சூடிக் கொடுத்த பாவை- தி. வேல்முருகன்

தி. வேல்முருகன்

“ஒங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி எம்பாவாய்…”

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

ஒருமித்த பலரின் குரல்கள் சேர்ந்து ஒலித்து நின்றது தொடர்ந்து தீபாராதனை மணிச்சத்தம். பிறகு சட்டென்று நிசப்தம். பெருமாள் கோயில் காலை மார்கழி பஐனை முடிந்து தீபாராதனையும் முடிந்து விட்டது மனதில் வெறுமை. பிள்ளைகள் பள்ளிக்குப் கிளம்பிச் சென்று விட்டார்கள்  காலை நாலரை மணிக்கு எழுந்து தெருக்கூட்டி கோலம் போட்டு காலைக்கு இட்டிலியும் சட்டினியும் மதியத்திற்கு சாப்பாடும் செய்து அனுப்பியாயிற்று ‘நல்ல சோத்துக்கு ஆளாய்ப் பறக்கும் இந்த மனுசன் வீட்டுக்கு வந்து போயி மூணு மாசமாவது. நம்ம நினைப்புதான் கிடந்து அல்லாடுது, எங்க சாப்டூதோ எங்க நிக்குதோ’ என்று தன் கணவன் நினைப்பு வந்து அவள் மனம் அல்லாடியது.

“எம்மா? எம்மோவ்…” என்று சத்தம் வந்த திசையை நோக்கி அடுக்களையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.

இடுப்பில் ஒரு குழந்தையோடு தலையில் சிறு கூடை வைத்துக்கொண்டு அந்தக் கிழவி காலை இளம் வெயிலில் ஓவியம் போல் நிற்பதை திறந்திருந்த ஒற்றை நிலைக்கதவின் வழியாகப் பார்க்க முடிந்தது. அவள் இடுப்பில் இருந்த குழந்தை சிணுங்கி, “ஆயா… ஆயா…” என்றது.

“கூட, மொரம் இருந்தா குடும்மா. கட்டி மொழுவி தரேன்”

“இல்லைம்மா”

“என்ன தாயி அப்படி சொல்லிப்புட்ட, குடியான வூட்டுல கூடை மொரம் இல்லைன்னு!”

“இல்லம்மா இப்ப கூட, மொரம் எங்க வருது? அதுக்குதான் இப்ப வேலையும் இல்லையே”

கைக்குழந்தை மேலும் சிணுங்கி அழுது, “ஆயா… ஆயா…” என்று கிழக்கு நோக்கி கை காட்டியது.

“ஏம்மா அழுவூது?”

“இட்டிலி கேக்கறா. கடையில தீர்ந்துடுச்சு. ரெண்டு வயசாகப் போவுது பேச்சு வரல அதான் கையை ஆட்டிக்கிட்டு இருக்கா”

“இரு… நான் தரேன்”

இரண்டு இட்டிலியும் சட்டினியும் வைத்துத் தந்ததை குழந்தை ஆவலுடன் தின்றது.

“எந்த ஊரு?”

“தாழம்பேட்டைம்மா”

“அங்கே இருந்தா வர?”

“இல்லை தாயி, புதுப்பேட்டை தாண்டி பெரிய மதுவு இல்லை அங்கதான் பொண்ண கட்டிக் குடுத்துருக்கேன், பேரப் பிள்ளைய பாக்க வந்தேன், எல்லாம் வேலைக்கு போயிடுச்சுங்க நான் சரி பாக்கத் தெரிஞ்ச வேலையை பார்ப்போம்னு வந்தா காலையிலேருந்து பச்சத் தண்ணி பள்ளுல படாம சுத்துறேன் ஒரு மானுடம் கூப்டலம்மா”

மேலும் மூன்று இட்டிலியும் தண்ணீரும் கொடுத்து, “சாப்பிட்டுட்டு பேசு,” என்றதும் மவுனம்.

“சரி, நீ சாப்பிட்டுட்டு கூப்பிடு ஆயா, நான் கைவேலையை முடிச்சுட்டு வரேன்”

அவதி அவதி என்று அள்ளிப் போட்டு கொண்டபின் போய் பார்க்கும்போது சாப்பிட்ட இரண்டு தட்டும் கழுவி இருந்தது. கூடையில் இருந்த சின்ன கொட்டுக்கூடையை எடுத்து, “எம்மா இதை கொண்டு உள்ள வை,” என்று கொடுத்தாள்.

“இது ஏதாயா?”

“கத்தி புடிச்ச கை சும்மா இருக்குமாம்மா நான்தான் செஞ்சேன். இந்தக் கையால எவ்வளவு கூட மொரம் பின்னியிருப்பேன் தெரியுமா?”

“அப்பிடியா ஆயா?”

“என்ன தாயி அப்படி சொல்லிப்புட்ட?  இந்த ஊரு வியாழக்கிழமை சந்தைக்கு வருவேன், வெள்ளிக்கிழமை சேத்தியாதோப்பு சந்தைக்கு போயிட்டு சனிக்கிழமை வடலூர் சந்தை ஞாயிறு குள்ளஞ்சாவடி ரெண்டு நாள் வூட்டுள இருந்து கூட மொரம் பின்னி எடுத்துக்கிட்டு செவ்வாய்க்கிழமை குள்ளஞ்சாவடி புதன்கிழமை புதுச்சத்திரம் சந்தை அப்படியே ஓட்டமா ஒடுச்சு தாயி 30 வருசம் ஒரே வட்டமா குடிச்சு குடிச்சு குறவன் செத்துப் போனான், கூட மொரமும் செத்து போச்சு. நான் கிடந்து அல்லாடுடறன் இதை எடுத்து உள்ள வை, பிறகு வரும்போது கூட மொடஞ்சு கொண்டு வாரேன். பிளாஸ்டிக் வந்துதான் எங்க வாயில மண்ண போட்டுது. நான் வரேன் தாயீ, திரும்ப வந்தா நீ ஒரு வா சோறு போடு, என்ன?”

“ஆயா, இந்தா… இந்தா…”

“ஏம்மா, காசா? அட வாணாம்மா!”

“அட, வைச்சுக்க ஆயா…எதாவது செலவுக்கு ஆவும்”

30 வருட வாழ்க்கையை ஒரு சொல்லில் சொன்ன ஆயா தனக்குள் ஆழ்ந்து நடக்க ஆரம்பித்து விட்டாள். “இந்த புள்ள பொன்னாயா மாதிரி இருக்கே, கேட்டு இருக்கலாம் இந்தக் காலத்திலும் திருந்தாம கிடக்கிறேன் பாரு,” என்று அவளது எண்ணங்கள் திரண்டு வந்தன.

எப்பேர்ப்பட்ட குடும்பம். இந்தப் புள்ள இங்கேதான் கட்டிட்டுருக்கா நம்மள தெரியுமோ? தெரியல போலிருக்கு. பொன்னாயா பேத்தியா இருக்குமோ? அப்படிதான் இருக்கனும்.

கட்டிக்கிட்ட புதுசுல மப்பும் மந்தாரமா இருந்த ஒரு நாள் காலையில, ‘கலியா கலியா’ என்று பொன்னாயா  அப்பன் கூப்பிட்டாங்க ரோட்டுல வில்வண்டி நின்னுருந்துச்சு.

“கலியன் இல்லையா?”

“இல்லிங்க?”

“நீ யாரும்மா?”

“அவரு பொஞ்சாதிங்க”

அவரு அப்படியே போயிட்டாங்க. ஆளு தோரணைய பார்த்ததும் யாருன்னு கேட்க முடியல பார்த்துக் கொண்டிருக்கும்போதே வண்டி மறைஞ்சு போச்சு. வூட்டூகாரர் வந்ததும் சொன்னாள். அப்ப போன மனுசன் மறுநாள்தான் வந்தாரு, தலையில கள நெல்லோடு. என்ன, என்று கேட்டாள்.

“முதலாளி வூட்டு கோழி பிராந்துட்ட குஞ்சைப் பறி கொடுத்துட்டு நாள் முச்சுடும் கோ கோன்னு கத்திருக்கு, அதான் கூண்டு செய்யச் சொன்னாங்க”

“அதுக்கு இம்மாம் நேரமா?”

ஏ”க்கழுதை நம்ம கல்யாணத்துக்கு காசு பணம் கொடுத்து உதவுனது அவுங்கதான். மூங்கி கழி வெட்டி போட்டு வந்துருக்கேன் வேலை கொடுத்து இருக்காங்க நாளைக்கு போவும்”னாங்க

போய்ப் பார்த்தால், இன்னைக்கெல்லாம் பார்க்கலாம் போலிருந்தது.. தலை வாசல! அரிக்கால! மாலை சூடிய பூர்ண கும்பத்தை ஆனைவோ இரண்டு பக்கமும் மாலையை உயர்த்தி போட அப்படியே நெருங்குது. அவள் பார்த்து திகைத்து நின்றுவிட்டாள். இம்மாம் பெரிய வாசலும் இரண்டு பக்கமும் தின்னைவோ முன்ன பின்ன பார்த்து இல்ல, அப்படியே கன்னத்துல கை வச்சிகிட்டு நிற்கிறாள்.

அவளைப் பார்த்து, “இங்க எங்கடி வந்த?” என்று ஒரு குரல் கேட்கிறது.

யாருன்னு பார்த்தா பொன்னாயா வெளியே வருது, “ஏ ஆண்டாளு நீ எங்க இங்க?” என்கிறது.

“இங்கேதான் தாழம்பேட்டைல இவரத்தான் கட்டிக்கிட்டேன் ஆயா!”

“ஏலேய் கலியா இவ அப்பன் வீரன் சின்னப்புள்ளைலேருந்து தெரியும் ஒழுங்கா பார்த்துக்கோ”

“சரிங்க”

“முதல்ல வயிறார சாப்பிடுங்க காதடைச்சு வந்திருப்பிங்க”

இரண்டு பித்தளைத் தூக்கு வாளிகளில் சோறும் பூவரசு இலையில் துவரரிசி துவையலும் இப்ப பார்த்த அந்தப் புள்ளதான் கொடுக்குது, அப்படியே பொன்னாயா சாடை. கட்டசம்பா அரிசி இன்னும் போட்டாலும் சாப்பிடுலாம் அம்மாம் ருசி!. அது எல்லாம் ஒரு காலம், என்று நினைத்துக் கொண்டே கிழவி மகள் வீடு வந்து விட்டது

வாசலில் நிற்க்கும் மகளிட,ம் “ஏய் இங்க எங்கடி ஈச்சம் மட்டை கிடைக்கும்?” என்று கேட்டுக்கொண்ட உள்ளே போனாள்.

