நரோபா

எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, பணி, குடும்பம் பற்றி சுருக்கமான அறிமுகம்.

1981-ல் மதுரையில் பிறந்தேன். மூன்று குழந்தைகள் இறந்த பின் வந்தவன் என்பதால் மண்ணில் தங்க வேண்டுமென பெற்றவர்கள் மதுரை பாண்டிமுனி கோயில் மண்ணில் போட்டு எடுத்தார்கள். அதுவே பெயருக்கும் காரணம். பள்ளிப்படிப்பு மதுரையில். வளர்ந்தது அம்மாச்சி வீட்டில். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதால் நிறையவே சிரமம். கல்விதான் காப்பாற்றியது. கோவையில் பொறியியல் பயின்ற காலத்திலும் ஆசிரியர் பணியே என் கனவாக இருந்தது. பணி செய்து கொண்டே தொடர்ந்த மேற்படிப்பு முனைவர் பட்டம் வரை அழைத்து வந்திருக்கிறது. ஓரிடத்தில் அதிகபட்சம் மூன்று வருடங்கள் என்ற கொள்கை காரணமாக திண்டுக்கல், பெருந்துறை, நெல்லை என பல ஊர்கள் சுற்றி தற்போது கோவையில். துணைவியார் பூமாவும் ஆசிரியைதான். கணிதம் பயின்றவர். ஒரு குழந்தை. நகுலன் அவன் பெயர

வாசிப்பு படிநிலை என்ன? பால்யகால வாசிப்பு எத்தகையது, எப்படியாக வளர்ந்தது?

நான் வாசிப்பதற்கு என் அம்மாதான் காரணம். வெகுஜன இதழ்களின் தீவிர வாசகி அவர். இன்று தீவிர இலக்கியமும் வாசிக்கிறார். பிள்ளை வெளியே சென்று விளையாடுகிறேன் என்கிற பெயரில் ஊர் சுற்றாமல் இருப்பதற்காக புத்தகங்களைக் கொடுத்துப் பழக்கியதாகச் சொல்வார். ஆனால் அவரைத் தாண்டியும் குடும்பம் மொத்தமும் வாசிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தை ரசித்தார்கள் என்று சொல்ல முடியும். 1985-86 காலகட்டம். சிறுவர் மலர் எனக்கு அறிமுகமாகி இருந்தது. வீட்டில் அனைவரும் திருப்பதி செல்லத் திட்டமிடுகிறார்கள். வியாழன் கிளம்பிப்போய் ஞாயிறு திரும்புவதாக ஏற்பாடு. வெள்ளிக்கிழமை சிறுவர் மலர் வாசிக்க முடியாமல் போய்விடும் என்பதால் நான் வர மறுக்கிறேன். யார் என்ன சொல்லியும் கேட்கவில்லை. இறுதியில் தாத்தா எனக்காக வீட்டில் தங்கி விட்டார். மற்றவர்கள் எல்லாம் ஊருக்குப் போனார்கள். அந்த சம்பவத்தை என்னால் இப்போதும் நினைவுகூர முடிகிறது என்பதுதான் ஆச்சரியம். அங்கிருந்து தொடங்கிய வாசிப்பு பிறகு காமிக்ஸின் வழியாக வளர்ந்தது. அவற்றின் பாதிப்பு எப்போதும் என் கதைகளில் காணக்கிடைக்கும்.

பள்ளிக்காலத்தில் சுபாவும் பட்டுக்கோட்டை பிரபாகரும் அறிமுகமானார்கள். மனித வேட்டை, இறந்தாலும் இந்திய மண்ணில் என கல்லூரிக்காலத்தில் சுபாவின் நாவல்களைத்தான் தூக்கிக் கொண்டு திரிந்தேன். மிகுதியான தொழில்நுட்ப தகவல்களைக் கொண்டிருந்தாலும் ஏனோ எனக்கு ராஜேஷ்குமாரை ரசிக்க முடியவில்லை. ஆனால் அமானுஷ்யத்தையும் ஆன்மீகத்தையும் கலந்து தந்த இந்திரா சௌந்திரராஜனின் கதைகள் வேறொரு உலகத்தில் உலாவிட எனக்கு உதவின. அவருடைய ஐந்து வழி, மூன்று வாசல் எப்போதும் மறக்கவியலாத நாவல். கல்லூரியின் இறுதிக்கட்டத்தில் விகடனின் வழியாக அறிமுகமான எஸ்.ராமகிருஷ்ணனின் துணைஎழுத்து என்னை மொத்தமாகப் புரட்டிப் போட்டது. அவருடைய கதாவிலாசம்தான் இலக்கியத்தில் எனக்கான திறவுகோல். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்க புத்தகங்கள் உதவின. அதன் பிறகு கிடைத்த நண்பர் நேசமித்ரனின் அறிமுகம் புதிய காற்றைக் கொண்டு வந்தது. அதன் வழியாகவே எனக்கான உலகம் புலப்பட்டது

எழுதும் உந்துதல் எப்படி வந்தது? எழுத்தாளர் என்றுணர்ந்த கணம் என்ன?

2008 வாக்கில் நரனை ஒருமுறை மதுரையில் சந்தித்தபோது என்னுடைய வலைப்பதிவுகளை வாசித்திருந்த காரணத்தால் நீ எழுதலாமே என்று சொன்னார். அப்போதும் அதைச் சிரித்தபடி மறுத்தேன். வாசகனாக இருப்பதே போதும் என்பதுதான் என்னுடைய ஆரம்பகட்ட மனநிலை. ஒரு முறை உயிர்எழுத்தில் ஷங்கர ராம சுப்பிரமணியன் “நான் ஒரு தமிழ் பரோட்டா” என்றொரு கவிதை எழுதி இருந்தார். அதன் அரசியலைப் புரிந்து கொள்ளாமல் வாசித்த எனக்கு கடும் கோபமானது. ஏனெனில் ஷங்கர் எனக்கு அத்தனை பிடித்தமான கவிஞர். ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆத்திரத்தில் அவரைக் கிண்டல் செய்து ஒரு பத்தியை எழுதினேன். அதை மட்டும் தனியாகப் பார்த்தபோது நன்றாகயில்லை எனத் தோன்றியதால் முன்பின்னாக சில சங்கதிகளை சேர்த்து எழுதினேன். முடித்த பிறகு பார்த்தால் அந்த பகடியைத் தவிர மற்றவையெல்லாம் நன்றாயிருப்பதாக ஒரு உள்ளுணர்வு. அதை வெட்டி விட்டு மீதப் பகுதியை எல்லாம் திருத்தி எழுதினேன். அதுதான் என் முதல் கதையான நிழலாட்டம். கதை எழுதி விட்டோம் என்பதை விட நமக்கு எழுத வருகிறது என்பதே கொண்டாட்டமாக இருந்தது. நேசமித்ரனோடு இருந்த சமயத்தில் நிறைய உரையாடி இருக்கிறோம், அதன் வழியே எழுத்து பற்றி எனக்குள் ஒரு சித்திரம் உருவாகி இருந்தது – சில மதிப்பீடுகளும் இருந்தன. எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது என்றெல்லாம். ஆக, குறைவாக எழுதினாலும் என் மனதுக்கு நிறைவாக உணர்வதை மட்டுமே எழுத வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன்.

என்னுடைய மர நிறப் பட்டாம்பூச்சிகள் கதையை வாசித்து விட்டு போகன் சங்கர் சிலாகித்துப் பேசிய தருணமே எனக்குள் முழுமுற்றாக நானும் எழுதக்கூடியவந்தான் என்கிற நம்பிக்கையைத் தந்தது.

பிரசுரமான முதல் எழுத்து?

வலைத்தளங்களில் விளையாட்டாக எழுதிக் கொண்டிருந்தவனை உன்னால் எழுத முடியும் எனத் தொடர்ந்து உற்சாகமூட்டியவர் பொன்.வாசுதேவன். முடியாத கதை என்றொரு கவிதையை அகநாழிகையில் பிரசுரித்தார். கதை என்று பார்த்தால் நிழலாட்டம். யெஸ்.பாலபாரதி ஆசிரியராக இருந்த பண்புடன் என்னும் இணைய இதழில் வெளியானது. அதே கதை பிறகு மதிகண்ணனின் கதவு சிற்றிதழிலும் வந்தது.

உலக/ இந்திய/ தமிழ் இலக்கிய ஆதர்ச எழுத்தாளர்கள் யார்?

ஏனோ எனக்கும் என் அகவுலகத்துக்கும் ஐரோப்பிய எழுத்தாளர்களே நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். மனிதனின் அகவுலகை மிக விரிவாகப் பேசிய தஸ்தாவ்ஸ்கியை நான் ஒரு வரி கூட வாசித்ததில்லை என்று சொன்னால் நம்புவீர்களா? அவரை வாசிக்காமல் இருப்பது ஒருவகை அச்சம் என்று கூட சொல்லலாம். நம்முடைய குரூரங்களையும் ரகசியங்களையும் இழந்து விடுவோம் என்கிற பயம். போலவே லத்தீன் அமெரிக்க கதைகளையும் நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன். ரூல்போ ஒருவர் மட்டுமே எனக்கு சற்று உவப்பாயிருக்கிறார். ஆக வாழ்வை தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்ப்பவன் என்கிற வகையில் எனக்கான உந்துதல் ஆல்பர் காம்யூவிடம் இருந்தே கிடைக்கிறது. அந்நியன் எனக்குள் உருவாக்கிய தாக்கம் அளப்பரியது, இருப்பு சார்ந்த சிக்கலான பல கேள்விகளை மனதினில் விதைத்தது. அவருடைய எழுத்துகள் எனக்குள் கிளர்த்திய உணர்வையே நான் நம்முடைய நிலத்தில் நிகழ்த்திப் பார்க்கிறேன், அதன் வழியாக வாழ்வை விசாரணைக்கு உட்படுத்துகிறேன்.

நானும் ஒரு மொழிபெயர்ப்பாளனாக இருக்கும் சூழலில் இதைச் சற்று சங்கடத்தோடுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்திய அளவில் என்று சொல்லும்போது மலையாளமும் வங்காளியும் தவிர்த்து மற்ற மொழிகளில் இருந்து நிறைய மொழிபெயர்க்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அப்படியிருக்க ஆதர்ஷம் என்றெல்லாம் உண்மையில் யாருமில்லை. பஷீரையும் சிதம்பர நினைவுகளுக்காக பாலச்சந்திரனையும் பிடிக்கும். பால் ஸக்காரியாவின் சிறுகதைகளின் மீது மகிழ்ச்சி கலந்த பொறாமை உண்டு.

தமிழைப் பொறுத்தவரை நான் எப்போதும் சொல்வது எஸ்.ராமகிருஷ்ணன். அவர் இல்லையென்றால் எனக்கு இலக்கியம் தெரிந்திருக்காது. எழுத்து மற்றும் சொல்முறை சார்ந்து என்னை மிகவும் பாதித்தவர்களெனில் கோபிகிருஷ்ணனையும் ப்ரேம்-ரமேஷையும் சொல்வேன்.

‘வலசை’ ஒரு முக்கியமான முயற்சியாக பட்டது. அதை நேசமித்திரனோடு இணைந்து முன்னெடுத்தீர்கள். அதில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருந்தது? வலசையின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றி

2010-ன் பிற்பகுதி. கோவில்பட்டியில் கோணங்கியைச் சந்தித்து விட்டு நானும் நேசமித்ரனும் மதுரை திரும்பிக் கொண்டிருந்தோம். பேச்சு அப்போதிருந்த சிற்றிதழ் சூழல் குறைத்தும் இடைநிலை இதழ்களின் ஆதிக்கம் பற்றியும் திரும்பியது. குழு மனப்பான்மையால் புறக்கணிக்கப்படும் எழுத்துகள், மேலோட்டமான எழுத்துகளை தாங்கிப் பிடித்து இவைதான் இலக்கியம் என நம்பவைக்கப் பாடுபடும் இடைநிலை இதழ்களின் அரசியல் என எங்களுக்கு நிறைய கோபங்கள் இருந்தன. ஏன் இவற்றையெல்லாம் சரி செய்ய நாமே ஒரு சிற்றிதழ் ஆரம்பிக்கக்கூடாது என்று கேட்ட கேள்விக்கான விடைதான் வலசை. உலகம் முழுக்க இருக்கும் இலக்கியப் போக்கை தமிழில் பேசுவதற்கான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என விரும்பினோம். எனவே மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் தரலாம் என்று முடிவு செய்தோம். பிறகு இதழ்களை வெறுமனே வழக்கமான சிற்றிதழாக இல்லாமல் வேறொரு வடிவத்தில் தருவதற்கான முயற்சியாக ஒவ்வொரு இதழுக்கும் ஒவ்வொரு கருப்பொருள் என்று முடிவு செய்தோம். வலசை மொத்தம் நான்கு இதழ்கள் வெளியானது. உடல் மீதான அரசியல், மூன்றாம் பாலினம், குழந்தைகளின் அகவுலகம், நாடு கடத்தப்பட்டவர்களின் படைப்புகள் என்கிற நான்கு வெவ்வேறு கருப்பொருளைப் பேசிய இதழ்கள். கடைசி இதழ் 2014 ஜனவரியில் வெளியானது. அடுத்ததாக ஓவியங்களைப் பேசுகிற ஒரு இதழைக் கொண்டு வரலாம் என்றெண்ணி பணிகளை ஆரம்பித்தோம். ஆனால் அது கனவாகவே நின்றுவிட்டது. இருவரும் அவரவர் எழுத்துகளில் கவனம் செலுத்திய காலகட்டம். இதழுக்கான நேரத்தைச் சரிவர ஒதுக்க முடியாமல் போக வலசை (தற்காலிகமாக?!!) நிறுத்தப்பட்டது.

வலசையைப் பொறுத்தமட்டில் நேசமித்ரனே அதன் ஆன்மா. நான் வலசையின் உடலாக இயங்கினேன் என்று சொல்லலாம். முதலில் கருப்பொருளைத் தீர்மானித்தபின் அதுசார்ந்த படைப்புகளை நேசன் தேர்ந்தெடுத்து அனுப்புவார். அவற்றை வாசித்து அதிலிருந்து தேவையான பகுதிகளைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் படைப்பாளிகள் யார் யாரென்பதையும் மொழிபெயர்ப்புகளை யாரிடம் கொடுத்து வாங்கலாம் என்பதையும் முடிவு செய்வோம். ஒவ்வொரு இதழுக்கும் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். இலக்கிய வாசகராக நிறைய எழுத்தாளர்களிடம் அறிமுகம் இருந்ததால் இதழுக்கு படைப்புகள் வாங்க அது பெரிதும் உதவியது. வடிவமைப்பில் எங்களுடைய தோழி தாரணிபிரியா மிகவும் உதவியாயிருந்தார். நான்காம் இதழை நண்பர் வெய்யில் வடிவமைத்தார். இதழை 300 பிரதிகள் அச்சிட ஆகும் பொருளாதாரச் செலவுகளை நேசனே ஏற்றார். அவற்றில் நூறு பிரதிகள் வரை இதழில் பங்கேற்றவர்களுக்கும் முன்னோடி எழுத்தாளர்களுக்கும் அனுப்பி வைப்போம். நூறு பிரதிகள் விற்பனைக்காகக் கடையில் கொடுப்போம். மீதி இருக்கும் புத்தகங்களையும் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களிடம் கொடுத்து விடுவோம். இதழைத் தரமாகக் கொண்டு வந்தாலும் அவற்றை எல்லோரிடமும் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க எங்களுக்குத் தெரியவில்லை. என்னிடம் இப்போது நான்கு இதழ்களிலும் ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ளது. நேசனிடம் அதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. வலசை எங்களைப் பொறுத்தமட்டில் ஒரு அற்புதமான கனவு. அதில் பணிபுரிந்த ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழ்ந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

வலசை வெளியான காலகட்டத்தில் அது நிறைய பேருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இணையத்தில் இருந்து வந்தவர்களால் சிற்றிதழ் சூழலில் என்ன பெரிதாக செய்து விட முடியும் என்று நேரடியாக எங்களிடமே சொன்னார்கள். இதழைத் தரமாகக் கொண்டு வருவதன் மூலமே அவர்களுக்கு பதில் சொல்ல முடியும் என்று நம்பினோம். ஆசிரியர்கள் என்று குறிப்பிடாமல் வலசையின் முதல் வாசகர்கள் என்று எங்களுடைய பெயரைப் போட்டதுகூட விமர்சனத்துக்கு உள்ளானது. எல்லாவற்றையும் மீறி வலசை அதற்கான நோக்கத்தில் தெளிவாக இருந்தது என்றே நம்புகிறேன். தமிழ்ச்சூழலில் அதிகம் அறியப்படாத படைப்பாளிகளைத் தேடி எடுத்து மொழிபெயர்த்தோம். இஸ்மாயில் கதாரேயின் கவிதைகளை வலசையின் முதல் இதழில் (ஆகஸ்டு 2011) சபரிநாதன் மொழிபெயர்த்தார். ஒவ்வொரு இதழுமே தனித்துவமான சில படைப்புகளைக் கொண்டிருந்தன என்று தைரியமாகச் சொல்வேன். இன்றும் எங்கிருந்தாவது யாராவது அழைத்து குழந்தைகளின் அகவுலகம் பற்றிய இதழையோ மூன்றாம் பாலினம் பற்றிய இதழையோ குறித்து உரையாடும்போது மனம் ஆசுவாசம் கொள்கிறது. காலத்தைப் போல சிறந்த நீதிபதி யாருமில்லை என்பதும் தெளிவாகப் புரிகிறது.

ஒரு மொழிபெயர்ப்பாளராக நீங்கள் தமிழுக்கு கொண்டு வரும் கதைகளை எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்? ஏனெனில் ஒரு புதிய எழுத்தாளனை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் போது அவனுடைய பலவீனமான கதையை வாசிக்க நேர்ந்தால் அவனைத் தேடிச் சென்று வாசிப்பது தடைபடும் ஆபத்து இருக்கிறதே.

மொழிபெயர்ப்பில் எனக்கு நான் வைத்துக் கொண்டிருக்கும் அளவுகோல்கள் இரண்டு மட்டுமே. 1) தமிழில் அதிகம் அறியப்படாத அல்லது வெறும் பெயராக மட்டுமே அறிமுகம் ஆகியிருக்கக்கூடிய படைப்பாளிகளையே நான் தேர்வு செய்கிறேன். போர்ஹேஸ், மார்க்குவெஸ், கால்வினோ போன்ற மாஸ்டர்கள் அதிகம் மற்றவர்களால் மொழிபெயர்க்கப்படுவதால் எனக்குள் அப்படியொரு கடப்பாடு. உதாரணத்துக்கு, டோனி மாரிசனை எடுத்துக் கொள்வோம். அவரொரு நாவலாசிரியராகத் தமிழில் நன்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால் தன் வாழ்நாளில் அவர் ஒரேயொரு சிறுகதை மட்டுமே எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்தக்கதையைத் தேடியெடுத்து வசனகவிதை என்ற தலைப்பில் நான் மொழிபெயர்த்தேன். 2) கதையின் சொல்முறையிலோ வடிவத்திலோ அல்லது உள்ளடக்கத்திலோ ஏதோவொரு விதத்தில் புதிதாக இருக்கும் கதைகளை மொழிபெயர்க்கிறேன்.

ஒரே ஒரு கதையை வாசித்து விட்டு யாரையேனும் மொழிபெயர்த்தால் நீங்கள் சொல்லக்கூடிய சிக்கல் நேரலாம். ஆனால் நிறைய எழுதியிருக்கும் ஒரு எழுத்தாளரை தமிழில் அறிமுகம் செய்யும்போது இயன்றமட்டும் அவருடைய மொத்தத் தொகுப்பையும் வாசித்து அதில் நெருக்கமாக உணரும் கதையைத்தான் தெரிவு செய்கிறேன். தவிரவும், இன்றைக்கு இருக்கக்கூடிய இணைய வசதிகளின் மூலம் ஒவ்வொரு கதையைப் பற்றிய அறிமுகமும் விமர்சனங்களும் எளிதில் கிடைப்பதால் மொழிபெயர்ப்பாளரின் பணி சற்று இலகுவாகிறது. நல்ல கதைகள் என்று குறிப்பிட்டுள்ள கதைகளை எல்லாம் தேர்ந்தெடுத்து வாசித்து அவற்றில் நமக்கான கதையைத் தேர்வு செய்வதும் எளிதாகிறது. என்னளவில், நான் மொழிபெயர்த்த கதைகளில் எனக்கு அத்தனை நிறைவு தராத பணி என்று சொன்னால், எருது தொகுப்பில் இடம்பெற்ற எட்கெர் கீரத்தின் டாட் என்னும் கதையைச் சொல்வேன். அதை மொழிபெயர்த்த பிறகே அதைக் காட்டிலும் நல்ல கதைகள் எனச் சொல்லும்படியான கீரத்தின் கதைகள் கிடைத்தன. அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு இப்போது இன்னும் கவனமாயிருக்கிறேன்.

இன்றைய தமிழ் சூழலில் மொழியாக்கத்தின் தேவை என்ன? நேரடியாக ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கம் பெருகியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி தமிழ் வாசிப்பே அருகிவிடவும் கூடும். தன்னளவில் நீங்கள் ஓர் புனைவெழுத்தாளன் எனும்போது அதற்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவமும் உழைப்பும் நியாயம் எனப் படுகிறதா?

மீட்சி வெளியிட்ட லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள், காம்யூவின் அந்நியன் அல்லது ப்ரெவரின் சொற்களைப் போல ஒரு காலகட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் மொழிபெயர்ப்புகள் இன்றைய சூழலில் சாத்தியமா எனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது சிதைவுகளின் காலம். நம்பிக்கைகள் தொலைந்து வேறொன்றாக உருமாறியுள்ளன. ஆனால் நிச்சயம் மொழிபெயர்ப்புகளுக்கான தேவைகளும் இருக்கவே செய்கின்றன. தற்காலப் புனைவுளின் போக்கை ஒப்பு நோக்கவும் நமக்கான பாதையைக் கண்டடையவும் மொழிபெயர்ப்புகள் கண்டிப்பாக உதவும் என்றே நம்புகிறேன். தமிழில் வாசிப்பது அரிதாகி நேரடியாக ஆங்கிலத்தில் வாசிப்பது அதிகரித்திருப்பதாகச் சொல்வதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. மொழிபெயர்ப்புகளை அதிகம் வெளியிடும் எதிர் வெளியீடு பதிப்பகத்தோடு இணைந்து நான் செயலாற்றி வருகிறேன். மொழிபெயர்ப்புகளுக்கு மக்களிடையே இருக்கக்கூடிய வரவேற்பு அதிகரித்திருப்பதாகவே உணருகிறேன், மிகக்குறிப்பாக அபுனைவுகளில்.

தமிழின் மிக முக்கியமான கவிஞர் யவனிகா ஸ்ரீராம் மற்ற எல்லாரையும் விட தான் மொழிபெயர்ப்பாளர்களுக்கு அதிகம் கடமைப்பட்டிருப்பதாகச் சொல்வார். இல்லையெனில் ப்ரெவரும் ஃப்ரெட்டும் தனக்கு ஒருபோதும் தெரியாதவர்களாகவே இருந்திருப்பார்கள் என்று அவர் சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியாயிருக்கும். எங்கோ ஒருவர் வாசித்து அவருக்கு மட்டுமே பயன்பட்டால் கூட மொழிபெயர்ப்பின் நோக்கம் நிறைவேறியதாகத்தானே அர்த்தம்? ஆக மொழிபெயர்ப்புக்கு நான் செலவிடும் நேரம் எனக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும்தான் தருகிறது. ஒரு புனைவெழுத்தாளனாக, வருடத்துக்கு அதிகம் போனால் இரண்டு கதைகள் மட்டும் எழுதக்கூடிய ஒருவனுக்கு, மொழியுடனான தொடர்பு அறுந்து போகாமலிருக்க இந்த மொழிபெயர்ப்புகள் உதவவே செய்கின்றன.

உங்கள் புனைவுகளின் மீது மொழியாக்கத்தின் தாக்கம் என்னவாக இருக்கிறது?

முடிந்தமட்டும் இதுபோன்ற சமயங்களில் இருவேறு மனிதர்களாகவே இருக்க முயற்சிக்கிறேன். என்னுடைய கதைகளை எழுதும்போது எனது வேர்கள் இந்த மண்ணில் ஆழப் புதைந்திருக்கின்றன, சூழல் என்னைச் சுற்றியதாக மட்டுமே இருக்கிறது. ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளனாக நான் கூடுவிட்டுக்கூடு தாவ வேண்டியிருக்கிறது. அறிந்திராத நிலத்தையும் அதன் கலாச்சாரத்தையும் பேசும்போது இன்னும் கவனமாயிருக்க வேண்டியவனாகிறேன். சொல்லப்போனால், இந்தக் கேள்வியைச் சற்று மாற்றி கேட்டிருந்தால் சரியாயிருக்கும். ஒரு புனைவெழுத்தாளனாக மொழிபெயர்ப்புகளில் என்னுடைய குரல் தலைதூக்கி விடாமல் இருக்கவே நான் அதிகம் சிரமப்படுகிறேன். ஆடியின் பிம்பம் பிசகி விடாமல் தருவது மிக முக்கியமான கடமையாகிப் போகிறது. மற்றபடி, கதைகளை எழுதும்போது, சொல்முறையிலும் வடிவத்திலும் சில பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்து பார்க்க வாசிப்பும் மொழிபெயர்ப்பும் உதவத்தான் செய்கின்றன. Abstract தன்மையிலான கதைகளை எழுதும் என் பெருவிருப்பத்தை பிரெஞ்சு எழுத்தாளரான அலென் ராப் கிரியேவிடமிருந்தே பெற்றேன் எனச் சொல்லலாம்.

‘நரகத்தில் ஒரு பருவகாலம்’ பற்றிய உங்கள் முன்னுரை முக்கியமானதாக உணர்கிறேன். மொழிபெயர்க்க நீங்கள் வெவ்வேறு மொழியாக்கங்களை வாசித்து, ஒப்புநோக்குவது உங்கள் தீவிரத்தை காட்டுகிறது. ஒரு கவிதை நூலை மொழியாக்கம் செய்ததன் சவால் என்ன? ஏன் இந்நூலை தேர்ந்தீர்கள்? ஆத்மாநாம் விருது கிடைத்திருக்கும் இந்நூலை மொழியாக்கம் செய்த அனுபவத்தைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

ரைம்போவை நான் மொழிபெயர்க்கக் காரணம் பிரம்மராஜனே. கோவையில் ஒரு நிகழ்வுக்காக வந்திருந்தவருடன் அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். என்னுடைய சிறுகதைகளை அவர் வாசித்திருந்தார். அதைப் பற்றிய உரையாடலில் கதைகளில் புலப்பட்ட மனித வெறுப்பைப் பற்றிப் பேசும்போது அவர் ரைம்போவைக் குறிப்பிட்டார். நரகத்தில் ஒரு பருவகாலத்தின் கவித்துவத்தை எடுத்துச் சொல்லி நிச்சயம் அதை வாசித்துப் பாருங்கள் என்றும் சொன்னார். வெறும் பெயராக மட்டுமே நான் அறிந்திருந்த ஒரு மகத்தான கவிஞனின் படைப்பை எனக்கு அறிமுகப்படுத்தி அதை மொழிபெயர்க்கவும் சொன்ன பிரம்மராஜனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கிலத்தில் நான் வாசித்த ரைம்போவைப் பற்றிய கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டே நரகத்தின் நுழைவாயில் என்கிற அந்த முன்னுரைக் கட்டுரையை எழுதினேன். அவருடைய எழுத்துகளின் வழியே நான் ரைம்போவைப் பற்றி எனக்குள் உருவாக்கிக் கொண்ட சித்திரமும் அதற்கு உதவியது. நரகத்தில் ஒரு பருவகாலம் பற்றிப் பேசும் இந்த சமயத்தில் முக்கியமான இரண்டு சங்கதிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1) Arthur Rimbaud என்பதன் சரியான உச்சரிப்பு ஆர்தர் ரேம்போ என்பதே. ஆனால் வேறொரு திரைப்பட நாயகனை நினைவூட்டியதால் அந்தப் பெயரை நான் பயன்படுத்த விரும்பவில்லை. தமிழ் சிற்றிதழ் சூழலில் பலகாலமாக ரைம்போ என்றே குறிப்பிட்டு வந்த காரணத்தால் அதை அப்படியே இருக்கட்டும் என விட்டு விட்டேன். 2) நரகத்தில் ஒரு பருவம் என்கிற தலைப்பில் நாகார்ஜூனன் ரைம்போவின் சில பகுதிகளை மொழிபெயர்த்து அவருடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதிலிருந்து மாறுபட வேண்டுமென்பதற்காகவே தலைப்பில் பருவகாலம் என்று குறிப்பிட்டேன். ஆனால் பாண்டிச்சேரியில் இருந்த அழைத்த பேராசிரியர் கண்ணன் பருவகாலம் என்பது நம் நிலத்துக்கு மட்டுமே உரியது என்பதைச் சுட்டினார். தலைப்பை மாற்றலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தோடு நண்பன் திருச்செந்தாழையிடம் பேசினேன். தலைப்பின் கவித்துவத்தை பருவகாலம் என்கிற வார்த்தையே தாங்கிப் பிடிக்கிறது என்றான் செந்தாழை. ஆக அறிந்தேதான் இந்தத் தவறுகளை நான் அனுமதித்தேன் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

ரைம்போவின் மொழி மிக இறுக்கமானதாய் இருப்பதோடு பல்வேறு புரிதல்களுக்கான சாத்தியங்களையும் கொண்டது என்பதை வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை வாசித்ததன் மூலம் உணர்ந்தேன். ஒரே வரி மூன்று வடிவங்களில் மூன்று அர்த்தப்பாடுகளைத் தந்ததும் குழப்பியது. ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற சிதறுண்ட ஒரு பிரதியை பின்தொடர்ந்து அதன் நிழலையும் சரியாக மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம். ஆக நான் என் உள்ளுணர்வை நம்பியே இந்த மொழிபெயர்ப்பில் ஈடுபட்டேன். மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் ஒப்புநோக்கி ரைம்போவின் வரிகளுக்கு நெருக்கமென நான் உணர்ந்த வரிகளை மொழிபெயர்த்தேன். உரைநடைக் கவிதைகள் என வரும்போது அவற்றின் கவித்துவத்தை இழந்து வெற்று உரைநடை வரிகளாக மாறிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருந்தேன். வார்த்தைகளைப் புதிதாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. நிறைய லத்தீன் மொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தார் ரைம்போ. அவற்றின் அர்த்தம் தேடியெடுத்து வரிகளில் சரியாகப் பொருத்துவதும் அவசியமாக இருந்தது. வலசையில் சில கவிதை மொழிபெயர்ப்புகளில் ஈடுபடுத்திக் கொண்டிருந்ததும் ரைம்போவை மொழிபெயர்க்க உதவியது என்று சொல்லலாம். இதற்கு முன்னால் ரைம்போவை மொழிபெயர்த்த நாகார்ஜூனன் சங்ககாலக் கவிதைகளின் தொடர்ச்சியாக அவரைப் பார்த்தார். மொழிபெயர்ப்பிலும் அந்தத் தொனி இருந்தது. அந்த மொழியிலிருந்து வேறுபட்டு ரைம்போவை எந்த மாற்றமுமின்றி நான் வாசித்துணர்ந்த மொழியில் கொண்டு வருவதே ஆகப்பெரிய சவாலாகவும் இருந்ததென்பேன்.

சரியான ஒரு படைப்புக்கான அங்கீகாரம் என்கிற வகையில் ஆத்மாநாம் விருது ரைம்போவை மொழிபெயர்த்ததற்காக கிடைத்ததில் மகிழ்ச்சியே. அதற்கு நான் என் பதிப்பாளர் எதிர் வெளியீடு அனுஷுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பிடித்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவை எந்த வடிவத்திலிருந்தாலும் மொழிபெயர்க்க எனக்கிருக்கும் சுதந்திரம் அவரால் கிட்டியதே.

நீங்கள் கவிதை எழுதுவதுண்டா?

நான் கவிஞனில்லை என்பதை நன்கறிவேன். ஆனால் கவிதைகளை வாசிப்பது பிடிக்கும். அவை எனக்குள் வேறொரு மனநிலையை சிருஷ்டிக்கின்றன. ஒரு நல்ல தொகுப்பை வாசித்து முடித்த பிறகு அவற்றால் உண்டான இடைவெளிகளை எழுதி நிறைக்கும் முயற்சியாய் சில கவிதைகளை எழுதிப் பார்ப்பேன். அல்லது சட்டென்று தோன்றக்கூடிய படிமம் ஒன்றை வைத்து எழுதிப் பார்ப்பதும் உண்டு. கொம்பு முதல் இதழுக்கு ஒரு கவிதையை அனுப்பி இருந்தேன். வெய்யில் அதில் சில மாற்றங்களைச் செய்து ஒலிக்கிளர்ச்சி என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். கவிஞர் ஸ்ரீசங்கரை முதன்முதலில் சந்தித்தபோது அந்தக் கவிதையை குறிப்பிட்டு நீதான் எழுதியதா என்றார். ஆமாம் என்றேன். இனிமேல் கவிதை எழுதாதே என்று சொல்லி விட்டுப் போனார். அதை எப்போதும் நினைவில் வைத்திருப்பதால் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.

நாவல் எழுதும் யோசனை உண்டா?

நாவல் எழுத வேண்டும் என்கிற ஆவல் நிச்சயம் உண்டு. ஆனால் அதற்கான பக்குவம் இன்னும் எனக்குள் கூடி வரவில்லை என்றே நினைக்கிறேன். நானும் எழுதினேன் என்றில்லாமல் வடிவரீதியாக சற்றுப் புதிதாக எதையாவது எழுத வேண்டும் என்கிற ஆசை. தமிழில் இதுவரை பொறியியல் கல்லூரி வாழ்க்கையை முழுதாகப் பேசிய ஒரு நாவலென்று ஏதும் வந்ததாகத் தெரியவில்லை, அதையும் எழுதுவேன் என்றே எண்ணுகிறேன்.

உலக சினிமா பரிச்சயம் மற்றும் ஆதர்சம் பற்றி? அவை உங்கள் எழுத்தின் மீது எந்த அளவிற்கு தாக்கம் செலுத்தியிருக்கிறது?

சாரு நிவேதிதாவின் சினிமா – அலைந்து திரிபவனின் அழகியல் என்கிற நூலின் வழியாக அறிமுகமான அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கியே என் உலக சினிமா ஆதர்ஷம். காமிக்ஸிலும் அவர் வித்தகர் என்பது என்னுடைய ஈர்ப்புக்கு மற்றொரு காரணம். அவருடைய எல் டோபோவும் ஹோலி மௌண்டைனும் நான் மீண்டும் மீண்டும் பார்க்கும் படங்கள். எனவேதான் மீயதார்த்தப் புனைவாக நான் எழுதிப் பார்த்த சிலுவையின் ஏழு வார்த்தைகள் கதையை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். தவிர, ஜி.முருகனின் ஏழு காவியங்களை வாசித்து விட்டு தர்க்கோவெஸ்கியின் படங்களைத் தேடிப் பார்த்திருக்கிறேன். கிம்-கி-டுக்கிடம் வெளிப்படும் வன்முறையின் அழகியல் எனக்கு நெருக்கமான ஒன்று. சமீபமாக அரனோவெஸ்கியின் (பை, ஃபௌண்டைன்) படைப்புகளை அப்படி மனதுக்கு நெருக்கமாக உணருகிறேன். அதிர்ச்சி மதீப்பீடுகளைத் தாண்டி இவர்களின் திரைப்படங்கள் உண்டாக்கும் மன அவசமும் சுயவிசாரணையும் என்னை நிறையவே தொந்தரவு செய்யக்கூடியவை. அப்படியான படைப்புகளையே நான் விரும்பிப் பார்க்கிறேன். ஒரு சில இடங்களில், வெகு குறைவாக என்றாலும், இந்தத் திரைப்படங்களின் தாக்கம் என் எழுத்தில் இருப்பதாகவே உணருகிறேன்.

பயணம், இசை, ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உண்டா?

எழுத்தைத் தவிர்த்து என்னை உயிர்ப்போடு வைத்திருப்பது இசையே. ஹிந்தியில் நிறைய விரும்பிக் கேட்பேன். ரய் (Rai) இசையும் பிடிக்கும். எழுதவோ வாசிக்கவோ செய்யாத சமயங்களில் இசையோடுதான் இருக்கிறேன். பயணம் செய்வது பிடிக்குமென்றாலும் வலிந்து போவதில் உடன்பாடில்லை. மாறாக தனிமையிலிருப்பது ரொம்பப் பிடிக்கும். தேசாந்திரியை வாசித்து விட்டு ஒருமுறை இலக்கில்லாமல் பாண்டிச்சேரி, வடலூர், தஞ்சை என்றெல்லாம் சுற்றினேன். அது மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான பயண அனுபவம். ஆனால் என் பெரும்பாலான கதைகளில் பயணமும் ஒரு முக்கியமான அங்கமாக இருப்பதை என்னால் உணர முடிகிறது. இயல்பில் என்னால் நினைத்தவுடம் போக முடியாத பயணங்களைத்தான் எழுதிப் பார்க்கிறேனோ என்னமோ? ஓவியங்களில் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. எனக்கு மிகப்பிடித்த மற்றொரு சங்கதி – கால்பந்து. ஆர்செனல் அணியின் தீவிர ரசிகன் நான்.

உங்கள் சிறுகதைகள் அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்க முனைகின்றன என்றொரு விமர்சனம் வைக்கப்படுவதைப் பற்றி

அதிர்ச்சி மதிப்பீடு எனும் வார்த்தைக்கு இன்னும் அர்த்தமிப்பதாக நம்புகிறீர்களா? புனைவுகளை விட வினோதமான சங்கதிகளை நாளிதழ்களில் தினந்தோறும் வாசித்துக் கடக்கும் வாழ்க்கையில் வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகளை மட்டும் வைத்து ஒருவர் கதை சொல்லி விட முடியாது என்றே எண்ணுகிறேன். ரயிலில் பாயும் குழந்தையும் பெருத்த மார்புகளைக் கொண்ட ஆணும் மகளின் வயதொத்தவளைப் புணர்கிறவனும் வாசிப்பவர்களுக்கு வெற்றுக்காட்சிகளாக மட்டுமே கடந்து போவார்களெனில் நான் அதை எழுத வேண்டிய அவசியமில்லை. உடலைத் தாண்டிய வெறுமையையே நான் மீண்டும் மீண்டும்  எழுதுகிறேன். இந்தக் கதைகளில் உடல் வெறும் உடலாக மட்டும் இருப்பதில்லை. இவையெல்லாம் கண்முன்னே தினம் தினம் நிகழும் வாழ்வின் அபத்தத்தையும் செய்வதறியாமல் மூச்சு முட்டி நிற்கும் மனதின் பதற்றத்தையுமே பேச விழைகிறேன். ஒரு இளம் எழுத்தாளர் சில காலத்துக்கு முன் என் கதைகளை வாசித்து விட்டு அவை நன்றாயிருப்பதாகச் சொன்னார். ஆனால் தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக சமீபத்தில் ஒரு குறுந்தகவலை அனுப்பி இருந்தார். மறுவாசிப்பில் வன்முறையைத் தவிர இந்தக் கதைகளில் வேறொன்றுமில்லை என்று உணர்ந்ததாகச் சொன்னார். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. என் கதைகளை நான் நியாயப்படுத்த விரும்புவதில்லை. எழுதி முடித்தவுடன் அவற்றைக் கைவிடவே ஆசைப்படுகிறேன். என்றாலும், குறைந்தபட்சம் அவை விசாரணைக்குட்படுத்தும் சங்கதிகளைப் பொருட்படுத்தாமல், அவற்றைக் கடந்து போவதற்கான எளிய பாதையைத் தேர்வார்களெனில் நான் ஏதும் செய்ய முடியாது.  நவரசங்களில் அருவருப்பும் ஒன்றுதானே? ஜி.நாகராஜன் சொன்னதைத்தான் நானும் நினைத்துக் கொள்கிறேன்.

நவீன தனி மனிதனுக்கு தொன்மங்கள், நாட்டாரியல்போன்றவை தேவையில்லை என்று எண்ணுகிறீர்களா? அல்லது அதிலிருந்து துண்டித்து கொண்டவன் தான் நவீன மனிதன் என்பது உங்கள் பார்வையா? அரிதாகவே உங்கள் கதைகளில் தொன்மங்கள் கையாளப்படுகின்றன. அப்படி கையாளப்படும்போதும் அவை தலைகீழாக்கம் பெறுகின்றன.

நீ ஒரு அவாண்ட்-கார்டே ஆள் என்று போகன் சங்கர் அடிக்கடி என்னைக் கேலி செய்வதுண்டு. செவ்வியல் படைப்புகளில் எனக்கு அவ்வளவாக ஆர்வமிருப்பதில்லை. அவற்றை சரியாக உள்வாங்கிக் கொள்ளவியலாத என்னுடைய போதாமையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். முழுக்கவே நவீன் தொழில்நுட்ப ஊடகங்கள் சூழந்திருக்கும் நவீன மனிதனின் வாழ்வில் தொன்மங்களும் நாட்டாரியலும் என்னவாக இருக்கின்றன என்கிற குழப்பம் எனக்கிருப்பது உண்மையே. துண்டித்துக் கொண்டவன் எனச் சொல்லுவதை விட துண்டிக்கப்படுகிறான் என்பதே சரியாக இருக்கக்கூடும். எனவேதான் அறத்தைப் பேசுகிற தொன்மங்களை எடுத்துக் கொண்டு அதற்கு நேரெதிர் நிலையில் தலைகீழாக மாற்றுகிறேன். காட்டிக் கொடுத்தவனை இயேசு கொலை செய்திட, கர்ணன் தன் வாக்கை மீறி அர்ஜூனனைக் கொல்வதோடு தன்னயும் மாய்த்து குந்தியைப் பழிவாங்குகிறான். இவையே இன்றைய சூழலுக்குப் பொருந்தும் என்கிற அறம் பேசும் எதையும் நம்பாத எளிய மனம் என்னுடையது. முழுக்க முழுக்க தொன்மங்களை மட்டும் பேசுகிற ஒரு கதையை எழுத வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. அதற்கான மொழியும் மனநிலையும் வசப்படும் காலத்தில் நிச்சயம் எழுதுவேன்.

நவீன தனி மனிதனின் மிக முக்கியமான சிக்கல் என்னவென எண்ணுகிறீர்கள்?

காற்றுக்குமிழியைப் போல மனிதனைச் சுற்றிச்சுழலும் அவநம்பிக்கைதான் நவீன தனி மனிதனின் மிக முக்கியமான சிக்கல் என எண்ணுகிறேன். உறவுகள் மற்றும் நம்பிக்கைகளின் இடத்தை ஊதிப் பெருக்கப்பட்ட ஊடக பிம்பங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. என்றாவது ஒரு நாள் எதிர்பாராத தருணத்தில் அந்தக்குமிழி வெடித்துச் சிதறும்போது அவன் மொத்தமாகத் தன்னைத் தொலைக்கிறான். அதிலிருந்து ஒருபோதும் மீள முடியாதவனாக இருக்கிறான்.

உங்கள் எழுத்து அரசியலுடன் தொடர்பற்று உள்ளது என்றொரு விமர்சனம் வைக்கப்படுவதைப் பற்றி..

காலம் காலமாகச் சொல்லப்படும் விமர்சனம்தான். தனி மனிதனின் உலகை எழுதும்போதே அவனை அந்த இடத்துக்கு நகர்த்திச் செல்லும் சமூகத்தைப் பற்றிய விமர்சனம் மறைமுகமாக வைக்கப்படுகிறதுதானே? அவனுடைய சிக்கல் என்பது அவனுடைய பிரச்சினைகள் மட்டும்தானா? பிரச்சாரம் செய்யும் கதைகளை என்னால் எழுத முடியாது. எனது நம்பிக்கைகளின் பாற்பட்டே நான் இயங்குகிறேன். அரசியலற்றிருப்பதின் அரசியல் என்பதை கோணங்கியிடம் இருந்தே கற்றேன். அதை இன்றளவும் நம்புகிறேன்.

மர நிறப் பட்டாம்பூச்சிக்கு என்னவிதமான விமர்சனங்கள், கவனம் கிட்டின

தொகுப்பை வாசித்தவர்கள் அனைவருமே அந்தக் கதைகளை எளிதில் கடந்து போக முடியவில்லை என்பதையும் ஏதோ ஒரு இடத்தில் தங்களைப் பொருத்திப் பார்க்க முடிந்ததாகவும் சொன்னார்கள். ஒருவகையில் என் கதைகளின் நோக்கம் அதுதான் என்னும்போது மகிழ்ச்சியாக உணர்ந்தேன். லக்ஷ்மி சரவணகுமாரும் போகனும் தொகுப்பைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளை எழுதித் தந்தார்கள். தொகுப்பை வெளியிட்டுப் பேசிய அர்ஷியா கதைகளில் காணக்கிடைத்த புதிய குரலை சிலாகித்தார். முதல் விமர்சனத்தை எழுதிய வாமு கோமுவுக்கு கதைகளில் இடம்பெற்றிருந்த கனவுகள் ரொம்பப் பிடித்திருந்தன. வெளியான இரண்டு மாதத்தில் வாசகசாலையின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது கிடைத்தது. அந்த சமயத்தில் ராஜ சுந்தரராஜன் ஒரு விமர்சனம் எழுதினார். உலகத்தரத்திலான கதைகள் என்கிற அவருடைய வார்த்தை மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. மதுரையில் புனைவு செந்தி ஏற்பாடு செய்த கூட்டத்தில் கணேசகுமாரன் ஒரு கட்டுரை வாசித்தார். சிறிது காலம் கழித்து நெல்லையில் தமுஎகச சார்பில் நடந்த கூட்டத்தில் தோழர்கள் மணிமாறனும் உதயசங்கரும் தொகுப்பு குறித்துப் பேசினார்கள். இவை இரண்டைத் தவிர வேறு எந்த கூட்டமும் நடைபெறவில்லை. புத்தகம் வெளியான சமயத்தில் கிட்டத்தட்ட முப்பது பேருக்கு தொகுப்பை அனுப்பி வைத்தேன். முகநூலில் ஒரு சில நண்பர்கள் குறிப்புகளாக எழுதினார்கள் என்பதைத் தாண்டி பெரிய சலசலப்பு ஏதும் ஏற்படவில்லை. தொகுப்பு இன்னும் கொஞ்சம் கவனிக்கப்பட்டிருக்கலாமோ என வருத்தமாக இருக்கும்போதெல்லாம் ராஜ சுந்தரராஜன் எழுதிய விமர்சனத்தை எடுத்து வாசிப்பேன். சரியாகச் செய்திருக்கிறோமா என்பதை விடத் தவறாக ஏதும் செய்து விடவில்லை என்பதை எனக்குள் உறுதி செய்து கொள்ளும் வழிமுறையாக அதைப் பின்பற்றினேன். ஆத்மாநாம் விருது இப்போது வேறொரு வகையில் நண்பர்களிடம் என்னுடைய சிறுகதைகளையும் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. சொல்வனத்தில் கிரிதரன் எழுதிய கட்டுரையை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாவற்றையும் விட மகிழ்ச்சியைத் தந்த வேறொரு சங்கதியும் உண்டு. திருச்சியைச் சேர்ந்த வாசக நண்பரொருவர் தொகுப்பை வாசித்து விட்டு கைப்பட எழுதியனுப்பிய இருபது பக்க கடிதம் என்னளவில் ஒரு பொக்கிஷம்.

சிறுகதைகளை எழுத எடுத்துகொள்ளும் நேரம் எவ்வளவு? திருத்தி எழுதும் வழக்கம் உண்டா?

சிறுகதைகளை நான் மனதுக்குள்தான் முதலில் எழுதிப் பார்க்கிறேன். கதைக்கான கரு என்னுள் தோன்றும் சமயத்தில் அதை அப்படியே விட்டு விடுவேன். பிறகு அந்தக்கதைக்கான இன்னபிற சங்கதிகள் மனதுக்குள் சேகரமாகிக் கொண்டே இருக்கும். இதுதான் வடிவம் என்பது எனக்குள் ஒரு மாதிரி உருவாகி நிற்கும் தருணத்தில் வாய் வார்த்தையாக கதையை ந.ஜயபாஸ்கரனிடம் சொல்லிப் பார்ப்பேன். ஒரு முறை கூட அந்தத் தங்கமான மனிதர் நான் சொல்லும் எதையும் நன்றாகயில்லை என்று சொன்னதே கிடையாது. அந்த வடிவத்தில் எனக்கு திருப்தி என்றான மறுகணம் எழுத உட்காருவேன். என்னுடைய கதைகள் எல்லாமே அநேகமாக ஒரு நாள் இரவுக்குள் எழுதப்பட்டவைதான். கணிணியில் நேரடியாக எழுதும் பழக்கம் கொண்டவன் நான். முழுமூச்சாக எழுதி முடித்தவுடன் இரண்டு பேருக்கு அனுப்புவேன். அவர்களில் ஒருவர் போகன், மற்றவர் ஏற்கனவே சொன்னதுபோல ந.ஜயபாஸ்கரன். அவர்கள் சொல்லும் திருத்தங்களைச் செய்து முடித்தபிறகே கதைகளை பிரசுரிக்கத் தருவேன்.

எழுத்து சார்ந்து ஏதேனும் செண்டிமெண்ட்ஸ் உண்டா, இடம், கணினி, காலமென

அது மாதிரி ஏதும் கிடையாது. ஆனால் எழுதும் காலம் இரவாயிருந்தால் சற்று ஆசுவாசமாக இருக்கும்.

உலக இலக்கியங்களை வாசிப்பவர் எனும் வகையில், சமகால தமிழ் இலக்கிய சூழலின் நிலை எத்தகையதாக உள்ளது, அதன் செல்திசை என்னவாக இருக்க வேண்டும், அதன் சிக்கல்கள் என்ன?

நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம், என்றாலும் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்தான். சமீபத்தில் சேலத்தில் நடந்த ஒரு கூட்டத்தின் போது ஜி.முருகனோடு வெகுநேரம் புனைவுகள் குறித்து உரையாட முடிந்தது. எத்தனை பேசினாலும் இறுதியில் நம் புனைவுகள் யதார்த்தத்தளத்தை விட்டு ஏன் வெளியேற மறுக்கின்றன என்கிற முக்கியமான கேள்வியை எழுப்பினார். மிகுபுனைவுகளிலும் வடிவங்களிலும் நாம் வெகு குறைவாகவே எழுதிப் பார்த்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. அதற்கான அடிப்படைக் காரணமாக உணர்வுகளுக்குப் பழக்கப்பட்டுப்போன தமிழ் மனதைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. மிகுந்த கவித்துவமான சுழல் வரிகளின் வழியாகக் கோணங்கியும் தன் பால்யத்தையும் தொலைந்து போன காலத்தையும்தான் (நாஸ்டால்ஜியா) பேசுகிறார் எனும்போது நம்மால் அதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றிலும் இழந்த வாழ்க்கையையும் அதன் மென்னுணர்வையும் தேடும் மனம். அதிலிருந்து விலகி புதிய நிலங்களில் பாதைகளில் பயணிக்கும்போது தமிழ்ச் சிறுகதைகள் இன்னுமதிக உயரத்தை எட்டக்கூடும். பாலசுப்பிரமணியன் பொன்ராஜ், சிவசங்கர் எஸ்ஜே போன்றவர்கள் இன்று அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது சற்று ஆறுதலான சங்கதி.

நவீன தமிழ் எழுத்தாளனின் சவால்கள் என எதைச் சொல்வீர்கள்?

நவீன தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கக்கூடியவை இரண்டு சவால்கள். முதலில், அவன் எதை எழுதுவது என்பது. எண்பதாண்டு காலம் பல ராட்சதர்கள் நடந்துபோன பாதையில் அவர்களனைவரின் எழுதிச்சென்ற பாரத்தையும் தாங்கிக்கொண்டு நடக்க வேண்டியவனாகிறான். அவர்களை எல்லாம் தாண்டி புதிதாக எதைச் சொல்கிறான் என்பதும் அதனை எத்தனை துல்லியமாகச் சொல்ல முடிகிறது என்பதும்தான் அவன் முன்னாலிருக்கும் ஆகப்பெரிய சவால். இரண்டாவதாக, இன்று உருவாகி இருக்கக்கூடிய வாசிப்புச்சூழல். மிகுந்த வருத்தத்தோடுதான் இதைச் சொல்கிறேன், வாசிப்பு ஒருவகை மோஸ்தராகிப்போன காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். முன்னெப்போதையும் விட கூட்டங்கள் அதிகமாக நடத்தப்படுகின்றன. நிறைய வாசிக்கிறார்கள். ஆனால் அவற்றுள் தரமானவற்றைத் தேடிக் கண்டடையும் வாசகர்கள் உண்மையில் எத்தனை பேர்? தேடல் என்பது அரிதாகி விட்ட சூழலில் அமர்ந்திருக்கும் இடத்தில் கிடைப்பதை வாசித்து விட்டு பெரிதாகப் பேசும் மக்களுக்கிடையேதான் ஒருவன் இன்னும் தீவிரமாக எழுத வேண்டியிருக்கிறது.

இறுதியாக எதற்காக எழுதுகிறேன் என்றொரு வினா எழுப்பினால் என்ன சொல்வீர்கள்

எழுத்து எனக்கான போதை. ஒரே போதை.

Advertisements

இருளில் புதையும் நிழல்கள்-  கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா

நரோபா

 

1981ஆம் ஆண்டு பிறந்த கார்த்திகைப் பாண்டியன் மதுரையில் வசித்து தற்போது கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர். தற்கால உலக இலக்கியம் சார்ந்து தேர்ந்த வாசிப்புடையவர். 2015ஆம் ஆண்டு ‘எதிர்’ வெளியீடாக வெளிவந்த அவருடைய முதல் சிறுகதை தொகுப்பு ‘மரநிறப் பட்டாம்பூச்சிகள்’ பத்து கதைகளையும் லக்ஷ்மி சரவணகுமார் மற்றும் போகன் ஆகியோரின் இரு கட்டுரைகளையும் உள்ளடக்கியது. ‘வலசை’ இதழில் நேசமித்திரனோடு சேர்ந்து முக்கிய பங்காற்றியவர். எஸ்.ராவை தன் ஆதர்சமாக அறிவித்துக் கொண்டவர். தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் தொடர்ந்து இயங்கி வருபவர். அண்மைய காலங்களில் அவருடைய மொழியாக்கங்கள் பெரிதும் கவனிக்கப்படுகின்றன. ‘நரகத்தில் ஒரு பருவகாலம்’ எனும் ஆர்தர் ரைம்போவின் கவிதைத் தொகுப்பை தமிழாக்கம் செய்திருக்கிறார். வெவ்வேறு மொழியாக்கங்களுடன் ஒப்பிட்டு மிகுந்த ஈடுபாட்டுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதே நூலில் அவர் எழுதியிருக்கும் ரைம்போவின் வாழ்க்கைக் குறிப்பும் முக்கியமானது. இத்தொகுதிக்காக 2018ஆம் ஆண்டு ஆத்மாநாம் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கதைகளை வாசித்து முடித்ததும் கார்ர்திகைப் பாண்டியனை என் அகத்திற்கு மிக நெருக்கமான படைப்பாளியாய் உணர்ந்தேன். கார்த்திகைப் பாண்டியனின் கதைமாந்தர்கள் மரணம் எனும் பிலத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுபவர்கள், அதன் இருளைக் கண்டு திகைத்து நிற்பவர்கள், புலப்படும் இருட்பிலத்தின் வாயிலின் நின்றபடி வாழ்வின் பெறுமதியை எண்ணி மருள்பவர்கள், விசையறு பந்தினைப் போல் மரணம் நம் அண்மையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது, அது எந்நேரத்திலும் எவரையும் தீண்டக்கூடும் எனும் பிரக்ஞை உடையவர்கள்.

‘நிழலாட்டம்’ கதையில் கதைசொல்லியின் நான்கு நிழல்கள் பிரிந்து வெவ்வேறு அனுபவத்தை பேசுகின்றன. முதல் நிழல் மிகத் தீவிரமாக காமமும் மரணமும் தன்னை எப்படி அலைக்கழிக்கிறது என்று சொல்கிறது- ‘ஆக என்னுடைய மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது நான்தான்’ என்று முடித்த பின் எதிரில் அமர்ந்தவன் நிமிர்ந்து அமர்ந்து ‘ப்ளைன் நானா பட்டர் நானா என்ன சாப்புடுற?’ எனக் கேட்கிறான். இங்கே உன் துக்கங்களுக்கும், துயரங்களுக்கும் அலைக்கழிப்புகளுக்கும் யாதொரு மதிப்பும் இல்லை எனும் உண்மை குளிர்ந்து இறுக்குவதாக இருக்கிறது. கார்த்திகைப் பாண்டியன் புதிய காலத்தின் கதைசொல்லியாக தன்னை நிறுவிக்கொள்வது இத்தகைய தருணங்களின் வழியாகத்தான். போகன் கார்த்திகைப் பாண்டியனின் உள்ளம் ஐரோப்பியனுடையது எனச் சொல்கிறார். நவீன மனிதனின் பொருட்டின்மையை அப்பட்டமாக சூடிக்கொள்கிறார்கள் கார்த்திகைப் பாண்டியனின் மனிதர்கள்.

‘நிழலாட்டம்’ கதையில் சாலையோர காட்சிக்கு சாட்சியாய் நிற்கிறது இரண்டாம் நிழல். கார்த்திகை பாண்டியனின் கதைகளில் கையறு நிலையில் அல்லது செயலின்மையில் உறைந்து அல்லது தனது உறைநிலையை விட்டு மீண்டுவர விரும்பாத வெறும் சாட்சியாக இருப்பவனின் பார்வை பல்வேறு இடங்களில் மீள மீள வருகிறது. ‘நிழலாட்டம்’ மனிதனின் முரண்பட்ட சுயங்களின் பிரதிகளாகின்றன. நிழல்கள் இருளில் தம் இருப்பை கரைத்துக்கொள்பவை. அவ்விருள் அவற்றை காக்கவும் செய்யும். கண் முன் இரயிலில் தாவும் குழந்தையைக் காண்கிறான். ரயில் நிலையத்தில் கொப்புளங்களோடு கால் சூம்பிய பிச்சைக்காரனுக்கு காசு போட எண்ணுகிறான், ஆனால் சில்லறை இல்லை. அவனுடைய இரஞ்சுதலை பொருட்படுத்தாமல் காது கேளாதவனாக கடந்து செல்கிறான் (‘மரநிறப் பட்டாம்பூச்சி’). ரயிலில் இது என்ன இடம் எனக் கேட்கும் குருட்டு பிச்சைக்காரனுக்கு பதில் சொல்லலாமா என்று வாய் திறந்து பின் மவுனித்துவிடுகிறான் கதைசொல்லி. எவரும் பதில் சொல்லாதபோது பிச்சைக்காரன் வசைபாடுகிறான் அப்போதும் அதைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான். சு.வேணுகோபாலின் ‘வேதாளம் ஒளிந்திருக்கும்’ கதையில் பேருந்து பயணத்தின்போது எழுந்து இடம் கொடுக்க கதைசொல்லிக்கு இருக்கும் தயக்கங்களை, பின்னர் கொடுக்காததன் குற்ற உணர்வை எழுதி இருப்பார்.

கார்ர்திகைப் பாண்டியனின் கதை மாந்தர்கள் சந்தர்ப்பவாதிகள். சத்தமில்லாமல் இன்னொரு வண்டியிலிருந்து வண்டி துடைக்கும் துணியை திணித்துக்கொண்டு வருகிறான் (‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’). மாலில் நின்று இப்படியான பெண்களை தன்னால் ஒருபோதும் புணர முடியாது எனும் உணர்வால் வதைக்கப்படுகிறான். ஆனால் இதே கதைசொல்லி முன்னிருக்கையில் பையை மேலே வைக்கத் தடுமாறும் பெண்ணுக்கு உதவச் செல்கிறான். அங்கே அவன் சன்னமான வாய்ப்பைக் காண்கிறான். குற்ற உணர்வையும் மீறி கீழ்மையில் உழல்கிறான். நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் நண்பனின் தங்கையின் பெருத்த மார்பை அவன் கண்கள் தீண்டுகின்றன. பேருந்து பயணத்தில் சிறு பெண் பிள்ளையின் மார்புகள் சிற்றலையென ஏறித்’ தாழ்வதை காண்பதினால் குற்ற உணர்வு கொள்கிற அதேசமயம் காணாமலும் இருக்க முடியவில்லை. தன் செல்போனில் முழுமையாக சார்ஜ் இல்லாதபோதும்கூட பிறர் செவி சாய்க்காத அழகிய பெண்ணின் கோரிக்கைக்கு செவி சாய்த்து கண்ணியமான கனவான் போல விட்டுக்கொடுத்தபின் தத்தளிக்கிறான்.

‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’ கதையில் லிப்ட் கேட்கும் பெரியவரை வண்டியில் ஏற்றிக்கொண்டதும் கதைசொல்லி தனக்குள்ளாக சிந்திக்கிறான். “வண்டியை ஓட்டும்போதும் அவனுக்குள் அலையலையாக கேள்விகள் எழும்பிய வண்ணம் இருந்தன. நான் ஏன் இவருக்கு உதவுகிறேன், எத்தனை பேரிடம் இவர் கேட்டிருப்பார்.. அவர்கள் எல்லாம் மாட்டேன் எனச் சொல்லிவிட்டுப் போகையில் என்னால் ஏன் அது முடியவில்லை? ஏன் என்னைத் துரத்துகிறது? சரி, நான் இவருக்கு உதவுகிறேன், ஆனால் இவரைப் போலிருக்கும் அத்தனை பேருக்கும் உதவும் மனம் கொண்ட மனிதர்கள் இங்கே இருப்பார்களா?”

செயலுக்கு துணியாத அவன் உணர்வு நிலையில் பிணைந்து அவதி கொள்கிறான். ஒருவகையில் மத்திய வர்க்கத்து இருநிலையை பிரதிபலிக்கிறார், எனும் போகனின் பார்வை ஏற்புடையதாக இருக்கிறது. மனிதர்களுக்கு அனுசரணையாக இருக்க விழைவதும், சக மனிதர்களின் மீது முற்றிலும் நம்பிக்கையற்றுப் போனதும் இந்நூற்றாண்டின் மத்திய வர்க்கச் சிக்கல் மட்டுமல்ல. இவை நவீன தனிமனிதனின் மிக முக்கியமான இயல்புகளில் ஒன்று. அதுவும் வர்க்கங்களும், சாதிகளும் தெளிவாகப் புலப்படும் இந்தியா போன்ற தேசத்தில் தன் விழைவுகளை முழுவதுமாக பின்பற்றிச் செல்பவன் குற்றவுணர்வுக்கு உள்ளாகிறான். ஆனால், கார்த்திகைப் பாண்டியனின் கதைமாந்தர்கள் முழுக்க நவீன தனி மனிதர்களா என்றால் இல்லை. இன்னமும் ஒருகாலை மரபில் ஊன்றியவர்களாக இருக்கிறார்கள். ‘கன்னியாகுமரி’ கதையின் ராமநாதன் ஒரு உதாரணம். தயக்கத்தையும் குற்றவுணர்வையும் அவர்களால் முழுமையாக கைவிட இயலவில்லை.

பைத்தியக்காரி திரும்பத் திரும்ப துன்புறுத்தியும்கூட அவள் காலடிக்கே திரும்பத்திரும்ப வருகிறது நாய்க்குட்டி. நாய்க்குட்டியின் முடிவு பைத்தியக்காரிக்கும் பார்வையாளனுக்கும் ஒரேவித கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. நம் விருப்புக்கள் இட்டுச் செல்லும் அழிவை, முரட்டு பிரேமத்தின் பொருளின்மையை ஒரு குறியீடாக விரித்துகொள்ளத்தக்க பகுதி இது. கார்த்திகைப் பாண்டியனை அலைக்கழிக்கும் கேள்வியின் பிரதிநிதியாகவும் இதைக் கொள்ளலாம். இதெல்லாம் ஏன்? தன்னழிவை தேடி விரைவது ஏன்? இக்கேள்விகளுக்கு விடையில்லை. ஒருபோதும் அவை வசப்படப்போவதும் இல்லை. ஆனால் நம் வாழ்வைப் பற்றிய உறுதிப்பாடுகளை சற்றே அசைத்து காலுக்கு கீழே நிலம் நழுவுவதை உணர முடிகிறது. இலக்கியப் பிரதிகள் நமக்கு ஆசுவாசமளிக்கும் எந்த விடையையும் சொல்வதில்லை, அவை நெஞ்சுக் கரிப்பாக, இரவுகளில் உறங்கவிடாத நமைச்சலாக நம்மை தொந்தரவு செய்கின்றன.

