எதிரி பிற பூதங்களை உயிர்ப்பித்திருந்தான் என்பது உண்மைதான். ஒவ்வொன்றும் அதனதன் வழியில் தீமை செய்தன. ஒவ்வொன்றும் ஏழு பாபங்களில் ஏதோ ஒன்றின் முழுவுருவமாய் இருந்தன, ஒவ்வொன்றும் வலுவானதாகவும் தோற்கடிக்கக் கடினமானதாகவும் இருந்தன. சில பூதங்கள் இன்னும் மண்ணில் சுற்றித் திரிந்தன. ஆனால் இந்த பூதத்தை கவனிக்கத்தக்கதாய்ச் செய்தது எது என்று பார்த்தால், ஏன், அதற்கு தனித்தன்மை கொண்ட கள்ளத்தனம் அளிப்பதாக எது இருந்தது என்று பார்த்தால், அது சக்தியற்றது என்பதுதான். உண்மையில் அது மெலியது. பிற பூதங்கள் தோற்றுப்போகக் காரணமாக இருந்த குறைகள், இந்த பூதத்துக்கு பத்து மடங்கு அதிகம் இருந்தன. இந்தப் புதிய பூதம் ஒழுக்கமில்லாதது, ஆனால் ஒழுக்கம் பூதங்களின் இயல்பல்ல. இந்த பூதம் அழகாகவும் இல்லை, புத்திசாலியாகவும் இல்லை, வீரமாகவும் இல்லை, நன்றாக உடை அணியவுமில்லை, வசீகரமாகவும் இல்லை, பேச்சாற்றல் கொண்டதாகவும் இல்லை- எப்போதும் பூதங்களுக்கு இதில் ஏதோ ஒரு சில குணங்களாவது இருப்பது வழக்கம். எதிரி இந்தப் புது பூதத்தை அனுப்பி வைக்கும்போது அது ஒரே ஒரு இடத்திலிருந்து சக்தியை திரட்டிக் கொள்ளும் வகையில் வடிவமைத்திருந்தான், பழங்காலத்தில் சாம்சனையும் அவனது சிகையையும் பற்றிச் சொன்னது போல்தான்- அந்த ஆதார சக்தி அறுபட்டால், நண்பகல் வெயிலில் வாடிப்போகும் துண்டிக்கப்பட்ட மலர்த்துளிர் போல் இந்த பூதமும் வாடிப் போகும். புது பூதத்தின் சக்திக்கான ஆதாரம் ஓசைதான். தனக்குத் தொடர்புடையச் சிறு ஓசை கேட்டாலும் அது இன்னும் கொஞ்சம் வலுவானதாக மாறும். அது நிறைய சப்தம் கேட்கும்போது, போற்றுதலோ தூற்றுதலோ, ஆனந்தம் மிகுந்து மேலும் வலுவானதாக வளர்ந்தது. ஒட்டுமொத்த அமைதியே அதைத் தோற்கடிக்க முடியும், தியானத்தின் அமைதியும் செயல்பாடுகளுமே அதைத் தோற்கடிக்கும்.
இதுபோல் வடிவமைக்கப்பட்ட பூதத்தை எதிரி ஓசைப்பேட்டைக்கு ஏவிற்று. “புதுப்பூதம்” என்ற அலறல் எழுந்தது, பூதம் இன்னும் கொஞ்சம் பலமடைந்தது. “பூதத்துக்கு இன்னும் பலம் சேர்ந்து விட்டது,” என்று கூட்டத்தினர் கத்தினார்கள், பூதம் இன்னும் வலுவானது. இவ்வாறாகத்தான் ஓசைப்பேட்டையின் புதுப்பூதம், எதிரி அதுவரை அனுப்பிவைத்த அத்தனை பூதங்களைவிட எளிய பூதம், அங்கிருந்தவர்கள் எல்லாரும் பேசும் ஒரே விஷயமானது. காதைச் செவிடாக்கும் கூச்சலாக அந்தச் சப்தம் வளர்ந்து விட்டது. ஓசைப்பேட்டையின் ஒவ்வொரு நாளிதழிலும் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் பூதத்தைப் பற்றிய கட்டுரைகள்தான். தொலைக்காட்சியில் நிருபர்கள் பூதத்தைப் பற்றிய சப்தம் எழுப்பியபடியே பெரும்பொழுது கழித்தனர். ஊரார் தங்களோடு கொண்டு சென்ற சிறு கருவிகளை பூதம்தான் ஆக்கிரமித்திருந்தது. பூதம் சிரித்தால், அதற்கொரு எதிர்வினையாய் ஓசை எழுந்தது. பூதம் முறைத்தால், அதற்கும் பதில் சத்தம். அது இருமும்போது இருமல் கரகோஷம், பூதம் எப்படி இருமுகிறது என்பது பற்றி விவாதங்கள். தனது எளிய உத்தி எவ்வளவு வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்பது எதிரியையே திகைக்கச் செய்தது. பூதம் சிரித்தது, முறைத்தது, இருமியது, மேலும் மேலும் ஓசை எழுப்பக்கூடிய விஷயங்களைப் பேசக் கற்றுக் கொண்டது. இன்னும் இன்னும் அது வளர்ந்தது.
“ஆனால் இது பலமே இல்லாதது,” என்று மக்கள் கத்தினார்கள். “இது அழகாக இல்லை, இதற்கு அறிவில்லை, இதற்கு வீரமில்லை, இது நன்றாக உடுப்பதில்லை, இதற்கு வசீகரமில்லை, இதற்கு பேச்சாற்றல் இல்லை. இது எப்படி மேலும் மேலும் பலசாலியாகி நம்மை பாதிக்கிறது?” ஓசையின் அளவு இம்மி குறைந்தாலும் பூதம் ஏதாவது செய்தது, எது வேண்டுமானாலும் செய்யும், உடனே சப்தம் மீண்டும் அதிகரிக்கும். விழித்திருக்கும் பொழுதெல்லாம் இந்த பூதத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதையே மக்கள் விரும்பினார்கள், தூக்கத்தில் பூதத்தைத் தவிர வேறு எந்த கனவும் இல்லை. அவ்வப்போது அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள், தாம் போடும் சத்தத்தில் பிறர் சேர்ந்துகொள்ளத் தவறுவது அவர்களை கோபம் கொள்ளச் செய்தது. வெறுமே யோசித்துக் கொண்டிருப்பது என்பது பூதத்தை ஏற்றுக் கொள்வதற்கு இணையானது என்று கருதப்பட்டது. கடந்த காலத்தில் இருந்த பிற பூதங்கள் போதுமான முழக்கத்தால் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. மேலும், இதுவோ ஓசைப்பேட்டை, ஓசை எழுப்பாமல் இருப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. உலகில் மிக உரத்த, மிகச் சிறந்த ஓசையின் தாயகம் அது, மிக அழகிய ஓசை, என்று எப்போதும் சொல்லப்பட்டது, உலக வரலாற்றில் மிகவும் மகத்தான ஓசை அதற்கேயுரியது. இவ்வாறாக ஓசைப்பேட்டையின் எல்லைகள் வரை ஓசைகள் வளர்ந்து எழுந்தன, லில்லிப்புட்டியர்களின் உலகில் கல்லிவர் வளர்ந்தது போல் புதுப்பூதமும் ராட்சத அளவுக்கு வளர்ந்தது- அவர்களிடமிருந்த கயிறுகளால் அதற்கெதிராய் எதுவும் செய்ய முடியவில்லை, அதன் வளர்ச்சிக்கும் எல்லைகள் இல்லாதது போலிருந்தது, இத்தனைக்கும் அப்போதுதான் அந்த ஆண்டின் எட்டாம் மாதம் பிறந்திருந்தது.
நன்றி – The New Inquiry