தீவிர இலக்கியத்தில் ஆர்வம் கொள்வது என்பது பல சமயங்களில் புற உலக வசீகரங்களிலிருந்தும் உறவுகள் மற்றும் பொருளாதாரத்தை அடிப்படையாய்க் கொண்ட வாழ்க்கை விசைகளிலிருந்தும் நம்மை விலக்கிக் கொள்வதாகவே உள்ளது. இது படைப்பாளிக்கு மட்டுமல்ல, வாசகனுக்கும் கூடத்தான் பொருந்துகிறது. இலக்கிய ருசி கண்டபின் பிற விஷயங்கள் முக்கியத்துவம் இழந்து விடுகின்றன. உதாரணமாக, பழைய பள்ளி நண்பர்கள் சேர்ந்து உருவாக்கும் வாட்ஸப் குழுக்கள் எல்லாமேகூட பொருளிழந்து விடுகின்றன- அவற்றில் இலக்கிய விவாதங்கள் இடம் பெறாவிடில். அவர்கள் எல்லாரும் ஓரிடத்தில் நின்றிருக்க நாம் எங்கோ நகர்ந்தாற்போல், அல்லது அவர்கள் வேறு திசையில் சென்றுவிட, நாம் தனித்து நிற்பது போன்ற ஒரு இடைவெளியை உணர முடிகிறது.
வாசகன் நிலையே இப்படி என்றால், லௌகீக வாழ்விலும் பெரும் வெற்றி பெறாத, வணிக இலக்கியத்தில் கிடைக்கும் பெரும்புகழும் அடைய முடியாத ஒரு படைப்பாளிக்கு மிஞ்சுவதுதான் என்ன? தான் தனித்துவமானவன் என்ற ஒரு ஆத்ம திருப்தியா? அல்லது, அந்த அகங்காரத்தின் நிறைவா? அந்த சுய அடையாளமும் சில சமயங்களில் அசைக்கப்படும்போது என்ன மிஞ்சுகிறது?
ஆதவன் எழுதிய சிறுகதை, ‘புதுமைப்பித்தனின் துரோகம்‘ விவாதிப்பது இதைத்தான். வேணு ஒரு தீவிர இலக்கிய எழுத்தாளன். ராம் அவனது பழைய நண்பன், இப்போது வெற்றிகரமான வணிகன். நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கும் இருவரும் ராம் தங்கியிருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் பேசிக்கொண்டே சாப்பிடுகிறார்கள். வேணுவுக்கு இப்போது ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவின் ருசியே பிரதானமாக இருக்கிறது. அந்த உணவின் ருசிக்கு கூடுதல் சுவை சேர்க்க, தற்போதைய புரவலராக தன் முன் அமர்ந்திருக்கும் ராமுக்கும் தன் இலக்கியவாதி பாவனையின் பிரசன்னத்தை உருவாக்க முயல்கிறான் வேணு. அதற்கு ஏற்றாற்போல், தான் புழங்கும் வட்டங்களில் வேணுவின் எழுத்துக்கு உள்ள வரவேற்பை, குறிப்பாக பெண்களிடத்தில் அவன் எழுத்து வாசிக்கப்படுவதைச் சொல்லி வேணுவை மகிழ்விக்கிறான் ராம்.
பேச்சு வளர வளர, தான் புதிதாக அடைந்திருக்கும் இலக்கிய ரசனையை வேணுவின் இலக்கிய ஹோதாவின் மீது தீட்டிப் பார்க்கும் ஆர்வம் ராமுக்கு வருகிறது. புதுமைப்பித்தனைப் பற்றி போகிறது பேச்சு. புதுமைப்பித்தனின் சில கதைகளை இருவரும் விவாதிக்கிறார்கள். வேணுவுக்கு இப்போது ராமின் நோக்கத்தின் மீது சந்தேகம் வந்துவிடுகிறது. ராம் புதிதாக அணிந்திருக்கும் இலக்கிய ஆர்வலன் வேஷம் தன் ஒரே ஒரு தனித்துவத்தையும் கழற்றி அம்மணமாக்கும் செயல் என்று எண்ணத் தொடங்குகிறான் வேணு. அதனால், புதுமைப்பித்தன் கதைகள் மீதான ராமின் வாசிப்பினை கடுமையாக நிராகரிக்கத் தொடங்குகிறான் அவன்.
புதுமைப்பித்தன் கதைகளில் மனைவி பாத்திரங்கள் முக்கியத்துவம் பெறாமையில் அவரது தோல்வியடைந்த மண வாழ்க்கை வெளிப்படுகிறது என்ற ஒரு கோணத்தை ராம் சொல்ல, அப்படியெல்லாம் எளிமைப்படுத்த முடியாது என்று மறுக்கும் வேணு, ‘செல்லம்மாள்’, ‘காஞ்சனை’ கதைகளைக் குறிப்பிடுகிறான். ஆனால் ராம், அந்த இரு கதைகளிலுமே மனைவி பாத்திரங்கள், ஒன்று இறந்து போகின்றன அல்லது கொல்லப்பட இருக்கின்றன என்கிறான். இதை far-fetched என்று நிராகரிக்கிறான், வேணு. அதற்கு பதிலாக ராம், அப்படியும் இருக்கலாம், ஆனால் இந்தக் கோணத்தை க.நா.சு.கூட ஒப்புக்கொள்கிறாரே என்றதும் வேணுவின் வாய் அடைத்துப் போகிறது. க.நா.சுவின் இலக்கிய ஹோதா தன்னை ஏற்குமா என்று ஏங்கும் ஒரு இளம் எழுத்தாளன் அவன். தன் நண்பன் க.நா.சுவுடன் சகஜமாக இலக்கியம் பேசக்கூடியவன் என்று அறிந்தவுடன், அந்த இனிய மாலைப் பொழுதின் ஒளி அவிந்து விடுகிறது. பிறகு கடனே என்று பேசிக்கொண்டிருந்துவிட்டு ராமின் காரிலேயே தான் இருக்கும் குறுகலான, திருவல்லிக்கேணி சந்திற்கு வெளியிலேயே இறங்கி கொண்டு சோர்வாக வீடு திரும்புகிறான்.
அங்கு தன் ஆற்றாமையை, தான் பட்ட அவமானத்தை, மனைவியிடம் எரிந்து விழுந்து தணித்துக் கொள்கிறான். அதன் பின், கை கால் முகம் கழுவி உள்ளே நுழைகையில், தான் ஒரு சராசரி நடுத்தர வர்க்க கணவனாகவே நடந்து கொண்டிருப்பதை நினைத்துக் கொள்ளும்போது புதுமைப்பித்தனின் இன்னொரு கதை, ஆபிசில் சாதாரண குமாஸ்தாவாகவும் வீட்டில் சர்வாதிகாரியாகவும் விளங்கும் ஒரு நடுத்தர வர்க்க கணவன் பற்றிய கதை, நினைவுக்கு வருகிறது. ,உடனே அவனுக்கு புதுமைப்பித்தன் மீது வெடித்துக் கிளம்புகிறது கோபம்- உனக்கென்ன வேண்டியிருந்தது, இந்த நடுத்தர வர்க்கம் மீதான satire, ராம் போன்ற சோஃபிஸ்டிகேடட் வாசகர்களின் அங்கீகாரத்துக்காக உன் வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்த துரோகி, என்று மனதார புதுமைப்பித்தனைத் திட்டித் தீர்த்தவுடன் அவன் மனதில் ஒரு சாந்தம் தோன்றுகிறது, அன்பான குரலில் மனைவியிடம் காபி கொண்டு வரச் சொல்கிறான். இப்படி முடிகிறது கதை.
ஆனால் நம் கேள்விகள் தொடங்குகின்றன. வேணு விரும்புவது எதை? பொருளியல் பிரச்னைகளில் சிக்குண்டு, அதிருப்திமிக்க, ஆனால் இலக்கியவாதி எனும் ஒரு அடையாளத்தோடு வாழும் இந்த வாழ்வா, அல்லது செல்வந்தனான, இலக்கியமும் ரசிக்கக்கூடிய ராமின் வாழ்வா? புதுமைப்பித்தனை வேணு நிஜமாகவே திட்டுகிறானா? (அது அவர் மீதான செல்லச் சிணுங்கல் அல்லவா?) ஒரு கோணத்தில் ‘புதுமைப்பித்தனின் துரோகம்,’ எழுப்பும் கேள்வி, எப்படிப்பட்ட வாழ்வு உயர்ந்தது- அர்ப்பணிக்கப்பட்ட, அதனால், கோபதாபங்கள் மற்றும் பொருளியல் பற்றாக்குறைகள் மிகுந்த வாழ்வா, அல்லது லௌகீக வாழ்க்கையில் வெற்றி பெற்றது போதாதென்று கலைஞனின் ரசனையிலும் கை வைக்கும் dilettante என்று சொல்லப்படக்கூடிய பணக்கார வாழ்வா?
ஒரு எழுத்தாளன் யாருக்காக எழுதுகிறான் என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. ஒரு உண்மையான, நேர்மையான கலைஞன் தனக்கும் தன் வர்க்கத்துக்கும் விசுவாசமாக இல்லாமல் உரித்துப் போடும் போலித்தனங்கள் பிழைக்கத்தெரிந்த ரசிகர்களால் சுவீகரித்துக் கொள்ளப்படும்போது அவனே நகைப்புக்கிடமாகிறான் என்றாலும், அவனது முதல் தேர்வும் லட்சியமும் வாழ்க்கை குறித்த, உண்மை குறித்த ஒரு நேர்மையான விசாரணைதானே? இதில் தன் வர்க்கம், பிறர் வர்க்கம் என்று பார்ப்பதற்கு இடமுண்டா என்ன?
2 comments