‘அந்தர மீன்’ உளவியல் தளத்திலான காதல் கதை. சிறுகதையின் கனவுப் பகுதி ஃபிரான்சிஸ் கிருபாவின் கன்னியை நினைவுபடுத்தியது. எழுத்தாளர் வலுவாக வெளிப்படும் தருணங்கள் என கனவுப் பகுதிகளைச் சொல்வேன். கதையின் பேசுபொருள் வழமையானது, ஆனால் கார்த்திகைப் பாண்டியனின் மொழி மற்றும் கூறுமுறை இக்கதையை மனதிற்கு மிக நெருக்கமானதாக ஆக்குகிறது. தனக்கே தனக்கான நேசத்தைக் கண்டடைந்து அதில் திளைத்திட கனவு கண்டவள் நீரற்ற அந்தர வெளியில் துடித்துக் கொண்டிருக்கிறாள். அனோஜன், விஷால், சுரேஷ் பிரதீப் என கார்த்திகைப் பாண்டியனின் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளில் விரவிக் கிடக்கும் ‘அன்பிற்கான ஏக்கம்’ என்பது நவீன வாழ்வின் வேகத்தின் மீதான மிரட்சியாக புத்தாயிரம் படைப்பாளிகள் பலரிடம் காணக் கிடைக்கிறது. இத்தொகுதியில் மிகுந்த பரிவுடன் எழுதப்பட்ட கதை என இதைச் சொல்வேன். கவுதம் தன்னுள் ஆழ்ந்தவனாக தன் மீது சொரியப்படும் அன்பை உணராதவனாக இருக்கிறான்.

‘மரநிறப் பட்டாம்பூச்சிகள்’ நான்கு பகுதிகள் கொண்டது. ‘எந்த முடுக்கிலும் வாழ்வின் அபத்தத்தை மனிதன் எதிர்கொள்ளக்கூடும்’ என பொருள்படும் காம்யுவின் இரு வரி ஆங்கில மேற்கோள் மட்டுமேயுள்ளது ஒரு பகுதி. அதற்கு அடுத்து வரும் மூன்று வெவ்வேறு துண்டு நிகழ்வுகளைக் கோர்த்து சிறுகதையாக்குவதும் இந்த மேற்கோளே. இரண்டாம் பகுதியில் அதுவரை நுழைந்திடாத உயர்தர மதுபான அரங்கிற்குள் நுழைபவன் தன்னை அந்நியனாக உணர்கிறான். சரியாகச் சொல்வதாக இருந்தால், வன ஓவியங்களில் இருந்து தப்பித்து இருக்கையின் நிறத்தில் தன்னைப் புதைத்து கொள்ளும் ‘மர நிறப் பட்டாம்பூச்சி’யாக தன்னை உணர்கிறான். போகன் தொகுப்பின் இறுதியில் எழுதியிருக்கும் கட்டுரையில் இந்த படிமத்தைக் கொண்டு அபத்தம் எப்படி ஒரு தரிசனமாக கார்த்திகைப் பாண்டியனின் கதைகளில் துலங்கி வருகிறது என்று சொல்கிறார். “பட்டாம்பூச்சிகள் பொதுவாக வண்ணம் மிகுந்தவை. கவனத்தை ஈர்க்கவே தங்கள் பொலியும் நிறங்களை அணிந்தவை. அவற்றின் வண்ணம் ஒரு விளம்பரம். ஆனால் மர நிறப் பட்டாம்பூச்சிகளின் பயன்மதிப்பு இங்கே என்ன? அவை வழக்கத்துக்கு மாறாக தங்கள் இருப்பை மறைக்கப் பார்க்கின்றன. இந்தக் கதைகளில் வரும் எல்லோருக்கும் அவர்களது இருப்பு ஒரு பிரச்சினையாக இருக்கிறது.” கலவிக்கு முன்பாகவே சோர்ந்து விடுகிறவனை தற்பால் உறவுக்கு அழைக்கும்போது தவிர்த்து விடுகிறான். பின்னர் அவன் சிக்கி அடிபடும்போது இவனை பழிதீர்க்கும் நோக்கில் சிரிக்கிறான். மரநிறப் பட்டாம்பூச்சியாக எதை மறைக்கிறான் என்றொரு கேள்வியை எழுப்பினால் கதை வேறு சில தளங்களை திறக்கக்கூடும்.

‘கன்னியாகுமரி’ இரு வேறு காலங்களில் நான்கு வெவ்வேறு நாட்களில் நிகழ்கிறது. நரேந்திரன் தன் தேடலைக் கண்டடைகிறான். கன்னி அன்னையென எழுகிறாள். அன்பைத் தவிர அவளிடம் கேட்பதற்கு வேறொன்றுமில்லை அவனுக்கு. அதே கன்னியாகுமரியில் நிகழ்காலத்தில் உயிருக்கு உயிராய் நேசித்த பதின்ம வயது மகளைத் தொலைத்த தந்தை விரக்தியில் தனியாக சுற்றி அலைகிறார். அனைவரும் இணையோடு வந்திருக்க தான் மட்டும் தனியனாக வந்திருந்தது அவரை அழுத்துகிறது. ஏறத்தாழ தொலைந்த மகளுடைய வயதையொத்த அல்லது அவளினும் இளமையான தனித்த கன்னிப் பெண்ணின் துணையை நாடுகிறார். கன்னிமையை போக்கும் கலவிக்கு பின் அவளுடைய பெயரை பகவதி என்று அறிகிறார். கடலுக்குள் குதித்த நரேந்திரன் கரையை அடைகிறான். கன்னியின் சுடர் தொலைவில் தெரிய அவன் தேவியின் மார்பென இருக்கும் பாறையில் கால்பதித்து முத்தமிட்டு மடியில் அமர்ந்து தன்னையிழக்கிறான், நடுத்தர வயதில் இருக்கும் ராமனாதனுக்கோ பகவதி அன்னையாகவில்லை. கடலில் குதித்தவன் ஏறிக் கால் பதிக்க அன்னையின் மார்பும் அவனுக்கில்லை. காமத்தின் இருநிலையை கதை சொல்வதாக புரிந்துகொள்கிறேன். காமம் உன்னதமாகும்போது கன்னி அன்னையாகிறாள். காமம் அப்பட்டமாகும்போது மகளும்கூட வெறும் கன்னியென நுகரப்படுகிறாள்.

‘சிலுவையின் ஏழு வார்த்தைகள்’ அதன் கட்டற்ற கற்பனை மற்றும் ஒழுங்கின்மை காரணமாக இத்தொகுதியில் எனக்கு பிடித்த கதையாகிறது. லத்தீன் அமெரிக்க சாயல் கொண்ட ஊகப் புனைவு. உன்னதமான சிலுவையின் சொற்கள் எல்லாம் தலைகீழாக்கப்படுகின்றன. மரித்தவர்கள் எல்லாம் எவனோ ஒரு மயிருக்காக நான் எதற்கு சாக வேண்டும் எனத் திருப்பிக்கேட்டு விழுமியங்களை கவிழ்க்கிறார்கள். தேவகுமாரன் தன்னைக் காட்டிக் கொடுத்தவனை பழி தீர்க்கிறான் அல்லது அதன் மூலம் மன்னிக்கிறான். கர்ணன் போரில் அர்ஜுனனைக் கொல்கிறான், தானும் மரித்து அவன் அன்னையை வதைக்கிறான். இக்கதை மையமற்ற காட்சிக் கோவை. அதன் இருட் சித்தரிப்புகள் காரணமாக வெகுவாக அலைகழிப்பவையும்கூட. இக்கதை அலெஹாந்த்ரோ ஹொடொரோவெஸ்கிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியின் மற்றொரு கதையான ‘Viva Le Muerte அல்லது இணைய மும்மூர்த்திகளும் இலக்கிய பஜனை மடங்களும்’ கதையில் அதன் இயக்குனர் அர்ரிபால் பற்றிய அடிக்குறிப்பு இருக்கிறது. இவர்கள் இருவரையும் இணைப்பது ‘பீதி இயக்கம்’ (Panic movement). இவ்வியக்கத்தைப் பற்றி அறிவது கார்த்திகைப் பாண்டியனின் கதைகளை மதிப்பிட மிக முக்கியமான சாதனமாகும். அதிர்ச்சியளிக்கும் பீதியை சித்தரிப்பதின் ஊடாக அமைதியை, அழகை, அடைய முனைவதை இவ்வியக்கம் லட்சியமாக கொண்டது. சர்ரியலிசத்தன்மை கொண்டது. அழகின், அமைதியின் பொது இலக்கணத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒருவிதமான அகோரித்தன்மை என்று புரிந்துகொண்டேன். கார்த்திகைப் பாண்டியனின் கதைகளில் வரும் சித்தரிப்புகள் அவசியத்தை மீறி அதிர்ச்சியளிப்பவை என்பதை ஓர் எதிர்மறை விமர்சனமாக முன்வைக்கும்போது இந்த பின்புலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இங்கு எழுத்தாளர் உத்தேசிப்பதே அதைத்தான். நவரசங்களில் ‘பீபத்சம்’, ‘பயம்’, ஆகியவையும் உள்ளதுதான்.

‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’ நொடிக்கு நொடி உருமாறும் மானுட நிலையை குறிக்கிறது, அல்லது எதன்மீதும் பெரும் பற்றற்ற ஆழமற்ற மிதவையாக மனிதன் இழுத்துச் செல்வதை உணர்த்துகிறது. ஏமாற்றப்பட்டதாக உணரும் மறுகணம் அவன் ஏமாற்றவும் செய்கிறான், ஒரு அழகிய பெண்ணைத் தொடர்கிறான், பின்னர் அப்படித் தன்னை ஈர்த்த பெண்ணின் நினைவுகளுக்குள் புதைகிறான். இயேசுவின் மீது ஈர்ப்பு என்ற காரணத்தினால் அவளை விட்டு விலகுகிறான். பசி மயக்கத்தில் இருக்கும் நபர் உதவி கேட்கும்போது முதலில் நம்ப மறுக்கிறான், பின்னர் ஏற்கிறான், அவரை வண்டியில் அழைத்துச் செல்லும்போதுகூட அவனுக்குள் எண்ணங்கள் நொடிக்குநொடி உருமாறிக்கொண்டே இருக்கின்றன. அவர் அவனை நீங்கிச் சென்றபின்னரும்கூட தனது பர்சைத் தொட்டுப் பார்க்கிறான். நவீன வாழ்வின் வழியாக மனிதன் வந்தடைந்திருக்கும் நம்பிக்கையின்மையை இக்கதை பேசுகிறது.

மனிதர்கள் சூழ ஒரு பெருநகரத்தில் இருந்தபோதும் செல்போன் அணைந்துவிட்டதும் யாருமில்லாத உணர்வை அடைவதை பேசத் துவங்குகிறது ‘தனி’. நவீன வாழ்வில் நாமுணரும் பதட்டத்தை இதுவரை நாம் ஏன் கதையாக்கவில்லை எனும் எண்ணம்தான் முதலில் தோன்றியது. ”அவனோடு வந்து கொண்டிருந்த நிழல்கள் இப்போது வெளிச்சத்தில் ஒவ்வொன்றாய் மறையத் தொடங்கியிருந்தன. இறுதி நிழலாய் அவளும் காணாமல் போனபோது பாதை முடிந்திருக்க மஞ்சள் ஒளி பொங்கிப் பிரவகித்த அத்துவான வெளியொன்றில் அவன் தனியாக நின்றிருந்தான்“ எனும் முடிவு ஏதோ ஒருவகையில் நிழலாட்டத்தின் நீட்சியாக அல்லது இதன் தொடர்ச்சி நிழலாட்டம் என்பதாக வாசிக்க இடமளிப்பதாக உள்ளது. யதார்த்த கதையாக துவங்கி மாயத்தன்மை கொண்ட முடிவை இக்கதை அடைகிறது.

‘பரமபதம்’ ஒருவகையில் பரமனின் பதம் எனும் மரணத்தை அடைவது, அல்லது வாய்ப்புக்களால் நிர்ணயிக்கப்படக்கூடிய, எப்போது வேண்டுமானாலும் எந்த உச்சியிலிருந்தும் பாதாளத்திற்கு இழுத்துவரும் ஆற்றல் மிக்க ஒரு விளையாட்டு. தற்செயல்களே தீர்ப்பெழுதுகின்றன. இத்தொகுதியில் தன்னிலையில் சொல்லப்படும் ஒரே கதை இதுதான். மரணத்தின் அணுக்கத்தை அனுபவமாக்க முயல்கிறது. இடையில் வரும் கனவுப் பகுதி ஜோம்பிக்கள் உள்ள வீடியோ கேம் போல சித்தரிக்கப்படுகிறது. மூத்த இலக்கியவாதி ஒருவர் தன் அன்னையின் மரணத்தை அண்மையில் தான் எதிர்கொண்ட விதத்தைக் கூறி காம்யுவை, மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை நிராகரிக்கிறார். அப்போது கதைசொல்லி ஆவேசமாக எழுந்து “உங்களுடைய அம்மாவுக்குப் பதிலாக, ஒரு பேச்சுக்கு உங்களுடைய இரண்டு வயது பேரக்குழந்தை இறந்திருந்தாலும் நீங்கள் கொண்டாட்டமாகத்தான் இருப்பீர்களா?” எனக் கேட்கிறான். இந்தக் கேள்வியைத்தான் வெவ்வேறு வகைகளில் பல சிறுகதைகளில் கார்த்திகைப் பாண்டியனின் கதை மாந்தர்கள் எழுப்புகிறார்கள்.

‘இலக்கிய மும்மூர்த்திகள்’ கதை தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் மொழியில் உள்ள தேய்வழக்கை பகடி செய்கிறது என்கிற அளவில் ஒரு சோதனை முயற்சி என்பதற்கு அப்பால் பெரிதாக ஈர்க்கவில்லை. ஏனெனில் இலக்கிய வெளிக்குள் இத்தகைய மும்மூர்த்திகள் எனும் பீடங்கள் செல்லுபடியாவதும் இல்லை, அவை மெய்யும் இல்லை. சமூக ஊடகப் பார்வை என்றே நம்புகிறேன். ஆனால் இக்கதையில் ஒருவித ‘ஆட்டோஃபிக்ஷன்’ தன்மை உள்ளது. தன்னெழுச்சியாக தோன்றும் சொற்களை பின்தொடர்ந்து செல்லும் தன்மை இக்கதைக்கொரு கவனத்தை அளிக்கிறது.

எழுத்தாளர் எஸ்.ரா. ஒரு மேடையுரையில் இளம் எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் செய்யும் பிழைகளைப் பற்றி சொன்னார். பெரும்பாலும் அனைவரும் பரத்தையர்களைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் கதைகள் எழுதுவார்கள். அண்மைய காலங்களில் நான் வாசித்த பெரும்பாலான முதல் தொகுப்பு நூல்களில் ஒரு கதையேனும் ‘பரத்தையரை’ பாத்திரமாக கொண்டதாக இருக்கிறது. இக்கதைகளின் பொதுத்தன்மை என்பது, அவமானங்களை இறக்கி வைக்குமிடமாக பரத்தையருடனான உறவு வருகிறது. இத்தனை கதைகளுக்கு அப்பாலும் பரத்தையர் அகம் பன்முகம் கொண்டதாக, அறிய முடியா ஆழம் கொண்டதாக இருப்பதாலேயே மீண்டும் மீண்டும் கதைகளின் ஊடாக வரையறை செய்ய முயன்று கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது. கார்த்திகைப் பாண்டியனின் இந்தத் தொகுப்பிலும் ஒரு பரத்தையர் கதையுண்டு “பெருத்த மார்புகளுடைய ஆணின் கதை”. எறும்பு தானியத்தைச் சேமிப்பது போல் சிறுவயதிலிருந்து வரப்போகின்ற காதலிக்காக அன்பை சேமித்து வைத்திருந்தான். ஆனால் அவனுடைய பருத்த உடல் காரணமாக சேமித்து வைத்த அன்பு நஞ்சாகிறது. பெருத்த மார்புடையவனுக்கும் பால் சுரக்கும் மார்புடைய பரத்தைக்கும் மார்தான் சிக்கல். லதா ரஞ்சனி தொழிலுக்கு வருவதற்கு முன் குளிக்கும்போது மார்பில் கட்டியிருந்த பாலை வலியோடு வெளியேற்றிவிட்டு வருகிறாள். பெரும் வன்மத்தோடு அவளுடைய வருகைக்காக காத்திருக்கிறான். பிள்ளையை இழந்த அவள் அவனையே தன் குழந்தையாக கண்டுகொள்கிறாள். மார்போடு அணைத்து உயிரனைத்தையும் அளிக்கச் சித்தமாய் இருக்கிறாள். அவளுடைய பரவசம் அவனை மூர்க்கம் கொள்ளச் செய்கிறது. அவன் தன்னை மீறி தன் வெறுப்பை அவள் மீது கடத்துகிறான். தேவிபாரதியின் ‘பலி’ கதையோடு சேர்த்து வாசிக்கத்தக்கது. ஆனால் ‘பலி’ அளிக்கும் உணர்வு நிலை மற்றும் நம்பகத்தன்மை இக்கதையில் இல்லை. ‘பலி’ கதையில் சாதி அடக்குமுறையை பழிதீர்க்க முயல்கிறான். புறக்கணிப்பின் காரணமாக எழுந்த பெண்களின் மீதான வன்மத்தை பழிதீர்க்க இக்கதை நாயகன் திருக்குமரன் முயல்கிறான். ‘பலி’ கதையில் தனிப்பட்ட வஞ்சமும் தொடர்பும் ஒரு சரடை அளிக்கிறது. இக்கதையில் வாடிக்கையாளருக்கு முன் அன்னையென எழுவது போதிய வலுவுடன் உருவாகவில்லை எனும் எண்ணமே ஏற்பட்டது.

கார்த்திகைப் பாண்டியனின் மொழி வெகுவாக வசீகரிக்கிறது. சாதாரண பேசுபொருள் கொண்ட கதைகளும்கூட அதன் மொழியால் மிக நல்ல வாசிப்பின்பத்தை அளிக்கிறது. “இவர்களைக் காட்டிலும் பெரிதாய் வளர்ந்திட்ட நிழல்கள் இவர்களுக்கும் முன்பாக நடந்து போயின” (‘அந்தர மீன்’). “சீரற்ற வகையில் பொருட்களை இட்டு நிரப்பிய சாக்குப்பையினைப் போல அங்கங்கே பிதுங்கி நிற்கும் பருத்த உடல்.” (‘பெருத்த மார்பு…’) “சிதறிய பாதரசத் துளிகளென வண்டியிலிருந்து உதிர்ந்த மனிதர்களோடு தானும் இறங்கியவன்” (‘மரநிறப்..’) “சிவனின் சடையிலிருந்து சீறிப் புறப்படும் பாம்புகளென அவ்வறையின் கூரை முழுதும் வியாபித்திருந்த சாண்டிலியர் விளக்கின் விழுதுகள் இவனை மிரளச் செய்தன.” (‘மரநிறப்..’). மொழியில் சில சிக்கல்கள் இல்லாமலும் இல்லை. தேவதை, குட்டி தேவதை போன்ற தேய்வழக்கான பயன்பாடுகளைத் தவிர்க்கலாம். ஓரிடத்தில் தவளையின் உட்பாதமென பச்சை நிறத்தில் என்று எழுதும்போது நெருடலாக இருக்கிறது. கார்ட்டூன் தவளைகள் என்று வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

கார்த்திகைப் பாண்டியனின் கதைகள் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் அதிகமும் நிகழ்கின்றன. இதையும்கூட ‘இருளில் மறையும் நிழல்கள்’, ‘மர நிறப் பட்டாம்பூச்சி’ ஆகிய அவருடைய படிமங்களோடு சேர்த்து புரிந்து கொள்ளலாம். அவருடைய கதைமனிதர்கள் கும்பலுக்குள் ஒளியும் தனி மனிதர்களாகவே இருக்கிறார்கள்.

கார்த்திகைப் பாண்டியன் தன் கதைகளில் வலிந்து குரூரங்களை, மரணங்களை சித்தரிக்கிறாரா? பைத்தியக்காரி நாயை எத்தி விடுகிறாள், பைத்தியக்காரன் நண்பனின் தந்தையின் மீது கல்லைப் போட்டு கொல்கிறான். வாழ்வின் நிச்சயமின்மையை இவைச் சித்தரிக்கின்றன. ‘சிலுவையின் ஏழு வார்த்தைகள்’ கதையில் குழந்தை பிராயிலர் கோழியாக வெந்நீரில் கொதிக்கிறது. பெருத்த மார்புடையவனின் கதையில் தன் குழந்தை ஒரு பருந்தாக மாறுவதைக் கனவு காண்கிறாள். ”உடல் முழுதாய் மண்ணில் புதைந்திருக்க எண்ணற்ற கேள்விகளைத் தன்னுள் தேக்கியவாறு இறந்து போயிருந்த குழந்தையின் பிதுங்கிய பழுப்பு நிறக் கண்கள் வானத்தை வெறித்தன.” (‘சிலுவையின்…’). ‘பரமபதம்’ கதையில் ரயிலில் அறுபட்டு இறுதி மூச்சில் இருப்பவளின் துண்டிக்கப்பட்ட கையைத் தூக்கிக்கொண்டு வருகிறது ஒரு நாய்.

போகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ தொகுப்பு வாசித்தபோது ஒரு கேள்வி எழுந்தது. குழந்தைகளின் மரணத்தை மீள மீள பல்வேறு கதைகளில் அவரும் எழுதியிருந்தார். பெரும் தொந்தரவாக மனதை அலைக்கழித்தது. மனித மனத்தின் மிக பலவீனமான பகுதிகளில் ஒன்றின் மீதான தொடர் மோதல் வழியாக தன் புனைவை நிறுவிக்கொள்ளும் உத்தியோ எனும் ஐயம் ஏற்பட்டது. ஒரு மனப் பதட்டம் கலையாக முடியுமா? எதையும் தீவிரமாக, நேர்மையாக, முனைப்போடு உருவாக்கும்போது அதை கலையாக்க முடியும். ஏதோ ஒருவகையில் நவீனத்துவ படைப்புகள் மனச் சமநிலைக் குலைவின் வெளிப்பாடாகவும் இருக்கின்றன. போகன் பதட்டத்தை இழுத்து ஆன்மீக நிலைக்கு கொண்டு செல்ல முயல்கிறார். கார்த்திகைப் பாண்டியன் கதைகளுக்கும் போகனின் கதைகளுக்கும் உள்ள நுட்பமான வேறுபாடு என்பது கார்த்திகைப் பாண்டியன் வாழ்வின் அபத்தத்தை ஆன்மீகத் தளத்திற்குள் கொணராமல், அதை அப்பட்டமாக எதிர்கொள்ள முயல்கிறார். நெஞ்சில் வேல் குத்திக் கிழித்ததன் அரற்றுதலை கேட்க முடிகிறது.

அபத்தம் ஒரு தரிசனமாக உருவானதன் பின்னணியில் இரண்டாம் உலகப் போர் உள்ளது. இத்தனை அறிவியலும், தொழில்நுட்பமும் மானுட மீட்சிக்கு என நம்பிக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த பேரழிவு வாழ்வின் பொருள் குறித்த கற்பிதங்களை பொசுக்கியது. வாழ்வின் பொருளின்மையை இலக்கியம் போர் வழியாகவும் குழந்தைகளின் மரணங்கள் வழியாகவும் தான் மீண்டும் மீண்டும் சித்தரித்திருக்கிறது. கரம்சேவ் சகோதரர்களின் இல்யுஷா சட்டென நினைவுக்கு வருகிறான். இந்தப் பின்புலங்களில் கார்த்திகைப் பாண்டியனின் கதைகளில் நிகழும் மரணங்களை,வாழ்வின் பொருளின்மையின் மீதான கேள்விகளாக காண முடியும். ‘நிழலாட்டம்’  கதையில் சொல்வது போல் ‘காமமும் மரணமும்’ தான் கதைகளின் தலையாய பேசு பொருள்கள். புனத்தில் இக்காவின் ‘கன்யா வனங்கள்’ நாவலுக்கான முன்னுரையில் ‘காமமும் காலமும்தான் மனிதர்களை அலைக்கழிக்கும் இரு பெரு விசைகள்’ என்பதாக ஒரு வரி வரும். இத்துடன் சேர்த்து ‘பீதி இயக்கம்’ மீதான அவருடைய ஆர்வம் மற்றும் காட்சி ஊடகத்தின் தாக்கம் ஆகியவற்றைச் சேர்த்து மதிப்பிட வேண்டும்.

நல்ல இலக்கியத்திற்கு எனது பிரத்தியேக இலக்கணம் என்பது ஏதோ ஒருவகையில் படைப்பு நிலையைத் தூண்டுவதாகவும் இருக்க வேண்டும் என்பதே. என் வாசிப்பின் எல்லையில், அண்மைய கால எழுத்துக்களில், பாலசுப்பிரமணியம் பொன்ராஜுக்குப் பிறகு கார்த்திகைப் பாண்டியனிடம் அத்தகையத் தன்மையை கண்டுகொள்கிறேன். ‘மரநிறப் பட்டாம்பூச்சி’ வழியாக தமிழுக்கு ஒரு முக்கியமான படைப்பாளி அறிமுகம் ஆகியுள்ளார்.

 

 

எழுத்தாளர் சி.எஸ்.கே. உடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

பிறப்பு / குடும்பம் / படிப்பு / பணி பற்றி? 

கோவை சிங்காநல்லூரில் 1984ல் பிறந்தேன். ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு இரண்டு மாதங்கள் பின்; இந்திரா காந்தி படுகொலைக்கு இரண்டு மாதங்கள் முன். நடுத்தர வர்க்கக் குடும்பம். தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு வழக்கில் பெல்லாரி சிறை சென்றவர். சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றிய‌ என் தந்தைக்குப் பணிமாற்றல் வர, பள்ளிப்படிப்பு முழுக்க ஈரோட்டில். பின் சென்னை அண்ணா பல்கலை.யில் (கிண்டி பொறியியல் கல்லூரி) கணிப்பொறி இயல் படிப்பு. கடந்த பத்தாண்டுகளாக பெங்களூரில் மென்பொருள் தர உத்தரவாதப் பொறியாளர் பணி. காதல் திருமணம். இரண்டு ஆண் பிள்ளைகள்.

முதன் முதலாக எழுதிய கதை / கவிதை?

பள்ளி நாட்களில் பதின்மத்தின் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்தேன். வாரமலர் பாணி கவிதைகள். 1998 வாக்கில் ‘ப்ரியமுடன் கொலைகாரன்’ என்ற தலைப்பில் ராஜேஷ் குமார் பாதிப்பில் ஒரு நாவல் எழுதினேன். பின் 2001ல் குமுதம் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ என்ற முதல் சிறுகதையை எழுதினேன். இவை இரண்டையுமே இன்னும் பிரசுரிக்கவில்லை. கல்லூரிக் காலங்களில் நிறையக் கவிதைகள் – பெரும்பாலும் வைரமுத்து பாணி புதுக்கவிதைகள். ‘பரத்தை கூற்று’, ‘தேவதை புராணம்’, ‘காதல் அணுக்கள்’ என இதுவரை நான் எழுதியுள்ள கவிதைத் தொகுப்புகளின் ஆதி வடிவம் அந்நாட்களில் எழுதப்பெற்றவை தாம். 2007ல் குங்குமம் வாசகர் கவிதைத் திருவிழாவில் என் ‘ஒருத்தி நினைக்கையிலே…’ வைரமுத்துவால் முத்திரைக்கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அச்சுக்கண்ட என் முதல் எழுத்து அது.

சிறு வயதில் வாசித்தவை? வாசிப்பு படிக்கட்டு?

உத்தேசமாய் இரண்டாம் வகுப்பு படித்த நேரம். என் வீட்டில் குமுதம் வாங்குவார்கள். அதில் வந்த ‘ப்ளாண்டி’ மற்றும் ‘ஃப்ளாஷ் கார்டன்’ காமிக்ஸ் பக்கங்களில் தான் என் வாசிப்பு தொடங்கியது. ஈரோட்டில் நாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர் ‘தின மலர்’ வாங்குவார். வெள்ளியன்று இணைப்பாக வரும் சிறுவர் மலரை வாசிப்பதில் எனக்கும், எனக்குப் பல்லாண்டு மூத்த உரிமையாளர் மகனுக்கும் தகராறு வர, அதன் பொருட்டே என் வீட்டில் ‘தின மலர்’ வாங்கத் தொடங்கினர். அதுவும் வெள்ளியன்று மட்டும். தொடர்ந்து பிற நாளிதழ்களின் சிறுவர் இணைப்புகள் (‘தங்க மலர்’, லேசாய் ‘சிறுவர் மணி’) மற்றும் சிறுவர் இதழ்கள் (‘பூந்தளிர்’, ‘அம்புலி மாமா’) அறிமுகமாகின‌. அப்புறம் காமிக்ஸ் இதழ்கள் (‘ராணி காமிக்ஸ்’ அப்புறம் சில‌ ‘லயன் காமிக்ஸ்’, ‘முத்து காமிக்ஸ்’) வாசித்தேன். பள்ளிக்கு காமிக்ஸ் எடுத்துப் போய் பிரச்சனையாகி உள்ளது.

இதற்கு அடுத்த கட்டமாய் நாளிதழ்களின் பிற‌ இணைப்புகள் (‘வார மலர்’, ‘கதை மலர்’, ‘குடும்ப மலர்’, கொஞ்சம் ‘தினமணிக் கதிர்’), மாத நாவல்கள் (‘மாலைமதி’, ‘கண்மணி’, ‘ராணி முத்து’), ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல்கள் (உடன் சுபா, பிகேபி) வாசித்தேன். பிறகு பக்கத்து வீட்டுக்காரர் பைண்ட் பண்ணி வைத்திருந்த‌ ‘பொன்னியின் செல்வன்’. கோடை விடுமுறையில் என் அத்தை கிருஷ்ணவேணி அலுவலக நூலகத்திலிருந்து லக்ஷ்மி, ரமணிச் சந்திரன், சாண்டில்யன் நாவல்களை எடுத்து வந்தார். ஒன்பதாம் வகுப்பில் என் தமிழாசிரியை தனலெட்சுமி பாலகுமாரனை அறிமுகம் செய்தார். அதே காலகட்டத்தில் சுஜாதாவும் அறிமுகமானார். இன்றளவும் சுஜாதா என் பேராதர்சம்.

பிறகு குமுதம் வெளியிட்ட தீபாவளிச் சிறப்பிதழ்களின் வழி தான் முதன் முதலாக‌ நவீன இலக்கியப் பரிச்சயம். பதினொன்றாம் வகுப்பில் பள்ளி (ஈரோடு இந்து கல்வி நிலையம்) நூலகத்தில் வைரமுத்து உள்ளிட்ட நிறைய நூல்கள். அது முக்கியமான திறப்பு. பிறகு கல்லூரிக்காக‌ சென்னை வந்ததும் கன்னிமரா நூலகமும், தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகமும் என்னைத் தத்தெடுத்துக் கொண்டன. கணிசமான நவீனப் படைப்பாளிகளை அங்கேதான் வாசித்தேன். ‘ஹிக்கின்பாதம்ஸ்’, ‘லேண்ட்மார்க்’, ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’, ‘எனி இந்தியன் புக்ஸ்’, சென்னை புத்தகக் காட்சிக‌ள் என் புத்தக வேட்டைக்களங்களாயின. சுந்தர ராமசாமியும், ஜெயமோகனும் மிகப் பிடித்த எழுத்தாளர்கள் ஆகினர். வேலைக்குச் சேந்த கடந்த பத்தாண்டுகளில் என் வாசிப்பு கணிசமாய்க் குறைந்து விட்டது. எழுதவே நேரமிருப்பதில்லை என்பது முக்கியக் காரணம். இதைச் சொல்கையில் வருத்தமும் அவமானமும் ஒருசேர எழுகிறது.

எப்போது எழுத்தாளாராக உணர்ந்தீர்கள்?

பதின்மங்களின் தொடக்கத்தில் என நினைக்கிறேன். எனக்கு எழுத வேண்டும் என்ற ஆசையே ராஜேஷ் குமாரின் ‘எவரெஸ்ட் தொட்டு விடும் உயரம்தான்’ நாவலை வாசித்துத் தான் உண்டானது. அது அவரது சுயசரிதை நூல். தான் எழுதிய முதல் கதைகள், பிரசுரத்திற்குச் செய்த முயற்சிகள், பத்திரிக்கை ஆசிரியர்களுடனான அனுபவங்கள், குடும்பத்தாரின் எதிர்வினை என்பதை எல்லாம் ஒரு சுயமுன்னேற்றப் பாணியில் அதில் சொல்லி இருப்பார். பதினொன்றாம் வகுப்பில் ‘My Role Model’ எனக் கட்டுரை எழுதச் சொன்ன போது சுஜாதாவைத் தான் முன்மாதிரியாகக் குறிப்பிட்டு எழுதினேன். அவரைப் போல் சிறந்த பொறியாளனாகவும், தேர்ந்த‌ எழுத்தாளனாகவும் வர வேண்டும் எனச் சொல்லி இருந்தேன். அப்போது யாஹூவில் என் முதல் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிய போது writercsk என்றே கொடுத்தேன். அதுவும் சுஜாதாவின் பாதிப்பில் தான். பின் Geocities-ல் ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கிய போதும், எனக்கான‌ வலைதளத்தை உருவாக்கிய போதும், ட்விட்டர் கணக்குத் துவங்கிய போதும் அப்பெயரையே தொடர்ந்தேன். அந்தக் காலகட்டத்தில் நான் எழுத்தாளன் என்பதற்கான எந்த நிரூபணத்தையும் செய்யாத சமயத்தில் ‘ரைட்டர்’ என்ற அந்த முன்னொட்டு கடும் கேலிகளை உருவாக்கியது. இன்று ஓரளவுக்கு அதற்கான படைப்புகளை எழுதி விட்ட போதிலும் கூட அது தொடரவே செய்கிறது.

கவிதை, சிறுகதை, நாவல் என மூன்று வடிவங்களிலும் இயங்கி இருக்கிறீர்கள். எது தங்களுக்கான வடிவம் என எண்ணுகிறீர்கள்? எது சவாலான வடிவம்?

 இவை போக அபுனைவு என்பதையும் நான்காவதாய் இதில் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கான வடிவம் எது என அறுதியிட்டுச் சொல்லும் காலம் இன்னும் வரவில்லை என நினைக்கிறேன். தொடர்ந்து எழுதினால் அடுத்த பத்தாண்டுகளில் தெரிய வரலாம். இதுவரையிலான எழுத்து அனுபவத்தில் சிறுகதையே எனக்குப் பிடித்த வடிவமாக இருக்கிறது. கவிதை, நாவல், அபுனைவை விடவும். ஒரே ஒரு நாவல் எழுதியுள்ள குறுகிய அனுபவத்தில் நாவல் வடிவம் என்பது சிறுகதை போல் சவாலாக எனக்குத் தோன்றவில்லை. நாவலுக்கு உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம். அவ்வளவு தான்.

காந்தியை மையமாக கொண்டு ஒரு புனைவை எழுத வேண்டும் என்றொரு எண்ணம் உதித்தது எப்போது? 

காந்தி பற்றிய முதல் சித்திரம் என் தாத்தாவின் வழியாகவே என்னை வந்தடைந்தது. எந்தவொரு இந்தியப் பள்ளி மாணவனையும் போல் பால்யத்தில் காந்தி என்பவர் மஹாத்மா என்பதில் தொடங்கி, பின் காந்தி போலியானவர், நேதாஜியே அசலான சுதந்திரப் போராளி என்று எண்ணும் பதின்மங்களைக் கடந்து தான் நானும் வந்தேன்.

பின் கமல் ஹாசனின் ‘ஹே ராம்’ திரைப்படம் ஒரு முக்கியமான திறப்பு. அதைத் தொடர்ந்து தான் காந்தியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’ நூலை வாசித்தேன். 2009ல் என் முதல் நூல் ‘சந்திரயான்’ வெளியான பின் நான் எழுத விரும்பிய நூல் காந்தி கொலை வழக்கு பற்றியது. அதற்காக நிறைய நூல்களை வாசித்திருந்தேன். ஆனால் அம்முயற்சி கைகூடவில்லை. (பிற்பாடு என். சொக்கன் அதை எழுதினார்.)

அப்புறம் ‘காலச்சுவடு’, ‘தீராநதி’, ‘உயிர்மை’ முதலான இலக்கியச் சிற்றிதழ்களில் வந்த காந்தி குறித்த சில கட்டுரைகளும் விசாலமான பார்வையைப் பெற உதவின. இவை எல்லாவற்றுக்கும் மேல் ஜெயமோகன் காந்தி குறித்து தன் தளத்தில் செய்த தொடர் விவாதங்கள் (பிற்பாடு இவை ‘இன்றைய காந்தி’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டன). காந்தியை நான் முழுக்க மறுஅறிமுகம் செய்து கொண்டது அவற்றின் வழியாகவே.

காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஏற்கனவே நான் அரசல் புரசலாகக் கேள்வியுற்றிருந்தாலும் மேற்சொன்ன விவாதத்தில் இடம்பெற்ற ‘காந்தியும் காமமும்’ என்ற தலைப்பிலான நான்கு கட்டுரைகள் தாம் அது பற்றிய விரிந்த தகவல்களையும் கருத்துக்களையும் அளித்தன. அங்கே இந்நாவலுக்கான விதை முதலில் விழுந்தது. ஆனால் முளைத்துக் கிளைத்து விருட்சமாக சுமார் எட்டாண்டுகள் பிடித்திருக்கிறது.

 ஒரு ஆராய்ச்சி அபுனைவு நூலாக இல்லாமல் புனைவாக எழுதியதற்கு ஏதேனும் தனித்த காரணங்கள் உண்டா ?

காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஓர் அபுனைவு நூல் எழுத முடியும். சிலர் ஆங்கிலத்தில் எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இவ்விஷயம் தொடர்பான‌ விடுபடல்கள் ஒரு புனைவுக்குரிய சாத்தியத்தை அளிப்பதாக‌ப்பட்டது. அதாவது இதில் ஒரு Drama இருந்தது. குறிப்பாக நாவலுக்குரிய கேன்வாஸ் இது எனத் தோன்றியது. புனைவு வடிவில் இதை எழுதக் கூடுதல் சுதந்திரமும் உண்டு என்பதை உணர்ந்தேன். கேத்ரின் க்ளமெண்ட் எழுதிய Edwina and Nehru ஓர் உதாரணம்.

என் முதல் நாவலை எழுத ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேலாக யோசித்து வந்தேன். இதை என் முதல் நாவலாகக் கொண்டால் நல்லது என்றும் எண்ணம் வந்தது. ஒரு கட்டத்தில் புத்தகக் காட்சிக்குள் நாவலை எழுத அவகாசம் இல்லை எனும் போது அபுனைவு நூலாக எழுதி விடலாமா என்று கூடத் தோன்றியிருக்கிறது. எழுத்தாளர் என். சொக்கன் தனிப்பேச்சில் இதை அபுனைவாக எழுதியிருக்க வேண்டும் என்று அங்கலாய்த்தார். நாவலாக வரவில்லை என்றால் அபுனைவாய் எழுதியிருப்பேன்.

இன்னும் சொல்லப் போனால் இஃது நாவல் என்றாலும் உள்ளடக்கத்தை வைத்துப் பார்க்கும் போது அபுனைவுக்கும் புனைவுக்கும் இடைப்பட்ட படைப்புதான் என்பேன்.

காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள் குறித்து தற்காலத்தில் எழுதுவதற்கான தேவை என்ன? காந்தியை மையமாக கொண்ட களம் என்றாலும், குறிப்பாக பிரம்மச்சரிய பரிசோதனைகளை நாவலின் பின்புலமாக கொண்டு எழுதியதற்கு என்ன தூண்டுதல்?

லட்சக்கணக்கான பக்கங்கள் காந்தியைப் பற்றி எழுதப்பட்டு விட்டாலும் அவர்களில் பெரும்பாலானோர் காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகளை மழுப்பலாகவே கடந்து விடுகிறார்கள். எனில் அவர் மஹாத்மா என நம்புவோர் கூட இவ்விஷயத்தில் மட்டும் பிழை செய்திருக்கிறார் என நினைக்கிறார்கள் என்று தானே அர்த்தம்! இதன் இன்னொரு முனையில் அவர் பெண்களைப் பரிசோதனைப்பண்டமாகப் பயன்படுத்திய ஆணாதிக்கவாதி என்ற ரீதியில் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தவர்களும் உண்டு. அதனால் தான் பழுப்பாய் நின்ற அந்த பகுதியை நெருங்கிப் பார்க்க ஆசைப்பட்டேன்.

இன்னொரு விஷயம்: ஆரம்பம் முதல் என் எழுத்துக்களில் காமம் என்ற அம்சம் தொடர்ந்து மையச் சரடாக அல்லது பிரதான இழைகளில் ஒன்றாக இருக்கிற‌து. தணிக்கைச் சிக்கல்கள் குறைந்த என் சமூக வலைதள எழுத்துக்களில் இது வெளிப்படையாகத் துலங்கும். ரமேஷ் வைத்யா கூட இது பற்றி, விடலைத்தனம் இன்னும் விடவில்லை, எனக் குறிப்பிட்டார். அதுவும் காரணம் என நினைக்கிறேன். மஹாத்மாவைப் பற்றி எழுத‌ எடுத்தால் கூட காமம்தான் முன்னே வந்து நிற்கிறது!

இந்த நாவலை எழுதுவதற்கு உங்களுக்கு ஒன்றரை மாதம் தான் ஆனது என்பது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. எனினும் பின்புல தயாரிப்புக்கு எத்தனை காலம் ஆனது? என்னவிதமான நூல்களை வாசித்தீர்கள்? நாவலின் இறுதியில் நூற்பட்டியல் இருக்கிறது. அந்நூல்கள் உங்கள் புரிதலை எப்படி செம்மையாக்கியது?

பின்புலத் தயாரிப்புக்குக் கூடுதலாய் ஒரு மாதம் ஆகி இருக்கும். தொடர்ச்சியாக அல்லாமல் ஆறேழு மாதங்களாக‌ அவ்வப்போது வாசித்துக் கொண்டிருந்தேன் – திட்டமிட்டு என்றில்லாமல் தொடர்புடைய நூல்கள் அறிமுகம் ஆகும் போதெல்லாம் அல்லது கிடைக்கும் போதெல்லாம். காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றிய கிர்ஜா குமாரின் இரண்டு நூல்கள், ஜாட் ஆடம்ஸின் ‘Gandhi: Naked Ambition’, மநுவின் டைரிகள் குறித்த ‘இந்தியா டுடே’ சிறப்பிதழ், காந்தியின் உதவியாளர் நிர்மல் போஸ் எழுதிய‌ ‘My Days with Gandhi’ என்ற‌ நூல் ஆகியன முக்கியமாய்ப் பயன்பட்டன. இன்னொரு விஷயம் இந்நூல்களில் என்னுடைய‌ நாவலுக்கு அவசியப்படும் எனத் தோன்றிய பகுதிகளை மட்டுமே வாசித்தேன். அதனால் படிக்கும் நேரம் குறைந்தது.

சம்பவங்களின் கால வரிசை, இடம் மற்றும் பிற விவரங்களை இந்நூல்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. நாவல் அசல் வரலாற்றுக்கு அருகிலானது என்பதால் இது தேவைப்பட்டது. தவிர, பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றிய வெவ்வேறு கோணங்களை இவை எனக்கு அளித்தன. அவற்றின் அடிப்படையிலும், பொதுவான மானுட உளவியல் சார்ந்தும் காந்தி, மநு, மற்றும் பிறர் தரப்பு என்னவாயிருக்கும் என்பது பற்றிய புரிதலை வந்தடைந்தேன். அதுவே நூல்களின் முக்கியப் பங்களிப்பு.

நாவலுக்கு என்னவிதமான கவனம் கிட்டியது? விமர்சனங்கள் எத்தகையவை? 

நாவலுக்குப் போதிய கவனம் கிட்டவில்லை என்ற மனக்குறை இருக்கிறது. ரமேஷ் வைத்யா புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய உரை ஒரு பரபரப்பான அறிமுகம். பா.ராகவன், சித்துராஜ் பொன்ராஜ் மற்றும் நீங்கள் ஃபேஸ்புக்கில் நாவல் பற்றிய சிறு குறிப்புகள் எழுதினீர்கள். சென்னை காந்தி கல்வி நிலைய சேர்மன் மோகன் நாவலைப் பாராட்டி மின்னஞ்சல் செய்திருந்தார். அபிலாஷ் ஒரு நல்ல‌ விமர்சனக் கட்டுரை எழுதினார். இந்த‌ 9 மாதங்களில் வந்த‌ முதலும் கடைசியுமான கட்டுரை அதுவே. தமிழ்ச் சூழலில் இதுவே அதிகபட்சம் என்று திருப்திப்பட முகாந்திரமுண்டு என்றாலும் இந்நாவல் இன்னும் கொஞ்சம் கூடுதல் வாசக உரையாடலுக்குத் தகுதி பெற்றது என நம்புகிறேன். அதனால் அதைச் சந்தைப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் விமர்சனக் கட்டுரைப் போட்டி ஒன்றை நானே அறிவித்திருக்கிறேன். பார்க்கலாம்.

காந்தியை புரிந்து கொள்ள இந்நாவல் உதவுகிறது. ஆனால் அதைத் தாண்டி நாவலுக்கு என்றிருக்கும் எக்காலத்திற்கும் உரிய அறக் கேள்வியை நாவல் அடையவில்லை எனும் விமர்சனத்தைப் பற்றி? மேலும் காந்தியை இன்று ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா? குறிப்பாக பிரம்மச்சரிய தலம் சார்ந்து?

‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை நீண்ட சிறுகதையாகப் பார்ப்போரும் உண்டு. அதாவது நாவல் என்பதற்கான பல கோண தரிசனம் போதுமான அளவு திரளவில்லை என்ற பொருளில். இருக்கலாம். அதன் அபுனைவுத்தன்மை பற்றிக் கவலை வெளியிட்டோர் உண்டு. படைப்பின் தரம் பற்றிய விமர்சனங்களுக்கு – அது பாராட்டு என்றாலும் கூட – எழுத்தாளன் பதிலளிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். அது ஒரு சங்கடம். ஆனால் நான் விமர்சனங்கள் எவற்றையும் உதாசீனம் செய்வதில்லை. அவற்றைப் பொருட்படுத்திப் பரிசீலித்து எனக்குச் சரி எனத் தோன்றுவனவற்றை என் எதிர்காலப் படைப்புகளுக்கான உள்ளீடாகக் கொள்கிறேன். இதற்கும் அதைச் செய்ய வேண்டும்.

காந்தியம் இன்னும் காலாவதியாகவில்லை என நான் நம்புகிறேன். அதன் அவசியம் நிச்சயம் இருக்கிறது. குறிப்பாக அவரது அஹிம்சை என்ற போதனை. இன்றைய சகிப்பின்மை நிறைந்த சூழலில் காந்தி நம் நாட்டிற்கு தேவைப்படும் சிந்தாந்தவாதி. அதனால் அவரை மறுவாசிப்பு செய்ய வேண்டியது அவசியமானது. பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஏன் பேச வேண்டி இருக்கிறது எனில் காந்தியின் பிழையான கருத்தாக்கங்களையும் நாம் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் தான் (அவரே போதித்த‌ சத்தியம்). அதை மட்டும் கள்ளத்தனமாய்ப் பேசாது கடக்கும் ஒவ்வொரு முறையும் காந்தியை அவமதிக்கிறோம். முக்கால் நூற்றாண்டு முன் அவரே முற்போக்காக அது பற்றிப் பொதுவெளியில் பேச விரும்பினார். இன்று இத்தனை முன்னேறிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டு நாம் ஏன் தயங்க வேண்டும்?

 ‘மின் தமிழ்’ மின்னிதழ் பற்றி, அதன் நோக்கம் செயல்பாடுகள், செயல்திட்டங்கள்.

தமிழ் மின்னிதழ் தொடங்கிய போது இருந்த உத்வேகம் இப்போது இல்லை என்றே சொல்வேன். நான் மிக விரும்பும் எழுத்தாளர்களை விரிவான நேர்காணல்கள் செய்ய வேண்டும் என்பதுதான் இதழின் பிரதான நோக்கமாக இருந்தது. ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள் முருகன் என அது திருப்திகரமாகச் சாத்தியமானது. அடுத்து இணையத்தில் புதிய எழுத்துக்களுக்கான ஒரு களமாக அது இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் இன்றைய‌ சமூக வலைதள யுகத்தில் அதற்கான தேவை இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்த இதழில் கிடைத்த அனுபவம் கொண்டு அப்படியான தளமேதும் இன்று தேவையில்லை என்பதாகப் புரிந்து கொள்கிறேன்.

தவிர, சொந்த வாழ்வியல் அழுத்தங்கள், என் எழுத்து வேலைகள் தாண்டி இதழுக்கு நேரம் ஒதுக்குவது சிரமமானதாக இருக்கிறது. அது முழுமையாய் என் இதழாகவே இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருப்பதால் ஆசிரியர் குழு ஒன்று வைத்துக் கொள்வதில் விருப்பமில்லை. அதனால் தான் காலாண்டிதழாகத் தொடங்கப்பட்ட தமிழ் இப்போது தேவைப்படும் நேரத்தில் மட்டும் வருகிறது. உதாரணமாய் அடுத்து வரப்போவது கலைஞர் சிறப்பிதழ். இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியாகக்கூடும்.

ஆதர்ச எழுத்தாளர்தமிழ்/ பிற மொழி யார்?

ஏற்கனவே இந்நேர்காணலில் பிடித்த எழுத்தாளர்கள் என்பதாக‌ ஆங்காங்கே சிலரைக் குறிப்பிட்டிருந்தேன். ஒரே ஒருவர் மட்டுமே சொல்ல வேண்டுமெனில் ஜெயமோகன். புனைவு மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும், தனி வாழ்விலும் கூட‌ அவர் எனக்கு வழிகாட்டி. ஆங்கிலத்தில் நான் பெரும்பாலும் அபுனைவு தான் வாசித்திருக்கிறேன். அதுவும் குறைவான அளவில். அதனால் பிடித்த எழுத்தாளர் எனக் குறிப்பிட்டுச் சொல்லுதல் சரி வராது. ஆனாலும் அப்படி ஒருவரைச் சொல்ல விரும்புகிறேன். அவர் எழுத்தாளர் அல்ல; திரைப்பட இயக்குநர். கிறிஸ்டோஃபர் நோலன். அவரது திரைக்கதைகள் போலத்தான் என் புனைகதைகள் உள்ள‌ன என எண்ணுவதுண்டு.

சமூக ஊடக பயன்பாடு படைப்பூக்கத்தை பாதிக்கிறதா? உங்கள் படைப்பிற்கு ஏதேனும் ஒரு வகையில் சமூக ஊடக செயல்பாடு பங்காற்றுகிறதா?

சமூக ஊடகங்களில் நான் இருக்க இரண்டு காரணங்கள்: சமகால விஷயங்களில் என் கருத்துக்களைப் பதிவு செய்தல், என் மற்ற எழுத்துக்களுக்களைச் சந்தைப்படுத்துதல். இதில் இரண்டாவது எவ்வளவு தூரம் சாத்தியப்படுகிறது என்பதில் குழப்பங்களுண்டு. இது போக தொடர்ச்சியாய் எழுதிப் பயிற்சியெடுக்கும் வாய்ப்பை சமூக வலைதளங்கள் வழங்குகின்றன. அதனால் மொழிக்கிடங்கு வனப்புறும் என நினைக்கிறேன். ஆனால் சரவணன் சந்திரன் சமீபத்தில் பேசிய போது சமூக வலைதளச் செயல்பாடுகளினால் என் பிரதானப் படைப்புகளில் மொழி சில இடங்களில் தொய்வுறுகிறது என்றார். நான் இன்னும் அதைத் தீவிரமாக‌ ஆராயப் புகவில்லை. கவனிக்க வேண்டும். பொதுவாகவே சமூக வலைதளங்களில் நேர விரயம் அதிகம். அதன் பொருட்டு அதைக் குறைத்துக் கொள்வதே படைப்பாளிகளுக்கு நல்லது. அவற்றை விட்டுப் பூரணமாக‌ வெளியேற வேண்டும் என்றில்லை; ஆனால் எதற்குப் பயன்படுத்துகிறோம், எவ்வளவு நேரம் இருக்கிறோம், பக்கவிளைவு என்ன என்பதில் ப்ரக்ஞைப்பூர்வமாக இருக்க வேண்டும்.

அடுத்து என்ன எழுத இருக்கிறீர்கள்?

எண்ணத்தில் உருவாகி இன்னும் எழுதப்படாமல் குறைந்தது பத்து சிறுகதைகள் உண்டு. பிற்காலச்சோழர் வரலாற்றை ஒட்டிய ஒரு த்ரில்லர் நாவலும், இன்றைய தேதியில் ஆக முக்கியமானதென நான் கருதும் ஒரு சமூகப் பிரச்சனை குறித்த ஒரு நாவலும் மனதில் இருக்கின்றன. நாத்திகத்தின் வரலாற்றை விரித்தெழுதும் திட்ட‌மிருக்கிறது. இளையராஜாவின் வாழ்க்கையை வசன கவிதை நடையில் எழுத விரும்புகிறேன். கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’யைச் சுருக்கி எழுதி வருகிறேன் – மூன்றாண்டுகளில் முடிக்கத் திட்டம். ஆசைகள் ஆயிரம் இருந்தும் செயலாக்க நேரம் போதவில்லை.

இப்போது ஒரு நாவல் வேலையைத் தொடங்கி இருக்கிறேன். தலைப்பு ‘ஜெய் பீம்’. எல்லாம் சரியாக நடந்தால் வரும் சென்னைப் புத்தகக் காட்சிக்கு வெளியாகும்.

எதற்காக எழுதுகிறேன்? என்றொரு வினா எழுப்பினால் உங்கள் பதில்?

கலவி எதற்கு எனக் கேட்போமா? குழந்தைப்பேறு தான் காரணமா என்ன? அதைப் போல் எழுதுவது மகிழ்ச்சி தருகிறது என்பது தான் பிரதான காரணம். ஒவ்வொரு படைப்பை நிறைவு செய்கையிலும் ஒரு கணம் கடவுளைப் போல் உணர்கிறேன். சொற்களில் விவரிக்க இயலா ஒரு மனோஉச்சம் அது. அது போக எழுத்தானது வாழ்வதற்கான உந்து சக்தியாக இருக்கிறது. எப்படி எனச் சொல்கிறேன். ஒவ்வொரு மனிதனுமே மானுட குல முன்னேற்றத்துக்கு ஏதோ விதத்தில் உதவி செய்கிறான். ஒன்று மனித இனத்தின் நேரடி முன்னேற்றத்துக்கான பங்களிப்பு. மற்றது சமகாலச் சமூகத்துக்கு உதவி செய்வதன் மூலம் பங்களிப்பது. விவசாயம் செய்தல், அரசுப் பணி, மருத்துவர்கள், பொறியாளர்கள் எனப் பெரும்பாலான வேலைகள் இரண்டாம் வகையில் வரும். விஞ்ஞானிகள், சில கலைஞர்கள், தத்துவ ஞானிகள், குறிப்பிட்ட‌ அரசியல் தலைவர்கள் போன்றவர்கள் முதல் வகை. எழுத்தாளர்களும் அதே வகை தான். அதனால் அது ஒரு மதிப்புமிக்க வேலை என நம்புகிறேன். வாழ்க்கை குறித்த சலிப்பு ஏற்படும் போதெல்லாம் இன்னும் மானுட குலத்துக்கு நான் செய்ய வேண்டிய பங்களிப்பு பாக்கி இருக்கிறது என்ற எண்ணம் எழுந்து வர எழுத்து காரணமாகிறது. எழுத்தால் வரும் பாராட்டு, புகழ், விருது, மரியாதை என்பதெல்லாம் பிற்பாடு தான்.

 

***

 

அன்னையென ஆதல் – ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை முன்வைத்து

நரோபா

சி. சரவணகார்த்திகேயன் 1984 ஆம் ஆண்டு பிறந்தவர். பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணி. சமூக ஊடகங்களில் முனைப்புடன் இயங்கி வருபவர். முன்னரே கவிதை தொகுப்பு, சிறுகதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கட்டுரைகளும் வனைகிறார். ‘மின் தமிழ்’ எனும் மின் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியராகவும் திகழ்கிறார். அதன் நீண்ட நேர்காணல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சரவணகார்த்திகேயனின் முதல் நாவல் ‘ஆப்பிளுக்கு முன்’ சென்ற ஆண்டு வெளியானது. சமூக வலைதளங்களில் அதிகமும் வெளிபடுவது அவருடைய திராவிட இயக்கச் சார்பு முகமே. அந்நிலையில் காந்தியின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ஒரு புனைவை தன்னுடைய முதல் நாவலின் களமாக தேர்ந்தது ஒரு வாசகனாக சன்னமான குறுகுறுப்பை ஏற்படுத்தியது. குறுகுறுப்புக்கு காந்தியைப் பற்றி சரவணகார்த்திகேயன் என்ன எழுதியிருக்கிறார் என்பதொரு காரணமென்றால் மற்றொரு காரணம் நாவலின் பேசுபொருள். காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள்.

தமிழ் புனைவுப் பரப்பில் காந்தி கையாளப்படுவது புதிதல்ல. புதுமைபித்தனின் ‘புதிய நந்தன்’ துவங்கி மணிக்கொடி எழுத்தாளர்கள் பலருடைய கதைகளில் காந்தி ஒரு பாத்திரமாகவோ அல்லது அவருடைய தாக்கத்தில் வாழ்வை விளக்கிக்கொள்ளும் முயற்சிகளோ, அவருடைய இயல்புகளை தமதாக கொண்ட லட்சியவாத சாயல் கொண்ட கதைமாந்தர்களோ பல்வேறு எழுத்தாளர்களின் புனைவு வெளியில் உலவுகிறார்கள். அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதை ஒரு உதாரணம். ஜெயகாந்தனின் ஹென்றியும்கூட காந்திய சாரத்தை தமதாக்கிக் கொண்ட ஒருவன்தான். சி.சு. செல்லப்பா மற்றுமொரு முக்கியமான காந்தியுக எழுத்தாளர். ‘சுதந்திர தாகம்; ‘சத்தியாகிரகி’ போன்ற கதைகள் காந்தியின் மீது வழிபாட்டுணர்வு கொண்ட படைப்பூக்கமிக்க ஆளுமைகளில் ஒருவராக அவரைக் காட்டுகிறது. சிதம்பர சுப்பிரமணியனின் ‘மண்ணில் தெரியுது வானம்’, எம்.எஸ்.கல்யாண சுந்தரத்தின் ‘இருபது வருடங்கள்’ போன்ற நாவல்களில் காந்தியொரு பாத்திரமாக வந்து போகிறார். ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவல் காந்தியத்தையே தனது தரிசனமாக கொண்டுள்ளது. உன்னத கொள்கைகள் லட்சியவாதத்தின் பொருட்டு ஒருவனை இறுக்கும்போது அடிப்படைவாதத்தை நோக்கி நகர்வதைப் பற்றிய சித்திரத்தை அந்நாவல் அளிக்கிறது. ஊடாக அய்யன்காளி காந்தி சந்திப்பை மையமாக்கிய ‘மெல்லிய நூல்’ நாவலின் தரிசனமாக மேலெழுகிறது. வெகுமக்கள் இலக்கிய பரப்பில் நா. பார்த்தசாரதி, அகிலன், கல்கி என பலரும் காந்திய தாக்கம் கொண்ட புனைவுகளை எழுதி இருக்கிறார்கள். காந்தியை முதன்மை பாத்திரமாக கொண்டு ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், தேவிபாரதி, உட்பட பலரும் சிறுகதைகள் எழுதி இருக்கிறார்கள். ஆனால் காந்தியை முதன்மை பாத்திரமாக கொண்டு தமிழில் இதுவரை இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே வெளிவந்ததுள்ளன என்று எண்ணுகிறேன். ஒன்று மாலனின் ‘ஜனகணமன’ மற்றொன்று ‘ஆப்பிளுக்கு முன்’.

“காந்தி இந்திய மனவெளியில் அவருடைய மரணத்தின் ஊடாகவே மீள்பிறப்பு எடுத்தார்” என்கிறார் மகரந்த் பரஞ்சபே. தமிழ் காந்திய புனைவுப் பரப்பில் காந்தியின் மரணம் ஆழ்ந்த தாக்கம் செலுத்தியிருப்பதை வாசிப்பின் ஊடாக உணர முடிகிறது. தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’, அசோகமித்திரனின் ‘பதினெட்டாம் அட்சக்கோடு’ ஆகியவை காந்தியின் மரணத்தை தம் பிரதிகளில் தீவிரமாக சித்தரிக்கின்றன. காந்தி சென்ற யுகத்தின் லட்சியவாதத்தின் குறியீடாக, பின்னர் அதன் வீழ்ச்சியின் சாட்சியாக புனைவு வெளியில் நடமாடுகிறார். ஞானக்கூத்தன், இசை, சபரி, மனுஷ்யபுத்திரன் என காந்தி தமிழ் நவீன கவிதைகளில் லட்சியவாதத்தின் பகடியாக உருமாறுகிறார். தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’, மாலனின் ‘ஜனகணமன’, சரவணகார்த்திகேயனின் ‘நான்காவது தோட்டா’, மற்றும் ‘ஆப்பிளுக்கு முன்’, நரோபாவின்  ‘ஆரோகணம்’ என இவை அனைத்துமே காந்தியின் மரணத்தை பேசுபவை. மரணத்திலிருந்து காந்தி இந்திய சமூகத்திற்கு அளித்தவை என்ன என்று ஆராய்பவை. அவருடைய பெறுமதியை மதிப்பிடுபவை. நிதர்சனத்தில், இறந்த காந்தி மீளெழவில்லை- ஆனால் புனைவுகளில் ஒவ்வொரு முறையும் மேலும் ஆற்றலுடன் காந்தி உயிர்த்தெழவே மரிக்கிறார்.

பொதுவெளியில் வெளிப்படையாக விவாதிக்கப்படாத, அதே சமயம் கிளர்ச்சி தரும் கிசுகிசுக்களுக்கே உரிய ஆற்றலுடன் பன்மடங்கு வீரியத்துடன் உலவும் கதைதான் காந்தியின் ‘பிரம்மச்சரிய பரிசோதனைகள்’. காந்தியைப் பற்றிய பொதுவெளி விவாதங்களில் அவர் தரப்பை வீழ்த்தவும் அவரை சிறுமை செய்யவும் இறுதியாக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமும் இதுதான். காந்தியை வாசிப்பவர்களிடத்தேகூட இது சார்ந்து ஒரு மவுனமும் உறுத்தலும் ஐயமும் நிலவுவது உண்டு. ஜெயமோகன், பிரேம், மற்றும் லாய்ட் ஐ ருடால்ப் பிரம்மச்சரிய பரிசோதனைகள் குறித்து சில புரிதல்களை அளித்தனர். இந்தச் சூழலில் இதை பேசுபொருளாக தன் முதல் நாவலுக்கு கைகொள்வதற்கு ஒரு துணிவு வேண்டியதாய் இருக்கிறது. அவ்வகையில் எழுத்தாளர் சரவணகார்த்திகேயன் சவால் மிகுந்த, சற்றே சமநிலை இழந்து அடி பிறழ்ந்தாலும் தலைகுப்புற விழும் கழைக்கூத்தாடிபோல் சமநிலையுடன் பயணிக்க யத்தனித்து, சில உதறல்கள் மற்றும் அதிர்வுகள் இருந்தாலும்கூட விழாமல் மறு எல்லையை அடைந்துவிட்டிருக்கிறார்.

காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள் முப்பதுகளின் பிற்பகுதியில் துவங்குகிறது. தரம்பால் 37ல் காந்திக்கு தூக்கத்தில் நேர்ந்த விந்து விரயம் பற்றி வருத்தத்துடன் எழுதிய கடிதத்தைப் பற்றி ‘காந்தியை அறிதல்’ நூலில் எழுதுகிறார். தன் பிரம்மச்சரியம் கறைபடியாமல் இருக்க மக்கள் பிரார்த்திக்க வேண்டும் என்று அவர் எழுதிய கடிதத்தை காந்தியின் சகாக்கள் எப்படியோ பிரசுரம் ஆகாமல் தடுக்கிறார்கள். சுஷீலா நய்யார், பிரபாவதி துவங்கி மநு வரை பலரும் காந்தியுடன் பிரம்மச்சரிய சோதனையில் வெவ்வேறு காலகட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள். நாவல் மநுவுக்கும் காந்திக்கும் இடையிலான உறவையே பேசுகிறது.

