பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது, ஒரு முனிவருக்குச் சொந்தமான மரத்திலிருந்து, பல வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே அதில் கனியும் பழத்தைப் பறித்து விடுகிறார்கள். அக்கனியை உண்பதற்கு முன்பு குளித்து வரச் சென்றிருந்த முனிவரின் சாபத்துக்கு பயந்து என்ன செய்வது என்று அறியாமல் அவர்கள் திகைத்திருந்தபோது, கண்ணன் ஒரு உபாயம் சொல்கிறான். ஒவ்வொருவரும் தம் மனதில் இதுவரையில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும், அப்படிச் சொல்வது உண்மையென்றால் அந்தக் கனி மரத்தின் கிளைக்கே மறுபடியும் போய்ச் சேர்ந்துவிடும் என்கிறார். பாண்டவர்களும் ஒவ்வொருவராகத் தங்கள் மனதில் ரகசியமாக மறைத்து வைத்திருந்த உண்மையைச் சொல்லச் சொல்ல, அந்தப் பழம் கொஞ்சம் கொஞ்சமாக மேலே செல்கிறது. மரத்தின் கிளை அருகே இருக்கும் அளவில் மேலே சென்று விடுகிறது. கடைசியில் திரௌபதி மட்டுமே தனது மனதில் இருக்கும் ரகசிய உண்மையைச் சொல்ல வேண்டும். அனைவரும் அவளைப் பார்க்கின்றனர். கண்ணன் குறும்புப் புன்னகையுடன் தீர்க்கமாக அவளைப் பார்க்கிறான். அப்போது திரௌபதி தான் கர்ணனை நேசிப்பதாகச் சொன்னதும் அந்தக் கனி மேலே சென்று மரத்தின் கிளையில் போய் ஒட்டிக்கொள்ளும்.
என்றிலிருந்தோ வாய்வழியாகத் தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் பலகதைகளில் ஒரு கதை இது. இந்தக் கதையைக் குறிப்பிட்டு, ஐந்து கணவன்மார்களுடன் வாழும் திரௌபதிக்கு அவர்களின் அண்ணன் கர்ணன் என்பது தெரியாமலேயே இந்த உணர்வு எழுந்துள்ளது என்றும், ஆறாவதாக ஒருவனை அவள் எப்படி விரும்பலாம் என்றும் இதுபோன்று இன்னும் சில, பல கேள்விகளும் ஆங்காங்கே கேட்கப்படுவதும் உண்டு.
ஒரு பெண்ணின் மனதில் கணவன் அல்லாத இன்னொரு ஆணின் நினைவு இவ்விதம் எழுவது சரியா தவறா என்பதைக் கடந்து, அகச் சிக்கலை உளவியல் ரீதியாக இப்படி விரிவாகப் பார்க்கும் கதைகள் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். இரு தார மனம், அல்லது அந்நிய ஆணுடனான உறவு போன்றவற்றைப் பேசும் சில படைப்புகள் பெண்ணின் பாலியல் சார்ந்த தனி மனித ஒழுக்கம் மீறியதாகப் படைக்கப்பட்டு இருந்தாலும், அந்த வேறொரு ஆணின் நினைவு ஒரு பெண்ணுக்கு ஏன் ஆறுதல் அளிக்கும் விதமாக இருக்க முடியும் என்னும் உணர்வு சார்ந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்பட்ட உளவியல் சார்ந்த கதைகள் வெளிவரவில்லை என்றே சொல்லலாம்.
ஒரு பெண் ஒரு ஆணை விரும்ப வேண்டுமென்றால், அதற்காக அவள் கட்டுப்பட்டிருக்கும் வகையில், இந்த உலகம் முழுக்க, பல்வேறு நாடுகளில் பல்வேறு விதங்களில் பல சட்ட திட்டங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உட்பட்டே அவள் வாழ்ந்தாக வேண்டும். அவ்வகையில் அவள் ரத்தமும் சதையுமான உயிராக அன்றி ஒரு பொருளாகவோ, இயந்திரமாகவோ தான் கருதப்படும் மனநிலை ஏறக்குறைய அனைவரின் மனங்களிலும் பதியப்பட்டிருக்கிறது. ஆதியில் கற்காலத்தில் குகை மனிதர்களாக வாழ்ந்த சமயத்தில் இந்த நிலை பெண்ணுக்கு இல்லை. தான் விரும்பும் ஆணைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இருந்தது.
கற்கால பாலியல் சுதந்திரத்துக்கு சற்றே இணையானது என்பது போன்ற, லிவிங் டுகதெர் வாழ்க்கை என்று திருமணத்துக்கு முன்பே ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் கலாசாரம் இந்தியாவில் தமிழ்நாட்டிலும் இப்போது ஆரம்பித்து விட்டது என்றாலும், அப்படி இப்படியென்று பாலியல் ரீதியான தொடர்புகள் ஆங்காங்கே தென்பட்டாலும், கணவனைக் கடந்து வேறு ஆணை நினைப்பது தீங்கு என்று என்னும் பெண்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். பெண்ணுள்ளத்தின் ஆழ்மன வெளிப்பாடுகள் இன்னும் பதிவு செய்யப்பட வேண்டிய வெளிகள் அதிகம் உள்ளன.
’மலையில் இருந்து கொண்டு விலங்குகளுக்கு பயந்தால் எப்படி அய்யா
சந்தையில் இருந்து கொண்டு இரைச்சலுக்கு பயந்தால் எப்படி அய்யா’
அக்கமகாதேவியின் இந்தப் பாடலை பாவண்ணன் அவர்களின் கட்டுரையில் வாசித்த பின்பே அக்கமகாதேவியைப் பற்றி மேலும் அறியும் ஆர்வம் எழுந்து இன்னும் இன்னும் மிகுந்தது. அது அக்கமகாதேவியைப் பற்றி அறியும் தேடலாகவும் அமைந்தது. அவளின் சென்ன மல்லிகார்ஜுனனின் மீதான எல்லையற்ற காதல் உள்ளத்தை ஆக்கிரமித்தது.
இது வெளிவந்த ’நதியின் கரையில்’, ’துங்கபத்திரை’ இரண்டு நூல்களைப் பற்றியும் எழுத ஆரம்பிக்கையில் மரங்கள், பறவைகள், இயற்கை, மனிதம் என்று பல அற்புத தரிசனங்களையும் காணலாம் என்பதால் இன்னொரு கட்டுரையில் அதை விரிவாகப் பார்க்கலாம். நடைப்பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் அளிக்கும் இன்பத்துடன், அப்போது காண நேரும் மனித கதாபாத்திரங்களின் சித்திரங்கள் படைப்பாக எழும் காத்திரம் மிக்கவை. இதைப் போன்ற உண்மை நிகழ்வை பாவண்ணன் புனைவாக்கிக் காட்டியதாகவே இப்படைப்புகள் இருக்கும். அப்புத்தகத்தை வாசித்த காலத்தில், எந்தப் புத்தகம் வாங்கலாம் என்று என்னிடம் கேட்ட அனைவரிடமும் அவ்விரு புத்தகங்களைக் குறித்தே பேசிக் கொண்டிருந்தேன். அப்படி மூழ்கி ஆழ்ந்து போன அந்தப் புத்தகங்களைக் குறித்து விரிவாக இங்கே இப்போது எழுதவில்லை. அவரின் மொழிபெயர்ப்பான பைரப்பாவின் பருவம் கடந்து, கிரிஷ்கர்னாட் நாடகங்கள் என பல மொழிபெயர்ப்புகளும் சிறப்பானவை.
அந்தப் புத்தகங்கள் என்னை படைப்பாளியாக வெளிப்படுத்தக் காரணமாயிருந்த கட்டுரையை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
அக்கமகாதேவி வசனங்கள் புத்தகம் வெளிவரக் காரணமாயிருந்த இந்தப் பாடல் இப்புத்தகத்தில்தான் இடம் பெற்றிருந்தது. அக்கமகாதேவி கணவனையும் அரசையும் துறந்து, சிவனாம் சென்னமல்லிகார்ஜுனனைத் தேடி கதலிவனம் வருகிறாள்.
ஆண்டாள், மீரா, காரைக்கால் அம்மையார் போன்று ஆண் கடவுளை நேசித்தவர்கள் புனிதப் பெண்ணாகப் பார்க்கப்பட்டார்களே தவிர, ஆணை நேசித்தவர்கள் எங்கும் போற்றப்படவில்லை. அக்கமகாதேவி மீராவைப் போன்று கணவனைத் துறந்து கடவுளை அடைய விரும்பியவர். இவர்களைப் போற்றுபவர்கள் யதார்த்தத்தில் ஒரு பெண் இன்னொரு ஆணை நினைப்பதையே குற்றமாகக் கருதுகின்றனர்.
’ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்’ கொண்டவன் என்று போற்றப்படும் ராமன், சீதைக்கு ‘இப்பிறவியில் இரு மாதரை சிந்தையாலும் தொடேன்’ என்று வாக்களித்தவன்.
பெண்களும், அதே போல மனதாலும் கணவனைத் தவிர இன்னொரு ஆண்மகனை எண்ணக்கூடாது என்னும் சிந்தையிலேயே வளர்க்கப்படுகிறார்கள்.
பாவண்ணன் இன்றைய தமிழ் படைப்பாளிகளில் பெண்ணின் ஆழ்மனதின் பரிமாணத்தை பெண்மனதின் வெளிப்பாடாகவே வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றவராக இருக்கிறார்.
இவரின் படைப்புகளில் இவர் உபயோகிக்கும் உவமைகள் தனித்துவமானவை. உதாரணத்துக்கு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
கல்யாணத்துக்கு சோறாக்கிப் பரப்பி வைத்த மாதிரி அம்பாரமாய் இருந்தன மல்லிகை அரும்புகள். (வேர்கள் தொலைவில் இருக்கின்றன தொகுப்பில், வடிகால்)
காது அடைத்தவள் பேசுகிற மாதிரி சின்னச்சின்ன வார்த்தைகளாய் விழுகிற அவள் பேச்சு உடைந்து போன புல்லாங்குழலில் வருகிற மெல்லிய ஓசை மாதிரி இருக்கும். (வேர்கள் தொலைவில் இருக்கின்றன தொகுப்பில், மீரா பற்றிய சில குறிப்புகள்)
தரமான ஒரு ரசிகனுக்குத் தன் ஓவியங்களின் நுணுக்கத்தைச் சொல்கிற சித்திரக்காரன் மாதிரி தனது அழகையெல்லாம் தெரு திறந்து காட்டியது. (வேர்கள் தொலைவில் இருக்கின்றன தொகுப்பில், மேடுகள் பள்ளங்கள்)
இவருடைய கதையின் ஆரம்ப வரிகளில் கதைக்கு உள்ளே இழுத்துச் செல்லும் நுணுக்கத்தைக் காணலாம்.
போ போ என்று கிளிப்பிள்ளைக்குச் சொல்கிற மாதிரி சொல்லி அனுப்பியபோது ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் நாவல்பழம் பொறுக்கவும், கடலோரம் ஆட்டம் போடவும் சுவாரஸ்யத்தோடு ஓடத் தொடங்கியதுதான் முதல் தப்பு..
(வேர்கள் தொலைவில் இருக்கின்றன தொகுப்பில், வேர்கள் தொலைவில் இருக்கின்றன)
ஆழ்கவனச் சிகிச்சைப்பிரிவு வளாகத்தைத் தேடி உள்ளே சென்ற இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்ளாகவே திரும்பி படிக்கட்டுகளில் இறங்கி வருவதை நம்ப முடியாமல் ஆச்சர்யத்தோடு பார்த்தான் சிவா.
