இ எல் டாக்டரோவ்- அமெரிக்க இலக்கியத்தின் மாயக் கதவு – மைக்கேல் ஷாபோன்

(The Guardian தளத்தில் EL Doctorow opened a magical new door in American literature என்ற தலைப்பில் Michael Chabon எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.)

சுயமரியாதை உள்ள கார்ட்டூன் ஹீரோ ஒவ்வொருவனுக்கும் இந்த உண்மை தெரியும்- நீ எல்லாப் பக்கமும் சிறைபட்டு நிற்கிறாய் என்ற நிலையிலும், நீ முடிவற்ற இருள்வெளியில் தொலைந்து போய்விட்டாய் என்ற நிலையிலும் உன்னைக் காப்பாற்ற இருக்கவே இருக்கிறது ஒரு பென்சில் முனை. நீ பின்னால் நகர்ந்து நிற்கிறாய். பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்து கொள்கிறாய். அதன்பின் யதார்த்தத்தின் இழைகளில்- உன் யதார்த்தம், உன்னைச் சிறைப்படுத்தும் யதார்த்தம்-, அதில் நிமிர்ந்து நிற்கும் செவ்வகம் ஒன்று நீ வரைகிறாய். அதன் உள்விளிம்பில், பாதி தொலைவில் ஒரு சிறு வட்டம் வரைகிறாய். அடுத்து, நீ இப்போது செய்த இந்தக் கதவுப்பிடியைப் பற்றிக் கொள்கிறாய்; கதவைத் தள்ளுகிறாய்; தப்பித்துப் போகிறாய். இதற்கு முன், சுவர்கள் மட்டுமே இருந்தன; சிறையும் தடையும் நம்பிக்கையின்மையும் இருந்தன; அல்லது, எதுவுமே இல்லை; முடிவற்ற சாத்தியத்தின் வெறுமை மட்டுமே இருந்தது. நீ இருப்பதால், இப்போது ஒரு கதவு இருக்கிறது.

மகத்தான எழுத்தாளர்கள் தாம் உருவாக்கிக் கொண்ட வாயிலின் வழி செல்லும்போது, அவர்கள் அதன் கதவைத் திறந்து வைத்துச் செல்கின்றனர். அவர்களை மற்றவர்கள் பின்தொடர ஒரு வாசல் உருவாக்கிச் செல்கின்றனர். தான் எந்தக் கூண்டில் பிறந்திருந்தாலும் சரி, அல்லது, சிறைபட்டிருந்தாலும் சரி, தன்னைச் சூழ்ந்திருக்கும் சுவர்களிலிருந்தும் மூச்சடைக்கும் வெறுமையிலிருந்தும் தப்ப திறப்பொன்று தேடும் ஒவ்வொரு இளம் எழுத்தாளனும், வாசலுக்குச் செல்லும் வழியை அடைந்து தொலைவில் தெரியும் நீலவானைப் முதல்முறை நோக்குவது எப்படியிருக்கும் என்பதையும் மறுபுறத்திலிருந்து வீசும் தண்ணென்ற காற்றை உணர்வது எப்படியிருக்கும் என்பதையும் அறிவான். நீ என் தலைமுறையைச் சேர்ந்த யூத அமெரிக்க எழுத்தாளனாக இருந்தால், சால் பெல்லோ அல்லது சிந்தியா ஓஜிக் அல்லது பெர்னார்ட் மாலமுட் அல்லது பிலிப் ராத் அளித்த திறப்பின் வழி சென்றிருப்பாய். அமெரிக்க இலக்கியத்தினுள் நுழைய அதற்கு முன் எப்போதும் இல்லாத ஒரு கதவை இந்த யூத எழுத்தாளர்களும் அவர்களது சமகாலத்தவர்களும் திறந்து வைத்தனர். முழுக்க முழுக்க அதீத கற்பனையாகவோ அறிவியல் புனைவாகவோ இல்லாத இலக்கியப் படைப்பை நீ எழுத விரும்பினால்- உனது லட்சியத்துக்காக இந்த உலகம் உன்னைத் தன் கூண்டுகளில் இருள்மிகுந்த ஒன்றில் அடைத்து வைக்க முயற்சிக்கலாம், தன் அச்சுறுத்தும் வெறுமைகளின் மிகக் கடுமையான வேலிகளுக்குள் உன்னைச் சிறைப்படுத்த முயற்சிக்கலாம்-, அப்போது உன் தடுமாற்றங்களுக்கு இடையே, உர்சுலா கே லெகுவின் திறந்து வைத்துச் சென்ற கதவைக் கண்டடைவதைவிட இனிய ஆறுதல் எதுவும் கிடையாது; அவரது ஸ்பேஸ் ஒபேராக்களும் நாயகத்தன்மை கொண்ட மிகுபுனைவுகளும் நிர்ணயித்திருக்கும் வரைமுறைகள் மிக உன்னதமானவை- அவற்றின் அழகும் தீவிரமும் புரிதலின் ஆழமும் அனைத்து இலக்கியமும் சென்றடைய விரும்பும் உன்னதங்கள். அல்லது நாம் எப்போதும் அறிந்திருந்த,, நமக்கு கையளிக்கப்பட்ட வரலாறும் உண்மையும்- நயமாகச் சொல்வதானால்- புனைவாக்கங்கள் என்ற உணர்தலின் உந்துதலால் ஏற்பட்ட நூறாண்டு காலத் தாக்கங்களில் எச்சத்தால் கசந்தும் கிறுகிறுத்தும் போயிருந்த கலாசார மயக்கத்தில் என்னைப் போல் நீயும் வயதுக்கு வருபவனாக இருந்தால், உன் வாசல்- அல்லது, எனக்கு மட்டுமாவது- இ. எல். டாக்டரோவ்வால் திறந்து வைக்கப்பட்ட ஒன்று.