“ஏன் உனக்கு சும்மா இருக்க முடியாதா, உன் தொழிலத் தூக்கிட்டியா?

“ஆமான்டி அதான் உங்களுக்கு கஞ்சி ஊத்துச்சி. பிள்ளையக் குடுத்துட்டு பக்கத்துல போயி கேளு. எனக்கு தெரியும்டி யாரும் சொல்ல வாணாம், நான் பார்த்துக்கறன்,” என்றாள்.

எப்ப விடியும்னு பார்த்த கிழவி விடிந்ததும் முதல் வேலையாக மகளிடம், “கொஞ்சம் வேலை இருக்கு,” என்று ஆரம்பித்தாள். “நீ என்னை எதிர்பார்க்காத, புள்ளைய பார்த்துக்க. நான் பொறைக்கு வந்துடறேன்”

கிழவி விறுவிறுவென்று, வெள்ளாத்து ஓரம் நடைய எட்டி போட்டால் கிரேடர் போயிடலாம், எப்படியும் ரயில் ரோட்டு ஓரம் கிடக்கும் தேறினதா முத்தலும் இல்லாமல் இளசும் இல்லாம ஒரு அம்பது ஈச்சம் மட்டை, கொஞ்சம் கட்டுக்கொடி பதமானதா வெட்டிக் கொண்டு போவணும், என்று நினைத்துக் கொண்டே நடந்தாள். செத்த வெயில்ல போட்டு எடுத்தா மனசுபோல வணங்கும். பேசிக்கிட்டே செய்ய ஆரம்பிச்சா ஒரு இரண்டு மணி நேரம் அதுக்கு மேல பார்ப்போம், என்று சொல்லிக்கொண்டே வந்தவள், நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும் போல, இது என்ன இப்படி காடா கிடக்கு, கடவுளே!, என்று திகைத்து நின்றாள்.

“யம்மா… யம்மோவ்!”

“யாரு?”

“நான்தாம்மா”

“ஆயாவா? வா ஆயா! உனக்கு ஏன் இந்த வேலை?”

“இரு, தாயி. குச்சிய வெய்யல்ல போட்டு வரேன்”

“நேத்திலிருந்து நினைப்பு கிடந்து அடிக்குது ஆயா உன்னை எங்கியோ பார்த்து இருக்கேன் எங்கேன்னுதான் தெரியல”

“நீ பொன்னாயா பேத்தியா?”

“ஆமாம் ஆயா”

“அப்படி சொல்லு ஏன் ராசாத்தி, நேத்தி உன் கையால சாப்பிட்டதுமே நாக்கு சொல்லிடுச்சு அதே பொன்னாயா கை பக்குவம் புத்திக்கு தான் உரைக்கல. தாவத்துக்கு எதாவது குடு பிறகு சொல்றேன்”

“இந்தா ஆயா, கூச்சப்படாம சாப்பிடு”

“ஏம்மா இவ்வளளோ குடுக்குற, வயிறு சுருங்கிப் போச்சு, ருசிதான் கேக்குது நாக்கு”

“சரி ஆயா, சாப்பிடு! நான் மதிய வேலைய நெருக்கிட்டு வரேன்”

“ஆகட்டும் தாயி!” என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கப் போனாள்.

“அம்மா, கொஞ்சம் குடிக்க தண்ணி குடு”

“தே வந்துட்டன் ஆயா, சாப்டியா”

“சாப்ட்டேன் ஆயி”

“பொன்னாயா கைப்பக்குவம் அப்படியே இருக்கு. என்னதான் மாயம் பண்ணுமோ தெரியாது, அம்மாம் ருசி”

“ஆயா பாடம்தான் எல்லாம்”

“சொல்லாயி குடும்பம் ஏன் அப்படி ஆச்சு?”

“தெரில ஆயா! அது பெரிய கதை”

“சொல்லாயி பெராக்க கேட்டுகிட்டே செய்யறேன்”

“ஒரு ராத்திரி தீடிர் தடார்ன்னு இடி மின்னலோட பெரிய மழை. ஒரு பக்க கூரை ஓட்டோடு உள்ள விழுந்துச்சு. அந்த பெரிய மழையில சுவரு விழுந்துடுச்சு. சுவருல பதிச்சிருந்த துயிலம் தூணும் அதோடு நாங்க ஆடும் ஊஞ்சல் அறுந்து பலகை  மேலே கிடந்தது ஆயா…

“எனக்கு நல்லா நியாபகம் இருக்கு பொன்னாயா உடம்பு நடுங்குது எங்கள கைல அணைச்சுகிட்டு சுவத்துல சரிஞ்சு, கடவுளேன்னே உக்காந்தது. பிறகு எதுவும் கைகூடல பங்காளி பகைச்சல். போற எடம்ல்லாம் சன்டை சச்சரவுன்னு ஆயிப் போனதுல ஆயா ஊட்ட சரி பன்ன சொன்னத அப்பா கேட்கல

“ஒரு ராத்திரி வயித்துப் போக்குல ஆயா போயிடுச்சு பிறகு அப்பா, ஆயாவ நான்தான் கொன்னுட்டேன் பாவி பாவின்னு குடிக்க ஆரம்பிச்சு குடிப்பழக்கம் ஆகி குடியில் விழுந்துச்சு பிறகு வீடு எழுந்திருக்கவே இல்லை. மிச்சம் மீதி இருந்தத வச்சு என்னை கட்டிக்கொடுத்த கையோடு எனக்கு புள்ள பொறந்த மறுவருசம் அப்பாவும் போயி சேந்துச்சு”

உணர்ச்சி மேலிட்டால் அவள் அழுவதைப் பார்த்து, “அழுவாத ஆயி முப்பது வருசம் கெட்டவங்களும் இல்ல முப்பது வருசம் வாழ்ந்தவங்களும் இல்லை. உன் புள்ள தலை எடுத்து பேரப்பிள்ளைவோ காலத்தில நல்லா வந்துடும் ஆயி. அழுவாத, அழுவாத, சொன்னா கேளு,” என்று ஆறுதல் சொன்னாள் கிழவி.

“சரி ஆயா, உனக்கு பொன்னாயாவ எப்படி தெரியும்?’

“நல்லா கேட்ட போ. நான் பொறந்து வளர்ந்தது ஆயா பொறந்த ஊருதான். எம்மாம் பெரிய ஊடு அவுங்க ஊடு நாளுகை தாழ்வாரம் வச்ச இரண்டு கட்டு வீடு இரண்டு பக்கமும் முழுசும் நெல் மூட்டைவளும் அடுத்த பக்கம் வரிசையாக  மரப்பத்தாயமும் இருக்கும். ஊருக்கு வந்துச்சுனா சொல்லி அனுப்பும். அப்பா கூட நான் பார்க்கப் போனா சாப்பிடச் சொல்லி எதாவது கையில கொடுக்கும் முருக்கோ, அதிரசமோ, சோறோ எதா இருந்தாலும் அம்மாம் ருசி.

“என் அப்பன வீரா வீரான்னு சொந்த தம்பி மாதிரிதான் பேசும். எங்கள்ட்ட கூடை மோரம் வாங்குனா கூடதான் காசி கொடுக்கும் தாயில்லா பொன்னு நான்னு எம் மேல தனி பாசம்மா அதுக்கு”, என்று முடித்தாள்.

சரி ஆயா நீ என்ன எங்க பார்த்த?”

“உன் கையால சாப்ட்டே இருக்கேன் உனக்கு பத்து வயசு இருக்கும். உங்க அப்பா எங்க ஊட்டுக்காரரத் தேடி தாழம்பேட்டை வந்துட்டாங்க இரண்டு நாள் சென்னு  கோழிக்கூண்டு செய்ய வந்தோம்”

“ஆமாம் ஆயா. என் கண் எதிரே கோழி கூண்டு செஞ்சிங்க. மூங்கிப் பட்டை ஈச்சம் பட்டை, பூலாக்குச்சி கட்டுக்கொடிலாம் காய வச்சிங்க அதான் நியாபகம் இருக்கு”

“இரண்டு கூண்டு செஞ்சோம் ஆயி. நீயும் ஒந்தங்கச்சியும் அதுல பதுங்கி விளாண்டிங்க பொன்னாயாக்கூட ஏசுச்சு”

“எனக்கு நியாபகம் இல்ல ஆயா”

“அப்ப நீலாம் வெளாட்டு பிள்ளைவோ என்னமோ போ ஆயி… போன வாரம் நடந்தது எதும் ஞாபகம் இல்ல பத்து இருபது வருசத்துக்கு முன்னாடி உள்ளது எல்லாம் அப்படியே ஞாபகம் வருது சரியா போச்சு போ!. சரி ஆயா, கட்டிகிட்டது என்னா ஊரு? உம் வீட்டுகாரர் என்ன ஆனாரு?”

“கட்டிக்கிட்டது தாழம்பேட்டை பொறந்தது மூங்கிலடி. ஊட்டுக்காரர் கத வேண்டாம்மா, நான் டீ போட்டு எடுத்தாரன்”

ஆயா சரிந்து அமர்ந்தாள் கூடை பாதி வரை ஆகி இருந்தது.

“இந்தா ஆயா, டீ குடி. சீனி போட்டுப்பல்ல?”

“அதெல்லாம் குடிப்பம்மா”

“யான் ஆயா முகமெல்லாம் மாறிடுச்சு?”

ஹூம் என்று ஆயா அழ ஆரம்பித்தார். “நான் வேற உன்ன கேட்டிருக்கக்கூடாது”

“இங்க பாரு ஆயா அழுவாத உடம்பு ஏதாவது ஆயிட போவுது”

ஆயா, “ஏன் சாமி இருக்கும்போது அருமை தெரியல…” என்று தேம்பினாள்.

