இராகப் பெண்கள் – 3: காம்போதி யதுகுல காம்போதி- பூவும், காயும்

பானுமதி ந

lasara

புவனா…. புவனேஸ்வரி… அகிலத்திற்கெல்லாம் தலைவி. புன்னகையும் பொறுமையும் பூண்ட பூமாதேவி. தன்னைக் காத்து, தற்கொண்டான் பேணி தகை சான்ற சொல் காத்து சோர்வில்லாமல் இருந்தவள். இவள்தான் கையகல….. இல்லை… அதைவிட அதிகமான வடிவும், நிறமும், திடமும், தனி மணமும் கொண்ட செம்பருத்தி. இந்தப் பெண்ணை தி. ஜா. எங்கே பார்த்தார்? இனிமையே உருவான இவள் எப்படியெல்லாம் அந்தக் குடும்பத்திற்குள் கலந்து விடுகிறாள்?

அவள் ஒரெ பெண். வீட்டிலே வளர்ந்த செம்பருத்தி. பதியமிட்டு, பதியமிட்டு வளர்த்த பூ.. உள்கூடம் முழுவதும், சாமியின் அறையிலும் மலர்ந்து மலர்ந்து சிரிக்கும் பூ. அவள், குழலிலும் சூடும் அருமைப் பூ. கன்னங்கரிய கேச பாசத்தில் செம்மையாய், கம்பீரமாய் வீற்றிருக்கும் அழகுப் பூ.

திருமணம் செய்யப் பேச்சு நடக்கும் முன்னரே, கணவனாக வரப் போகிறவனின் குடும்பத்தில் இத்திருமணத்திற்கு காரணமாக இருந்தவன் மரணிக்கிறான். அடுத்தடுத்த சோதனைகள். நாயகனின் அண்ணனும் அடுத்தவன் கடனிற்கு ஈடுகட்ட அனைத்தையும் இழக்கிறான். மனித மாண்புகள் மங்காத இடங்கள் இருக்கின்றன என்று காண்பித்தது தி.ஜா வின் வெற்றி.

சொன்ன சொல், கொடுத்த வாக்கு, சொல்லாத விடயம் எல்லாம் காப்பாற்றத்தான் மனித பிறப்பே! படுக்கையில் படுத்திருந்தவன் தரையில் எழுந்தாற்போல் மாறியது சட்டனாதன் நிலை. இந்த மாறுதல் அந்தத்  திருமணத்தை நிறுத்தவில்லை. மாறாக, தயக்கங்களை அறுத்து வெளியே தெரியாத மனக் கசடுகளை அகற்றி நல்லபடியாக நடக்கிறது. இது யாருடைய வெற்றி? நாயகன் பெற்றுக் கொள்ளும் இடத்தில்: நாயகி மறுதலித்தாலும் கேட்பதற்கு ஒன்றுமில்லை. நாயகனுடன் அப்பொழுது இருக்கும் தாயும், அண்ணியும் சற்றுக் கசப்புடன்தான் இருக்கிறார்கள்.

தந்தையின் எண்ணமும், இறந்தவனின் கடைசி எண்ணமும் புவனாவை செலுத்தியதைவிட சட்டத்தின் மேல் அவள் கொண்ட காதல்… அந்தக் காதலும் மிகப் பூடகமாகக் கையாளப்படுகிறது.

அவள் காதலொருவனைக் கைப்பிடித்தாள். அவன் காரியம் யாவினும் கைகொடுத்தாள். எப்படிப்பட்ட உயர்வான பாத்திரம். அவள் வேலை செய்வதே தெரியாது… அவள் பூ வாடாது… உருவி துடைத்துவிட்டாற்போல் ஒரு தோற்றம். எல்லாக் குழந்தைகளுடனும் ஒட்டு, உறவு. கரிக்கும் முதல் ஓரகத்தியையும், காய்ந்து ஏங்கும் இரண்டாம் ஓரகத்தியையும் சாதுர்யமாகக் கையாள்கிறாள். தன் வாழ்வு என்று ஒன்று அவள் வாழ்ந்தாளா என்றால்… எனக்கு சொல்லத் தெரியவில்லை. இதைவிட நிறைந்த வாழ்க்கை உள்ளதா என்ன?

இத்தனை நிறைவான, ததும்பாத நிறைகுடமாக நம் கண் முன்னே வரும் புவனா…. கொஞ்சம்கூட அப்பழுக்கற்றவளா? மானிட இனத்தின் குறைகளை அவளிடமும் வைக்கிறார் அவர். வாழ்க்கையில் நம்ப இயலாத குணக் குன்றாக மனிதர்கள் இருப்பதில்லை என்பதையும் குணம் மிகுந்த அவள் பாத்திரத்தின் வாயிலாகவே அவர் சொல்கிறார். இதில்தான் அவர் படைப்பு முழுமை கொள்கிறது என்பேன்.

விஷாத ஸ்வரம் வராத இராகம்…. பாசாங்குகள் அற்ற இராகம்.. பாடப்பாட மெருகேறும் இராகம். தன்னுள் ஒரு ஸ்வரத்தை மறந்து மாறுபடும் ஒன்றென ஒலித்து, பின்னர் மீண்டு தன் நிலை பெறும் இராகம். இதை பெண் உடலில் நடுவயதில் ஏற்படும் இரசாயன மாறுதலுடன் இணைக்கும்  நுட்பத்தை என்னவென்று சொல்வது?

சிவனைக் கவர்ந்த இராகம். குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட இராகம். தேவாரப் பண்ணில் மணக்கும் இராகம். ”எந்தன் தாய் சீதா தேவியின் முன் உன் பாணங்கள் ஒன்றுமில்லை இராமா” என்று  தியாகையர் சொன்ன இராகம். தேவ கந்தர்வ இராகம்.

அப்படியெனில், யதுகுல காம்போதி எப்படி?

இவள் லா.ச. ராவின் கௌரி. இமவானின் புதல்வி. தீக்குளியின் நாயகி. இவளும் ஒரே பெண்தான். ஆனால் தம்பியர் ஐவர். வாழ்க்கையின் யதார்த்தம் புரியாத மேட்டிமை மனப்போக்கு. கணவன் எத்தகைய சூழலிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வது இவள் நெஞ்சின் நெருடல். அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுள் தென்படும் பல்வேறு வடிவங்களில், இவளுக்கான தனிப்பட்ட வடிவம் எது? நெருக்கமாக அதே சமயம் விலகலாக ஏனிப்படி இருக்கிறான்? அவன் இவள் தவறுகளைச் சுட்டுவதில்லை. ஆனால் ஒரு புன்னகையில், ஒரு வார்த்தையில் இவளையே  தன் தோல்விக்கு வருந்துமாறும் செய்து விடுகிறான். அவன் அழகும், தெளிவும், நடத்தையும், அவன் அனைவருக்குமான ஒரு மனிதனாக இருப்பதும் இவளை பெருமையும் கொள்ளச் செய்கிறது; அவனைச் சிறுக அடிக்கவும் மனம் ஏங்குகிறது. இவள் கணவனை மனதளவில் காய்கிறாள். அதற்காக தன்னையும் நொந்து கொள்கிறாள். ஆனாலும் அந்த அசூயை போவதில்லை. இரவில் தலையணையில் ஒரு நீலமலர் போல் தூங்கும் அவன் முகத்தை சிதைத்து ஒரு கறையேனும் ஏற்படுத்த நினைக்கிறாள். நல்ல வேளை, செயல்படுத்துவதில்லை.

இவளின் எண்ணம் ஓங்கி ஓங்கி அவன் ஒரு தீபாவளியன்று தீக்குளிக்கு ஆளாகிறான். வெந்து, கருகி, அழகினை இழந்து, உடல்நலம் குலைந்து அவனும் இவளும் துன்புறுகிறார்கள். இவளின் உள் எண்ண வேட்கைக்கு தானே தன்னைக் காவு கொடுத்து  அதிலும் அவன் இவளை வீழ்த்துகிறான்- இவள் அகந்தைக்கு அவன் மனோபலமும் காணிக்கைதான். இவள் அவனுக்காக மாங்கல்யப் பிச்சை ஏந்துகிறாள். அவன் உடலில் காணும் தீ வடுக்கள் இவளின் மனப் போரின் வெளிமுகங்கள்.

இறுதியில் பெண்ணிற்கே உண்டான பரிவில் இவள் அவனைத் தழுவி தன்னையும் கரைத்துக் கொள்கிறாள். உள்ளே பொங்கிய அபரிமிதமான அன்பினை அப்பொழுது உணர்ந்து கொள்கிறாள்.

சிவமும் சக்தியும் அர்த்தநாரீஸ்வரராக இணைந்தாலும், வலமும் இடமும் முந்தைய தோற்றத்தின் எச்சங்களே.

சட்டம் தான் வாழ்வு புவனாவிற்கு.

கிலேசம் போர்த்தும் முள் ஆடை கௌரிக்கு

தவழ்ந்து, தளர் நடையிட்டு, மழலை பேசி, தென்றல் என அலையாடி, பெண் எனும் பேரழகாய் உருக்கொண்டு, தாயாகி, அன்பென உருக்கொள்ளும் காம்போதியில் ஒரு  நொடி சுர பேதம் நடந்து பின்னர் தன் முழுமைக்குத் திரும்பும் புவனா  ஒரு முழு இராகம்.

கௌரியும் அப்படித்தான். ஆனால், தன் சுயத்திற்காக சுகத்தை பலியிட்டு, தன் தீயில் தானே கருகி பின்னர் ஆறு போல் அன்பில் ஆழ்த்திவிடுகிறாள்.

இவள் யதுகுல காம்போதி. இவளும் இராக பாவங்கள் கொண்டவள். பாடுபவரை வசப்படுத்துபவள். கேட்பவருக்கு பரவசமூட்டுபவள்.

காம்போதி     ச ரி க ம ப த ச   ச நி த ப ம க ரி ச

யதுகுல காம்போதி  ச ரி ம ப த ச  ச நி த ப ம க ரி ச

oOo

7 comments

  1. The task undertaken by N Banumathi in comparing two characters penned by two great writers is not easy by itself. But the writer has taken much pain and had done a deep study of these two characters and had provided a glimpse of what they are in her own style. The flow of language by the writer needs appreciation. The character of these two women created by Shir Janakiraman and Shri Ramamirtham had been brought once again to our memory in a precise way. Kudos to the writer and let this continue.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.