“தன் புதல்வியைக் காப்பாற்றியதற்கு பரிசாக எனக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்க ராஜா தயாராக இருந்தார். ஆனால், எனக்கு பணத்தில் நாட்டம் இல்லை. வெளி கிரகத்து மனிதர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் என் குறிக்கோளாக இருந்தது. ராஜாவிடம் சிறிது பணத்தை வாங்கிக்கொண்டு எங்கள் நாடு முழுவதும் அலைந்தேன். காடுகள் இருக்கும் பகுதிகளுக்கெல்லாம் சென்றேன். அங்குள்ளவர்களை தீர விசாரித்தேன். எந்த ஒரு காட்டுப் பகுதியிலும் ஏதும் மர்மமான சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. திரிந்து திரிந்து மிகவும் சோர்ந்து போயிருந்தேன். அப்பொழுதுதான் அலிஸ்சை சந்தித்தேன். என்னை மொழிபெயர்க்க கூப்பிட்டிருந்தார்கள். என்னுடைய ஆழ்ந்த அறிவையும் ஆங்கில புலமையும் கண்டு இவள் வியந்தாள். அவளை என் சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டாள். எனக்கும் ஊர் ஊராகத் திரிந்து ஓய்ந்துவிட்டிருந்தது. ஒரிடத்தில் இருந்தால் நல்லது என்று தோன்றியது. நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன்.
ஒரு நாள் சிலர் உலகில் வேறொரு இடத்தில் உள்ள காட்டைப் பற்றியும் அங்கு சென்ற உலகிலேயே சிறந்த சாகசக்காரர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இருவர் கோர மரணம் அடைந்ததையும், ஒருவன் மட்டும் அந்தக் காட்டுக்குள் சர்வசாதாரணமாக சென்று வருவதாகவும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டேன். ஆலிசை கூப்பிட்டு இதைப் பற்றி தீர விசாரிக்கச் சொன்னேன். எல்லா விவரங்களையும் அறிந்தபின் ஆலிசிடம், நாம் இங்குச் செல்ல வேண்டும், என்று சொன்னேன். அவளுக்கு இந்தப் பின்கதை தெரியாது. ராஜாவிடம் சென்று பணம் வாங்கிக்கொண்டு வந்தேன். மற்ற வேலைகளை ஆலிஸ் கவனித்தாள். அப்படியாக நாங்கள் இங்கு வந்து சேர்ந்தோம்” என்று கதையை முடித்தான் இந்தியன்.
இந்தக் கதையை உள்வாங்கி அதன் பரிமாணங்களை புரிந்துகொள்ள கிறிஸ்டோவிற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. “அப்படியென்றால் இந்த காட்டில் இருப்பது வேற்று கிரக மனிதர்களா? என்னால் நம்ப முடியவில்லை. இது உண்மையா? விஞ்ஞானம் இதை ஒப்புக்கொள்ளுமா? இது உங்கள் நாட்டின் மூடநம்பிக்கை போல் இருக்கிறது. இதற்கா இந்தியாவிலிருந்து இங்கு வந்தீர்களா?” என்று அலிஸ்சை பார்த்து கேட்டான்.
இந்தியன் சிரித்தான். “நான் விஞ்ஞானம் அறிந்தவன். நீங்கள் சொல்லும் அஸ்ட்ரோனமி எனக்கு அத்துப்படி. இந்த வானத்தில் பரவியிருக்கும் ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டம் பற்றியும் சொல்லவா? இல்லை, உனக்கு ரசாயனத்தைப் பற்றிச் சொல்லவா? நியூட்டன் கண்டுபிடித்த விதிகளைச் சொல்லவா? அல்லது, அவருக்கு முன் இருந்த கலிலியோ பற்றிச் சொல்லவா? எங்கள் நாட்டிலும் பலகாலம் விஞ்ஞானம் தழைத்தோங்கி இருக்கிறது. நான் மூடநம்பிக்கை கொண்ட ஆள் அல்ல”
கிறிஸ்டோ, “இல்லை. உங்களைப் பற்றி நான் தவறாக சொல்லவில்லை. இந்தக் கதையை நம்புவது கடினமாக இருக்கிறது”
“நாளை இரவு நீ நம்புவாய்,” என்றான் இந்தியன்.
“நாளை இரவா?” என்று கேட்டாள் ஆலிஸ்
“ஆம். நாளை இரவு நாங்கள் காட்டுக்குள் செல்லப்போகிறோம்”
“நாங்கள் என்றால்?”
“நானும் இந்த காட்டுவாசிகளில் ஒருவனும். அவனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அவன் உள்ளத்தில் கள்ளம் இல்லாதவன் என்பதை அறிந்தேன். அவனிடம் வெளிகிரகத்தை பற்றிச் சொன்னேன். அவன் என்னுடம் வருவதற்கு சம்மதம் தெரிவித்து விட்டான். நானும் அவனும் நாளை இரவு காட்டுக்குள் செல்ல இருக்கிறோம்.”
“நானும் உங்களுடன் வரவேண்டும் குருஜி” என்றாள் ஆலிஸ்
“இல்லை. உனக்கு இன்னும் பக்குவம் போதாது. நீ அங்கு வந்தால் உன் உயிரை இழப்பாய். நீ வரக்கூடாது”
ஆலிஸ்சின் முகம் வாடியது. அதைப் பார்த்த இந்தியன், “கவலைப்படாதே. நான் அங்கு சென்றவுடன் உனக்கு எப்படியாவது செய்தி அனுப்புகிறேன். நீயும் அங்கு வருவதற்கு ஏற்பாடு செய்கிறேன். அதற்குச் சில வருடங்கள் ஆகலாம். நீ நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றான்.
“நான் உங்களுடன் செல்ல வேண்டும்” என்றான் கிறிஸ்டோ
“நீ வரலாம் ஆனால் உன்னை அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். என்றே படுகிறது. உன் உயிருக்கு ஆபத்தில்லை. அதனால் நீ எங்களுடன் வரலாம்” என்றான் இந்தியன்.
அடுத்த நாள் இரவு எல்லா காட்டுவாசிகளும் அங்கு கூடினர். அன்று அமாவாசை இரவு. வானத்தில் நட்சத்திரங்கள் பிரகாசமாக மின்னிக்கொண்டிருந்தன. எல்லோரும் இவர்கள் காட்டுக்குள் செல்வதை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
கிறிஸ்டோ, இந்தியன் மற்றும் காட்டுவாசி, மூவரும் காதுக்குள் நடக்க ஆரம்பித்தனர். ஆலிஸ் அவர்களைச் சோகமாக வழியனுப்பினாள். மூன்று பேரும் கையில் தீப்பந்தம் வைத்திருந்தனர். நடந்து நடந்து நதியின் கரைக்கு வந்து சேர்ந்தனர். திடீரென்று நிசப்தம் அவர்களைச் சூழ்ந்தது. கையை மேலே தூக்கி இருவரையும் நிற்கும்படி சைகை செய்தான் இந்தியன். தீப்பந்ததின் ஒளியில் அவன் முகம் பிரகாசித்தது. சட்டென்று கீழே உட்கார்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டான்.
“அவர்களுடம் இவன் பேசுகிறான்,” என்றான் காட்டுவாசி
“உனக்கு அவன் பேசுவது கேட்கிறதா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் கிறிஸ்டோ
“ஆம். நன்றாக கேட்கிறது. அவர்களை இவன் கூப்பிடுகிறான். வந்து எங்களை அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறான்”
“அவர்கள் என்ன சொல்கிறார்கள்?”
“ஒரு பதிலும் இல்லை”
“அவர்கள் இங்கு இருக்கிறார்களா?”
“இருக்கிறார்கள்”
“உனக்கு எப்படி தெரியும்”
“என்னால் அவர்கள் இருப்பதை உணர முடிகிறது. அவர்கள்…” சட்டென்று பேசுவதை நிறுத்தினான். எதிரில் உள்ள மரத்தை உற்றுக்ப் பார்த்தான். பிறகு இந்தியன் பக்கத்தில் சென்று உட்கார்ந்து கொண்டான்.
இதையெல்லாம் குழப்பத்துடன் கிறிஸ்டோ பார்த்துக் கொண்டிருந்தான். மெதுவாக அவன் முன் பச்சைப் புகை போல் எதுவோ எழ ஆரம்பித்தது. அது முன்னகர்வது தெரிந்தது. கிறிஸ்டோ பயத்தில் பின்வாங்கினான். அந்தப் பச்சைநிறப் புகை உட்கார்ந்து கொண்டிருந்த இருவர் மீதும் கவிந்தது. மெதுவாக கிறிஸ்டோவின் கண்முன் அவர்கள் மறைய ஆரம்பித்தனர். முதலில் கால்கள் காணாமல் போயின. பிறகு கைகளும் காணாமல் போக, பிறகு கழுத்து, முடிவில் மெல்லிய புன்னகையுடன் இருந்த இந்தியனின் முகம் காணாமல் போனது. அவர்கள் அங்கம் ஒவ்வொன்றும் மறையும்பொழுது பச்சை நிறத்தின் உக்கிரம் அதிகமானது. கடைசியில் அது பிரகாசமான ஒளியை காடு முழுவதும் கக்கியது. காடு பச்சை நிறமாக மாறியது.
புகை போன்ற உருவம் இருவரையும் விழுங்கிய பின் மேலெழுந்துச் செல்ல ஆரம்பித்தது. கிறிஸ்டோ “என்னையும் அழைத்துச் செல்லுங்கள்” என்று கூவிக்கொண்டே அதை நோக்கி ஓடினான். முன் சென்று பச்சைப் புகையை தழுவப் பார்த்தான். ஆனால் அவன் அப்பொழுது அவன் தூக்கி வீசப்பட்டான். இன்னும் வெளியிலேயே காட்டைப் பார்த்துக் கொண்டிருந்த காட்டுவாசிகள் மற்றும் ஆலிஸ்சுக்கு முன் வந்து விழுந்தான். அவன் விழுந்த தருணம், காட்டுக்குள்ளிருந்து வேகமாக உருவமில்லாத பச்சைநிறப் புகை போன்ற ஏதோ ஒன்று வேகமாக மேலெழுந்து வானில் கரைந்து மறைவதை எல்லோரும் கண்டு திகைத்து நின்றார்கள்.
(தொடரும்)