வேரும் கனியும்

நரோபா

எலிசபெத் கில்பர்ட்டின் இந்த டெட் உரையை அண்மையில் கேட்க நேர்ந்தது. எலிசபெத் நவீன அறிவியல் யுகம் துவங்கிய இந்த ஐநூறு ஆண்டுகளிள் படைப்பூக்கத்தின் பளு தாங்கவியலாமல் மரித்துப் போன படைப்பாளிகளைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்.

கருங்கல்லை சுமந்து செல்ல முயலும் தும்பியை போல் எழுத்தாளன் எப்போதும் தன்னை மீறிய கனவுகளைச் சுமந்து சிறகடிக்கிறான். அவனைப் பறக்க செய்யும் படைப்பூக்கமே அவனை மெல்ல அழிக்கவும் செய்கிறது. ‘படைப்பூக்க தடை’ அவனை முடக்குகிறது. நாவலோ கதையோ எங்கோ முட்டிகொள்ளும்போது அவன் பதட்டம் அடைகிறான். மேலும் அவனுடைய முந்தைய படைப்புகளின் எதிர்பார்ப்புகளையும் சுமந்து செல்கிறான். இவை எல்லாம் அவனை அழுத்துகின்றன. இயலாமை வாட்டுகிறது.

எலிசபெத், இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது என சிந்தித்து தானடைந்த முறையை பகிர்கிறார். பண்டைய ரோமானிய, கிரேக்க வழக்கத்தில் படைப்பூக்கம் வெளியிலிருந்து வந்ததாக நிலவிய நம்பிக்கையை சுட்டி காட்டுகிறார். சாக்ரடிஸ் அதை ‘டிமான்’ என்றழைத்தார். ஒரு டிமான் தனக்குச் சிந்தனைகளை வந்து சொல்லிச் செல்கிறது என அவர் பதிவு செய்கிறார். ரோமானியர்கள் படைப்பூக்கத்தை தனித்த ஆளுமையாக உருவகப்படுத்தி இருக்கிறார்கள், அவர்கள் அதை ‘ஜீனியஸ்’ என்றழைத்தார்கள். படைப்பாளிக்கு துணை வரும் ஒரு விசித்திர உயிரினம். படைப்பாளி வழியாக ‘ஜீனியஸ்’ வெளிப்படுகிறது.

ஒரு படைப்பு உருவாக்கத்தில் இப்போது இருவரின் பங்களிப்பு இருக்கிறது. எலிசபெத் எழுதி கொண்டிருக்கும்போது எங்கேனும் தடை ஏற்பட்டால் கைகொள்ளும் யுத்தியை பற்றி சொல்கிறார். ‘கடவுளோ, இல்லை ஜீனியசோ, இல்லை பெயரற்ற எதுவோ, இந்த படைப்பை நாமிருவரும் சேர்ந்தே உருவாக்குகிறோம், என்னளவில் நான் சரியாகவே செய்கிறேன், நீ உன் பங்களிப்பை சரியாக ஆற்றினால் மட்டுமே அது சிறந்ததாக இருக்கும்’ என வாய் விட்டுக் கூறுவாராம். இந்த யுத்தி அவருக்கு உதவியாக இருந்திருக்கிறது என்கிறார்.

நவீன அறிவியலின் வளர்ச்சியை ஒட்டி நவீன இலக்கியத்தின் பரிணாமத்தையும் புரிந்து கொள்ள முடியும். நவீன இலக்கியம் படைப்பாளியின் நுண்ணகங்காரத்தை சார்ந்து இயங்குவதாக நம்பப்படுகிறது. படைப்பு எழுத்தாளன் வழியாக வெளிப்படுகிறதா? அல்லது படைப்பாளி அதை முழுவதுமாக உருவாக்குகிறானா? எனும் விவாதம் வெகுகாலமாக இங்கே நிகழ்ந்து வருகிறது. ரோலான்ட் பார்தஸ் ‘எழுத்தாளனின் மரணம்’ எனக் கூறும்போது படைப்பையும் படைப்பாளியையும் குழப்பிக்கொள்ள கூடாது என்கிறார். படைப்பின் வழியாக படைப்பாளியின் அகத்தையும், உள்நோக்கங்களையும் கண்டடைவது வியர்த்தம், அவை எவ்வழியிலும் வாசிப்புக்கு அவசியமில்லை என்ற கருத்தை முன்வைக்கிறார்.

இந்திய பின்புலத்தில் நம் மரபிலக்கியங்களை பற்றி சிந்திக்கையில் நம்மிடம் ‘ஜீனியஸ்’ போன்ற கருத்தாக்கங்கள் இல்லையென்றாலும், படைப்பு இறைவனின் ‘அருள்’ என்ற நம்பிக்கை வலுவாக இருந்திருக்கிறது. காளிதாசனைப் பற்றிய கதை ஓர் உதாரணம். அன்னை அவனுடைய நாக்கில் எழுதுகிறாள். அவன் பெரும் படைப்பாளியாக ஆகிறான். ஞானக்கூத்தன் ஒரு கட்டுரையில் தானும் அப்படி ஆக நினைத்து அலைந்து திரிந்த அனுபவத்தை சொல்கிறார். ஒரு சிற்றூரின் திண்ணையில் அப்படி கனவும் காண்கிறார். வள்ளுவரின், கம்பரின் தனிப்பட்ட ஆளுமைகள் பற்றிய குறிப்புகள் என நமக்கேதும் பெரிதாக கிடைக்கவில்லை. படைப்புக்களை மட்டுமே விட்டுச் சென்றிருக்கிறார்கள். சங்கப் புலவர்கள் தொடங்கி தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்கள் எழுதிய கவிராயர்கள் வரை, எழுதியவர்களின் அடையாளம் பூடகமாகவே இருக்கிறது. செயின்ட். பீட்டர் பசிலிக்காவின் ஓவியங்களை தீட்டியவர் மைக்கேல் என்ஜெலோ என நாம் அறிவோம். சித்தன்னவாசல் ஓவியங்களை தீட்டியவர் எவர் என நாம் அறிந்ததில்லை. குடுமியான் மலையின் பிரமிக்கத்தக்க தலைகோலி சிற்பத்தை வடித்த கலைஞன் எவனென்று தெரியவில்லை. காரணப் பெயர்களும், புனைப் பெயர்களும் நம் மரபிலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. வள்ளுவனோ, கம்பனோ எவனென தெரியாததால் வாசிப்பில் நமக்கு என்ன குறைந்தது என கேட்டு பார்க்கிறேன். ஒன்றுமில்லை. தமிழின் நவீன இலக்கிய அலையின் துவக்க முகங்களான பாரதியையும், புதுமைப்பித்தனையும் எண்ணிக் கொள்கிறேன். பாரதியின் கவிதைகள் அளவுக்கே அவனுடைய ‘பித்தன்’ எனும் பிம்பம் நம்மை ஆக்கிரமிக்கிறது. பஷீர் என்றவுடன் படைப்பை மீறி அவருடைய சூஃபி பிம்பமும் இனைந்து கொள்கிறது.

இந்த சிந்தனைகளின் தொடர்ச்சியாக இரு வேறு விவாதங்கள் நினைவில் எழுகின்றன. ஒருமுறை ஜெயமோகனோடு திருவண்ணாமலையில் மலைவலம் வந்து கொண்டிருந்தபோது, அவரிடம் கேட்டேன், “ஆன்மீகவாதியும் எழுத்தாளனும் எங்கோ ஒரு புள்ளியில் ஒன்றாக ஆகிறார்கள். தங்களுக்குள் ஒரு நிறைவின்மையை உணர்கிறார்கள், ஆன்மீகவாதியும் படைப்பாளியும் வெவ்வேறு வழிகளில் அதை நிறைக்க முயல்கிறார்கள் என தோன்றுகிறது. ந. பிச்சமூர்த்தி அவருடைய நேர்காணலில் இவ்வாறான ஒரு நிலையை பற்றி சொல்கிறார். சொல்லற்று போகும் ஒரு நிலையே தனக்கு உகந்தது என்கிறார். சொற்களில் இருந்து சொல்லற்ற ஒரு நிலைக்கு தாவி விட வேண்டும் என அவர் நினைப்பது சாத்தியமா என தெரியவில்லை. ஆன்மீகவாதி நிறைவை நோக்கி உண்மையிலேயே செல்கிறான், எழுத்தாளன் நிறைவின்மையை மூலதனமாக்கிக் படைக்கிறான், அதைக் கொண்டு விளையாடிக்கொண்டே இருக்கிறான் என நினைக்கிறேன்“, என்றேன்.

