சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா – 3

 

தமிழில்: சரவணன் அபி

karl

அத்தியாயம்– 3

பார் மேடை மீது சாய்ந்து அமர்ந்திருந்த சோக்லோஸ் மதியம் கருத்தரங்கில் தோன்றியது போல் இப்போது பார்ப்பதற்கு அவ்வளவு இளமையாக தென்படவில்லை. ஸூட் கோட் ஒரு முக்காலியில் எறியப்பட்டிருந்தது; ஊதா நிற டை தளர்த்தப்பட்டு விமான நிலையத்தில் கிளம்ப வழியில்லாமல் இரவில் மாட்டிக்கொண்ட ஒரு பயணியின் களைத்த  பாவனையுடன் சரிந்திருந்த சோக்லோஸ், அறையை கடந்து தன்னிடம் வரும் ஹெண்டர்சனை பார்த்ததும், அருகிலிருந்த மேடையை பிடித்தவண்ணம் தடுமாறி எழுந்து நின்றார். ஹெண்டர்சனின் கையை ஓரளவு பெண்மையாக பிடித்துக் குலுக்கினார்.

“பார்த்ததில் மகிழ்ச்சி, மிக்லோஸ், அழகான டை”.

“ஹலோ ஜான், உன்னை பார்ப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது,” சோக்லோஸ் தளர்வாக புன்னகைத்தார். அவர் குரலில் தொனித்த நேர்மை ஹெண்டர்சனை தாக்கியது.

“உன்னுடைய கான்டராக்க்ஷன்  அனாலிசிஸ் கட்டுரையை J.A.M-ல் படித்தேன். அற்புதமான ஆய்வு”.

“அதெல்லாம் ஒன்றுமில்லை, நன்கு தெரிந்த உண்மைகளுக்கிடையே ஒரு சின்ன அவதானம், அவ்வளவுதான். பதிப்பிக்குமளவுக்கு அதில் ஒன்றுமில்லை.”

அதுதான் உண்மையும் கூட. இருவருக்கும் அது தெரிந்தே இருந்தாலும்  சோக்லோஸ் அதை விரும்பாததைப் போல் தோள்களை குலுக்கினார். பாருக்குள் ஒரு பார்வை பார்த்து விட்டு கைகளை ஒரு சமாதான குறியீடு போல் அகல விரித்தவாறு  சொன்னார்,”இந்த மதியத்தைப் பற்றி எனக்கு கோபமொன்றும் இல்லை. சிறிது நேரம்…கொஞ்சம்…சஞ்சலமாக இருந்தது. ஆனால், அவ்வளவு தான்.”

இருமல் சிரப் போன்றவொன்றை சோக்லோஸ் அருந்திக் கொண்டிருந்தார். ஹெண்டர்சன் அவருக்கும் அதே பானத்தையும், ஒரு  வைல்ட் டர்கியும் ஆர்டர் செய்தார். வந்ததும், ஒரு மிடறு அருந்தி விட்டு, “அப்புறம்? மரியா,” என்றார்.

“மரியா.” சோக்லோஸ் தனது கோப்பையை சாய்த்து அதன் உட்புறத்தை சிவப்பாக்கும் கருஞ்சிவப்பு திரவத்தை தனக்குள் ஆழ்ந்தவராக பார்த்துக் கொண்டிருந்தார். “கடைசியாக நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டோம்.  இந்த அக்டோபரில். நீ கேள்விப்பட்டாயா என்று தெரியவில்லை.”

“ம். ஹெர்ஷ் சொன்னான். வாழ்த்துக்கள். எல்லா இனிமையும் பெற வாழ்த்துக்கள்.” வாழ்த்தின் எதிர்ப்பதம் போல் உயிரற்ற குரலில் ஹெண்டர்சன் சொன்னார். “எப்படி இருக்கிறாள்?”

சோக்லோஸ் இன்னும் கோப்பைக்குள் ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். “சில மாதங்களுக்கு முன் வரை போலிஷ் உணவுப்பயிற்சி எல்லாம் நடத்திக் கொண்டு மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். நகருக்குள் காண்டோமினியம் ஒன்றில் வீட்டுக்கு முன்பணம் கூட கொடுத்துவிட்டோம். அப்புறம்தான் ஏதோ ஆகிவிட்டது. அவளே கூறிக்கொள்வது போல  அவள் ‘மதத்தைக் கண்டடைந்து’ விட்டாள்.”

“அடக்கடவுளே, எனக்கெல்லாம் என் கார் சாவியை கண்டுபிடிப்பது கூட கடினமாக இருக்கிறது.”

“சிரிப்புதான்,” என்றார் சோக்லோஸ் சிரிக்காமல். “உன் நகைச்சுவை உணர்ச்சியை ஏறக்குறைய நான் மறந்தே போனேன்.” இன்னொரு ட்ரிங்க் கொண்டுவரும்படி பணித்து விட்டு, அது வரும் வரை தனது கோப்பையை சோக்லோஸ் பார் மேடை மீது பொறுமையின்றி தட்டிக் கொண்டிருந்தார். “இப்போது இன்னும் அதிகமாக போய் விட்டது. சர்ச் பாதர் கூட ஒத்துக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொள். போன மாதம் க்ரகாவிலிருக்கும் அவளது அம்மாவை அழைத்து தான் சிறுவயதில் பாட்டியின் பர்ஸிலிருந்து அறுநூறு ஸ்லோடிஸ் எடுத்ததைக் கூறியிருக்கிறாள். பாவம் அவள் அம்மா! எழுபது வயதில் தன் ஒரே மகள் திருடி என்று தானே ஒத்துக் கொள்வதை கேட்பதை நினைத்துப் பார்.”

“மதமாற்றம்,” ஹெண்டர்சன் முனகினார். “ஜீசஸ், யார் நினைத்துப் பார்த்திருக்கக் கூடும்?” அருந்திக் கொண்டிருந்த மதுவினால் ஹெண்டர்சனின் வார்த்தைகள் கட்டிழந்து  கொண்டிருந்தன. கேட்டுக்கொண்டிருந்த கதையின் விசித்திரம் அவரை மேலும்  இளக்கிக் கொண்டிருந்தது. ‘நல்ல வேளை, பயணத்தை தள்ளி போட்டுவிட்டு நான் வந்தது’ என்று நினைத்துக் கொண்டார். “அவளுக்கு பிடித்திருந்தால் நல்லது  தான் என்றாலும் எத்தனை பேரை அவள் கஷ்டப்படுத்துகிறாள்?அவள் அம்மா, நீ. இன்னும் வேறு யாரை?”

சோக்லோஸ் தலையசைத்தார். “உன்னால் உதவ முடியுமென்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.”

“நான் ஏன் உதவ வேண்டும்?”

“மரியாவுக்காக. எனக்காக. பிரச்னைகள் மோசமாகிக் கொண்டே போகிறது.”

ஹெண்டர்சன் மதுவை விரலால் கலக்கி விட்டு விரலை நக்கிக் கொண்டார். “அப்படியா? மோசமென்றால்?”

சோக்லோஸ் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தது போல் தலையசைத்தார். “இப்போதெல்லாம் நமக்கு பிடித்த பேய்ப்படங்களுக்கு வருவதில்லை. வாரக்கடைசிகளில் பைபிள் ஸ்டடிக்கு போய் விடுகிறாள். நான் வராததற்கு திட்டு வேறு. கிறித்துவ பக்தி பாடல்கள் மட்டும் தான் கேட்பது.”

“அவ்வளவுதானே? படங்களும், குப்பையான பக்தி பாடல்களும், இல்லையா?”

“இல்லை, திருமண முடிவை மறு பரிசீலனை செய்வதாக போன வாரம் சொல்கிறாள்.”

