கிளி ஜோசியம்

காலத்துகள்

kamadeva1

இன்று அலுவலகத்திற்கு மட்டம் போட்டு விட்டு எந்த இலக்குமில்லாமல் வீட்டில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தேன். 11.30 மணி அளவு கடைக்குச் செல்ல வேண்டி வர, அந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பும்போது, கூரை வீட்டொன்றின் திண்ணையில் அமர்ந்தபடி கிளி ஜோசியன் ஒருவன், 50-60 வயதிருக்கக்கூடிய பெண்ணிற்கு ஆரூடம் சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். கதையொன்றிற்கு விஷயம் தேறுமே என்று அவர்கள் பேசுவதை கவனிக்க ஆசைப்பட்டாலும், நாகரீகம் கருதி – அவர்களை பேசுவதை முடிந்தளவு உள்வாங்க காதுகளை கூர்மையாக்கி -, அவர்களைக் கடந்து வந்தேன். உண்மையில் நாகரீகம் கருதி அல்ல, ஆள் நடமாட்டமில்லாத நிச்சலமான தெருவில், நான் அங்கு நின்றிருந்தால் கண்டிப்பாக வசவு கிடைக்கும் என்பதால்தான் அங்கு நிற்காமல் வந்திருந்தேன். யாரும் கவனிக்காதபடி ஒட்டுக்கேட்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் அதைக் கண்டிப்பாகச் செய்திருப்பேன். சரி, நான் கண்ட காட்சியை வைத்து கற்பனையில் கதை எழுத வேண்டியதுதான், இன்றைய பொழுதும் போகும் என்று யோசித்தபடி எழுத அமர்ந்தேன்.

நான் கடைசியாக கிளி ஜோசியனொருவனைப் பார்த்தது 6-7 வருடங்களுக்கு முன் கிழக்கு தாம்பரத்தில் வசித்தபோதுதான். ரயில் நிலையத்திற்குள் நுழையும் சாலையில், ஜோசியர்கள் சிலர் இருப்பார்கள், அவர்களில் கிளி ஜோசியர்களும் உண்டு. நான் பார்த்த வரை பெரும்பாலும், அவர்கள் யாருக்கேனும் ஆருடம் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அதைக் கேட்பவர் முகத்தில் தெரியும் ஆயாசத்தையும், துயரையும் எளிதில் மறக்க முடியாது. நான் புதுச்சேரி வந்த பிறகு -இன்று பார்ப்பது வரை-, கிளி ஜோசியர் எவரும் கண்ணில் தென்பட்டதில்லை.

எங்கிருந்து கதையை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்குக்கும்போது நான் செங்கல்பட்டில் வசித்தபோது கிளி ஜோசியம் பார்த்த நிகழ்வொன்று நினைவுக்கு வர, அதையே கொஞ்சம் இட்டுக் கட்டி கதையாக எழுதி விடலாமே என்று முடிவு செய்தேன். இது கதையே இல்லை, வெறும் அனுபவக் குறிப்பாக இருக்கிறதே என்று -நியாயமான – விமர்சனம் வரும்தான் என்றாலும், உண்மையின் வீச்சிற்கு என்று ஒரு மதிப்பு இருக்கும் இல்லையா, என்று என்னை சமாதானம் செய்து கொண்டு இதை எழுத உட்கார்ந்தேன்.

செங்கல்பட்டில் பெரிய மணியக்காரத் தெருவில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு பின்மத்திய பொழுதொன்றில் கிளி ஜோசியன் வந்த அன்று பள்ளி விடுமுறை நாளாக இருந்திருக்க வேண்டும். மாடியில் வீட்டின் சொந்தக்காரரும், கீழே மூன்று போர்ஷன்களில் குடியிருப்பவர்களுமாக இருந்த 4 வீடுகளிலும் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இருந்தார்கள். குடித்தனக்காரர்கள் அனைவரும் ஜோசியம் கேட்க கூடினோம். ஆனால் நான் இன்று பார்த்த பெண் போல் இல்லாமல், கொஞ்சம் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும், அத்துடன் வித்தையொன்றை பார்க்கப்போகும் ஆர்வத்துடன் தான் அனைவரும் இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

முதலில் ஜோசியம் பார்த்தது சுந்தரி அக்கா. கிளி அவருக்கு எடுத்த சீட்டை பார்த்து விட்டு, “கவலைப் படாதம்மா, எல்லாம் நல்லபடியா நடக்கும்” ,”புருஷனுக்கு வேலை சரியாகிடும்” என்றெல்லாம் ஜோசியன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மகா ஆச்சரியம். பின்னே, சுந்தரி அக்கா பற்றி புட்டு புட்டு வைக்கிறானே. புதிதாக திருமணமாகி செங்கல்பட்டிற்கு அருகில் இருந்த கிராமத்தில் இருந்து வந்திருந்தவர் சுந்தரி அக்கா. அவர் கணவர் சென்னையில் எதோ தொழிற்சாலையில் தற்காலிக ஊழியராக பணியாற்றிக்கொண்டிருந்தார். நீண்ட பணி நேரம், விரைவுப் பேருந்துகள் அதிகம் இல்லாத காலத்தில் நீண்ட நேர ரயில் பயணம், இரவு நேர ஷிப்ட் என கடும் சுமை அவருக்கு. நேரங்கெட்ட நேரத்தில் பணி முடிந்து வருவதாலேயே இருவருக்கும் அவ்வப்போது சண்டை வர அக்கா கடுமையாக கத்திக் கொண்டிருப்பார். அருகில் இரு குடும்பங்கள் இருக்கின்றனவே, நான் வேறு பேச்சுத் துணைக்கு இருக்கிறேன், அக்காவிற்கு என்ன தனிமை இருக்கப்போகிறது, எதற்காக தேவையில்லாமல் சண்டையிடுகிறார் என்று அப்போது நினைத்துக் கொள்வேன். அதே நேரம், அந்த வார இறுதியிலே சிரித்தபடி பரவசமாக கிராமத்திற்கோ, சினிமாவிற்கோ இருவரும் கிளம்பி விடுவார்கள் என்பதையும் கவனிப்பேன். வத்தக் குழம்பின் உபாசகனாக மட்டுமே இருந்த எனக்கு, உருளைக் கிழங்கும், பூண்டும் கொண்டு செய்யப்பட்ட காரக்குழம்பை அறிமுகப்படுத்தியவர் அக்காதான். பின் என் வீட்டில் சொல்லி அதை செய்வித்த போதும் , பிற இடங்களில் அதை உண்டபோதும் அந்த முதல் நாள் ருசியின் பரவசம் மட்டும் கிட்டவேயில்லை. இதெல்லாம் எனக்கும் தெரிந்த விஷயங்கள் ஆச்சே, ஜோசியனும் சரியாக அக்காவின் கணவரின் வேலை குறித்தெல்லாம் சொல்கிறானே என்று பரவசமாக அவன் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தேன்.

அதிலிருந்த சூட்சுமத்தை புரிந்து கொள்ள இன்னும் சில வருடங்கள் தேவைப்பட்டன எனக்கு. உண்மையில் நான் மேலே கூறியவற்றுள் பல விஷயங்களை ஜோசியன் சொல்லவில்லை (கணவன்-மனைவி சண்டை, வார இறுதி இணக்கம் இத்தியாதி). அவன் சொல்லியது வேலை, எதிர்கால வாழ்க்கை பற்றிய பொதுப்படையான விஷயங்களை மட்டுமே. அவற்றையும்கூட, அக்காதான் பெரும்பாலும் சொல்லிக்கொண்டிருந்தார் என்பதும் பிறகு புரிந்தது. ஜோசியனின் பாணி எளிமையானது. கிளி எடுக்கும் சீட்டைப் படிக்க வேண்டியது, தொண்டையைச் செறுமி, “இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான், அப்பறம் சரியாகி விடும்” என்பது போல் எடுத்துக் கொடுக்க வேண்டியது. அதுவே ஜோசியம் பார்க்க வந்தவர்களுக்கு தூண்டுதலாக அமைய, அவர்கள் தங்கள் கஷ்டங்களைச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள், அதன் பின் அதைப் பற்றிக் கொண்டு சில நல்வார்த்தைகளை ஜோசியன் சொல்ல வேண்டியது. அவ்வளவு தான் விஷயம். அன்றும் அதுதான் நடந்தது. கிளியையே அதிகம் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு இந்த நுட்பம் அன்று புரியவில்லை, ஜோசியனே அனைத்தையும் சொல்லி விட்டதாக – எனக்குத் தெரிந்த, அவன் சொல்லாததை, பிற விஷயங்களைக் கூட அவன் சொல்லியதாக நானே மிகைப்படுத்தி – எண்ணிக்கொண்டேன். அக்காவும் அப்படி உணர்ந்தாரா என்று தெரியாது. அக்காவின் மனதை இலகுவாக்கும் சிலவற்றை ஜோசியன் சொல்லி முடிக்க, வீட்டின் முன்பகுதியில் குடியிருக்கும் அக்கா அடுத்து ஜோசியம் பார்த்தார்.

அவருக்கு ஜோசியம் பார்ப்பது எளிதாக இருந்திருக்க வேண்டும். அக்காவின் முதல் குழந்தைக்கு – அப்போது அவனுக்கு 3 வயதிருக்கும் – உதட்டில் பிளவு (cleft lip) இருக்கும். பள்ளியில் சேர்த்தபின், அவனால் படிக்க முடியுமா என்ற கவலை அவர்களுக்கு. அவர்களாக எதுவும் சொல்லாமலேயே ஜோசியன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நல்ல விஷயங்களை சொன்னான். நல்ல படிப்பு, சம்பாத்தியம், நல்ல இடத்தில் திருமணம் (3 வயது மற்றும் 1 வயதான குழந்தைகளின் திருமணம் பற்றி அவன் குறி சொல்வதின் அபத்தம் அப்போது எனக்கு புரியவில்லை).

அக்காவின் கணவர் பற்றி வழக்கமான பொத்தம் பொதுவான கருத்தாக “எல்லாம் சரியாயிடுவாரம்மா” என்று சொன்ன போது மட்டும் பிலி பிலி என அவரை அக்காவும், அவர் மாமியாரும் பிடித்துக் கொண்டது எனக்கு வியப்பளித்தது. ஏனென்றால், அக்காவின் குடும்பத்தை விட பொருளியல் ரீதியாக பின்தங்கிய குடும்பம் என்றாலும், அரசு வேலை, பணி உயர்வுக்கான வாய்ப்புக்கள் இதையெல்லாம் பார்த்து திருமணம் முடிக்கப்பட்டது என்று பேசிக்கொள்ளப்பட்டது (அதாவது மற்றவர்கள் பேசிக்கொள்வதை நான் தன்னிச்சையாக ஒட்டுக் கேட்டேன்). மாமியாரும் இவருடன் அவ்வப்போது வந்து தங்கியிருந்தார். கிராமத்தில் கணவரின் தம்பி ஒருவன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இவர் அதிகம் உதவுவதாக வீட்டில் சண்டை வரும், அக்காவின் குடும்பத்தினரும் வந்து சண்டையிடுவதை பார்த்திருக்கிறேன். மாமியார், மருமகள் இருவருக்குமே மகன்/கணவன் மற்ற தரப்பிற்குதான் சாதகமாக இருக்கிறான் என்ற எண்ணம் உண்டு என்பதால் சில சமயங்களில் இருவரும் ஒரே நேரத்தில் அவரை திட்டிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அதே சூழல் என்று சொல்ல முடியாவிட்டாலும், பல ஆண்டுகள் கழித்து நாவலொன்றைப் படித்தபோது, அதன் சம்பவங்களிற்கும் நான் அக்காவின் குடும்பத்தில் பார்த்ததற்கும் உள்ள சில ஒற்றுமைகளை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அன்று ஜோசியம் பார்த்த பெண்கள் , குழந்தைகளின் எதிர்காலம், கணவனின் வேலை இவற்றை பற்றியே கேட்டார்களே தவிர தங்களை பற்றிய தனிப்பட்ட கணிப்புக்கள் எதுவும் கேட்கவில்லை. அனைவரும் முதன்மையாக எதிர்பார்த்தது தங்கள் குடும்பம் குறித்த சில நற்சொற்களை மட்டுமே.

அடுத்து நான் ஜோசியம் பார்த்து முடித்தபின், ராட்சசி எங்களுடன் சேர்ந்து கொண்டார். எங்களுக்கு அடுத்த வீடு அவருடையது. வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்த அவர் கணவர், வக்கீலின் சில பல ரகசியங்கள் அறிந்தவர் என்றும் அதனால்தான், இத்தனை பெரிய வீட்டை அவரால் கட்ட முடிந்தது என்றும் பேச்சு  இருந்தது. ராட்சசி குமாஸ்தாவின் மனைவியே அல்ல (குறைந்தபட்சம் முதல் மனைவி அல்ல), முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது தொடுப்பு ஏற்பட்டதாகவும், அவர் நோயில் விழ – நோயுற்றவரை கருணையில்லாமல் வீட்டின் பின்புறத்தில், தோட்டத்தில் இறக்கும் வரை கவனிப்பற்று படுக்க வைத்திருந்ததாக, ராட்சசிதான் செய்வினை வைத்ததாக – இவர் வீட்டினுள் நுழைந்ததாகவும் பேசிக்கொண்டார்கள். இதனாலெல்லாம் சிறுவர்களான நாங்கள் அவரை ராட்சசி என்றழைக்கவில்லை. இன்று இதை சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது, ஆனால் சராசரிக்கும் சற்று அதிகமான உயரம், பருமனான உடல்வாகு, அடர் கருப்பு நிறம், சுருட்டை முடி என அவரின் தோற்றம்தான் அப்படி அழைக்கச் செய்திருக்க வேண்டும்.

இத்தனைக்கும் எப்போதும் அடர்த்தியாக குங்குமமும் விபூதியும் பூசிக்கொண்டிருக்கும், கழுத்தில் சிறு ருத்திராட்சை மணி அணிந்து கொண்டிருக்கும் அவரைப் பார்த்தால், பக்தி மிகுந்தவர் என்றே சொல்லலாம். எனக்கோ அவைகூட பீதி அளிக்கக்கூடியதாக – மந்திரம்,சூனியம் என என் கற்பனை தறிகெட்டு ஓடும் – இருந்தது. தலையில்லாதப் பெண் ஒருவர் இரவு நேரத்தில் பிச்சை கேட்க வருகிறார், இல்லையென்று சொன்னாலும் சரி, ஏதேனும் கொடுக்க கதவைத் திறந்தாலும் சரி பயங்கரமாக எதோ செய்து விடுகிறார் என்றும் ஒரு முறை புரளி பரவியது. (கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தலையில்லாத பெண்ணும் வேறெங்கோ பிச்சை எடுக்கக் சென்று விட, எல்லாப் புரளிகளைப் போல இதுவும் முழுமையாக இல்லாததால் அவர் பயங்கரமாக என்ன செய்தார் என்பது இறுதி வரை தெரியாமலேயே போய் விட்டது ). இதைக் கேட்டதும் நான் முதலில் சந்தேகப்பட்டது ராட்சசியைத்தான். நாங்கள் குடியிருந்த வீட்டின் கடைசி போர்ஷன் எங்களுடையது என்பதால் நீண்ட சந்தொன்றில் நுழைந்து தான் செல்ல வேண்டும். வீட்டின் முன்புறத்தில் உள்ள – காலமாகி விட்ட – வீட்டைக் கட்டியவரின் மார்பளவு சிலை கிலியை ஏற்படுத்தினால், இருண்ட சந்திற்குள் நுழைந்தவுடன் சுவற்றின் மறுபுறமுள்ள வீட்டில் ராட்சசி என்ன மந்திர தந்திர செயல்களில் ஈடுபட்டிருக்கிறாரோ என்று தறிகெட்டு ஓடும் என் கற்பனை பீதியை இன்னும் அதிகமாக்கும்.

பயம் உருவாக்கிய விலகலுடன்தான் தெருவில் உள்ளவர்கள் அவரிடம் பழகினார்கள். அன்றெல்லாம் சாதாரண கருப்பு/ வெள்ளை தொலைக்காட்சி என்பதே தெருவில் ஓரிரு வீடுகளில் மட்டுமே இருந்த சூழலில், ராட்சசி வீட்டில் வண்ணத் தொலைக்காட்சியே இருந்தது. இருந்தும் தொலைக்காட்சி இருக்கும் மற்ற வீடுகளுக்கு வார இறுதி படம், பாடல் நிகழ்ச்சியை பார்க்க முண்டி அடித்து செல்வார்களே தவிர ராட்சசியின் வீட்டிற்கு யாரும் சென்றதில்லை. வார நாட்களில் மாலை நேரத்தில் பெண்கள் சிறு சிறு குழுக்களாக வீட்டு வாசல்களில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருப்பது தினசரி காட்சி. ஆனால் ராட்சசி மட்டும் தனியாக தன் வீட்டு வாசலில் அமர்ந்திருப்பார். தெருவில் செல்பவர்களிடம், அடுத்த வீட்டுக்காரர்களிடம் சில சமயம் பேச்சு கொடுத்தாலும் அதை சில நிமிடங்களுக்கு மேல் அவர்கள் நீடித்ததில்லை.

