நான் கோண்டின் அறிவுரையை ஏற்று, வண்ணக்கழுத்தை ஒரு கூண்டிலும் அவன் பெடையை மற்றொரு கூண்டிலும் போட்டுக் கொண்டு வடக்கு நோக்கி பயணித்தேன்.
முந்தைய இலையுதிர்காலத்தை விட இந்த வசந்தகாலத்தில் மலைகள் எத்தனை வித்தியாசமாய் இருக்கின்றன! திடீர்த் தேவையை முன்னிட்டு என் பெற்றோர்கள் டெண்டாமில் உள்ள அவர்களுடைய வீட்டை வழக்கத்திற்கு மாறாக பல மாதங்கள் முன்பாகவே திறந்திருந்தனர். அங்கே எல்லாம் சீரான பிறகு, ஏப்ரல் மாத கடைசியில் வண்ணக்கழுத்தை எடுத்துக் கொண்டு குதிரைகளில் பயணித்த ஒரு திபெத்திய நாடோடிக் கூட்டத்தின் துணையோடு சிங்காலிலா நோக்கிப் புறப்பட்டேன். அவனுடைய பெடையை வீட்டிலேயே விட்டுவிட்டேன். ஒருவேளை அவனால் மீண்டும் பறக்க முடிந்தால் பெடையைத் தேடி வருவானே என்பதற்காக. அவனை குணமாக்கச் சரியான யுத்தி, அந்தப் பெடையை ஒரு ஈர்ப்பு சக்தியாக பயன்படுத்துவது. அவன், புதிதாக இடப்பட்ட முட்டைகளை அடைகாத்து பொறிக்க தனது துணைக்கு உதவிகரமாக இருக்க திரும்புவான் என்று கோண்ட் நினைத்தார். ஆனால், நாங்கள் கிளம்பிய மறுநாளே என் பெற்றோர் அந்த முட்டைகளை அழித்துவிட்டனர். வண்ணக்கழுத்தின் பெயருக்கு பங்கம் செய்யும் விதமாக சீக்கான, குறைபாடுடைய குஞ்சுகள் உருவாவதை நாங்கள் விரும்பவில்லை.
என் பறவையை என் தோளிலே தூக்கிச் சென்றேன். அவன் நாள் முழுக்க அங்குதான் உட்கார்ந்து கொண்டு வந்தான். இரவில் அவனை பாதுகாப்பாக அவனுடைய கூண்டில் அடைத்து வைத்தோம். அது அவனுக்கு நன்மை செய்தது. பன்னிரெண்டு மணிநேர மலைக்காற்றும் அதன் வெளிச்சமும் அவனை உடலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும், அவன் என் தோளிலிருந்து தன் பெடையைத் தேடி, அவள் முட்டையைப் பொறிக்க உதவி செய்ய, பறந்து செல்ல ஒருமுறை கூட முயற்சி செய்யவில்லை.
வசந்தகால இமாலயம் தனித்துவம் வாய்ந்தது. பூமி முழுக்க வெள்ளை வயலட் மலர்களால் ஒளிர்ந்தது. சூடான ஈரப்பதம் நிரம்பிய பள்ளத்தாக்குகளில் இருந்த ஃபெர்ன்கள்(ferns), கருநீல வானத்தில் இருக்கும் விலைமதிப்பற்ற கல்லைப் போல இருந்த வெள்ளை மலைகளை, தங்கள் பெரிய கரங்களைக் கொண்டு எட்டிப் பிடிக்க முயற்சி செய்வது போல படர்ந்து கொண்டிருந்தன, இடையிடையே அதற்குள் பழுக்கத் தொடங்கியிருந்த ராஸ்பெர்ரி பழ மரங்கள். சில சமயங்களில், வளர்ச்சி தடைப்பட்டிருந்த ஓக், மிகப்பெரிய இலம், தேவதாரு மற்றும் கஷ்கொட்டை மரங்கள் இருந்த அடந்த காடுகளைக் கடந்து சென்றோம். சூரிய ஒளியை முழுவதும் மறைக்கும்படியான எண்ணிக்கையில் அவை வளர்ந்திருந்தன. மரங்களோடு மரமும், கொம்புகளோடு கொம்பும், வேர்களோடு போராடும் வேர்களும், வெளிச்சத்திற்காகவும் உயிருக்காகவும் போராடின. அவற்றுக்கு கீழே இந்த மரங்களினால் உண்டான இருட்டில், தம் பங்குக்கு புலிகளாலும், சிறுத்தைகளாலும் கருஞ்சிறுத்தைகளாலும் வேட்டையாடப்படுவதற்காகவே, நிறைய மான்கள் செழித்து வளர்ந்திருந்த புற்களையும் செடிகளையும் மேய்ந்து கொண்டிருந்தன. எங்கெங்கு உயிர் செழிப்பாக வளர்ந்திருந்ததோ, அங்கெல்லாம் பறவைகள், விலங்குகள் மற்றும் செடிகளுக்கு இடையில் இருத்தலுக்கான போராட்டம் இன்னும் உக்கிரமாக இருந்தது. இத்தகைய தன்முரண் வாழ்வின் இயல்புகளுள் ஒன்று. பூச்சிகளுக்கு கூட இதிலிருந்து விடுதலை கிடையாது.
