நெகிழ்வற்ற படிமங்கள் (முன்னுரை)

எஸ்.சுரேஷ்

cat21

கடந்த ஒரு வருஷத்துக்கும் மேலாக பதாகை இணைய இதழில் நான் மிருகக் கவிதைகள் எழுதி வந்திருக்கிறேன், இனியும் எழுதுவேன் என்று நினைக்கிறேன். அவற்றில் சில இந்த மின்னூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நான் ஏன் இந்தக் கவிதைகளை எழுதினேன், அதுவும் ஏன் இப்படி எழுதினேன் என்பதை விளக்கக் கொஞ்சம் முயற்சி செய்யப் போகிறேன்.

இந்தக் கவிதைகளை மிருகக் கவிதைகள் என்று நண்பர்கள்தான் சொல்கிறார்கள், நான் அப்படிச் சொல்ல மாட்டேன். இவற்றை நான் உறைபடிமங்களாகவே பார்க்கிறேன். பொதுவாக, ஒரு கவிதை என்றால் அது பல்பொருள் உணர்த்த வேண்டும், அதில் உள்ள படிமங்கள் நம் மனதில் ஒரு நகர்வை ஏற்படுத்த வேண்டும், அதன் மொழி நம்மை வசீகரிக்க வேண்டும் என்றும் இன்னும் பலவாறாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஒன்றுகூட அப்படி எதுவும் செய்யாது. அது போன்ற பயன்மதிப்பு எதையும் முன்னிட்டு இந்தக் கவிதைகளை எழுதவில்லை. அடிப்படையில் இவை, சலனமற்ற பிம்பங்கள்- எழுதப்பட்ட பக்கத்தின் எல்லைகளுக்கு அப்பால் செல்லாதவை. வாசகன் மனதினுள் வளர வேண்டும், ஆழமான உண்மையை உணர்ந்த வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட மறுக்கும் பிம்பங்கள்.

இந்தக் கவிதைகளில் மிருக உருவங்களைப் பார்க்கலாம். அவை மனிதனை போல் நடந்து கொள்கின்றன. மேம்போக்கான பார்வையில் கவிதை என்ன பேசுவதாகத் தெரிகிறதோ, அதைவிடக் கொஞ்சம் அதிக விஷயங்களை குறியீடுகள் சொல்லும். ஆனால், இதிலுள்ள கவிதைகளை எழுதும்போது, மிருகங்களுக்கு என்று தனிப்பட்ட குறியீட்டு மதிப்பு எதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்திருக்கிறேன். மிருகங்கள் மிருகங்கள் மட்டுமே, சில சமயம் அவை மனிதர்கள் போல் நடந்து கொள்கின்றன. ஆனால் அப்படியெல்லாம் நடத்தையை மாற்றிக்கொள்வதால் அவற்றுக்கோ நமக்கோ எந்த ஒரு புரிதலும் கிடைத்து விடுவதில்லை. சொல்லப்போனால் அது அபத்தத்துக்கே கொண்டு செல்கின்றது..

மொழி வல்லமை இல்லாமல் வலுவான பிம்பங்களைச் சித்தரிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை காண்பதும் இந்தக் கவிதைகளின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று. அதாவது, மொழியாளுமை இல்லாதபோதும்கூட கவிஞன் தான் விரும்பிய வகையில் ஒரு உருவத்தைச் சித்தரிக்க முடியுமா? கவிதைக்கு மொழி எவ்வளவு முக்கியம்? தமிழ் மொழி குறித்த என் போதாமைகளை நான் உணர்ந்து கொண்டபோதுதான் இந்தச் சோதனை முயற்சிகள் துவங்கின. செவ்வியல்தன்மை கொண்ட கவிதை எழுதும் அளவுக்கு எனக்கு தமிழறிவு போதாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் எனக்குள்ள அரைகுறை மொழியாளுமை, நகைச்சுவையாகவோ அபத்தமாகவோ இருக்கக்கூடிய சித்திரங்களைப் படைக்கப் போதுமானதாக இருக்குமா?

மொழிக்கும் இலக்கியத்துக்கும் இடையிலுள்ள உறவு மிகவும் வலுவானது என்றுதான் நான் நம்புகிறேன், ஆனால் நாம் நினைக்குமளவு வலிமையானது அல்ல என்று தோன்றுகிறது. உதாரணம் சொல்வதானால், நான் பஷீரை முதன்முதலில் வாசித்தது சில தமிழாக்கங்களில்தான். பஷீரின் தொனியும் உலகப் பார்வையும் என்னை ஆச்சரியப்படுத்தின, முதல் வாசிப்பிலேயே அவரது தீவிர வாசகனாகி விட்டேன். ஆனால் அப்புறம்தான், நான் முதலில் படித்திருந்த மொழிபெயர்ப்புகள் மிகவும் மோசமானவை என்று பெயரெடுத்திருப்பதைத் தெரிந்து கொண்டேன். குறைபட்ட மொழிபெயர்ப்புகளிலும் பஷீரின் மகத்துவத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது. எனவே ஓரளவுக்குதான் மொழி ஒரு தடையாக இருக்க முடியும். மானுடம் முழுமைக்கும் பொதுவான உண்மைகள் மொழியால் எழுப்பப்படும் சுவர்களைக் கடந்து கசிகின்றன..

என் கவிதைகளுக்குத் திரும்புகிறேன். இந்தக் கவிதைகள் ஏதாவது ஒரு உருவத்தையோ அல்லது காட்சியையோ சித்தரிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறதா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். இந்தக் கவிதைகள் உணர்த்தும் காட்சி சிரிக்க வைக்கலாம், அல்லது அபத்தமாக இருக்கலாம், அல்லது ஏட்டுச் சுரைக்காய் போல் அசைய மறுக்கலாம். இதிலுள்ள படிமங்கள் காகிதத்தில் இருப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை என்பதால் .இங்கு செவ்வியல்தன்மையைப் பார்க்க முடியாது. அப்படி ஒன்று இருப்பதாக யாரும் வாதாடுவதும் கஷ்டம். ஆனால் அதனால் பரவாயில்லை- நம்மால் என்ன மாதிரியான சித்திரங்களை உருவாக்க முடிகிறது என்று பார்ப்பதற்கான சோதனை முயற்சிகள்தானே தவிர இந்தக் கவிதைகள் எந்த ஆழமான உண்மையைச் சொல்லவும் எழுதப்படவில்லை.

அதற்காக இதற்கு முன் இது போல் யாரும் எழுதியதில்லை என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. சில பிரெஞ்சு கவிஞர்கள் என்மீது தாக்கம் செலுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, சர்ரியலிஸ்டுகளைச் சொல்ல வேண்டும். அதற்காக எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தக் கவிதைகளில் மிகுயதார்த்தம் இருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாதுதான். எப்படியாவது வகைப்படுத்தியாக வேண்டுமென்றால், அபத்தக் கவிதைகள் என்று சொல்லலாம். நாம் வாழ்ந்தால் போதாதா, வாழ்க்கைக்கு அர்த்தம் இருந்தாக வேண்டுமா, அதற்கு ஒரு நோக்கம் இருந்தாக வேண்டுமா என்று கேட்க முடிவது போல் கவிதை தன்னளவில் கவிதையாக இருந்தால் போதாதா, ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு நோக்கமோ பயன்மதிப்போ இருந்தாக வேண்டுமா என்று கேட்கும் கவிதைகள் இவை.

Jacques Prevert என்ற பிரெஞ்சு கவிஞரின் கவிதை இது. நான் இந்தக் கவிதைகளை எழுதும்போது இவரது கவிதைகள் எப்போதும் என் நினைவில் இருந்திருக்கின்றன-

QUARTIER LIBRE

I put my cap in the cage
and went out with the bird on my head
So
one no longer salutes
No
one no longer salutes
replied the bird
Ah good
excuse me I thought one saluted
said the commanding officer
You are fully excused Everybody makes mistakes
said the bird

(Translated by Lawrence Ferlinghetti)

(ஜாக் ப்ரவெர் பற்றி இப்படிச் சொல்கிறார்கள், “”இத்தனையும் சொல்வது என்பது அவர் வெகுளி என்றோ எளிமையானவர் என்றோ சொல்வதாகாது. அவரது சிறந்த கவிதைகளின் எளிமை காரணமாகவே அவற்றை உரைநடையில் விவரிப்பது அசாத்தியமாகிறது”)

இருத்தலியல், மொழி மற்றும் பல்வேறு சிக்கல்களைப் பற்றி கவிஞர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றானால் அவர்கள் சோம்பேறிகளாகி விடுவார்கள் என்பதுதான் இது போன்ற கவிதைகள் குறித்த முக்கியமான விமரிசனமாக இருக்க முடியும். யார் வேண்டுமானால் இப்படிப்பட்ட கவிதைக்களை எழுதிவிடலாம் என்பதை நாம் எல்லாரும் ஏற்றுக்கொள்வோம். இதில் சிறிது உண்மை இருக்கிறது என்றாலும் அது மட்டுமே முழு உண்மையாகி விடாது. அபத்தமாக எழுதுவது எல்லாருக்கும் சுலபமல்ல. மிகச் சிறந்த எழுத்தாளர்களும் அபத்தமாய் எழுத முயற்சி செய்து தோற்றுப் போயிருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட கவிதைகளைக்கூட நிறைய பேர் எழுத ஆரம்பித்துவிட்டால், இதிலும்கூட வெற்றி பெற்ற கவிதைகள் தோற்றுப் போன கவிதைகள் என்ற பகுப்பும் அது குறித்த இலக்கணமும் எதிர்பார்ப்புகளும் வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தக் கவிதைகள் உங்களுக்காக எழுதப்பட்டவை, வாசித்துப் பாருங்கள். நல்லதோ கெட்டதோ, உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

-எஸ். சுரேஷ்

(“பூனைகள் மீது எங்களுக்கு யாதொரு வன்மமும் இல்லை”– விரைவில் வெளிவரவிருக்கும் பதாகை மின்னூலின் முன்னுரை)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.