டாக்டரோவ் ஒரு உத்தி வைத்திருந்தார். அந்த உத்தி பக்ஸ் பன்னிக்கே பெருமை சேர்க்கும். வரலாறும் உண்மையும் புனைவாக்கங்களுக்கு இணையானவை என்றச் சோகச் சமன்பாட்டை தலைகீழாகத் திருப்பினார் அவர்- கார்ட்டூன்களில் வரையப்படும் கருப்பு நிற மேலங்கி போல், நீ அதைத திருப்பிப் போட்டால் சர்க்கஸ் டெண்ட்டாக மாறுமே, அல்லது, இறகுகள் கொண்ட ஒரு ஜதை சிறகுகளாக மாறுமே, அப்படிப்பட்ட உத்தி அது. ஒரு புனைவு சுமந்தாக வேண்டும் என்று சொல்லப்படும் அத்தனை சுமைகளையும்- தன் மையம் கொண்ட குறைபட்ட பார்வை, முழுமையின்மை, எல்லாமே கட்டுக்கதை என்ற உண்மை- வரலாறும் சுமந்தாக வேண்டும் என்றால், வரலாற்றால் கைவிடப்பட்ட சலுகைகளைப் புனைவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்- சமநிலைத்தன்மை கொண்ட பார்வை உள்ளதான பாவனை, அதிகாரத்தின் குரல், கலாசார வியாபகம். இவை அனைத்தையும்விட பயன்படக்கூடியது இது- மெய்ம்மையின் மறுக்கவியலா வசீகரம். பெரிய எழுத்து மெய்யல்ல, சிறிய மெய்ம்மைகள். டாக்டரோவ் வந்தபோது இந்த உடைசல்கள் தரையில் சிதறிக் கிடந்தன. யாரும் அவற்றைப் புழங்கிக் கொண்டிருக்கவில்லை.

எனவே தயங்கித் தயங்கி, அல்லது 1971ஆம் ஆண்டின் தி புக் ஆப் டேனியலின் துவக்கத் தயக்கத்துக்குப் பின் 1975ஆம் ஆண்டில் துணிகரமாய்-வந்தது ரேக்டைம், அவ்வாண்டு கோடைக்காலம் இரவுணவு வேளையில் என் பெற்றோர் வாசித்துக் கொண்டிருந்த அந்தப் புத்தகம் பற்றிய திகைத்த உரையாடல்களை இன்னும் என்னால் நினைவுக்குக் கொண்டு வர முடிகிறது. அந்த நாவல் புனைவுத் தோட்டத்தின் கொடிகள் படர்ந்திருந்த சுவர்களின் மேலேறிச் சென்று சரித்திரத்தின் வாயிற்கட்டைத் திறந்து கொடுத்தது, சிறைபட்டிருந்த அந்தத் தோட்டத்துக்குள் அதன்பின் அத்தனை விதமான வினோத ஜந்துக்களும் ஊர்ந்து நுழைந்தன: ஹாரி ஹௌடினி, ஜே பி மார்கன், எம்மா கோல்ட்ஸ்மித், புக்கர் டி வாஷிங்டன். இவை போக, முக்கியமாக, இ எல் டாக்டரோவின் கற்பனை. மயக்கங்கள் கலைந்த, ஆனால் நம்பிக்கை இழக்காத கற்பனை, சரித்திரத்தின் பொய்களைப் புரிந்து கொண்டிருந்தாலும் அதன் அடித்தளமாய் திகழும் மானுட குறைகள் குறித்து அவர் தனது கறாரான கருணையை இழக்கவில்லை.

