அது சிறு மலையைக் குடைந்து கட்டப்பட்ட பழைய கோயில். தன்னைப் போலவே பழசு என்ற எண்ணம் அவனுக்கு ஆறுதலாக இருந்தது. மிகப் பெரிய முரசுகள் பெரிய திண்ணைகளின் மேல் வைக்கப்பட்டிருந்தன. முழங்காத முரசுகள் சஹானாவைப் போல; இல்லை, முழக்காத முரசுகள் தன்னைப் போல. நீண்ட நடைபாதைகளை ஒட்டி அலங்கார நடன மண்டபம் வெறிச்சென்று காட்சி அளித்தது. எத்தனை மேளங்கள், எத்தனை தாளங்கள் இங்கே ஒலித்திருக்கும். இந்த அச்சுறுத்தும் அமைதியில் மேற்கூரையும், பக்கச் சுவர்களும், ஒலிக்கு ஏங்கி, வண்ணங்களை உதிர்த்து நிற்கின்றன. அம்மன் சன்னதியில் தூங்கா விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சிற்பி படைத்த கணத்தில் உறைந்த அன்னையின் சிற்பம் அவன் மனத்தில் உறையும் அந்த கனவைப் போன்றதா அல்லது… வேறு எதைப் போன்றது?
சிவன் சன்னதியில் இருளை விழுங்க முடியாமல் ஒளி தத்தளித்துக் கொண்டிருந்தது. விசித்திரமான அழகு என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அவன் பாறைப் படிகளின் மேலேறி திறந்திருந்த வாயில் வழியாக சுனைப் படுகைக்கு வந்தான்.
அவன் உள்ளேயிருப்பதை உணராமல் காவல்காரன் பூட்டிக் கொண்டு போய்விட்டான். கத்திக் கூப்பிடலாமா என ஒரு கணம் நினைத்தான். எங்கிருந்தால் என்ன என்றும் சிந்தை ஓடியது.
அன்று இதைப் போல் பூரண நிலவில்லை. அவன் தன் வீட்டு முற்றத்தில் கிணற்றை ஒட்டிய மேடையில் கையில் பேருக்கு ஒரு புத்தகத்துடன் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒழுங்கான வடிவுகளிலில்லாத புண்ணாக்குகள் போல் நிறம் கொண்டு சிறு குன்றுகளெனக் காணப்பட்ட மேகங்கள் எங்கே? கண்ணைச் சிமிட்டிச் சிமிட்டி ஒன்று மற்றொன்றை அழைக்க வானில் மிளிரும் பூக்கள். அவனது கவிதை வேளையை கலைக்கவென்றே காலிங் பெல் அடித்தது.
‘பாலா, யார்னு பாரு, கைவேலையா இருக்கேன்’
முணுமுணுத்துக்கொண்டே சென்றவன் நடுவயதில் ஒருத்தர் கதவருகே நிற்பதைப் பார்த்தான்.
“நாங்க கும்மோணம். நேக்கு டிரான்ஸ்ஃபர் இந்தூருக்கு ஆயிருக்கு. உங்காத்துல இடம் இருக்குன்னா, சரி பாக்கலாமேன்னு வந்தோம். பெரியவா யாருமில்லயா?” நேரங்கெட்ட நேரத்தில வீடு பார்க்க யாரும் வருவதில்லையே என்று வியந்தான் அவன். ஒத்தர் நின்னுன்டு பன்மைல பேசறாரே, என நினைத்தவன் அப்பொழுதுதான் அவளைக் கவனித்தான். பாதி ஒளியோடு கலந்த இருளில் மருதாணி மரத்தடியில் நின்று கொண்டிருந்தாள்.
‘உள்ள வாங்க சார், அம்மா இருக்கா, அப்பா வெளில போயிருக்கா, உங்க பேரு’ என்றான் இவன்.
“கோதண்டராமன், இவ எம் பொண்ணு, சஹானா, நாங்க ஆர்த்தின்னு கூப்ட்றோம். உன் பேரு பாலாதானே? அம்மா கூப்ட்றச்சே கேட்டுது”
மாநிறத்தில் இருந்தாள் அவள். இரட்டைப் பின்னல் மடித்துக் கட்டியும் பின்முதுகு வரை ஊஞ்சல் ஆடியது. மருள மருள விழிக்கும் கறுப்பு திராட்சைகள். சிறிய வாய். அந்த சங்குக் கழுத்து அவனை அசைத்துவிட்டது. அம்மா ஏதோ சொன்னதற்கு மூக்கைச் சுருக்கி சிறிது அண்ணாந்து பல் வரிசை தெரிய சிரித்தாள். வாடகை கூட இல்லாமல் அவர்களைக் குடியேற்ற அவன் ரெடி. ஆனால், அப்பா என்ன நினைக்கிறாரோ? ’சீதாபதி பிள்ளையாரே, நிஜம்மா உனக்கு சிதர்க்காய் விட்றேன், பதினெட்டு தோப்புக்கரணம் போட்றேன்.’
இந்தக் கரடுமுரடான பாறையில் அந்த எண்ணம் அவனுக்கு இளநகை ஊட்டியது. அவர்கள் குடித்தனம் வந்தார்கள். ”அப்பாவப் பாத்தாச்சு, பொண்ணு அவராட்டம் இல்ல, சோ, அம்மாவப் பாத்துடணும்னு தோணி வாடகை ஏத்தாம ஒப்டுண்டேள் போலிருக்கு” என்று அம்மா அப்பாவை கேலி செய்ததும் நினைவில் வந்தது.
அந்த ஊரில் ஒரே ஒரே ஸ்கூல்தான் ஹையர் செகண்டரிக்கு. அதுவும் கோ-எட். பாலா நிஜமாகவே வானில் பறந்தான். அவன் ப்ளஸ் டூ அவள் ப்ளஸ் ஒன் அவ்வளவுதான். ராது, வேணு, சீமா, பாண்டு எல்லோரும் அவனுடன் ‘க்ரூப் ஸ்டெடி’ செய்ய விழைந்தார்கள். அவன் வீட்டிலே, அதுவும் சஹானா இருக்கும் போர்ஷனில் இவர்கள் வீட்டு முற்றத்தின் ஒரு பக்கம் திறக்கும் என்பதால் அந்தக் கூடத்திலேயே வாசம் செய்ய விரும்பினார்கள். அம்மாகூடச் சொன்னாள்- “மாடில போய் படிங்களேன்டா” என்று. சீமா ரொம்ப கெட்டிக்காரன். ”மாமி, அங்க நாங்க பேச ஆரம்பிச்சுடுவோம் இல்லன்னா பராக்கு பாப்போம்; இங்கன்ன நீங்க பாத்துண்டிருக்கேள்னு பயமிருக்கு, படிப்போம்”. அம்மா சிரித்துக் கொண்டே, ‘கலைமகளை’ப் படிப்பாள்.
சஹானா பாலாவின் அக்கா உஷாவுடன் நெருங்கிய தோழியாகிவிட்டாள். ’க்ளுக் க்ளுக்’கென்று எதற்கோ சிரிப்பார்கள். அவன் நெருங்கி வந்து நின்றால் உதடுகள் மடிந்து ஒலியற்ற சிரிப்பாக முகமும் கண்ணும் சிரிக்கும் அவளுக்கு. ”ஏண்டா, எங்களையே சுத்தற. வேற வேலையில்லியா?” என்று உஷா கடுகடுப்பாள்.
சஹானா கணக்கு ட்யுஷனுக்கு போய் வரும் வழியில் வெளிச்சம் குறைவாக இருக்கும். அவள் ‘பயமாக இருக்கிறது நீ கூட வாயேன்’ என்று ஒருமுறை கூடக் கேட்டதில்லை. அவன் சைக்கிளுடன் முனையில் காத்து நின்று பாதுகாவலனாக வருவதற்கு நன்றியும் சொன்னதில்லை.
இன்று அவனுக்குத் தோன்றுகிறது- அவள் அனாஹதத்வனி- ஒலி கேட்காத மந்திரம். ஆனால், அவள் நன்றாகப் பாடுவாள். அதுவும் மார்கழியில் முப்பது நாட்களும் திருப்பாவை அவளுடைய அப்பா பாட இவள் வாங்கிப் பாடுவாள். ’நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா’ என்று. இன்று அந்தப் பாடல் அவனுள் கேட்பானேன்?
‘மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ அவர்கள் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். அவனுக்கு அதனுடன் வரும் வடை மேல் தான் மிகுந்த ஆசை. அவள்தான் பிரசாதத்தை எடுத்து வருவாள்; ’இன்னும் ரெண்டு வட கிடைச்சா நன்னாருக்கும்’. கன்னங்களில் கொப்பளிக்கும் அந்தச் சிரிப்பு அவன் வெக்கங்கெட்டு கேட்டதை ஈடு செய்வதாக அவனுக்கு அன்று தோன்றியது. அவன் இல்லாதபோது தூய்மையான வெண்காகிதத்தில் இரு வடைகள் அவனுக்கென வைக்கப்பட்டிருக்கும். அவன் ரூமிற்கு அவள் வந்து போன வாசத்தை நெஞ்சு நிறைய இழுத்துக் கொள்வான், வடையின் ருசியோடு சேர்த்து.
அவர்கள் மூன்று வருடங்கள் அவன் வீட்டில் இருந்தார்கள்; அவருக்கு பதவி உயர்வுடன் மாற்றலும் வந்துவிட்டது. சிறிது காலம் கடிதப் போக்குவரத்து இரு குடும்பங்களுக்கும் நடந்தது. அவள் படிக்கும் சென்னை கல்லூரியில் ஒருமுறை அவளைச் சென்று பார்த்தான். அவள் வீட்டிற்கு அழைத்தும் அவன் போகவில்லை. இப்பொழுதும் அழகாகத்தான் இருந்தாள். ஆனால், மஞ்சள் பாவாடையுடன், மருளும் விழிகளுடன், அண்ணாந்த சிரிப்புடன், அவனுள் உறைந்த சஹானா இல்லாமல் அவள் ஆர்த்தியாகத்தான் தெரிந்தாள். அவள் அவர்கள் வீட்டில் குடியிருந்த மூன்று வருடங்களில் ஒருமுறை கூட இந்தத் தோற்றம் தனக்கு எழவில்லை என அவன் வியந்து கொண்டான்.
மேலே வானம் வெள்ளிச் சலங்கைகள் கட்டிக் கேட்காத ஒலியில் ஆடிக் கொண்டிருந்தது. மலைப் பாறைகளின் வழவழப்பு கருமையில், நிலவின் ஒளி, தம்பூராவின் ஒரு பகுதியில் படும் அகல்விளக்கென மினுக்கியது. ரகசிய முனகலென காதோரம் சஹானா பாடினாள்.