உமாவுக்கு உருளி என்று ஒரு பாத்திரம் உண்டே அந்த உருளியை வாங்க வேண்டும் என்று வெகு நாட்களாக தீராத ஆசை. உருளி பழைய கால மீனாட்சியம்மாள் சமையல் குறிப்புகளில் திரட்டுப்பால் செய்ய “வாயகன்ற உருளியில் எட்டு ஆழாக்கு பாலை ஊற்றி, சுண்டக் காய்ச்சி, துருப்பிடிக்காத தோசைத்திருப்பி அல்லது தேய்ந்த சாதக் கரண்டியால் விடாமல் கிளறி ” என்று வரும். தற்காலத்தில் உருளியில் தண்ணீர் ஊற்றி வண்ணப்பூக்களை அதில் மிதக்க விட்டு அலங்காரமாக வைப்பது வழக்கமாகி இருக்கிறது. உமா அதற்கு பார்வையாக ஒரு நல்ல உருளி வேண்டும் என்று வெகு நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தாள்.
அவள் சினேகிதி லீலா அந்த மாதிரி வேலைப்பாடுள்ள நேர்த்தியான உருளி வேண்டுமானால் கேரளத்தில்தான் கிடைக்கும் என்றும், உள்ளூர்க் கடைகளில் கிடைப்பது எல்லாம் சரியான அமைப்பு இல்லை, அப்படி சமச்சீராக இல்லாமல் வார்த்த பாத்திரத்தில் நீர் ஊற்றி வைத்தால் சீன வாஸ்து சாஸ்திரப்படி சொத்து நஷ்டமாகும் என்று கேட்காமலேயே ஆலோசனை கொடுத்தாள். டிஸம்பர் கடைசியில்தான் எல்லோருக்கும் லீவு அமைந்து கொச்சினுக்கு போக முடிந்தது.
ஃபெர்ரியில் ஏறி மட்டாஞ்சேரியில் இறங்கிய உடனேயே நிறைய கடைகள் ,ஆனால் ஏனோ ஒரு கடை ஈர்த்தது. வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்த கடை ஆளும் காரணமாக இருக்க வேண்டும். அப்போதுதான் குளித்து விட்டு வந்தது போல ஒளி முகம், அதில் நிறைந்த புன்னகை, படிந்து வாரிய ஈரத்தலை, நெற்றியில் விபூதி, கை மடித்து விட்ட வெள்ளைச் சட்டை, அகலக் கரையுடன் வெள்ளை வேட்டி, எழுந்து வந்து வழியை மறித்து அவன் கடையைத் தாண்டிப் போக விடவில்லை.
ஒரு பாரம்பரியமான வீட்டையே கடையாக்கி இருந்தார்கள். வாசலில் திண்ணையிலிருந்து, உள்ளே ரயில் பெட்டிகள் மாதிரி நீளமாக இருந்த பல அறைகள் முழுவதும் பழங்காலப் பொருட்கள்தான். வண்ணக் கண்ணாடி தொங்கும் விளக்குகள், நிலைக் கதவு, பணப் பெட்டி, சிற்பத் தூண்கள், ஊஞ்சல் பலகை, அப்பக் காரை, பித்தளை வெற்றிலைப் பெட்டி, அளக்கும் படி, கிளிக்கூண்டு, நிற்கும் ஆளுயர கடியாரம், மரச் சிற்பங்கள், பெரிய மண் ஜாடிகள், சட்டம் போட்ட கட்டில், பித்தளை டெலிஸ்கோப் என்று ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத பொருட்கள் இறைந்து கிடந்தன.
