ஒரு பிற்பகல் உரையாடல் – காலத்துகள்

காலத்துகள்

அவளிடமிருந்து விலகிப் படுத்தவனுக்கு மெலிதாக மூச்சிரைத்தது. உதடுகளை இறுக்கிக் கொண்டான். மேலெழும்பி அமிழும் வயிறும் மார்பும். முகத்திலிருந்து முடிகளை ஒதுக்கிவிட்டு இவனை கவனிப்பவளின் நிர்வாணம். சுவரில் இருந்த ஓவியத்தின் மீது பார்வையைச் செலுத்தினான். செம்மறி ஆட்டுக் கூட்டத்தை சிதிலமடைந்த பாலத்தின்மீது முக்காடிட்ட ஒருவன் விரட்டிக் கொண்டிருக்க, கீழே அதை கவனித்தபடி ஓநாய். அதன் அருகே சுருட்டை முடியும், பிதுங்கும் கன்னங்களும் கொண்ட ரோஸ் நிற குழந்தை, நீண்ட ஸ்கர்ட்டின் வலது பகுதியை மட்டும் முழங்கால் வரை மடித்து தூக்கியிருக்கும் பெண்- குழந்தையின் தாய்? உடலின் துடிப்பு அடங்க ஆரம்பிக்க, அவள் பக்கம் திரும்பி, ‘அது என்ன நரியா, ஓநாயா? அந்த லேடி, கொழந்தை எல்லாம் பாத்தா அமெரிக்கா, இல்ல ஈரோப் வில்லேஜ் மாதிரி இருக்கு. எங்க வாங்குனீங்க, நல்லாருக்கு, எவ்ளோ ஆச்சு’ என்றான்.

படுத்தபடி வலது தொடையை சற்றே தூக்கி முட்டி மடித்து, ‘நேரு ஸ்ட்ரீட்லதான், ரொம்ப இல்ல, எய்ட் பிப்டி’ என்றவளின் மார்பிலும், முகத்திலும் வியர்வைக் கோடுகள். ‘ஏஸி போட்டும் வேர்க்குது, பேன் வேற ஓடுது. ஜூலைலகூட நல்ல வெய்யில் அடிக்குது’ என்று இவன் சொல்ல, ‘ வலது காலை மீண்டும் நீட்டி இவன் பக்கம் திரும்பி, ‘வெய்யில் மட்டுமில்ல’ என்றாள். பார்வையை ஏஸியின் பக்கம் திருப்பி, ‘நாங்களும் கேரியர்தான்’ என்றவனின் தோளில் கைவைத்து திருப்பினாள்.

‘எங்க சர்விசிங் கொடுக்கறீங்க? நாங்க ஏஎம்ஸிலா இருக்கோம், வருஷம் நாலு சர்விஸ். இதுதான் எனக்கு பர்ஸ்ட் டைம்’ என்றான்.

‘ஏஸி வாங்கறதா?’

‘இல்ல..’

‘.. எனக்கும் இதுதான் பர்ஸ்ட் டைம்’

‘இல்ல நான் என்ன சொல்ல வந்தேன்னா…’

‘புரிஞ்சுது, நானும் அதத்தான்..’

இருவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். ஏறி இறங்கும் மார்புகள், கருத்த காத்திரமான முலைக்காம்புகளும், அவற்றைச் சுற்றிய காம்புத் தோலும். படுக்கை அருகே இருந்த தன் அலைபேசியை எடுக்க திரும்பினாள். சதைப்பற்றுள்ள உறுதியான பிருஷ்டம், கையை நீட்டி, பின் அவள் கரத்தின் மேற்புறத்தில் வட்டமாகத் தடவியபடி, ‘இப்பல்லாம் இந்த மாதிரி ஸ்மால் பாக்ஸ் பாட்ச் இல்ல, நம்ம ஜெனரேஷனோட போச்சு’ என்றான்.