“சரி ஆயா அழுவாத டீயக் குடி ஆறிட போவுது. கொஞ்சம் தெம்பா இருக்கும்,” என்றாள்.

ஆனால, “ம்க்கும்” என்று கனைத்து கொண்டு, “என் கதைய சொல்றன், கேளும்மா,” என்று ஆரம்பித்தாள். “யார்ட்டையாவது சொன்னாதான் மனசு ஆறும் நான் வாழ்ந்துட்டன்மா எனக்கு போதும். வூட்டுக்காரர் பேரு கலியன். நான் அவங்கள இந்த ஊரு பரங்கிப்பேட்டை சந்தைல வச்சிதான் பார்த்தன். நான் பார்த்தப்போ ஒரு தோளில் துப்பாக்கி, பையி மறுதோள்ல காட்டுப்பூனை தொங்குது. ஆறு அடிக்கு மேல உயரம் கைல அதே உயரத்துக்கு மூங்கிக் கழி அப்படியே வீமன் மேறி நடந்து போறாரு, நான் திகைச்சு பார்க்கிறேன்”

“அப்பிடியே உழுந்துட்டன்னு சொல்லு”

“ம்க்கும் கிண்டல் பண்ணாதம்மா”

“இல்லை, இல்லை. சொல்லு ஆயா”

“சனம் கூட்டமா அப்படியே அவரு பின்னாடி போவுது. இவரு காட்டுப்பூனைய தொளில் இருந்து எடுத்து கருவைல மாட்ராரு. அப்படியே சட்டையும் கழட்டி வச்சிட்டு பைல இருந்து பேனாக்கத்தி எடுத்து வால்ல தொடங்கி பின் வரக்கும் ஒரு கோடு. அப்படியே கத்தியால நெம்பி ஒரு காலு அடுத்த காலு பின்னாடி வால்ல இருந்து தோல பனியன் கயிட்டர மாதிரி தலை வரைக்கும் கொண்டு வந்து கழுத்த அறத்து தலையும் தொலயும் பையில்ல வைக்கிறாங்க. அதுக்குள்ள ஆளாளுக்கு எட்டு கிலோ இருக்கும் இல்லை இல்லை ஆறு கிலோதான் இருக்கும். ‘ஏக்கொறவா, வில சொல்லப்பா’ன்னு சத்தம். இவங்க ஒன்னும் சொல்லல சுவத்துல இருந்து ஒரு பழைய போஸ்டர பிச்சி கீழே போட்டாங்க. பூனைவயித்துல கத்திய வச்சாங்க கூட்டத்துல இருந்த ஒரு ஆளு ‘ஏய் கொறவா, கேட்டுக்கிட்டே இருக்கோம் நீ பாட்டுக்கு இருக்க? உதை வேனும உனக்கு’ன்னு சத்தம் போடவும், ‘என்ன அடிக்கறவன் இந்த கழிய தொடுங்குடா முதல்ல’ன்னு ஒரு சலாம் வரிசை சுத்தி முங்கிய தரையில ஊனறாரு பாராயி ஒரு பய கிட்ட போவல.

“சந்தைல ஒரே பரபரப்பு மொத்த கறியும் அறிஞ்சு பத்து கூறு வச்சாறு நான் பார்க்கறத கவனிச்சு என்ன குறுகுறுன்னு பார்க்கறாரு “ஒரு கூறு இரண்டு ரூபாய் யாருக்கு வேனுமோ காச வச்சிட்டு எடுத்துக்கங்க”ன்னு பத்து நிமிஷத்தில் எல்லாம் வித்துப் போச்சு. அப்பன் என்னத் தேடி வந்துட்டுது ‘இங்கே என்ன பன்ற யாவரம் முடிச்சு போற எண்ணம் இல்லியா?’ன்னு கேக்குது. நான் திரும்பிப் பாக்கறேன். இவரு என்னைய பார்க்கறாரு. நான் என் அப்பன்கூட மொரம் விக்க வந்துட்டன்

“கொஞ்ச நேரத்தில் இவரு கைகால் எல்லாம் கழுவிட்டு துணிய போட்டுகிட்டு வந்துட்டாரு வந்து எதுத்தால சாடை மாடையா பார்த்துட்டு அப்பன் எட்டப் போனப்ப கிட்ட வந்து, “என்ன ஊரு புள்ள?”ன்னு கேட்டாரு. மூங்கிலடின்னு சொன்னேன்

“”அப்பன் பேரு?”

“”வீரன்ங்க”

“”ஊம் பேரு?”

“”ஆண்டாளு”

“அடுத்த கேள்வி கேட்டாரு பாரும்மா நேத்து கேட்ட மாதிரி இருக்கும்மா… இரு வாரேன் இன்னைக்கு கதையாதாம் போகும் போலருக்கு”

“ஆயா எங்க கிளம்பிட்ட, சொல்லு?”

