9: சுனாத வினோதினி, பிருந்தாவன சாரங்கா- மழலைச் சிரிப்பு
சுனாத வினோதினி – ச க ம த நி ச ச நி த ம க ச
பிருந்தாவன சாரங்கா – ச ரி ம ப நி ச ச நி ப ம ரி க ச
“நினைவின் தேன்கூட்டில் வருடங்களின் மிதிகாலடியில் புதைந்து போன ஏதோ ஒரு பாதாள அறையிலிருந்து மணி ஒலி கேட்கிறது”: ‘த்வனி‘யில் “சுனாதினி” இப்படித்தான் அறிமுகமாகிறாள். சொல்லில் சொல்லாத பொருளையும் சேர்த்துச் சொல்லும் ஆற்றல் இரு பொருட்களுக்கு உள்ளது- ஒன்று மௌனம்— மற்றொன்று த்வனி. தம்பூரின் மந்த்ர ஸ்தாயி ஒலிப்பதே ஒரு இசை. இராகமாக, பதமாக, பாடலாக, சுரங்களாக இல்லாமல் நாதமாக ஒலிக்கும் சுனாதினி. எழுத்தில் சித்து விளையாடும் லா.ச ரா சொல்லின் நாதத்தில் நம்மை மூழ்கடிக்கிறார்.
“ஒலியே நீ மோனத்துள் புகுந்து கொண்டதால் உன்னைக் கேட்கவில்லை என்று உன்னையே நீ ஏமாற்றிக் கொள்கிறாயா? கன்ணாடியில் பிம்பம் விழும் த்வனி கூட எனக்குக் கேட்கிறது. நீ அதை அறிவாயோ? எல்லாம் நெஞ்சு நிற்கும் மீட்டலுக்கேற்ப, ஆனால் அறிவது, கேட்பது இவையெல்லாம் என்ன வெறும் வார்த்தைகள் தானே! அவைகளின் பொருளும் உண்டான பொருளல்ல. அவ்வார்த்தை வரம்புகள் சொல் ஓட்டம் நீடித்தவரை நாம் நமக்கு ஆக்கிக் கொண்ட பொருள் ஆனால், சொல் தாண்டிய உயிர், அவ்வுயிரையும் குடித்து உயிருடன் உயிர் தந்த பொருளையும் விழுங்கிய இருள் பற்றி நாம் என்ன கண்டோம்?”
ஒலியின் உயிர்நாடி என நாம்கண்டு கொள்வது நாம் எதை அறிந்துள்ளோமோ அதன் வழி தான். அது சொல்லவந்ததையெல்லாம் நம்மால்அணுகமுடிவதில்லை. “தனியாக இருக்கிறேன்“ என்றாலும் நான் என்னுடன் தானே இருக்கிறேன்! சிந்தைகள் எழுப்பும் ஒலி; அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒலி. குளத்தில் எறிந்த கல் என பரப்பைச சுழற்றி உள்ளே அமையும் ஓசை—அறியா ஓசை.
“ஆம், அலுப்பற்ற விஷயத்தின் முடிவற்ற விளிம்பில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்” சுனாதினியின் த்வனியில் இதைப் போல் ரசமான பேச்சுக்கள் — ஆதார சுரத்திலிருந்து மாற்றி அடுத்த சுரத்தினை அடிப்படையெனக் கொண்டு பாடகர் தன் கற்பனையை விரிக்கையில் கேட்பவர் இராகத்தின் பெயர் அறியார். ஏன் அதன் சாயலைக் கொண்டு அவர் முன்னரே கேட்டிருந்த பாடலையும் நினையார். அவர் கேட்பது நாதம் ஒன்றினைத்தான். அது மீட்டும் புரிதலைத்தான். அது சேற்றில் புதையுண்டு நாம் மறந்து விட்ட ஒன்று; தன் நிலை கலைந்து மேலே எழுப்பும் அதிர்வலைகள்.
“கண்டதைக் கண்டபின், அப்படிக் கண்டதாலேயே அதைக் காணாத முன் கற்பனையில் விளங்கிக் கொண்டிருந்த அதன் கற்பு நிலை சிதைந்து விடுகிறது என்று சொல்வேன்.” என்ன ஒரு சொல்லாடல்!
வினோதமான நாதம்— சுனாதம்— சுனாத வினோதினி— அது உன் தனிப்பட்ட த்வனி. நீ அறியப் பார்க்கும் பொருள்.. ஆனால், உனக்கு மட்டுமானதல்ல. அனைவரின் பொது. உனக்குள் கலங்கும், தெளியும், அமிழும், அழுத்தும், கண்காணாத ஒலியின் கண் பொத்தும் விளையாட்டு. முடிந்தால் கண்டுபிடி… சொல்லாதே. சொல் ஆட்சியில் இல்லை அது.
