“ஒரு கலைஞன் தன் சாதனைகளின் கூறுகளை உணர்ந்து, அது குறித்து நியாயமான கர்வம் கொள்வதில் தவறில்லைதான். அதே சமயத்தில், தன் சாதனையின் பரிமாணங்கள் குறித்த பூதாகரமான பிரக்ஞையும் அவனுக்கு நல்லதில்லை. இந்தப் பிரக்ஞையின் பளு இல்லாத வரையில்தான் பணிவுடன், யதேச்சையான, இளமையான, ஒரு மனப்பாங்குடன் அவன் தன் கலையைப் பயிலவும் பேணவும் முடியும்”
மேற்காணும் வரிகள் ஆதவனின் ‘அகந்தை,’ சிறுகதையில் வருபவை. ஒரு கலைஞன் பயிலும் கலை, ரசிகர்கள் அவனைக் ஏற்றுக் கொள்வதில் முழுமை அடைகிறது. ஆனால் அந்தக் கலைஞன் எம்மாதிரியான பாராட்டுகளை விரும்பி ஏற்கிறான்? தன் கலையின் எல்லா நுணுக்கங்களையும் புரிந்து கொண்ட ஞானம் மிக்க சிலரின் பாராட்டா, அல்லது அவனது பிராபல்யத்தின் காரணமாக ஒரு மந்தைத்தனத்தோடு குவிக்கப்படும் வெற்றுப் புகழ் மொழிகளா? அல்லது இரண்டுமே ஒரு நல்ல கலைஞனுக்குத் தேவைப்படுமோ?
இந்தக் கேள்விதான் ஆதவனின் ‘அகந்தை,’ சிறுகதையின் அடிப்படை என்று சொல்லலாம். மத்திய அரசு அளிக்கும் விருது ஒன்றினைப் பெற்றது முன்னிட்டு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் வெங்கடேஸ்வரனுக்கு பாராட்டு விழா. அவரது பிரதான சிஷ்யன் கல்யாணமும் ஒரு பேச்சாளர். தன் முறை வரும்போது, அவரின் கலையைப் பற்றிய தன் நுணுக்கமான அவதானிப்புகளை- அவர் பாடும் முறையின் தனித்துவத்தை, இதுவரை எவரும் தொட்டுப் பேசியிராத சில தனித்த அம்சங்களை, விரிவாக எடுத்துரைத்துப் பாராட்டக் காத்திருக்கிறான். ஆனால் அதற்கு முன் மேடையில், அந்த ஊரின் கலெக்டர் பேசுகிறார். இசை ரசனை ஏதுமற்ற, வழக்கமான, அரசு அதிகாரிக்குரிய தோரணையோடு ஆற்றப்படும் உரை, மேலும் அதையடுத்து இன்னும் சில சமத்காரமான உள்ளீடற்ற பேச்சுக்கள் என்று போய்க் கொண்டிருக்கிறது. இந்த வெற்று உரைகளை வெங்கடேஸ்வரன் கிண்டலாகவே அணுகி, மேடையிலிருந்தாலும் தன்னிடம் கண்ஜாடையில், குறும்புச் சிரிப்பில் அதிருப்தியைப் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்த்திருக்கும் அவனுக்கு வெங்கடேஸ்வரன் அந்த உரைகளை ரசித்து அமர்ந்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. கடைசியில் உங்களுக்கும் இதுதான் வேண்டியிருக்கிறது என்று வெறுப்போடு நினைத்துக் கொள்கிறான்.
அவனது முறை வரும்போது, தான் தயாரித்து வந்ததைப் பேசாமல் அவர் எப்படி எவ்வளவு எளிமையானவர், தன்னைப் போன்றவர்களின் முட்டாள்தனத்தையெல்லாம் எப்படி மன்னித்து அருள்பவர் என்றெல்லாம் ஒரு விதூஷக வேஷம் கட்டிப் பேசுகிறான். கூட்டம் ஆரவாரிக்கிறது. வெங்கடேஸ்வரன் அகந்தை கொண்டு விட்டதாகவே நினைக்கிறான். தான் அங்கு உதாசீனப்படுத்தப்பட்டதாகவும் உணர்கிறான். வெறுப்போடு வீடு திரும்பியவன், பிறகு வெங்கடேஸ்வரன் வீட்டுக்குப் போவதையே பல நாட்களாக தவிர்க்கிறான்.
அவருக்குத் தன் வித்தையைப் பற்றிய அகந்தையும் புகழில் ஆசையும் வந்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறான். அப்போது ஒருநாள் வெங்கடேஸ்வரன் பாடிய ஒரு பழைய கச்சேரியை வானொலியில் கேட்டு மனமுருகி, தரையில் அமர்ந்து அந்த ‘ராம பக்தி சாம்ராஜ்யம்‘ கீர்த்தனையைப் பாடுகிறான். மனம் நிர்மலமானதைப் போல் இருக்கிறது.
அடுத்த நாள் அவன் அதுவரை அறியாத ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, நேற்று அவன் பாடிய கீர்த்தனையை வெகுவாகப் பாராட்டி, பாட்டில் இருந்த நுணுக்கங்களைக் குறித்து விரிவாக உரையாடுகிறார். அவன் வீட்டின் மாடியில் குடியிருப்பவர் அவர். பின் இந்தப் பழக்கம் தொடர்கிறது. அவருக்காக இவன் பாடுகிறான். நுணுக்கமான அவரது அவதானிப்புகளுக்கு ஈடு கொடுப்பதற்காக ஒவ்வொரு நாளும் மேலும் நுணுக்கங்களுக்காக முயன்று என்று போகிறது நாட்கள்-, ஆனால் ஒரு கட்டத்தில் அவரது நுட்பமான அவதானிப்புகளும் ரசனையும் அவனுக்குச் சலிக்கத் தொடங்குகிறது. அவரைத் தவிர்க்கத் தொடங்குகிறான்.
அப்போதுதான் மேலே மேற்கோளில் சொன்ன அந்தச் சிந்தனை தோன்றுகிறது அவன் மனதில். அந்த ரசிகர் தனக்கு, தன் பாடும் திறன் மீது, பூதாகாரமான ஒரு பிரக்ஞையை உருவாக்கித் தன் கலை அப்பியாசத்துக்கு தடையாவதாகத் தோன்றும் அதே சமயம், வெங்கடேஸ்வரனின் நினைப்பும் வருகிறது கல்யாணத்துக்கு. நுணுக்கமான ரசனை வெளிப்பாடுகளால் தன் கலை குறித்த பூதாகரமான பிரக்ஞையை மறைக்க அல்லது தவிர்க்கத்தான் அன்று அவர் பல வெற்று உரைகளை ரசித்தாரோ? அல்லது, அவற்றை ரசிப்பது போலக் காட்டிக் கொண்டாரோ, என்று நினைக்கும்போதே அப்படித்தான் என்று தோன்றுகிறது அவனுக்கு.
இசையின் நுணுக்கங்களை அறியாத எளிய பாமர ரசிகர்களை ஊக்குவித்து தன்னை அவர் உதாசீனப்படுத்தியதாகக் கருதியதும் தவறோ என நினைக்கிறான் அவன். மாறாக, நுட்பமான ரசிகர்களின் மதிப்பீடுகளினால் தன் கலைக்கு ஏற்படும் இடையூறுகளை உணர்ந்துதான் எளிமையான ரசிகர்களை நோக்கி ஓடியிருக்கிறார் அவர் எனவும் நினைக்கிறான். மறுநாளே மனைவி குழந்தையுடன் வெங்கடேஸ்வரனைச் சந்திக்க அவர் வீட்டுக்குப் போகிறான். இப்படி முடிகிறது கதை.
ஆதவனின் பெரும்பாலான கதைகளைப் போலவே இதிலும் மனித வாழ்வின் தவிர்க்கவியலா புற காரணிகள், சம்பவங்கள் உருவாக்கும் பாதிப்பைவிட, மனநிலைகளின் முரண்கள் உருவாக்கும் பாதிப்புகளே அலசப்பட்டிருக்கிறது. இதில் ஒரு கலைஞன், இன்னொரு கலைஞனின் மனநிலையை தனது சுய அனுபவத்தின் மூலமாக ஏற்படும் ஒரு திறப்பின் வழியாக புரிந்து கொள்வது விவரிக்கப்படுகிறது. ஒரு கலைஞனுக்கு உவப்பளிப்பது என்ன என்ற கேள்வியும் விவாதிக்கப்படுகிறது. இன்னொரு கோணத்தில், கலை குறித்தான அவதானிப்புகள், விமரிசனங்கள் கலைஞனின் மீது ஏற்படுத்தும் பாதிப்பையும் விவாதிப்பதாகப் பார்க்கலாம். அவை பாராட்டாக இருந்தாலும், குறை கூறலாக இருந்தாலும், அதில் நுணுக்கங்கள் மேலிட மேலிட ஒரு கலைஞனுக்கு மகிழ்ச்சியைவிட, ஒருவித இறுக்கத்தையே (Discomfort) ஏற்படுத்துவதை சிலரிடத்தில் கவனித்திருக்கிறேன். முக்கியமாக, இந்தக் கதையில் வருவதைப் போல், இசைக்கலைஞர்களிடம் அதை மிகத் தெளிவாகப் பார்க்கலாம்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.வி ஒரு தொலைக்காட்சி தொடரில் மிக விரிவாக நேர்காணல் செய்யப்பட்டார். அவரது இசையமைக்கும் முறையும், ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு ராகத்தை தேர்ந்தெடுக்கும் காரணத்தையும் விளக்கும்படி கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர் நேரடியாக பதில் சொல்லவேயில்லை. சற்றே கூச்சத்துடன், அது அப்படி வந்தது அப்படி பண்ணினேன், என்பது போன்ற மிக எளிமையான ஒரு வரி பதில்களாலேயே அந்தக் கேள்விகளை எதிர்கொண்டார். கிரிக்கெட் ஆட்டத்தில்கூட, கபில்தேவ் போன்றவர்கள் தம் திறமைகளைக் குறித்த நுணுக்கமான கேள்விகளை தவிர்த்து விடுவதையே கண்டிருக்கிறேன். A Genius can never explain his genius என்று அந்த நேர்காணல்களை காணும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்.
ஆனால் இந்தச் சிறுகதை வேறொரு கோணத்தை திறக்கிறது. தன் படைப்பின் நுணுக்கங்களை விவாதிப்பதை ஓரளவுக்கு மேல் ஒரு கலைஞனால் விரும்ப முடியாதோ என்ற கேள்வியை முன் வைக்கிறது. அதே போல ஒரு ரசிகனுக்கு ஏற்படக்கூடிய, தன் ரசனையின் நுட்பத்தின் மேன்மை குறித்த ஒரு பெருமிதத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. உதாரணமாக, வெங்கடேஸ்வரனின் போக்கு குறித்து தொடர்ந்து சிந்திக்கும் கல்யாணம், ஒரு கட்டத்தில், மேன்மையான, நுட்பமான ரசிகன், சமரசமற்ற கலைஞனை மட்டுமே கொண்டாடுபவன் என்ற அகந்தை தனக்குத்தான் இருக்கிறதோ என்றே நினைக்கிறான்.
கூடுதலாக, ஆதவனின் நகைச்சுவை உணர்வுமிக்க அவதானிப்புகள்- அந்தப் பாராட்டு விழாவில் கலெக்டர் பேசி முடித்தவுடன் பேச வருபவர்களுக்கு, விழா நாயகரைப் பாராட்டுவதன் கூடவே, நமது கலெக்டர் அய்யா சொன்னது போல என்றோ, கலெக்டர் அய்யா அழகாகச் சொன்னார்கள் என்றோ கலெக்டர் பேச்சையும் பாராட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது, நீதிபதி, தலைமை ஆசிரியர் ஆகியோர் தத்தம் தொழிற் கோணத்திலேயே பாராட்டுவது போன்ற இடங்களும்- குறிப்பாக, வெங்கடேஸ்வரனின் மனைவி குறித்த கல்யாணத்தின் மனைவியின் கூர்மையான அவதானிப்புகளும்- என்று பல விஷயங்களை ரசித்துப் படிக்கக்கூடிய சிறுகதை, ‘அகந்தை’
2 comments