“… “பிள்ளைவளோ, யாரு பெத்த புள்ளையோ, நல்லா இருப்பிங்க, இருங்க வரேன்” என்று உள்ளே போய் ஒரு கொட்டுக்கூடை நிறைய பந்து கொடுத்தார். சிவப்பும், நீலமும், மஞ்சளுமாக பந்துகள்,” என்று அப்பாவின் சட்டை சிறுகதையில் எழுதியிருந்தேன்.
ஒரு நண்பர் கொட்டுக்கூடை என்றால் என்ன, அது எப்படி இருக்கும், எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று கேட்டபோது எனக்கு ஆச்சரியம்.
“கொட்டுக்கூடை என்பது நெல் அளக்கும் மரக்கால் அளவு இருக்கும். 4 படி அரிசி பிடிக்கும். எல்லா கிராமத்து வீடுகளிலும் இருக்கும். புளியம்பழம், அரும்பு எடுக்க பெண்கள் பயன்படுத்துவதுண்டு. பிரம்பு அல்லது மூங்கிலால் பின்னப்பட்டிருக்கும். மூங்கில் கூடை என்றால் நீடித்த உழைப்புக்கு சாணம் கொண்டு மொழுவியிருப்பார்கள். தற்போது பயன் குறைந்துவிட்டது, இதன் உபயோகத்தை பிளாஸ்டிக் பறித்துவிட்டது,” என்று பதில் சொன்னேன்.
பிறகு யோசித்தபோது, இதன் பயன்பாடு தற்சமயம் மிகவம் அருகி விட்டது, இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு போட்டோவில்தான் நாம் பார்க்கப் போகிறோம், என்று தோன்றியது. “கடைசியாக எப்போது பார்த்தோம், வீட்டில் இப்போது ஏதாவது இருக்குமா, பழைய பிரம்புக் கூடைகளாவது இருக்குமா,” என்று யோசித்துப் பார்த்தால் சுத்தமாக இல்லை. வீட்டில் உள்ளவை எல்லாம் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் கூடைகள்தான்.
வருத்தத்தோடு இதை எல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஆண்டாள் வந்தார். சந்தையில் கூடை முறம் விற்று விட்டு, விற்றது போக மீதமுள்ளதை தெருவில் விற்றுக்கொண்டு வருவார். தாழம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றபோது வழியில் இவர் வீட்டைப் பார்த்திருக்கிறேன். வாசலில் நான்கு, ஐந்து பேர் எப்போதும் கூடை பின்னிக் கொண்டு இருப்பார்கள். பட்டைகள், கொடிகள் காய்ந்து கொண்டிருக்கும். வனக்கத்துக்காக தண்ணீர் தெளித்து தேர்ந்ததாக எடுத்தனர். சிறிது நேரம் பார்த்து கொண்டு இருப்பேன், இதெல்லாம் ஒரு பதினைந்து வருடங்கள் முன்பு.
இப்போது கூடை முறம் பயன்பாடு குறைந்து விட்டதே, இதையே நம்பியிருந்தவர்கள் கால ஓட்டத்தில் என்னவாகியிருப்பார்கள், எங்காவது கூலி வேலைக்கு போயிருப்பார்களா, இவர்கள் வேறு என்ன வேலை செய்ய முடியும், கட்டிட வேலைக்கு வெளியூர் போயிருப்பார்களோ என்று பலவாறு எண்ணியதும் மனம் நெகிழ்ந்து கனத்து விட்டது. நாள் முழுவதும் அதே எண்ணம். எந்த வேலையிலிருந்தாலும் கோடு போல் உள்ளுக்குள் ஓடி கொண்டு இருந்ததில் அவர் சந்தையில் நின்று விற்கும் இடம் ஞாபகம் வந்தது.
அதன்பின் கலியன் தன் தோளில் காட்டுப்பூனையோடு சந்தையில் நுழைந்தது ஞாபகம் வந்து கதை தானாக பரவி ஒடி பெருமாள் கோவில் திருப்பாவை ஒலி கேட்டதும் நான் பார்த்து அந்தக் கோயிலுக்கு முதல் கும்பாபிஷேகம் செய்த ஆயா ஞாபகம் வந்தார். அவர் வீட்டின் நலிவை கண் எதிரே கண்டதை இரு பெண்களின் பார்வையில் சொல்ல முடிந்தது, அதன் பின்புதான் சிறிது ஆசுவாசம்.
கதையில் வரும் மனிதர்கள் எல்லாம் நம்மோடு இருந்தவர்கள். அவர்களைக் காலம் ஒரு கற்பூரம் போல் கரைத்து விட்டது, இதில் கூடையும் முறமும் எம்மாத்திரம்.
தி. வேல்முருகனின் சிறுகதை, ‘சூடிக் கொடுத்த பாவை’ இங்கே