உதட்டுக்கு கொண்டுபோன கோப்பையை ஹெண்டர்சன் ஒரு கணம் தாமதித்தார். பின் சுதாரித்து நீண்ட மிடறு ஒன்றை விழுங்கினார். ஹெண்டர்சனுக்கு இதுவொன்றும் பெரிய ஆச்சரியமாக இல்லை. முக்கிய விஷயங்களில்  திடீரென்று குழம்புவது மரியாவின் இயல்பு என்று அவருக்குத் தெரியும்.

சோக்லோஸின் உதடுகள் இறுகியிருந்தன. பார் மேடைக்கு பின்னால் அலமாரியில் இருந்த அலங்காரமான, மிளகு பொடிசெய்யும் இயந்திரத்தை ஏதோ மதச்சின்னத்தை பார்ப்பவர் போல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். “இயேசு மரணத்திலிருந்து எழுந்தார் என்று கத்தோலிக்கர்கள் நம்புவது உனக்கு தெரியுமா ஜான்?” சோக்லோஸ் உணர்ச்சிவசப்பட்டவராக புன்னகைத்துக் கொண்டார். “இறந்து கிடந்தவர், உயிர்த்து எழுந்து, நடந்து சென்றார் என்று நம்புவது? பேரதிசயம்.”

ஹெண்டர்சனுக்கு மரியா தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்திப்பதையோ, தங்கக்குவளையில் ஒயினை இயேசுவின் இரத்தமாக பருகுவதையோ  எண்ணிப்பார்க்கக்கூட முடியவில்லை. சிற்றின்பத்தைத் தவிர அவளை மற்றொன்றின் உருவாக பார்க்க அவருக்குக் கூடவில்லை.

எப்போது அவளை நினைத்து கொண்டாலும், முதலில் நினைவுக்கு வருவது மரியாவின் சமையல் – இறுக்கமாக சுருட்டிய கவும்ப்கி, உப்பிய கியல்பசா, பல்கேரிய வைன்… – அல்லது, அவளுடனான புணர்ச்சி…

மதம் ஓர் ஈர்ப்பாக ஹெண்டர்சனுக்கு என்றும் இருந்ததில்லை. ‘நான்-லீனியர் கண்ட்ரோல் தேற்றம்’ எப்படி பல பேருக்கு ஓர் உருவற்ற மாயத்தோற்றமாக தோன்றுமோ அப்படித்தான் அவரைப்பொறுத்தவரை மதம் . உறக்கம் வாராத சில பின்னிரவுகளில், போர்வை முடிச்சாகக் கிடக்க, நெற்றியில் வியர்வை பொங்க, தன் சினத்தையும், பதற்றத்தையும், சந்தேகங்களையும் ஒப்புவித்து கரைத்துவிடக் கூடிய ஓர் அலகிலாத, உருவில்லாத நற்பண்பு திடீரென்று தன்முன் தோன்றிவிடாதா என்ற ஏக்கம் இருந்ததுண்டு. சிலசமயம் அரைக்கனவின் நிலையில், அருகிலுள்ள மெக்டொனால்ட் கடையில் நின்றிருக்கும் இறைவடிவத்தின் பழங்காலப் போலியொன்று நல்லதே நடக்குமென்று அவரை வாழ்த்துவது போல் ஒரு  தரிசனம்.

ஆனாலும் மறுநாள் விழித்தெழும் போது  அவமானமும், சந்தேகமும் உடலெங்கும் எரியும். நம்புவதற்கு அங்கு என்ன இருக்கிறது? மிகக் கொடுமையான வசதிக்குறைவையும் சகித்துக் கொள்ளும் மனிதர்களின் திறன்; கடந்து செல்லும் ஒவ்வொரு வருடமும்   கறைபடிந்து கூடிக்கொண்டே வரும் குற்றவுணர்ச்சியும், துக்கமும்; குறைந்த சக்தியிலிருந்து உயர் சக்திக்குத் தாவும் எலக்ட்ரான்களின் பெருக்கு. அவற்றைத் தவிர வேறென்ன?

“இன்னும் இருக்கிறது.” சோக்லோஸ் தொடர்ந்தார். “அவளுடைய Ph.D. பட்டம்?”

