அமேஸான் காடுகளிலிருந்து 11. இரண்டாம் இயேசு – மித்யா

மித்யா 

11. இரண்டாம் இயேசு

ஆலிஸின் கோர மரணத்தைக் கண்ட கிறிஸ்டோவால் துக்கத்திலிருந்து மீள முடியவில்லை. ஒரு வாரம் அவனுக்கு காய்ச்சல் இருந்தது. அவன் ஏதேதோ பிதற்ற ஆரம்பித்தான். காட்டுவாசிகள் அவனுக்குப் பலவித மூலிகைகளைக் கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அவன் மீது அவை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அவன் பிதற்றிக்கொண்டே இருந்தான். ஒரு வாரம் கழித்து அவனுக்கு காய்ச்சல் சரியானது. ஆனால்கூட அவன் தினமும் ஏதோ பிதற்றிக்கொண்டே இருந்தான்.

திடீரென்று ஒரு நாள் அவன் பேசுவதை நிறுத்திவிட்டான். தினமும் குடிசைக்கு வெளியே உட்கார்ந்து கொண்டு காட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பல இரவுகள் அவன் தூங்கவில்லை. காட்டுவாசிகள் அவனுடன் பேச முயற்சித்தார்கள். ஆனால் அவனோ காது கேட்காதவன் போல் ஊமையாக இருந்தான். அவர்கள் எது கொடுக்கிறார்களோ அதை உண்டான். “இவனிடம் உடல் மட்டும்தான் இருக்கிறது. இவன் உயிரை அந்த வெள்ளைக்காரி எடுத்துச் சென்றுவிட்டாள்,” என்றான் ஒரு முதிய காட்டுவாசி.

இப்படி மெளனமாக இருந்துக்கொண்டிருந்த கிறிஸ்டோ ஒரு நாள் காணாமல் போனான்.

அவன் எங்கு சென்றான் என்று யாருக்கும் தெரியவில்லை. அவன் எப்பொழுதும் போல் குடிசைக்கு வெளியே உட்கார்ந்து கொண்டு காட்டைப் பார்த்துக் கொண்டிருந்ததை முந்தைய நாள் இரவு தான் பார்த்ததாக ஒரு காட்டுவாசி சொன்னான். கிரிஸ்டோவைப் பல இடங்களில் தேடினார்கள். பக்கத்துக் காட்டுக்குச் சென்று பார்த்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த வேறு பல காட்டுவாசிக் குழுக்களிடம் கேட்டார்கள். ஆனால் யாரும் அவனைப் பார்க்கவில்லை. அவன் ஆலிஸ்ஸின் பிரிவைத் தாங்க முடியாமல் காட்டுக்குள் மறுபடியும் சென்று விட்டான் என்று சிலர் சந்தேகப்பட்டனர். ஆனால் காடு அவனை ஒன்றும் செய்ததில்லை. அங்கு சென்றிருந்தால் மறுபடியும் ஏதோ ஒரு சக்தி அவனை வெளியில் தள்ளியிருக்கும் என்று காட்டுவாசிகளின் தலைவன் சொன்னான். எல்லோருக்கும் அது சரி என்று பட்டது. ஒரு மாதம் முழுவதும் தேடிய பிறகு இனி தங்களால் கிறிஸ்டோவைப் பார்க்க முடியாது என்று காட்டுவாசிகள் நம்பினார்கள். அவன் எங்கு மறைந்தான் என்பது ஒரு பெரிய மர்மமாக இருந்தது.

இரண்டு வருடங்கள் கழித்து திடீர் என்று ஒரு நாள் கிறிஸ்டோ அங்கு தோன்றினான். முன்பு புஷ்டியாக இருந்த அவன் தேகம் இப்பொழுது மெலிந்திருந்தது. பெரிய தாடி வைத்திருந்தான். அவன் கண்களில் முன்பு காணாத ஏதோ ஒரு ஒளி இருந்தது. முதலில் அவனைக் காட்டுவாசிகள் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவன் ஒரு சிறிய புன்னகை பூத்து அவர்களுடன் பேசினான். அப்பொழுதுதான் அவன் யார் என்பது அவர்களுக்கு தெரிந்தது. எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். தாங்கள் பார்த்த கிறிஸ்டோ வேறு, இப்பொழுது தங்கள் முன் நின்று கொண்டிருந்த கிறிஸ்டோ வேறு என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

கிறிஸ்டோ அவர்களுடன் மறுபடியும் வாழ ஆரம்பித்தான். ஆனால் அவன் தன் குடிசைக்குள் எந்தப் பெண்ணையும் அனுமதிக்கவில்லை. இறைச்சி சாப்பிட மறுத்தான். வெறும் பழங்களையும் பச்சைக் காய்கறிகளையும் சாபிட்டான். எல்லோருடனும் மென்மையாகப் பேசினான். அவன் எங்கு சென்றான் என்று கேட்டபொழுது அவன் முகத்தில் சிறு புன்னகை மட்டுமே பூத்தது. இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டான் என்பதை வைத்து இவன் அந்த இந்தியனுடைய தேசத்துக்குச் சென்றிருக்கக்கூடும் என்று குழுத்தலைவன் சொன்னான். ஏனென்றால், அந்த இந்தியனும் இறைச்சி சாப்பிடவில்லை. இதைக் கிறிஸ்டோவிடம் கேட்டபோதும் அவன் முகத்தில் சிறு புன்னகை மட்டுமே பூத்தது.