சில பொருட்களுக்கு விலை ஒட்டி இருந்தது. உமாவுக்கு உருளிகளின் விலை அத்துப்படி ஆகி இருந்தததால், முதலில் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாள். திருப்திகரமாக இருந்தது. மிக அதிகம் இல்லை. அவற்றில் ஒன்றை எடுத்து நல்ல வெளிச்சத்தில் முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தாள். லட்சணமாக இருந்தது. ஓரங்கள் எல்லாம் சுத்தமாக இருந்தது. கைப்பிடிகளில் சித்திர வேலைப்பாடு அழகாக இருந்தது. பல நாட்களாக தேடிக்கொண்டிருந்தது இவ்வளவு சீக்கிரம், திருப்தியாக, அதுவும் நல்ல விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியினால் கண்கள் விரிந்து, குரல் சற்று மிகுந்தது, உடலில் ஒரு விசை ஏறியது. கடை ஆள், நுட்பமாக அதை கவனித்திருக்க வேண்டும். வேறு சில பொருட்களைக் காட்ட ஆரம்பித்தான். “இதோ பாருங்கள், உருளி வைக்கும் இடத்துக்கு மேலே தொங்க விட சர விளக்கு”. உமாவுக்கு அதில் அவ்வளவு இஷ்டமில்லை. அவள் பார்வை சுற்றிலும் அலைந்தபோது ஒரு கணம் அந்த பெரிய பெட்டியின் மேல் நிலைத்தது.
பித்தளைப் பூண் போட்டு, கரும் பழுப்பு நிறத்தில் எண்ணெய் தேய்த்தது மாதிரி மினுக்கியது. உடனே அவன் ஆரம்பித்து விட்டான். இப்போதெல்லாம் இந்த மாதிரி பெட்டி மிகவும் போகிறதாம். வீட்டில் ஹாலில் வைத்து அதன் மேல் சின்ன பித்தளைப் பொருட்களை வைக்கிறார்களாம். உடனேயே சில பொருட்களை வைத்து அலங்காரம் செய்து காட்டினான். ஒரு கஜ லக்ஷ்மி விளக்கு, தூபக்கால், ஒரு பாக்கு வெட்டி, ஒரு பித்தளைக் கரண்டி நடுவில் ஒரு இடம் காலியாக இருந்தது. அவன் சுற்றிலும் தேடி ஒரு வட்டமான பெரிய வளை போல ஒன்றை கொண்டு வைத்தான். வரி வரியாக மணிகளுடன் வேலைப்பாடுடன் அதுவும் நடுவில் பொருத்தமாக இருந்தது. இப்படியாக அந்த பெட்டி மிக அழகாக அமைந்தது. உமாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அதிகம் பேரம் இல்லாமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு விட்டாள்.
உமா வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலை உருளிக்கு நல்ல இடம் பார்த்து வைத்தாள். உள்ளே நுழைந்தவுடன் பார்வையான இடம். அதில் மலர்கள், நடுவில் வெள்ளி தீபம் மிதக்க, வீடே மங்களமாக இருந்தது. பெட்டிக்குத்தான் சரியான இடம் கிடக்கவில்லை. டெலிவிஷன், கண்ணாடி ஷோ கேஸ், டெலிபோன், பத்திரிகை வைக்கும் ஸ்டாண்டு என்று ஏற்கெனவே ஹால் அடைசலாக இருந்தது. ஒரு வேளை பெட்டியை அவசரப்பட்டு வாங்கி விட்டோமோ என்று தோன்றியது. கடைசியாக புத்தக அலமாரியை வேறு அறைக்கு மாற்றி, ஹாலிலேயே இடம் அமைந்தது. எல்லாம் சேர்ந்து வீடு பொலிவாக இருப்பதாக உமாவுக்குத் தோன்றியது. தானே வேறு வேறு கோணங்களில் நின்று, அமர்ந்து பார்த்து மகிழ்ந்து போனாள். அடுத்தது யாரிடமாவது காட்டாவிட்டால் மகிழ்ச்சி பூர்த்தி ஆகாது என்று தோன்றியது.
முதலில் பக்கத்து வீட்டு லக்ஷ்மி வந்திருந்தாள், முகத்தில் பவுடர் வியர்க்க, எங்கோ போகும் அவசரத்தில். சாவியைக் கொடுத்து விட்டு உள்ளே வராமலேயே போய் விடுவாளோ என்று உமாவுக்கு ஒரு சிறு கலக்கம். வந்தவள் வாசலிலேயே உருளியையும் பெட்டியையும் பார்த்து ஒரு கணம் நின்று விட்டாள். ” அட, எப்ப வாங்கின இதெல்லாம்? ” என்று கேட்ட உடனேயே, உமாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் போகிற போக்கில் லக்ஷ்மி “இங்க இருக்கற நிலமைல உருளிய தேய்க்கறத்துக்கு முடியுமா, வேலைக்கு ஆளே சரியாக இல்லை, நம்மால முடியாதுப்பா” என்றாள்.