ஜெயமோகன் சீறினார். “இது உங்களுக்குச் சொந்தமாக தோன்றியது போல் இருக்கலாம், ஆனால் இது ஒரு நவீனத்துவ சிந்தனை. இந்தச் சிந்தனையின் ஊற்று இருத்தலியலில் இருக்கிறது. இங்கே மரம் இருக்கிறது, அது பூக்கிறது, அது இத்தனை கன அடி சூனியத்தை நிறைக்கிறது என்றா சொல்வீர்கள்? படைப்பு தன்னியல்பாக நிகழ முடியும்,” என்றார்.

ஆட்டிசத்தை பின்புலமாக வைத்து நான் எழுதிக்கொண்டிருந்த ஒரு நாவல் பாதியில் முட்டிக்கொண்டது. பெரும் மனவாதையாக இருந்த அச்சமயத்தில் கவிஞர் ரமேஷ் சுப்பிரமணியத்தை ஒரு மாலைப் பொழுதில் பாண்டிச்சேரி கடற்கரையில் சந்தித்தேன். ரமேஷ் ஓவியரும்கூட, பவுத்தத்தில் ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர். அவரிடம் எனது சிக்கலை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் இரண்டு விஷயங்களை கூறினார். “எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள் இருக்க முடியும். ஒன்று நன்றி அறிவித்தல், இந்த இயற்கையும் வாழ்வும் எனக்கு எத்தனையோ அனுபவங்களை அளித்திருக்கின்றன, என்னை செழுமை செய்திருக்கின்றன, அதற்கு ஓர் எளிய நன்றியாக, ஒரு நிகர் வாழ்க்கையை, ‘போலச் செய்தலை’ திரும்பி அளிக்கிறேன், இதை நம் மரபில் சமர்ப்பணம், அர்ப்பணிப்பு என கூறுவார்கள். இரண்டாவது காரணம், ‘லீலை’, வாழ்க்கையே ஒரு விளையாட்டு, அதில் நாம் படைப்பவையும் ஒரு விளையாட்டு, இந்த விளையாட்டு இல்லை என்றால் வேறொன்றை கைகொள்ளலாம், இதில் துன்புற என்ன இருக்கிறது?”

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பலன்களை சொல்லும் பகுதியில் வரும் இரண்டு துதிகள் இந்திய மனநிலையை இயக்குவதாக புரிந்து கொண்டேன்- “ யோகமும், ஞானமும், சாங்கியமும், கல்வியும் சிற்பக்கலை உட்பட அனைத்து கலைகளும், வேதங்களும், சாத்திரங்களும், விஞ்ஞானமும், என அனைத்தும் அந்த ஜனார்த்தனனிலிருந்து உதித்ததே”. மற்றொரு புகழ்பெற்ற துதி- “உடல், வாக்கு, மனம், புலன், புத்தி, இயல்பால் உந்தப்பட்டோ அல்லது சுயத்தின் பொருட்டோ நான் ஆற்றும் அனைத்தும் பிறர் பொருட்டே, அவை அனைத்தும் நாராயணனுக்கே அர்ப்பணம்”

இந்த நம்பிக்கை படைப்பை உருவாக்க, அதன் அழுத்தங்களில் இருந்து படைப்பாளி தன்னை விடுவித்துக் கொள்ள உதவும், உதவியும் இருக்கிறது. ரோமானியர்களின் ஜீனியசைப் போல, கிரேக்கர்களின் டிமானை போல, நம்மை நம்மிலிருந்து விலக்கிக்கொள்ள வந்த ஒரு மிகப் பொருத்தமான வழிமுறைதான் இது போன்ற நம்பிக்கைகள் என தோன்றுகிறது. நவீன படைப்பாளியாக அதிகம் வாசிக்கவும், எழுதவும், படைப்பாற்றலால் வதைபடாமல் இருக்கவும், அங்கீகாரத்துக்கு அப்பால் இயங்கவும், நெடுநாள் வாழவும் நாம் இதை தேர்வதில் என்ன சிக்கல்? அந்த செம்பரான் கல் உண்மையில் தும்பியின் சுமையே இல்லையே?

