உணர்ச்சிகளின் இடம்: மார்கேஸ்ஸின் ‘The Saint’

ஆர். அஜய்

strangepilgrimscover

பதாகையில் வெளியான இந்தக் கட்டுரை குறித்த உரையாடலில், உணர்ச்சிவசப்படச் செய்வது எப்போதும் தவறாக இருக்க வேண்டியதில்லை என்று ஒரு கருத்து பகிரப்பட்டது. அந்தக் கட்டுரை மற்றும் கருத்தின் நீட்சியாக மார்கேஸ்ஸின் ‘The Saint‘ கதையை அணுகுவது சில புரிதல்களை நமக்கு அளிக்கலாம். மேலே சுட்டப்பட்டுள்ள கட்டுரையில் “In great fiction we are moved by what happens, not by the whimpering or bawling of the writer’s presentation of what happens,” என்று Gardner எழுதிய ‘Art Of Fiction‘ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதும் கவனிக்கத்தக்கது.

மார்கேஸ்ஸின் ‘The Saint‘ சிறுகதையில் மார்கரீட்டோ (Margarito) என்பவர் ஒரு சிறிய லத்தீன் அமெரிக்க கிராமத்திலிருந்து ரோமுக்கு வருகிறார். 18 வயதில் திருமணம் முடித்து, பிள்ளைப் பேற்றிற்குச் சில காலத்திலேயே மனைவி இறந்து, சில வருடங்களில் மகளையும் இழக்கிறார். அதன்பின் இன்னும் சில வருடங்கள் கழித்து, அவர்களின் கல்லறைகளை தோண்டியெடுக்கும்போது, மகளின் உடல் கெடாமல் இருப்பதைப் பார்த்து அவர் கிராமமே அதிசயிக்கிறது. மகளின் பூதவுடலை போப்பிடம் காட்டி, இத்தகைய அதிசயம் நிகழ்ந்துள்ளதால் தன் மகளை புனிதர் என கிருத்துவச் திருச்சபை ஏற்க வேண்டும் என்று மார்கரீட்டோ எடுத்துக்கொள்ளும் முயற்சியே இந்தக் கதை.

இயல்பாகவே வாசகனை எளிதில் நெகிழச் செய்யக்கூடிய ‘sentiment/ பாசவுணர்ச்சிக்கான’ சாத்தியங்கள் இந்தக் கதையில் உள்ளன என்பது வெளிப்படை. அதே நேரம் வாசகன் இந்தக் கதையின் களத்தை நெகிழ்வோடு அணுகுவான் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. நடைபெற முடியாத ஒன்றுக்காக இருபத்து இரண்டு வருட காலம் ஒருவர் முயற்சி செய்வது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக உள்ளது, எனவே நம்மை நெகிழச்செய்ய முனையும் பசப்புணர்வே (sentimentality) கதையில் மிகுந்துள்ளது எனவும் ஒருவர் கூறலாம். அதுவும் தனக்கான நியாயங்களைக் கொண்டுள்ள தரப்பே.