முதலில் அவள் பொறாமையால் சொல்கிறாள் என்று தொன்றினாலும் சரிதான் என்று தோன்றியது. செல்வி தினமும் வருவதே லேட், அவள் கணவன் வேலுச்சாமி வேலை எதுவும் இல்லாமல் தினமும் குடித்து விட்டு அவர்கள் இருந்த பேட்டையில் ரௌடியாகத் திரிந்து கொண்டு இருந்தான். ஏதாவது காரணம் சொல்லி பாதி நாள் வரமாட்டாள். உமாவுக்கு அவளுடன் அதிக நாட்கள் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனாலும் பல வருடங்களாக பழகினவள், வேலை சுத்தம் என்று வேறு ஆள் பார்க்க இஷ்டம் இல்லை.
புதிய பொருட்களை மற்ற எல்லோருக்கும் காண்பிக்கலாம் என்று யோசித்து, வெள்ளிக்கிழமை அன்று நிறைய பேரை ஏதோ பூஜை என்று அழைத்தாள். லீலா உருளியைப் பார்த்து அதுவும் கேரளத்தில் வாங்கியதை உறுதி செய்து கொண்டு, நல்ல லட்சணமாக இருப்பதாக சொன்னாள். அடுத்தது பெட்டியின் மேல் இருந்த பொருட்களை பார்த்துக் கொண்டு வந்தவள், அந்த வளையைப் பார்த்ததும் ஒரு மாதிரி நெற்றியைச் சுருக்கினாள்.
” இது என்ன தெரியுமா? ” என்றாள்.
“ஏன், இது ஏதோ வளை போல வேலைப்பாடாக இருக்குன்னு வாங்கி வந்தேன்”
“இதெல்லாம் வீட்டில் வைக்க மாட்டார்கள். இது ‘செலம்பு’ன்னு சொல்லுவோம், வெளிச்சப்பாடு கையில வெச்சுட்டு ஆடறது” என்றாள். ‘செலம்பு’ என்றபோது ச்செலம்பு என்று அழுத்தியபடி. உமா சரி இது தமிழில் சிலம்புன்னு சொல்வோமே அந்த மாதிரி என்று புரிந்து கொணடாள். ஆனால் ஏன் சிலம்பை வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டாள். ஒரு வேளை ஒற்றைச் சிலம்பினால் கண்ணகி கதை மாதிரி ஏதாவது இருக்குமோ என்று நினைத்தாள். லீலா விவரமாக ஆரம்பித்தாள். வெளிச்சப்பாடு என்பவன் பகவதி கோவில்களில் சாமியாடி மாதிரியாம். சிவப்பு ஆடை அணிந்து ஒரு கையில் மணி கட்டிய வாளும் இன்னொரு கையில் சிலம்பும் ஏந்தி விரிந்த கூந்தலுடனுடன் தாளத்துக்கு இசைந்து ஆடுவானாம். ஆட்டம் அதிகமாகி வெறி கொண்டு, வாளால் அவன் தன் தலையிலேயே ரத்தம் வரும்படி காயப்படுத்திக்கொண்டு ஆடுவானாம். ஆடும்போது அவன் பேசுவது பகவதி வாக்காம். இந்தக் காலத்திலெல்லாம் பகவதி கோவில்களில் திருவிழா முன் போல நடப்பதில்லையாம், பல வெளிச்சப்பாடு ஆட்கள் அதிக வருமானமில்லாமல் அந்தத் தொழிலையே விட்டு விட்டார்களாம். அவள் கடைசியாக அருகில் போய் தொடாமல் உற்றுப் பார்த்து, “இதோ பார் இதெல்லாம் ரத்தக் கறை, எந்த வெளிச்சப்பாடு சோற்றுக்கு வழி இல்லாமல் இதை விற்றானோ, இதெல்லாம் வீட்டில் வேண்டாம்” என்று அடித்துச் சொல்லி விட்டாள். உமாவுக்கு லீலா வழக்கம் போல ஏதோ கதை விடுகிறாள் என்றுதான் நினக்கத் தோன்றியது. அவள் அடிக்கடி யக்ஷிகள், மோகினி, குட்டிச் சாத்தன் என்று நேரில் பார்த்துப் பழகின மாதிரி பேசுவாள்.
