அபி ந ஜாவோ சோட்கர்

எஸ்.சுரேஷ்

abhi na

அபி ந ஜாவோ சோட்கர் யெஹ் தில் அபி பரா நஹி” என்று நான் பாட, “நஹி நஹி நஹி நஹி” என்று பதிலுக்கு ஃபரீன் பாட பாடல் முடிந்தது. கைதட்டல் பலமாக இருந்தது. எங்கள் இருவர் முகத்திலும் புன்னகை. மேடையை விட்டு கீழே இறங்கிய இருவரையும் பலர் கைகுலுக்கி “பஹுத் அச்சா காயே தோனோன்” என்றனர். அப்பாவும் அம்மாவும் வெகு மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஃபரீன்னின் அப்பா என்னை வந்து கட்டிக்கொண்டார். அவள் அம்மாவின் முகத்தில் மட்டும் மகிழ்ச்சி இல்லை.

“நம்ப பேட்டி இது போல பாட்டு பாடக்கூடாது. அதுவும் கணேஷ் சதுர்த்தில பாடுறது ரொம்ப தப்பு,” என்று நாங்கள் பாடப்போகும் முன்பு கூறியிருந்தாள். நிகழ்ச்சி முடிந்த பின்பு எங்கள் வீட்டில் ஃபரீன் குடும்பத்திற்கு தாவத் வைத்திருந்தோம்.

“உங்க பொண்ணு ரொம்ப நல்லா பாடிச்சு. பத்தாவது படிக்கும்போதே இவ்வளவு நல்ல குரல். இவ நம்ப ஹைதராபாத்த ஒரு கலக்கு கலக்கப்போறா” என்று பாப்பா சொல்லிவிட்டுச் சிரித்தார்.

மரியம் பீவி, ஃபரீனின் அம்மா, “எனக்கு பெண்கள் மேடை ஏறி பாடறது பிடிக்காது. பத்தாவது முடிஞ்சிச்சுன்னா ஷாதி பண்ணி வச்சா சரியா இருக்கும்” என்றாள்.

“அம்மி ஜான். மெரெகு ஷாதி நக்கோ. பாருங்க பாப்பா” என்று ஃபரீன் சிணுங்கினாள்.

“அர்ரே. இப்போ ஷாதிக்கு என்ன ஜல்தி. நம்ப பேட்டி முதல்ல படிச்சி டிகிரி வாங்கட்டும். நம்ப எப்போவும் போடற சண்டைதானே. இவங்க வீட்லயும் எதுக்கு,” என்று அந்த பேச்சை முடித்தார் மக்பூல் பாய்.

பிறகு என் பக்கம் திரும்பி, “ரொம்ப நல்லா பாடின பேட்டா. அப்படியே ரஃபி சாப் மாதிரி இருக்கு உன் குரல். நீங்க ரெண்டு பேரும் ஜோடியா பாடினா அருமையா இருக்கு” என்று மெச்சிக்கொண்டார்.

அந்த நிமிடம்தான் என் காதல் துளிர் விட்டது.

தாவத் முடிந்த பிறகு, அம்மி ஜான் என்னை பார்த்து, “ஷௌகத், நீயும் ஃபரீனும் ஒரு பாட்டு பாடுங்க” என்று சொன்னாள். பிறகு மரியம் பீபியிடம், “நம்ப வீட்ல பாடலாம் இல்ல?” என்று கேட்டாள்

“மஜாக் மத் கரோ” என்று சொல்லிவிட்டு மரியம் பீபி சிரித்தாள். ஃபரீன்னை பார்த்து, “காவோ” என்றாள்.

நானும் ஃபரீனும் “காஷ்மீர் கி கலி” என்ற படத்தில் வரும், “தீவானா ஹுவா பாதல்” என்ற பாட்டைப் பாடினோம். இன்னும் சில பாடல்கள் பாடியபிறகு அவர்கள் எல்லோரும் வீட்டிற்கு கிளம்பினார்கள். தூங்கும்பொழுது நான் ஃபரீனை நினைத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் ரூப் வீட்டிற்கு வந்திருந்தான். அவர்கள் நடத்தும் இசைக்குழுவில் நானும் ஃபரீனும் பாடவேண்டும் என்று பாப்பாவிடம் கேட்டான். எங்கள் வீட்டில் ஒத்துக்கொண்டார்கள். மரியம் பீபி முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் மக்பூல் பாய், சரி என்று சொன்னதால் ஃபரீன் பாட வந்தாள்.

இதற்கு முன் நாங்கள் எந்த வாத்தியமும் இல்லாமல் பாடியே பழகியிருந்தோம். வாத்தியங்களுடன் எங்கள் குரல்கள் ஒலித்தபொழுது எங்கள் பாட்டு இன்னும் அருமையாக இருந்தது போல் எங்களுக்கு தோன்றியது. நரேஷ் என்பவன் கிஷோர் குமார் குரலில் அருமையாக பாடுவான். அவன் ஃபரீன்னுடன் பாடும்போது எனக்கு பொறாமையாக இருக்கும். எங்கு ஃபரீன்னுக்கு அவன் மேல் காதல் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கும். அவனுக்கு வேறொரு பெண் மேல் காதல் இருக்கிறது என்று ரூப் எனக்கு ரகசியமாக சொன்ன பிறகு பயம் குறைந்ததே தவிர முழுவதாக விலகவில்லை.

ஃபரீன்னைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது என் கடமை என்று நானே நினைத்துக் கொண்டேன். ரூப் வீடு அடுத்த தெருவில்தான் இருந்தது. என்றாலும், நான் ஃபரீன் வீட்டுக்குச் சென்று அவள் தயாராகும் வரை உட்கார்ந்திருந்து அவளை அழைத்துச் செல்வேன். பல முறை அவள், “தூ ஜா. மை ஆத்தி ஹூன்” என்று சொன்னாலும் கேட்காமல் இருந்து அவளை அழைத்துக்கொண்டுதான் செல்வேன். அவள் அம்மாவிற்கு இது பிடித்திருந்தது.

நாங்கள் ரூப் குழுவில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். ஃபரீன் மேல் எனக்கு காதல் அதிகமாகிக்கொண்டே போனது. அப்பொழுதுதான் ‘ஆராதனா’ படம் வெளிவந்திருந்தது. அதில் கிஷோர் குமார் பாடல்களை நரேஷ் பாட, நான் ரபியின் “பாஹோன் மே பஹார் ஹய்” என்னும் பாடலை ஃபரீன்னுடன் பாடினேன். அதில் கடைசியில், “தும்கோ முஜ்சே ப்யார் ஹய்” என்று நான் கேட்க, “ஹான் பாபா ஹய்“என்று அவள் சொல்ல, நான் நிஜமாக அவள் என்னை காதலிப்பதாக நினைத்துக்கொண்டு அன்று இரவு முழுவதும் தூக்கமில்லை.

நான் வெஸ்லி காலேஜில் பி.காம். படித்துக்கொண்டிருந்தேன். ஃபரீன் +2 முடித்துவிட்டு செயின்ட் பிரான்சிஸ் காலேஜில் பி.ஏ. சேர்ந்தாள். இப்பொழுதும் நான்தான் அவளுக்குக் காவலன் என்பது போல், மாலையில் காலேஜ் முடிந்தபிறகு மனோகர் தியேட்டர் வாசலில் இறங்கி அவள் காலேஜ் முன் சென்று நிற்பேன். சில நாட்கள் அவளுடன் அவள் தோழி வருவாள். நான் அவர்கள் பின்னால் நடப்பேன். அவள் தோழி சிகந்தரபாத் ஸ்டேஷனில் பஸ் ஏறிவிடுவாள். நான் பிறகு ஃபரீன்னுடன் அவள் வீட்டு வரையில் நடப்பேன். அப்படி தினம் அவளுக்காகக் காத்து நின்று அவளுடன் நடந்து வந்தாலும் அவளுக்கு என் மேல் ஆசை இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நானும் பல முறை அவளிடம் என் காதலைச் சொல்லவேண்டும் என்று நினைப்பேன், ஆனால் எனக்கு தைரியம் வரவில்லை.

ஒஸ்மானியா ஆர்ட்ஸ் காலேஜில் கல்சுரல் பெஸ்ட் நடைப்பெற்றது. அதற்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம். ஃபரீன் “ஆப் கே நஜரோன்னே நெ சம்ஜ்ஹா ப்யார் கே காபில் முஜே” என்ற பாட்டை பாடினாள். அவள் என்னைப் பார்த்துதான் பாடினாள் என்று எனக்கு ஒரு பிரமை இருந்தது. பாடி முடித்தவுடன் பலத்த கைத்தட்டல். பல மாணவர்கள் வந்து அவளை வாழ்த்தி கைகுலுக்கினார்கள். அவள் அம்மா சொல்வது சரிதானோ, என்ற எண்ணம் என் மனதிற்குள் ஒரு முறை எட்டி பார்த்துவிட்டு சென்றது. நான் “தேரே மேரே சப்னே” பாடலை அவளைப் பார்த்து பாடினேன். அவள் முகத்தில் மகிழ்ச்சி இருந்தது. ஆனால் அது அவள் பாட்டுக்கு கிடைத்த வரவேற்பினாலா இல்லை நான் பாடுவதைக் கேட்டா என்று என்னால் கணிக்க முடியவில்லை.

ஒரு நாள் மாலை அவளுக்கு காலேஜில் ஸ்பெஷல் கிளாஸ் இருந்ததால் அவள் காலேஜை விட்டுக் கிளம்ப ஆறு மணியளவு ஆகிவிட்டது. மரியம் பீபி, பத்திரமாக அழைத்துவா பேட்டா, என்று என்னிடம் சொல்லியிருந்தாள். நாங்கள் இருவரும் ஸ்டேஷன் பக்கத்தில் தெரு வழியாக அந்தி வேளையில் போயகுடாவிற்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். அவளுக்கு அந்தே நேரத்தில் தனியாக வருவது பற்றி பயம் இருந்ததாலோ என்னவோ அவ்வப்போது எங்கள் கைகள் உரசிக்கொண்டிருந்தன. ரயில்வே போலிஸ் ஸ்டேஷன் தாண்டியவுடன், நான் அவளோடு கைகோர்த்துக் கொள்ளலாம், என்று அவள் பக்கத்தில் என் கையைக் கொண்டு போனேன். ஆனால் என் தைரியம் என்னைக் கைவிட்டது. நான் விலகிக்கொண்டேன். அடுத்த நாள் நாங்கள் நடக்கும்பொழுது அவளாகவே என் விரல்களுடன் அவள் விரல்களை கோர்த்தாள். ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு சிறிது தூரம் நடந்தோம். அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. அதற்குப் பிறகு தினமும் இப்படி நடப்பது எங்களுக்கு பழக்கமாகிவிட்டது. ஒரு நாள் இப்படி நடக்கும் பொழுது, “சாத்தி ஹாத் பாடான சாத்தி ரே” என்ற பாடலை பாட ஃபரீன் மெதுவாக சிரித்தாள்.

ஃபரீன் பி.ஏ. இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஒரு நாள் மக்பூல் பாய் திடீரென்று மாரடைப்பில் மரணம் அடைந்தார். நான் பதறிக்கொண்டு ஃபரீன் வீட்டுக்கு ஓடினேன். அம்மி ஜானும் பாப்பாவும் முன்பே வந்திருந்தார்கள். ஃபரீன் என்னை பார்த்தவுடன் இறுக்கமாக அணைத்துக்கொண்டு கதறி அழுதாள். இனி இவளை இந்த உலகில் காக்கப் போவது நான்தான் என்று உறுதியாக நம்பினேன். இனி இவளுக்கு இது போன்ற துன்பம் வராமல் பார்த்துக் கொள்வேன், என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

பாப்பாவும் நானும் தான் அடிக்கடி அவர்கள் வீட்டுக்குச் சென்று என்ன வேண்டுமோ அதைச் செய்து கொடுத்துக்கொண்டிருந்தோம். ஒரு மாதம் கழித்து மரியம் பீபியின் உறவுக்காரர்கள் அவர் வீட்டை ஆக்கிரமித்தனர். காலேஜிலிருந்து வீடு திரும்பும்போது ஒரு நாள் தன்னை காலேஜிலிருந்து நிறுத்திவிட போவதாக அம்மா சொன்னாள் என்று ஃபரீன் சொன்னாள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு ஃபரீன் காலேஜுக்கு வருவதை நிறுத்திவிட்டாள்.

நான் அவள் வீட்டிற்கு சென்றேன். வீட்டின் மொஹோல் வேறு மாதிரி இருந்தது. மரியம் பீபியின் பல உறவுக்காரர்கள் ஹாலில் இருந்தார்கள். மக்பூல் பாய் இருந்தவரையில் அவர் வீடு கலகலப்பாக இருக்கும். யார் வந்தாலும் உரத்த குரலில் வரவேற்பார். மரியம் பீபி முகத்திலும் மகிழ்ச்சி தெரியும். இன்று அது இருக்கவில்லை. ஃபரீன்னை உள்ளே போகச் சொன்னாள். ஃபரீன் ஏன் காலேஜுக்கு வரவில்லை, என்று நான் கேட்டதற்கு “அவள் இனிமேல் வரமாட்டாள்” என்று ஃபரீன்னின் மாமா ஒருவர் பதில் சொன்னார். நான் கிளம்பும்பொழுது இன்னொரு மாமா என் பக்கத்தில் வந்து, “பேட்டா, நீ அடிக்கடி இங்க வரத நிறுத்தணும். அப்பா இல்லாத பொண்ணு இருக்கற இடம். ஆஜ் கல் ஜமானா பஹுத் புரா ஹய்,” என்றார்.

நான் அவள் வீட்டுக்குப் போவதை நிறுத்திவிட்டாலும் அவள் வீட்டு வழியாகப் போவதை நிறுத்தவில்லை. அவள் கண்ணில் படுவாளோ என்ற நப்பாசைதான். அதேபோல் ரேஷன் கடைக்கும், காலையில் பால் வாங்கவும் சென்றேன். அவள் தென்பட்டால் அவளுடம் பேசலாம், பேசி அவளுக்கு தைரியம் கொடுக்கலாம் என்றெல்லாம் கனவு கண்டேன். ஆனால் அவள் கண்ணிலேயே படவில்லை.

ஒரு நாள் நான் இரவு வீட்டுக்குள் நுழைந்தபோது பாப்பாவும் அம்மி ஜானும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“…. நான் நினைக்கிறேன். மக்பூல் பாய் நினைச்சது என்ன ஆகறது?”

“பர் ஹம் கியா கரே. இப்போ எல்லாம் மிரியமோட உறவுக்காரங்க கைல இருக்கு. நம்ப வார்த்தைய கேக்க மாட்டாங்க. நான் மிரியம பாக்கப் போனேன். மூஞ்சி குடுத்தே பேசல. அபன் கய கர் சக்தே” என்றால் அம்மி ஜான்.

“ஆனாலும் படிப்ப நிறுத்திவிட்டு நிக்காஹ் பண்றது சரியில்ல. ஃபரீன் டிகிரி பாஸ் பண்ணனும்னு மக்பூல் பாய் எவ்வளவு ஆசைப்பட்டார்.” என்றார் பாப்பா

முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரிந்தவுடன் எனக்கு வேர்த்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை.

“யாரு தாமாத்?”

“அவங்க உறவுக்கார பையனாம். மகபூப்நகர்ல இருக்காங்களாம்”

“அவன் படிச்சிருக்கானா?”

“அச்சா பூச்சே” என்றாள் அம்மி ஜான்.

“கிஸ்மத்” என்று கூறிவிட்டு தலையை ஆட்டிக்கொண்டு அங்கிருந்து பாப்பா நகர்ந்தார்.

எனக்கு அம்மியிடமும் பாப்பவிடமும் நான் ஃபரீன்னை கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லவேண்டும் போல் இருந்தது. ஆனால் சொல்லமுடியவில்லை. அடுத்த நாள் அவள் வீட்டுப் பக்கம் சென்றேன். வீடு பூட்டியிருந்தது. ஃபரீன் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாள் என்று நான் உறுதியாக நம்பினேன்.

நல்ல வேளையாக நிகாஹ் என் பரீட்சைப் பொழுது நிகழ்ந்தது. நான் பரீட்சையை காரணம் வைத்து நிகாஹ்வுக்கு செல்லவில்லை. ஃபரீன் சோகமாக இருந்ததாக தனக்கு தோன்றியது என்று அம்மி சொன்னாள். எனக்கு அழுகை வரும் போல் இருந்தது.

நிகாஹ்வுக்கு பிறகு ஃபரீன் மகபூப்நகர் சென்றுவிட்டாள். மரியம் பீபி இங்கு தனியாக இருந்தாள். என்னைப் பார்க்கும்பொழுது சிரித்து, “வீட்டுக்கு வா பேட்டா” என்று அழைத்தாள். ஆனால் எனக்கு அங்கு செல்லப் பிடிக்கவில்லை.

ஆறு மாதம் கழித்து ஒரு நாள் ஃபரீன் வந்திருப்பதாக அம்மி சொன்னாள். என்ன கஷ்டத்தில் இருக்கிறாளோ பாவம், படிக்காத கணவன் அவளை எப்படி பார்த்துக்கொள்கிறானோ, அவள் இன்னும் பாட்டு பாடுகிறாளா, என்று இப்படி பல கேள்விகள் எழுந்தாலும் அவள் என்னை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டிருகிறாளா என்ற கேள்வி மட்டும் எழவில்லை. என்னை மறந்து விட்டு இன்னொருவனுடன் வாழ்வது அவளுக்கு நரகமாகத்தான் இருக்கும். அது முடியாத ஒன்றும்கூட என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

நான் தெரு முனையில் சென்று நின்றேன். பெட்டிக் கடையில் ஏதோ வாங்குவது போல் அவள் வீட்டைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒரு முரட்டு ஆசாமி ஸ்கூட்டரில் வந்து ஃபரீன் வீட்டுக்கு முன் நின்றான். “அந்த பொண்ணு இந்த முரடனதான் கல்யாணம் கட்டிருக்கு” என்று கடைக்காரன் அவன் மனைவியிடம் சொல்வதை கேட்டேன். “ஐயோ இவனா?” என்றாள் அவள் மனைவி.

“ஜல்தி கரோ” என்று அவன் கத்துவது என் காதுக்கு கேட்டது. “இதோ வரேன்” என்று சொல்லிக்கொண்டே ஃபரீன் வெளியே வந்தாள். அவள் எடை சற்று கூடி இருந்தது. அவள் ஸ்கூட்டர் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தாள். ஸ்கூட்டரில் இருந்தவன் கழுத்தை திருப்பி ஃபரீன்னிடம் ஏதோ சொன்னான். அவள் உரக்கச் சிரித்துவிட்டு அவன் முதுகில் இரண்டு முறை செல்லமாக குத்தினாள். அவன் கியர் போட்டு ஆக்சிலேட்டர் கொடுக்க ஸ்கூட்டர் பறந்து மறைந்தது.

oOo

குறிப்பு: சுபா தேசிகன் அவர்கள் சுட்டிக்காட்டியதையடுத்து ‘மிரியம் பீவி’ என்று எழுதப்பட்டிருந்தது ‘மரியம் பீவி’ என்று 15.8.2016  இரவு திருத்தப்பட்டது

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.