அம்மணமாய் நிற்கும் பெண்- கரோல் ஆன் டஃபி

நகுல்வசன்

கேவலம் துட்டுக்காக இந்த இழவை ஆறு மணிநேரம் செய்ய வேண்டியிருக்கிறது.
தொப்புள் முலை குண்டியெல்லாம் ஜன்னல் வெளிச்சத்தில் காட்ட வைத்து
என் நிறங்களைப் பிழிந்தெடுத்துக் கொள்கிறான். இதில் வலது பக்கம்
தள்ளி நின்று அசையாமல் வேறு இருக்க வேண்டுமாம்.
என் உடம்பை கட்டம் கட்டமாக வரைந்து பிரேம் போட்டு
பெரிய மியூசியத்தில் எல்லாம் தொங்கவிடுவார்கள். பணக்கார்ர்கள்
என் தேவடியாப் படத்தைப் பார்த்து உச்சுக் கொட்டுவார்கள்.
இதறகுப் பேர்தான் கலையாம்.

யார் கண்டது? அவன் தலைவலி அவனுக்கு.
எனக்கோ வயிற்றுப் பிழைப்பு. நான் ஒல்லியாகிக்
கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லையாம். என் முலைகள்
சற்றே சரிந்து தொங்கத் தொடங்கிவிட்டன,
இந்த ஸ்டூடியோவோ குளிர்ந்து விறைக்கிறது. எலிசபெத் ராணி
என் உடம்பை உற்றுப் பார்ப்பது போல் ஒரு கனவு.
அற்புதம் என்று முணுமுணுத்தபடி அவள் கடந்து செல்கிறாள்.
சிரிப்பு வருகிறது. அவன் பெயர்

ஜார்ஜெ. அவன் ஒரு மேதையாம்.
ஓவியம் சரிவராத வேளைகளில் தன் இயலாமையை
என்னுடம்பின் கதகதப்பில் கரைத்துவிட ஏங்குகிறான்.
சாயத்தில் தூரிகையைத் தோய்த்துத் தோய்த்துக் கிட்டாண்
சட்டத்திற்குள் என்னை புணர்ந்து கொள்கிறான். பாவம்!
அதற்கெல்லாம் அவனுக்கேது காசு. நாங்கள் இருவருமே
ஏழைகள். எதையெதையோ செய்து எப்படியோ
பிழைத்துக் கொள்கிறோம். ஏன் இதைச் செய்கிறாய்,
என்று கேட்டதற்கு, அப்படித்தான் வேறு வழியில்லை,
வாயை மூடு என்று அடக்கிவிட்டான். என் சிரிப்பு
அவனைக் குழப்புகிறது. இந்த கலைஞர்களுக்கு
எப்போதுமே தாங்கள் ஏதோ பிஸதாக்கள்
என்ற பாவனை. மதுவால் வயிற்றை நிரப்பிக்கொண்டு
நான் இரவில் மதுக்கூடங்களில் ஆட வேண்டும்.
ஓவியத்தை முடிந்தபின் ஜம்பமாய் என்னிடம் காட்டுகிறான்,
சிகரெட்டை பற்றவைத்தபடியே.
சரி, மொத்தம் பன்னிரெண்டு ஃபிராங்க்,
என்று அவனிடம் கணக்களித்துவிட்டு என் மேலாடையை
எடுத்துக் கொள்கிறேன், ஓவியமோ என்போலவே இல்லை.​

௦௦

ஒளிப்பட உதவி – Wikiart

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.