அமேஸான் காடுகளிலிருந்து- 6: ஆவி சூழ் உலகம்

மித்யா 

அத்தியாயம் 6 – ஆவி சூழ் உலகு

“உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லப்போகிறேன்” என்று ஆரம்பித்தான் அந்த இந்தியன். நடுநிசி நேரம். வானத்தில் பல ஆயிரம் நட்சத்திரங்கள். மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. பூச்சிகளின் இடைவிடாத ஒலி. காட்டுக்குள்ளிருந்து மிருகங்களின் ஊளை. மேலே எழும்பும் அக்னி ஜ்வாலைகள் இருட்டுடன் போராடிக் கொண்டிருந்தன.

அந்த இந்தியன் நெருப்பின் முன் உட்கார்ந்து தீப்பிழம்பின் ஒளியில் மிளிரும் கிறிஸ்டோவையும் ஆலிஸ்சையும் பார்த்தான். அவர்கள் இன்னும் சிவப்பாக தெரிந்தனர். அவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.

“ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். இல்லை இல்லை. இன்னும் இருக்கிறார். அவனுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மகள் பிறந்தாள். குழந்தையே இல்லாத ராஜா ராணிக்கு மகள் பிறந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அவர்கள் இந்த வரவை எப்படி கொண்டாடியிருப்பார்கள் என்பதை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம்.

அந்த மகள் ஒரு அழகான ராஜகுமாரியாக மாறினாள். புற அழகு மட்டுமல்ல. அவள் அகமும் அழகாக இருந்தது. யாருக்கும் தீங்கு நினைக்காத ஓர் இளவரசியாக அவள் இருந்தாள். எல்லோருடனும் ஒரு சாதாரண பிரஜை போல் பழகினாள். முதலில் ராஜாவிற்கும் ராணிக்கும் இது பிடிக்கவில்லை. “என்ன இது. இளவரசி என்றால் சும்மாவா? கை அசைத்தால் ஆட்கள் ஓடி வரவேண்டும். கண் சைகையில் எல்லா வேலையும் முடிய வேண்டும். இவளோ இப்படி எல்லோருடனும் சரிக்கு சமமாக பழகுகிறாளே?” என்று ராணி ராஜாவிடம் வருத்தப்பட்டுக்கொண்டாள். ராஜாவும் இளவரசியின் பழக்க வழக்கங்களை மாற்ற பல ஆசிரியர்களை நியமித்தார். ஆனால் இளவரசியோ ஆசிரியர்களுக்கு தக்க மரியாதை செய்தாலும் அவர்கள் சொல்லிக் கொடுத்த எதையும் கடைபிடிக்கவில்லை. எப்பொழுதும் போல் எல்லோருடனும் ஆடிக் கொண்டிருந்தாள்.

ராஜா இருந்த ஊரில் கோடைக் காலம் கொடுமையாக இருக்கும். பிரிட்டிஷ் அதிகாரிகள் செய்வதைப் பார்த்து ராஜாவும் ஒரு மலைப் பிரதேசத்தில் பெரிய அரண்மனை போன்ற வீட்டைக் கட்டச் சொன்னார். அந்த அரண்மனைக்கு பக்கத்தில் ஒரு காடு இருந்தது. காட்டினுள் ஓடும் ஒரு நதி. நதி ஓடும் பாதையில் பல நீர் வீழ்ச்சிகள் என்று அருமையான இடம் அது. இளவரசியின் பதினாறாம் பிறந்த நாளில் அந்தப் புது அரண்மனையை ராஜா இளவரசி கையால் திறக்க வைத்தார். எல்லோருக்கும் அந்த இடம் ரொம்ப பிடித்து விட்டது. இளவரசியோ அவள் தோழிகளுடன் அடிக்கடி காட்டுக்குள் சென்று விடுவாள். அங்கு ஓடும் நதியின் கரையில் பல மணி நேரம் உட்கார்ந்துவிட்டு திரும்புவாள். காட்டுக்குள் எந்த மிருகம் இருக்கும் என்று தெரியாததால் கிட்டத்தட்ட ஒரு படையே அவளுடன் செல்லும். அப்படி தோழிகளுடனும் இருபது வீரர்களுடனும் சென்ற இளவரசி ஒரு நாள் தனியாக திரும்பினாள்.

ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் வீரர்களை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் சென்றார். ஆனால் எவ்வளவு தேடியும் வீரர்களும் தோழிகளும் கண்ணில் படவில்லை. அங்கு என்ன ஆயிற்று என்று இளவரசிக்கு தெரியவில்லை. அவளுக்கு எல்லாம் மறந்துவிட்டிருந்தது. ராணி பல முறை பல விதங்களில் கேட்டும் அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. கடைசியில் “எனக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டு படுக்கச் சென்றுவிட்டாள்.

அடுத்த நாள் காலையில் அவளை எழுப்பச் சென்ற ராணிக்கு ஒரு பேரதிர்ச்சி. இளவரசி அந்தரத்தில் தூங்கிக்கொண்டிருந்தாள். ராணி போட்ட கூச்சலைக் கேட்டு எல்லோரும் ஓடி வந்தார்கள். அந்தக் காட்சியை பார்த்து திகைத்து போனார்கள். தர்பாரில் இருந்த ராஜாவுக்கு செய்தி அனுப்பப்பட்டது. விரைந்து வந்த ராஜா “ஐயையோ” என்று கதறினார். அந்த கேட்டு இளவரசி கண் முழித்தாள். அவளுக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. பிறகு அவள் தான் அந்தரத்தில் இருப்பதை உணர்ந்தாள். “அப்பா, அம்மா” என்று கூச்சலிட்டாள். ராஜா அவளை நோக்கி ஓடினார். ஓடிய வேகத்தில் அவர் திரும்பி வந்து சுவரில் மோதிக்கொண்டார். யாரோ அவரைத் தள்ளிவிட்டது போல் இருந்தது. படைத் தளபதி வாளை உருவி இளவரசியிடம் சென்றார். அவரும் பின்னுக்குத் தள்ளப்பட்டார். வாள் ஒரு இடத்தில் விழ அவர் வேறோரிடத்தில் விழுந்தார். தைரியமாக முன்னுக்குச் சென்ற மூன்று வீரர்களின் கதியும் இதே என்று ஆனது.

கூச்சலிட்டுக் கொண்டிருந்த இளவரசி மெல்ல இன்னும் மேலே எழும்ப ஆரம்பித்தாள். மேலே எழும்ப எழும்ப அவள் கூச்சலும் அதிகமானது. “இந்த அறையில் ஏதோ ஒரு அமானுஷ்ய ஷக்தி இருக்கிறது. நான் போய் கோவில் குருக்களை அழைத்து வருகிறேன்” என்று அமைச்சர் சொல்லிவிட்டுச் சென்றார். குருக்கள் ஒரு கையில் விபூதி குங்குமமும் இன்னொரு கையில் கமண்டலமும் கொண்டு வந்தார். விபூதி குங்குமத்தை வீசி இளவரசி மேல் எறிந்தார். ஒன்றும் நடக்கவில்லை. கமண்டலத்தில் இருந்த நீரைக் கையில் எடுத்து அறைக்குள் சென்று அதை இளவரசி மேல் தெளித்தார். அப்பொழுது அவரை யாரோ அறையும் சப்தம் கேட்டது. தபீர் என்ற ஓசையுடன் மூர்ச்சையாகி கீழே விழுந்தார் குருக்கள். அமைச்சர் விரைந்து சென்று ஒரு இஸ்லாமிய காஜியை அழைத்து வந்தார். அவர் சாம்ப்ராணி புகை போட்டார், ஒன்றும் நடக்கவில்லை. கேரளாவிலிருந்து அங்கு வந்து தங்கியிருந்த மாந்த்ரிகன் ஒருவன் எலுமிச்சையை நறுக்கிப் போட்டான். ஓணானைக் கொண்டுவந்து அறைக்குள் விட்டான். எந்த பலனும் இல்லை. இளவரசி பயத்தால் மூர்ச்சையாகி இருந்தாள். இன்னும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது அமைச்சர், ஹென்றி என்றழைக்கப்பட்ட ஆங்கில டாக்டரை கூப்பிடலாம், என்று ராஜாவுக்கு யோசனை சொன்னார். அந்தப் பிரதேசத்தில் ஹென்றியை எல்லோருக்கும் தெரியும். வயதானவர். வெள்ளை முடி, வெள்ளை மீசை, வெள்ளை தாடி, உருண்ட முகம். நீலநிறக் கண்கள். எப்பொழுதும் ஒரு ஹாட்  அணிந்திருப்பார். அங்கு பலரை குணப்படுத்தியிருக்கிறார். நான் அவரிடம் அசிஸ்டெண்ட்டாக  இருந்தேன். எனக்கு மருத்துவம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. ராஜாவின் வேலையாட்கள் வந்து ஹென்றியைக் கூப்பிட்டார்கள். இளவரசி அந்தரத்தில் தொங்குவதாகச் சொன்னார்கள். “தீஸ் சூப்பர்ஸ்டீஷியஸ் நேய்டிவ்ஸ்” என்று முணுமுணுத்துக்கொண்டு கிளம்பினார் ஹென்றி. நானும் அவருடன் புறப்பட்டேன்.

இளவரசியின் அறைக்கதவு மூடியிருந்தது. அமைச்சர் ஓடி வந்து ஹென்றியின் கையைப் பற்றிக்கொண்டு “நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்: என்றார். ராஜா ஹென்றியைப் பார்த்து தலை வணங்கினார். ராணியின் கண்ணிலிருந்து இன்னும் தாரை தாரையாக கண்ணீர் வந்துக்கொண்டே இருந்தது., கதவை மெதுவாக ஒரு வீரன் திறக்க நானும் ஹென்றியும் உள்ளே நுழைந்தோம். இருட்டில் எங்கள் கண்களுக்கு முதலில் எதுவும் சரியாகத் தெரியவில்லை. எங்கள் கண்கள் மேல் நோக்கிச் செல்ல நாங்கள் இளவரசியை பார்த்த தருணத்தில் “ஹ்ம்ம்” என்று பயங்கரமான ஒலி எழுந்தது. அதைக் கேட்டு ஹென்றி மூர்ச்சையடைந்தார். பல வீரர்கள் அந்த இடத்தை விட்டு ஓடினார்கள். ராணியின் ஓலம் காட்டுக்குள் எதிரொலித்தது,

ஆனால் நான் மட்டும் அறையின் நடுவில் சென்று பத்மாசனத்தில் உட்கார்ந்துக்கொண்டேன். கைகள் இரண்டையும் கோர்த்துக்கொண்டு கால்களின்மேல் வைத்தேன். கண்களை மூடிக்கொண்டு கூர்ந்து கேட்டேன்.

அப்பொழுது அறை முழுவதும் மெல்லிய பச்சை ஒளி பரவியது. “யார் நீ” என்ற ஒரு குரல் எனக்கு மட்டும் கேட்டது.

(தொடரும்)

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.