நாங்கள், காட்டின் இருளிலிருந்து வெளிவந்து வெட்ட வெளியை நோக்கிய போது, சூடான வெப்பமண்டல சூரிய ஒளி, திடீரென்று தன்னுடைய வைர நெருப்பு முனைகளால் எங்கள் கண்களைப் பறித்தது. தட்டான்களின் பொன்னிற அசைவு காற்றுவெளியை நிரப்பியது. வண்ணத்துப்பூச்சிகள், குருவிகள், ராபின்கள், ஜேக்கள் மற்றும் மயில்கள் சப்தங்கள் எழுப்பி, மரத்திலிருந்து மரத்திற்கும், சிகரங்களிலிருந்து உயர்ந்த சிகரங்களுக்கும் தாவிக் காதல் செய்தன.
ஒருபக்கம் தேயிலைத் தோட்டங்களும் வலது பக்கம் பைன் காடுகளும் கொண்ட திறந்த வெளியில், கத்தி முனைகளைப் போன்று நேரான சரிவுகளில் நாங்கள் கஷ்டப்பட்டு தடுமாறி முன்னேறினோம். அங்கே காற்று அடர்த்தியை இழந்திருந்ததால், சுவாசிப்பது சிரமமாக இருந்தது. சப்தங்களும் எதிரொலிகளும் வெகு தூரம் பயணித்தன. கிசுகிசுப்புகள் கூட சில மையில் தூரம் தாண்டியும் கேட்கப்படுவதிலிருந்து தப்ப முடியவில்லை. மனிதர்களும் விலங்குகளும் ஒருசேர அமைதியானார்கள். கால் குளம்புகளின் தடதடக்கும் சப்தங்களைத் தவிர குதிரைகளும் மனிதர்களும், எங்கள் மீது கவிந்திருக்கும் தனிமைக்கும் அமைதிக்கும் களங்கம் ஏற்படாதவாறே முன்னேறினோம்.
கருநீல வெட்டவெளிவானம் மேகங்கள் அற்று தூய்மையாகவும், வடக்கே ஒரு பெருமூச்செரிந்தாற்போல் செல்லும் நாரைக் கூட்டங்களையும், சரிவுகளில் ஒரு அடிநாதமாய் விரைந்து இறங்கும் கழுகுகளையும் தவிர எந்தச் சலனமும் அற்று இருந்தது. எல்லாமுமே குளிர்ந்து, கூர்மையாகவும் விரைவாகவும் நடந்தன. ஒரே இரவில் ஆர்கிட்கள் வெடித்து, தங்களுடைய ஊதா நிறக் கண்களை எங்களை நோக்கித் திறந்திருந்தன. சாமந்திப் பூக்கள் காலைப் பனியினால் நிறைந்திருந்தன. கீழே இருந்த ஏரிகளில் நீலத்தாமரையும் வெள்ளைத் தாமரையும் தேனிக்களுக்காக தங்கள் இதழ்களை விரித்தன.
இப்போது நாங்கள் சிங்காலிலாவுக்கு அருகே வந்திருந்தோம். மலை உச்சியிலிருந்து மடாலயம் தன் தலையை உயர்த்தி எங்களை அழைத்தது. இறக்கை வடிவிலமைந்த அதன் கூரையும் பழமையான சுவர்களும் தொடுவானத்தில் ஒரு பதாகையைப் போல மிதந்தன. நான் விரைந்து நடக்க அறிவுறுத்தப்பட்டேன். அடுத்த ஒரு மணிநேரத்தில் மடாலயத்தின் செங்குத்தான பாதையில் நான் ஏறிக் கொண்டிருந்தேன்.
நமது அன்றாட வாழ்வின் போராட்டங்களில் இருந்து உயர்ந்து மேலே வாழும் மனிதர்களுக்கு இடையே இருப்பதுதான் என்னவொரு நிம்மதி! அது மதியப் பொழுது. நான் கோண்டுடன் ஒரு பால்சம் காட்டின் வழியே கீழே இறங்கி ஒரு நீரூற்றுக்குச் சென்றேன். அங்கே நாங்கள் குளித்ததுடன் வண்ணக்கழுத்தையும் சுத்தமாக கழுவினோம். வண்ணக்கழுத்து தன்னுடைய கூண்டில் மதிய உணவை உண்டு முடித்த பின்னர், நானும் கோண்டும் சாப்பாட்டு அறைக்குச் சென்றோம். அங்கே லாமாக்கள் எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அறை கருங்காலி மரத் தூண் மண்டபம் போல இருந்தது. தூண்களின் உச்சி தங்கத்தினால் ஆன டிராகன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகளாக கருத்து வளர்ந்திருந்த தேக்கு உத்திரங்களில் பெரிய தாமரை வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அவை மல்லிகையைப் போல மென்மையாகவும் உலோகத்தைப் போல உறுதியாகவும் இருந்தன. தரையில் செம்பாறைகளில், காவி நிற உடையணிந்த துறவிகள் தியானத்தில் ஆழ்ந்திருந்தனர். உணவுக்கு நன்றி கூறும் பிரார்த்தனை அது. அனைவரும் ஒன்றாக, க்ரிகோரியன் ஸ்லோகம் போன்ற ஒன்றைச் சொல்லி தங்கள் பிரார்த்தனையை முடிக்கும் வரை நானும் கோண்டும் சாப்பாட்டு அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்தோம்.
“புத்தம் மே சரணம்
தர்மம் மே சரணம்
ஓம் மணி மதமே ஓம்”
புத்தர் என்னும் அறிவே எங்கள் புகல்
மதமே எங்கள் புகல்
வாழ்வு என்னும் தாமரையில் ஒளிரும்
உண்மை மணிவிளக்கே எங்கள் புகல்