வீடு, வாசல், பணம், நகைகள் போன்றவற்றை எல்லாம் வாரிசுகளுக்கு மாற்றிக் கொடுக்கலாம். ஆனால் ஞானம், கலை ஆர்வம், வித்வத் ஆகியவற்றை? மகத்தான கலைஞர்களின் வாரிசுகள் பெரும்பாலும் இன்னொரு நல்ல கலைஞர்களாக ஆவதில்லை. வாரிசுகள் அதிகம் உருவாகும் கலை, என்று குரலிசையைச் சொல்லலாம். ஏனெனென்றால் குரல் வளம் என்பது அடிப்படையிலேயே உடற்கூறு மரபு சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மகத்தான பாடகர்கள்/ வாத்திய இசைக்காரர்களின் வாரிசுகள், ஓரளவாவது பாடவோ, இசைக்கவோ செய்கிறார்கள். அடுத்த சந்ததிகளிடம் அந்தக் கலை இறங்கி வராமற் போவது அரிதாகவே நிகழ்கிறது. ஆனால் அனைவரும் தம் தந்தை அல்லது தாய் தொட்ட உயரங்களை தொடுவதில்லை.
ஆனால், வாசிப்பு ஆர்வம், இலக்கிய நுண்ணுணர்வு, படைப்பு, போன்றவை மிக மிக அரிதாகத்தான் அடுத்த சந்ததியினருக்கு வந்து சேர்கிறது. நல்ல இசைக்கலைஞர்களாக தந்தை/ தாய் – மகன்/ மகள் ஜோடியைப் பார்க்க முடிகிற அளவுக்கு எழுத்தாள தாய்/ தந்தை– மகன்/ மகள் இருக்கிறார்களா? மிக அரிதாகவே இப்படி ஒரு ஜோடியை சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இலக்கிய ரசனை ஒரு மனப் பயிற்சி, மரபணு ரீதியாக மாற்றப்பட வழியில்லை.
லௌகீக விஷயங்களைத் தாண்டிய அல்லது அதில் அதிகம் பற்றில்லாமல், இலக்கியம், ஆன்மிகம், இசை போன்ற விஷயங்களைக் குறித்த தேடலும் அதில் திறனும் உள்ள மனிதர்களின் குடும்பத்தினர் அவர்கள் மீது கொண்டிருக்கும் உணர்வுகள்தான் உண்மையில் என்ன? இம்மாதிரியான மனிதர்கள் மீது அவர்களின் திறனை புரிந்துகொண்ட உண்மையான மரியாதையா? அல்லது அது அவர்களுக்கு தங்கள் பொருளியல் ரீதியான பலவீனங்களையும் தோல்விகளையும் மறைத்துக் கொள்ள பயன்படும் முகமூடியாக உதவும் மௌடீக பக்தியா? அவ்விதமான பக்தி ஞானஸ்தர்களுக்கு திருப்தியை தருமா?
இந்தக் கேள்விகளே ஆதவனின் ‘தில்லி அண்ணா’ சிறுகதைக்கு அடிப்படை. வாசுதேவன் தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பதவியில் இருக்கும்போது அதிகம் “சம்பாதிக்காமல்” ஞானஸ்தர் என்ற மரியாதையுடன் வாழ்க்கை நடத்துபவர். இப்போது அவர் இருப்பது தன் குமாஸ்தா மகனான அம்பியின் குவார்ட்டர்ஸில். அவரது மனைவிக்கும் மகனுக்கும் மகளுக்கும் தங்கள் தந்தையின் ஆளுமை குறித்த பெருமை உண்டு. ஆனால் அதற்கான அடிப்படைகள் மீது ஆர்வம் கிடையாது. இவர்களின் இந்தக் குணத்தை வாசுதேவன் கேள்விக்கு உள்ளாக்கும் தருணத்தை அவரது தம்பி குடும்பத்தினர் அவரது வீட்டிற்கு வரும் ஒரு சம்பவம் மூலம் கதையாக்கியுள்ளார் ஆதவன்.
வாசுதேவனின் தம்பி ராமச்சந்திரன் தன் அண்ணனைப் போலவே குமாஸ்தாவாக வாழ்க்கையைத் தொடங்கினாலும், ஒரு கட்டத்தில் தன் மனைவியின் சகோதரர்களின் உதவியால், நல்லதொரு தனியார் கம்பனியில் உயர் பதவி வகிப்பவர். பொருளியல் ரீதியாக தன் அண்ணனை விட பல மடங்குகள் முன்னேறியவர். அவருக்கு தன் அண்ணன் மீது கல்விமான், ஞானஸ்தர் என்ற மரியாதை உண்டு. ஆனால் ஆர்வம் கிடையாது. அவரது மனைவிக்கு, அண்ணா ஒரு ‘அரைக் கிறுக்கு’, பொருளியல் ரீதியாக வெற்றி பெற்று வாழ்க்கை நடத்தும் தன் சகோதரர்கள் மீதே உண்மையான மதிப்பு. அவர்கள் சென்னையிலிருந்து தில்லி வந்து நான்கு நாட்களாகியும் வாசுதேவனின் வீட்டுக்கு வராமல், வந்தபோதும் மிகக் குறைந்த நேரமே அங்கு இருப்பதன் மூலம் இதை அவள் காட்டிக் கொள்கிறாள்.
