அசோகமித்திரனை வாசிக்கும்போது, முதல் பார்வையில் அவர் எப்படிப்பட்ட எழுத்தாளர் என்பதைச் சுலபமாக வரையறை செய்து விடலாம் என்று தோன்றுகிறது. சாதாரண மனிதர்களைப் பற்றி எழுதிய ஒரு யதார்த்தவாதி, என்று சொல்லி விடுகிறீர்கள். அதன் பின் தொடர்ந்து வாசிக்கும்போது உங்கள் பார்வை விரிகிறது, அசோகமித்திரன் பற்றிய உங்கள் கணிப்பும் விரிவடைகிறது. அவர் அபத்தங்களை எழுதியவரா? நம் வாழ்வின் அபத்தம் மிகுந்த கணங்களை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு வெளிச்சமிட்டவரா? அவரது எழுத்தில் இருத்தலியல் சிக்கல்களுக்கு இடமுண்டா, என்று கேட்டுக் கொள்கிறீர்கள். உங்கள் கேள்விகள் அத்தனைக்கும், ‘ஆம்,’ என்ற பதில் உரத்து ஒலிக்கிறது. அதன் பின் இன்னும் கொஞ்சம் படிக்கிறீர்கள். அவரது கதைகளில் மாயங்கள் நிகழ்வதைக் காண்கிறீர்கள். அவரது கதைகளின் வெளி தொடர்ந்து விரிகிறது, ஆனால் அவற்றின் ஒருமைப்பாடு ஒரு போதும் குலைவதில்லை. அசோகமித்திரனை எந்த வகைமைக்குள்ளும் முழுமையாய்ப் பொருத்த முடியாது என்று மெல்ல மெல்ல நீங்கள் உணர்கிறீர்கள். அசோகமித்திரன் நம் வாழ்வைப் பற்றி எழுதினார்- அவரது எழுத்து, வெளிப்பார்வைக்கு மிக எளிமையாகத் தெரிந்தாலும், நம் வாழ்வைப் போலவே சிடுக்குகள் நிறைந்ததாய் இருக்கிறது.
அசோகமித்திரனின் குவிமையம் வெளிச்சமிடுவதுதான், அதை அவர் பலவகைகளில் நிகழ்த்துகிறார். நம் அன்றாட வாழ்வின் அற்ப சந்தோஷங்களில், அச்சங்களில், ஏமாற்றங்களில் அவர் ஒளியூட்டுகிறார். ஒரு சிறு நிகழ்ச்சி மனிதர்களைப் பற்றி நிறைய சொல்கிறது. அவரது கதைகளில் ஒன்றில், கையில் ஒரு பைசா இல்லாத ஒருவன், இருபத்தைந்து பைசா கடன் கேட்க தன் நண்பன் வீட்டுக்குச் செல்கிறான். அந்தக் காலத்தில் பஸ் டிக்கெட்டின் விலை அது. அவன் தன் நண்பன் வீட்டுக்கு வந்ததும்தான் தெரிகிறது, அவன் வெளியே எங்கோ போயிருக்கிறான் என்பது. அவனது மனைவி காய்கறிக்காரனிடம் ஏதோ வாங்கிக் கொண்டிருக்கிறாள்- அவனுக்கு அவள் பணம் கொடுக்கும்போது ஒரு இருபத்தைந்து பைசா கீழே விழுந்து விடுகிறது, அவள் அதைக் குனிந்து எடுத்து வைத்துக் கொள்கிறாள். அவன் தன் வீட்டுக்குத் திரும்புகிறான். கதை முடிகிறது. அந்தப் பெண்ணின் கையிலிருந்து விழும் இருபத்தைந்து பைசாவில்தான் கதை இருக்கிறது. அவனுக்கு அது கிடைத்தால் போதும், ஆனால் அதை அவன் வாய்விட்டு நண்பனின் மனைவியிடம் கேட்க முடியாது. கதை நம் உள்ளத்தில் தொடர்ந்து விரிகிறது.