Gardner குறிப்பிடும் புலம்பலோ, பிழிந்தெடுக்கப்படும் சோகமோ The Saint கதையின் எழுத்தில் இல்லை. மார்கரீட்டோ பற்றிய கதை என்றாலும், அவருடன் விடுதியில் தங்கும் கதைசொல்லியின் பார்வையிலே கதை நகர்கிறது. மார்கரீட்டோவின் முயற்சி பற்றிய எந்த விதந்தோதலும் இல்லாமலேயே அதன் கடினத்தை காபோ (Gabo) நமக்கு உணர்த்துகிறார். ரோம் வந்த ஒரு வருடத்தில் அந்நகரின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் மார்கரீட்டோவிற்கு அத்துப்படியாகிவிட்டது என்று காபோ ஒற்றை வரியில் சொல்லும்போது நகரம் முழுதும் அலைந்து திரியும் மார்கரீட்டோவின் உருவம் நம் மனக்கண்ணில் இயல்பாகவே தோன்றுகிறது. அவருடைய அன்றாட நடவடிக்கை பற்றிய எளிய விவரிப்பின் – பெரும்பாலும் வெளியே அலைந்து திரிந்தபடி இருக்கும் தனக்கு கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்திலும் தன் லட்சியம் தொடர்புள்ள (புனிதர்கள் பற்றியவையாக இருக்கக்கூடும்) நூல்களை படிப்பது, மாத இறுதியில் செலவினங்களை விரிவாக குறித்து வைப்பது- மூலமாகவே மார்கரீட்டோவின் நடை, உடை, பாவனை அனைத்திலும் கண்ணியத்தை, எப்போதும் சமநிலை குலையாத சீரான தன்மையை, கதைசொல்லி மட்டுமல்ல, அவர்கள் தங்கும் விடுதியில் உள்ள மற்ற அனைவரும், வாசகரும்கூட உணர ஆரம்பிக்கிறார்கள். சிற்சில நிகழ்வுகள் மூலம் அவரின் ஆளுமை இயல்பாகவே வாசகன் மீது தாக்கத்தை செலுத்த ஆரம்பிக்கிறது. அவர்கள் தங்கும் விடுதியின் அமைப்பு, அதன் உரிமையாளர், மற்ற குடித்தனக்காரர்கள் பற்றிய தகவல்கள், ரோம் நகரின் நண்பகல் மயக்கச் சித்தரிப்புக்கள், கதைசொல்லியின் புகழ் பெற்ற -திரைக்கதை எழுதச் சொல்லிக் கொடுக்கும்- ஆசிரியர், என காபோவின்- அவர் எடுத்துக் கொள்ளும் களத்தை/ நிலவியலை இன்னும் துல்லியமாக மாற்றும் – எழுத்துக்குரிய சின்னச் சின்ன இன்பங்கள் (incidental pleasures) இந்தக் கதையிலும் உள்ளன.

மார்கரீட்டோவை மிருகக் காட்சி சாலைக்கு கதைசொல்லி அழைத்துப் போக, சிங்கம் ஒன்று தொடர்ச்சியாக கர்ஜிக்கிறது. அங்குள்ள பணியாளர், சிங்கம் மார்கரீட்டோவையே கவனிக்கிறது, அவருக்காகவே கர்ஜிக்கிறது என்றும், அதில் பச்சாதாபம் தெரிகிறது என்றும் சொல்கிறார். சிங்கத்தின் கண்ணீர் என்றெல்லாம் இந்த நிகழ்வை நீட்டி முழக்காமல் சட்டென்று காபோ கடந்து விடுகிறார்- மேலும், இது பணியாளர் சொல்வதாகத்தான் குறிப்பிடப்படுகிறதே தவிர உண்மை என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை. பணியாளர் சொல்லும் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. மார்கரீட்டோ அன்று வேறு ஏதேனும் சிங்கங்களுக்கு அருகில் சென்றிருந்து, அவற்றின் உடல் மணம், அவர் மேல் பரவி அதனாலும் சிங்கம் கர்ஜிக்கக்கூடும் என்கிறார் அவர். அவ்வாறு நடக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, ‘சிங்கத்தின் உடல் மணம்’ என்பதை, அச்சிங்கம் தன்னில் ஒருவராக, தன்னைப் போன்ற ஆளுமையாக மார்கரீட்டோவை எண்ணியதா என்பது குறித்தும் வாசகன் யூகிக்கலாம்.

இந்த நிகழ்வுகள் நடந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு கதைசொல்லி மீண்டும் ரோம் செல்கிறார். தான் முன்பு தங்கிய விடுதியும், மிருகக்காட்சி சாலையும் அடையாளம் தெரியாமல் மாறி விட்டுள்ளது. தன் நண்பனை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை, அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த அவரது ஆசிரியரை இப்போது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் மார்கரீட்டோவை கதைசொல்லி மீண்டும் சந்திக்கிறார்.’ The Saint is there.. Waiting‘ என்று தன் முயற்சியின் தற்போதைய நிலை பற்றி குறிப்பிடும் மார்கரீட்டோ, இன்னும் சில மாதங்களில் தான் எண்ணியது நடந்துவிடும் என்று கூறி, கதைசொல்லியிடம் விடை பெற்று செல்கிறார். மார்கரீட்டோவை உண்மையான புனிதர் என்றும், அவர் தன்னையறியாமலேயே இத்தனை ஆண்டுகளாக, தன்னுடைய ‘புனிதர் பட்டத்திற்காகவும்’ (canonization) போராடி வருகிறார் என்று கதைசொல்லி எண்ணிக் கொள்வதோடு கதை முடிகிறது. எந்த அதீத மொழி வெளிப்பாடும் இல்லாமல் இயல்பான நடையிலேயே கதைசொல்லியின் மனவோட்டம் வெளிப்படுகிறது.