இந்தக் குறைந்தபட்ச நேரமேகூட சகோதரர்களுக்கிடையேயான நெருக்கத்தை, அல்லது முன்பிருந்த நெருக்கம் இப்போது இல்லாமல் போயிருப்பதை காண்பிக்க போதுமானதாக உள்ளது. பேசுவதற்கு அதிகம் பொதுவான விஷயங்கள் இல்லாத வேறு வேறு உலகங்களில் வாழும் இருவருக்கும் தத்தம் உடல் உபாதைகளை பகிர்ந்து கொள்வதே பொதுவான விஷயங்களாகின்றன. அப்போது மணியடிக்கும் பழைய கடிகாரச் சத்தமே அவர்கள் தாம் இருந்த நாட்களின் நெருக்கத்தை மீட்டுத் தருகிறது. “அந்தக் கால ஒர்க்மன்ஷிப்பே தனி இல்லை அண்ணா” என்கிறார் தம்பி. கூடவே ‘அந்தக் கால மனிதரான’ தம் அண்ணாவின் பெருமையை, அவர் தன் வீட்டுக்கு வந்திருந்தபோது பாடிய பாடல்களை, விளக்கிச் சொன்ன ஸ்லோகங்களை, நினைவு கூர்கிறார். இப்போது தான் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கியிருப்பதையும், இவரது பாடல்களையெல்லாம் அதில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசையையும் சொல்கிறார். ஆனால் அண்ணாவின் மனதில் தன் தம்பியின் மனைவி தன்னை ஒரு ‘அரைக் கிறுக்காகப்’ பார்த்ததே நினைவில் எழுகிறது. உண்மையில் இப்போதுகூட, தம்பியின் பெருமை என்பது உண்மையில் மதிப்பறிந்து உணரப்பட்டது அல்ல என்றும் ஒரு மௌடீக பக்தி மட்டுமே என்பதையும் ஒரு போதும் தன் வாழ்க்கை முறையை அவர் மேற்கொள்ள விரும்ப மாட்டார் என்பதையும் புரிந்துகொள்கிறார்.
அவர்கள் கிளம்பிப்போனதும், வாழ்க்கையின் உன்னதமான விஷ்யங்களை ரசிக்க தெரியாதவர்கள் என்றும் அவர்களது பாவனைகளை கேலி செய்தும் வாசுதேவனின் மகளும் மனைவியும் பேசிச் சிரிக்கத் துவங்க, அவரது மகனும் அதில் சேர்ந்து கொள்கிறான். ஆனால் சட்டென்று வாசுதேவனுக்கு இதில் ஒரு அலுப்பும் எரிச்சலும் எழுகிறது. அவர் தன் மகனை நோக்கி, “உங்களுக்கு வெறும் கேலி பேசத்தான் தெரியும். நீ முடிஞ்சா ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கேன், பாக்கலாம்’, என்கிறார். அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு, வியப்புடன் அவரைப் பார்க்கின்றனர். “நிஜம்மாத்தான் சொல்றேன்,” என்றபடி கையலம்பச் செல்கிறார் வாசுதேவன். இப்படி முடிகிறது கதை.
அங்கே வாசுதேவனின் மனம் ஒரு உண்மையைக் கண்டு கொள்கிறது. தன் தம்பிக்கு எப்படி தன் வாழ்க்கை முறையை, தம் குணநலன்களை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மதிப்புக்கு பதில் ஒரு மௌடீகமான பக்தி இருக்கிறதோ, அதே போல குடும்பத்தினருக்கும் தன் மேல் இருக்கும் பெருமை, அவரைப் புரிந்து கொண்டு வந்ததல்ல என்றே அவர் புரிந்து கொள்கிறார். தன் பொருளியல் ரீதியான போதாமைகளை, திறமையின்மையை மறைத்துக் கொள்ள தன் தந்தையின் /கணவரின் திறன்களை, ஞானத்தை தனதாக வரித்துக் கொள்ளும் அறியாமையே அவருக்கு எரிச்சலூட்டுகிறது.
தம்பியின் சொத்துக்களுக்கு இணையான செல்வத்தை அவரது வாரிசுகள் அசாதாரண முயற்சி ஏதும் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இவரது சொத்துக்களான, ஞானம், கலை, இலக்கிய ஆர்வம் ஆகிவை தாமாக வராது என்பதை அவரது மகளோ மகனோ உணரவில்லை என்பதை அவர் உணர்கிறார். மேலும், அவரது தம்பியாவது லௌகீக வெற்றியை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையில் முழு மனதுடன் இறங்கி வெற்றியை அடைந்திருக்கிறார். ஆனால் இவர்கள் அந்தத் தேடலும் இல்லாமல் தங்கள் தந்தையின் அலௌகீக போக்குக்கு உண்மையில் எரிச்சலும் பட்டுக்கொண்டு, அதே சமயம், மற்றவர்களின் லௌகிகப் போக்கினை பரிகாசம் செய்யும் உரிமையும் தமக்கு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
2 comments