செங்கம்மா!
பெண்கள், உறவை நேசிப்பவர்கள் எனவும், ஆண்கள், ஊரை நேசிப்பவர்கள் எனவும் பொதுவான கருத்து உண்டு. உயிர்த்தேனில் அதை உரசிப் பார்க்கிறார் தி. ஜா. மன்னர் குலத்தில் அரசிகள் உண்டு. மக்கள் ஆட்சியில் தலைவிகள் உண்டு. தலைமைப் பண்புகளோடு அன்பும், உழைப்பும், சிறந்த மதி நுட்பமும், சிலை போன்ற வடிவழகும், கற்பின் கனலும் இணைந்தவள் செங்கம்மா.
இந்த நாவலில் அனுசூயாவை “மரப்பசு” அம்மணியின் சாயலில் தி ஜா படைத்திருந்தாலும், அன்பிலும், அழகிலும், அறிவிலும் செங்கம்மாவும், அனுசூயாவும் ஒன்றே. ப்ருந்தாவனி…… சாரங்கா பிருந்தாவன சாரங்கா
அதிலும் வறுமை நிலையிலுள்ள செங்கம்மமெய் வருத்தம் பாராது, சோர்விலாது தன் கணவனின் ஊருக்கு, அதாவது தான் புகுந்த ஊருக்கு தன் அன்பனைத்தையும் புகட்டுகிறாள். தன் நிலை தாழாது, அதே நேரம், ஆணவம் கொள்ளாது, செய்யும் தொழிலை வெறுக்காது வளைய வரும் ஓர் பெண். அவள் கதையின் நாயகனின் வீட்டில் வேலை செய்பவள். வேலையினூடே உதவி செய்பவள். அவள் கணவன் அந்த நாயகனின் காரியஸ்தர். இவள் ஏழ்மையைப் பாராட்டவில்லை, கணவனின் பொருளாதார நிலையைப் பழிக்கவில்லை.
பூவராகனின் உள் நிறைக்கும் ஒளி அவள். அனுசூயா, செங்கம்மா இருவரும் அன்பாலும், அழகாலும் அவனை ஆட்கொள்பவர்கள். ஈதல் இசைபட வாழும் அவன் தன் தந்தையின் நினைவாக தன் “ஆனைகட்டிற்கே” குடும்பத்துடன் வருகிறான். ஒற்றுமையில்லாத கிராமம். தன்னம்பிக்கையில்லா மனிதர்கள். ஒருவர் ஏற்றத்தில் மற்றவர் பொருமும் குணம். ஊர் கூடி தேர் இழுக்க முடியாமல் அவன் அந்தப் புராதனக் கோயிலை தானே புதுப்பிக்கிறான். ஆமருவி என்ற ஒரு சிற்பக் கலைஞனை தி ஜா கொண்டு வந்து நம்மை அசாத்தியமாகக் கவருகிறார். மிகப் படித்துவிட்டதாக தன்னை நினைத்துக் கொள்ளும் ஒருவன் மிகவும் முரண்டுகிறான். அவனை இணைத்துக் கொள்ள “பூவு” செய்யும் முயற்சிகள் செல்லுபடியாகவில்லை. இந்நிலையில் “கும்பாபிஷேகம்” நடத்த “பூவு” முற்படுகையில் “அவுச ஆனைக்கட்டியின்“ முழு விவசாயத்தையும் தன் செலவில், தன் முனைப்பில் அவன் செய்ய வேண்டுமென்று செங்கம் வைக்கும் கோரிக்கை. அதை அவன் ஏற்கும் விதம். அதற்காக அவன் கொண்டுவரும் நில விஞ்ஞானி. அவர் செய்யும் பயிர் சேவை. அதன் கண்டுமுதல். அதனால் ஊர் ஒன்று சேரும் அற்புதம். நாவல் கண் முன்னே விரிந்து விகசிக்கிறது. அதில் இணைய மாட்டாமல் படிப்பும், காமமும் மிகப் படித்தவன் கண்ணை மறைக்கின்றன.
ஊரில் அனைவரும் பூவராகனை தலைவனாக்க விழைய, அவன் மூலப்பொருளாக செங்கத்தைக் காட்டுகிறான். அவள் தலைமையேற்று அன்பால் அந்த ஒருவனையும் கட்ட நினைத்து அவன் வீடு சென்று பேசுகையில் அவன் நல்லதற்கும், தீயதற்கும் இடையே ஊசலாடிவிட்டு காமம் தகிக்க செங்கத்தை இழுத்தணைத்து அவள் கண்களிலே முத்தமிட்டு பின்னர் அவளை விட்டுவிடுகிறான். அவள் அன்பின் மூர்க்கத்தை உணர்கையிலே தான் முழுத் தூய்மையுடன் இல்லை என நினைக்கிறாள். அந்த வாதையிலிருந்து அவளை விடுவிக்கிறாள் அனுசூயா.
செங்கம் ஒன்றை நினைத்துக் கொள்வாள்…. பூவும், ஊராரும், ஆசார்யரும் அவள் சொல் கேட்கும் விதம்…. அழகற்ற, இளமையற்ற ஒரு பெண் இதையெல்லாம் சொல்லியிருந்தால் இவர்கள் கேட்டிருப்பார்களா? வெற்றி பெற்ற ஆணும், அழகான பெண்ணும் சமுதாயத்தில் கொள்ளும் மதிப்பு தனிதான்.
“சிப்பிக்குள் முத்து” என்று திரு. விஸ்வநாத் அவர்களின் ஒரு திரைப்படம். சமத்து இல்லாத ஆண் ஒரு விதவைப் பெண்ணை சட்டென்று மணம் செய்துவிடுவான். அவனுக்கேன் இந்தத் தெளிவு? அந்த ஊரில் துயர்படும் வேறு பெண்கள் இல்லையா என்ன? அல்லது இந்த நாயகியாவது அழகில் குறைந்திருக்கலாகாதா? இதைப் பற்றி அந்தப் படம் கேள்வி கேட்கவில்லை. அவள் தன் வாழ்வை மாற்றி அமைப்பாள் என அவனுக்குத் தோன்றித்தான் அவன் அவளை மணந்து கொண்டான் என்று சொல்லக் கூடும். அதில் 99% உண்மை ஆனாலும் அந்த ஒரு சதவீதம்?
அதையும் கையாளும் திறமை தி. ஜாவிற்கு மட்டுமே உண்டு. எதையும் மறைக்கவோ, மறுக்கவோ அவர் முயல்வதில்லை.
படிப்பும், தேவையான பணமும், நண்பர்களிடத்தில் பீறிடும் நேசமும், ஆசையும், காற்று போல் சுதந்திரமும், கவலையற்ற பெரு வாழ்வும், அன்பும், பேரன்பும் என அனுசூயா.
மிகக் குறைந்த படிப்பு, ஏழ்மை,அனைவரிடத்திலும் பெருகும் பேரன்பு, காமம் கொண்டவரை அன்பால் மட்டுமே வெல்லுதல் இயலாது என்ற பேரிடி, தன் தூய்மையைப் பற்றி கிலேசம், தன் அழகின் வீச்சும், கட்டும், காட்டும் மனிதர்களின் குணம், கணவனின் தோள் சேர்ந்து உகுக்கும் கண்ணீர். உண்மையின் வீச்சு.
செங்கம்மாவை அவன் ஒன்றும் செய்து விடவில்லை. அவன் அவள் கண்களில் முத்தமிட்டதைப் பார்த்தவர் யாரும் இல்லை. ஆனால் தன்னை ஒளித்து தான் வாழ அவள் நினைக்கவில்லை. அனுவிற்கும் ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை. அந்தப் படித்தவன் கூட அவள் கணவனுக்கு தன் உண்மையை ஒப்புக் கொண்டு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறான்.
இந்த ஒப்பில்லா உண்மையின் நாதம் ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது. நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் மூடிகளில் நம் உண்மைகளை நாம் அறியோம். அதன் ஒலி நமக்குக் கேட்பதில்லை.
“த்வனி”யில் அம்மா, மனைவி, மகள், எதிர் வீட்டுப் பெண், அவள் சொல்லும் அவள் தாய், தொலைபேசியில் பேசும் சுனாதினி எனப் பெண்கள். ஒலி கோர்க்கும் சரடின் வழி வருபவர்கள். தம்பூரின் ஒரே நாதமென ஒலிப்பவர்கள். சுனாத வினோதினி.
“உயிர்த்தேனில்” செங்கம்மாவும், அனுசூயாவும் பிருந்தாவனி மற்றும் சாரங்கா. ஆனால் இருவரின் ஒலியும் ஒன்றே. வீணையின் நான்கு தந்திகளையும் ஒன்றாக அழுத்தி எழும் ஒன்றேயான ஒலி. உண்மையின் ஒலி. பிருந்தாவன சாரங்கா.
oOo
- இராகப் பெண்கள்
- இராகப் பெண்கள் – 2. தர்பாரி கானட
- இராகப் பெண்கள் – 3: காம்போதி யதுகுல காம்போதி
- இராகப் பெண்கள் – 4: மோகனக் கல்யாணி
- இராகப் பெண்கள் – 5: ரீதி கௌளை: ஆனந்த பைரவி- தோற்ற மயக்கம்
- இராகப் பெண்கள் – 6: அமிர்த வர்ஷினி- மீறும் அளவுகள்
- இராகப் பெண்கள் – 7: கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம்
- இராகப் பெண்கள் – 8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம்