“கொழு, கொழு கன்றே,
கன்றின் தாயே ,
கன்று மேய்க்கும் இடையா,
இடையன் கைக் கோலே
கோல் சார்ந்த மரமே
மரம் தரும் நிழலே
நிழல் நிற்கும் குதிரை
என் பெயர் என்ன?”
ஒரு ஈக்கு தன் பெயர் மறந்துவிட்டதாம். பறந்து பறந்து கன்று முதல் குதிரை வரை எல்லோரையும் கேட்டதாம். குதிரை “ஹி … ஹி” என்று கனைத்தவுடன் ஈக்கு தன் பெயர் நினைவிற்கு வந்ததாம்.
அம்மா சொன்ன கதை.. அவள் குரலின் ஏற்ற இறக்கங்களுடன் இன்றும் விருபாக்ஷியின் காதுகளில் ஒலிக்கிறது.
“எப்படியம்மா ஈக்கெல்லாம் பெயர் உண்டு?” சற்று வளர்ந்தபின் அவள் கேட்பாள்.
”உண்டுடி. நாம் அதை மறந்துடறோம் இல்லாட்டி மறைச்சுடறோம்”
விருபாக்ஷிக்குப் புரியாது. ஆனால் அதற்கு மேல் கேட்கவும் தெரியாது.
அவளது பெயரின் அழகே அவளை மயக்கிக் கொண்டிருந்தது. அதை சுரங்களாக அவள் பகுத்துப் பார்ப்பாள்.
ச ரி க ம,
ரி க ம ப,
க ம ப த,
ம ப த நி,
ப த நி ச….
விருபாக்ஷி, ரூபாக்ஷி. விபாக்ஷி, விக்ஷிபா, விரூபா என்று சர இராகமாக அவை உருக்கொள்ளும். ஒவ்வொன்றும் ஒரு மந்திர அர்த்தத்துடன் முழங்கும். சொல்லிலிருந்து பிரியும் மௌனமாக. பின்… மௌனம் பெற்றெடுத்த சொற்களாக.. அவள் அதிலேயே ஆழ்ந்துவிடுவாள்.
அந்த பெயர் தன்னைத் தனியே நிறுவுவதாக அவள் உணரத் தலைப்பட்டாள். அடர்காட்டின் அந்தரங்கப் பகுதியில் ஒரே ஒரு பூ. நிலவின் வாசம் கொண்டு, மலை அருவியின் தோள் தொட்டு, பசும்புல்லின் திண்மையுடன், உலவும் காற்று. ஓங்கு செந்நெல் ஊடும் கயல் துள்ளியாடும் நீர்நிலை. வான் நிறைந்தவள். தன் பெயரைப் போலவே எண்ணிலடங்கா கண்கள் என வின்மீண்கள் கொண்டவள். செம்பருத்திப் பூவின் நாக்கென நீளும் வேத நெருப்பு .மழை கொணரும் மண்வாசம் .
இந்த எண்ணங்கள் தந்த மன எழுச்சி குகையினுள் ஒளிரும் இருள் போல் அவளை ஆட்கொண்டது.தான் என்றுமே அந்தப் பெயருடன் தான் இருந்திருப்பதாகப் பட்டது. ஆலிலையில் அவன் பாலனாக வந்த நேரம்… இல்லையில்லை.. அதற்கும் முன்னதாக.. அவள் மூன்று கண்களுடன் அவனுக்கு ப்ரணவம் சொல்கையில் விருபாக்ஷி. அவள் கனவின் விரிவெளி தோற்றத்திலும் அவள் அவளேதான்.
தன்னை மணம் செய்பவர் விஸ்வேஸ்வர் என்று பெயர் கொண்டவராக நிச்சயம் இருப்பார் என்றும், ஆனாலும் அவள் தன் பெயராலேயே அறியப்படுவாள் என்றும் அவள் நினைத்தாள். பேழையில் இருந்த வைரங்கள், தோடுகளாக மாற அவள் தன் சர இராகங்களை மறந்தாள். அவள் குழந்தைக்கு தன் பெயர் மறந்த ஈயின் கதையை சொல்லத் துவங்கினாள்.