4. மோகனக் கல்யாணி- அன்னவாசல் அழகு
சிலவற்றிற்கு ஒரு புனிதம் உண்டு. அவை மாசுபடாது தூசு படாது தெய்வீகத்தின் மறு உருவாய் வாழ்வில் காணக் கிடைக்கும்.
அம்மா அன்பானவள், காருண்யம் மிக்கவள், புனிதமானவள், போற்றத்தகுந்தவள். தாய் பிறன் கைபட சகிப்பவனாகி நாயென வாழ்பவன் நமரில் இங்கில்லை.
ஆனால், தி. ஜா வின் “அம்மா வந்தாள்” -அகிலாண்டமாக- அனைத்து அண்டமாக எழிலும், கம்பீரமும் கொண்டவள். விளையும் நிலம் இவள். செழுமையின் இனம் கொண்டு நிலம் கூடிக் களிப்பவள். முழுமையாக தன் நாயகனை அடையவிட்டு அந்த அனுபவத்துடன் அவனை விலகச் செய்பவள். அவள் தரிசு நிலமல்ல. சிவசுவின் விளைநிலம். அன்பும் எளிமையும் அறிவும் மட்டும் அவளை அடையப் போதுமானதில்லை. அதற்கு மேலும் ஒன்று – அவளே ஆளுமை, அதைச் சீண்டும் ஆளுமை, செயல் ஊக்கம் கொண்ட ஆண்மை; அதன் மூலம் பெற்ற பிள்ளைகள் எல்லாமும் ஒரு குடும்பத்தின் அங்கமாக.
மீள இயலாத கவர்ச்சி அவ்வழியில் அவளுக்கு இருக்கிறது. ஒரு அற்புத அனுபவம் நல்வழியில் கிடைத்தால் அது கொண்டாடப்படுகிறது. அது உலகோர் ஏற்றுக் கொள்ளும் பாதை இல்லையென்றால், சமுதாய நியதிகளை மீறியது என்றால் மனிதர்கள் என்ன செய்வார்கள்?இச்சையும் உடலும் தன் இரையைத் தேடித் தேடி உண்கையில் மனம் ஒருமிகத் தூய்மையான ஒன்றை தனக்காக ஏற்படுத்திக் கொண்டு விடுகிறது. அழுக்கை விழுங்கும் தீ… எந்த நேரத்திலும் தூய்மையான விளக்கு.. இருளை விரட்டும் தீ.. காமங்கள் அண்டாத தீ.. நீருள் இருக்கும் நெருப்பு போன்ற தீ.
காமாக்னியை அழிக்கும் வேதத்தீ. அம்மாவின் அன்பிற்குரிய அப்பு வேதம் கற்பவனாகி அவளுடைய பரிகாரமாக விளங்க அம்மா விரும்புகிறாள். முகப் பொலிவும், உடல் வலிமையும் மிகத் தூயமனமும் ஒருங்கே அவனிடம் உள்ளன. அவன் இந்துவின் மனக் கணவன். அவன் உணராமலேயே இந்து அவனைக் காதலிக்கிறாள். பரசுவுடன் அவளுக்குத் திருமணம் ஆகி 3 வருடங்கள் குடித்தனம் நடத்தியும் அவள் உடலாலும் மனதாலுமாக இருவாழ்க்கை வாழ்கிறாள். அந்த நலமற்ற கணவனையும் இழந்து ஊர் திரும்பும் இந்து ஒரு தருணத்தில் அப்புவிடம் மனம் திறக்கும் இடம் நயம் மிக்கது. பெண் தானே தன்னைத் தரும்போதும்கூட விலகி ஓடும் அப்பு வேள்வித்தீ என மிளிர்கிறான். அம்மாவைப் பற்றி இந்து சொல்கையில் உள்ளே கொதிக்கிறான். தி.ஜா படைக்கும் காட்சிகள் அந்த எண்ண ஓட்டத்திற்கும் நிகழ்வுகளுக்கும் அவற்றின் மறைமுகத் தன்மைகளுக்கும் எத்தனை பொருத்தம்! ”இந்து மாதிரி ஒரு பெண்ணை விட்டுவிட்டு நீ சாதிக்கப் போவது என்ன?” என்று ஒரு வேலையாள் மூலம் கேட்கிறார் தி ஜா மறைமுகமாக. இதை பின்னர் நினைக்கிறான் அப்பு.