உமா அன்று மாலையே ரமேஷிடம் அவன் அலுவலகத்திருந்து வந்தவுடன் சொன்னாள், அவன் மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டே அரை குறையாகக் கேட்டு, இதெல்லாம் என்ன பழங்காலம் மாதிரி கதை என்றான். உமாவும் அதிகம் கவலைப் படவில்லை.
முதல் சம்பவம் அடுத்த வெள்ளிக்கிழமை காலை நடந்தது. படுக்கையிலிருந்து எழுந்ததிலிருந்தே சின்னப் பெண் சண்டி. வென்னீர் சூடு பற்றவில்லை என்று அழுகைக் குளியலுக்குப் பிறகு, ஸ்கூல் சீருடைக்குள் திணித்து, தலையை வாரி, பொட்டு வைத்து அவளைத் தூக்கி பெரிய கண்ணாடியில் காண்பித்து,
” அழாத கண்ணு, இதோ பார் , சின்னு எவ்வளவு அழகு தெரியுமா ?”
சொல்லி முடிப்பதற்குள், பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணாடி திடீரென்று ஒரு ஓரத்திலிருந்து ஆரம்பித்து பெரிய விரிசல் விட்டு உடைந்து போனது. பயந்து போய் சின்னுவை இறக்கி விட்டு சுற்று முற்றும் பார்த்தாள், ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள், கல் எதுவும் விழவில்லை. ரமேஷ் குளித்துக் கொண்டிருந்தான். உமாவுக்கு அதிர்ச்சியில் வியர்த்து விட்டது. அவசரமாக சின்னுவை கொண்டு போய் ஸ்கூல் பஸ் ஸ்டாப்பில் விட்டு விட்டு, வீட்டுக்கு வந்து அவளுடைய அம்மாவுக்கு ஃபோன் செய்தாள். அம்மா சந்தேகமில்லாமல் சொல்லி விட்டாள் – கண்ணாடி ஒரு மங்கலப் பொருள், வெள்ளிக்கிழமை அதுவும் தை வெள்ளிக்கிழமையில் உடைவது நல்லது இல்லை. ரமேஷ் குளித்து வந்தவுடன், அவனைத் தலை துடைக்கக்கூட விடவில்லை.
“ரமேஷ், இந்தக் கண்ணாடியப் பாருங்க, இப்ப நான் சின்னுவ ட்ரெஸ் பண்ணிட்டு அவளுக்கு காமிச்சிட்டிருந்தேனா, பார்க்கும்போதே விரிசல் விட்டு உடைஞ்சிடுச்சு ”
அவன் கண்ணாடி அருகே போய் ஆராய்ந்தான். விரிசல் ஆரம்பித்த்த இடம் கண்ணாடியை பொருத்தி இருந்த ஒரு ஸ்க்ரூவில்.
“இதோ பார் இந்த ஸ்க்ரூவை அதிகமாக அழுத்தி இருக்கிறது. இப்படித்தான் சமமா அழுத்தம் இல்லா விட்டால் ஒரு பக்கம் உடையும் ”
” இது நம்ம வீட்டில மூணு வருஷமா இருக்கு, எப்பவோ ஆகி இருக்கணுமே”
உமாவுக்கு ஒரு வேளை அந்தச் சிலம்பால் இருக்குமோ என்ற சந்தேகம் வந்து விட்டது.