காந்தியின் இந்த சோதனைகள் கஸ்தூரி பா உயிருடன் இருக்கும்போதே துவங்கிவிடுகிறது. அவருடைய எதிர்வினை என்னவாக இருந்திருக்கும்? நாவல் மிகச் சன்னமாக இதை தொட்டு காட்டுகிறது. ஆகாகான் சிறையில் தனக்கு உதவியாக இருக்கும் மநுவை காந்தியிடம் இருந்து விலக்கி வைக்கவே அவர் முயல்கிறார். கஸ்தூரி பாவின் மரணத்திற்கு பிறகு வரும் ஒரு நிகழ்வு மநுவின் தூய்மையான வெள்ளந்தித் தன்மைக்கு சான்றாக திகழ்கிறது. பாவிடம் ஒவ்வொரு நாள் நிகழ்வையும் மநு சொல்வது வழக்கம். இறந்த பிறகும் பாவின் நினைவிடத்தில் சென்று அன்றைய நாளைப் பற்றி சொல்கிறாள் மநு. காந்தி இதைப்பற்றி கேட்கும்போது மநு ஒரு பதில் அளிக்கிறார். “பா இருப்பதும் இல்லாததும் என் தேர்வல்ல, ஆனால் சொல்வது என் தேர்வல்லவா?” மெதுவாக அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு பரிணாமம் கொள்கிறது. காந்திக்கு அணுக்கமாக இருந்த பிறர் பின்னுக்குச் செல்கிறார்கள். மகாதேவ் தேசாயும், பாவும் இருந்த இடத்தை ஏறத்தாழ மநு நிரப்புகிறார். காந்தியின் அணுக்கர்கள் அனைவரும் பொறாமை கொள்ளும் அளவுக்கு அந்த உறவு வலுப்படுகிறது. பியாரிலாலுக்கு மநு மீதிருந்த ஈர்ப்பு, அதை பியாரிலாலின் சகோதரி சுஷீலா தனக்கு சாதகமாக பயன்படுத்தி காந்தியை மநுவிடமிருந்து விலக்க முற்படும் ஆசிரம அரசியல்களையும் நாவல் தொட்டுக் காட்டுகிறது. நாவலின் பாத்திர வார்ப்பில் மநுவின் பாத்திரம் காந்தியைக் கடந்து மேலெழுந்து செல்கிறது. துவக்க காலத்தில் இருக்கும் அவளுடைய குறுகுறுப்பு, மெல்ல தன்னை காந்தியிடம் பூரணமாக ஒப்புவித்தல், பிற்பாடு தக்கர் பாபாவுடன் நிகழும் உரையாடல், மன உறுதிக்கும் ஆசிரம சில்லறை அரசியலுக்கும் இடையில் ஊசலாடுதல், நாவலின் இறுதியில் தேவதாஸ் காந்தி மநு சார்ந்து எந்த செய்தியும் பரவுவதை விரும்பவில்லை என்பதால் அவரை அவசர கதியில் வெளியேற்றிய பின்பான வெறுமை, எல்லாவற்றிற்கும் மேலாக மநுவிண் பதின்ம வயதிற்கே உரிய வெள்ளந்தித்தனம் (காந்தி அதை தூய்மை என்றே கருதுகிறார்).

காந்தி பிடிவாதக்காரராக, பிறழ்வு கொண்டவராக, ஏறத்தாழ சர்வாதிகாரியாக தோன்றக்கூடும். ஆனால் இவற்றை மீறி அவருடைய ஆளுமை பேருரு கொள்ளும் தருணங்களும் நாவலில் உண்டு. நவகாளி யாத்திரையின்போது ஒரு கிராமத்தில் காந்தி வரும் வழியில் சில இஸ்லாமிய இளைஞர்கள் மலத்தை இட்டு வைத்தனர். காந்தி தானே சுத்தம் செய்யத் துவங்குகிறார். பிறர் வேண்டாம் எனச் சொல்லியும் மறுக்கிறார். “இது மனித மனதினைவிட நாற்றம் கொண்டதல்ல” என்கிறார். நவகாளி பயணத்தின்போது மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளைப் பற்றி பேசுகிறார். அதை மொழியாக்கம் செய்ய வேண்டிய நிர்மல் குமார் போசுக்கு பெரும் சங்கடம். இதை இப்படி பொதுவெளியில் பேசித்தான் ஆக வேண்டுமா என மறுக்கிறார். உயிருக்கே ஆபத்தாக போய்விடலாம் என எச்சரிக்கிறார். ஆனால் காந்தி தன்னுடன் நவகாளியில் பயணத்தில் இருக்கும் சகாக்களின் நடத்தையால் புண்பட்டிருந்தார். “எதுவும் என்வரையில் அனாவசியம் இல்லை. என்னை எதிரியாய் பாவிப்பவர்களோ, வெறுப்பவர்களோ செய்யும் செயல்களைக் காட்டிலும் என் மீதான அக்கறையில், அன்பில் என்னைச் சுற்றியுள்ளோர் செய்வதே என்னைப் பெரிதும் புண்படுத்துகிறது,” என்கிறார்.

நாவலின் உயிர்த்துடிப்பான பகுதி என்பது காந்தி- தக்கர் பாபா மற்றும் தக்கர் பாபா- மநு ஆகியோருக்கு இடையே நிகழும் உரையாடல் பகுதி. செய்தி ஆவணத்தன்மை கொண்ட பெரும்பகுதிகள் உள்ள புனைவில் இந்த விவாதப் பகுதியே ‘ஆப்பிளுக்கு முன்’னை நாவலாக்குகிறது என்றுகூட துணிந்து சொல்லலாம். தக்கர் பாபாவுடனான உரையாடல் புனைவெழுத்தாளனாக சரவணகார்த்திகேயனை அடையாளம் காட்டக்கூடிய இடம். தக்கர் பாபா சொல்கிறார், “உடல் என்பது நினைவில் காடுள்ள மிருகம். அது எப்போதும் காமத்தை மறவாது.” காந்தி காமத்தை தாய்மையின் மற்றொரு பரிமாணம் என வாதிடுகிறார். காமத்தை, பால்தன்மையை கடந்து தாய்மையை அடைய வேண்டும் என்கிறார் காந்தி. காந்தியின் மனப்பிறழ்வுக்கு அவர் அளிக்கும் பாசாங்கு என்பதாக இது பொருள் படக்கூடும். ஆனால் காந்தி அப்படி எண்ணவில்லை. கீழை ஆன்மீக மரபில் பிரம்மச்சரியம் செயலூக்கத்துடன் தொடர்புறுத்தப்படுகிறது.

லாய்ட் ஐ ருடால்ப் எழுதிய பின் நவீனத்துவ காந்தி பற்றிய அர.சு. ராமாவின் கட்டுரை இப்படிச் சொல்கிறது. “நான் என் வாழ்நாள் எல்லாம் தொடர்ந்த பிரமச்சர்யத்தைக் கடைபிடித்திருந்தால் என் உற்சாகமும் உத்வேகமும் இன்றுள்ளதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்று முழுமையாக நம்புகிறேன். அதை என் தேசத்துக்கும் என் உய்வுக்கும் பயன்படுத்தியிருக்க முடியும்,” என்றார் காந்தி. மேலும், “உயிர் தோன்றக் காரணமாக இருக்கும் ஜீவசக்தியை வீணாக்காமல் சரியான வழியில் பயன்படுத்துபவனுக்கு அனைத்து ஆற்றலும் கிடைக்கிறது… முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு எண்ணற்ற ஆற்றல் உண்டு, அது தானாகவே செயல் வடிவம் பெற்று வெற்றி காண்கிறது… தன் சக்தியை விரயம் செய்பவனுக்கு இந்த ஆற்றல் எட்ட முடியாத ஒன்று”.

நாவலில், ஆன்மாவையும் உடலையும் மிகவும் எளிமைபப்டுத்துகிறீர்கள் என்கிறார் தக்கர் பாபா. அதற்கு காந்தி அளிக்கும் பதில் கூர்மையானது. “எல்லா மதத்திலும் பாவ மன்னிப்பு என்பது உடலின் குற்றங்களிலிருந்து ஆன்மாவை விடுவிக்கும் நோக்கம் கொண்டது. அப்படி ஓர் ஓட்டையைப் போட்டு தள்ளுபடி தருவதன் மூலம் உண்மையில் பாவ மன்னிப்புகளே பாவங்களை அதிகரிக்கின்றன.”

மேலும் பின் நவீனத்துவ காந்தி நூலில் காந்தியின் புலனடக்கம் குறித்து உள்ள ஒரு கோணம் எனக்கு முக்கியமானது-

தன்னை வென்றவன் தரணியை வெல்வான் என்பது போன்ற புராதன நம்பிக்கைகள் கொண்டிருந்தார் காந்தி. விஸ்வாமித்திரர் கதையே அவர் காமத்தையும் கோபத்தையும் வெற்றி கொண்டு இந்திரிய ஜெயத்தின் ஆற்றலால் திரிசங்கு சொர்க்கம் போன்ற உலகங்களையும் படைக்கும் தவவலிமை பெற்றதைத்தானே சொல்கிறது? இவற்றை வெறும் கட்டுக்கதைகள் என்று புறந்தள்ளாமல், தன் புலனடக்கத்தால் தன்னோடு வாழ்ந்த மக்களின் துயர்களைக் களைந்து அவர்கள் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த முயன்றார் காந்தி. அவர் தன் புலனடக்கத்தால் படைக்க நினைத்த உலகம் மிக எளிமையானது. திரிசங்கு சொர்க்கத்தைப் போல் தேவலோகத்துக்கு இணையான பிரம்மாண்டம் கொண்டதல்ல அது- ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற எளிய இலக்கு கொண்ட சாதாரண கனவு. எளியவர்கள், ஏழைகள் இவர்கள் துன்பமற்று வாழ ஒரு உலகைப் படைக்க விரும்பினார் காந்தி.

காந்தியின் தாய்மைத் தரிசனமும் பெண்ணிய மற்றும் அகிம்சை நோக்கில் முக்கியமான புரிதல் அளிப்பவை. வந்தனா சிவா இக்கோணத்தை வளர்த்தெடுத்ததைப் பற்றி பிரேம் தனது கட்டுரையில் விவரிக்கிறார். ‘பின்தொடரும் நிழலின் குரலில்’ கூட அதீத ஆண் மைய அரசியலுக்கு எதிராக காந்தி கைக்கொண்டது பெண் மைய அரசியல் எனும் கோணம் துலங்கும். ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றிக்கூட பால் கடந்த நிலையை நோக்கி சென்றவர் எனும் கோணம் உண்டு. காந்தி தனது பரிசோதனைகளை மறைக்கவில்லை. பிரார்த்தனை கூட்டங்களில் பேசுகிறார், கடிதங்கள் எழுதுகிறார், கட்டுரைகள் எழுதுகிறார், இதை எல்லாம்விட ஒரு படி மேலே சென்று, பிரம்மச்சரிய பரிசோதனையின் அனுபவங்களை மநுவை நாட்குறிப்பில் எழுதச் சொல்லி அதை தானே திருத்தியும் கொடுக்கிறார். சார்ந்தோரின் பூரண சம்மதத்துடன், அவர்கள் வீட்டாரின் அனுமதியுடன் சோதனையில் ஈடுபடுத்துகிறார். அவர்களுக்கு விருப்பம் இல்லை எனும்போது விடுவிக்கவும் செய்கிறார். மநு எழுதிய நூலின் பெயர் “பாபு என் தாய்”. காந்தியே சொல்வது போல் அவர் இத்தேசத்திற்கே தந்தை, ஆனால் மநுவுக்கு மட்டும் அவர் அன்னையாக தன்னை நிறுவிக்கொள்ள முயல்கிறார். பிறரிடம் அப்படியான உணர்ச்சிகளை ஏற்படுத்தத் தவறிய காந்தி மநுவைப் பொருத்தமட்டில் அந்த இலக்கை அடைகிறார். பிரம்மச்சரிய பரிசோதனைகள் தடைபட்டு மீண்டும் துவங்கியபோது முன்பிருந்த வெளிப்படைத்தன்மை இல்லையென சரவணகார்த்திகேயன் நாவலில் எழுதியிருப்பது எனக்குமே ஆச்சரியமாக இருந்தது.

இத்தனை சொன்ன பிறகும், நாவல் காந்திக்கோ அல்லது மநுவிற்கோ சார்பு நிலை எடுக்கிறதா? என்றால் இல்லை. காந்தியை புரிந்துகொள்ள சில கோணங்களை திறந்து வைக்கிறார். அவற்றை ஏற்பதும், நிராகரிப்பதும் வாசகரின் பொறுப்பு. பெரும்பான்மையினருக்கு காந்தியின் பிரம்மச்சரிய சோதனைகளின் தர்க்கம் உவப்பாக இருக்காது. இந்நாவல் அவர்களை தொந்திரவு செய்யும் என்பதே என் அவதானிப்பும். மநு எனும் தனி மனுஷி மீது எவ்வித தாக்கத்தை காந்திக்கு பின்பான அவருடைய நெடிய வாழ்வில் இவை ஏற்படுத்தி இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. மனித நேய நோக்கில் வாசக மனம் அவர் நோக்கி இரங்குவதை தவிர்க்க முடியவில்லை.

ஆகாகான் சிறைச்சாலையில் மநுவின் வருகையுடன் துவங்கும் நாவல் காந்தியின் மரணத்துக்கு பின்பான மநுவின் வெறுமையுடன் நிறைவுறுகிறது. காந்தியைப் பற்றிய மதிப்பீடுகள் உயர்வதோ, தாழ்வதோ, மாறாமல் இருப்பதோ வாசகரின் வாசிப்பைப் பொருத்ததாகும். என் நோக்கில் காந்தி மேலும் அணுக்கமாகவே ஆகிறார்.

நாவல் முழுக்கவே படர்க்கையில் நகர்கிறது. விவரணைகளற்ற, தட்டையான இதழியல் மொழி. இந்நாவலையே இதழியல் நாவல் என்று வகைபடுத்தலாம். புனைவுத் தன்மை குறைவாக கொண்ட நாவல். ஆகவே வழக்கமான நாவல் போன்ற வாசிப்பனுபவத்தை மொழிரீதியாக இது அளிக்காமல் போகலாம். பெரும் முரண்கள், நாடகீய தருணங்கள் ஏதுமற்று பயணித்தாலும்கூட ஒரே அமர்வில் வாசிக்கத்தக்கதாகவும் இருக்கிறது. நாவலின் மிகப்பெரிய சிக்கல் அதன் மொழி. வெகுஜன தளத்திற்கு நெருக்கமாக இருக்கிறது. தேய்வழக்குகளும் நிறைய இருக்கின்றன. “நண்பகல் ஒரு குறியீடு போல் அனலைக் கக்கிக் கொண்டிருந்தது,” போன்ற பயன்பாடுகள் நாவலின் ஓட்டத்திலிருந்து விலகியிருக்கின்றன. நாவலின் உணர்வு நிலைக்கு தொடர்பில்லாத, வெகுஜன இலக்கியத்திற்கே உரிய கிளர்ச்சி ஏற்படுத்தும் தன்மை சில இடங்களில் வாசிப்பின் கவனத்தை சிதறடிக்கிறது. வெகுஜன – தீவிர இலக்கியம் இரண்டிற்குமான நடுவாந்தர போக்கில் மொழி நிகழ்கிறது. உணர்வுரீதியாக பெரும் பாதிப்பை நிகழ்த்த தவறுகிறது. எனினும் இந்த உணர்வு விலக்கம்கூட இதழியல் நாவல்களின் ஒரு கூறுமுறைதான். சரவணகார்த்திகேயன் இக்கருவை மிகுந்த பொறுப்புடன், விழிப்புடன் கையாள முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். ஆனால் ஒரு விலையோடு- அது நாவலின் கலைத்தன்மையை மட்டுப்படுத்துகிறது. மநு- காந்திக்கு இடையிலான உறவை காமத்திலிருந்து, எக்காலத்திற்கும் உரிய அறக் கேள்வியாக, தத்துவச் சிக்கலாக வளர்த்தெடுத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். எனக்குள் இருக்கும் காந்தியர் அடைந்த நிறைவை புனைவு வாசகன் அடையவில்லை என்பதே உண்மை.

இத்தகைய ஒரு கருவை எழுத்தில் வார்க்கும் திறன் மற்றும் துணிவும், ஒரு களத்திற்காக வாசித்து உழைப்பை அளிக்கும் தீவிரமும் சரவணகார்த்திகேயனிடம் இருக்கிறது. இந்த இரண்டு அம்சங்களோடு அவருடைய ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல் ஒரு முக்கியமான முயற்சியாக அடையாளம் பெறுகிறது. வருங்காலங்களில் மேலும் பல சுவாரசியமான புனைவுக் களங்களில் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.

 

 

அகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா

நரோபா

 உருவாகி வரும் புதிய அலை ஈழ எழுத்துக்களில் அகரமுதல்வனும் ஒரு முகம். 1992ஆம் ஆண்டு பிறந்த அகரமுதல்வன் இறுதிகட்ட போருக்கு சாட்சியாக இருந்தவர். இதுவரை மூன்று சிறுகதை தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். கவிதை தொகுப்புக்கள், கட்டுரைகள், குறும்படம், ‘ஆகுதி’ அமைப்பின் வழியே இலக்கியச் செயல்பாடுகள் என முனைப்புடன் இயங்கி வருகிறார். பதின்பருவத்தில், பதினாறு- பதினேழு வயதில், விழுமியங்கள் நிலைபெறும் காலத்தில், பெரும் அலைகழிப்புகளையும் துக்கத்தையும் அகரமுதல்வன் ஈழத்தில் எதிர்கொண்டிருக்கிறார். இடப்பெயர்வுகளும், மரணங்களும், துயரங்களும் சூழ்ந்த வாழ்வு. இவை அவருடைய படைப்புலகில் என்ன விதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும்? அவருடைய முந்தைய தொகுப்புக்கள் வாசித்திராத சூழலில் ‘குக்கூ’ சிறுகதை கூடுகைக்காக அவருடைய அண்மைய தொகுப்பான ‘பான் கீ மூனின் ருவாண்டா’ தொகுப்பை வாசித்தேன்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ‘பான் கீ மூனின் ருவாண்டா’ பத்து சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு. ‘பான் கீ மூனின் ருவாண்டா’ எனும் பேரில் ஒரு கதை தொகுப்பில் இல்லாதபோதும், சர்வதேச சமூகம் ஈழ இனப் படுகொலைக்கு மவுன சாட்சியமாக இருந்தது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவிக்க இந்த தலைப்பை தேர்ந்துள்ளார். எல்லோரையும் பொறுப்பேற்கச் சொல்கிறார். உங்கள் கரங்களில் குருதிக்கறை உள்ளது பாருங்கள், என நினைவூட்டுகிறார்.

அகரமுதல்வன் எவ்வித ஒளிவு மறைவுமின்றி தன் அரசியல் தரப்பை பிரகடனப்படுத்திவிட்டுதான் படைப்புகளுக்குள் செல்கிறார். தனது வலைப்பக்கத்தில் “ஆயுத சத்தங்கள் அற்று அழிக்கப்படும் இனத்தின் நிதர்சனமாக இனத்தின் தேசிய வாழ்வை வலியுறுத்தும் படைப்புக்களை உருவாக்கி கொள்வதனால் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை உடைத்தெறியும் சக்தி என் எழுத்துக்களுக்கு இருக்கிறது” என்று எழுதுகிறார். தொகுப்பில், கதைகளைப் பற்றி விமர்சனபூர்வமாக சில கருத்துக்கள் கொண்ட அபிலாஷின் முன்னுரை இடம்பெற்றுள்ளது. அகரமுதல்வனின் கவிதைகளில் பெண்ணுடல் ஈழ மண்ணுக்கான ஒரு உருவகம், என அவர் குறிப்பிடுகிறார்.

அகரமுதல்வனின் புனைவுலகில் என்னை மிகவும் ஈர்த்தது, அவருடைய ஆகச் சிறந்த பலம் என நான் கருதுவது, அவருடைய மொழி. கவிஞன் என்பதால் இயல்பாக மொழியை வளைக்க அவரால் முடிகிறது. “துயிலின் மேடையில் குளம்படிகள் பற்றிய குதிரைகளை இளம் அகதி சவாரி செய்தான்” (பெயர்), ”மேகங்களைப் பிரித்து நிலவைக் களவாடும் சூரத்தனம் நிறைந்தது” (பெயர்) “ஆன்மா களைந்து கிடுகுகளால் மேயப்பட்ட வெற்றுப் பெட்டிகளாயிருந்தன”, “அரக்கனின் கையில் அடைபட்ட பாம்பைப் போல மூச்சைத் திணறினாள்” (கள்ளு). சில நேரங்களில் மொழிரீதியான தாவலின் வழியாக கதைக்கு கூடுதல் மடிப்புகளை அளிக்கிறார். “மரணத்திற்கு பழக்கப்பட்ட ஒரு மாமிசக் காலத்தின் சுவட்டைப் போலிருந்தது அந்தக் கடைத்தெரு”, “சதா சிரித்துக்கொண்டே நம்மைத் தின்று பெருக்கும் யுத்தத்தின் வயிற்றைத்தான் நாம் இனி பூமி எனப் போகிறோம்” (தாழம்பூ).

அகரமுதல்வனின் இத்தொகுதியின் கதைகளை மூன்றாக வகுக்கலாம். போருக்கு பிந்தைய காலகட்ட வாழ்வை சொல்லும் கதைகள்- ‘பெயர்’, ‘தந்தம்’. போரின் ஊடாக சாமானியரின் வாழ்வை சொல்லும் கதைகள் – ‘முயல்சுருக்கு கண்கள்’, ‘இவன்’, ‘கள்ளு’, ‘தீபாவளி’. போராளிகளின் வாழ்வை சொல்லும் கதைகள் – ‘சங்கிலியன் படை’, ‘தாழம்பூ’, ‘கரைசேராத மகள்’, ‘குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார்’.