(பொம்மைக்காரி தொகுப்பில், ஒற்றை மரம் சிறுகதை)
காவல் நிலையச் சந்திப்பில் வண்டியைத் திருப்பும்போதே பார்த்துவிட்டேன். வாசலில் முருங்கை மரத்தடியில் ஒரு பெரிய தட்டு நிறையச் சோற்றை வைத்துக்கொண்டு அம்மா நின்றிருந்தாள்.
(பொம்மைக்காரி தொகுப்பில், அம்மா சிறுகதை)
தமிழ்ச் சொற்களை இயல்பாக உருவாக்கி அறிமுகப் படுத்துகிறார். உதாரணமாக ICU – ஆழ்கவன சிகிச்சைப் பிரிவு
உவமைகளும், கதையின் தொடக்கங்களும் விரிவாக இன்னும் தனியாக கட்டுரைகள் எழுதும் அளவில் இருக்கின்றன என்பதால், பாவண்ணனின் வேர்கள் தொலைவில் இருக்கின்றன, பொம்மைக்காரி இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலும் இருக்கும் இன்னும் சில விஷயங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.
“தமிழ்ச் சிறுகதை அரைநூற்றாண்டு வயதை உடையது. உலக இலக்கியம் பொருட்படுத்தத் தக்க சிறுகதைகளை தமிழ் அளித்துள்ளது என்பதையும் நாம் அறிவோம். ஆனால், சிறுகதையே போன்று, இன்றைய தமிழ் பத்திரிகைகளில் மாதந்தோறும் வெளியிடப்படும் சுமார் ஆயிரம் மாரீசக் கதைகளில், அசல் கதைகள் நாலைந்து தேறுமா என்பது சந்தேகத்துக்குரியது. ஆயிரத்தில் ஒன்று தேறும் எனினும், அவை உடனுக்குடன் தொகுதியாக வரும் சாத்தியம் குறைவு. இது கதை ஆசிரியரின் துரதிருஷ்டம். அவன் வெளிப்படும்போது மட்டும் அங்கீகரிக்கப்படுபவனாக இருக்கிறான்.
பாவண்ணனுக்கு இந்த நல்ல வாய்ப்பு தக்க தருணத்தில் வாய்த்திருக்கிறது. நல்ல கதைகள், உடனடியாகப் புத்தக உருவம் பெறுவது குறித்து எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது…. “
என்று எழுத்தாளர் பிரபஞ்சன் வேர்கள் தொலைவில் இருக்கின்றன தொகுப்பில், தன்னுடைய உரையாகக் கொடுத்துள்ளார்.
பாவண்ணன் அவர்களின் இத்தனை வருடங்களாக அவர் எழுதிய சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு வெளிவரும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்.
’வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ தொகுப்பில் ’மீரா பற்றிய சில குறிப்புகள்’ கதையில் வலிப்பு நோயில் மீரா படும் அவஸ்தைகள், அதனால் உளவியல் ரீதியாகத் திருமணமாகாத ஒரு பெண்ணின் மனவலி ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ’பொம்மைக்காரி’ தொகுப்பிலோ ’பூனைக்குட்டி’ கதையில் வைதேகிச் செல்லம் படும் வேதனை கன்னங்களிலும் காதோரங்களிலும் கைகளிலும் கால்களிலும் கரிக்கோடு இழுத்ததுபோல் புசுபுசுவென்று அடர்ந்து வளர்ந்த முடிச்சுருளால், அவள் உடன் படிக்கும் குழந்தைகளிடமிருந்து ஒதுக்கப்பட்டு தனியாக இருப்பதும், பெற்றோரின் கவலையும் மிகச் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கும். இந்த வகை நோய் குறித்து தமிழ் இலக்கியத்தில் ஒரு படைப்பு வருவதும் இதுவே முதன் முறையாக உள்ளது. கைகளிலோ கால்களிலோ லேசாக இயல்பாக இருக்கும் முடியைக்கூட அழகு நிலையங்களுக்குச் சென்று மேனிக்யூர் பெடிக்க்யூர் என்று அழகுபடுத்திக் கொண்டு இயங்கும் காலகட்டத்தில் இந்தப் படைப்பு உளவியல் சார்ந்து அதிமுக்கியத்துவம் பெறுகிறது. துணை சிறுகதை திருமணமாகாத ஆணை அல்ல திருமண மண்டபத்தில் மணப்பெண் நான்கு வருடங்களாகக் காதலித்த காதலனுடன் காணாமல் போய்விட, மணமகளின் தங்கையே மணமகளாக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டு, அவளும் போய்விட அந்த ஆண் கணபதியின் உள்ளச்சோர்வும் வலியும் அந்த நாளினை அவன் எதிர்கொள்ளும் விதமும் அப்படி காட்சிப்படுத்தப் பட்டிருக்கும். கணபதி என்ற பெயரை இதற்காகவே அந்த கதாபாத்திரத்துக்கு வைத்தாரோ என்னவோ.
