அசோகமித்திரனின் ‘கதர்’ சிறுகதை – ஆங்கில மொழியாக்கத்தையொட்டிச் சில குறிப்புகள் (மொழிபெயர்ப்பாளர் சிவசக்தி சரவணன் உதவியுடன்)
அசோகமித்திரனின் ‘கதர்’ என்ற சிறுகதை ஆயிரத்துச் சொச்சம் சொற்கள்தான் வரும் என்று நினைக்கிறேன், அதை ஒரு குறுங்கதை என்றும்கூட சொல்லலாம். முதல் வாசிப்பில் அது அவ்வளவு பிரமாதமாக எழுதப்பட்ட கதையாகவும் தெரியவில்லை, கடைசி பத்தி மட்டுமே மோசமான கதையாவதில் இருந்து அதை மீட்கிறது; அப்போதும்கூட, கதையின் பிற பகுதிகளோடு இணைத்து வாசிக்கும்போது தனியாகத் தெரிவதால் அதில் ஒரு கலையின்மையும் தென்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், அலட்சியமாக எழுதப்பட்ட கதை போல்தான் தெரிகிறது.
கதையின் துவக்கம் துல்லியமாகவே இருக்கிறது- ஒரு சிறுவனும் அவன் தந்தையும் வாங்கிய மளிகை சாமான்களின் பட்டியல், சில்லறை பாக்கி எவ்வளவு கிடைத்தது, அதைத் தூக்கிச் செல்ல கடைக்காரர் கொடுத்த துணிப்பையில் என்ன எழுதியிருந்தது என்ற விபரங்கள் போதாதென்று காய்கறிக் கடையில் புடலங்காய் வாங்கியதையும் அது அத்தனையையும் அந்தச் சிறுவன் சுமந்து வந்ததையும் எழுதுகிறார் அமி. வீட்டுக்கு வந்ததும் சிறுவன், துணிப்பையில் எழுதப்பட்ட “நஞ்சன்கூடு பல்பொடி” என்ன என்று யோசிக்கிறான், நஞ்சன்கூடு ஒரு இடமாக இருக்கலாம் என்று அட்லாஸில் தேடுகிறான் (எல்லா கண்டங்களிலும்!). அம்மா, நஞ்சன்கூடு என்பது தேன்கூடு மாதிரி ஏதாவது கூடாக இருக்கும் என்று சொன்னதும், பையனுக்கு உடனே நஞ்சன்கூடு பல்பொடியால் பல் தேய்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது- அவர்கள் வீட்டிலும் பல்பொடி வாங்குவதில்லை, நாட்டு மருந்து எதையோ இடித்துப் பொடி செய்து பயன்படுத்துகிறார்கள் (“வாய் ஒரு மணி நேரத்துக்கு ஜிவ்வென்று இருக்கும்”).
கதைக்குத் தேவையே இல்லாத விருந்தாளி ஜோசியர் ஒரு வாரம் இருந்துவிட்டுக் கிளம்பிப் போனதும்தான் அப்பாவிடம் இது பற்றி பேசும் துணிச்சலே பையனுக்கு வருகிறது (“அப்பா சுமுகமாக இருந்த முதல் சந்தர்ப்பத்தில்”). அப்பா நஞ்சன்கூடு எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்துக் கொடுக்கிறார், அது மட்டுமல்ல, அந்தப் பை ஒரு கதர்ப்பை என்றும் சொல்கிறார். அதைக் கேட்டதும் பையனுக்கு நஞ்சன்கூடு என்ன, எங்கிருக்கிறது என்ற ஆர்வம் குறைந்து போய் விடுகிறது. காரணம், கதர் குறித்து அவனுக்கு இருக்கும் உயர்வு நவிற்சி உணர்வுகள் (“அவனுக்குக் கதர் தேவலோகத்து மலர் மாதிரி, கேள்விப்படலாம் பார்க்க முடியாது”- ‘more often heard than seen,’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வசதியாய் எழுதித் தந்திருக்கிறார் அமி). கதர் அத்தனை அபூர்வமானதா என்று கேட்டால், அதெல்லாம் இல்லை- “கதர் அணிந்து கொண்டால் அவன் ஊரில் உடனே ஜெயிலில் போடுவார்கள் என்று சொல்வார்கள்”. எல்லாம் பயம்தான்.
ஆனால் இந்தக் கதாநாயகன்தான் உயர்வு நவிற்சி, வேண்டாம், ரொமாண்டிக் ஆயிற்றே, கதையின் இந்தக் கட்டத்தில், அவன் தன் வீட்டிலிருந்து ரெண்டு மைல் தொலைவில் இருக்கும் முஷிராபாத் ஜெயில் பற்றி நினைத்துப் பார்க்கிறான். அங்கே, உச்சியில் கண்ணாடித் துண்டங்கள் நெருக்கமாய்ப் பதிக்கப்பட்ட உயரமான சுவர்கள் கொண்ட சிறைச்சாலைக்கு, பல முறை தனியாகப் போய் பார்த்துவிட்டுக்கூட வந்திருக்கிறான் (“அவன் அந்தச் சுவர்கள் பின்னால் இருப்பவர்களைக் கற்பனை செய்துதான் ‘பார்க்க’ முடியும்”). இங்கே அமியின் நாயகன் கவனம் சிறைக்கைதிகள் அணிந்து கொள்ளும் கட்டம் போட்ட ஆடைகளுக்குத் திரும்புகிறது. பத்திரிக்கைகளுக்கு படம் வரைபவர்கள், சினிமா நாயகர்கள் எவ்வளவு அலட்சியமாக அந்த ஆடையை ஒவ்வொருத்தர் கற்பனைக்கு ஏற்ற மாதிரி சித்தரிக்கிறார்கள் என்று செல்லமாய் கேலி செய்துவிட்டு, “ஜெயிலுக்குப் போகவாவது கதர்ச் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும்,” என்று கதைக்குத் திரும்புகிறார் அமி. அதற்கு வசதியாக, கதையின் இந்தக் கட்டத்தில், “அவனுக்கு ஜெயிலுக்குப் போக வேண்டுமென்று ஆசை வந்தது”, என்றும் முந்தைய வரியில் எழுதி விடுகிறார் அவர்.
சரி, கதர்ச்சட்டைக்கு எங்கே போவது என்று கேள்வி கேட்டு, அவர்களே முழு பீசாக வாங்கி ஆளுக்கு ஒரு பகுதி என்று கத்தரித்துத் தைத்துக் கொள்ளும் ராம்கோபால் மில் துணி பற்றி ஒரு ரசமான பத்தி. அதற்கும் ஜெயில் துணிக்கும் பெரிய வித்தியாசமில்லை- ஒரு முறை அவர்கள் வாங்கிய துணியில், “கருப்பு நிறத்தில் பெரிய பெரிய கட்டங்கள். போலீஸ்காரன் துரத்தாத கைதியாக அவன் பள்ளிக்கூடம் போய் வந்தான்”. இந்த இடத்தில் கதை நடக்கும் காலம், இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்த காலகட்டம் என்ற தகவல் பதிவாகிறது. அதனுடன், அப்போதெல்லாம் கல்கியும் ஆனந்த விகடனும்தான் கிடைக்கும், கதர்த்துணி வேண்டுமென்றால் நூல் நூற்றுக் கொடுத்து பண்டமாற்று செய்து கொள்ள வேண்டும் என்ற அரிய தகவல்கள்.
இப்போது நம் நாயகன், அவன்தான் குணப்படுத்தவியலாத ரொமாண்டிக் ஆயிற்றே, “அவனுக்கு துணி கிடைக்காது போனாலும் நூல் நூற்றால் போதும் என்று தோன்றியது”. உடனே ஒயிலாக காலை மடித்துப் போட்டு இராட்டை சுற்றும் நாயகியரின் புகைப்படங்களை நினைத்துப் பார்க்கிறான். தற்போது இராட்டை இல்லா குறைக்கு, தன் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு, அதன் சக்கரத்தை வேகமாகச் சுற்றுகிறான்- “நூல் மலையாகக் குவிந்தது. உலகமெல்லாம் கதரால் நிறைந்து விடும். கைதிகள், காவல்காரர்கள் எல்லாரும் கதர் அணிந்துதான் ஆக வேண்டும்”. ஆனால் நிஜத்தில் கை இருப்போ ஒரு கதர்ப்பை. எனவே, எத்தனையோ அசௌகரியங்கள் இருந்தாலும் அதை பள்ளிக்கு பாடப்புத்தகங்கள் கொண்டு செல்லப் பயன்படுத்திக் கொள்கிறான் சிறுவன். அந்த சந்தோஷத்தையும் கெடுக்க வந்து சேர்கிறான் வஹாப்.
