6. அமிர்த வர்ஷினி- மீறும் அளவுகள்
அமிர்த தாரை. வானம் கொடுக்கும் உயிர். நீரின்றி அமையாத உலகின் அச்சாணி. இத்தனை சிறப்பு— “ஆழியில் புக்கு முகர்ந்து கொடார்த்தேரி” வரும் வருணனுக்கு. ஆனால், அவன் நினைக்கையில் மட்டும்தான் வருவான். அளவின் கட்டுப்பாடுகள் அவனுக்கு இல்லை. குறைவாய், அதிகமாய், சரியாய், விளைநிலத்தில், காடுகளில், கடலில் பெய்யும் பெருமழை. வருவது போல் தோன்றி, போக்குக் காட்டி பின்னர் எதிர்பாராது வந்து… மகேசன் அறியா மாமழை.
“ஆழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து” லா. ச. ரா.வின் “அபூர்வ இராகம்” நாயகி பெய்யும் பெரு மழை. முழங்காலுக்கும் கீழே தொங்கும் கூந்தல், இயல்பாக இருத்தல் அவள் வழி. பெண் பார்க்கையிலேயே “பஜ்ஜிக்கு உப்பு போதுமா?” என்று கேட்க வைத்து அவள் தன்மையை உணர்த்தி விடுகிறார் லா. ச. ரா. தீயில் இருக்கும் குளிராக, குளிரில் உறையும் நெருப்பாக அவனும், அவளும். அவர்களின் ஆழம் காணும் போக்கு அவர்களை சிறிது காலம் பிரிக்கிறது. ஒருவரை ஒருவர் வரவழைக்க பொய்யான செய்தி சொல்லி தந்திகள் பறக்கின்றன. ஊர் பார்க்கும் கவலையின்றி இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, கண்ணீரில் கரைந்து அந்தப் புகை வண்டி நிலையத்தில் ஒன்றேயான இரண்டாக நிற்கின்றனர்.
அவளின் கூந்தல் அவனின் பிரமிப்பு. அவளின் அலாதியான மௌனமும், சிறு பேச்சுக்களும் அவனின் வியப்பு. மாமழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கும் ஒரு மாலையில் இருவரும் கடற்கரைக்குச் சென்று பேரழகின் அச்சத்தை, ஆழத்தை, இயற்கையின் விளையாட்டை, காட்சி தெளிவாக இல்லாத ஒளிமயக்கை, அனுபவிக்கிறார்கள். அதிலும் அவள் கொள்ளும் உற்சாகம் மிகுதி. உள்ளம் அனுபவித்ததற்கு உடல் விலை கொடுக்கிறது. அவள் நோயுற்று சாகப் பிழைக்கக் கடந்து தேறுகிறாள்.
அவன் அன்னையின் வேண்டுதல்படி அவள் தன் கூந்தலை காணிக்கையாக ஏழுமலையானுக்கு செலுத்த வேண்டும். இருவருக்குமே இது தாள இயலாத அதிர்ச்சி. ஆனால் இதெல்லாம் இவர்களுக்கு வேண்டாம். அந்தந்த நிமிட வாழ்வில்தான் இருவருக்குமே அக்கறை.
அபூர்வ இராகத்தின் உயிர் நாடி அந்த அளகபாரம்தான். ”பின்னாது வெறுமனே முடிந்தால் ஒரு பெரும் இளனீர் கனத்துக்கு கழுத்தை அழுத்திக் கொண்டிருக்கும். பின்னலை எடுத்துக் கட்டினால், கூடை திராஷையை அப்படியே தலையில் கவிழ்த்தது போலிருக்கும்.” தன் நிலை தாழ அது விரும்பவில்லை. உயிர் ஸ்வரம் இல்லாமல் இராகம் என்ன, தாளம் என்ன? பாவ பூர்வமாக, ஸ்ருதி சேர்ந்ததாக, அந்த ஸ்வ்ரத்தில் மட்டும் நின்று கார்வை கொடுக்கையில் வீணையின் தந்தி அறுந்துவிடுகிறது.
“அபூர்வ இராகம், அதே வக்கரிப்பு, பிடாரன் கை படாத பாம்பு போல், அபாயம் கலந்த படபடப்பு, ஸ்வர ஸ்தானங்கள் பிடிபடாது, பழகப் பழக எல்லையேயற்றது போல், நடையுடை பாவனைகளில் சிந்தும் ஒரு கவர்ச்சி, வேட்டையில் வேடுவன் மேல் பாயத் திரும்பிய மிருகம் போல் பயந்த ஒரு முரட்டுத்தனம் சிலிர்சிலிப்பு”
“இயல்பு என்று சொல்வதன் அர்த்தம் என்ன? பட்சிகளுக்குப் பறப்பதுதான் இயல்பு. இறக்கையை ஒடித்துவிட்டு இயல்பு மாறாதவரை பட்சி பட்சிதான் என்றால் என்ன சரி? இராகத்திற்கும், பட்சிக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிற்கும் மேல் சஞ்சாரம்தானே?”
இவள் வர்ஷிப்பவள். பொழிந்து ஆள்பவள். ஆனால் கட்டுக்குள் அடங்காதவள், அதுதான் அவளது இயல்பு. அந்தந்த நொடியில் வாழ்பவள். தன் இயற்கையில் இருப்பவள். இவள் அம்ருத வர்ஷினி
அவுடத இராகம். பிறப்பெடுத்து தோன்றும் உருக் கொள்பவள்
ச க ம ப நி ச ச நி ப ம க ச
அமிர்தம்
நிறைகுடம். தெவிட்டாதது. காலம் தோறும் வெல்லும் உண்மைகளின் உரைகல். அழகும், அறிவும், ஆற்றலும் திரண்ட அமுது. சேற்றிடை செந்தாமரையென மலர்ந்தவள். அழுக்கு அண்டாமல் வாழத் துடித்தவள். தன் தாயை மீற இயலவில்லை. தன்னை ஊர் அறியாத் துணையாக வைத்துக் கொள்ளத் துடிக்கும் முதலியாரிடம் காதலில்லை. அவர் பால் கழிவிரக்கம்தான். தன்னைக் கொடுக்காமல் அவரிடமிருந்தே தவணை பெறுகிறாள். முதலியாரின் பெரும் போக்கான மேம் குணங்களை அழகாகச் சொல்லிச் செல்கிறார் தி. ஜா. கெட்டவன் நல்லவன் என்ற இரு கூறான பிரிவு இல்லை. அனைத்து மனிதர்களிடத்திலும் இருக்கும் கலவை. அமிர்தமும் அதனை நினைக்கிறாள். ஆனால், காதலாகிக் கசிந்துருக அவளால் இயலவில்லை. இச் சூழ்நிலையில் தாயும் இறந்து விடவே, அவள் தனியாகிறாள். முதலியார் துக்கம் கேட்க வராதது அவளை வாட்டுகிறது. ஊரறிய சொல்லிக் கொள்ள விரும்பாத உறவாக தன்னை முதலியார் கருதுவது அவளது தன்மானத்தைப் பாதிக்கிறது. ஆனாலும், ஒரு சக மனிதனாக அவர் நடந்து கொள்ளாதது அவளை வருத்துகிறதே தவிர அவர் பால் அவள் உள்ளம் ஈடுபடவில்லை. இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை தி. ஜா. கதைப் போக்கிலேயே சொல்லிவிடுகிறார்.
இரு மாதங்களாகக் கோயிலில் பார்க்கும் ஒரு இளைஞனின் உருவமும், பருவமும், அவன் நடத்தையும் அவளை இயல்பான வெட்கத்தை மீறி அவனுடன் பேசவைக்கின்றன. அவன் இந்த ஊரைச் சேர்ந்த ரங்கூன்வாசி. ஊரில் அவனுக்கு நண்பர்கள் இல்லை. எப்பொழுதாவது இங்கே வரும் அவனுக்கு நெருக்கமானவர்களில்லை. அவளுடைய ஆற்றலும், அழகும், அறிவும் அவனைக் கொள்ளை கொள்கின்றன. சட்டம் படித்த அவன் அவளைக் கல்யாணம் செய்ய விரும்புகிறான். அவளுடைய வாழ்க்கைச் சம்பவங்கள் சமுதாயத்தின் நீதி குறித்து அவனைச் சினமடைய வைக்கின்றன.
அவளை அவன் அவள் வீட்டில் சந்தித்து தங்கள் மணம் குறித்து பேசுகையில் அவனது தந்தையான முதலியார் அங்கே வருகிறார். தன் தந்தைதான் அவளை அடைய ஆவல் கொண்டவர் என அறிகையில் தவிக்கிறான், திகைக்கிறான், வெறுக்கிறான். தந்தைக்கும் அதிர்ச்சி. பூங்காவில் சந்திக்கும் முதியவர் அவன் அமிர்தத்தை மணம் செய்யவேண்டுமென்றும், இதில் அவன் மற்றும் அவளது விருப்பம் தான் முதன்மையானதென்றும், தந்தை மகன் நன்றிக் கடன் எல்லாம் அவனை கட்டுப்படுத்தினால் கூட அமிர்தத்தின் காதல் வலிமையானது என்றும் உணர்த்துகிறார்.
முதலியார் அவன் காஃபியில் நஞ்சு கலந்து அதை அவன் குடிக்கப் போகையில் தானே தட்டியும் விடுகிறார். சொத்தில் பங்கில்லை என்கிறார். அமிர்தத்தின் மீது அவதூறும் சொல்கிறார். கடிதத்திலும் சேற்றை வாரி இறைக்கிறார். அவன் துணிவாக நிற்கிறான். அன்று மாலை கோயிலில் சந்தித்து விரைவில் மணம் முடித்து ஊரை விட்டுப் போகத் தீர்மானிக்கிறான். அவன் ஆலயத்தில் காத்திருக்கையில் கடிதம் அவளிடமிருந்து வருகிறது. சில சிக்கல்களுக்கு மிகச் சரியான விடை கிடைத்தாலும், அந்த விடைகளே முடிச்சுக்களாக மாறி இறுக்கி விடும் என்று சொல்லி தான் ஊரை விட்டு நீங்குவதாகவும், மேலே படித்து தன் வாழ்வை அமைத்துக் கொள்வதாகவும், அடுத்த பிறவியில் அவர்கள் நிச்சயமாக இணைவார்கள் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
பிறப்பால் தொடரும் ஒரு கறை. அதைப் போக்கி தூயதான வாழ்வு தேடும் ஒரு சிறு பெண். அவளை வென்று விடத் துடிக்கும் பணம், உறவு. அதை வெற்றி கொள்ளும் அவள் சாமர்த்தியம், தன் கணவனாக அவனை நினக்கும் பாங்கு, எதையுமே மறைக்காத உண்மை, பணத்தை முதலியாரிடமே சேர்க்க நினைக்கும் நேர்மை, தகப்பன், மைந்தன் இருவரையுமே விட்டுச் செல்லும் தீர்மானம்…. இந்த சிறு பெண்தான் தூய அமுதம். மென்மை, கம்பீரம், தெளிவு, புத்தி கூர்மை, இனிமை, இளமை, துயரங்களைக் கடக்கும் திண்மை, பாலைவனத்து நிலாவானால் என்ன? நிலவின் இயல்பு ஒளிர்வது தானே?
இவளும் அமிர்த வர்ஷினிதான். மாதம் மும்மாரி பெய்பவள். உலகோர்க்கு உயிரானவள். தன் இயல்பை மீறாதவள். கண்ணனுடன் கலந்து தீப ஒளியாய்த் திகழும் ஆண்டாள், கண்ணனுடன் ஆயர்பாடியில் சிறிது காலமே இருந்த இராதை . இருவர் காதலும் உவப்பானதே.
அவள் “ஆனந்தாமிருகர்ஷினி”
இவள்”சுதாமயீ”
ஏழு ஸ்வ்ரங்களும் வரவில்லை என்றாலும் அழகான இராகங்கள்.
oOo
- இராகப் பெண்கள்
- இராகப் பெண்கள் – 2. தர்பாரி கானட
- இராகப் பெண்கள் – 3: காம்போதி யதுகுல காம்போதி
- இராகப் பெண்கள் – 4: மோகனக் கல்யாணி
- இராகப் பெண்கள் – 5: ரீதி கௌளை: ஆனந்த பைரவி- தோற்ற மயக்கம்
3 comments