அம்மாவின் மறுபுறம் தெரிகையில் அப்பு அம்மாவைவிட அப்பாவை வெறுக்கிறான். குமையும் கையாலாகாத சினம். தனிமையில் மட்டும் கசடு கொப்பளித்து மேலே வருகிறது. அந்திக் கருக்கலில் அலைகளின் ஓலத்திற்கிடையே அப்புவும் அவன் தந்தையும் பேசுவது நாகரிகத்தின் உச்சம்.
அப்புவின் மேல் கறையே படக்கூடாதென நினைக்கும் அம்மா, அவன் அப்பா பார்த்து வைத்துள்ள பெண்ணின் இறந்து போன தாயின் நடத்தை சரியாக இல்லை என மறுத்துவிடுகிறாள். அந்த அளவிற்கு அவன் புனிதத்தில் அவளூக்கு விருப்பம். நீள்விழிகள் கொண்ட அந்த பெண்ணை வியந்த போதும் அம்மாவை அப்பு தட்டவில்லை. தன் உறவினர் அனைவரும் அறிந்த அம்மாவின் மறுபக்கம் அப்புவைப் பந்தாடுகிறது. தன் புனிதத்தினால் தான் தனிமைப்பட்டுப் போனதாக எண்ண வைக்கிறது.
தான் படித்த வேதபாடசாலைக்குத் திரும்பும் அப்பு இந்துவின் அன்பில் இணைகிறான். அவனைத் தேடி வரும் அம்மா அவன் அம்மா பிள்ளையாகி விட்டான் என்றும், இனி தான் தன் கணவனை வதைப்பது சரியல்ல என்றும், காசிக்குப் போய் கர்மம் தொலைக்கப்போவதாகவும் சொல்கிறாள்.
அம்மா மோகினி. ஒரு அரசியின் ஆளுமை, நடை, பேச்சு, செயல் அத்துடன் தன் வசப்படுத்தும் ஒரு திறன். அந்த கம்பீரத்தின் முன்னே அனைத்தும் தோற்றுவிடுகின்றன. பூரணம், பூரணத்தில் சம்பூர்ணம்… அவளின் இசை.அன்னிய ஸ்வரம் வந்தும் கணவன் வெறுக்காத மோகனம். சொந்தங்கள் வாய் மூடி மௌனித்துக் கிடக்கின்றன . அவளின் ஆளுமை அவள் குறையைக் காணவொட்டாமல் அடிக்கிறது. ஒரு உரிமையுடனே சிவசுவிடம் அவள் நடந்து கொள்கிறாள். இரு குதிரைகளில் சவாரி செய்வது போல் தோன்றினாலும் அரசப் பட்டயமிட்டுச் செல்லும் குதிரை நினைவை அசை போடுகிறது. அரசியின்போகத்தில் மற்றொன்று திளைக்கிறது.
ச ரி க ப த ச ச த ப க ரி ச
ம இல்லை நி இல்லை. ஆனால் என்ன ஒரு அழகு இதில்! மோகன இராமா, கோபிகா மனோகரம் இவையெல்லாம் மட்டும் மோகனமில்லை. அகிலாண்டமும்தான். ஆரோகணத்தில் தொடங்கி, அவரோகணத்தில் பயணித்து அவள் பின்னர் அவரோகணத்தில் கரைந்து கரைந்து ஆரோகிக்கிறாள். அப்புவைப் பெற்றதாலேயே, அவனை வேதம் கற்க வைத்ததாலேயே, புனிதத்தின் அரவணைப்பில் தன்னை புடம் போட நினைக்கிறாள். கூர்க்கில் சிறு வடிவம் கொண்டு எழுந்து கன்னித் தமிழகத்தில் பெருக்கெடுத்தோடும் காவிரி. ஆம்… அவள் விரிந்தவள், பரந்தவள், புனித நீராட்டுபவள், புண்ணிய நதிகளின் பாவம் போக்குபவள். தன் வேள்வியாய் தன்னையும் தருபவள். அவள் அனைவரும் இரசிக்கும் மோகனம், ஆனால் அனைவராலும் பாட முடியா “மருங்கு வண்டு கிடந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்து கருங்கயற்கண் விழித்து ஒல்கி” நடக்கும் நதி அவள்.
ஜனனி
இவள் யார்? நம் புராணங்களில் அன்னை மனித வயிற்றில் பிறப்பதில்லை. அவள் கண்டெடுக்கப்படுபவள். கரு வாசம் அவளுக்கு இல்லை. இந்த விதியை சிறிது மாற்றி, குழந்தை வெளிப்படுகையில் அன்னை அதில் புகுந்து கொள்வதாக லா ச ரா எழுதுகிறார். பிறந்ததுமே அனாதை ஆகிறாள். ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு அவர் மனைவியால் ஏற்றுக் கொள்ளமுடியாமல் “ஜனனி” ஆகிறாள். அவள் உலகின் தாய். ஆனால் அவள் விரும்பிய தாய்ப்பால் அவளுக்குக் கிடைக்கவில்லை. அவள் கழுத்தில் கடயம் போடப்பட்ட தாய்ப் பசு. ஒரு கல்யாணமும் நடக்கிறது அவளுக்கு. தன் உடல் மாறுதல்கள், அவை கவரும் கண்கள், உள்ளே படரும் இனம் தெரியா ஏக்கம். தன்னுள் தன்னை ஒடுங்கச் செய்து விடுகிறது. ”நீ நானாக இருப்பினும், நான் நானாகத்தான் இருக்க முடியும். ஆனால், நீ –மறுபடியும் ‘நா’னாகிக் கொண்டிருக்கிறாய். ‘உன்னின்’ மீட்சி” லா ச ராவைத் தவிர யாரால் இதை எழுத முடியும்?
இக்கதையில் ஜனனி தன்னை “நித்திய சுமங்கலி” என்று சொல்வாள். பரம்பொருளிலிருந்து பிரிந்த உயிர் அவனை மறந்து, அல்லல்பட்டு, தன்னைத்தானே உணர்ந்து அவனைச் சேரும் ஒரு செய்தி கதையில் உள்ளது. உடல் கொள்ளும் அவஸ்தைகள், உயிர் உருகும் சம்பவங்கள் எல்லோருக்கும் நேர்வதே. அதை அன்னை தானே அனுபவிக்கிறாள். அவள் கல்யாணி- மங்களங்கள் நிறைந்தவள். மாயா வினோதினி- “மானிடர்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன்” என்றாள் ஆண்டாள்.
அன்னை ஒரு பட்டாளத்தானை மணமும் செய்கிறாள். சாந்தி மூகூர்த்தத்தின்போது அவனை வதைத்தும் விடுகிறாள். அவன் இறந்த பின்னரும் அவள் பூவும், மஞ்சளும், தாலியும் அவளுடனே இருக்கிறது. அவள் கல்யாணிதான். பல ஜனன இராகங்கள் அவளுக்கு உண்டு. ஆனால் அவளுக்கு அமுது ஊட்ட யாருண்டு? கல்யாணிகளுக்கும் ஆசை உண்டோ? புனிதமான அம்மா, தன் உடல் அமைப்பினாலேயே பால் நினைந்து ஊட்டும் அன்பு, அதில் அடங்கியுள்ள அந்தக் கடமை, அன்னையைக் கடயம் போட்ட பசுவாக காட்டத் துடித்தாலும், அவள் மீறுகிறாள். ஆணின் மீது வரும் கட்டற்ற சினத்தின் வெளிப்பாடு அது. ஆனாலும் அவள் பரம கல்யாணி. யார் அறிவார் இதை?அவளை பீடத்தில் ஏற்றி நீ அன்னை என்று சொல்லிவிட்டான் ஆண். அவள் தூய்மைக்காக கர்ப்ப வாசம் அவளிக்கில்லை என்றும் சொல்லிவிட்டான். ஆனால், தான் மட்டும் “மன்னு புகழ் கோசலை தன் மணிவயிறு வாய்”க்கிறான். ஜனனியாகப் பிறப்பெடுக்க அவள் ஏன் தீர்மானிக்கிறாள்?தன்னைக் கொஞ்சிக் கொண்டாட தனக்கும் அமுதூட்ட ஒரு தாய் வேண்டுகிறாள். அந்த அனுபவம் அவளுக்குக் கிடைக்கவேயில்லை.முனைப்பால் கூட முலைப்பால் அருந்தாத கல்யாணி.
அகிலாண்டம், ஜனனி இருவருமே மக்கள் அறியும் இனிய மோகனமும், கல்யாணியும். அகிலாவை நாம் சிறிது நேரம் பெண்ணாகவும் பார்க்க முயல்கிறோம்; அவள் மோகம் நமக்குப் புரிகிறது. அவள் தேடும் புனிதம் அவளுக்குக் கிடைத்தால் நமக்கு மகிழ்ச்சி, இல்லையெனில் வருத்தமில்லை. அந்தக் கவர்ச்சியும், குழைவும், கம்பீரமும், இயல்பும் ஆளுமையும் நாம் பார்க்கும் பெண்களிடத்தில் ஒரு சேரக் கிடைத்தால் நாம் கொள்ளும் பரவசம்! அங்கே சமுதாய நியதிகள் சற்றுக் கண்ணயரும்.
ஜனனி –கல்யாணி- “நிதி சால சுகமா”வும் கல்யாணி தான் “வாசுதேவயனியும்” கல்யாணிதான். அவள் ஜனக இராகமாகத்தான் இருக்க முடியும். ஜன்யமாக முடியுமா?அவள் நிறைவானவள். முதல்“ப்ரதி மத்ய “ இராகம். ஏழு ஸ்வரமும் கொண்டவள். ஆனாலும் ஒரு ஏக்கம் உண்டு.
மோகனம் ஜன்ய இராகம்- ஒளடத இராகம். தன் மயக்கில் நம்மையும் கடத்துபவள்.
ஜனனியின் ஒரு ஆவல், அகிலாண்டத்தின் ஒரு ஆவல்
அவள் ஆவலை அறிவார் இல்லை. இவளது வெளித் தேடலில் மன்னிப்பு இல்லை. ஆனால், இருவரின் உள்ளார்ந்த சினம் மோகனகல்யாணி.
“என் தனிமையின் உருவற்றமையாலே, நான் காலம், இடம், உரு நியமங்கள் கடந்த மெய். சப்தத்தின் சத்யம். நான் சொல். சொல்லின் பொருள். பொருளின் செயல். மூன்றும் ஒன்றாய் இயங்கும் திரிசூலம்”
கல்யாணி- ச ரி க ம ப த நி ச, ச நி த ப ம க ரி ச
மோகனம்- ச ரி க ப த ச , ச த ப க ரி ச
மோகனக்கல்யாணி- ச ரி க ப த ச, ச நி த ப ம க ரி ச
ஏறுகையில் இல்லாத ஸ்வரம் இறங்குகையில் பூரணம்.
ஒரு ஒளடத சம்பூர்ண இராகம்
oOo
5 comments