முன்னிருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பிய டிரைவர், “சார் நீங்க சொன்ன எடம் வந்துட்டு” என்றார்.
நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு லாலா கடையும் அதற்கடுத்து கல்யாணி காபி கடையும் இருந்ததாக ஞாபகம். மாலை நாலு மணி ஆகவும் லாலா கடை அல்வாவுக்கும் கலையணி கடை உளுந்த வடைக்கும் கூட்டம் வரிசை கட்டி நிற்கும். எதிர் வரிசையில் இருந்த முஸ்தபா சாப்பாடு கடையின் சால்னாவின் ருசி இன்றும் என்னால் உணர முடிகிறது. அத்தனை சுவை. இன்று எல்லாமே மாறியிருந்தன. இருபது வருடங்களுக்கு முன் பார்த்திருந்த எதுவுமே கண்ணில் படவில்லை.
காரின் பின்னிருக்கையில் மனைவியும் மகனும் மகளும் உறங்கிக் கொண்டிருக்க, “சரி கார அந்த கட முன்னாடி விடுங்க நா போயி கேட்டுட்டு வந்துர்றேன்” என்று சொல்ல, அவரும் அதுபோலவே செய்தார்.
“அண்ணாச்சி இங்க காந்தி ஆசாரின்னு?…” நான் கேட்டு முடிப்பதற்குள், “ஓ அவுகளா, அவுகெல்லாம் இங்க இருந்து காலி பண்ணி வருசம் என்னாச்சு?” என்று சொல்லிவிட்டுத்தான் வைத்திருந்த பழைய புத்தகங்களை எடை போடுவதில் மும்முரமானார் கடைக்காரர்.
“எங்க இருக்காருன்னு….?”
“அந்த வெவரம் தெரியல”
“இல்ல யார்ட்ட கேட்டா?”
“நீங்க ஒன்னு பண்ணுங்க. இந்தானிக்கு மேக்க பாக்க ஒரு பர்லாங்கு போனா வலது பக்கம் ஒரு பாங்கு வரும். பாண்டியன் கிராம பாங்கு. அங்க போயி அப்ரைசர் தங்கவேல்னு ஒருத்தர் இருப்பாரு, அவரப் புடிங்க, வெவரம் சொல்லுவாரு” என்றார்.
“சரி அண்ணாச்சி, ரொம்ப நன்றி” என்று சொல்லிவிட்டு காரில் அந்த பாங்கை நோக்கிச் சென்றோம்.
அன்று திங்கள் கிழமை என்பதால் பாங்க் கூட்டமாகஇருந்தது. உள்ளே சென்ற நான் அங்கு நின்று கொண்டிருந்தவரிடம், “இங்க அப்ரைசர் தங்கவேல்னு……?” என்று கேட்கத் தொடங்க, “அவரு உள்ளதான் இருக்காரு, நீரு வரிசையில வாரும். இங்க நிக்கிறவனுவெல்லாம் என்ன கேனப் பயலுவலா? நாங்க எல்லாம் அவரப் பாக்கத்தான் நிக்கோம்” என்று கோபமான பதில் வந்தது. நான் வந்த நோக்கத்தைத் தவறுதலாகப் புரிந்து கொண்டிருக்கிறார். இனியும் அவரிடம் கேட்டால் சரி வராது என்று நினைத்துக் கொண்டு, நேராக மானேஜரிடம் சென்று நான் வந்த நோக்கத்தைச் சொல்லி, ஒரு இரண்டு நிமிடம் அவரைப் பார்த்துவிட்டு போய் விடுகிறேன், என்று அவரைச் சந்திக்க அனுமதிகேட்டேன்.
“என்னய்யா நீங்க? ஒங்களோட ஒரே ரோதனையாப் போச்சு. பேண்டு சட்டைய மாட்டீட்டு காலையிலேயே கூட்ட நேரத்துல வந்து படுத்துறீங்க. சரி அசலூருன்னு வேற சொல்லீட்டீங்க, உக்காருங்க வரச் சொல்றேன்” என்று சொல்லி எழுந்து சென்றார் மானேஜர். சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியை தற்செயலாகப் பார்த்தேன். நான் முதலில் பேசியவர் என்னை முறைத்துக் கொண்டிருந்தார்.
சில நிமிடங்களில் வெள்ளை வேஷ்டி, வெள்ளைச் சட்டை, நெற்றியில் பட்டை சகிதமாக வந்தவர், “என்ன சார் வேணும்?” என்று கேட்க, “இல்ல தங்கவேல்….”
“நாந்தான். என்னன்னு சொல்லுங்க? கூட்ட நேரத்துல டயத்த வீணடிக்காதீங்க” என்றார் கனத்த குரலில்.
“இல்ல. காந்தி ஆசாரின்னு?”
“ஆமா அவருக்கென்ன?”
“இல்ல அவருக்கு ஒன்னுமில்ல. அவரப் பாக்கணும் அதான்” என்றேன் தயக்கமாக.
“அவரப் பாக்கணும்னா நேராப் போயி பாக்க வேண்டியதான? இங்க பாங்க்ல வந்து?” என்று அவர் முடிப்பதற்குள் இம்முறை நான் முந்திக் கொண்டேன்.