எனவே ராட்சசி எங்களுடன் சேர்ந்து கொண்டது எங்களுக்கு உவப்பாக இல்லாததோடு, சிறிது அசூயையும் உருவாக்கியது. அவர் எதிர்காலம் குறித்து தெரிந்து கொள்ள அல்ல, வேடிக்கை பார்க்க மட்டுமே வந்திருந்தார். ஜோசியன் அவரிடம் சீட்டெடுக்கச் சொன்ன போது ‘எல்லாம் அவனுக்குத் தான் தெரியும்’ என்பதாக ஏதோ முதலில் சொன்னவர், சின்ன வற்புறுத்தலுக்குப் பின் ஒப்புக்கொண்டார். ஆனால் இரண்டு மூன்று முறை கிளி அவருக்கான சீட்டை எடுக்கவில்லை. அவர் குறித்து விபரீத கற்பனைகளையே கொண்டிருந்த எனக்கு இதுவும் பயத்தையே உண்டாக்கியது, கிளிக்கு இவர் ரகசியங்கள் குறித்து தெரியும், ஆனால் அவற்றை சொல்ல பயம் அதனால்தான் சீட்டை எடுக்கவில்லை என்று நினைத்தேன். ஜோசியனோ அதற்கு சிறிது பருப்பும் தண்ணீரும் கொடுத்து சீட்டை எடுக்க வைத்து விட்டான். வழக்கம் போல், நேர்மறை விஷயங்களை சொல்ல ஆரம்பித்தவன், சற்று நிறுத்தி, கொஞ்சம் யோசித்தபின், ராட்சசி அடுத்த இரு வருடங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பொருள்படும் படி பூடகமாக ஏதோ கூறினான். இப்படி சொல்வதால் ராட்சசி கோபமடைவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை, மீண்டும் ‘எல்லாம் அவன் பாத்துப்பான்’ என்பதாக ஏதோ சொன்னார். இருந்தாலும் அவர் வந்ததிலிருந்தே குறைந்து கொண்டிருந்த சூழலின் இனிமை இப்போது முற்றிலும் மறைந்து விட்டது. மாலை நேர வேலைகளை ஆரம்பிக்கும் முன், சிறிது நேரம் பொழுதைக் கழிக்கும் வழியாக ஜோசியம் பார்ப்பதை அணுகியவர்களுக்கு இப்போது அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று தோன்ற ஆரம்பித்தது. ஜோசியனும் கிளம்பினால் போதும் என்ற மனநிலையில் இருந்தவன் போல மூட்டை கட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றான். ராட்சசியிடம் பணம் வாங்கினானா என்பதைக்கூட இப்போது என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. இது என்னுடைய வழக்கமான அதீத கற்பனையாகக் கூட இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அடுத்த ஒரு வருடத்தில், சுந்தரி அக்காவின் கணவருக்கு பணி நிரந்தரமாகி அவர்கள் சென்னைக்கே சென்று விட்டார்கள். அக்காவிற்கு குழந்தை பிறந்தது என்பது தான் அவர்கள் குறித்து நான் கடைசியாக கேள்விப்பட்டது. (“ஜோசியர் சொன்ன மாதிரியே நடந்துடுச்சு இல்ல அக்கா ” என்று அவர்கள் கிளம்புவதற்கு சில நாட்கள் முன் நான் கேட்ட போது “எந்த ஜோசியண்டா” என்று அவர் ஏன் கேட்டார் என புரிந்து கொள்ள சில ஆண்டுகள் தேவைப்பட்டது). இன்னொரு அக்காவின் கணவருக்கு பதவி உயர்வு கிடைத்து அவர்களும் காலி செய்து, செங்கல்பட்டிலேயே வேறு வீட்டிற்கு சென்று விட்டார்கள். அந்தப் பையனின் உதட்டுப் பிளவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இப்போது இரு குழந்தைகளும் பெரியவர்களாகி, நல்ல வேலை கிடைத்து (இரண்டாவது குழந்தை டாக்டர்) அவர்களுக்கும் திருமணம் முடிந்து பெற்றோர்களாகி விட்டார்கள் . இதல்லாம் இயல்பாக நடந்தவை, எளிதில் யூகிக்கக் கூடியவை என்று நினைத்தாலும் ராட்சசி குறித்து யோசிக்கும் போது அப்படி உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இரண்டு வருடங்களுக்குள், அதிக பட்சம் 60 வயது வயதாகியிருக்கக்கூடிய குமாஸ்தா, எந்த நோயினாலும் பீடிக்கப்பட்டிருக்காத நிலையில், திடீரென்று காலமாகி விட்டார். அதன் பின் சில நாட்களில் ராட்சசி வீட்டை விட்டு சென்று விட்டார், அவரை அதன் பின் குமாஸ்தாவின் -முதல் மனைவியின்- பெண் தன் சொந்தக்காரர்களுடன் வந்து சண்டையிட்டதில் ராட்சசி வெளியேற நேரிட்டது என்ற பேச்சு இருந்தது. சூனியம், பேய் குறித்த அதீத பயங்கள் அப்போது கொஞ்சம் குறைந்து விட்டதால், அவர் குறித்து நான் அதிகம் கவனம் கொள்ளவில்லை, ஆனால் மந்திரம், தந்திரம் தெரிந்தவர் என்று சொல்லப்பட்டவர் ஏன் பெரிதாக எதிர்க்காமல் சென்று விட்டார் என்று மட்டும் பின்னர் யோசித்திருக்கிறேன். அனைவரும் நல்ல விஷயங்களையே சொன்ன ஜோசியன், ஏன் ராட்சசிக்கு மட்டும் எதிர்மறையாகச் சொன்னான் என்பதும் குறித்தும் ஒரு வேளை நாலைந்து பேருக்கு ஜோசியம் பார்க்கும்போது ஒருவருக்கேனும் அவ்வாறு சொல்லவேண்டும் என்பது அவன் தொழில் முறையோ என்றும், கிளி ஏன் இரண்டு மூன்று முறை கழித்தே சீட்டை எடுத்தது என்றால், அதற்கும் அயர்ச்சி ஏற்பட்டிருக்கக் கூடும் என அதற்கும் நானே காரணங்களை உருவாக்கி இருக்கிறேன்.

அவன் ஜோசியம் மெய்யோ, பொய்யோ இருந்தாலும் சரி, என்னளவில் அவனை நம்ப மாட்டேன். பின்னே, கிளி எடுத்த எனக்கான சீட்டை பார்த்து ‘அய்யனாருக்கே அல்வா கொடுப்பாரு’ என்று என்னைப் போய் மகா சாமர்த்தியசாலியாக குறிப்பிட்டவனை நான் எப்படி நம்ப முடியும்? ஆனால் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். பெரும்பாலான வீடுகளைப் போல, என் பெற்றோரும் என் ஜாதகத்தை சில, பல தொழில்முறை ஜோசியர்களிடம் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். சொல்லி வைத்தார் போல் அனைவரும் ‘மிகச் சிறந்த ஜாதகம், ஆஹா, ஓஹோ’ என்றும் ‘பணம் கொட்டும் , வெளிநாட்டு வாழ்க்கை கிடைக்கும் ‘ என்றெல்லாமும் சொன்னதாக திரும்பி வந்து என்னிடம் கூறும் போது உண்டாகாத மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அன்று கிளி ஜோசியன் சொன்னதைக் கேட்டு எனக்கு உண்டானது. அதன் பிறகு சில நாட்களுக்கு, எதிலும் வெற்றி பெறுவதற்கென்றே ஆசிர்வதிக்கப்பட்டவனாக, பலே சாகசக்காரனாக என்னை நினைத்துக் கொண்டிருந்ததும், பிறகு இயல்பாகவே அந்த மயக்கங்கள் கலைந்து விட்டன -என் அசமஞ்சத்தனம் குறித்து வெகு விரைவில் உணர்ந்து கொண்டதால் – என்பதும் உண்மையே (மற்ற தொழில்முறை ஜோசியர்கள் சொன்னதும் கூட பெரிதாக பலிக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்). ஆனாலும் அவன் சொன்னதைக் கேட்டபோது உண்டான சந்தோஷத்தின் எச்சத்தை , இதோ இப்போது அதை பற்றி எழுதும்போதும் உதட்டில் தோன்றும் புன்முறுவலில் உணர்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.