மீண்டும் அதே கேள்விக்கு வரலாம், படைப்பாளி படைக்கிறானா? அல்லது படைப்பு அவன் வழி நிகழ்கிறதா? இரண்டு நிலைக்கும் இடையிலான ஒரு புள்ளியில் படைப்பு நிகழ்கிறது என எனக்கு தோன்றுகிறது. படைப்பாற்றல் அவன் வழி வரும்போது, அவன் ஏற்கனவே அமைத்திருக்கும் பாதைகளில், அந்த வண்டல்களுடன் சேர்ந்தே வரும் என நம்புகிறேன்.

படைப்பாற்றலை தனக்கு வெளியிலிருந்து வருவதாக உருவகிப்பதிலும், தன்னை ஒரு கருவியாக பாவிப்பதிலும் மேற்சொன்ன வசதிகள் உண்டு. ஆனால் படைப்பாளியின் பொறுப்பு என ஒன்றிருக்கிறதே?. தன் வழியாக வரும் அனைத்தையும் அவன் தனக்கு வெளியில் இருக்கும் ஒன்றின் மீது சுமத்த முடியுமா? கடந்த விஷ்ணுபுரம் விருது விழாவின்போது எழுத்தாளர் ஹெச். எஸ். ஷிவப்ரகாஷ் அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவருடைய பசவண்ணா நாடகத்திற்கு வந்த எதிர்ப்பைப் பற்றி கூறினார். மடாதிபதியின் முன் மண்டியிட வைக்க முயன்றார்கள் என்றார். அப்போது ‘எழுத்துச் சுதந்திரம்’ பற்றி எவரோ ஒரு நண்பர் கேள்வி எழுப்பினார். தீர்க்கமாக “கட்டற்ற எழுத்துச் சுதந்திரத்தின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை, அவர்களின் எதிர்ப்பை நான் புரிந்து கொள்கிறேன், என் எழுத்துக்கு நான் பொறுப்பேற்கிறேன், எழுத்தாளன் தனது எழுத்துக்கு பொறுப்பேற்கத்தான் வேண்டும்” என்றார்.

படைப்பு எழுத்தாளன் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது எனில் இதில் அவனுடைய பொறுப்பென்ன எனும் கேள்விக்கு விடை சிக்கலானதே. எழுத்தின் உன்னதத்திற்கு பொறுப்பேற்கவில்லை எனில் அதன் சிக்கல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஆனால் உன்னதத்திற்கு பொறுப்பேற்கும் போது, ‘ஆய்வு’ செய்யப்பட்டு எழுதப்பட்டதன் உண்மைக்கு புறம்பான அம்சம் சுட்டிகாட்டபட்டால் அதை படைபூக்கத்தின் பகுதியாக ஆக்கி பொறுப்பை துறந்து விட முடியுமா? நவீன எழுத்தாளனின் மிக முக்கியமான சிக்கல்களில் இதுவும் ஒன்று என தோன்றுகிறது. கட்டற்று எழுத்தாளனுள் வெளிப்படும் ஆற்றலை அவன் மட்டுறுத்தலாமா? அப்படிச் செய்தால் அது போலித்தனமாகாதா? எழுத்தாளனிடமிருந்து வெளிப்படும் அனைத்துமே உண்மையில் கட்டற்ற படைப்பாற்றலின் வெளிப்பாடா? அல்லது அவனது முன்முடிவுகளும், ஊகங்களும், கனவுகளும், கீழ்மைகளும் கலந்தவையா?

எழுத்தாளனாக ஒன்றேயோன்றைச் சுட்ட முடியும், எழுதும்போது வெளிவருபவை அவனை மீறிய ஒன்றாகவே இருக்கிறது. எழுத்தாளனின் ஆற்றல் என்பதும் அதிலிருந்தே பிறக்கிறது. மதிப்பீடுகள் மூலம் மட்டுறுத்தலை கட்டுப்படுத்த முயல்வதென்பது எழுத்தைக் கொல்வதற்கு நிகர். படைப்புக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் பணிவும், படைப்பிற்கு பொறுப்பேற்கும் நிமிர்வும் கலந்திருக்கும் விசித்திர கலவையில்தான் தனக்கு உண்மையாக இருக்கும் படைப்பாளி எழுகிறான்.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.