இதுவே உண்மை- பிற உண்மைகளைக் கைவிடு! (கவியின்கண் கட்டுரைத் தொடர்)

எஸ். சுரேஷ்

இதுவே உண்மை- பிற உண்மைகளைக் கைவிடு!
யாரும் இந்தப் பூமியில் போராடத் தேவையில்லை.
பார்- அந்தி சாய்ந்து விட்டது, பார், இரவு நெருங்கி விட்டது:
கவிஞர்களே, காதலர்களே, தளபதிகளே, நீங்கள் சொல்வதற்கென்ன இருக்கிறது?

ஓய்ந்துவிட்டது காற்று, பூமியில் பனித்துளிகளின் ஈரம்,
இனி வானின் நட்சத்திரச் சூறாவளியும் அமைதி கொள்ளும்.
விரைவில் நாம் அனைவரும் மண்ணின்கீழ் உறங்கப் போகிறோம், நாம்
அதன்மேல் ஒருவரையொருவர் உறங்க விடாத நாம்.

(‘I know the Truth, Marina Tsvetaeva. English version by Elaine Feinstein)

மனிதனைப் பற்றிய ஒரு விஷயம் தீராத அதிசயமாகவும் விடைகாண முடியாத மர்மமாகவும் இருக்கிறது- நாம் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம்? தத்துவவியலாளர்கள் அனைவரும் இந்தக் கேள்விக்கு பதில் தேட வேண்டியதாகிறது. நான் முன்னமே இதை மேற்கோள் காட்டியிருக்கிறேனா என்னவென்று தெரியவில்லை, இருந்தாலும் தவறில்லை. “சோஃபி’ஸ் சாய்ஸ்” என்ற புத்தகத்தில் இப்படியொரு உரையாடல் வரும், “ஆஷ்விட்ஸில் கடவுள் எங்கிருந்தார்?” என்ற கேள்விக்கு பதில் தரும் வகையில் வேறொரு கேள்வி எழுப்பப்படும், “ஆஷ்விட்ஸில் மனிதன் எங்கிருந்தான்?”. நாம் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி இது என்று நினைக்கிறேன். ஆஷ்விட்ஸில் மனிதன் எங்கிருந்தான்?

எல்லா மதங்களிலும் இந்தக் கேள்வியை எதிர்கொள்ள ஒரு முயற்சி நடந்திருக்கிறது.. பேராசை, குரூரம், அற்பத்தனம், அதிகார வெறி முதலானவை குறித்த கேள்வி. மனிதர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் எவ்வளவு கருணையோடு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி நாம் இந்தக் கேள்வியைத் தப்ப முடியாது. நம் வரலாறு ரத்தம் தோய்ந்த வரலாறு. பண்டைய காலத்தில் ஆறாய்ப் பெருகியோடி இப்போது ஒரு பெருங்கோடாய் ஒழுகிக் கொண்டிருக்கும் ரத்தத்தின் வரலாறு, இந்த வரலாறு இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே மனிதனின் வன்முறையை நேரடியாக எதிர்கொண்டு அதைப் புரிந்து கொள்வது கலைஞர்களுக்கும் தத்துவவியலாளர்களுக்கும் முக்கியமான நோக்கமாக இருந்திருக்கிறது.

முதலில் சொன்னது போல், எல்லா மதங்களும் வன்முறைக்கு எதிராக எச்சரிக்கின்றன. நாம் இந்தப் பூமியில் தற்காலிகமாக இருந்து போவதால் நம் கீழ்மைகளுக்கு இங்கு இடமில்லை என்கின்றன சமய நூல்கள். நாம் நம் செல்வத்தையும் அதிகாரத்தையும் பிரிந்து ஒரு நாள் இந்த மண்ணிலிருந்து மறையப் போய்வது நிச்சயம். எனில் ஏன் நாம் இவ்வளவு போராட வேண்டும், ஏன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ள வேண்டும், ஏன் ஆணவத்தால் நம்மை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்? நீ சாகப்போவதும் காலம் உன்னை மறக்கப் போகிறது என்பதும் நிச்சயம் என்று தெரிந்தபின்னும்- நீ ஏன் கொலை செய்ய வேண்டும்?

மனிதனின் கீழ்மைகளுக்கு அவனுக்குத் தன் உடலின்மேல் இருக்கும் பற்றைக் காரணம் சொல்லும் சமயச் சிந்தனை உண்டு. இவர்கள் உடலையும் அதன் தேவைகளையும் நிராகரிக்கிறார்கள்,. “காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா,” என்ற வாக்கியம் தமிழில் பிரபலம். அண்மையில் வெளிவந்த, “தாண்டவக்கோனே” என்ற திரைப்படத்தில் இளையராஜா மற்றும் முத்துலிங்கம் சேர்ந்து எழுதிய ஒரு பாடல், “நீர் குருதி சேர் என ஆன எண் சாண் உடம்பில்,” என்று போகிறது. தமிழில் மட்டுமல்ல, பக்தி இலக்கியத்திலேயே இப்படிப்பட்ட போக்கு உண்டு என்று நினைக்கிறேன். அக்க மகாதேவியும் இதையே தன் வசனங்களில் சொல்கிறார்- உடலை “மல பந்தம்”, என்கிறார் இவர்- கழிவுப் பொருள் சேரும் பாத்திரம். மனித உடல் ‘மலமும் மூத்திரமும் நிறைந்த பை என்ற கருத்து பக்தி இயக்கத்துக்கு பொதுவான ஒன்று. அதைப் பற்றி வெளிப்படையாகவே பேசினார்கள்.

Scribbles on Akka’, அக்க மகாதேவி பற்றிய ஆவணப்படம். இதில் அக்க மகாதேவியின் வசனங்களுக்கு பாடல் வடிவம் அளித்த இளையராஜா, தமிழின் சித்தர்களுக்கும் கன்னட வீரசைவர்களுக்கும் சிந்தனையில் உள்ள ஒற்றுமையை உணர்த்த “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” பாடலின் ராகத்தை அடிப்படையாக எடுத்துக் கொள்கிறார்-

இந்து சிந்தனையில் மட்டுமல்ல, சூஃபி கவிதையிலும் கவ்வாலிகளிலும் இந்தக் கருத்தைப் பார்க்கலாம். அப்படிப்பட்ட ஒரு புகழ்பெற்ற கவ்வாலி அஜிஸ் நஜான் பாடியது, ‘சட்தா சூரஜ் தீரே தீரே டல்தா ஹை டல் ஜாயேக’. அது இணையத்தில் இங்கிருக்கிறது-

Huye nam oye benishan kaise kaise
Jamin kha gayee naujawan kaise kaise
Aaj javanee par itranewale kal pacthhtayega
Chadhta suraj dhire dhire dhalta hain dhal jayega

தமிழில் சிறிது சலுகை எடுத்துக்கொண்டு மொழிபெயர்த்தால் இப்படி வரும்-

புகழோடு வாழ்ந்தவர்கள் அடையாளமற்றுப் போனதெப்படி
நல்ல பலசாலிகளையும் நிலம் விழுங்கிக் கொண்டதெப்படி
இன்று இளமைத் துடிப்பில் திமிறி நிற்பவனே,, நாளை வருந்துவாய்
உதிக்கும் சூரியன் மெல்லச் சாய்கிறது, அது மறைவது நிச்சயம்

உங்கள் முயற்சிகள் எல்லாம் வீண் போகும், கருணையற்ற காலம் எல்லா நினைவுகளையும் துடைத்துப் போடும் என்று சொல்லும் வகையில் அந்தக் கவ்வாலி இருக்கும்.

இந்தக் கவிதைகளும் கவ்வாலிகளும் மகத்தான உச்சங்களைத் தொட்டாலும் அவற்றில் சிலவற்றில் கசப்பு வெளிப்படுகிறது. இது விரக்தியின் கசப்பா அல்லது தோல்வியின் கசப்பா என்னவென்று தெரியவில்லை. வாழ்க்கை இவ்வளவு மோசமாக இருக்க முடியாது என்று நினைத்தால் அது சரியாக இருக்கும். அது மட்டுமல்ல, உங்களைப் போல் நினைக்கும் பலர் இருப்பார்கள்.

இந்தக் கவிதையில் ஸ்வெதயேவாவும் மானுட அற்பத்தனங்களையும் குரூரத்தையும்தான் பேசுகிறார். ஆனால் அவர் அதை நம்பிக்கையுடன் அணுகுகிறார். இந்தக் கவிதையை அவர் எப்போது எழுதினார் என்று தெரியவில்லை, ஆனால் இளமையில் சிறிது காலம் போக அவர் வாழ்வு எப்போதும் நரகமாகவே இருந்தது. அக்காலத்தில் வாழ்ந்த எந்த ஒரு ருஷ்ய எழுத்தாளரையும் போலவே அவரும் துன்பங்களுக்கு ஆளானார். அவரது கணவருக்கு ருஷ்ய ரகசிய போலீசுடன் இருந்த உறவால் ருஷ்யாவைவிட்டு அவர் வெளியேறிய பின்னும் அவரை யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. ருஷ்யாவுக்குத் திரும்பியபோது, ஏழ்மையில்தான் வாழ்ந்தார். அவரது கணவர் மரண தண்டனை அளிக்கப்பட்டு கொல்லப்பட்டார், அவரது மகள் சிறையிடப்பட்டார். அந்தக்கால இந்திப் படங்களிலும் தமிழ்ப் படங்களிலும் எந்த நாயகியின் எவ்வளவு மோசமான துயரும் இதற்கு இணையாகாது. (அவரது வாழ்வு பற்றிய சிறு அறிமுகம் இங்கிருக்கிறது- https://en.wikipedia.org/wiki/Marina_Tsvetaeva

ஸ்வெதயேவா நான் முதலில் சொன்னது போன்ற வசனங்களோ சூஃபி கவிதைகளையோ எழுதியிருந்தால் அது நியாயம். ஆனால் அவரோ அப்படி எழுதுவதில்லை. உலக இன்பங்களை நிராகரிக்கச் சொல்லவில்லை அதற்கு மாறாய், நமக்கு எத்தனையோ இன்பங்கள் இருக்க நாம் ஒருவருக்கொருவர் குரூரமாய் இருக்க வேண்டியதில்லை என்றார்.

ஓய்ந்துவிட்டது காற்று, பூமியில் பனித்துளிகளின் ஈரம்,
இனி வானின் நட்சத்திரச் சூறாவளியும் அமைதி கொள்ளும்.

இதுதான் நம் விவாதத்தின் சாரம் என்று நினைக்கிறேன். இயற்கை எல்லாருக்கும் கொடுக்கிறது- ஏழைகள், கவிஞர்கள், காதலர்கள், இராணுவ வீரர்கள். மனிதன் அதை அனுபவித்தால் போதும். எத்தனையோ அழகு இந்த உலகில் கொட்டிக் கிடக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டால் மதத்தின் பெயராலோ தத்துவம், சாதி, கோட்பாடு என்பது போன்ற அடையாள அரசியல் காரணமாகவோ அவன் கொலைபாதகங்கள் செய்யாமலேயே உலக இன்பங்களை அனுபவிக்க முடியும். நாம் எல்லாரும் இந்த மண்ணில்தான் உறங்கியாக வேண்டும். அதன்கீழ் உறங்கச் செல்லும்வரை விண்ணும் மண்ணும் நமக்கு எத்தனையோ அளிக்கின்றன. அவற்றைக் காணாமல் நாம் நம் பக்கத்து வீட்டுக்காரர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அதுதான் பிரச்சினை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.