என் நூற்றாண்டு / My Century

என் நூற்றாண்டு
– தேவதச்சன் – 

துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது.
படிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்து விட்டது.
தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு
தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்
என் டிரெயின் நகர்ந்து விட்டது
எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்

oOo

My Century
Nakul Vac

Muffling her cries with her saree
A woman walks down the street weeping
My bus has begun to move.
Flummoxed by forms he can’t fill
An old man stands helpless at the hospital
My queue has begun to move.
Water Water
An injured young man pleads with his hands
at the railway track

My train has begun to move.
For how long should I be absent
As long as I can
As long as this twenty first century lasts
That long.

oOo

குறிப்பு-

இந்தக் கவிதையின் மொழிபெயர்ப்புச் சிக்கல் கடைசி வரிகளில் வருகிறது. மொழிபெயர்ப்புச் சிக்கல் மட்டுமல்ல, புரிதலின் சிக்கலும்தான்- “எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது/ எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்/ இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ/ அவ்வளவு நேரம்”, என்பதைப் பலவாறு பொருள் கொள்ளலாம். அவற்றில் ஒன்றை நோக்கும் குறிப்பு இது,

மேற்கண்ட கேள்வியில், “நான் இல்லாமல் இருப்பது,” என்ற இடத்தில், “கண்டும் காணாமல் இருப்பது” என்று மாற்றி வாசித்தால் என்ன வேறுபாடு சொல்ல முடியும்?

கவிதையின் முந்தைய வரிகள், கண்டும் காணாமல் செல்வதைத்தான் சொல்கின்றன- அழுதபடிச் செல்லும் பெண்ணிடம் ஆறுதலாக ஒரு வார்த்தை பேசியிருக்கலாம், ஆனால் நம் நகர்ப்புற வாழ்க்கையில் பிறர் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதில்லை; பெரியவருக்கு படிவம் நிரப்பித் தந்திருக்கலாம், ஆனால் நமக்கு நம் அவசரம்; அடிபட்டவனுக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுத்திருக்கலாம், ஆனால் நமக்கு நம் நிர்ப்பந்தங்கள். இப்படி வெவ்வேறு காரணங்கள் சொன்னாலும் இவை அனைத்தும் நாம் கண்டும் காணாமல் கடந்து செல்லும் சம்பவங்கள், எனவே, “எவ்வளவு நேரம்தான் கண்டும் காணாமல் செல்வது”, என்று கேட்டு நம் மனசாட்சியை எளிதாகத் தொட்டிருந்தால் சரியாகவே இருந்திருக்கும். மாறாக, “எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது” என்பதில் குழப்பம் வந்து விட்டது.. தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுத்திருந்தால் நான் இருந்திருப்பேனா?- இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டால், நான் என்பது மனிதம் என்று அர்த்தப்பட்டு கவிதைச் சரியான இடத்துக்குக் கொஞ்சம் சுற்றுவழியில் வந்து விடுகிறது.

ஆனால் இந்தக் கவிதைக்கு நம் சமூக மனதைச் சாடும் நோக்கம் இருக்குமா என்பது சந்தேகமாக இருப்பதால், வேறொரு யோசனை தோன்றுகிறது. கவிஞர் நடந்தது எதையும் நினைத்து வருந்துவதாக இருக்காது- அதாவது, குற்றவுணர்வு இருக்கலாம், அதற்காக திருந்தி வாழும் மனநிலை வந்து விட்டது என்று சொல்ல முடியாது. மாறாக, இதெல்லாம் இப்படித்தான் இருக்கும், நாமும் எதையும் செய்யப் போவதில்லை என்ற விரக்தி மனநிலைக்கு வந்து விட்டிருக்கலாம்- இல்லை, இதுதான் யதார்த்தம், இதுதான் நிதர்சனம், தான் மட்டுமல்ல, நாமெல்லாரும் உள்ளபடியே உள்ள நிலையைதான் விவரிக்கிறார் என்று சொன்னாலும் சரி, அடுத்து வரும் வரிகள் “எவ்வளவு நேரம்தான் நான், இல்லாமல் இருப்பது” என்ற மனநிலையோடு பொருந்திப் போகிறது. நான் அப்போதெல்லாம் அங்கு நிற்காமல் நகர்ந்து வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும்போது அங்குதான் இன்னும் நிற்கிறேன் என்று தெரிகிறது: நகர்ந்தது நானல்ல, “என் பஸ் நகர்ந்து விட்டது.”, “என் வரிசை நகர்ந்து விட்டது.”, “என் டிரெயின் நகர்ந்து விட்டது”. எத்தனையோ விஷயங்கள் என்னைக் கொண்டு செல்கின்றன, ஆனால் என் கூடவே இந்த விஷயங்களையும் நான் கொண்டு வந்திருக்கிறேன், அல்லது அவற்றோடு என்னில் ஒரு பகுதியை விட்டு வந்திருக்கிறேன். தன்னிகழ்வாக, அன்பாலோ கருணையாலோ, என்னில் ஏதோ ஒன்று தோன்றி வெளிப்படாவிட்டால் அப்புறம் அது என்ன இருப்பு, இருப்புக்கும் இல்லாமைக்கும் என்ன வேறுபாடு, நான் செலுத்தப்படுகிறேன் என்பதைத் தவிர? இதையெல்லாம் எத்தனை நாளைக்கு என்னால் தாங்கிக் கொள்ள முடியும்? தாங்கிக் கொள்வதா? செத்தாலும் முடியாது!

இந்தக் கவிதை இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் எழுதப்பட்டது என்பதைப் பார்க்கும்போது- “எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்/ இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ/ அவ்வளவு நேரம்”:- இதெல்லாம் இருந்து தீர்க்கிற விஷயங்கள் இல்லை என்று சொல்வதாகத் தோன்றுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.