இங்கு ஒரு கருத்தை யோசிக்கலாம். உணர்ச்சிவசப்படச் செய்வதில் கதையோட்டத்துக்கு உள்ள பங்கும் கதைசொல்லலுக்கு உள்ள பங்கும் ஆராயத்தக்கவை. மகளை புனிதராக ஆக்க முயலும் தந்தையைப் பற்றிய கதையாக இல்லாமல் மனைவியை இழந்து தனியாளாக பெண்ணை வளர்க்கும் தந்தையைப் பற்றியதாக இது இருந்திருந்தாலும் அதன் கரு மற்றும் கதையோட்டம் உணர்ச்சிவசப்படச் செய்யும் சாத்தியத்தைக் கொண்டதாகவே இருக்கும். பெரும்பாலான கதைக்கருக்களுக்கும் இது பொருந்துமென்றாலும் கதையாக மொழியில் அது வெளிப்படும் விதமே நம்மை உணர்ச்சிவசப்படச் செய்கிறது, நெகிழ்த்துகிறது, அல்லது பசப்புணர்வு என்று விலக்கச் செய்கிறது. இந்தக் கதை உணர்ச்சிகரமானதுதான், வாசகனை நெகிழ்த்தும் ஆற்றல் கொண்டதுதான். ஆனால் உணர்ச்சிகள் வாசகன் மீது திணிக்கப்படுவதில்லை, மாறாக அவற்றை உணரும் பாதையில் காபோவால் மெல்லச் செலுத்தப்படுகிறான், அதன் முடிவில் காபோவின் இடத்தையே அவன் அடைகிறான். மார்கரீட்டோவின் கண்ணியமான ஆளுமை குறித்த சுட்டுதல்கள் கதையின் ஆரம்பத்திலிருந்தே வருவதால் முடிவில் திணிக்கப்பட்ட திடீர் திருப்பமோ, உச்ச நிகழ்வோ வருவதில்லை.

..On one hand, don’t overdo the denouement, so ferociously pushing meaning that the reader is distracted from the fictional dream, giving the narrative a too conscious, contrived, or ‘workshop’ effect…,” என்று கார்ட்னர் குறிப்பிடுவதற்கு சிறந்த உதாரணம் இக்கதை. கடைசி வரை வாசகன் உணர்ந்திருந்த கதையின் ஒழுங்கைக் குலைத்து, அவனை அப்புனைவுலகிலிருந்து காபோ வெளியே இழுப்பதில்லை. இறுதியில் வாசகன் மார்கரீட்டோபால் அடையும் பாசவுணர்வு காபோ முதலிலிருந்து உருவாக்கும் உணர்வுச் சங்கிலித் தொடரின் கடைசி -அதை மேலும் இறுக்கும்- கண்ணியாகவே உள்ளது. இறுதி பகுதிக்கு முன்பான பகுதியை மறுவாசிப்பு செய்வது இது குறித்த மேலதிக தெளிவை அளிக்கக்கூடும்.