உணவுக்கூடத்தின் இசை தேய்ந்து நின்றது போலவும், உள்ளிருந்தவர்கள் பஞ்சுப்பொதியினூடாக பேசுவது போல் சத்தம் அமுங்கிப் போனது போலவும் தோன்றியது. சோக்லோஸ் தனது காலி கோப்பையின் உட்புறத்தை பார்த்தவாறே பேசுவதை ஹெண்டர்சன் கவனித்தார். “Ph.D. படிப்பை நிறுத்திவிடப் போவதாகவும், அதுபற்றிய உண்மையை J.A.M-ல் வெளியிடப்போவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.”

ஹெண்டர்சன் சோக்லோஸின் மணிக்கட்டை இறுகப்பற்றினார். “கடவுளே. அவளை தடுத்து நிறுத்து மிக்லோஸ்.”

சோக்லோஸ் தன் கையை விடுவித்துக் கொண்டே, “அவள் மிகத் தீவிரமாக இருக்கிறாள்.  இந்த நிலை அவளை மிக மோசமாக உணரச் செய்கிறது என்கிறாள்,” என்றார்.

ஹெண்டர்சன் தனது நாற்காலியில் சரிந்தார். இயந்திரத்தனமாக இன்னொரு கோப்பை மதுவை ஆர்டர் செய்தார். உடலில் மது தந்த  மயக்கத்தை விட  அதிகப்படியான ஒரு மரத்துப்போன உணர்வு பரவுவது தெரிந்தது. பல்மருத்துவரிடம் லோக்கல் அனஸ்தீசியா போட்டு கொண்டு தன் கண்முன் உலகம் பரபரப்பாக இயங்குவதை எவ்வித உணர்ச்சியுமில்லாமல் பார்ப்பவரின் மனநிலை.

“உனக்குத் தெரியாது ஜான். உன் ஆராய்ச்சிகளிலேயே அதுதான் உச்சம். சில்கோவ்ஸ்கியின் தேற்றம். அவள் அதை எழுதவில்லை என்பது எனக்குத் தெரியும். அவள் அதைப்பற்றி கவலை படவில்லை, அவளுக்கு அது ஒரு விஷயமேயில்லை. ஆனாலும்…” சோக்லோஸ் தயங்கினார். “எப்படி ஒரு படைப்பு! அற்புதமான நிரூபணம்!”

“ஏதோவொரு உத்வேகம்,” தோள்களை குலுக்கினார் ஹெண்டர்சன்.

“இன்னொருவரின் பெயரில் அது பதிப்பிக்கப்படுவது உனக்கு வேதனையாக இருந்திருக்கும்…”

“இல்லவே இல்லை,” என்றார் ஹெண்டர்சன், தேவைக்கு அதிகமாகவே உணர்ச்சியுடன். “மரியாவுக்காக அதை மகிழ்ச்சியாகத்தான் செய்தேன். அவள் மகிழ்ச்சிக்காக அதை செய்தேன்.”

“மகிழ்ச்சி.” சோக்லோஸ் விரக்தியாக புன்னகைத்தார். “அடையக் கடினமான நிலை.”

பொயின்கேர் மேனரிலிருந்து  ஹெண்டர்சன் வெளியேறிய ஐந்து மாதங்கள் கழித்து அது தொடங்கியது. சன்னலின் திரைகளை இழுத்து மூடி மதியம் வரை தூங்க ஹெண்டர்சன் யத்தனித்துக்கொண்டிருந்த ஒரு மே மாத குளிர்காலையில் மரியாவின் அழைப்பு வந்தது.  “எப்படி இருக்கிறாய்?” அவள் குரல் வெம்மையானதொரு நடுக்கத்தை அவர் தொடைகளினூடாக செலுத்தியது. கடைசியில் கசப்பான புன்னைகையுடன், “பிரமாதம்! நீ எப்படி இருக்கிறாய்?” என்றார்.

(தொடரும்)

 

அத்தியாயம் 1 

அத்தியாயம் 2 

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த ‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின்  முறையாக முன்னனுமதி  பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.

ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT 

3 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.