“ஆயி வெத்தலை போட்டுட்டு சொல்றேன்”

“ஏன் வேலைல்லாம் கெட்டு போச்சு ஆயா இன்னைக்கு”

“கிடக்கு போ”

“சரி, சொல்லேன்”

“ம் நேரா மூஞ்சிய பார்த்து, ‘ஏ புள்ள ஆண்டாளு என்ன கட்டிக்கிரியா எனக்கு யாரும் இல்லை சொல்லு,’ ங்கிறாரு”

“நீதான் மொதல்லிய கழி சுத்துனப்பய உழுந்துட்டிய”

“இல்ல ஆயி, அவரு யாரும் இல்லன்னு சொன்னார் பாரு அப்பத்தான். எனக்கு ஆத்தா இல்லியா, நான் கட்டிக்கிறேன்னு சொல்லிப்புட்டேன். அப்பன் வரத பார்த்துட்டு அப்படியே போயிட்டாரு. அப்புறம் நாங்க போற சந்தைக்கு எல்லாம் அவரும் சைக்கிள்ள வராரு. இரண்டே நாள்ல அப்பனுக்கு தெரிஞ்சு போச்சு என்ன மொத தடவையா அடிச்சுட்டாரு. நான் சொல்லிப்புட்டேன் உன் மகள நீ பாக்கனுமுன்னா நான் அவரதான் கட்டிப்பேன்னு சொன்னதும் பச்சைப்புள்ள மாதிரி தேம்பி அழுவுறாரு. அப்புறம், நின்னுட்ட இருந்தவர கைகாட்டி கூப்டாரு அப்பதாம்மா பார்த்தேன் இவரு பயந்தத!

“அம்மாம் பெரிய ஆளு இந்த ஊரு சந்தை சனம் பூரா வேடிக்கை பார்க்குது அப்படியே அப்பா கால்ல உழுந்துட்டாறு. அப்பனுக்கு ஒன்னும் புரியல. நான் ஓன்னு சத்தம் போட்டு அழுதத பார்த்ததும் அப்பன் வர முகூர்த்தத்திலே கல்யாணத்த வச்சிடுவம் பெரியவங்கள கூட்டிக்கிட்டு வா அப்படின்னு சொல்லிடுச்சு. வர போற சனம் எல்லாம், ‘எப்பா வீரா பொண்ணு கல்யாணத்துக்கு என்னியும் கூப்டு’ன்னாங்க அப்புறம் இவரு சார்பா உங்கப்பா தாழம்பேட்டை நாட்டாமைகிட்ட சொல்லி புதன்கிழமை புவனகிரி சந்தைல வச்சி பேசி முடிச்சாங்க. சேத்தியாதோப்பு தீ பாஞ்சாலி கோயில்ல தாலி கட்டிக்கிட்டோம்.

“கல்யாணம் முடிஞ்ச பிறகு கேட்டேன் “ஏன்யா இவ்வளவு சனம் எதுத்தாப்பல சந்தைல போய் கால்ல உழுந்தியே, ஏன்யா?” அப்படின்னு. அதுக்கு அவரு சொல்றார், “இல்ல கழுதை ஒப்பன அடிச்சுப் போட்டுட்டு தூக்கிட்டு போவனும்னு நினைச்சு இருந்தேன் ஆனா உங்கப்பன் அழுதத பார்த்ததும் எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல,’ அப்படின்னு. “சரியாதான்யா  செஞ்ச”ன்னு சொன்னேன். அப்புறம் இரண்டு மூணு மாசத்துக்கு பிறகு தான் ஒங்க வூட்டுக்கு வந்தது”

“ஞாபகம் வருது ஆயா நீ சாப்புடு, கூடதான் முடிஞ்சுடும் போல இருக்கு”

“ஆமாம் ஆயி கை செத்து போச்சுன்னு நினைச்சேன்  30 வருச பழக்கம் இல்ல எனக்கு அதான் பூக்கூடையா பிடி வச்சி செய்யறேன் அழவா பாந்தமா இருக்கு”

“ஆயா சாப்பிட்டு பேசு”

“மகராசி கொண்டா நான் இருந்து சாப்புட்டு பூரா கதையும் சொல்லிட்டு போறேன்”

“கத்திரிக்காய் போட்ட நெத்திலி கொழம்பு வச்சிருக்கேன், சாப்பிடு”

“கொண்டா ஆயி பொன்னாயா ருசிய பார்க்கனும் அதுக்கு தான் வந்ததே”

“நானும் சாப்பாடு எடுத்துட்டு வரேன் ஆயா”

“… ம் சொல்லு ஆயா”

“நீ பார்த்தன்னு சொன்னிய அப்பத்தான் பின்னாடி உங்க ஊட்டு குளத்தில இவரு விராலு மீனு ரெண்டு குத்துனாரு நான் தான் ஆஞ்சு கொடுத்தேன். பொன்னாயா வச்சிருந்தது பாரும்மா கொழம்பு அப்படி ஒரு ருசி அது உன்கிட்டேயும் இருக்கு ஆயி”

“அது வேற ஒன்னும் இல்ல ஆயா திட்டமா உப்பு உறப்பு போடரதுதான் சில பேர் திரும்ப திரும்ப பார்த்து போடுங்க அதான் வித்தியாசம். ஆயா நல்லா கூச்சப்படாம சாப்பிடு உன் ஊடு இது எப்ப வேணும்னாலும் வா போ.