இதுதான் அசோகமித்திரனின் தனித்தன்மை. அவரது கதைகள் நம்முள் நிலை கொள்கின்றன, நினைவை விட்டு நீங்க மறுக்கின்றன. “புண் உமிழ் குருதி” என்ற கதையில் வருவது போல், அவை நம்முள் ரத்தம் சுரக்கின்றன. இப்போது சொன்ன கதையும்கூட மானுட நிலையை அருமையாக விவரிக்கிறது. உண்மை பிடி கொடுப்பதில்லை. எப்போதும் சந்தேகம் தீர்வதில்லை, முழு உண்மை வசப்படுவதில்லை. ஒரு பெயிண்டர், ஏழை, பஸ் ஒன்றில் பயணிக்கிறான். அங்கு ஒரு முதியவர் அவனிடம் பரிவுடன் பேசுகிறார். பஸ்ஸை விட்டு கீழே இறங்கியதும்தான் அந்த பெயிண்டருக்கு தன் பாக்கெட்டில் இருந்த பணம் திருட்டு போயிருப்பது தெரிகிறது. முதியவர்தான் தன்னிடம் திருடியிருக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்கிறான். பின்னொரு நாள் எதிர்ப்படும் அந்த முதியவரை வழிமறித்து குற்றம் சாட்டவும் செய்கிறான். ஆனால் அந்த முதியவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார். பெயிண்டர் குழம்பிப் போகிறான். எது உண்மை, அவனது மனக்காயம் ஆறுவதாயில்லை. இந்தக் கதையைப் படித்து முடித்ததும் நம்மால் நம் வாழ்வை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. நம் வாழ்வில் நிறைய விஷயங்கள் சந்தேகங்களால் செலுத்தப்பட்டிருக்கின்றன. உண்மை என்ன என்று தெரியாமல், ஏதோ ஒரு சந்தேகத்தில், அந்த பெயிண்டரைப் போல் நாமும் நடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் இப்படிதான் வாழ்ந்தாக வேண்டும். போர்சுகீசிய கவிஞர் பெசோவா சொல்கிறார், “ஒரு மனிதன் சொல்வது, வெளிப்படுத்துவது எல்லாமே முழுமையாய் அழிக்கப்பட்ட பிரதியின் விளிம்பில் எழுதப்பட்ட குறிப்பே. குறிப்பில் இருப்பதைக் கொண்டு பிரதியில் என்ன இருந்திருக்கும் என்பதன் சாரத்தை நாம் பெற முடியும், ஆனால் எப்போதும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது, அர்த்தங்களின் சாத்தியங்கள் பல”. இந்தக் கதையை பெசோவாவின் மேற்கோள் கச்சிதமாய் விவரிக்கிறது.
அசோகமித்திரன் சிறு நிகழ்வுகளின் கவிஞன் மட்டுமல்ல. சில கதைகளில், ஒரு சிறு நிகழ்வில் முழு வாழ்வே கண்முன் விரிகிறது. ‘தொப்பி’ கதையில் தன் அப்பா அவமானப்படுத்தப்பட்ட இடத்துக்கு ஒருவன் வருகிறான். அப்போது அவன் சிறுவனாக இருந்தான் என்றாலும் அப்பாவுக்கு ஆதரவாக ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமை அவன் இதயத்தைப் பிணித்துக் கொண்டிருக்கிறது. கதைச் சூழலும் மொழியும் எனக்கு ரூல்ஃபோவையும் மாய யதார்த்த எழுத்தையும் நினைவுபடுத்தின. இந்தக் கதை மாய யதார்த்த வகை இல்லைதான், ஆனால் ரூல்ஃபோவைப் படிக்கும்போது உங்கள் அனுபவம் எப்படியிருக்கிறதோ அதற்கு மிக நெருக்கமான அனுபவத்தை இந்தக் கதை தருகிறது. நம் வாழ்வின் முக்கியமான மற்றொரு இயல்பை இந்தக் கதை வெளிச்சமிடுகிறது. நாம் அனைவரும் ஆறா வடுவொன்றோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சரியான பதில் அளிக்க முடியாத ஒரு அவமானம். நம் உயிரைப் பிணிக்கின்றது, முடிவில் நாம் யார் என்பதையும் தீர்மானிக்கின்றது.
“பாவம் டல்பதடோ” கதையும் இப்படிதான். மாயத்தன்மை கொண்ட ஒரு பின்புலம். தன் மகளின் இழப்பை எதிர்கொள்ள முடியாத ஒரு முதியவரின் தவிப்பு. நேரடியான கதையாகவே வாசிக்க முடியும், ஆனால் நான் இதை ஒரு மிகுகற்பனைக் கதையாக வாசிக்க விரும்புகிறேன். இத்தனையும் நிஜமாகவே நடந்ததா, அல்லது நிம்மதி பெற முடியாத ஒருவர் அழிவுக்கெல்லாம் தன்னையே குற்றம் சொல்லிக் கொண்டு ஆறுதல் அடைகிறாரா? இந்தக் குறுநாவல் மனதைத் தடுமாறச் செய்யும் ஒன்று, முன் சொன்னது போல், நம்முள் குருதி சுரக்கச் செய்கிறது. இழப்பை வாசகனாலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வாழ்வுக்கும் சாவுக்கும் உரிய அபத்தம் நம்மைத் தாக்குகிறது – எத்தனை செய்து என்ன சாதித்து என்ன, நம் உணர்ச்சிகள் ஒரு சிலரை மட்டுமே சார்ந்து இருக்கின்றன. அவர்களில் ஒருவரை இழந்தாலும் அதிலிருந்து மீள முடிவதில்லை.
அசோகமித்திரனை அபத்தங்களின் கவிஞன் என்றும் சொல்லலாம். ஏறத்தாழ நிஹிலிசம் என்றே சொல்லப்படக்கூடிய அளவில் ‘பயணம்’ போன்ற கதைகள் வாழ்வின் பொருளையும் நோக்கத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றன. யோகியும், வழிபாடுகுரியவருமாய் இருந்த ஒரு ஆன்மீக குருவின் வாழ்வு அபத்தமான வகையில் முடிவுக்கு வருவது, வாழ்க்கையில் உள்ள எல்லாவற்றையும் குறித்து நம்மைச் சிந்திக்கச் செய்கிறது. ‘மணல்’ கதையில் அம்மா திடீரென்று இறந்து போவது சரோஜினி வாழ்வை புரட்டிப் போடுகிறது. ‘இன்னும் சில நாட்கள்’ கதையில் சாமிநாதனின் கதி, ‘மாலதி’ குறுநாவலில் மாலதியின் வாழ்க்கை, பெற்ற குழந்தையின் திருமணத்துக்கு முந்தைய நாள் கணவன் காணாமல் போனபின் அவனது மனைவி வாழும் வாழ்க்கை, எல்லாமே மானுட வாழ்வின் அபத்தங்களைச் சுட்டுகின்றன. யாராலும் தம் விதியை மாற்ற முடிவதில்லை. ஆனால் அசோகமித்திரன் விதி வலியது என்ற நம்பிக்கை கொண்டவரல்ல. அவரது பாத்திரங்கள், சரோஜினியும் மாலதியும் தம் சூழலுக்கு எதிராய் போராடுகின்றனர், அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் அதுவல்ல அசோகமித்திரனின் அக்கறை. வாழ்வின் தீர்மானமின்மை குறித்து நாம் அறியாதிருத்தல், அதுதான் அவரது மையக் கவலை.
அசோகமித்திரனின் படைப்புகளில் பெரும்பாலானவற்றில் கடவுள் இல்லை. அவர் சமயம் பற்றியோ தெய்வநம்பிக்கை பற்றியோ அதிகம் பேசியதில்லை. அது அவரது மைய அக்கறையாக இருந்ததில்லை. சிக்கலான சூழ்நிலைகளில் அகப்பட்டுக் கொள்ளும் பாத்திரங்களைக் காப்பாற்ற கடவுளோ தெய்வ நம்பிக்கையோ கை கொடுப்பதில்லை. மாறாய், அவர் எல்லாவாற்றையும் தர்க்கப்பூர்வமாய் காண்கிறார். அவரது கூர்மையான பார்வையில் கடவுளின் தேவையில்லை. அவர் மனிதர்களை மனிதர்களாய் பார்த்தார். அவர்களை மறைக்கும் அடையாளங்களை அகற்றி அவர்களின் மானுடத்தை வெளிச்ச்சமிட்டார். அதனால்தான் வேலை நியமன உத்தரவு பெற்ற இஸ்லாமியர், லாரி சக்கர ட்யூப்களில் காலணி அணிந்து சாலை போடும் தொழிலாளி, தன் பணத்தை இழக்கும் பெயிண்டர்- யாராக இருந்தாலும் நம் உணர்வுகளைத் தொடுகிறார்கள். அவர்கள் உண்மையாய் இருப்பது அசோகமித்திரன் அவர்களைச் சாதாரண மனிதர்களாய் காட்டுவதால்தான். அடையாளங்களால் பிரிந்து நிற்கும் மனிதர்களாய் அவர்களை பார்க்கிறார்.
இந்த மானுட நேயம்தான் அசோகமித்திரனை குறியீடுகளுக்கு அப்பால் பார்க்கச் செய்கிறது. ஒரு சிறுகதையில், மணப்பெண் தான் காதலித்தவனைத் திருமணம் செய்து கொள்ளும் நாளன்று தன் முடிவு சரியானதுதானா என்று மீண்டும் தன்னைக் கேட்டுக் கொள்கிறாள். எது மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்க வேண்டுமோ, அது அந்த நாளைய நிகழ்வுகளைத் தொடர்ந்து சுய-ஐயங்களுக்கான கணமாக மாறுவதை அசோகமித்திரன் சித்தரிக்கிறார். இது போன்றதுதான் முதல் முறையாக நடிக்கும் நடிகை பற்றிய கதையும். நடிகையில் அம்மாவைக் கவனிக்கிறார் அசோகமித்திரன், திரையுலகத்தின் அபத்தங்கள் குறித்து அவர் வருந்துவதாய் கதை முடிகிறது.