வெள்ளம் சிறுகதையோ புத்த துறவி சூரபுத்திரன் குறித்தது. சூரதத்தனிடம் தாரிணி உரையாடுவதும் விவாதிப்பதும் இருவரும் உணர்வுப் பிழம்பாகும் நிலையில் காதலின் காமத்தின் சுடரில் மனித குலத்தின் மனப்பிறழ்வுநிலை துல்லியமாக வெளிப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கதையும் கதாபாத்திரமும் தன்னளவில் தனித்துவமாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் பொம்மைக்காரி கதையினை மட்டும் இங்கே பார்க்கலாம். இன்னும் விரிவாகப் பார்க்க வேண்டிய பல கூறுகள் அக்கதையில் உள்ளன.
பொம்மைக்காரன் மாரியின் மனைவி வள்ளி. அதனால் அவள் பொம்மைக்காரி என்றே அழைக்கப்படுகிறாள். திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் அவள் வாழ்க்கையை அவனுக்கென அர்ப்பணித்திருப்பதாக அவள் எண்ணிக்கொண்டிருக்க, தன் வாழ்க்கையை அவள் கணவனுக்காகத் தொலைத்திருப்பதைக் காணமுடிகிறது. அவனுக்கென அவள் அனைத்தையும் செய்யும்போது, ஒவ்வொரு வேலையும் அவனுக்கு அவளின் அன்பையோ அவனுக்காக செய்யும் பணிவிடைகளையோ ஒருபொழுதும் நினைவுபடுத்தவில்லை. நான் ஆண் என்ற இயல்பான திமிருடன் அவளை எப்போதும் கையாள்கிறான். அழைத்தவுடன் ஓடிப்போய் அருகில் நின்று சொல்லும் வேலைகளைச் செய்ய வேண்டும். வாய் திறந்து எதுவும் சொன்னாலும் வாய்க்கு வரக்கூடாத காது கொடுத்து கேட்க முடியாத திட்டும் அடி உதையும் கிடைக்கும். அவன் அவளுடன் கொள்ளும் உறவும் கூட விலங்கினங்கள் புணர்வது போன்றே காட்சிப்படுத்தப்படுகிறது. உறங்குபவளை எழுப்பி அவளை நெருங்குபவன் கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டே உறவு கொள்கிறான். இத்தனைக்குப் பிறகும் குடியில் அடி உதை என்று வாங்கிக்கொண்டும் அவள் அவனுக்காகவே வேலை செய்து கொண்டு எந்த உணர்வும் இன்றி இருக்கிறாள்.
வள்ளி அவனுக்கு அனைத்துமானவளாக இருக்கிறாள். அந்த அருமையை அறியாதவனாக தனக்கான அடிமையாகவே அவளைக் கருதிக்கொண்டு அவன் இருக்கிறான்.
வெளியூரில் ஒரு விழா. விழாவுக்கு வரும் கூட்டத்தில் விற்கலாம் என்று அங்கே பொம்மைக்கடை போடச் செல்கையில், பொம்மையை வாங்க வந்ததுபோல், வள்ளியைப் பார்த்துப் பேசும் சில இளைஞர்களின் ஜாடைப் பேச்சில் மாரி கோபப்பட்டுவிட அவர்களும் மாரியும் கைகலப்பில் இறங்குகின்றனர். அவர்கள் நால்வர்.. இருந்தும் மாரி மனைவிக்காக அவர்களை அடிக்க அவர்கள் இவனை அடிக்க, காயத்துடன் பொம்மை வண்டியை விட்டு விட்டு இருவரும் தப்பித்து ஓடுகின்றனர். காட்டின் மறைவில் ஒரு இடத்தில் மறைந்து கொள்கின்றனர். காயத்தின் வலியின் தீவிரத்தால் அவனால் நடக்கமுடியாமல் இருக்க, தண்ணீர் தாகத்தில் தவிக்கும் அவனுக்கு வள்ளி தண்ணீர் எடுக்க செல்கையில், நால்வரில் ஒருவனான சுருள்முடிக்காரன் அவளைப் பிடித்து, தன்னுடன் உறவு கொள்ள சம்மதித்தால், அவளுடைய கணவனை மற்றவர்களுக்குக் காட்டிக் கொடுக்காமல் விட்டு விடுவதாகவும், இல்லையெனில் கொன்றுவிடப் போவதாகவும் மிரட்டுகிறான். கணவனின் உயிரைக் காக்க அவள் பேச்சற்று கையறு நிலையில் கிடக்கிறாள். அவனோ அவளின் அழகை வர்ணித்தபடி முத்தமிட்டு முத்தமிட்டு அவளை அடைகிறான்.
வாக்களித்ததைப் போலவே மற்றவர்களிடம், இங்கே அவர்கள் இருவரும் இல்லை என்று சொல்லி வேறு பக்கமாக அழைத்துப் போய் விடுகிறான். வள்ளி மாரியை மெதுவாக வீட்டுக்கு அழைத்துப் போய்விடுகிறாள். அங்கே அவன் குணமடையும் வரையில் அவனுக்கு பணிவிடை செய்கிறாள். அப்போதும் அவன் அவளை அடித்தும் திட்டியும் துன்புறுத்துகிறான். ஒரு நாள் அவள் குளத்தில் குளிக்கச் செல்கையில், யாராவது வருவார்களோ என்று அஞ்சுகிறாள்.
எந்த உறவு கட்டாயத்தின் பேரில் அவளின் அனுமதியின்றி கணவனின் உயிர் பணயமாக வைக்கப்பட்டு நிகழ்ந்ததோ, எந்த உறவை அவள் வெறுத்தாலோ, எந்த உறவை நினைவு கூர அஞ்சினாளோ, அந்த நினைவே அவளுக்கு ஆறுதல் அளிக்க முடியுமா? பெண்ணின் அகமனச் சிக்கல் எத்தனை மர்ம முடிச்சுகளுடன் இருக்கும் வகையில் இச்சமூகம் கட்டமைத்திருக்கிறது.
அப்போது சுருள்முடிக்காரனின் ஞாபகம் வரும் காட்சி இரண்டரை பக்கங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்ட விதம் படைப்பாக்கத்தின் உச்சம்.
‘துணியை இழுத்து மார்புக்குக் குறுக்கில் முடிச்சிட்டபடி அவள் எழுந்து குளத்தின் மையத்தை நோக்கி மெதுவாக நடந்தாள். தன்னை இயக்கும் சக்தி குழப்பமா தெளிவா என்று புரியாமலேயே ஆறேழு அடி நகர்ந்தவளின் கழுத்தைச் சுற்றி தண்ணீர் மோதிய கணத்தில் அவள் கால்கள் தானாகவே நின்றன. மீண்டும் மீண்டும் தன்னை முத்தமிட்டபடி இருப்பது போன்ற எண்ணம் மனதில் பொங்கியது. அவள் வேதனைகளை யெல்லாம் அந்த முத்தம் அழுத்தித் துடைத்து விடுவதைப் போல இருந்தது. அந்த ஆறுதலை அவள் மனம் விருப்பத்தோடு ஏற்றுக்கொள்வதை ஆச்சர்யமாக உணர்ந்தாள். நின்று இருள் சூழ்ந்த குளத்தையும் பனைமரங்களையும் அசைவில்லாமல் வெகுநேரத்துக்கு பார்த்தபடி இருந்தாள். மறுகணமே திரும்பி எதுவுமே நடக்காததைப் போல் கரையை நோக்கி நடந்தாள்.“
கடைசி வரி இப்படி முடிகையில் கணவர்களால் பொம்மையைப் போல நடத்தப்பட்டு, அடி உதைகள் அனுபவித்து, விலங்கினைப் போல புணரும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மொத்த பெண்களின் பிரதிநிதியாக வள்ளி காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறாள் என்பதை உணர முடிகிறது.
