ஷாராபோவாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி செரினாவுக்கு எதிராக 2004 விம்பிள்டனில் கிடைத்தது. அந்தப் போட்டி எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. எப்போதுமே வில்லியம்ஸ் சகோதரிகளை எனக்குப் பிடித்ததில்லை. அவர்களுடைய தோற்றம், ஆக்ரோஷம், போட்டிகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய விதம், நிறைய காரணங்கள் இருக்கக்கூடும். அதனால், ஷாராபோவா ஜெயிக்க வேண்டுமென்று விரும்பினேன். நினைத்தது நடந்தபோது, ரொம்பவே மகிழ்ச்சி. ஷாராபோவா, செரினாவுக்கு எல்லா விதத்திலும் மாற்றாக இருந்தார் என்பது என் நினைப்பு.
எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் அதன் நுட்பங்களை நான் அறியேன். எனக்கு அதுவொரு காணும் பொழுதுபோக்கு. இரண்டு பேர் விளையாடுகிறார்கள் என்றால், யாராவது ஒருவரை சப்போர்ட் பண்ணுவேன். சட்டென்று ஒரு நொடியில் இது நடக்கும். இவர் அருமையான ப்ளேயர் என்றெல்லாம் யாரைப் பற்றியும் தெரியாது. ஆக, ஒவ்வொரு முறை வில்லியம்ஸ் சகோதரிகள் ஜெயிக்கும்போதும் கடுப்பாக இருக்கும். அதனால் ஷாராபோவா ஜெயிக்க விரும்பினேன்.
சமீப வருடங்களில் செரினா ஒரு விம்பிளிண்டனில் ஜெயித்து, பின் பரிசை தலையில் வைத்து கரகம் ஆடியதுகூட ரசிக்கக்கூடியதாக இல்லை. முதன் முறை நான் சந்தோஷப்பட்டதற்கும் 2015க்கும் பதினோரு வருடங்கள். ஹிங்கிஸ், ஹெனின், டேவர்போர்ட், கிம் கிளிஸ்டர்ஸ், அனா, மெளரிஸ்மோ, இப்படி நிறைய பேர் வந்து போயிருந்தாலும், செரினா இன்னமும் வெல்கிறார் என்பது ஆச்சரியம். அதுவும் முப்பது வயதுக்கு மேல் ஒரு விளையாட்டு வீரரின் ஆதிக்கம் எப்படி செல்லுபடியாகிறது? ஃபெடரர் ரொம்பவே திணறுகிறார். நாடலின் ஃபிட்னெஸ் அவருக்கு சாதகமாக இல்லை. ஆனால், செரீனா இன்னமும் இருக்கிறார்.
2004ல் நான் கல்லூரிக்குச் செல்லத் தொடங்கவில்லை. அப்போது என்னைப் பற்றிய என் எண்ணம் ரொம்பவே வண்ணமயமாக இருந்தது. செரினாவையும் அவருடைய ஆக்ரோஷத்தையும் ஏதோ பண்படாத முரட்டுத்தனமாகத்தான் என்னால் எடுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், 2015ல் அப்படியில்லை. செரினாவின் உழைப்பும் மீண்டும் மீண்டும் வெளிப்படும் ஆக்ரோஷமும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றன. 2004ல் என்னைப்பற்றி எனக்கிருந்த நம்பிக்கை தொடரவில்லை. பத்து வருடங்களில் நான் தேங்கிவிட்டதாகவே நினைக்கிறேன்.
இப்போது செரினா எனக்கு அணுக்கமாகத் தெரிகிறார். என்னுடைய பல நண்பர்களைப் போல, சரளமான ஆங்கிலமும் அடிப்படையான ஒரு லாகவமும் எனக்கு கைவரவில்லை. நான் எத்தனை ரூபாய் கொடுத்து துணி வாங்கினாலும் அதை அடுத்தவர் போல உடுத்த முடியாது. எத்தனை கற்றுக்கொண்டாலும், பிறரைப் போல் என்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. இது என் எண்ணமாக மட்டும் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. இன்றைக்கு புதிதாக வந்திருக்கும் வீரர்களுக்கு இடையிலேயும் செரினா தனித்தே தெரிகிறார். நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் திருப்பிப் போடும் ஒருவர் செரினாவுக்குப் பிறகு வரவில்லை.
After the women’s final, the BBC played a montage of Williams reading Maya Angelou’s poem “from a past that’s rooted in pain / I rise . . .” She never asked for this, not for the pain or hate or chance to redeem history. But, at this Wimbledon, she has owned not only her greatness but her role as a transcendent figure in society. Still, she rises. She generates her own context. I thought of that at the end of her match, as she and Kerber lingered at the net in a long, tight hug. The picture—an African-American and a blond German of Polish descent, their arms intertwined—stayed with me. There was nothing political meant by that embrace, of course. It was a gesture of admiration, affection, and respect. It was no more a political act than an ace. And yet there was something powerful to it. We sometimes project our problems onto sports. But sports can also be, in some small but real ways, where we start to work them out.
2016ல் செரினா விம்பிள்டன் வென்றபிறகு வந்த கட்டுரையின் கடைசி பத்தி இது. அவர் அளவிற்கு கஷ்டங்களையோ சாதனைகளையோ நான் கண்டதில்லை. இப்போது அவர் எனக்கு ஒரு தேவதையாகத் தெரிகிறார். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எனக்கும்தான்.
தொடர்புடையவை
1. Kerry Howley, The Unretiring serena Williams, http://nymag.com/thecut/2015/08/serena-williams-still-has-tennis-history-to-make.html
2. Louisa Thomas, Serena Williams, Andy Murray, and a Political Wimbledon, http://www.newyorker.com/news/sporting-scene/serena-williams-andy-murray-and-a-political-wimbledon
ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா