(Gigantic எந்த தளத்தில் Deb Olin Unferth எழுதிய சிறுகதையின் தமிழாக்கம்)
அவன் எழுதினான். தோழி இறந்து கொண்டிருக்கிறாள் என்று சொன்னான். இவை அவளது இறுதி நாட்கள் என்றான், இது எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அவன் நினைத்ததாகச் சொன்னான். நாங்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அவளைப் பார்த்து பல யுகங்கள் ஆகியிருந்தன. ஆனால் எப்போதும் அவளை நாங்கள் நேசித்தோம், அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். அவளுக்கு உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டிருந்தோம் (சில மாதங்களுக்கு ஒரு முறை அவளது உடல்நலம் குறித்து அவன் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்)- அவள் உடல்நிலை மிகவும் மோசமாகி இருந்தது. நாங்கள் பயணம் செய்யத் திட்டமிட்டோம் அல்லது, அவளைப் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணங்களாவது எங்களுக்கு இருந்தன. அவள் உடல்நலமில்லாமல் இருக்கிறாள் என்பது சென்ற ஆண்டு எங்களுக்கு முதன்முதலாய் தெரிய வந்தபோது காரை நிரப்பிக்கொண்டு அவளைப் பார்ப்பதற்கான நான்கு மணி நேர பயணத்தை மேற்கொள்ள வேண்டியதுதான் என்று நினைத்தோம். பழைய நாட்களைப் போல் அவள் வீட்டின் முன் அறையில் தங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தோம், ஆனால் அதைச் செய்யவில்லை. ஓராண்டு காலம் அதையே சொல்லிக் கொண்டிருந்தோம், “சீக்கிரம் கிளம்புவோம்,”. அவள் உடல்நிலை இன்னும் மோசமானது. அவன் எழுதும்போது, தொலைபேசியில் அழைத்தாவது பேசலாமே என்றான், கொஞ்சம் நட்பாக நாலு வார்த்தைகளை அவளுக்குச் சொல்லலாம். ஆனால் எங்களுக்குப் பேசச் சங்கடமாக இருந்தது, என்ன பேச முடியும் என்று தெரியவில்லை. “புதுப்பித்துக் கொள்ளலாம்”, என்று நினைத்தோம். ஆனால் அவள் உடல்நிலை அவ்வளவு மோசமாக இருப்பதைப் பார்க்கும்போது எங்கள் அன்றாட விவகாரங்கள் மிகவும் அற்பமாகத் தெரிந்தன. ஒரு மின்மடலாவது அனுப்பலாம் என்று நினைத்தோம். புகைப்படம் ஒன்றை இணைக்கலாம், ஆனால் அதையும் செய்யவில்லை. அதன்பின் அவன் எழுதும்போது அவள் விமானத்தில் டெக்சாஸ் செல்லப் போகிறாள் என்றான், அவளது உடலெங்கும் கீமோ நிறைத்து அகற்றப் போகிறார்கள். சோதனை முயற்சியாய் ஒரு அறுவை சிகிச்சை செய்யப் போவது குறித்துச் சொன்னான். நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம், ஓர் இழப்பை உணர்ந்தோம், எனினும் ஒன்றும் செய்யவில்லை.
அப்புறம் அவன் எழுதினான். ஒருவழியாய் முடிவுக்கு வந்துவிட்டது என்றான், அவள் கடைசி கட்டத்தில் இருக்கிறாள் என்றான். நாங்கள் ஏதாவது செய்ய முடியுமா? என்று கேட்டு எழுதினோம். ஏதாவது ஒரு உதவி? சரி, என்றான், தொலைபேசியில் அவளை அழைத்துப் பேச முடியுமா? அவள் எங்களோடு பேசுவதை விரும்பக்கூடும். அவளோடு பேசுவது என்று உறுதி பூண்டு தொலைபேசியின் அருகில் அச்சத்தில் உறைந்து அமர்ந்திருந்தோம். பேசுவது குறித்து விவாதித்தோம். இவ்வளவு நாட்கள் இதுபோல் வெட்கக்கேடாக நடந்துகொண்டபின் இப்போது எப்படி கூப்பிட்டுப் பேசுவது? சிலமணி நேரம் கழித்து அவன் மீண்டும் எழுதினான்- அப்படியானால் அவள் அப்போதே மரணத்தின் அருகே பல மணி நேர நெருக்கத்தில் இருந்திருக்க வேண்டும்-, குறுஞ்செய்தி ஏதாவது அனுப்ப முடியுமா என்று கேட்டான், அவளுக்கு அதை நான் படித்துக் காட்டுகிறேன்.
குறுஞ்செய்தியா? ஒரு குறுஞ்செய்தியில் நாங்கள் என்ன சொல்லிவிட முடியும்? அவள் எப்படிப்பட்ட துன்பத்தில் இருந்தாள் என்பதை நினைத்துப் பார், ஏராளமான கீமோக்களையும் கதிர்வீச்சையும் திரும்பத் திரும்பக் கொடுத்தார்கள். உன் உடல் அவயம் அவயமாக சீர்குலைவதைப் பார்த்துக் கொண்டிருப்பதை நினைத்துப் பார், உன் லட்சியங்கள் சுருங்கிப் போகின்றன, உன் விருப்பங்கள் மேலும் மேலும் எளிமையாகின்றன, மிக அடிப்படை தேவைகள் மட்டுமே எஞ்சுகின்றன, உன் மகிழ்ச்சிகள் குறுகிப் போகின்றன, ஒரு நாள் அவை ஒன்றுமேயில்லாமல் போய் உட்கார முடியாத மற்றுமொரு நாளுக்குப்பின், சாப்பிட முடியாத மற்றுமொரு நாளுக்குப்பின், வாந்தி எடுக்க வேண்டுமென்றாலும் அதைச் செய்ய முடியாத மற்றுமொரு நாளுக்குப்பின் கிசுகிசுக்கப்பட்ட சில சொற்களில் முடிகின்றன. நாம் சிரிப்பான்களைப் பயன்படுத்த முடியாது என்று எங்களில் ஒருவர் மிகத் தீவிரமான தொனியில் சொன்னோம். நிச்சயம் சிரிப்பான் சேர்க்கக்கூடாது, சோகமாய் இருக்கும் சிரிப்பான்கூட ஆகாது. உன் இழப்பை நாங்கள் உணர்வோம், என்று சொல்லலாம்- ஆனால் அதில் சுயநலம் இருப்பதாகத் தோன்றியது. நல்வாழ்த்துகள், என்று சொல்லலாம், ஆனால் அதில் என்ன அர்த்தம் இருக்கிறது|? அல்லது, உனக்காகப் பிரார்த்தனை செய்கிறோம் என்று சொல்லலாம், இத்தனைக்கும் எங்களில் எவருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதில் உணர்ச்சி போதாதது போலிருந்தது. அது தவிர, நாங்கள் போய்க்கூட பார்த்திருக்காதபோது, கூப்பிட்டுக்கூட பேசியிருக்காதபோது, ஒரு புகைப்படமோ மின்மடலோ குறுஞ்செய்தியோகூட அனுப்பியிருக்காதபோது, நாங்கள் அவளைப் பற்றி எவ்வளவு நினைத்துக் கொண்டிருந்திருக்க முடியும்? என்ன சொல்ல முடியும்? சொல்வதற்கு என்ன இருக்கிறது? உன்னோடு இருக்கிறோம், என்று எழுதினோம். உன் அருகில்தான் இருக்கிறோம்.
நன்றி- Gigantic