான டாம் ஜோன்ஸிலும் காண்கிறார். சீன செவ்வியல் நூல்களுக்கும் மேற்கத்திய செவ்வியல் நூல்களுக்கும் பொதுவான உணர்வுகளின் இலக்கணத்தை அவரால் அடையாளம் கண்டு வடிவமைக்க முடிகிறது. இவ்வாறு சோகம், ஆனந்தம், உணர்வுச் சிதைவு முதலான சிக்கலான பல உணர்வு நிலைகளை அடுத்தடுத்த கட்டுரைகளில் எழுதி இதைச் செய்கிறார். இதன் ஒட்டுமொத்த விளைவு நம் மீது மிகுந்த தாக்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது.
கலாசார புரட்சி நிகழ்ந்த காலகட்டத்தில் சியான் இந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவற்றை எழுதினார். தாம் இருவரும் சிந்தனையாளர்களைச் சீர்த்திருத்தும் நோக்கத்தில் அப்போது அமைக்கப்பட்டிருந்த உழைப்பு முகாம்கள் ஒன்றின் காண்டீனில் பரிமாறுபவர்களாகப் பணியாற்றும் நிலைக்குத் தள்ளி அவமானப்பட்ட காலத்தில் இந்தக் கட்டுரைகளை அவர் எழுதினார் என்ற சாட்சியம் அவரது மனைவி யாங் ஜியாங்கால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்களில் அவர்களது மருமகன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் எங்கும் இந்த நிகழ்வுகள் குறித்து தனிப்பட்ட வகையில் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மிகத் தேர்ந்த வாசிப்பு உள்ளவரும் பல்வேறு சிந்தனை மரபுகளில் அறிமுகம் உள்ளவருமாகிய ஒருவரின் சாட்சியமாகவே அனைத்தும் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு அதிசயம், இந்தக் கட்டுரைகளில் எந்த அரசியலும் இல்லை, அவர் யாரையும் கண்டிப்பதில்லை, யாரையும் குற்றம் சாட்டுவதில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே, காலத்தையும் எல்லைகளையும் கடந்த மானுடத்தன்மைக்கு இது ஒரு மகோன்னதமான நினைவுச் சின்னம் என்று சொல்லலாம், எந்த ஒரு தேசமும் பிறரைக் காட்டிலும் தன்னை ஏதோ ஒரு வகையில் தனியாகப் பிரித்துக் காட்டிக் கொள்வதை இந்நூல் முழுமையாய் நிராகரிக்கிறது.
சியானின் இந்த மிகச்சிறந்த நூலை வாசிப்பதால் ஆர்வமுள்ள வாசகர்கள் ஒவ்வொருவரும் பயனடைவார்கள். கூடுதலாக, சீன பண்பாட்டு மரபின் விரிவான கானனை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்ற கேள்விக்கும் இங்கு இடமிருக்கிறது. இந்த மரபைத் தங்கள் நோக்கங்களுக்காக மிகுந்த ஆற்றலுடனும் சாமர்த்தியமாகவும் பீஜிங்கின் அரசியல் தலைவர்களும் அவர்களது இரவலர்களும் பயன்படுத்திக் கொள்ளும் காலத்தில் இதன் அவசியம் இன்னும் முக்கியமாய் இருக்கிறது.
சியான் ஜோங்ஷூவின் எழுத்துகள் இறுதியில் நம் அனைவருக்கும் பொதுவான மானுட விழுமியங்களுக்கு அத்தாட்சியாகவே இருக்கின்றன. சீனத்துக்கு அல்லது ஆசியாவுக்கு அல்லது ஐரோப்பாவுக்கு உரியது என்ற விவரித்து இதைக் குறுக்க முடியாது. அவ்வளவு குரூரமான சூழலில் இந்தப் படைப்பு உருவம் பெற்றது என்பது திகைக்க வைக்கும் விஷயம். பாண்டித்தியத்துக்கும் மானுடம் மீதான நம்பிக்கைக்கும் சாட்சியம் சொல்லும் நாயகத்தன்மை கொண்ட எழுத்து இது. எந்த ஒரு கலாசாரமும் இதைக் கொண்டாடுவதில் பெருமை கொள்ள முடியும். இருபதாம் நூற்றாண்டு சீனா இவ்வளவு அற்புதமான குரலைப் படைத்திருக்கிறது என்பதில் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்- சியானின் அசாதார்ண படைப்பை நம்மாலும் படிக்க முடிகிறது, அதில் திளைக்க முடிகிறது, கற்றுக்கொள்ள முடிகிறது என்பது நம் அனைவருக்கும் பெருமையே. இதைச் செய்யும்போது நாம் சீனாவை மட்டும் புரிந்து கொள்வதில்லை, நம்மையும் அறிந்து கொள்கிறோம், நம் கலாசாரத்தையும் புரிந்து கொள்கிறோம், நம் அனைவருக்கும் பொதுவான உலகையும் அறிந்து கொள்கிறோம்.
நன்றி – Open Democracy
ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா