கார்த்திக் பாலசுப்ரமணியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

சொந்த ஊர், குடும்பம், குடும்பப் பின்னணி, படிப்பு, பணி பற்றி

கார்த்திக் பாலசுப்ரமணியன்: பிறந்தது வளர்ந்ததெல்லாம் இராஜபாளையம். பெற்றோர்களுக்கும் இராஜபாளையம்தான் பூர்வீகம். அப்பாவுக்கு நூல் வியாபாரம். நான் பத்தாம் வகுப்புக்குப் பிறகு உயிரியல் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். கோவையில் கல்லூரிப் படிப்பு. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். மனைவியுடனும், இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும்போதுகூட தன் கன்னத்தை என் தோள் மீது உரசியபடி, “அப்பா என்ன எழுதுற,” என்று நச்சரித்துக்கொண்டிருக்கும் நான்கு வயது மகனுடனும் தற்போது சென்னையில் வசிக்கிறேன்

வாசிப்பு பரிச்சயம் எப்போது? நவீன இலக்கியத்தை வந்தடைந்த பாதை என்ன?

கார்த்திக்: அப்பா நிறைய வாசிப்பார். சிறுவயதிலேயே கி.ரா-வின் நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பை வாங்கிக் கொடுத்து என்னையும் தங்கையையும் வாசிக்கச் சொல்லுவார். எங்கள் ஊரில் புழங்கும் மொழியில், கதைகளை அச்சில் வாசித்தது அப்போது புதிய திறப்பாக இருந்தது. அவர் வழியாகவே சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன் என்று படிப்படியாக நவீன இலக்கியத்தை வந்தடைந்தேன். இப்போது அப்பாவுக்கு புத்தகங்களை நான் பரிந்துரைக்கின்றேன்.

முதல் கதை எப்போது வெளிவந்தது? எழுத தூண்டியது என்ன? எழுத்தாளர் என உணர்ந்தது எப்போது?

கார்த்திக்: 2011-ஆம் ஆண்டு, உயிர்மையின் சார்பாக வாராவாரம் வந்துகொண்டிருந்த ‘உயிரோசை’ இணைய இதழில்தான் என் முதல் சிறுகதை “பொதுப் புத்தி” வெளிவந்தது. எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து என் முதல் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இப்போது யோசித்துப் பார்த்தால் மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறேன் என்று தோன்றுகிறது. என்னைப் பாதித்த நிகழ்வுகளை எழுதிக் கடப்பதே எனக்குத் தெரிந்த ஒரே வழியாக இருக்கிறது. அப்படித்தான் எழுத ஆரம்பித்தது. நான் ஒரு எழுத்தாளன் என்ற உணர்வு என்னுள் எழாமல் வாசிப்பவனை உணரச் செய்ய முடியாது. அந்தத் தன்னுணர்வுடனே ஒவ்வொரு வார்த்தையையும் எழுதுகிறேன்.

தமிழ்/ இந்திய/ உலக இலக்கிய ஆதர்சங்கள்? பிடித்த படைப்புக்கள்?

கார்த்திக்: ஆதர்சம் என்றால் ஒருவர்தான் – அசோகமித்திரன். கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாக்கை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவரை மிகவும் பிடிக்கிறது. அவரைக்கூட சமீபத்தில் யாரோ ஒருவர் ‘கன்னடத்து அசோகமித்திரன்’ என்பதாகப் புகழ்ந்திருந்தார். உலக இலக்கியங்களிடத்தே கொஞ்சமாய்த்தான் பரிச்சயம் உண்டு. வாசித்தவரையில் தஸ்தாவஸ்கி ஈர்க்கிறார். போர்ஹேஸ் பிரமிப்பூட்டுகிறார்.

முதல் சிறுகதை தொகுப்பை அசோகமித்திரன் எனும் ஆசானுக்கு அர்ப்பணித்து உள்ளீர்கள். அமி உங்கள் மீது செலுத்திய தாக்கம் எத்தகையது?

கார்த்திக்: அசோகமித்திரனின் எழுத்துக்கள் நகர்ப்புற மத்திய வர்க்க மக்களின் வாழ்க்கையைப் பற்றி பேசுகின்றன. வாழ்வின் மீதான ஏமாற்றத்தையும், அதன் பொருட்டெழும் இயலாமையையும், சலிப்பையும் ஏற்று ஜீரணித்துக் கடந்து போகும் அவர்களின் வாழ்வே அசோகமித்திரனின் கதைகளில் திரும்பத் திரும்ப பதிவாயிருக்கிறது. அவரும்கூட தனது எழுத்தை சாமானியர்களுக்கே அர்ப்பணிக்கிறார். அவர்களைப் பற்றியே அவர் தொடர்ந்து எழுதினார். அன்றாடங்களின் வழியேகூட அற்புதமான இலக்கியம் படைக்கவியலும் என்னும் நம்பிக்கையை அவரிடமே நான் பெற்றேன். அதுவே எனக்குத் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தையும் அளிக்கிறது. என்னுடைய கதைகளின் களமும் பெரும்பாலும் அவ்வாறாகவே இருக்கிறது. தொலைதூர நாட்டில் ஒரே ஊர்க்காரர்கள் தற்செயலாக அறிமுகமாகிக் கொள்ளும்போது அவர்களை முன்பின் அறிந்திராவிடினும் அவர்களிடத்தே நமக்கு ஒருவித வாஞ்சை பிறக்குமில்லையா? அப்படியான உறவே எனக்கும் அவருக்கும். அவர் வேளச்சேரியில் தங்கியிருந்த நாட்களில் நானும் அதே வேளச்சேரியில் தங்கியிருந்தேன். ஆனால் அவரை ஒருமுறைகூட நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றவே இல்லை. இத்தனைக்கும் அந்தக் காலகட்டத்தில்தான் அவரின் பெரும்பான்மையான ஆக்கங்கள் பலவற்றையும் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன்.

சிறுகதையை வெளிப்பாட்டு களமாக தேர்ந்ததன் காரணம் என்ன, தமிழ் சிறுகதையாளராக இதிலுள்ள சவால்கள் என்ன? தற்கால சிறுகதையாளர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?

கார்த்திக்: சிறுகதைகள் எனக்கு எப்போதும் ஆச்சர்யமளிக்கின்றன. குறைந்த பக்கங்களில் நாம் நினைப்பதைக் கதையில் கொண்டு வருவதும், மனித மனதின் நுட்பமான உணர்வுகளை வாசகனுக்கு கடத்துவதும் பெரும் சவாலாக இருக்கிறது. அந்தச் சவால் பிடிக்கவும் செய்கிறது. அதே நேரத்தில், வேறு எந்த இலக்கிய வடிவத்தைவிடவும் தமிழில் சிறுகதை அடைந்திருக்கும் உயரம் மிகப்பெரியது. இதில் பேசப்படாத பொருளோ, சோதிக்கப்படாத வடிவமோ இல்லை என்று சொல்லும் அளவுக்கு பரீட்சார்த்த முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. சிறுகதைகளில் அழுந்தத் தடம் பதித்த முன்னோடிகள் பலரும் இயங்கிய களத்தில் நாமும் இருக்கிறோம் என்பதே அதீத பொறுப்பையும், அவர்களை மீறி நாம் புதிதாக என்ன செய்துவிட முடியும் என்ற அச்சத்தையும் ஒரே நேரத்தில் அளிக்கிறது. இவற்றை மீறித்தான் இன்று எழுத வருபவர்கள் எழுத வேண்டியிருக்கிறது. படைப்பும் பிரசுரமும் டிஜிட்டலாகிவிட்ட இந்தக் காலத்தில் சரியான வாசகர்களிடம் ஓர் எழுத்தாளன் தன்னைக் கொண்டு சேர்ப்பதே அவன் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்தான். நூற்றுக்கணக்கான கதைகள் அச்சு, இணையம் என்று பல்வேறு தளங்களில் ஒரே நேரத்தில் வெளிவரும்போது, நல்லதோர் ஆக்கம் அதற்குரிய கவனத்தைப் பெறாமல் போவதற்கான சாத்தியம் அதிகம். எனவே இன்று எழுதுபவர்கள் தரமான படைப்புகளை, தொடர்ச்சியாகக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதன் மூலம் மட்டுமே அவர்கள் உரிய கவனத்தையும், அங்கீகாரத்தையும் பெறவியலும், அதற்காக இன்றைய எழுத்துக்காரர்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது.

தகவல் தொழில்நுட்ப துறையை களமாக கொண்டு கதைகளை எழுதி இருக்கிறீர்கள். அதன் தேவையும், சவால்களும் என்ன? ஏனெனில் சில வேளைகளில் அது இந்த துறையை புனிதப்படுத்தும் ஒற்றைப்படைத்தன்மை கொண்டதாக ஆகும் அபாயமும் இருக்கிறது

கார்த்திக்: நான் இந்தத் துறையில் அன்றாடம் புழங்குகிறேன். இத்துறை பற்றி இருக்கும் பொதுவான பிம்பத்துக்கும் உண்மையான நிலைமைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமை வேறு; இப்போது இருக்கும் நிலைமை முற்றிலும் வேறு. ஆனாலும் முன்பு எப்போதோ ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பமே இப்போதும் தக்க வைக்கப்படுகிறது. சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு நான் வேலைக்குச் சேர்ந்தபோது வருடத்துக்கு மூன்று லட்சம் சம்பளமாகக் கொடுத்தார்கள். இன்றும் அவ்வளவே தருகிறார்கள். ஆனால் பணவீக்கமோ ஆண்டுக்கு பத்து சதவீதம் என்றளவில் போய்க் கொண்டிருக்கிறது. அவ்வாறே எதிர்மறையான அனுபவங்களும் அதீதமாகவே சொல்லப்படுகின்றன. ஐ.டி. வேலையென்றாலே ஒரே அழுத்தம், கொடுமை என்றெல்லாம். எல்லாருக்கும் அப்படியில்லை. காலை 9 மணிக்கு வந்து 5 மணிக்கு இடத்தை காலி செய்பவர்களே இங்கே அதிகம். ‘பாரிட்டோ தியரி’ கேள்விப்பட்டிருப்பீர்களே. அது ஐ.டிக்கு மிகவும் பொருந்தும். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் கடந்த இருபது வருடங்களில் நல்லவிதமாகவோ அல்லாமலோ ஐ.டி.துறை நம் சமூக பொருளாதார நிலைமையில் பொருட்படுத்தத்தக்க பெரிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. எனவே அது குறித்த பதிவுகளை முடிந்த வரை நேர்மையாக சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

அனுபவங்களை, நினைவுகளை கதையாக்குவதில் உள்ள சவால் என்ன?

கார்த்திக்: சொந்த அனுபவங்களை, நமது நினைவுகளை, விருப்பங்களை கதையாக்கும்போது நம்மையறியாமல் சமநிலை தவறிவிடும் வாய்ப்பு அதிகம். மேலும், நமது அனுபவங்களைப் பொதுவான ஓர் அனுபவமாக மாற்றத் தவறிவிட்டால் அது வெறும் சுயபுலம்பலாக பதிவாகிவிடும் சாத்தியமும் இருக்கிறது. நமது வாழ்வின் சில தெறிப்புகளில் இருந்து எடுத்தெழுதும் ஒரு படைப்பு, வாசகன் தன்னுடைய வாழ்வின் சில தருணங்களுடன் பொருத்திப் பார்க்கும்படி அமையும்போது மட்டுமே அது உயர்ந்த படைப்பாக நிலைபெறுகிறது. அசோகமித்திரனின் புலிக்கலைஞனை நான் பார்த்ததில்லை. ஆனால், ஷாமியானா பந்தல்கள் வந்த பிறகு, கூரைப் பந்தல்கள் வேயும் தொழிலை விட்டுவிட்ட பெரியவர் ஒருவரை எனக்குத் தெரியும். இருவருக்கும் ஒரே சாயல்தான்.

கதைக் களங்கள் ஆஸ்ட்ரேலியா, நொய்டா, சென்னை, கிராமம், சிறு நகரங்கள் என பல இடங்களில் நிகழ்கின்றன. இந்த வாழ்க்கை அனுபவங்கள் உங்கள் புனைவுலகை எப்படி செறிவூட்டி உள்ளன?

கார்த்திக்: சிட்னிக்கு நான் சென்று சேர்வதற்கு ஒரு மாதம் முன்புதான் அங்கு ஐ.டியில் வேலை பார்த்த பெண் ஒருத்தி அடையாளம் காணப்படாத நபர் ஒருவரால் ஒரு பூங்காவில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தாள். மேலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் களத்தில் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் சேர்த்து அங்கு செல்வதற்கு முன்பே ஒருவித எதிர் மனப்பான்மையை எனக்கு அளித்திருந்தன. ஆனால் நான் அங்கிருந்த இரண்டு ஆண்டுகளில் எனக்குக் கிடைத்தது முற்றிலும் புதிய அனுபவங்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பொழுதுகளில் ஒரு முறை கூட ஒருவரும் என் மனம் வருந்தும்படி நடந்து கொள்ளவில்லை. குறைந்தபட்சம் என் முன்னாவது. இந்திய கலாச்சாரத்தின் மீது பெரிய மதிப்பு வைத்திருக்கிறார்கள். நமது கூட்டுக் குடும்பங்கள் பற்றி சிலாகிக்கிறார்கள். பொதுவாக கட்டமைக்கப்படும் பிம்பத்துக்கும் உண்மை நிலைக்கும் எப்போதும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இது போன்ற அனுபவங்கள் என்னுடைய பார்வையை மாற்றியமைக்கின்றன. அவை என் படைப்புகளிலும் பிரதிபலிக்கின்றன.

கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதுண்டா?

கார்த்திக்: கவிதைகளை வாசிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன். புனைவைவிட கட்டுரைகள் அதிக உழைப்பைக் கோருகின்றன. அதே நேரத்தில், அதில் எழுதுபவனுக்கான சுதந்திரமும் குறைவு. காந்தியைப் பற்றி கேள்விப்பட்டதையோ, அவரைப் பற்றி அறிந்த ஒரு சில விசயங்களையோ முன்வைத்து ஒரு சிறுகதை எழுதுவது எளிது. ஆனால், ‘காந்தியம்’ குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டுமானால், காந்தியைப் பற்றியும் அவரது கொள்கைகள் பற்றியும் நிறைய வாசிக்க வேண்டும். புனைவில் உண்மைக்குப் பக்கம் இருந்தால் போதும். ஏன், அதற்கு முற்றிலும் எதிராக இருந்தும்கூட புனைவினைப் படைத்துவிட முடியும். ஆனால், கட்டுரைகளில் இம்மியளவும் உண்மையிலிருந்து விலகிவிட முடியாது. இப்போதுகூட ஒரு சிறுகதைத் தொகுப்பு பற்றிய வாசிப்பனுபவ கட்டுரை ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில் ‘நாகம்’ பற்றிய ஒரு கதை வருகிறது. அதை விமர்சிக்க தமிழில் இதுவரை வெளிந்துள்ள ‘நாகம்’ பற்றிய கதைகள் என ஏழெட்டு கதைகளை வாசிக்க வேண்டியிருக்கிறது. எனவே, இதுபோல எப்போதாவது தவிர்க்கவியலாத தருணங்களில் மட்டும் கட்டுரை பக்கம் போவதுண்டு.

வாசிப்பது தவிர்த்து, பயணம், உலக சினிமா, வரலாறு, ஓவியம், இசை போன்ற இதர துறைகளில் ஆர்வம் உண்டா?

கார்த்திக்: இல்லை. வீடு, வேலை, இலக்கியம் இவற்றுக்கே நேரம் சரியாக இருக்கிறது. தத்துவம் பற்றி அறிய ஆர்வம் இருக்கிறது ஆனால் இப்போதைக்கு நேரம்தான் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்க வேண்டும்.

சிறுகதை தொகுப்பிற்கு எத்தகைய வரவேற்பும் விமர்சனமும் கவனிப்பும் கிட்டியது?

கார்த்திக்: நான் எதிர்பார்த்ததைவிட ஓரளவு கவனம் பெற்றதாகவே கருதுகிறேன். தொகுப்பை வாசித்துவிட்டு நல்லது கெட்டது இரண்டையும் அடிக்கோடிட்டு நண்பர்கள் எழுதியிருந்தார்கள். எழுத்தாளர் ஜீ.முருகன், பாஸ்கர் சக்தி, ரவி சுப்பிரமணியன் ஆகியோரும் சுரேஷ் வெங்கடாத்ரி, வினோத் ராஜ் முதலிய நண்பர்கள் சிலரும் எழுதிய குறிப்புகளும் முக்கியமானவை. விருட்சம் அழகிய சிங்கர் போனில் அழைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு மிகவும் திருப்தியளித்த தொகுப்பு இது என்றார். கவிஞரும் எழுத்தாளருமான பிரம்மராஜனும் இத்தொகுப்பு குறித்து நல்லபடியான விமர்சனங்களை முன்வைத்ததாக பதிப்பாளரும் நண்பருமான ஜீவகரிகாலன் கூறினார். அதே போல திடீரென்று முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் பாராட்டுகள் மிகுந்த உற்சாகம் கொடுப்பவை. இன்னும் பொறுப்புடன் எழுத வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். இத்தொகுப்பை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்றதில் நண்பர் ஜீவகரிகாலனுக்கு முக்கிய பங்கு உண்டு. அவருக்கும் யாவரும் பதிப்பகத்துக்கும் என் நன்றிகள். எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் இல்லையென்றால் இத்தொகுப்பே சாத்தியமாயிருக்காது. இக்கதைகளை தொகுப்பாக்க ஊக்கம் தந்து கூடவே அழகான முன்னுரை ஒன்றை எழுதியும் தந்த அவருக்கு எப்போதும் என் அன்பும் நன்றிகளும்.

நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் களம் எத்தகையது? சிறிய அறிமுகம்-

கார்த்திக்: இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலும் நான் சார்ந்திருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையைக் களமாகக் கொண்டதுதான். லட்சக்கணக்கானவர்கள் இங்கு வேலை பார்த்தாலும் அத்தனை பேரும் உதிரிகளே. யாரும் யாருடனும் இல்லை. இதைப் பின்புலமாக வைத்து, ஊடாக இன்றைய இளம் தம்பதிகளின் அகவாழ்வுச் சிக்கல்களையும் பேசும் நாவலாக இது இருக்கும். அகத்திலும் புறத்திலும் உதிரிகளாக உலவும் மனிதர்களைப் பற்றிய கதை என்பதால் “உதிரிகள்” என்றே தலைப்பும் வைத்திருக்கிறேன்.

எதற்காக எழுதுகிறேன் என கேட்டால் என்ன சொல்வீர்கள்?

கார்த்திக்: எழுதுவதால் மட்டுமே இருப்பதாக உணர்கிறேன். எழுத்தே என் அடையாளமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் எழுதுகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.