வஹாப் ஏற்கனவே ஏழாம் வகுப்பு பெயில் ஆனவன் (“தைரியமாக தூங்குவான்”), நண்பன்தான், இவனுக்கு அருகில் அமர்ந்திருக்கிறான். ஒரு முறை வஹாபால் பதில் சொல்ல முடியாத கேள்விக்கு கொஞ்சம் திமிர் தொனிக்கும் குரலில் இவன் பதில் சொல்லி விடுகிறான் (“தான் அவ்வளவு அகம்பாவம் பிடித்தவனாக நடந்து கொண்டிருக்க வேண்டாம் என்று அவனுக்குத் தோன்றிற்று”, என்று பிற்சேர்க்கை). அன்று பகை பாராட்டத் துவங்கும் வஹாப் இந்தச் சிறுவனுக்கு தொடர்ந்து வகுப்பில் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறான். அந்த வகையில் ஒரு முறை இவனது பையை கீழே தள்ளி உதைத்து விடுகிறான். “அதுவும் கதர்ப்பை. மகாத்மா காந்தி நூற்ற நூலிலிருந்து செய்யப்பட்ட கதர்ப்பை” என்று கொந்தளித்து வகுப்பு முடிந்ததும் நேரம் பார்த்து வஹாபை கீழே தள்ளி விடுகிறான், இருவருக்கும் சண்டை நடக்கிறது. குஸ்தி முறை சண்டையில் வஹாபை வீழ்த்தி சண்டை இவனது வெற்றியில் முடிந்ததுஎன்று பிடி தளர்த்தும்போது வஹாப் பலமாக தாக்குகிறான். இந்த விஷயம் வீட்டுக்குத் தெரிந்து அப்பா வஹாப் வீட்டுக்குப் போய் பேசுகிறார். அது போதாதென்று பள்ளிக்கும் சென்று வஹாப் மீது குற்றம் சாட்டுகிறார்
வஹாப் அன்று முழுவதும் பெஞ்ச் மேல் நிற்கிறான். திமிராக பதில் சொன்னதற்கே அத்தனை படுத்தியவன் தண்டனை வாங்கித் தந்ததற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? ஆனால், ஆனால் மிக ஆச்சரியமாக அதற்கு அப்புறம் அவன் விரோதம் பாராட்டுவதில்லை, சண்டையில் இவனது பங்கு என்ன என்பதையும்கூடச் சொல்வதில்லை. இதற்கு அப்புறம் கதை மறக்க முடியாத கடைசி பத்திக்கு வருகிறது. கதர்த்துணி அழுக்காகிறது, தோய்க்கத் தோய்க்க கிழிகிறது. அப்புறம் சைக்கிள் துடைக்கும் துணியாகிறது – “சைக்கிளின் அழுக்கை அந்தத் துணி மிகுந்த பிரியத்தோடு சுவீகரித்துக் கொண்டு உருமாறிப் போயிற்று”. அதைச சிறுவன் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை என்பது அமியின் புதிர்த்தன்மை பொருந்திய சொற்களில், “அதை ஒரு தியாகம் என்று எண்ணிக் கொள்ள அவனுக்குத் தோன்றவில்லை. அவனுக்கு வருத்தமுண்டானாலும்கூட கதரின் சாசுவதமின்மை குறித்து அவனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருந்தது”.
இதுவரை நாம் படித்த கதைக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல், சுதந்திரப் போராட்டம், காங்கிரஸ், தியாகம், ஆட்சி, அதிகாரம், அதன் அவலங்கள், இறுதி மாயமழிதல் என்று எது எதற்கோ குறியீடாக இருக்குமோ இந்தக் கதர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி, பல ஆண்டுகளுக்கு அப்புறம் அவனுக்கு கதர் அணிய வாய்ப்பு கிடைத்தது, “ஆனால் நஞ்சன்கூடு பல்பொடி கிடைக்கவில்லை” என்று கதை முடியும்போது இது என்ன அபத்தமான நாஸ்டால்ஜிக் நெகிழ்ச்சி, இப்படிச் சொன்னவர், அவன் ஜெயிலுக்கும் போகவில்லை என்றும் எழுதியிருக்கலாமே, கதை என்ன மோசமா போயிருக்கும் என்று நினைத்துக் கொள்கிறோம். இதை எதற்கு வேறு வேலை இல்லாமல் நண்பர் “மதுர மல்லி” சிவசக்தி சரவணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நம் அரைகுறை அறிவைச் சோதிக்கிறார் – என்று நான் மட்டுமல்ல, நீங்களும் குழம்பினால் தப்பில்லை.
oOo
மொழிபெயர்ப்பில் இறங்குவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றுள் மிக முக்கியமான ஒன்று, மொழிபெயர்ப்பில் அறிவது போல் வேறெந்த வகையிலும் ஒரு படைப்பை அறிய முடியாது. உதிரி உதிரியாக பாகம் பிரித்து ஒன்று சேர்ப்பது போன்ற ஒரு முயற்சி அது
மொழிபெயர்ப்பைச் சரி பார்க்கும்போது, இந்தக் கதையில் நாம் தவற விட்ட விஷயம் இருக்குமோ என்ற சந்தேகம் முதலில் வந்தது, “வஹாப் மிகவும் பயந்து விட்டான். ஆனால் அவ்வளவு அடிதடி நேர்ந்ததற்கு அவன் மட்டும் காரணமல்ல என்று அப்பாவுக்குத் தோன்றும்படி கூறியிருக்க வேண்டும்,” என்பதை மொழிபெயர்த்தது சரியா, என்ற இடத்தில். வஹாபை வீட்டுக்குப் போய் பார்க்கும் அப்பா அடுத்தது பள்ளிக்கும் போய் குற்றம் சொல்வதால், அடிதடிக்கு வஹாப் இவன் மீதும் பழி போடுவதால் கோபம் அடங்காமல் பள்ளிக்குச் செல்கிறார் அவர் என்று புரிந்து கொண்டேன். ஆனால் சரவணன், “அப்படி பார்க்கக் கூடாது. அடிதடிக்கு தான் மட்டும் காரணமல்ல என்பதை அப்பாவுக்கு வஹாப் புரிய வைக்கத் தவறிவிட்டான்,” என்று அர்த்தம் செய்து கொள்ளலாம் என்றார். அந்த இடத்தில் கதைசொல்லியின் குரலில் ஒரு வருத்தம் முதன் முதலில் தென்பட்டது.
அதற்கு அடுத்த ‘திறப்பு’, “ஆனால் நஞ்சன்கூடு பல்பொடி கிடைக்கவில்லை,” என்ற இடத்தில் கிடைத்தது. பல வாக்கியங்களைப் பரிசீலித்ததில், “but Nanjankoodu toothpowder was not to be had”, என்பது கொஞ்சம் பொருத்தமாகத் தோன்றிற்று. ஆனால் not to be had என்று சொல்லும் அளவுக்கு பல்பொடி ஒரு பெரிய விஷயமா என்ற கேள்வியுடன், அதற்கு கதையில் என்ன வேலை, என்ற கேள்வியும் எழுந்தது. ஏதோ ஒரு வகையில் அது கதைக்கு முக்கியமாக இருக்கிறது. கதர் ஒரு குறியீடு என்றால் கதரால் வாக்களிக்கப்படுவது நஞ்சன்கூடு பல்பொடி- கதரும் காணாமல் போயிற்று, அதன் வாக்குறுதியும் பொய்த்தது என்று வாசிப்பது ஓரளவு திருப்தியாக இருந்தாலும் கதையின் பிற பகுதிகளோடு ஒட்டாமல் – குறிப்பாக வஹாப் சண்டை, கதையில் அதன் முக்கியத்துவம் என்ன?-, இந்த முடிவின் செயற்கைத்தன்மை கதையின் நம்பகத்தன்மையை முழுமையாய் குலைப்பதாக இருந்தது. கடைசி பத்தியை எழுதுவதற்காக் இட்டுக் கட்டிய கதை, அல்லது, கடைசி பத்தியின் மெலோடிராமாவில் முட்டி நின்ற கதை. எதுவும் திருப்தியாக இல்லை.