அலைபேசியில் எதையோ படித்துவிட்டு சிரித்தபடி வைத்தாள். ‘அவர்தான் அனுப்பி இருக்காரு, ஏ ஜோக். ஒங்களுக்கும் பார்வார்ட் பண்ணிருக்கேன், உஷாக்கும் அனுப்பிருக்கேன். அவ எப்ப வரா?’ என்றாள்.

‘இன்னிக்கி நைட் கிளம்பி நாளைக்கு மார்னிங் வரா. மண்டே ப்ரவீணுக்கு ஸ்கூல் இருக்கே… ஒரு நாள் ரெஸ்ட் எடுக்கலாம். நா மட்டும் நேத்து சாங்காலம் பங்க்ஷன் அட்டெண்ட் பண்ணிட்டு வந்துட்டேன். இன்னிக்கு மார்னிங் ஆபிஸ் போக வேண்டியிருந்தது’

தன் கரத்தில் இருந்த தடுப்பூசி முத்திரையைத் தொட்டு, ‘இன்னும் டார்க்காதான் இருக்குல, எத்தன வருஷம் ஆச்சு. என்ன யூஸ் பண்ணிருப்பாங்க’ என்றாள்.

‘பசங்க எங்க, ஒங்க அக்கா வீட்டுக்கு போயிருக்காங்களா?’

‘ஆமா, லாஸ்பேட். ப்ரவீண் வீட்டத் தவிர இந்த அபார்ட்மென்ட்ல இவங்க வயசுல யாரும் இல்ல, அங்க போனா அக்கா பசங்ககூட வெளையாடிட்டிருப்பாங்க. சாங்காலம் அவர் ஆபிஸ்லேந்து திரும்பி வரும்போது கூட்டிட்டு வந்துருவாரு’.

விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான். வாசனை திரவிய வாசத்துடன் கலந்திருக்கும் உடலின் மணம். கூடவே இந்திரியங்களின் வீச்சம்.

‘என்ன பெர்ப்யூம் யூஸ் பண்றீங்க’

‘ஸ்பின்ஸ்’

‘நாங்க நிவியா’

இவன் தோளில் முகம் வைத்து, ‘இதெல்லாம் விட ஒண்ணா இருக்கறப்ப வர வாசன இருக்குல, கல்யாணம் ஆனப்ப ரொம்ப புதுசா இருக்கும்.கொமட்டற மாதிரியும் இருக்கும், அதே நேரம் என்னமோ பண்ணும்.’ என்றாள்.

‘நீங்க என்ன விட ஒரு வயசு பெரியவங்க, உஷா ஒங்க ஏஜ் சொல்லிருக்கா’

‘அப்போ… அதுலயும் பர்ஸ்ட் டைம்தானா’ என்று இவன் தோளைத் தட்டிக் கேட்டாள்.

‘என்னது.. அப்படி இல்ல, அதுவும்தான். பாத்ரூம்..’ என்றபடி எழுந்து குளியலறையுடன் இணைந்த கழிப்பறைக்குள் நுழைந்தான். கலவிக்குப் பின் அடுத்த பத்து நிமிடங்களுக்குள் சிறுநீர் முட்டிக் கொண்டு வந்துவிடும். சில நேரம் கலவியின்போது வாயு வெளியேறுவதும் நிகழ்வதுண்டு. உஷாவிற்குப் பழகிவிட்டது, உரக்கச் சிரிப்பாள், இவனும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பான். இன்று இவளுடன் முயங்கும்போதும் அந்த உந்துதல் ஏற்பட, வேகத்தைக் கட்டுப்படுத்தியவனை இறுக்கிக் கொண்டு ‘என்னாச்சு’ என்று கேட்டாள். சில கணங்களில் சப்தமிடாமல் காற்றை வெளியேற்றியபின் மீண்டும் வேகமாக இயங்க ஆரம்பித்தான். நாற்றமெடுக்கவில்லை என்பதால் அதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தச் சில நொடி தயக்கம், என்ன நினைத்திருப்பாள், அது இப்போதும் நினைவில் இருக்குமா என்று தெரியவில்லை. ப்ளஷ் செய்து விட்டு அறையில் இருந்த பற்பசை, ஷாம்பூவை எடுத்துப் பார்த்தான். கண்ணாடியில் முகம், சதை இன்னும் தொங்க
ஆரம்பிக்கவில்லை. வயிற்றைத் தடவிக் கொண்டான், நன்கு உற்றுப் பார்த்தால் மட்டும் தெரியும் சதைப்பற்று, இப்போதும் மூச்சை உள்ளிழுத்துக் கொள்ளாமல் சட்டையை ‘டக்’ செய்து கொள்ளலாம். கதவைத் திறக்கப் போய் நின்றவன், தளர்ந்திருந்த குறியை பற்றிக் கொண்டு நீவி விட்டுக் குலுக்கி, இடுப்பை முன் பின்னாக அசைத்தான். குருதியோட்டம். குறியையும், விரைப்பைகளையும் உள்ளங்கைக்குள் பற்றிக் கொண்டு அசைத்தான். சூடு, கனம். கையை எடுத்து குறியின் நீளத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்து, ‘பாத்ரூம் க்ளீனா மெயின்டேன் பண்றீங்க, டைல்சும் வழவழப்பா இல்ல, வயசானவங்க வந்தா தைரியமா நடக்கலாம்’ என்றபடி அவளருகில் படுத்தான். உஷாவைவிட சற்றே நீளமான கூந்தல். முழங்கையில் சுருண்டிருக்கும் முடிகளின்மீது உதடுகளை உரசினான்.

‘சண்டே நானோ அவரோ வாஷ்பேசின், பாட் ரெண்டையும் க்ளீன் பண்ணிடுவோம். தரைல ப்ளீச்சிங் பவுடர்’.

‘ஆமா, இதெல்லாம் வீட்ல வேல செய்ய வரவங்ககிட்ட சொல்லக் கூடாது, நாமதான் செய்யனும்’. வீட்டில் உஷாதான் எப்போதும்ம் இதெல்லாம் செய்வது.

‘தண்ணி குடிக்கிறீங்களா’ என்றபடி எழுந்து கொண்டையிட்டுக் கொண்டு நிர்வாணமாகவே அறையை விட்டு வெளியேறினாள். டிரெஸ்ஸிங் டேபிள் மீதிருந்த அவளுடைய அலைபேசியை எடுத்தான். தொடுதிரையில் கடற்கரையில் கணவன், மற்றும் இரு குழந்தைகளுடன் அவள் எடுத்துக் கொண்ட புகைப்படம். திடகாத்திரமான ஆள். மாதமொருமுறை ஞாயிறன்று அடுக்ககவாசிகள் மொட்டைமாடியில் சந்திக்கும்போது மட்டும் அவருடன் பேசியதுண்டு. இவளும் உஷாவும்தான் அரட்டையடிப்பார்கள், காலை உஷா இங்கு வந்தால், மதிய வேளைகளில் இவள்  அங்கு. வாட்ஸாப் செயலியில் அவள் அனுப்பியிருந்த, அவளுக்கு வந்திருந்த செய்திகள், அவளுடன் தொடர்பில் உள்ளவர்கள். அலைபேசியின் புகைப்படத் தொகுப்பில், கணவன், குழந்தைகளுடனான படங்கள் மட்டும். காணொளித் தொகுப்பில் எந்த வீடியோவும் இல்லை. அலைபேசியை வைத்துவிட்டு, வார்ட்ரோபைத் திறந்தான். மேல் ஷெல்பில் இவள் கணவனின் ஆடைகள். சட்டைகளின் கழுத்துப் பகுதியை கவனித்தான், சில தைக்கப்பட்டவை, சில உயர்தர நிறுவனங்களின் ஆயுத்த ஆடைகள். குனிந்து கீழ் ஷெல்பின் மரக்கதவை நகர்த்தினான். புடவைகள், சுடிதார்கள். ஜாக்கி உள்ளாடைகள். மார்புக்கச்சையின் அளவைப் பார்த்துவிட்டு கதவை மூடி நிமிர, அவள் உள்ளே நுழைந்தாள். வார்ட்ரோப் கதவை கைமுட்டியால் தட்டிவிட்டு ‘சும்மாத்தான் ரூம பாத்துட்டு இருந்தேன், வார்ட்ரோப் நல்லா பெருசா இருக்கு, இன்னும் கலர் மங்கல’ என்று சொல்லிக்கொண்டே கட்டிலுக்குச் சென்று படுத்தான்.

இவனிடம் தண்ணீர் பாட்டிலைத் தந்துவிட்டு, ‘ப்ரவீண் போற ஷட்டில் கோச்சிங்குக்கு போணும்ங்கறாங்க என் பசங்க, எப்படி நல்லாத் சொல்லித் தராங்களாமா’ என்று இவன் மீது காலை போட்டபடி கேட்டாள்.

உள்தொடையின் சூடு. ‘ம்ம், ப்ரவீணுக்கு புடிச்சிருக்கு, எதோ கொஞ்ச நேரம் வெளில வெளையாடட்டும்னுதான் போன மாசம் சேத்து வுட்டேன். நீங்களும் சேத்து விடுங்க, யுஸ்புல்லா இருக்கும்’

‘அவர்ட்ட சொல்றேன்’

பாட்டிலை அவளிடம் திருப்பித் தந்தபடி,’ஏ ஜோக் அனுப்பினார்னு சொன்னீங்கள்ள, அதெல்லாம் பேசுவாரா?’

‘பேசாம என்ன, அப்பப்போ இப்படி ஜோக்ஸ் பார்வர்ட் பண்ணுவாரு, நான் உஷாக்கும் அனுப்பிருக்கேனே, அவ சொன்னதில்லையா? கொஞ்ச நாள் எதுவும் அனுப்பலன்னா என்ன, புதுசா எதுவும் இல்லையா, அவர்ட்ட கேட்டு அனுப்புன்னு சொல்லுவா’

‘…’

‘நீங்க எப்படி… டெய்லி..’

‘என்னது டெய்லி? டெய்லி ஜோக்கு அனுப்புவாரான்னா?’

‘அதில்ல, டெய்லி ஒண்ணா இருப்பீங்களா, பசங்க வளந்துட்டாங்கல, கொஞ்சம் ஜாக்கரதையாத்தான் இருக்கணுமே, அதான் கேட்டேன்’

‘இதுக்கு டைம் டேபிளா போட முடியும்? பசங்களுக்கு இப்போ தனி ரூம் இருக்கு. நீங்க எப்படி, உண்மைய சொல்லணும், உஷாகிட்ட இதெல்லாம் பேசிருக்கேன், சும்மா ஏமாத்த முடியாது’

‘இதெல்லாம் பேசிப்பீங்களா? பிரவீணும் தனியாத்தான் படுத்துக்கறான். இந்த வருஷம் ப்ரவீனுக்கு அது இதுன்னு கன்னா பின்னான்னு பீஸ் வாங்கிட்டாங்க, நீங்களும் கட்ட வேண்டிருந்ததுன்னு உஷா சொன்னா’

‘அதே ஸ்கூல்தான, மாத்தலாம்னா எல்லா ஸ்கூலும் இப்டித்தான் இருக்கு. இந்த அபார்ட்மெண்ட் மெயின்டனன்ஸ் வேற மாசா மாசம். லிப்ட்டுக்கு வருஷா வருஷம் தர்றது ஓகே, செக்குரிட்டி தேவையான்ன’

‘அவன் பாதி நேரம் தூங்கிட்டிருக்கான், நான் இன்னிக்கு மதியம் வரும் போது செம மயக்கத்துல இருந்தான். பேசாம சிசிடிவி காமிரா ஒன்னு ரெண்டு வாங்கி பார்கிங்ல பிட் பண்ணிடலாம்’

‘கரெக்ட், அவர்கூட அதத்தான் சொல்லிட்டிருந்தாரு. இதுல ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ மோட்டார் ரிப்பேர் வேற. தண்டச் செலவு’

‘அவர் நல்ல பெரிய கம்பெனிலதான் இருக்கார்ல, அலவன்ஸ்லாம் நெறைய இருக்கும் எனக்கு இங்க ஆபிஸ்ல ஸிடிஸி தவிர மன்த்லி மொபைல்க்கு டூ தவுசண்ட், அதர் எக்ஸ்பென்ஸ்ன்னு இன்னொரு டூ தவுசண்ட் தந்துடறாங்க.’

‘…’

‘ஒங்களுதும் அர்ரேஞ்ட் மேரேஜ்தான, உஷாவ ரெண்டு மூணு பேரு முன்னாடி பொண்ணு பாக்க வந்திருக்காங்க, இவ வேணாம்னு சொல்லிட்டா’

‘ஒங்களப் பாத்தவுடன மயங்கிட்டாங்க போலிருக்கு’

‘அப்டி இல்ல, நீங்க எப்படி’

‘..’

‘தனி ரூம்னா பரவாயில்ல.. ப்ரீயா இருக்கலாம். எவ்ளோ நேரம் வேணும்னாலும். நம்ம கெபாசிட்டி பொருத்துதான… நெறைய நேரம் டைம் போறதே தெரியாது, நாளைக்கு வீக்டேன்னு வேற வழியில்லாம தூங்க வேண்டிருக்கும். உங்களுக்கு எப்படி, நேரமாகுமா, அவர் எப்படி..’

‘இதுக்காக பக்கத்துல க்ளாக் வெச்சு நேரத்த நோட் பண்ணுவாங்களா என்ன?’

‘அதில்ல, சும்மாத்தான். ரெண்டு வாட்டிகூட இருக்கலாம், தனியா படுத்தா. ஒடம்பு முடியனும், நெறைய பேருக்கு ரெண்டு வாட்டிங்கறது கஷ்டம், பர்ட்டிகுலர்லி ஆம்பளைங்களுக்கு. அவர்… எப்படி…’

‘இப்போ அப்படி தோணுதா’

‘இல்லல்ல, ஜஸ்ட் கேட்டேன் அவ்ளோதான்’

‘ஏன் டயர்ட்டா இருக்கா?’

‘அப்டிலாம் இல்ல, எங்களுக்கு அது சகஜம்தான்’ என்றபடி அவளை அருகில் இழுத்தான். ‘எல்லாம் மூட பொறுத்து தான், ரெண்டு வாட்டிலாம் இருக்கறது’ முகத்தில் அவள் மூச்சுக் காற்று.

‘காத்தால எழுந்துக்கறது கஷ்டம் இல்ல. வீட்ல உஷாக்கு பிரவீண ஸ்கூலுக்கு ரெடி பண்ணணும். யப்பா அடிச்சுப் போட்டாப்புல இருக்குன்னு, எழுந்தவுடன குளிக்கப் போய்டுவா அப்ப மட்டும், அதுக்கப்பறம்தான் சமையல் எல்லாம். அந்த மாதிரி நேரத்துலதான் நான் பையன ஸ்கூல் வேனுக்கு கொண்டு விடுவேன், நீங்களும் வருவீங்க. எனக்கு பெரிசா டயர்ட்டா இருக்காது, அவரு என்ன ரொம்ப லேட்டா எழுந்திருப்பாரா’

‘அவர் எப்படியும் காத்தால வாக்கிங் கெளம்ப அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துப்பாரு. என் மூஞ்சி டயர்ட்டா இருந்தா உஷா கரெக்ட்டா கண்டு பிடிச்சு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.’

உஷா இவள் கணவன் குறித்து பொதுவாகச் சொல்லி இருக்கிறாள், அடுக்ககத்தில் நடைபெறும் புத்தாண்டு இரவுணவு கொண்டாட்டத்தில் அவனுடன் பேசி இருக்கக்கூடும். இங்கு அரட்டை அடிக்கும்போது அவனும் வீட்டிலிருந்தது உண்டா என்பது குறித்து உஷா எதுவும் சொன்ன ஞாபகம் இல்லை. இவள் தனக்கு அனுப்பும் ஜோக்ஸ் குறித்தும்.

‘…நீங்க எக்ஸர்சைஸ் எதுவும் செய்யறதில்லல’

‘ம்ம்ஹும், அவர் எக்ஸர்சைஸ் வேற செய்வாரா வீட்ல?’ விலகினான்.

‘அதெல்லாம் இல்ல, ஒரு மணி நேரம் நடக்கறது மட்டும்தான். அவருக்கு அப்படி ஒண்ணும் தேவையும் இல்ல’

‘நானும் போணும்’ என்றபடி தலையணையை எடுத்து இடுப்பின் மீது வைத்துக் கொண்டான்.

‘ஒங்களுக்கும் ஒண்ணும் அவசியமில்ல, நடந்துட்டு வந்தா பிரெஷ்ஷா இருக்கும், அவர் அதுக்குதான் போறார். நீங்களும் சேந்துக்கலாம். பேசிட்டே போனா நடக்கறது தெரியாது இல்ல’

‘…’

‘ப்ரவீணுக்கு இப்போ ஒம்போது வயசுல’

‘ஆமா மேரேஜ் ஆகி பத்து வருஷம் ஆச்சு, ஒடனே கன்சீவ் ஆகிட்டா. ஒங்களுக்கு எப்ப மேரேஜ்’

‘பதினாலாவது வருஷம் ரன்னிங்’

‘பெரியவனுக்கு எவ்வளவு வயசு, பன்னெண்டா? ரெண்டு வருஷம். வீட்ல பெரியவங்க அதுக்குள்ளே கொடச்சல் கொடுத்துருப்பாங்க.’

‘அதெல்லாம் இல்ல, நாங்கதான் ஒரு வருஷம் போகட்டும்னு டிசைட் பண்ணினோம். அவருக்கு பொண் கொழந்த வேணும்னு ஆச, அதான் இன்னொண்ணும், அதுவும் பையனாப் போச்சு. அவர் அடுத்ததுக்கும் ரெடிதான், விட்டா போயிட்டே இருப்பாரு. நான்தான் போறும்னுட்டேன். நீங்க இன்னொரு தம்பியோ பாப்பாவோ பெத்துக்கலாம்ல. தொணையா இருக்கும். உஷாட்ட அப்பப்ப சொல்லிட்டிருப்பேன், சிரிச்சுப்பாங்க, அவ்ளோதான் வேறேதும் சொல்ல மாட்டாங்க. ஒண்ணு போறும்னு முடிவு பண்ணிட்டீங்களா’

‘…ம்ம்ம்… கெளம்பறேன்’

‘டைம் என்ன’ என்றபடி அலைபேசியை எடுத்துப் பார்த்தவள் ‘நாலரை ஆயிடுச்சு’ என்றாள்.

‘கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் டைம் போனதே தெரில… பேசிட்டும் இருந்தோம்’

‘நைட் எங்க சாப்பிடுவீங்க’ என்றபடி எழ ஆரம்பித்தாள். இன்னும் சிறிது நேரம் தங்கச் சொல்லியிருக்கலாம்.

படுக்கையிலிருந்து எழுந்தவன் மீண்டும் சாய்ந்தான். ‘அவரோட …. எவ்ளோ நேரம் ஒண்ணா இருப்பீங்க, தப்பா எடுத்துக்காதீங்க, சும்மாத்தான் கேட்டேன்’ என்றதற்கு ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தவள், ‘உஷா இப்பத்தான் கால் பண்ணிருக்காங்க ‘ என்றபடி அலைபேசியை காதருகில் வைத்துக் கொண்டாள்.

‘என்ன போன் பண்ணீங்களா, கவனிக்கல’

‘..’

சிரித்தபடி ‘பிஸிலாம் இல்ல, அவருக்கு ஆபிஸ் இருக்கு இன்னிக்கு’

‘…’

‘நைட்டா.. பாக்கலாம்’

‘உஷாவா?’ என்ற இவனுடைய வாயசைப்புக்கு தலையாட்டிவிட்டு ‘போர் அடிச்சுதுன்னு கால் பண்ணீங்களா. அப்படித்தான் இருக்கும், தனியா தூங்கறதுனாலே ஒங்களுக்கு ஆகாதே ‘ என்று பேச்சைத் தொடர்ந்தாள்.

எழுந்து உடையணிய ஆரம்பிக்கும் முன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான், உஷா ஒரு முறை அழைத்திருக்கிறாள். அழைப்பை முடித்துக் கொண்டவள் ‘உஷாதான்’ என்று விட்டு உள்ளாடை எதுவும் உடுத்திக் கொள்ளாமல் நைட்டியை அணிந்து கொண்டாள். டீ-ஷர்டை முழங்கைக்குள் நுழைத்திருந்தவன் நிறுத்தி அவளை பார்த்தான். இவனை கவனியாமல் நைட்டியின் சுருக்கங்களை நீவி விட்டுக் கொண்டிருந்தாள்.மெல்லிய திரை போன்ற இரவாடைக்கு பின்னே வெற்றுடலின் அசைவு.

‘இன்னிக்கு ஒங்களுக்கு … நான் …’

வெறுமனே தலையசைத்து விட்டு ஹாலுக்குச் சென்று உட்புறக் கதவை திறந்து, வெளிப்புற க்ரில் கதவுப் பூட்டின் சாவியை சாவிக் கொத்திலிருந்து அவள் எடுக்க,’இப்போ யாராவது வெளில இருப்பாங்களா தாசில்தார் வைப்..  அவங்க பையன் பைனல் இயர்ல இந்த வருஷம் ‘ என்றான்.

‘நானும் உஷாவும் இங்க மதியம் பேசிட்டிருந்தா அவங்களும் வருவாங்க, மத்தபடி அவங்க இப்போ உள்ளதான் இருப்பாங்க. பையன் அஞ்சு, அஞ்சரைக்குதான் வருவான், காலேஜ் பஸ்’

‘யாரும் இல்லல’ என்றபடி வெளியே காலெடுத்து வைத்துத்’ திரும்பி க்ரில் கம்பிகளை பற்றியபடி, ‘ஆக்ச்சுவலி நான் அப்போ என்ன கேக்க வந்தேன்னா, இன்னிக்கு… நாம.. ஒங்க ஹஸ்பன்ட்..’ என்றவனை, ‘வேணாம், அதப் பத்தி பேசவேணாம்’ என்று இடைமறித்தாள்.

‘ஸாரி, வரேன்’

கதவைச் சாத்தினாள். அழைப்பு மணிக்கு அடுத்திருந்த வெண்கல பெயர்ப்பலகையில் தம்பதியரின் பெயர். அதன் கீழே பொருத்தப்பட்ட மற்றொரு, நிறம் இன்னும் பொலிவாக இருக்கும் வெண்கலப் பெயர்ப்பலகையில் அவர்கள் குழந்தைகளின் பெயர்கள். உஷாவை அலைபேசியில் அழைத்தான். ரிங் போக, கழுத்திடுக்கில் அதை வைத்தபடி அடுத்திருந்த தன் அபார்ட்மெண்ட் கதவைத் திறக்க ஆரம்பித்தான். ப்ரவீணுக்கு பயணத்தில் போது சில சமயம் குமட்டும். எளிய இரவுணவை உட்கொள்ள, பேருந்தில் ஏறும் முன்னர் ரெண்டு மூன்று தண்ணீர் போத்தல்கள் வாங்கி வைத்துக் கொள்ள சொல்ல வேண்டும். வண்டி நடுவே எங்கேனும் நிற்கும் போது ப்ரவீண் எங்கும் இறங்கிச் செல்லக் கூடாது. பெயர்ப்பலகையை எங்கு செய்தார்கள் என்று இவளிடம் கேட்டு- உஷாவை கேட்கச் சொல்லலாம்- தெரிந்து கொண்டு இங்கும் ஒன்று பொருத்த வேண்டும்.

2 comments

  1. இது கதையா, போர்னோகிராபியா? அல்லது அந்தநாள் ‘சரோஜாதேவி’ எழுத்துக்களில் இருந்து மறு ஆக்கமா? Please do not degrade your publication.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.