கதைசொல்லி மார்கரீட்டோவைச் சந்திக்கும் நிகழ்வுக்கான முன்னெடுப்பாக, காலத்தின் போக்கில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை காபோ விரிவாகச் சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன, கதைசொல்லி ஏன் மார்கரீட்டோவைத் தவிர வேறு யாரையும் சந்திக்க முடியவில்லை, அப்படி அமைப்பதற்கான காபோவின் நோக்கம் என்ன? காலமாற்றத்தையும் மார்கரீட்டோவின் நிலைகுலையாத முயற்சியையும் இணைக்க முயன்றால், அவற்றிற்கிடையே உள்ள பெரும் வேற்றுமையை நேரடியாகச் சொல்லாமல் வாசகனை உணரச் செய்து, அதன் மூலம் அவனையும் மார்கரீட்டோ குறித்த ஒத்த முடிவுக்கு வரச் செய்கிறார் காபோ என்பது புரிகிறது. ஆம், இத்தனை ஆண்டுகளில் ரோம் நகரமே மாறியிருக்கும்போது, மார்கரீட்டோவின் மகளின் பூதவுடல் கெடாமல் இருப்பது அதிசயம் என்றால், மனதைத் தளர விடாமல், அதே கண்ணியமும், விடாமுயற்சியும், நம்பிக்கையும் கொண்ட மார்கரீட்டோவின் அத்தனை ஆண்டு கால செயல்பாடும் (அவருடைய சிறு கிராமத்தில் அவரை நினைவில் வைத்திருப்பவர்கள் யாரேனும் இன்னும் இருப்பார்களா?) அதிசயம்தானே? அத்தனை மாற்றங்களுக்கிடையே தான் ரோம் நகருக்கு முதலில் வந்தபோது எந்த மனநிலையில் இருந்தாரோ, அது கெடாமல் இருக்கும் மார்கரீட்டோவும் புனிதர்தான் இல்லையா?

நம் வாசிப்பில் மார்க்கரீட்டோவின் கண்ணியம், ஒரு புனிதருக்கு உரிய கண்ணியம் எனப் புலப்படுகிறது என்றால் அது மார்க்கேஸின் கதைகூறலில் வெளிப்படுவதுதான். இந்தச் சிறுகதை அளிக்கும் நெகிழ்வு, உணர்ச்சிகள் நம்மை ஆக்கிரமிப்பதால் அல்ல, உணர்ச்சிகள் அடங்கிய ஒரு அமைதியில் தோன்றுவது. ஆனால் அதனால் இது உணர்ச்சிவசப்படச் செய்யாத கதையாகி விடுவதில்லை. உணர்ச்சிவசப்படச் செய்வது எப்போதும் தவறாக இருக்க வேண்டியதில்லை என்ற கருத்துக்கு நேர்மறை உதாரணமாக இந்தக் கதை இருக்கிறது.

One comment

  1. மார்க்கேஸின் கதைகூறலில் இக்கதை உணர்ச்சிகள் அடங்கிய நிலையில் நம்மை இழுத்துக்கொள்கிறது என்பது தான் இதன் இலக்கிய அடிப்படை அல்லவா.தமிழிலும் மலையாளத்திலும் உலகச் சிறுகதைகளிலும் இத்தகைய உள்ளடங்கிய உணர்வுகள் எப்பொழுதும் சிறந்த சிறுகதைகளில் நான் உணர்ந்ததுண்டு.பொதுவாகவே புலம்பல்கள் sentiments பிலாக்கணங்களை கண்டு நான் அஞ்சி பின்னடைவதுண்டு.அத்தகைய எழுத்துகளை வாசிப்பின் ஆரம்பத்திலேயே கண்டுவிடலாம்.எத்தகைய உணர்ச்சிகரமான நிலையிலும் நுட்ப பகடிகளுடன் கதையினைக் கூறும் படைப்பாளிகளையே நாம் இலக்கியகர்த்தாக்களாக மதிக்கிறோம்.ஹெமிங்வேயும்,டால்ஸ்டாயும்,கிராவையும்,அசோகமித்திரனையும் நான் அப்படியே வாசித்திருக்கிறேன்.இது அவரவருக்கு மாறலாம்.மிகையுணர்வுகள் நிச்சயம் கதைக்களத்தை முழுமையாக ஆக்ரமித்தல் கூடாது.ஆனால் எந்த படைப்புமே வாசிப்பவரின் சிந்தனையில் ஏதேனும் ஒரு உணர்ச்சியை உண்டாக்கக் கூடியதாகவே எழுதப்படுகிறது.அவை உள்ளடங்கிய நிலையிலும் சரியான நடையில் கூறப்பட்டால் வாசகனைச் சென்றடையும்.அவ்வாறான உணர்வெழுச்சிகள் எப்பொழுதும் தவிர்க்கப்படவேண்டியவையோ,குறைத்து மதிப்பிடக்கூடியவையோ அல்ல.அவையும் இலக்கியத்தின் சாரங்களே.நல்ல கட்டுரை
    நன்றி
    மோனிகா மாறன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.