அப்பொழுது அந்த காட்டுப்பகுதிக்கு, அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் தோன்றிய “சர்ச் ஆப் தி செகண்ட் கிறிஸ்ட்” என்ற கிறித்தவப் பிரிவின் ஊழியர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கிறிஸ்டோவின் தோரணையைப் பார்த்து, “இவர் ஒரு பெரிய செயிண்ட்” என்று பேசிக்கொண்டார்கள். பிறகு அவனுடன் காட்டுவாசிகள் சகஜமாகப் பழகுவதை பார்த்து “இவர் ஒரு பெரிய செயிண்ட் என்பதில் சந்தேகமில்லை” என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தனர். காட்டுவாசிகள் கிறிஸ்டோ காட்டுக்குள் சென்று உயிருடன் தப்பிய கதைகளை அவர்களுக்குச் சொன்னார்கள். இதைக் கேட்ட ஒரு பெண்மணி, “ஹீ இஸ் தி செகண்ட் கிறிஸ்ட், ஹீ இஸ் தி செகண்ட் கிறிஸ்ட்” என்று கத்த ஆரம்பித்தாள். கிறிஸ்டோவிடம் ஓடி, அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு, “சேவ் மீ மை லார்ட். சேவ் மை சோல்” என்று கதற ஆரம்பித்தாள். அவள் தலையை மெதுவாக கிறிஸ்டோ வருடிக் கொடுத்தான். இதைக் கண்ட மற்ற சிப்பந்திகள் “ஆமாம். இவர் இரண்டாவது இயேசுதான்” என்று ஏற்றுக்கொண்டார்கள்.

கிறிஸ்டோவின் புகழ் எல்லா இடங்களிலும் வேகமாக பரவியது. ஐரோப்பியர்கள் பலரும் அவனைத் தேடி வர ஆரம்பித்தனர். சாகும் தருவாயில் இருக்கும் பலர் வந்தனர். கொடிய நோய் சுமந்துகொண்டு இன்னும் சிலர் வந்தனர். சிறுவர்கள் பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என்று கூட்டம் கூட்டமாக வந்தனர். எல்லோருக்கும் ஒரே புன்னகைதான் கிறிஸ்டோவிடமிருந்து. சிலர் அவன் கைகளுக்கு முத்தமிட்டனர். சிலர் அவன் பாதங்களை சிரசால் தொட்டனர். சிலர் கன்னத்தில் முத்தமிட்டார்கள். சிலர் தாடியை தடவிக் கொடுத்தனர். கிறிஸ்டோ யாரையும் தடுக்கவில்லை. பக்கத்தில் வந்தவர்களை அணைத்தான். அதுவே பலருக்கு மருந்தாக இருந்தது. அவனுடைய ஸ்பரிசத்திற்காக பலர் ஏங்கினார்.

பகல் முழுவதும் கூட்டத்தின் மத்தியில் புன்னகை புரிந்து கொண்டு உட்கார்ந்திருந்த கிறிஸ்டோ இரவில் ஏகாந்தத்தை நாடினான். இரவில் நட்சத்திர கூட்டத்தை உற்று பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். “அவன் இங்கு இன்னும் அதிக நாட்கள் இருக்க மாட்டான். அவன் எதற்காகவோ காத்துக் கொண்டிருக்கிறான். ஏதோ ஒரு சமிக்ஞையை எதிர்ப்பர்த்துக் கொண்டிருக்கிறான். ஆணை கிடைத்தவுடன் இந்த உலகத்தை விட்டு கிளம்பிவிடுவான்,” என்றான் காட்டுவசிகளின் தலைவன்.

அவன் சொன்னது போல் ஒரு அமாவாசை இரவு நட்சத்திரம் போல் ஏதோ ஒன்று ஆகாயத்தில் மின்னுவதை காட்டுவாசிகள் பார்த்தார்கள். அதே சமயம் கிறிஸ்டோ எழுந்து வேகமாக நடந்து காட்டுக்குள் சென்றான். சற்று நேரம் கழித்து அந்தக் காட்டை ஒரு மெல்லிய பச்சை ஒளி சூழ்ந்தது. இரண்டு நிமிடங்கள் கழித்து அந்த ஒளி ஒரு சிறிய பந்தாக மாறியது. அந்தப் பந்திற்கு நடுவில் கிறிஸ்டோ அமர்ந்தான். மெதுவாக அந்தப் பந்து மேலெழுந்து சென்றது. சற்று நேரம் ஆனபிறகு அது மறைந்தது.

இப்படியாக ஜார்ஜ் ட்ருக்கர் என்பவர் எழுதிய ‘லைப் ஆப் எ லிவிங் செயிண்ட்’ என்ற புத்தகம் முடிகிறது. இதையொட்டி எழுந்த சர்ச்சைகள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

(தொடரும்)

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.