மொழிபெயர்க்கப்பட்ட அசோகமித்திரன் சிறுகதைகள் தொகுப்பின் முன்னுரையில் பால் சக்காரியா, அசோகமித்திரன் கதையின் பெண் பாத்திரங்கள் குறித்து எழுதுகிறார். பெண்கள்பால் அசோகமித்திரனுக்கு உள்ள பரிவு மிகப் பெரியது. அவர்கள் நிலையை அவர் உணர்ந்திருக்கிறார், ஆணைவிட பெண்ணிடமே சமூகம் தன் குரூர முகத்தைக் காட்டுகிறது. புரிதலால் ஒத்திசைவு ஏற்படுகிறது, இந்த ஒத்திசைவுதான் பாத்திரங்களின் போக்கைத் தீர்மானிக்கிறது. அசோகமித்திரனின் கருணை கடல் கடந்து, அமெரிக்காவையும் அணைத்துக் கொள்கிறது- அவரது ‘ஒற்றன்’ நாவலில் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பெண்கள் புரிந்துணர்வுடன் விவரிக்கப்படுகின்றனர்.
புரிந்துணர்வின் மறுபக்கமாக இன்னொன்று சொல்லலாம் – அசோகமித்திரனின் புரிந்துணர்வு காரணமாகவே அவர் எதையும் காவியத்தன்மை கொண்ட கதையாகப் பார்ப்பதில்லை. ஹைதராபாத் மாகாணத்தில் இந்திய சுதந்திரத்தால் ஏற்பட்ட விளைவுகள் ஒரு காவியத்துக்கு உரிய அத்தனை தன்மைகளும் கொண்டவை. இந்து-முஸ்லிம் பிரிவினை, கொலைகார ரஜாக்கர் இயக்கம், நிஜாமின் சரணாகதி, அதைத் தொடர்ந்து இந்து-முஸ்லிம் கலவரங்கள். இது போன்ற ஒரு களம் பல எழுத்தாளர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கும். ஆனால் அசோகமித்திரன், தான் இப்போது வரலாற்றின் அங்கமாய் இருப்பதை அறியாத ஒரு சிறுவனின் பார்வையில் வரலாற்று மாற்றங்களை விவரிக்கிறார். ‘பதினெட்டாம் அட்சக்கோடு’ நிச்சயமாக அசோகமித்திரனின் சிறந்த நாவல்தான். இது போன்ற கதைகளை கொந்தளிப்புடனும் சார்புடனும் அணுகும் பிற நாவல்கள் போலில்லாது பதினெட்டாம் அட்சக்கோட்டில் வெளிப்படும் கருணையே அதைத் தனித்துக் காட்டுகிறது. இந்த நாவலின் இறுதிக் கட்டம் மிகவும் உக்கிரமானது. இங்கு இந்தக்க் கதையின் நாயகன் இளம்பருவத்தைக் கடந்து ஒரு முழு ஆணாய் மனதளவில் வளர்ந்து தன்னைச் சுற்றியுள்ள கொடூரத்தை திடீரென்று புரிந்து கொள்கிறான். வெறுப்பு உமிழ்பவர்கள் அனைவரும் படித்தாக வேண்டிய நாவல் இது, குறிப்பாக இதன் இறுதி பக்கங்கள். பிரிவினை மரணம், அழிவு, நம் மானுடத்தின் இழப்பு என்று தீயவைக்கே கொண்டு செல்கிறது. அசோகமித்திரன் இதை மென்மையான குரலில் சொல்கிறார், ஆனால் அது நம்முள் எதிரொலிக்கிறது. அசோகமித்திரனை வாசித்தும் பிறரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு, இன்னும் மேன்மையான மனிதர்களாய் நாம் மாறவில்லை என்றால் நம்மிடம் ஏதோ குறையிருக்கிறது என்றுதான் பொருள்.
அசோகமித்திரனின் படைப்புகளை உளவியல் ரீதியாகச் சித்திரித்திருக்கும் ஆழமான கட்டுரை. கட்டுரையாளருக்குப் பாராட்டுக்கள். “இந்திய இலக்கியத்தில் ’சாமானியனின் அறப்பிரக்ஞை’ என்ற இந்த அம்சம் அசோகமித்திரன் ஆக்கங்களில் வெளிவந்த அளவுக்கு நுட்பமும் தீவிரமுமாக எவர் ஆக்கத்திலும் வெளிப்பட்டதில்லை” என்று ஜெயமொகன் வியந்து பாராட்டும் ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ இன்னும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
-இராய செல்லப்பா நியூஜெர்சி
Great expression..Well done..Write more!
தெளிவான தீர்க்கமான புரிதலுடன் கூடிய அஞ்சலி
மிக அருமையான அலசல்! பகிர்வுக்கு நன்றி.