“அவர் அட்ரஸ் வேணும்”
“அட்ரசா அது கொஞ்சம்……” கண்ணை மூடிக் கொண்டே கழுத்தை சாய்த்து நெற்றியை தடவியவாறே “எதுல வந்துருக்கீங்க?” என்று கேட்டார்.
“கார்ல” என்றதும் மூடியிருந்த கண்ணைத் திறந்து கழுத்தை மேலும் சாய்த்து வெளியில் பார்த்தார். கார் நிற்பதை உறுதி செய்த பின்னர், “பையன அனுப்பி விடுறேன். வீட்டக் காமிப்பான்,” என்று சொல்லிவிட்டுச் சென்றவர் சட்டெனத் திரும்பி, “ஆமா நீங்க?” என்று கேட்டார். “அவருக்கு வேண்டப்பட்டவன் தான்” என்று சொல்லிவிட்டு அவர் அனுப்பி வைத்த பையனை அழைத்துக் கொண்டு காரில் ஏறினேன்.
டிரைவரை அந்தச் சிறுவன் வழி நடத்த கார் ஒவ்வொரு தெருவாக சென்று கொண்டிருந்தது. மனைவியும் மகளும் விழித்திருந்தனர். மகன் மட்டும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். ஒவ்வொரு சந்தாகச் சென்ற கார் கடைசியாக ஒரு குடிசைப் பகுதிக்குள் நுழைந்தது. “அண்ணே, அண்ணே, இங்க நிப்பாட்டுங்க, இதான் வீடு” என்று பையன் சொல்ல கார் நின்றது. “சரி சார் நா வாரேன். வேல கெடக்கு” என்றான் அவன். “தம்பி நில்லுப்பா, கார்லயே கொண்டு போயி விட்டுருவாரு,” என்று சொல்லி டிரைவரிடம் இருநூறு ரூபாய் கொடுத்து, “அவனுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்துட்டு நீங்களும் அப்படியே சாப்பிட்டு வந்துருங்க,” என்றேன். வீடு சரிதானா? அவரு இருப்பாரா? ஒருவித தயக்கத்துடன் கதவைத் தட்டினேன்.
“யாரது?இந்நேரத்துல?” என்ற குரல் கேட்கவும் வீடு சரிதான் என்று உறுதி செய்து கொண்டேன். பெரியவர் ஒருவர் வந்து கதவைத் திறந்தார். வந்தவர் கண்களைச் சுருக்கி வலது கையை நெற்றியில் வைத்தவாறே ஒரு நிமிடம் ஒருவர் மாற்றி ஒருவராக எங்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின், “யாரு?” என்று கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் “மொதல்ல உள்ள வாங்க புள்ளைகள வச்சிட்டு வெளிய நின்னுட்டு,” என்று சொல்லி எங்களை உள்ளே அழைத்தவர், மறுபடியும் “யாருன்னு தெரியலையே” என்றார் நாடியில் கை வைத்து தேய்த்தவாறே. “அண்ணாச்சி, நான் பொன்ராசு மகன் சக்தி” என்று சொல்லவும் “எந்த பொன்ராசு? புடிபடலையே” என்றார் தாடியைத் தடவிக் கொண்டே. “பொன்ராசு, பார்வதி, பஜார்ல மளிகை கடை வச்சிருந்தாங்களே” என்று நான் சொல்லி முடிக்கவும், “ஏ நம்ம நாடார் மவனா? எப்படிடே இருக்க? வருசம் என்னாச்சு? உங்க அப்பா அம்மா எல்லாரும் சௌக்யமாடே? நல்லா இருக்காகளா? எங்கடே இருக்கீக? இத்தன வருசம் தகவல் ஒன்னும் காணமேடே?” என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்க ஆரம்பித்தார், ஒருவித சந்தோசமும் உற்சாகமும் கலந்த குரலில். “எல்லாரும் நல்லா இருக்கோம்” என்று சொன்னேன்.
“இந்தா இருங்க வாரேன்” என்று சொன்னவர் உள்ளிருந்து ஒரு பாயை எடுத்து தரையில் விரித்து எங்களை அமரச் சொன்னார். நாங்கள் அமரவும் அவர் அருகில் கிடந்த ஒரு இரும்பு சேரில் அமர்ந்தார், “கீழ உக்காந்தா குறுக்கு புடிக்கி” என்று சொல்லிக் கொண்டே. அவர் அணிந்திருந்த பூணூல் கடந்த வாரம் ஆவணி அவிட்டம் வந்து சென்றதை நினைவூட்டியது. அவர் காலில் ஏதோ அடிபட்டு மஞ்சள் வைத்து வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்தது. கண்டிப்பாக அது வைத்தியரோ டாக்டரோ போட்ட கட்டு அல்ல என்பதை என்னால் உணர முடிந்தது.
“இது யாரு? உன் பொண்டாட்டியும் புள்ளைகளுமாடே?” என்று கேட்டார்.
“ஆமா அண்ணாச்சி இது என் பொண்டாட்டி கௌரி. இது பசங்க. மூத்தவ சாலினி, இளையவன் சஞ்சய்” என்றேன். மனைவி வணக்கம் சொல்ல அவரும் பதிலுக்கு வணக்கம் சொல்லிக் கொண்டார். “இப்போ பாம்பேல இருக்கோம். இவளுக்கும் பாம்பே தான். மராத்தி. தமிழ் தெரியாது” என்றேன். “ஏ பெரிய ஆளுடே நீ. பம்பாய்க்காரிய புடிச்சிட்டியா? கழுதை எதுன்னா என்ன? தமிழா இருந்தா என்ன மராத்தியா இருந்தா என்ன? எல்லாம் மனுசங்க தான?” என்றார் சிரித்துக் கொண்டே. இருபது வருடங்களுக்கு முன்பிருந்த அதே எடக்கு பேசும் குணம் இன்றும் குறையவில்லை. “வீட்ல தமிழா? இல்ல….?” என்று அவர் கேட்க வரும் கேள்வி புரிந்துவிட, “இல்ல இங்கிலீஷ். அப்ப அப்ப மராத்தி” என்றேன். சிரித்துக் கொண்டவர் “ஏ பேரப் புள்ளைகளா தாத்தாவத் தெரியுமா? உங்க அப்பன் ஏதாச்சும் சொல்லிருக்கானா? ஓல்ட் மேன்,தெரியுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். குழந்தைகள் இருவரும் என் முகத்தைப் பார்க்கத் தொடங்கினர். நான் “தாத்தா – கிரான்ட் பா” என்றேன். அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.
“சரி உங்க அப்பா அம்மா எங்க இருக்காக? எப்படி இருக்காக ஒன்னும் சொல்ல மாட்டிக்கியே?” என்று கேட்கவும், “எல்லாரும் பாம்பேல தான் இருக்கோம். அவங்க நல்லா இருக்காங்க” என்றேன். “ரொம்ப சந்தோசம்டே கேக்குறதுக்கே சந்தோசமா இருக்கு” என்றார். “சரி இங்கனையே இருங்க இந்தா வாரேன்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார். பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது. நான் அமர்ந்திருந்தவாறே வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். எழுந்து சென்று சுற்றிப் பார்க்கும் அளவுக்கு வீடு பெரிதாக இல்லை. ஒரு பெரிய ஹால். அதன் நடுவே ஒரு கயிற்றுக் கட்டில், அருகில் எச்சில் துப்புவதற்கு மணல் நிரப்பிய ஒரு டப்பா. அதைச் சுற்றி அணைக்கப்பட்ட பீடித் துண்டுகள். ஹாலுக்கு பக்கவாட்டில் ஒரு சிறிய அறை. கதவு சாத்தி இருந்தது. ஹாலின் ஒரு மூலையில் உமி மூட்டை ஒன்றும் கரி மூட்டை ஒன்றும் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. அதனருகே ஒரு உமி லோடு, பட்டறைக் கல், தராசுப் பெட்டி, சுத்தியல் என சில பட்டறை சாமான்கள். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேறு ஒன்றும் அங்கு இல்லை.
ஒன்றும் புரியாமல் அமைதியாக அமர்ந்திருந்த மனைவியிடம் அவர் யாரென்பதை விளக்கத் தொடங்கினேன், மராத்தியில்.
“அண்ணாச்சி பேரு காந்தி ஆசாரி. உண்மையான பேரு பட்டவராயன். காந்தி மீது அவ்வளவு பாசம். அதுனால அவர் பெயரையும் காந்தின்னு மாத்திக்கிட்டாரு. தீவிர காங்கிரஸ்காரர். வருசா வருசம் சுதந்திர தினத்துக்கு கொடி ஏத்தி வெடி போட்டு முட்டாய் வாங்கித் தருவாரு. போடுறது எப்போதும் கதர் ஜிப்பாதான். அப்போல்லாம் நகை செய்யணும்னா ஊர்ல இவர விட்டா வேற ஆள் கிடையாது. இந்த ஊர்ல மட்டும் இல்ல, சுத்தியுள்ள எட்டு ஊருக்கும் இவரு ஒருத்தர்தான். பேருக்கு ஏத்த மாதிரி, செய்யிற தொழிலுக்கு ஏத்த மாதிரி, மனசும் கையும் அவ்வளவு சுத்தம். கைராசிக்காரர். அன்னைக்கு மட்டும் அண்ணாச்சி ஊர்ல இல்லைன்னா ஒருத்தருக்கும் கல்யாணம் முடிஞ்சிருக்காது. அண்ணாச்சி வந்து தாலிக்கு பொன் உருக்குனாத்தான் கல்யாணப் பேச்சே. மண்டபம் கிடைக்கோ இல்லையோ அண்ணாச்சிட்ட நாள் கிடைக்கணும். அந்தளவுக்கு பரபரப்பா இருந்தாரு. நம்ம பலசரக்கடைக்கு எதுத்த மாதிரிதான் அண்ணாச்சியோட பட்டறையும். பலசரக்கடைக்குப் போட்டியா அண்ணாச்சி பட்டறையில ஆள் நிக்கும். சனமெல்லாம் மூட்டையும் முடிச்சுமா வந்து நிக்குங்க, அண்ணாச்சி பட்டறை வாசல்ல. ஒன்னு நாளைக்கு எம்பொண்ணுக்கு கல்யாணங்கும், ஒன்னு மறுநாள் மகளுக்கு சடங்குங்கும், ஒன்னு அடுத்த வாரம் காது குத்துங்கும்… இப்படி வருச கட்டி நிக்குங்க. எனக்கு வெவரம் தெரிஞ்சு அண்ணாச்சி வாக்கு தவறினதில்ல. சொன்னா சொன்னபடி செய்வாரு. என்ன ஒரு சில நேரத்துல முன்னப் பின்ன ஆகும் ஆனா தங்கத்துல எந்தக் குறையும் இருக்காது.
“காலைல எந்திச்சு, குளிச்சு, நெத்தி நிறையா பட்ட போட்டு, ஒரு சில்வர் பிளஸ் பைக் வச்சிருந்தாரு, அதுலதான் பட்டறைக்கு வருவாரு. வரும்போதே கூட்டம் வரிசை கட்டி நிக்கும். அந்தளவுக்கு கிராக்கி உண்டு அண்ணாச்சிக்கு. இவரு வீட்டம்மா லட்சுமி அக்கா. அந்தக்கா அதுக்கு மேல. இவரு தங்கம்னா அவுக சொக்கத் தங்கம். ஜாடிக்கேத்த மூடி. எப்பவும் மஞ்ச தேச்சு குளிச்சு,நெத்தி நிறைய குங்குமப் பொட்டு வச்சு மங்களகரமா இருக்கும். இவ்வளத்தையும் குடுத்த ஆண்டவன் பாவம் புள்ளை ஒன்னுகூட கொடுக்கல. பாவம் அந்தக்கா அதுக்காக போவாத கோவில் இல்ல. ஆனா நம்மாளு எதுக்கும் கவலைப்பட மாட்டாரு. அஞ்ச மாட்டாரு. நல்லா ஞாபகம் இருக்கு, ஒருநாள் நான் கடையில இருந்தேன். அப்பா விளையாட்டுக்கு அண்ணாச்சிட்ட கேட்டாரு, “புள்ளைக ஒன்னும் இல்ல, இவ்ளோ சொத்து சுகம் இருக்கு, என்ன பண்ணப் போறீகன்னு?” அதுக்கு அண்ணாச்சி சொன்னாரு, “புள்ள இல்லன்னா என்னையா? பெரிய புள்ள? எனக்கு அப்புறம் எம்பொண்டாட்டி அனுபவிப்பா, அவளுக்கு அப்புறம் ஏதாவது அனாத ஆசிரமத்துக்கு எழுதி வைப்பேன். அங்க உள்ளதுக அனுபவிச்சிட்டு போவுது” என்று.
“அப்போல்லாம் அண்ணாச்சி வீட்ல அவ்ளோ வசதி. நாங்க எல்லாரும் அவரு வீட்லதான் போயிக் கெடப்போம். அந்த அக்கா எங்கள அப்படி பாத்துக்கும். விதவிதமா சாப்பிடுறதுக்கு செஞ்சு தரும். விடிஞ்சதுல இருந்து அடையிற வரைக்கும் அவுக வீட்லதான். அப்போ அண்ணாச்சி வீடு பெரிய தெருவுல இருந்துச்சு. எங்க வீடுந்தான். அண்ணாச்சி வீடே இருக்கும் ஒரு பெரிய கல்யாண மண்டபம் பெருசு. அப்படி இருந்தவரு.”
திடீரென்று சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தேன். அண்ணாச்சி. கையில் ஒரு தட்டு அதில் நான்கு கிளாசுகள். “என்னம்மா உம்புருசன் உன்ன பயம்புருத்தீட்டு இருக்கானா? அவன் சொன்னதெல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தேன்” அவளுக்கு தமிழ் தெரியாது என்பதை அவர் மறந்திருந்தார். நான் ஞாபகப்படுத்தவும் “நா ஒரு கூறுகெட்டவன்டே. வயசு ஆக ஆக குண்டி மறந்து போயிருது” என்று சொல்லிக் கொண்டே காபியை நீட்டினார். விளையாடிக் கொண்டிருந்த என் குழந்தைகளிடம் “ஏ பேரப் புள்ளைகளா இங்க வாருங்க, வந்து ஒரு வாய் காப்பி குடிச்சிட்டு விளாடுங்க” என்று கூப்பிட்டார். சட்டென்று என்னிடம் “புள்ளைக இதெல்லாம் குடிக்குமாடே?” என்று கேட்டார். “என்ன அண்ணாச்சி இப்படி கேட்டீங்க? அதெல்லாம் குடிப்பாங்க” என்றேன். “இல்ல இப்ப உள்ள புள்ளைகெல்லாம் ரொம்ப சுத்தம் பாக்குமே. அதுவும் பம்பாய்ப் புள்ளைக வேற? அதான் இந்த கெழவன் போட்ட காப்பிய…….” என்று முடிப்பதற்குள், “ஐயோ அண்ணாச்சி அப்படி எல்லாம் சொல்லாதீங்க,” என்று சொல்லி ஒரு கிளாசை நான் எடுத்து, மற்ற மூன்றையும் மனைவியிடமும் குழந்தைகளிடமும் கொடுத்தேன். “ஏ பேரப் புள்ளைகளா இங்கன வாங்க, தாத்தா ஆத்தித் தாரேன்” என்று சொல்லி இரண்டு கிளாசு காபியையும் எடுத்து அருகில் கிடந்த விசிறியால் வீச ஆரம்பித்தார். நான் காபியை உறிஞ்சினேன். சீனி கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது.
காபியை குடித்து முடித்த குழந்தைகள் “daddy it’s so boring here. come lets move” என்று ஆரம்பித்தனர். “என்னடே எம்பேரப் புள்ளைக என்ன சொல்லுதுக?” என்று கேட்டார். “அவங்களுக்கு போர் அடிக்காம், அதான்” என்று இழுத்தேன். “அட இவ்ளோதானா? சரி நீ ஒன்னு பண்ணு, பொண்டாட்டி புள்ளைகள வேணா நம்மூரு கோவிலுக்குப் போயிட்டு வரச் சொல்லு. நா வேணா ஒரு ஆட்டோ சொல்லவா?” என்றார். “இல்ல அண்ணாச்சி, கார் வெளில தான் நிக்கி அதுல வேணா போயிட்டு வரச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு டிரைவருக்கு போன் செய்தேன். “கோயிலுக்கு போயிட்டு நேரா இங்க வரச் சொல்லீரு. வெளில கண்டத கழுதையும் வாங்கிச் சாப்ட்ராம, மத்தியானம் இங்கதான்” என்றார். சரி என்று தலையாட்டிவிட்டு அவர்களை காரில் ஏற்றிவிட்டு நான் மீண்டும் வீட்டிற்குள் வந்தேன்.
“அண்ணாச்சி தப்பா நெனச்சிக்காதீங்க, வருமானத்துக்கு?” என்று கேட்கவும் “அது அப்படியே ஓடுதுடே, எல்லாம் அத நம்பித்தான்” என்று பட்டறைக் கல்லை நோக்கிக் கை காண்பித்தவர் “ஏதாவது பத்தவைக்கிற வேல வரும், அதுல கிடைக்குற அஞ்சு பத்த வச்சு அப்படியே வண்டி ஓடுது. ஓடுற வரைக்கும் ஓடட்டும் பாப்போம்,” என்று சொல்லி சிரித்தார். சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு “ஆமா அக்காவ எங்கண்ணாச்சி?” என்று கேட்டேன். “அவளா இங்கதான் உள்ள தூங்கீட்டு இருக்கா,” என்று பூட்டிய அறையை நோக்கி கண்ணைக் காண்பித்தார். திரும்பிப் பார்த்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன்.
சற்று நேரத்திற்குப் பின் “என்னாச்சு நல்லாத்தான இருந்தீங்க, இப்ப எப்படி இப்படி?” என்று தயங்கியவாறே கேட்டேன்.
“இப்ப என்னடே இப்பவும் நல்லாத்தான இருக்கேன். அப்போ கையில கொஞ்சம் காசு இருந்துச்சு இப்ப இல்ல அவ்வளவுதான? காசு தான் போச்சே தவிர மானம் மரியாதை எல்லாம் அப்படித் தான்டே இருக்கு” என்றார்.
“அது சரி அண்ணாச்சி, அதான் எப்படி போச்சு?” என்று நான் இழுக்க, “அட அதுவா? எல்லாம் ஒழுங்காத்தான்டே போயிட்டு இருந்துச்சு, எப்ப ஊருக்குள்ள இந்த வெளியூர்க்காரப் பயலுவெல்லாம் நகக் கட வைக்க ஆரம்பிச்சானுவளோ அப்ப ஆரம்பிச்சதுதான் இந்தக் கேடு. கட வச்சிருக்கானுவலாம் கட, பொல்லாத கட. ஒரு பயலுக்காவது தங்கத்த ஒரசிப் பாக்கத் தெரியுமா? இல்ல ஒரசிப் பாத்து எத்தன டச்சு இருக்குன்னு சொல்லத்தான் தெரியுமா? வேண்டாம்டே, கொறஞ்சது தங்கமா பித்தளையானாவது பாக்கத் தெரியுமா? ஒரு மயிரும் தெரியாது. இவனுவெல்லாம் யாவாரம் பண்ணி? எல்லாம் இந்த நாசமாப் போற வெளம்பரம் பண்ற வேலயாக்கும். வெளம்பரம் பண்ணிப் பண்ணியே சனங்கள ஏமாத்தீட்டானுவோ. சரி, அவந்தான் அப்படி பண்றான்னா அத வாங்குற கூதி புள்ளைகளுக்காவது அறிவு வேணாம்? என்னத்தையாவது ஃப்ரியா தாராம்னா பின்னாலயே போயிர்றது. தாயோளி நேத்தைக்கு சேதாரம் இல்லன்னான், இன்னைக்கு கூலி இல்லங்கிறான், நாளைக்கு அது தங்கமே இல்லங்கப்போறான். நடக்குதா இல்லையான்னு பாரேன். பட்டாத்தான் இந்தக் கூதிபுள்ளைகளுக்கும் ஓர்ம வரும்.
“என்னமோ ஹால் மார்க்குங்கான், 916 ங்கான் எதுவா இருந்தாலும் இந்த காந்தி ஆசாரி செஞ்ச நக கிட்ட வந்து நிக்க முடியுமாடே? இல்ல நிக்க முடியுமான்னு கேக்கேன்? என்னடே ஊமையா இருக்க? வாயத் தொறந்து சொல்லேன். ஒத்த காத்த அறுத்து வச்சிர்றேன் எவனாச்சும் குத்தம் கண்டு புடிச்சாம்னா. தங்கங்கிறது வீட்ல தங்கணும்டே. அதுக்கு ஒரு கை ராசி வேணும். என்னமோ இந்த பான்சி கடையில போயி வாங்குற மாதிரி வாங்குதுக இப்போல்லாம், அதான் எல்லா நகையும் பாங்குல இருக்கு. ஒரு மூதியாது ரோட்ல நக போட்டு போதா பாரு? அப்போல்லாம் பொம்பளைக வெளில வந்தாலே சும்மா தக தகன்னு மின்னுங்க. ஏன்னா நக வீட்ல தங்குச்சு. நாடு எங்கயோ போயிட்டு இருக்கு. அதுக்கு ஒரு அழிவு எப்போ வரும்னு தெரியல. ஒங்க அப்பாட்டப் போயி கேளு நம்ம கை ராசிய. சொல்லுவாரு. ஒங்க அம்மா போட்ருக்காளே தாலி அது நா செஞ்சதுதான். வருசம் என்னாச்சு? இன்னும் அப்படியே கெடக்கும் பாரு” என்றார்.
“எங்க அம்மா தாலிய செஞ்சது மட்டும் நீங்க இல்ல, அது இப்போ அவங்க கழுத்துல கெடக்குறதுக்கே நீங்க தான் காரணம்” என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
பேசிக் கொண்டிருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. கோவிலுக்குச் சென்ற மனைவியும் குழந்தைகளும் திரும்பி வர, மணி மதியம் ஒன்றாகி இருந்தது. குழந்தைகள் உள்ளே வரவும் “எம் பேரப்புள்ளைகளுக்கு பசிக்கா?” என்று கேட்டார். “சரி நீங்க செத்த இருங்க நா போயி நம்ம ஐயர் கடேல சாப்பாடு வாங்கியாந்துறேன்” என்று சொல்லிவிட்டு ஒரு வயர் கூடையை கையில் எடுத்துக் கொண்டார். நான் எவ்வளவோ மறுத்தும் அவர் கேட்பதாக இல்லை. அதற்குமேல் என்னால் அவரை வற்புறுத்தவும் முடியவில்லை. வெளியில் சென்றவர் திரும்பி வந்து, “நம்ம டிரைவர் தம்பியையும் உள்ள உக்காரச் சொல்லு, அவருக்கும் சேத்து வாங்கியாந்துறேன்,” என்று சொல்லிவிட்டு, “நம்ம பேரப்புள்ளைக பிஸ்கோத்து சாப்டும்லா?” என்று கேட்டவாறே சென்றார்.
உள்ளே வந்த டிரைவர் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு “யார் சார் இவரு?” என்று கேட்டார். “சுருக்கமாச் சொல்லனும்னா நா இன்னைக்கு இந்த நெலமைல இருக்குறதுக்கு இவருதான் காரணம்” என்றேன். அவருக்குப் புரிந்திருக்காது என்று எனக்குத் தெரியும். அவர் முகமும் அவ்வாறே காட்டியது.
“இவரு பட்டறைக்கு எதுத்த கடைதான் நம்ம கடை அப்போ. நல்லா வசதியாத்தான் இருந்தோம். இவரு அளவுக்கு இல்லனாலும், ஏதோ கொஞ்சம் சுமாரா வாழ்க்கை நல்லா போயிட்டு இருந்துச்சு. தேவையில்லாம லாரி ஒன்னு வாங்குனோம். அதுல புடிச்சது சனி. ஒவ்வொன்னா வித்து வித்து கடைசியில எல்லாத்தையும் வித்துட்டோம். வீடு, லாரி, காரு, தோட்டம், கடை எல்லாத்தையும். மிஞ்சுனது எங்கம்மா கழுத்துல கிடக்குற தாலி மட்டும்தான். ஊரு பூராம் கடன். வெளியில தல காட்ட முடியல. எங்கப்பா தற்கொலை செஞ்சுக்கக்கூடப் போனாரு. கடைசியா ஒருவழியா அவரப் புடிச்சுக் காப்பாத்தி, இருக்குற கொஞ்சநஞ்சத்தையும் வித்து கடன அடச்சிட்டு, அதுக்குமேல இந்த ஊருல இருந்தா நல்லாருக்காதுன்னு ராத்திரியோட ராத்திரியா ஊரக் காலி பண்ணீட்டு போலாம்னு கெளம்புனோம். எங்க போறது எப்படி போறது ஒன்னும் தெரியாது. எங்கப்பா கையிலயும் அஞ்சு பைசா இல்ல. ரொம்ப நேரம் யோசிச்சிட்டு வேற வழியே இல்லாம எங்கம்மா தாலிய கழட்டி இவர்ட்ட விக்கலாம்னு ராத்திரி ஒரு மணிக்கு இவரு வீட்டுக் கதவத் தட்டினோம்.
“கதவத் தொறந்து உள்ள கூப்பிட்டுப் பேசுனவரு எங்கள அந்த ஏச்சு ஏசுனாரு. அந்த அக்காவும் எவ்வளவோ சொல்லுச்சு. நாங்க பிடிவாதமா இருந்ததுனால அவங்களால எங்களத் தடுக்க முடியல. ஆனா தாலிய மட்டும் வாங்கவே மாட்டேன்னு சொல்லிட்டாரு. அந்தக்கா எங்கம்மாவ சாமி ரூம்குள்ள கூட்டீட்டுப் போயி எங்கப்பாவக் கூப்ட்டு தாலிய மறுபடியும் கட்டச் சொல்லி, திருநீருபூசி கையில ரெண்டாயிரம் பணம் கொடுத்துச்சு. அண்ணாச்சி கூடவே நின்னாரு. அந்தக்கா என்ன கட்டிப்புடிச்சு அழுத்துச்சு. போம்போது அண்ணாச்சி என் சட்டப் பையில நூறு ரூபாவ திணிச்சாரு. அன்னைக்கு இந்த ஊரவிட்டுப் போனவங்கதான் தெக்கு தெச தெரியாம எங்கெல்லாமோ போயி கடைசியா பம்பாய் போயி சேந்தோம். அதுக்கடுத்து தான் வாழ்க்கை இப்படி மாறிப் போச்சே.”
நான் சொல்லி முடிக்கவும் அண்ணாச்சி வரவும் சரியாக இருந்தது. எங்களை அதே பாயில் அமரச் சொல்லி, வாங்கி வந்த சாப்பாடு பொட்டலங்களைப் பிரித்தார். மூன்று சாப்பாடுதான் இருந்தன. டிரைவருடன் சேர்த்து நாங்கள் ஐவரும் அதைப் பங்கிட்டுச் சாப்பிட்டோம். குழந்தைகளுக்கு ஒரு பிஸ்கட் பாக்கட்டும் வாங்கி வந்திருந்தார். அண்ணாச்சியோ, “எனக்குப் பசி இல்ல நா அப்பறமா சாப்பிட்டுக்கிறேன்,” என்று சொல்லிவிட்டார்.
“ஒனக்கு ஞாபகம் இருக்கா இல்லையான்னு தெரியலடே நம்ம பானு சித்திய. நம்ம வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி இருந்துச்சுகளே”. என் முகத்தைப் பார்த்து அவரே கணித்திருக்க வேண்டும் எனக்கு ஞாபகம் இல்லை என்று. “என்னப்பா ஆளு நீ? அட நம்ம மொய்தீன் பழக்கட. பஸ் ஸ்டாண்டுல இருந்ததே” என்று சொல்ல, “ஆமா ஆமா” என்று ஞாபகம் வர தலையாட்டினேன். “ஒரு மாசத்துக்கு முன்னால வந்துருந்துச்சுகடே கொழந்த குட்டிகளோட. இப்போ எங்கயோ துபாய்ல இருக்குகளாம். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்துச்சுக, பழைய கதை எல்லாம். அது மக நிசா இருக்காளே சின்ன வயசுல கிளிஞ்ச சட்டையும் பாவாடையும் தான் போட்டுட்டு வந்து நிக்கும் நம்ம வீட்ல. பாதிநாளு நம்ம வீட்லயேதான் கெடக்கும். பாவம் அந்த காலத்துல அதுக வீட்ல குடிக்க நல்ல கஞ்சி கெடையாது. மொய்தீனும் என்ன பண்ணுவான்? நாலும் பொட்ட புள்ளைகளா பெத்து வச்சிருந்தான். பேசிச் சிரிச்சிட்டு இருந்துச்சுக. கடைசி போகேல பொசுக்குன்னு அழுதுட்டுக, நாங்க கெடக்க கெடையப் பாத்துட்டு. சும்மா சொல்லப்பிடாதுடே பாசக்கார சனங்கதான். பழச ஞாபகம் வச்சு தேடி வந்துட்டுக பாரேன். என்ன இருந்தாலும் பழைய ஆளுக பாத்தியா? தாயும் புள்ளயாவுமுல்லா பழகுனோம். சொல்லச் சொல்ல கேக்காம போகேல முழுசா 50,000 ரூவாவ தூக்கி கையில திணிச்சிச்சுக. வேணாம்னு எவ்வளவோ சொல்லிப்பாத்தேன். கடைசியில அந்த சாமி படத்துக்கு முன்னால வச்சிட்டுப் போயிட்டுக. இப்படிலாம் சனங்க இருக்கறதுனால தான்டே நாட்ல இன்னும் மழை பெய்யுது” என்றார்.
சாப்பிட்டுக் கை கழுவிய பின்னர் மணி பார்த்தால் இரண்டாகி இருந்தது. உடனே புறப்பட்டால் தான் இருட்டுவதற்குள் ஊர் செல்ல முடியும் என்று எண்ணி, “அண்ணாச்சி அப்போ நாங்க கிளம்புறோம்,” என்றேன். “என்னடே சாப்ட்ட ஒடனே கெளம்புறேங்குற? சாந்தரம் வர இருந்து காப்பி கீப்பி குடிச்சிட்டுப் போறது?” என்றார். “இல்ல அண்ணாச்சி அடுத்தவாட்டி கண்டிப்பா அம்மாவையும் அப்பாவையும் கூட்டீட்டு வாரேன். அம்மா, அப்பாட்ட உங்களப் பாத்ததா சொன்னா ரொம்ப சந்தோசப்படுவாங்க” என்றேன். “அட, எனக்கும் தான்டே சந்தோசம். அடுத்தவாட்டி அம்மா அப்பாவோட நாலு நாள் இங்க தங்குற மாதிரி வாங்க” என்றார். மேலும் “பேரப்புள்ளைகளுக்குப் போர் அடிக்காத மாதிரி பாத்துக்கலாம்” என்றார்.
“சரி அண்ணாச்சி” என்று சொல்லிவிட்டு “எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று சொல்லி நாலு பேரும் அவர் காலில் விழுந்தோம். டிரைவரும் சேர்ந்து கொண்டார். “அட என்னடே இது? இதெல்லாம் எதுக்கு? நம்ம புள்ளைக எங்க இருந்தாலும் இந்த கெழவன் ஆசி உண்டுடே” என்றார். மனைவி ஓடிச் சென்று சாமி படத்தின் அருகில் இருந்த திருநீர் கிண்ணத்தை எடுத்து அவரிடம் கொடுக்க, அதிலிருந்த திருநீரை எடுத்து அனைவரின் தலையிலும் தூவி நெற்றியில் பூசி விட்டார். பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, “பிள்ளைகளுக்கு கொடுக்க ஒன்னும் இல்லயேடே” என்று சொல்லி வேஷ்டியில் முடிந்து வைத்திருந்த சில்லரைக் காசுகளை எடுத்து அதிலிருந்து ஆளுக்கு ஒரு ரூபாய் விகிதம் “தாத்தா old man poor man” என்று சொல்லிக் கொடுத்தார், சிரித்துக் கொண்டே. வாங்கிய குழந்தைகள் என் மனைவியிடம் அதைக் கொடுத்தனர்.
நாங்கள் கிளம்புவதற்காகத் தயாராக நிற்கையில் பூட்டி இருந்த அறையிலிருந்து இருமல் சத்தம் கேட்கவே, “முழிச்சிட்டா போல, அவளுக்குத்தான் கொஞ்சம் ஒடம்புக்கு முடியல. சுகரு கூடி ஒத்தக் கால எடுக்க வேண்டியதாப் போச்சு. நாலு வருசம் ஆச்சு. எல்லாம் படுக்கையிலதான். இருந்த கொஞ்ச நஞ்ச காசும் அதுலயே போச்சு. அந்த கடவுள்ட்ட என்னெல்லாமோ வேண்டுனேன். கடைசியில இப்ப வேண்டுறதெல்லாம் ஒன்னுதான். எப்படியாது எனக்கு முன்னால அவளக் கூட்டீட்டுப் போயிருன்னு. பாவம் கழுத அவளுக்கு நம்மள விட்டா வேற ஆளு கெடையாது பாத்துக்கோ. மூதிக்கு ஒன்னும் தெரியாது. நாமளாது காசு பணம் சேக்கலாட்டியும் நாலு ஆட்கள சேத்து வச்சிருக்கோம். மண்டையப் போட்ட அன்னைக்கு தூக்கிக் கொண்டு போயி போட்ருவானுவோ. அனாதையா விட்ற மாட்டானுவன்னு நெனைக்கேன். நம்பிக்கை இருக்கு. அப்படி விட்டுட்டா அது என்ன மூதி பழக்கம்?” என்று சொல்லிவிட்டு, “எம்மா… எம்மாடி கொஞ்சம் தண்ணி குடிக்கியா?” என்று கேட்டவாறே அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றார். நாங்களும் பின் தொடர்ந்தோம்.
அறையை நெருங்க நெருங்க இருமல் சத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்க, உள்ளே சென்றவர் மூடியில் ஊற்றி ஏதோ மருந்தைக் கொடுத்தார். இருமல் மருந்தாக இருக்க வேண்டும். இருமலும் குறையத் தொடங்கியது. வெளியில் நின்று கொண்டிருந்த நானும் மனைவியும் உள்ளே சென்று அவளைப் பார்த்தோம். இருபது வருடங்களுக்கு முன்பு தலை நிறைய பூவும், நெற்றி நிறைய பொட்டும், மஞ்சள் பூசிய முகமுமாய் நான் பார்த்து வளர்ந்த அதே லட்சுமி அக்கா கண்களைத் திறக்க மனமில்லாமல் படுத்துக் கிடந்தார். முறுக்குச் செயின், கல் நெக்லஸ், ரெட்டவடச் செயின் என்று நிறைந்திருந்த அவர் கழுத்தில் இப்போதுமெலிதாய் ஒரு சரடு மட்டும்தான் மிஞ்சியிருந்தது.
உருக்கமான கதை. சிறப்பான ஆக்கம்.
-இராய செல்லப்பா நியூஜெர்சி
Such an excellent articulation and regionalism. I loved it.
திருநெல்வேலி டவுன் முழுக்க இப்படி வாழ்ந்து கெட்டவர்களின் கதைகள் நிறைய இருக்கிறது..இதயம் வலிக்கிறது..!
ஜி, மனதை வருடிய மென்மையான படைப்பு… நெல்லை மண் வாசனை கமழ்ந்தது சில நேரம்…
நெல்லை வழக்காடச்சொற்களை அப்படியே இன்றும் பேசும் மக்களை நினைவூட்டியதற்கு நன்றி..
கண்களை குளமாக்கிய உயிர்ப்பான பாத்திரங்கள்.
எதார்த்தமான கதை. அழகான நெல்லைத் தமிழ். கதையைப் படித்த பிறகு மனதை என்னவோ செய்கிறது.
அருமையான கதை. காந்தி ஆசாரி யின் சாடல்கள் அனைத்தும் அப்பட்டமான
உண்மை.பழைய நாட்கள் திரும்புமா?ஏங்கவேண்டியதுதான். வாழ்த்துக்கள் வெங்கட்