நஞ்சன்கூடு எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ள அத்தனை ஆர்வமாக இருந்தவன்- அப்பா இணக்கமான மனநிலைக்கு வர ஒரு வாரம் காத்திருக்கிறான்-, அந்தப் பை கதர்ப்பை என்று தெரிந்ததும் அந்த ஊர் மீதுள்ள அக்கறை அத்தனையையும் உடனே இழக்கிறான், இவன் என்ன பையன், இவனது ‘தேடல்’ எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்ற எண்ணம் திறப்பின் இறுதி திருகல். அங்கிருந்து அவன் எத்தனை எத்தனை விஷயங்களில் ஆசைப்படுகிறான் என்று பட்டியலிட ரொம்ப தூரம் போக வேண்டியதில்லை- முதலில் நஞ்சன்கூடு என்ற இடத்தைக் கண்டுபிடிக்க ஆசை, அப்புறம் அது தேன்கூடு மாதிரி இருக்குமோ என்று அம்மா சொன்னதும் நஞ்சன்கூடு பல்பொடியில் பல் தேய்க்க ஆசை, அப்புறம் கதர்த்துணி என்று தெரிந்ததும் கதர் அணிந்து கொண்டு ஜெயிலுக்குப் போக ஆசை, கதர்த்துணி கிடைக்காது என்பதால் நூல் நூற்க ஆசை. இவனது பதின்ம பிராய ஆசைகள் உள்ளீடற்றவை, புற உலகில் நிகழும் பெரும் போராட்டத்தின் தீவிரத்தை உணராதவை.
கதர் அணிந்தாலே சிறைத்தண்டனை என்று அச்சப்படும் ஊரில் ஒருவர் கதர்த்துணியால் செய்யப்பட்ட பையை இலவசமாகக் கொடுக்கிறார் என்பதன் அர்த்தம் கடைசி வரை அவனுக்குத் தெரிவதில்லை. அதனால்தான் “”ஆனால் நஞ்சன்கூடு பல்பொடி கிடைக்கவில்லை,” என்று கதையை முடிக்கிறார் அமி. அது எப்படி கிடைக்கும்? கதரில் துணி செய்து அதில் தன் பெயரையும் அச்சிட்ட நிறுவனம் எத்தனை நாள் செயல்பட்டிருக்க முடியும்? கதைசொல்லியின் அறியாமை வஹாப் சம்பவத்துக்கு கதையில் உள்ள இடத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
oOo
அசோகமித்திரன் இந்தக் கதையை எப்படியெல்லாமோ எழுதியிருக்கலாம். ஆனால், கதர் மீதும் காந்தி மீதும் பக்தி கொண்ட ஒருவன், அது முதிரா உணர்வாகவே இருக்கட்டுமே, கதர்த்துணி அவமானப்படுத்தப்பட்டதும் கொதிக்கிறான், சண்டை போடுகிறான். அவனது கோபத்துக்குக் காரணமானவன் அவனைக் காட்டிக் கொடுப்பதில்லை, நாள் முழுதும் பெஞ்ச்சின் மீது ஏறி நின்று தண்டனை அனுபவிக்கிறான், அதற்குப் பின் அவனைத் துன்புறுத்துவதில்லை. கதர் கதையின் நாயகனுக்கு மிஞ்சுவதெல்லாம் “ஆனால் அவ்வளவு அடிதடி நேர்ந்ததற்கு அவன் மட்டும் காரணமல்ல என்று அப்பாவுக்குத் தோன்றும்படி கூறியிருக்க வேண்டும்,”” என்ற வருத்தம் மட்டும்தான்.
இங்கு, அசோகமித்திரன் ஒரு காந்தியக் கதை எழுதியிருக்கிறார்.
Moral high ground என்பதற்கு தமிழில் என்ன, தெரியவில்லை. அதைக் கைப்பற்றுவது எளிது, காப்பாற்றிக் கொள்வதுதான் கடினம். சமய சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால் கணப்பொழுதில் அது சித்தியாகும். ஆனால், வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டாட அது ஒரு மேன்மையல்ல- சத்தியாகிரகத்திற்கான தகுதி ஆன்மசுத்தியால் மட்டுமே ஏற்படுவதால், காந்தியத்தில் பற்றுள்ள சாதாரணர்களுக்கு மிஞ்சுவது தம் போதாமைகள் குறித்த வருத்தங்களும் தம் சறுக்கல்கள் குறித்த துயரும்தான். எந்த லாபமும் இல்லை என்றாலும், நியாயப்படுத்தலாகவோ முன்னிருந்த சமநிலையை நிறுவுவதாகவோ அமையாது என்றாலும் தம் பிழைகளை ஏற்றுக் கொண்டு வெளிப்படையாய் வாழ்வதில்தான் காந்தியத்தின் மாரல் ஹை கிரவுண்ட் தொடப்படுகிறது..
இதுவோ புனைகதை, இங்கு அமி வஹாபை ஏன் காட்டிக் கொடுக்காதவனாகப் படைத்திருக்க வேண்டும், அவன் ஏன் நாள் முழுதும் பெஞ்சில் நிற்க வேண்டும், அவன் ஏன் தான் தண்டிக்கப்பட்டபின் எந்த தொல்லையும் செய்யாதவனாக இருக்க வேண்டும்? வஹாப் கெட்டவனாகவே இருந்தால்தான் என்ன? இத்தனைக்கும் கதர் கதையின் சிறுவன் வஹாபால் தொடர்ந்து சீண்டப்பட்டு, ஒரு உடைகணத்தில்தான் அடிக்கப் போகிறான்- அவனது காந்தியம் போலியானதாக, புரிதலற்ற சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், அதை அடிக்கோடிட்டுக் காட்ட வஹாபை இவ்வளவு குற்றமற்றவனாக்க இத்தனை பிரயாசைப்பட்டாக வேண்டுமா? ஏன் இப்படிப்பட்ட ஒரு காந்தியச் சாடலைக் கதையாய் எழுதிப் பார்த்திருக்கிறார் அமி? அதில் ஒரு ஆச்சரியமுமில்லை.
வாழ்க்கையின் அழுக்கை மிகுந்த பிரியத்தோடு சுவீகரித்துக் கொண்டு உருமாறிப் போகும் கதர்த்துணி போன்றதுதான் காந்தியம். “அதை ஒரு தியாகம் என்று எண்ணிக் கொள்ள அவனுக்குத் தோன்றவில்லை. அவனுக்கு வருத்தமுண்டானாலும்கூட கதரின் சாசுவதமின்மை குறித்து அவனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருந்தது”- என்று சொல்லும்படியான வருத்தமும் ஏமாற்றமும்தான் காந்தியத்தின் சுத்திகரிப்பு. காந்திய Moral high ground ஆக விளங்குவது triumphalismக்கோ gloryக்கோ பிறரைக் குற்றம் சாட்டித் தப்பிக்கவோ இடம் கொடுக்கும் சிகரமல்ல, அது மேலும் மேலும் எளிமையை நோக்கி, ஏன் தன் காலத்தோடு தானும் செல்லும் தாழ்தளம்.
காந்தியும் கதரும் பிரதிநிதிப்படுத்தும் அறம், அத்தனை குற்றங்குறைகளுக்கும் தன்னைச் சார்ந்து வாழ்பவர்களையே பொறுப்பாக்குகிறது என்பதால் இந்தக் கதை இப்படிதான் இருக்க முடியும், அது ஒரு பெரிய ஆச்சரியமில்லை. இத்தனை யோசிக்க இடம் கொடுக்கும் கதை, இதை வெறும் ஆயிரத்துச் சொச்சம் வார்த்தைகளில், கொஞ்சம்கூட சத்தம் போடாமல், வடிவ நேர்த்திக்கு முயற்சிக்காமல் அதன் அத்தனை குறைகளோடும் எழுதியிருக்கிறாரே அமி, அது ஆச்சரியம்.