அடுத்த சம்பவம் ரமேஷின் பிறந்த நாள் அன்று நடந்தது. அவனுடைய அம்மாவும் அப்பாவும் முதல் நாளே வந்து விட்டார்கள், ரமேஷின் அண்ணா வீட்டிலிருந்து. காலையிலேயே எல்லோரும் குளித்து கோவிலுக்குப் போக வேண்டும் என்பதால் சீக்கிரமே எழுப்பி வரிசையாக குளிக்க அனுப்பி, கடைசியாக மாமியாரை அனுப்பினாள். அரை மணிக்கும் மேல் ஆயிற்றே என்று பாத்ரூம் கதவைத் தட்டினால் பதிலே இல்லை. கூர்ந்து கேட்டால் முனகும் சத்தம் கேட்டது. கதவை பலமாக தள்ளி, தாழ்ப்பாள் உடைந்து திறந்தால், ரமேஷின் அம்மா அலங்கோலமாக தரையில். கை கொடுத்தால் கூட எழுந்திருக்க முடியவில்லை. இரண்டு பேராக சேர்ந்து தூக்கி வந்து படுக்க வைத்து, டாக்டரை வரவழத்து, அவர் ஃப்ராக்சர் இருக்குமா என்று பார்க்க எக்ஸ் ரே எடுக்க ஆம்புலன்ஸ் வரவழைத்து, மாடிப் படிகளில் ஸ்ட்ரெச்சரைத் தூக்கி, கடைசியில் நல்ல வேளையாக மிக லேசான விரிசல்தான் எலும்பு உடையவில்லை, இரண்டு மாதம் ஓய்வில் இருந்தால் சரியாகி விடும் என்ற முடிந்த போதுதான் நிம்மதி ஆனது. ஆனாலும் ஒரு வாரத்துக்குள்ளேயே எல்லோரும் படாத பாடு பட்டார்கள்.
செல்வி வழக்கம் போல பாதி நாட்கள் வரவில்லை. வேலுச்சாமி கார்ப்பரேஷன் தேர்தலுக்கு நிற்கப் போகிறானாம். அவளுடைய வீட்டிலேயே நிறைய வேலையாம். வேலைக்காரி சௌகரியம் இல்லாததால், உமா கஷ்டப்படுவதைப் பார்த்து, அவர்கள் ஒரு ஆம்புலன்ஸ் வைத்துக் கொண்டு ரமேஷின் அண்ணா வீட்டுக்குத் திரும்பப் போய் விட்டார்கள். பேச்சு வாக்கில் லீலாவிடம் இதெல்லாம் விவரித்த போது அவள் சொன்னாள் “நான் சொல்றேன்னு தப்பா நினச்சுக்காத, எனக்கெனமோ எல்லாமெ அந்தச் செலம்பாலதான்னு தோணுது, வீட்டில வயசானவங்கள ரெண்டு நாள் கூட தங்க விடல பாரு, இங்க அய்யப்பன் கோவில்ல தந்த்ரி இருக்கார், அவர் சோழி உருட்டிப் பார்த்து சொல்லிடுவார், இப்படியே விட்டா உங்க வீடு மட்டும் இல்ல நம்ம அபார்ட்மென்ட்டுக்கே ஏதாவது வரும்’ என்றாள். உமாவுக்கு பயமாக இருந்தது. ரமேஷிடம் சொன்னபோது அவன் சோழி விவகாரத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை.
மூன்றாவது சம்பவம் விரைவில் வந்தது. அதுவும் லீலா சொன்னபடியே. ஒரு நாள் பைப்பில் தண்ணீரில் ஏதோ கெட்ட வாடை லேசாக ஆரம்பித்தது. முதலில் வழக்கம் போல ஒரு நாள் தண்ணீர் வராமல் இருந்து, பைப் எல்லாம் காலி ஆகி மறு நாள் வரும்போது, அழுக்கு, இரும்புத்துரு எல்லாம் சேர்ந்து வாடை வருவதுண்டு. அந்த மாதிரிதான் ஏதோ என்று நினைத்தாள். மறு நாள் அதிகமாகப் போகவே, உமா மேலே மொட்டை மாடிக்குப் போய் ஒவர் ஹெட் டாங்கைப் பார்க்கப் போனாள். டாங்கின் மூடி வைக்கும் ஸ்லாப் திறந்து கிடந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால் ஏதோ கருப்பாக மிதந்து கொண்டிருந்தது, கீழே போய் டார்ச் கொண்டு வந்து வெளிச்சம் போட்டுப் பார்த்தால் ஒரு காக்கை. லீலா பார்த்த உடனேயே சொன்னாள் ” அதுவும் பார் அண்டங்காக்கா, கழுத்து முழுக்க கருப்பா இருக்கு, நான் முதல்லயே சொன்னேனில்ல, இதுக்கு எங்க ஊரில என்ன சொல்வோம் தெரியுமா “, அதற்கு மேல் கேட்கவில்லை உமாவுக்கு கிலியாகி விட்டது.
வீட்டுக்கு வந்ததும் உமாவுக்கு அந்தச் சிலம்பைத் தொலைத்து விட வேண்டும் என்று தோன்றியது. தொடாமல், ஒரு குச்சியால் அதை எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் போட்டாள். அப்படியே பால்கனியிலிருந்து தூக்கி எறியலாமா என்று தோன்றியது. அது திரும்ப காம்பவுண்டுக்குள்தான் விழும். கீழே கையில் எடுத்துச் செல்ல பயமாக இருந்தது. குளியல் அறை பக்கத்தில் தூக்கி எறிய வைத்திருந்த பிற சாமான்களுடன் வைத்து விட்டு நன்றாக சோப்புப்போட்டு கை கழுவினாள். இத்தனை நாள் வீட்டில் இருந்தது, இன்னும் ஒரு இரவில் ஒன்றும் ஆகக்கூடாது என்று நினைத்தாள். காலையில் செல்வி எடுத்து கீழே மற்ற குப்பைகளுடன் போட்டு விடுவாள், வாரத்துக்கு ஒரு தடவை வரும் கார்ப்பரேஷன் லாரியில் எங்காவது போய்த் தொலைந்து விடும்.
அடுத்த நாள் செல்வி நேரத்துக்கு வந்து விட்டாள். வேலுச்சாமி இப்போது கார்ப்பரேஷன் தேர்தலில் மூழ்கி இருப்பதால் குடி எல்லாம் குறைந்திருக்கிறதாம். அவளிடம் மறக்காமல் அந்தக் ப்ளாஸ்டிக் கவரை குப்பையில் போடச் சொன்னாள். அதற்கு அடுத்த நாள் செல்வி வரவில்லை. நாலு தடவை ஃபோன் செய்த பிறகு எடுத்தாள். அவள் வேலுச்சாமி தேர்தலுக்கு நிறைய உதவி செய்கிறாளாம். அடுத்த வாரம் வருவதாக சொன்னாள்.
நடுவில் சின்னு ஸ்கூலில் ஆன்யுவல் டே போட்டிகள் என்று பிஸியாகி விட்டாள். சின்னுவுக்கு பாட்டுப் போட்டி, க்விஸ் இரண்டுக்கும் தயார் செய்வதற்கே நேரம் சரியாக இருந்தது. என்னதான் வீட்டில் பாடினாலும், கேள்விக்கு பதில் சொன்னாலும், சின்னு ஸ்கூலில் சொதப்பி விடுவாள். சாயங்காலம் அவளை தினமும் உட்கார்ந்து பாட வைத்து, வாங்கி வந்திருந்த புத்தகத்திலிருந்து கேள்வி கேட்டு – நடுவில் சிலம்பு விவகாரம் நினைவில் இல்லை. இந்த தடவை சின்னுவுக்கு இரண்டு போட்டிகளிலும் பரிசு.
ஞாயிற்றுக் கிழமை நிதானமாக எல்லோரும் அமர்ந்திருந்தபோது ரமேஷிடம் விவரமாகச் சொன்னாள்- குப்பையில் எறிய வைத்தது வரை. “ஒரு வழியா அந்தச் சிலம்பு தொலஞ்சுது, இனிமேலாவது வீட்டில கெட்டது எதுவும் நடக்காது, லீலா சொன்னபடி முதல்லயே தூக்கி எறிஞ்சிருக்கலாம், இப்ப பாருங்க நம்ம சின்னு பரிசு வாங்கி இருக்கா, இனிமே எல்லாம் நல்லதுதான் நடக்கும் ”
“அதெல்லாம் மடத்தனம், ஏதோ ஒரு பழைய மெட்டல் துண்டுக்கும், வெயில்ல கண்ணாடி உடையறது, ஈரத்தரையில அம்மா வழுக்கி விழுந்தது, திறந்து வெச்ச தொட்டித் தண்ணீரில காக்கா செத்ததுன்னு என்ன தொடர்பு? இப்ப பரிசு வாங்கினா அதுவும் அந்தச் சிலம்பு போனதுனாலயா? ஆஃபீஸில ரீஜனல் மேனேஜர் பொஸிஷனுக்கு என்னத்தான் ரெகமண்ட் பண்ணி இருக்கேன்னு எம் டி நேத்து சொன்னாரு, அதுவும் சிலம்பு போனதாலயா?” என்றான். “ஆமாம்“ என்றாள் உமா திடமாக, ஒரு வாரமாக அவளுக்கு முதுகு வலி கூட காணாமல் போயிருந்து.
ரமேஷ் அப்போதுதான் நினைவுக்கு வந்தவானாக, “அன்னிக்கு நீ கிளம்பிப் போன பிறகு செல்வி எதையோ காட்டி அம்மா தூக்கி எறிய வெச்சுருக்காங்க போல, நான் எடுத்துக்கறேன்” அப்படின்னு சொன்னா, அவசரத்துல நான் என்னன்னு கூட பார்க்கல. இப்ப நீ சொல்லறத கேட்டா அந்தச் சிலம்புதான்னு தோணுது” என்றான். செல்வி அப்படித்தான். கெட்டுப்போன ட்யூப் லைட், கார் பேட்டரி என்று தூக்கி எறிய வைத்திருக்கும் பொருட்களை எடுத்துக் கொள்வாள். உமாவுக்கு பயம் படர்ந்தது, பாவம் செல்வி அவளுக்கு ஏதாவது ஆகாமல் இருக்க வேண்டுமே என்று பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டாள்.
உடனே செல்விக்கு ஃபோன் செய்தாள். வழக்கம் போல அவள் எடுக்கவில்லை. விவரம் எதுவும் சொல்லி அனுப்பாமல் ஃபோனையும் எடுக்காமல் இந்த மாதிரி ஒரு வாரம் வராமல் இருந்ததில்லையே என்று கவலை அதிகமானது. ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு நேராக அவள் இருக்கும் தெருவுக்குப் போனாள். பஸ் ஸ்டாண்டுக்கு பின் புறம் ஒரு சந்து. பெட்டிக் கடையில் விசாரித்து வீட்டைக் கண்டு பிடித்துப் போனால், வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டில் இருந்து ஒரு சின்னப் பெண் ஒழுகும் மூக்குடன், வாயில் விரலுடன் எட்டிப் பார்த்து அம்மாவை அழைத்தது.
“என்னம்மா நீங்க என்ன தின மலரா, முந்தா நாள்தான் தந்திலேர்ந்து வந்தாங்க ” என்றாள். உமாவுக்கு எதுவும் புரியவில்லை, கலக்கம் அதிகரித்தது, தினப் பத்திரிகைகளில் வரும் அளவுக்கு ஏதாவது விபரீதமாக ஆகி விட்டதா, ” இல்ல, செல்வி எங்க வீட்டில வேல செஞ்சுட்டிருந்தா, ஒரு வாரமா வரலயேன்னு பார்க்க வந்தேன், என்ன ஆச்சு அவளுக்கு?”
” சொல்லல போல, அவ இனிமே வேலைக்கு வர மாட்டாளுங்க, “, உமா கர்சிப்பை எடுத்து வாயில் வைத்துக் கொண்டாள்.
“ஏன் என்ன ஆச்சு ?”
“ஒரே அதிர்ஷ்டம்தான் அவங்களுக்கு, வேலுச்சாமி கார்ப்பரேஷன் எலக்ஷனுல செயிச்சு நம்ம வார்டு கார்ப்பரேடர் ஆயிட்டாருங்க ” என்றாள்.
உமாவுக்குப் பெரிய நிம்மதியாக இருந்தது, அவளுக்கு எதுவும் ஆகவில்லை என்பது ஆசுவாசமாக இருந்தது, செல்வி சிலம்பைத் தூக்கி எறிந்திருக்க வேண்டும்,
“செல்வி வந்தா உமான்னு தேடிட்டு வந்தாங்கன்னு சொல்லு”, குற்ற உணர்ச்சி கணத்தில் நீங்கியது. திரும்பப் போகும்போதே பஸ் ஸ்டாண்ட் பிள்ளையாருக்குத் தேங்காய் வாங்கி உடைத்தாள்.
ஒரு வாரம் கழித்து செல்வி வந்தாள், முகம் வாடி சோர்ந்து இருந்தாள். வேலுச்சாமி எலக்ஷனை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கிறார்களாம். கள்ள ஓட்டு மற்றும் வன்முறையால்தான் அவன் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சி வாதமாம்.
உமாவுக்கு வயிற்றில் கலக்கம், “அந்த சிலம்பை நீ ஏன் தூக்கி எறியல? உங்க வீட்டுக்கு எதுக்கு எடுத்துட்டுட்டுப் போன?“ குரல் குளறியது.
செல்விக்கு அவளது கலக்கம் புரியவில்லை, “எதும்மா, அன்னிக்கு நீங்க, அந்த பொட்டி மேல இருந்த சலங்கைய ஒரு கவருல போட்டு வெக்கிருந்தீங்களே, அதுவா ?“
“ஆமாம், அதேதான், தூக்கி எறியச் சொன்னா, ஏன் எறியல?” குரல் உயர்ந்தது.
“இல்லம்மா, நான் அத ஊட்டுக்கு கொண்டு போய், புளி போட்டு தேச்சனா, பளபளன்னு ஆயிடுச்சு. எங்க ஊட்டுக்காரரு, அம்மா ஏதோ தெரியாம தூக்கிப் போட்டிருப்பாங்க, மரியாதயா அவங்க ஊட்டுலயே கொண்டு போய் கொடுத்திடுன்னு திட்டினாரு”
“அன்னக்கே திரும்ப வந்து வெச்சுட்டேனுங்க,” உமா திடுக்கிட்டு கருப்புப் பெட்டியைப் பார்த்தாள், இடம் காலியாகத்தான் இருந்து.
“கீழ பொட்டி மேல இருந்தா தூசு படிஞ்சு துடைக்க கஸ்டமா இருக்குதுன்னு, கண்ணாடி அலமாரில வெச்சுட்டேனுங்க “
உமா திரும்பினாள், அங்கே கண்ணாடி ஷோ கேஸில் நடு நாயகமாக மற்ற அலங்காரப் பொருட்களுடன் அந்த ஒற்றைச் சிலம்பு வீற்றிருந்தது.
This short story is just excellantly written. The writer brings out the true and practical feeling of middle class woman which we see to our ownselves in our daily lifet.he sycalogical feeling and the fear Uma seems to be as if the author or somebody in his house must have experienced.The story has the totality and should be appreciated very well. Kudos to the author.
Neela ramgopal
Very nicely written, gripping , beautifully encapturing the travails of a young woman blinded by superstition which is so commonly found. Congrats.
Another very nice short story by தருணாதித்தன்.
I liked the name of the heroine of this story, Uma….my better half name
There is truth in describing characters and situation e.g. we look so fresh and shining after taking bath….it is used by the author at right situation. The salesman’s character and details of selling techniques (i.e. instead of talking, talking….showing how it looks like when it is arranged together ) are excellently shared.
How a typical house wife gets into feverishness and how a husband respond to such events in a normal/rather scientific way are beautifully narrated in this story.
The signature/special technique of author is again visible in this story too i.e. Uma thought, good things started happening after clearing the சிலம்பு, in reality, it is/was still there in her house.
Best wishes and Congratulations to the author. Keep writing such nice short stories.
Best Regards,
Very nice short story, beautifully written. Quite engrossing. Brings out our human tendency to attribute a cause for all our troubles. Gives an idea of how our blind beliefs lead to unnecessary anxiety. Good work, keep it up!