அகரமுதல்வனின் கதைகளில் ஒருவித வாழ்க்கைச் சரிதைத் தன்மை கொண்ட கதைகள் என “குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார்” “கள்ளு” “தீபாவளி” “இவன்” “கரைசேராத மகள்” ஆகிய கதைகளை அடையாளப்படுத்தலாம். இக்கதைகள் தொய்வின்றி வாசிக்க முடிந்தன. குறுநாவல்களாக, நாவல்களாக விரித்து எழுதத்தக்கவை.

அச்சமூட்டும் இருள் நிறைந்த கதைகளில் “முயல்சுருக்கு கண்கள்” மட்டுமே இத்தொகுதியில் சின்ன சிரிப்புடன், நேர்மறையாக முடியும் கதை. இந்தக் கதையில் புற விவரணைகள், காடும் உடும்பு வேட்டை பகுதிகளும் காட்சிகளாக மனதில் நிற்கின்றன. நேரடியாக போரோ வன்முறையோ இல்லாத கதை, போருக்கு அப்பாலான யதார்த்த வாழ்வை சித்தரிக்கிறது. அதே வேளையில் போர் ஒரு பின்புலமாக சன்னமாக கோடிட்டு காட்டப்படுகிறது. ஆதவியின் தந்தை காட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது நினைவுகூரப்படுகிறது. கிழவர், நாடும் காடும் பறிபோகிறது, என இயக்கத்திடம் முறையிடுகிறார். உடும்பை வேட்டையாட முயலுடன் சென்றவனின் கதை. இந்தக் கதையின் வடிவத்தை தொடர்ந்து கூர்தீட்டி எழுதும்போது மேலான கலைத்தன்மையை அகரமுதல்வனின் கதைகள் அடையக்கூடும். இக்கதையில் சிக்கல் இல்லாமல் இல்லை. மொழிரீதியாக ‘உவமைக் குவியலை’ அளிக்கிறார். அகரமுதல்வன் பயன்படுத்தும் சில உவமைகளில் அவருடைய மரபிலக்கிய தேர்ச்சி புலப்படுகிறது. சில உவமைகள் ரசிக்கச் செய்தாலும், அவை அதீதமாகி வாசிப்பைக் குலைக்கின்றன. சிறுகதை கவிதைக்கு நெருக்கமான வடிவத்தில் இன்று எழுதப்படுகின்றது என்பது என்னவோ உண்மை. அது கவிதையின் மவுனத்தையும், தரிசனத்தையும், வாசக இடைவெளியையும் கைக்கொள்ள வேண்டும்.

“பெயர்” புலம்பெயர் வாழ்வின் அடையாளச் சிக்கலை சொல்லும் கதை. ஈழத்திலிருந்து தப்பி சென்னைக்கு வருகிறான், தன்னை மறைத்துக்கொண்ட ‘இளம் அகதி’. அவனை அழைத்துச் செல்லும் வாகனக்காரர் பெயர் கேட்டபோது கண் கலங்குகிறான். அவர் சென்ற பிறகு ‘இளம் அகதியின் சிரிப்பு அமுங்கி அமுங்கி அந்த அறையில் எழுந்தது,’ எனும் இடம் இக்கதையில் எனக்கு முக்கியமான இடமாகப் பட்டது. தன் அடையாளத்தை அவன் அஞ்சி மறைக்கவில்லை. அதில் ஒரு சிறு விளையாட்டும் சேர்ந்திருக்கிறது. திரளில் தன்னை அமிழ்த்திக் கொள்ள முயல்பவர்களாகவே இருக்கிறார்கள் ‘இளம் அகதியும்’ ‘அகதியானவளும்’. சாதாரணமாக பணி காரணமாக இடம் பெயர்ந்தவர்களுக்கும் அகதிகளுக்குமான வேறுபாடு என்பது கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகளில் உள்ளது. பெயர்ந்தவர்கள் கடந்த காலத்தை மறக்க முயல்கிறார்கள். அகதிகள் அதை இறுகப் பற்றி தங்களுக்குள் பாதுகாக்க விழைகிறார்கள். ஒருவகையில் அவர்களுடைய இறுதி பற்றுகோல் நினைவுகளே. நினைவுகளின் கடந்த காலங்களுக்கும் நிகழ்காலத்திற்கும் இடையேயான ஊசலாட்டத்தால் நிறைந்தது அவ்வாழ்வு.

‘தீபாவளி’ உணர்ச்சிகரமான சித்தரிப்பால் மனதைப் பதறச் செய்த கதை. பதினான்கு முறை தன் வாழ்வில் இடம் பெயர்ந்தவன் கதிர்காமன். இந்திய அமைதிப் படை நிகழ்த்திய குண்டு வெடிப்பில் தன் மனைவியையும் மகளையும் இழக்கிறான். ‘சந்திரா இந்திரா’ என தன் மகளுக்கு பெயரிடுகிறார். ‘குடாநாட்டு வாத்தியார் கடத்தப்பட்டார்’ கதையிலும் ‘எம்.ஜி.ஆர்’ மீதான ஈழ மக்களின் பிணைப்பு வெளிப்படுகிறது. இந்திய அமைதிப் படையின் தாக்குதலின் விளைவாக நேரும் பிஞ்சுக் குழந்தை இந்திராவின் மரணம் வெகுவாக அமைதியிழக்கச் செய்கிறது. தொகுப்பின் இறுதி கதையில் வருவது போல “உலகின் மோசமான நிகழ்வுகளுக்கு கடவுள் காரணமல்ல” என்று சொல்லிவிட முடியுமா எனத் தெரியவில்லை. உணர்ச்சிகளால் சற்று அமைதியிழக்கச் செய்த மற்றொரு கதை என “கரை சேராத மகளை” சொல்லலாம். சாதனாவின் தோற்றம் மனதை தொந்திரவு செய்கிறது. கால்களற்ற, பார்வையற்ற ரத்தக் கன்று போலிருந்தாள். அவளை அந்நிலையில் விட்டுவிட்டு அவளுடைய அன்னை பூ ராணியும் இறந்துவிடுகிறாள்.

“தந்தம்” மற்றும் “குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார்” ஆகிய தொகுப்பின் கடைசி இரு கதைகள் வழுக்கிக்கொண்டு செல்கின்றன. “தந்தம்” துரோகத்தின் கதை. போருக்கு பிந்தைய நெருக்கடிகளை சொல்கிறது. ராணுவத்துடன் இணைந்து முன்னாள் புலிகளை காட்டிக் கொடுக்கிறார்கள். அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சித்திரத்தை அளிக்கிறார். தெளிவத்தை ஜோசெப் ‘குடைநிழல்’ இத்தகைய தலையாட்டியின் செயல்பாடுகளை மிகக் கூர்மையாக சொல்லும். “குடாநாட்டு வாத்தியார் கடத்தப்பட்டார்” மனித வெடிகுண்டுகளாக மாறி கொழும்பில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை. சன்னமான அங்கதம் சம்பவங்களுடன் இழையோடுகிறது. பல கதாபாத்திரங்களும், கலைந்த வடிவமும் கொண்டிருக்கிறது. நாவலாக விரித்தெடுக்கும் வாய்ப்பு கொண்ட களமும்கூட. கதை சொல்லும் முறை கைவரப்பெற்ற கதை என இதை குறிப்பிடலாம்.

“கள்ளு” ஒரு பெண்ணின் மூன்று காதலர்களைப் பற்றிய வாழ்க்கைச் சரிதை கதை. இதில் ஒரு பாத்திரத்தின் பெயர் ‘கண்டி வீரன்’. தன்னை புலி என்று சொல்லிக்கொண்டு அந்நிய நாட்டில் தஞ்சம் புகுந்தவர் என அவரை கிண்டல் செய்கிறார். வேகமாக வழுக்கிச் செல்லும் கதையின் முடிவில் “தாய் நாடுமில்லை, தாய்களுக்கு முலையுமில்லை. யுத்தம் எல்லாவற்றையும் சபித்துவிட்டது” எனும் வரி வலுவாக வெளிப்பட்டது. “சங்கிலியன் படை” கதை என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. நெருங்கியவன் தவறிழைக்கும்போது நீதியை நிலை நாட்ட முடிவெடுப்பவன். பின்புலம் வேறென்றாலும் இக்கதையின் உணர்வு நிலை நமக்கு பழகியதாக உள்ளது. “இவன்” திருடனுக்கு மீட்சி அளிக்கும் கதை. யூகிக்கத்தக்க’ கதையின் முடிவு. தொகுதியின் பலவீனமான கதைகளில் ஒன்று. “தாழம்பூ” கதையும் தேய்வழக்காகிப் போன பேசுபொருளைச் சொல்கிறது. எனினும் இக்கதைகளுக்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. சில மனிதர்களின் நினைவுகளை எழுதுவதன் வழியே மட்டுமே கடந்து செல்லமுடியும். அல்லது அவர்களை நிரந்தரமாக நினைவில் நிறுத்த முடியும்.

இது சென்ற ஆண்டு விருது வழங்கப்பட்ட மலேசிய எழுத்தாளர் சீ. முத்துசாமியின் மண்புழுக்கள் நாவல் குறித்து நான் எழுதியது அகரமுதல்வனின் படைப்புலகிற்கும் பொருந்தும் என தோன்றுகிறது. “பிரித்தானிய எழுத்தாளர் ஹிலாரி மாண்டெல் வரலாற்று புனைவுகள் பற்றி ஆற்றிய ரெய்த் உரையில் முன்னோர்களை நினைவுகூர்வது எத்தனை முக்கியமானது எனக் குறிப்பிடுகிறார். “மனிதராக இருப்பதற்கான மிக நெருங்கிய இலக்கணமாகவே இதைக் கொள்ளலாம், நாம் துக்கம் அனுஷ்டிக்கத் தெரிந்த மிருகங்கள். இனப்படுகொலையின் மிக முக்கியமான குரூரங்களில் ஒன்று வெகுமக்களின் சவக்குழி, நேசத்துக்குரிய, நம்முடன் வாழ்ந்த மனிதர்கள் பெயரிழந்து பிரிக்கமுடியாத மாமிசப் பிண்டத் தொகுப்பாக மாறுதல் அது.” இப்படியான தேவைகள் ஈழ எழுத்திற்கும் இருப்பதாகவே எண்ணுகிறேன்.

அகரமுதல்வனின் கதைகளில் சுய மைதுனமும், காமமும் பல தருணங்களில் வருகின்றன. அவை பெரும்பாலும் சிறிய மனக் கிளர்ச்சிகளுக்கு அப்பால் எதையும் அளிக்கவில்லை. ஆனால் இந்த பயன்பாட்டிற்கு வேறு காரணங்கள் இருக்க முடியுமா என்று இரண்டாம் வாசிப்பில் யோசனை வந்தது. ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 வின்ஸ்டன் ஸ்மித் – ஜூலியா உறவை எண்ணிக் கொண்டேன். ‘பெரியண்ணனின்’ கண்களுக்கு புலப்படாமல் என்ன செய்தாலும், செய்ய முயன்றாலும் அது கலகம் எனக் கருதியவர்கள். மிக இயல்பான உந்துதலால் நிகழும் கலவிகூட ஒடுக்கப்பட்ட சூழலில் அதிகாரத்திற்கு எதிரான கலகமாக இருக்கக்கூடும். அவ்வகையான வாசிப்பை அகரமுதல்வனின் கதைகளுக்கு அளிக்க முடியுமா என்று பரிசீலித்து பார்க்கலாம். “பெயர்” கதையில் அவர்களின் விடுதலை உணர்வும் இளைப்பாறுதலும் தெளிவாகவே வெளிப்படுகிறது. “அகதிகள் புணரும் ரகசியத்தை விடியும் இரவும் பார்த்துவிடக் கூடாது”

இரண்டு கதைகளில், ‘இந்தக் கதை இன்னும் பத்து நிமிடங்களில் முடிந்துவிடும்’, ‘ஏழு நிமிடங்களில் முடிந்து விடும்’, என்றெல்லாம் எழுதுவது ஒரு யுத்தி என்றால், அது துருத்தலாக இருக்கிறது. “மேலும் ’ஈழ ஆதரவு – ஈழ எதிர்ப்பு’ எனும் இருமையை ஒரு கறுப்புக் கண்ணாடியைப் போன்று இக்கதைகள் அணிந்திருக்கின்றன” என்றும் அபிலாஷ் எழுதி இருக்கிறார். அது எனக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. இத்தொகுதியின் பெரும்பாலான கதைகள் வாழ்க்கைச் சரிதை தன்மையுடைவையே. வழமையாக நாம் பழகிவரும் வடிவமான சிறுகதைக்கான இறுக்கமோ கச்சிதமோ அவற்றில் இல்லை. எனினும் புதிய வகைமாதிரியான கதைசொல்லலை நோக்கி செல்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும். மேற்கில் வரலாற்று நிகழ்வுகளை ‘கதையாடல்’ (narrative) முறையில் எழுத பத்திரிக்கைத்துறையில் பயிற்றுவிக்கிறார்கள். அவ்வகையிலான முயற்சிகளாக கருதப்படும்போது, இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த தொகுப்பு என்னுள் சில ஆழமான கேள்விகளை எழுப்பியது. எனது வாசிப்புக்கு சவாலாக இருந்தது, அதன் எல்லையை சோதிப்பதாகவும் இருந்தது. காரணம் எனது இலக்கிய நம்பிக்கைகள், வழிமுறைகள் மற்றும் தேவைகள் வேறானவை. வேறு வகையான இலக்கிய படைப்புகளும் இருக்க முடியும், அவை கொண்டாடப்பட முடியும், என்பதை கிரகித்துக்கொள்ள சிரமமாக இருந்தது. எல்லைகளைக் கடப்பதே வாசகனின் கடமை. எதையாவது தவற விடுகிறேனா என்று திரும்ப திரும்ப இக்கதைகளை வாசித்தேன். இறுதிவரை கட்டுரையை திருத்திக்கொண்டே இருந்தேன். ஒரு கதை அல்லது கதையாசிரியர் புதிதாக எதையாவது உருவாக்கிக் காட்ட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. நவீன இலக்கிய வாசகனாக கருத்தியல் பிரதிகளின் மீது எனக்கொரு மன விலக்கம் உண்டு. நவீன இலக்கியம் என்று நான் நம்பும் ஒன்றின் இயல்புகளில் முக்கியமானது, அதற்கு தம்மவர் அயலவர் எனும் இருமையை கடந்து ஒட்டுமொத்த மானுடத்தை நோக்கி விரியும் குரல் இருக்க வேண்டும். குணா கவியழகனின் “அப்பால் ஒரு நிலம்” நாவல் முழுவதும் ஈழப் போராளிகளின் உளவுப் பிரிவின் கதையை சொல்கிறது. வீர வழிபாடு, வழமையான பெண் பாத்திர வார்ப்புக்கள் என்று பயணித்து, நாவலின் இறுதியில் சிங்கள சிப்பாயை தன்னைப் போன்ற ஒரு காதலனாக அடையாளம் காணும் புள்ளியில் நாவல் உச்சம் அடைகிறது. அது நடைமுறை நோக்கில் முட்டாள்தனம்தான், அவனுடைய உயிரையே காவு வாங்கிவிடுகிறது. ஆனாலும் அதில் நம்மவர் அயலவர் இருமைக்கு அப்பால் ஒரு தாவல் நிகழ்கிறது. அதவே அந்நாவலை மேலான பிரதியாக ஆக்குகிறது.

அகரமுதல்வன் அவர் அறிந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு கதைகளை எழுதுகிறார். ஒரு இலக்கிய பிரதியின் பெறுமதி என்பது அது வெளிப்படுத்தும் உண்மைத்தன்மை மட்டும் சார்ந்ததா? ‘உண்மையை’ அப்பட்டமாக சொல்வதால் ஒரு பிரதி மேலான இலக்கிய பிரதியாகிவிட முடியுமா?  பத்திரிக்கைச் செய்திகள் வழியாக அறிந்ததைக்  காட்டிலும் மேலதிகமாக கதை என்ன அளிக்கிறது? அறக் கேள்வியாக, தத்துவ விவாதமாக விரிகிறதா? அகரமுதல்வனின் பாத்திரங்களுக்கு தங்கள் கருத்தியல் சார்ந்து எந்த அறக் குழப்பமும் இல்லை. மனித குண்டுகளாக வெடித்து சிதறும்போதும்கூட “உலகில் மோசமான நிகழ்வுகளுக்கு கடவுள் காரணமல்ல” என்று சொல்ல முடிகிறது. துரோகிகளும், ஒழுக்கமற்றவர்களும், திருடர்களும் மட்டுமே, அவர்கள் அப்படிப்பட்டவர்கள், அதற்காக தண்டிக்கப்பட்டவர்கள், என்பதாலேயே இயக்கத்தை எதிர்த்தவர்கள் என்பதான ஒற்றைப்படை சித்திரம் கதைகளில் காணக் கிடைக்கிறது (‘கள்ளு’, ‘சங்கிலியன் படை’). கலை எல்லாவிதமான ஒற்றைப்படையாக்கத்திற்கும் (stereotyping) எதிரானது என்பது என் நம்பிக்கை. எங்குமே மானுட அகச்சிக்கல்கள், அற நெருக்கடிகள் வெளிப்படவில்லை என தோன்றுகிறது. தலையாட்டியின், கைகாட்டியின் உளம் என்னவாக இருக்கும்? அவனுடைய நெருக்கடிகள் எத்தகையதாக இருக்கும்? துருவப்படுத்தலுக்கு அப்பால் கதை மாந்தர்களின் சிக்கல்ளின் பல அடுக்குகளை, தரப்புகளை பேச வேண்டும். வாழ்க்கை எங்குமே இத்தனை எளிதாக இருமுனைகொள்ளவில்லை எனும்போது அதைப் பற்றி பேசும் இலக்கியமும் அவ்வாறு இருக்க வேண்டும் என்பதுதானே எதிர்பார்ப்பு. மறுபக்கத்தின் மறுபக்கத்தின் மறுபக்கத்தை காட்டுவதே இலக்கியம் என்பதாக ஜெயமோகன் எழுதி இருப்பார்.

‘கண்டி வீரன்’ (ஷோபா), ‘தமிழினி’ ஆகியோர் பற்றிய குறிப்பு கதைகளில் காணக் கிடைக்கிறது. கருத்தியல் ரீதியான விலக்கம் கொண்டோரை விமரிசிக்கும் போக்கு எப்போதும் உள்ளதுதான், ஷோபாவே முத்துலிங்கத்திற்கு அப்படிச் செய்த முன்மாதிரி உள்ளது, என்றாலும் எனக்கு அது உறுத்தலாக இருந்தது. மேலும் கருத்தியலை ஒரு படைப்பாளி கையில் எடுத்தால் தன் மொத்த படைப்பூக்கத்தையும் அதை காபந்து செய்வதற்கே பயன்படுத்துவான் என்றொரு ஐயமும் எனக்குண்டு. கதைகளின் மீதான விமர்சனம் கருத்தியலின் மீதான விமர்சனங்கள் அல்ல. பெரும்பாலான கதைகள் என்னை ஈர்க்காமல் போனதற்கு அவருடைய கருத்தியல் சார்புதான் காரணமா என்றால் இல்லை என்று உறுதியாக சொல்வேன். ஒரு அன்னை போர்க் காலத்தில் தன்னை வன்புணர்ந்த சிங்களச் சிப்பாயை தன் மகளுக்கு முதன்முறையாக தந்தையென அடையாளம் காட்டும் அ. முத்துலிங்கத்தின் ‘வெள்ளிக்கிழமை இரவுகளை’ விடக் கூர்மையான அரசியல் கதையை ஈழ பின்புலத்தில் நான் வாசித்ததில்லை. அ. முத்துலிங்கம் அரசியலற்ற எழுத்தாளர் என பலரால் நிராகரிக்கப்படுகிறார் என்பது வேறு விஷயம். பல கதைகளில் தேய்வழக்காகிப் போன உணர்வுகளை எழுதுவதன் மூலம் தீவிரம் நீர்த்துவிடுகிறது. நம்மை அசைத்துப் பார்க்கும் புதிய சித்திரங்கள் ஏதுமில்லை. பெண்களின் சித்தரிப்புகள் வீரமும் ஈரமும் நிறைந்த அன்னை அல்லது பேதை என்பதற்கு அப்பால் வேறு வகையில் விரியவில்லை (ஓரளவிற்கான விதிவிலக்கு- ‘பெயர்’).

இவை என் ரசனை உருவாகிவந்த பின்புலத்தில் எனக்கிருக்கும் எதிர்பார்ப்புகள். எவ்வகையிலும் இறுதி தீர்ப்பல்ல. ஏனெனில் இவை அதீதமாகவும், தேவையற்றதாகவும் பிறருக்கு இருக்கலாம். புனைவை அளக்கும் உறுதியான அளவை ஏதும் என்னிடம் இல்லை. அகரமுதல்வனின் இத்தொகுதி கதைகள் எனக்கான கதைகள் இல்லை என்பதே என் தரப்பு, அவை கதைகளே அல்ல என்பதல்ல. ஹெரால்ட் ப்ளூம் சொல்வது போல் “இலக்கியத்தில் சமூக நீதிக்கு இடமில்லை” எனும் நம்பிக்கை எனக்கும் உண்டு. அதே சமயம், கருத்தியலையும்கூட மேம்பட்ட கலைத்திறனால் கொண்டு சேர்க்க முடியும் என்பதே என் தனிப்பட்ட நம்பிக்கை. நல்ல வாசிப்பும், மொழியும், வாழ்வனுபவங்களும் கொண்ட அகரமுதல்வன் தனது எல்லைகளை உடைத்து மேலும் பல கதைகளை எழுதுவார் எனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது.