எழுத்து ஓரு அழகிய கலைவடிவம். அந்த விதை பொதிந்த மனம் நடைமுறை சிக்கல்களையும், தடைகளையும் தாண்டி முட்டி மோதி வேர்பிடித்து, துளிர்விட்டு மேன்மேலும் எழுதி எழுதி தன்னை தானே வளர்த்துக்கொண்டு கிளை பரப்பி பிரமாண்ட விருட்சமாகிறது.
பெய்யும் மழை போல ,அடிக்கின்ற அலை போல, அசையும் காற்று போல. எங்கேனும், என்றேனும் யாரேனும் வாசிப்பார்கள், ரசிப்பார்கள் எனும் நம்பிக்கையில் ஓரு படைப்பாளி தன் தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறான்.
அது பாடும் பறவைகளை , ஓடும் நதிகளை, குளிரும் நிலவை, சுடும் சூரியனை வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஓன்று தொடர்ந்து இயக்கிக் கொண்டிருப்பதைப் போன்றது.
அப்படி அன்றாட வாழ்வின் நெருக்கடிகளையும் பிடுங்கல்களையும் தாண்டி ஏதோ ஓன்று என்னை எழுத உந்தித்தள்ளுகிறது. தொடர்ந்து எழுத, எழுத எதை எழுத வேண்டும்- எதை எழுத வேண்டாம் எனப்பிடிபடுகிறது. எழுத்து என்னுள் பல திறப்புகளைத் திறந்துவிட்டுச் செல்கிறது.
துக்கம், வலி, மகிழ்ச்சி, கோபம்,பதற்றம் என மனத்தில் தோன்றிய ஏதோ ஓன்றை எழுதி முடித்தபின் எனக்குள் ஓரு பெரிய நிம்மதி. ஆசுவாசம், ஆனந்தம். அதையும் தாண்டி அகமனத்தின் எல்லா அடுக்குகளிலும் போராட்டம் அடங்கிய, அமைதியான ஓரு ஆழ்ந்த ஜென் மனநிலை. அது வெயில் புழுங்கும் வீட்டின் ஜன்னல்களை திறந்தால் வீசும் குளிர்ந்த வெளிக்காற்றின் சுகம் போல.
சிலர் சொல்வதுபோல பணத்துக்காக, புகழுக்காக எழுதலாம்தான். ஆனால் அது பசியில்லாமல் உண்ணும் விருந்துபோல -ருசியிருப்பதில்லை.
அதே சமயத்தில் ஓரு படைப்பாளி தன் படைப்புகளை இந்தச் சமூகத்தின் முன் வைத்து அதற்கான நியாயமான அங்கீகாரத்தை, விமர்சனத்தை எதிர்பார்த்தே காத்திருக்கிறான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.
(ஆரூர் பாஸ்கரின் ‘பங்களா கொட்டா’ அகநாழிகை பிரசுரமாய் அண்மையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது)