சீன கவிஞர் யீ லூ (தமிழாக்கம்- பாஸ்டன் பாலா)

கைபேசியில் இருக்கும் அவனின்
கண்களில் களிப்பு
கீழே பாயும் பெரும்பறவையின்
கொம்மையில் களிப்பு
பூந்தொட்டியில் மலர்ந்திருக்கும் சூரியகாந்தியின்
ஒவ்வொரு இதழின் இருதயத்திலும் களிப்பு
தன் பிஞ்சு இலைகளை மனோரஞ்சித மரம் உதற
அதிலும் ஆணிவேரில் இருந்து சுரக்கும் ஒரு களிப்பு இருக்கும்
தன் பிஞ்சு இலைகளாடும் மனோரஞ்சிதத்தின்
ஆணிவேரில் களிப்பு சுரந்தவாறிருக்க வேண்டும்
தலை புதைத்துத் தன் பாதையில் விரையும் லாரி
களிப்பை அடக்கிக் கொள்ளும்
தன் இலக்கைச் சேர்ந்தபின் விடுவிக்கக் காத்திருக்கும்
ஏற்புக் கடிதம் பெற்ற பெண்
களிப்பை இறுக்கி அணைத்துக் கொள்கிறாள்
தழுவலில் அது வெடித்துச் சிதறலாம்
ஒவ்வொன்றாகப் பதிவு செய்கிறேன்
யாருக்குத் தெரியும் எனக்குரியது என்று
பிறவற்றுக்கு இணையாய் கிடைக்குமென்று
இன்னும் பதிவேன், இன்னும்
நட்சத்திரங்களின் அற்புதம் உனக்கும் இவ்வுலகில் கிடைக்கட்டும்
உனக்கும் களிப்பு கிட்டட்டும்
000
(சீன கவிஞர் யீ லூ (Yi Lu – 伊路 ) 1956ல் பிறந்தவர். நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் அரங்க வடிவமைப்பாளராகவும் இயங்குகிறார். நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் பார் (See – 《看见》 – 2004) மற்றும் இரு கடல்களை உபயோகித்து (Using Two Seas – 2009) ஆகியவை விருதுகள் பெற்றிருக்கின்றன. நூறு மலர்கள் விருது, ஃபூஜியான் மாநிலத்தின் இலக்கிய பரிசு ஆகியவையும் வென்றிருக்கிறார்.)
ஒளிப்பட உதவி – Starts with a Bang