“இந்தா இந்த புடவையை நீ கட்ட மாட்ட உன் மகளுக்கு கொடு”

“ஏன் ஆயி, புதுசாருக்கு…”

“‘ஆமாம் ஆயா உம் பொண்ணுக்கு எங்கூட்டு சீதனம்தான்”

“அப்படியே பொன்னாயா கொணம் ஆயி உனக்கு”

“சரி சொச்ச கதையும் சொல்லு”

“எந்த கதைய கேட்கற?”

“விராலு மீனு கொழம்பு சாப்ட்டிய..”.

“ஆமாம் தாயி ஒரு வாரம் தொடர்ந்து வந்து தங்கி வேலை செஞ்சோம். பொன்னாயா எங்கள கூலி நெல் அள்ள அளக்க என்று மூன்று மரக்கால் ஆறு மரக்கால் என்று  பல அளவுகளில் கூடைவ செய்ய சொல்லுச்சு. வாசல்ல மாமரம் இலுப்பை மரம் இருந்தது”

“ஆமாம் ஆயா திண்ணைல பொன்னாயா மடில படுத்துகிட்டு கதை கேப்போம். மரத்து மேல மினுக்கெட்டாம் பூச்சிவ மினுக்கி பறக்கும்”

“ஆயி அதுல பழந்தின்னி வவ்வால் வந்துச்சுவல்லா இவரு சும்மா இல்லாம அத சுட்டுப்பிட்டாரு. காலையிலே பொன்னாயா எங்கள கூப்ட்டு 100 ரூபாய் பணத்தை கொடுத்து போய் கூட மொரம் யாவாரம் பண்ணி ஒப்பனாட்டம் கெளரமா பொழைச்சுக்க சாப்ட்டு இரண்டு பேரும் கிளம்புங்க,” அப்படின்னு சொல்லுச்சு. அப்ப படி அரிசி 2 ரூபாய் வித்த காலம். இவரு பணத்தை அப்படியே சாமி படத்துக்கு பின்னாடி வை பிறகு பாப்பும்னு\ட்டாரு”

“சாப்பாட்டுக்கு என்ன செஞ்சிங்க ஆயா?”

“அட நீ வேற ஆயி இரண்டு வயிறு சோத்துக்கா பஞ்சம்? கொன்னா பாவம் தின்னா தீரும் கிளம்புடிம்பாரு. ராத்திரி ஆகாரத்த முடிச்சுட்டு துப்பாக்கி எடுத்து தோளில் மாட்டுவாரு நான் பைய மாட்டிப்பேன் வேட்டைக்கு”

“ம்ஹும் நீயுமா ஆயா?”

“ஆமாம் ஆயி. கைல ஆளுக்கொரு கழி. மறுநாள் எங்க சந்தைன்னு பார்ப்போம். சைக்கிள எடுத்து கிளம்புவோம். நான் பின்னாடி உக்காந்துடுவேன். புவனகிரி சந்தையா இருந்தால் சாத்தப்பாடி ஏரி பக்கம் போவோம். சேத்தியாதோப்பா இருந்தா வீராணம் ஏரி. பரங்கிப்பேட்டைய இருந்தா பிச்சாவரம் காடு பக்கம் விளைச்சல் நாள்ல வயகாட்டுல  காட்டுப்பூனை வேட்டைக்கு போவோம். ஏதாவது மாட்டும் சம்பு கோழி,உடும்பு, கௌதாரி காட்டு முசலு, நீர்க்கோழி, நாரை காட்டுப்பூனை வித்து காசாக்கி வீட்டுக்கு வருவோம். நான் சோறாக்குவேன். ஒரு கலயம் கள்ள வாங்கிட்டு வந்து வச்சிட்டு கறிய அவருதான் வைப்பாரு. ரெண்டு பேரும் குடிச்சு சாப்ட்டு படுத்தோம்னோ பொணம் மாதிரி கிடப்போம்”

“குடிக்க வேற செய்வியா நீ?’

“இல்ல ஆயி கள்ளு உடம்புக்கு நல்லதுல்ல, அத சின்னப் புள்ளயில குடிப்போம் அதான்”

“சரி சரி மேல சொல்லு”

“இப்படியே காட்ல மோட்லன்னு இரண்டு வருசம் போச்சு. ஒரு நாள் கன்னி வச்சு கௌதாரி புடிச்சுருந்தொம் 4 ஜோடிவோ காலக்கட்டி கூண்டுல போட்டு வயலூருக்கு நேர் வாய்க்கால் உள்ளேருந்து ரோடு ஏர்றோம், கூண்டு வண்டி வந்து நிக்கிது. ரெண்டு பேரும் கையும் களவுமா பொன்னாயா கிட்ட மாட்டிகிட்டோம்”

“நினைச்சன் ஆயாகிட்ட மாட்னிங்களா!”

