சரித்திரப் புனைவு படைக்கும் எழுத்தாளர்கள் கையாளும் தரவுகள் துல்லியமானவை, அவர்களது வரலாற்றுப் பார்வை துல்லியமான சித்திரத்தை அளிக்கிறது என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சித்திரத்தை அவர்கள் அளிப்பார்கள் என்றால், அவர்களது நாவல்கள் நம் இதயத்தின் வேட்கையை நிறைவு செய்யும் என்ற நம்பிக்கைக்கு நாம் இடம் கொடுக்கலாம்: கடந்த காலத்தின் ஆவிகளுடன் ஓர் உரையாடல், வரலாற்று மாந்தரை நேருக்கு நேர் எதிர்கொள்ளல்- இப்படிப்பட்ட ஒரு வாசிப்பனுபவம் வரலாற்று நூல்களில் கிடைப்பதில்லை என்ற குறை நமக்கு இருக்கக்கூடும். சரித்திரப் புனைவுகளில் எடுத்தாளப்படும் மேற்கோள்கள் சொல்லுக்குச் சொல் மூல வரலாற்று நூல்களில் உள்ளவாறே இருப்பதன் செறிவை நாம் காண இயலுமென்றால் – நிச்சயம் மாண்டலின் நாவல்களில் இது உண்டு- (நினைவுகளைப் பதிவு செய்யும் மனிதர்களுக்கு எப்போதும் இருக்கக்கூடிய பிழை நினைவும் மனச்சாய்வும் கொண்டவர்களால் இந்த மூல நூல்கள் உருவாக்கப்பட்டவை என்ற எண்ணத்தை நாம் தள்ளி வைக்க முடியுமென்றால்), நாம் நம்மைத் தளர்த்திக் கொண்டு, வெந்நீர் குளியல் மேற்கொள்வது போல், நாவலின் சரித்திர உலகினுள் நம்பிப் புகலாம்.
அப்போது புனைவு, வரலாறு விட்டுச் சென்ற இடைவெளிகளை- கடந்த கால நிகழ்வுகளைப் பதிவு செய்தவர்கள் விட்டுச் சென்ற இடைவெளிகளை- இட்டு நிரப்பும்-, ஏனெனில் இந்த இடைவெளிகள் மிகச் சாதாரணமானவையாய் இருக்கும். அந்தக் காலம் உண்மையில் எப்படி இருந்தது, அந்நாட்களில் வாழ்ந்ததன் உணர்வு உண்மையில் எப்படிப்பட்டது என்பதைப் புனைவால் சொல்ல முடியும். “வேவு பார்ப்பது அத்தனை இனிய கேளிக்கை” என்பதே ‘காலப்பயணத்தின் வசீகரம்’ என்று மார்கரட் அட்வுட் எதைச் சுட்டினாரோ, அந்த அனுபவத்தில் நாம் திளைக்கலாம்.
இது நிகழும்போது, கற்பனையில் திளைக்கும் நம் புலன்களை உணவின் சுவையால், ஆடைகளின் தொடுகையால், நறுமணம் என்று சொல்வதற்கில்லாத தெருக்களின் நாற்றத்தால், புனைவுகள் நிறைக்கக்கூடும். டவ்டன் போருக்குத் தயாராகும் போர் வீரர்கள் மற்றும் குதிரைகளின் பரபரப்பான அசைவை நம்மால் கேட்க முடியும், எலிசபெத்திய நிழலுலகில் யாருக்கும் தெரியாமல் நாம் மறைந்து திரிய முடியும், புரட்சிக்கால பிரான்சில் நாம் ஒட்டுக் கேட்க முடியும்- அனைத்தும் நம் கைக்கெட்டும் தொலைவில் இருக்கும், ஏனெனில், “தன் காலத்தின் உணர்வுடன் சமநிலை பேணுதல்,” “வரலாற்றின் நிறுவப்பட்ட உண்மைகளை ஒப்புக்கொள்ளுதல்”. என்ற இரண்டும், சிறந்த சரித்திரப் புனைவுக்குரிய இரு அளவைகள் என்று ஹெலன் கெர் முன்வைத்திருக்கிறார். இங்கு அவருக்கு இணக்கமாய் நாவலாசிரியர் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.
ஆனால் இதில் ஒரு ரகசிய, ஒருதலைபட்சமான ஆபத்து இருக்கிறது. வரலாற்று துல்லியம் கொண்டது என்ற இலச்சினை பதிக்கப்பட்டு ஒரு நாவல் வெளிவருகிறது என்று வைத்துக் கொள்வோம்- ஆதாரநூல்கள் தரவுகளாக சுட்டப்பட்டுகின்றன, மிகச் சாதாரணமான விவரணைகளும் சரியாக இருக்கின்றன: உள்ளாடைகள் சரியான வகையில் அணிந்து கொள்ளப்படுகின்றன, சாலைகள் சேறும் சகதியுமாக இருக்கின்றன… இது போல் எழுதுவது நாவல் முழு உண்மையைச் சொல்வதான ஒரு தோற்றத்தை அளிக்கும். “நம்ப வைக்கும் பொய் ஒரு தீச்செயல்” என்று சொல்கிறார் பரபரப்பாக விற்பனையாகும் நாவல்களை எழுதும் பிலிப்பா க்ரே. புனைவெழுத்தாளர்கள் நாளெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறார் அட்வுட்: “தாம் எழுதுவதை பொது வாசகர்கள் முழுமையாய் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக உண்மை போலிருக்கும் பொய்களை உருவாக்குகிறார்கள்“.
மிகச் சிறந்த வரலாற்றுப் புதினங்கள் இரு ஆபத்தான விஷயங்களை நாம் நம்பச் செய்யலாம். முதலாவதாக, மானுட இயல்பு மாறுவதே இல்லை என்று நாம் தீர்மானிக்கக்கூடும். இது மிக இயல்பான உண்மையாகத் தெரிகிறது, ஆனால் எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் எண்ணங்கள் நம் காலத்தில் வாழ்பவர்களின் எண்ணங்களிலிருந்து மிக மிக மாறுபட்டதாகவே இருந்திருக்கிறது. அவர்களது அறத் திசைகாட்டியின் வடதுருவம் வேறு திசை நோக்கி நிற்கிறது. டூடர் இங்கிலாந்தில் எருதுகளை ஆடுகளத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்காமல் கொலை செய்வது சட்டத்துக்குப் புறம்பானது. பதின்பருவப் பெண்ணான காத்தரீன் ஹவார்டை அவளது சம்மதமில்லாமல் பிரான்சில் டெர்ஹாம் புணர்ந்தபோது அவன் பாலகர்களைத் துன்புறுத்தியதாகவோ கற்பழித்ததாகவோ குற்றம் சாட்டப்படவில்லை. ஹவார்ட் ஒரு விலைமகள், கவர்ந்திழுப்பவள், ஆண்களை மயக்குபவள் என்று கருதப்பட்டாள். அதே போல், பதினாறாம் நூற்றாண்டு பற்றி எழுதும் எந்த ஒரு நாவலாசிரியரும் சமய உணர்வுகளுக்கு அன்றிருந்த முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ராபர்ட்சன் டேவிஸ் சரியாகவே சொல்கிறார், “நாம் அனைவரும் நம் காலத்துக்கே உரியவர்கள். அதிலிருந்து தப்ப நாம் எதுவும் செய்ய முடியாது. கடந்த காலத்தைக் களமாய்க் கொண்ட நாவலானாலும் நாம் எழுதுவது எதுவானாலும் அது சமகாலத்துக்குரியதாகவே இருக்கும்,” என்று.
புனைவுகள் நம்மை நம்பச் செய்யும் இரண்டாவது ஆபத்தான விஷயம் கதாப்பாத்திரங்களின் அகவுலகம் சார்ந்தது: நாம் கதைசொல்லியின் காலணிகளில் நுழையும்போது அறிய வரும் அகவுலகம் யதார்த்தத்தில் நாம் எவ்வகையிலும் உண்மையென்று அறிந்து கொள்ள முடியாத ஒன்று. நிச்சயம், வரலாற்று காலத்தில் வாழ்ந்த கிராம்வெல்லைவிட மாண்டல் நாவல்களின் கிராம்வெல் விரும்பத்தக்கவராகவே இருப்பார். கதைக்களம், சூழ்நிலம், ஆடை அணிகலன்கள் துல்லியமாய் விவரிக்கப்படுகின்றன என்ற மயக்கத்தில் நாம் அவரது ‘குணாதிசயம்’ குறித்த ‘நம்ப வைக்கும் பொய்யை’ ஏற்றுக்கொள்கிறோமா? இதற்கான மாண்டலின் பதில் நியாயமானதாகவே இருக்கும்: அவர் இன்னும் முழுமையாக எழுதி முடிக்காததால், மாண்டலின் கிராம்வெல் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிய வாய்ப்பில்லை. அது தவிர, உண்மையான ‘கிராம்வெல்’ யார் என்பதும் நமக்குத் தெரியாது. ஏனெனில், வரலாற்றாசிரியர்களை எடுத்துக் கொண்டால், அவர்களும் தம் காலத்தில்தான் எழுதுகிறார்கள், தமக்குரிய மனச்சாய்வுகளுடன், குறைபட்ட மனிதர்களின் குறைபட்ட தரவுகளைக் கொண்டு.
அப்படியானால் அத்தனை வரலாற்றுப் புதினங்களும் ஒரு எச்சரிக்கை வாசகம் தாங்கி வர வேண்டுமா? “இது கடந்த காலம் அல்ல. அது போலிருக்கிறது, அவ்வளவுதான்“. ஆனால் வரலாற்று நூல்களுக்கும் இது பொருந்துமோ?
நன்றி – History Today
ஒளிப்பட உதவி – wikipedia