குறிப்பிட்ட அந்த ஒரு கதவைத் திறப்பதில் டாக்டரோவ் ஆச்சரியப்படுத்தும் கண்டுபிடிப்பொன்றை நிகழ்த்தினார்- சரியாகச் செய்யப்படும்போது, புனைவுச்சூழலில் வரலாற்றுப் பாத்திரத்தை அறிமுகப்படுத்துதல், தன் மையப் பார்வையை விமரிசிக்கும் புத்திசாலித்தனமாகவோ, சரித்திரத்தின் புனைவுத்தன்மையை விமரிசிப்பதாகவோ இருக்காது. சரியாகச் செய்யப்படும்போது, நீ உன் வாசகர்களிடம் சொல்லும் பொய்கள்- அவர்களது முழுமையான, தன்விருப்ப அனுமதியோடுதான்-, கூடுதல் மெய்ம்மை பெறுகின்றன. அப்போது நீ என்ன சொல்ல வருகிறாயோ அதன் சின்ன எழுத்து மெய்ம்மை, எவ்வளவுதான் தன் மையம் கொண்டிருந்தாலும் துண்டுபட்டிருந்தாலும், பெரிய எழுத்து மெய்ம்மையை உணர்த்தும் ஆற்றல் கொண்ட கருவியாகிறது.

பின்னர் “தி அமேசிங் அட்வென்ச்சர்ஸ் ஆப் கவேலியர் அன்ட் களே” என்று வடிவம் பெற்ற நாவலை நான் எழுதத் துவங்கியபோது, வாசகர்கள் ஜோ கவேலியரும் சாம் க்ளேவும் உண்மையாய் வாழ்ந்தவர்கள் என்று நம்ப வேண்டும் என்ற என் விருப்பத்தை உணர்ந்திருந்தேன். நாவலினுள் இருக்கும்வரையேனும் அந்த நம்பிக்கை இருக்க வேண்டும். 1940களில் ஒரு சிறு காலம், நிஜ வாழ்வில் செய்தித்தாள்களின் சந்தையில் சூப்பர்மேனுக்கும் காப்டன் அமெரிக்காவுக்கும் எதிரியாய் இருந்த மாறுவேடம் அணிந்த அதிநாயக பாத்திரம் காரணமாக எஸ்கேபிஸ்ட் காமிக்ஸ் இன்க்., என்ற நிறுவனத்தின் தலைமையகம் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கில் வெற்றிகரமாய் இயங்கியது என்று வாசகர்கள் நம்ப விரும்பினேன் இந்த உத்தி ஓரளவாவது சாத்தியம் என்று நான் அறிந்திருந்தேன் என்றால், அதற்கான வழிமுறைகளைப் புரிந்து கொண்டிருந்தேன் என்றால், அதை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும் என்று நம்பினேன் என்றால், அதற்கு முழுக் காரணமும் டாக்டரோவ்வும் அவரது புத்தகங்களும்தான்- ரேக்டைம் மட்டுமல்ல, லூன் லேக், தி வாட்டர்வர்க்ஸ், பில்லி பாத்கேட் மற்றும் திகைக்க வைக்கும் வகையில் புத்திசாலித்தனமாய் குழந்தையின் புனைவுப் பார்வையில் ஹின்டன்பெர்க் விபத்தை விவரித்த வர்ல்ட்’;ஸ் ஃபேர் என்று பலவும் எனக்கு நம்பிக்கையளித்தன.

அதன் கற்பனைப் பாத்திரங்கள் ஆர்சன் வெல்ஸ், சால்வடோர் டாலி, காமிக்சுகளுக்கு எதிராகப் போராடிய டாக்டர் பிரடெரிக் வெர்ர்தாம், கம்போசர் ரேமண்ட் ஸ்காட் போன்ற நிஜ மனிதர்களோடு உறவாடுவதை மெய் போலச் சித்தரிப்பதைக் கொண்டு கவேலியரும் க்ளேவும் தங்கள் மெய்யான இருப்பை முன்னிறுத்திக் கொள்ள முடியும், எது உண்மை எது பொய் என்ற சுவையான சிக்கலில் வாசகரைச் சிறைப்படுத்த முடியும் என்று நம்பினேன்; அதே சமயம், காமிக் நூலுலகை அதன் துவக்க ஆண்டுகளில் கட்டமைத்த தாக்கங்களையும் கலாசாரச் சூழலையும் இந்தப் புனைவு நூலினுள் கள்ளத்தனமாய் புகுத்தி உண்மையான வகையில் ஆவணப்படுத்த முடியும் என்றும் நம்பினேன்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் டாக்டரோவ்வுக்கு அருகில் அமரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நியு யார்க் நகரில் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் இலக்கிய நிகழ்வு ஒன்றுக்கு நாங்கள் இருவரும் அழைக்கப்பட்டிருந்தோம். அங்கு கூட்டமாய் நாங்கள் பெரிய அளவில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம். நாங்கள் புகைப்படம் எடுப்பதற்காக வாய்மூடி அசையாமல் அமர்ந்து அமைதி காப்பதற்கு முற்பட்ட சில நிமிடங்களில் நான் அவரது முக்கியத்துவத்தை அவரிடம் சொல்ல முயற்சி செய்தேன்- நான் முதன்முதல் ரேக்டைம் வாசித்த நாளிலிருந்து, அதிலும் குறிப்பாக நான் கவேலியர் அன்ட் க்ளே எழுதத் துவங்கியபோது அவரது எழுத்து எனக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது, மீட்சி அளிப்பதாகவே இருந்தது, என்பதை அவரிடம் சொல்ல முயற்சி செய்தேன். “அழுக்கு யதார்த்தம்”|. என்று சொல்லப்படும் காற்றற்ற கூட்டுக்கும் பின்நவீனத்துவம் என்று சொல்லப்படும் வெறுமையான, பிரதிபலிப்புப் பாழ்வெளிக்கும் இடைப்பட்ட தேர்வாகச் சில சமயம் அமெரிக்க இலக்கியம் இருந்த நாட்களில் நான் ஒரு எழுத்தாளனாக வயதுக்கு வந்ததை விளக்க விரும்பினேன்; அப்போது டாக்டரோவ்வின் புனைவுகள்- பின்நவீனத்துவ வகையில் வரலாற்று “உண்மைகளோடு|” விளையாடுவதாக இருந்ததை, நேருக்கு நேரான கதைசொல்லலுக்கு உட்படுத்தப்படாத வரலாறு அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாத குப்பையாக இருப்பதை கூர்மையான அழுக்கு யதார்த்தமாய் விவரித்ததை- எனக்கு அப்போது வேறெந்த எழுத்தாளரின் படைப்புகளை விடவம் டாக்டரோவ் எழுத்தே மாயக் கதவு ஒன்றை திறந்து வைத்திருப்பது போலிருந்ததை விவரிக்க விரும்பினேன்.

நான் என்ன சொன்னேன் என்பது கடவுளுக்கே வெளிச்சம்; அதுவல்ல. நான் வேகமாய்ச் சொல்வது அனைத்தையும் டாக்டரோவ் அமைதியோடும் மரியாதையோடும் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவர் வெளியேற விரும்பியதை என்னால் காண முடிந்தது. கடந்தகால அனுபவத்தால் அவர் அந்த நாளின் மதிய நிகழ்வுகள் குறித்து அறிந்திருந்தார். புகைப்படம் எடுத்தபின் தொடர்ந்து நீளும் வேகமற்ற நிகழ்வுகள் காத்திருந்தன. சீக்கிரம், யாருக்கும் தெரியாமல் வெளியேற வசதியாக இருப்பதற்காக அவர் ஒரு வரிசையின் கடைசி இருக்கையில் அமர்ந்து கொள்ள வேண்டுகோள் விடுத்ததன் அதிர்ஷ்ட வாய்ப்பாகவே என் அருகில் அவர் அமர நேர்ந்தது என்பதை பினனர் அறிந்தேன். நான் பேசி முடித்ததும் டாக்டரோவ் நன்றி சொன்னார், என் கையை அவரது இரு கரங்களிலும் பிடித்துக் கொண்டார். அவை ஒரு முதியவரின் கரங்கள். ரேக்டைம் மீது முதன்முதல் மோகவயப்பட்ட நாளைவிட நானும் அப்போது முதிர்ந்திருந்தேன், வெகுவாக முதிர்ந்திருந்தேன். மத்திய வயதிலிருந்த என் கரங்களை அணைந்திருந்த அவரது வளைந்த, புள்ளிகள் விழுந்திருந்த கரங்களைப் பார்த்தேன் குப்பையாய்க் கிடக்கும் வரலாற்றின் உண்மையை உணர்ந்தேன். .

“நன்றி,” என்றார் அவர். “இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது”.

நாங்கள் மௌனமானோம், அமைதியாய் அமர்ந்திருந்தோம், புகைப்படம் எடுப்பவர் தொடர்ந்து க்ளிக்கும் காலம் போதுமான சிரிப்பை முகத்தில் தேக்கி வைத்திருந்தோம். அதன்பின் டாக்டரோவ் என்னைத் தோளில் தட்டிக் கொடுத்தார், தலை குனிந்து எழுந்து நின்றார். விடைபெறும்போது வணக்கம் செலுத்தும் விதமாய் இரு விரல்களை உயர்த்திக் காட்டினார்.

“கிளம்புகிறேன்,” என்றார் அவர், அதற்குள் கதவை நோக்கி நகரத் துவங்கியிருந்தார்.

நன்றி – The Guardian

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.