“சொச்சத்தையும் கேளு ஆயி”

“ம்ம் சொல்லு, சொல்லு”

“பொன்னாயா ஏய் கலியான்னுச்சு. இந்த குருவி எவ்வள காசுடான்னாச்சு அவரு வாய தொரக்கல என்ன எவ்வளவு காசிடின்னிச்சு நானும் வாய தொரக்கல மஞ்சப் பையிலேருந்து 100 ரூபாய் எடுத்தது “முதல்ல அத பூரா அவுத்து வுடு”

“ஆளுக்கொன்னா அவத்து வுடறோம். சடசடன்னு பறந்தத வர சனம் எல்லாம் பார்க்குது.  “புள்ளைவோ இருக்கா?”

“இரண்டு பேரும் திருடி மாட்டின சின்னப்பிள்ளைவோ மாதிரி தல ஆட்ரோம், இல்லைன்னு.

“”எப்படி இருக்கும்? இரண்டு பேரும் தாயில்லா பிள்ளைங்க அதான் இப்படி பண்றீங்க. அதுவோ குஞ்சுவோ என்னாவும்? உங்களவிட தாண்டி கஷ்டப்படாது? இந்த காச எடுத்துட்டு போயி உங்களுக்கு தெரிஞ்ச கூடை மொரம் பின்னி பொழைங்க” ன்னுச்சு.

“”திரும்பச் சொல்றேன் கேளுங்க, நல்ல மாட்டுக்கு ஒரு சூடுதான். ஓட்டுப்பா வண்டிய”ன்னு போயே சேர்ந்துடுச்சு. ஊரு சனமே தெவச்சு பார்க்குது”

“அப்புறம் ஆயா?”

“அப்புறம் என்ன, குறவன் சாவற வரைக்கும் வேட்டைக்கே போவல. கூட மொரம் பின்னி வித்துதான் சாப்பிட்டோம் அப்புறம் நாலு வருசம் சென்னுதான் இங்கே கட்டிக்கிட்ட பொட்டப்புள்ள பிறந்துச்சு”

“வேற புள்ள இல்லியா? வூட்டூகாரர் எப்படி செத்து போனாரு?”

“வேற புள்ளைவோ இல்லை. இரண்டு வருசமாவது அவரு செத்து. குள்ளஞ்சாவடி சந்தைக்கு யாவரத்துக்கு போயிட்டு திரும்புறோம். பெருமாத்துர் இறங்கி ஆத்த குறுக்கால தாண்டுனா ஒரு மைலு துலுக்கம்பாளையம் அடுத்தது தாழம்பேட்டை ஆத்தங்கரையில தான் ஊடு. “நீ முன்ன போயி உள்ள வையி புள்ள, நான் குவார்ட்டர் வாங்கிட்டு வரேன்”னாரு சூரியன் கரகரன்னு கீழே இறங்குது சரி நேரத்த போயி விளக்கு வைப்போம்,னு நடையை எட்டிப்போட்டு போயிட்டேன். விளக்கு வச்சிட்டு அடுப்புல உளைய வச்சிட்டு சுடுதண்ணி போடுமுன்னு ஈயப் பானைல பைப் தண்ணி அடிக்கிறன், “ஆண்டாளு ஆண்டாளு போனு வந்துருக்கு, ஓடியா ஒடியா”ங்கறாங்க.

“”என்னன்னு சொல்றது எல்லாம் விதி மனச தேத்திக்க”ங்கறாங்க. “சொல்லுங்க சொல்லுங்க,”ங்கறேன், “கலியன் ஏமாத்திட்டு போயிட்டான்”ங்கறாங்க. அப்படியே இடிஞ்சு போயிட்டேன்

“எப்படி ஆச்சுன்னு கேக்கறேன். போதைல தடுமாறி ஆத்துல முட்டி தண்ணியில்ல விழுந்ததுதான் தலை தூக்க முடியல அப்படியே கிடந்து அடங்கியிருக்கு. மையிருட்டு நேரம் யாரும் பார்க்கல. பிறகு வந்தவங்க பாத்துப்புட்டு வூட்டுக்கு போன் பண்ணிசொல்லிட்டு தூக்கி வந்தது.

“நீ யான் அழுவுற ஆயி, நானே அழுவுல பாரு… கிடக்கு வுடு தாயி, எல்லாம் பிளாஷ்டிக் கூட மொரத்தால வந்ததுதான். நாலு அஞ்சு வருஷமாவே நல்ல யாவாரம் இல்ல ஆயி. அதான் அதிகமா குடிச்சு போயி சேர்ந்துட்டாரு. சாவமோது 62 வயசு. என்ன விட பத்து வயசு மூத்தவரு. ஏன் கதைதான் என்னாவுமுன்னு தெரியல. மகளும் மருமகனும் மெட்ராஸ் போவுதுவோ. வேலைக்கு என்னையும் கூப்டுதுவோ. எனக்கு வேற போக்கிடம் இல்ல ஆயி…

“இந்தா ஆயி இந்தக் கூடையப் புடி உன் கையில புள்ள குட்டியோடு என் பொன்னாயா மாதிரி நீயும் உன் குலமும் வாழனும்”

ஆயா கூந்தலைக் கொண்டையாக முடிந்து காதோரம் விழுந்த முடிகளை அள்ளிக் கொண்டையில் மறைத்துச் சொருகி தெருவில் இறங்கி நடந்தாள்

இவள் திகைத்து கிழவியை பொன்னாயாவாகவே பார்த்தாள் ….

2 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.