சொல்லாமல் சொல்லப்பட்ட விஷயம் என்ன அழுத்தமான ஆழமான உணர்வினை கச்சிதமான அதிர்வாக மனதில் எழுப்புகிறது.
ஒரு பெண் இதுவரையில் பதிவு செய்யாத உணர்வினைத், தானே பெண்ணாக, பெண்ணின் உணர்வினை உள்வாங்கி படைத்த பாவண்ணனின் படைப்பாற்றல் இந்தக் கதையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. மற்ற கதைகளின் கதாபாத்திரங்களிலும் வெவ்வேறு விதமான உணர்வெழுச்சியையும் காட்சிகளின் வழியே வெவ்வேறு கோணங்களில் உணர்வின் வெளிப்பாட்டையும் பதிவு செய்திருக்கிறார்.
அம்மா சிறுகதை எழுப்பும் உணர்வெழுச்சி அப்பப்பா… போன தலைமுறையின் தானமளிக்கும் பரந்த பிரியமான மனசுக்கும் இன்றைய தலைமுறையின் குறுகிய சிக்கனமான மனசுக்குமான தவிர்க்க முடியாத இடைவெளியைப் பார்க்க முடிகிறது. நேசிக்கும் உயிர்களுக்கெல்லாம் உணவளித்து உலகுக்கே தாயாக விரும்பும் அம்மாவின் மனநிலை எந்த அளவில் பாதிக்கப்பட்டு சிலைக்கு உணவளிப்பதாக முடியும் கதையில் மகனின் மனதை உலுக்கி எடுக்கிறது.
ஒரு காட்சிக்குள் எழுத்தாளன் வாழ்க்கையைப் படிப்பது எப்படி? பல வழிகள் அதற்கு உண்டு. காட்சி நிகழும் கணத்தில் அவன் மனம் ஏதோ ஓர் எண்ணத்தை ஆழத்திலிருந்து மீட்டெடுக்கிறது. வெறும் எண்ணம் மட்டும் அல்ல அது. ஒரு வாழ்க்கைத் துணுக்கு. அதை அவன் கண்கள் தன் முன் நிகழும் காட்சியுடன் இணைக்கிறது. அப்போது எழும் புதிய சுடரின் அசைவில் அவன் புத்தம் புதிய ஒன்றைக் கண்டடைகிறான். கண்டுபிடிக்கும் அனுபவத்துக்காகவும் அதில் திளைக்கும் பரவசத்துக்காகவும் அவன் புதுப்புதுக் காட்சிகளை நோக்கித் தாவிக்கொண்டே இருக்கிறான்….
… எல்லா காட்சியின் வழியாகவும் அவன் அறிய விளைவது வாழ்க்கையின் பாடம்.
கு. அழகிரிசாமியின் சிறுகதைகள் முழுத் தொகுப்பின் முன்னுரையில் பாவண்ணன் இவ்வாறு எழுதி இருப்பார்.
இந்த இரு தொகுப்புகளிலும் கூட இதை பிசகாமல் அப்படியே காணலாம்.
பாவண்ணன் அவர்களின் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு வர வேண்டும். அதிலும் அவரின் கதாபாத்திரங்களின் சுடர் விடும் சித்திரமாக விரியும் புதுப்புது காட்சிகளாக இவ்வாறே நாம் கண்டு உணர்ந்து வாழ்க்கையின் பாடத்தை அறிய விளையலாம்.. ரசிக்கலாம்.