புதிய குரல்கள் – 3 : தூயனின் ‘இருமுனை’யை முன்வைத்து – நரோபா

நரோபா

தூயன் நான் பிறந்த அதே 1986-ல் பிறந்தவர். எனவே, தொண்ணூறுகளின் இளமைக் கால நினைவுகளை மீட்டும் கதைகளோடு என்னால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது. தொண்ணூறுகளுக்கு முன்பு பிறந்தவர்கள் பால்யத்தை உலகமயமாக்கலுக்கு முன்பு கழித்தவர்கள். அவர்களின் நினைவுகளில் இருக்கும் உலகம் வெகுவேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு உண்டு. தொண்ணூறுகளில், இரண்டாயிரங்களில் பிறந்தவர்களுக்கு இயல்பாக இருப்பவைகூட அவர்களுக்கு சற்றே அந்நியமாகத்தான் இருக்கும்.

தூயன் எனது ஊரான அரிமளத்தையே பூர்வீகமாக கொண்டவர். அவருடைய ‘எஞ்சுதல்’ கதையின் களமாக வரும் விளங்கியம்மன் கோவிலுக்கும் மாரியம்மன் கோவிலுக்குமிடையில் இருக்கும் சிரமட்டார் காளிதான் எனது ‘குருதிச் சோறு’ கதையின் களம். அவ்வப்போது நேரில் சந்தித்து இலக்கிய விசாரங்களில் ஈடுபடுவதும் உண்டு. தூயன் சென்ற ஆண்டு நிகழ்ந்த அவருடைய நூல் வெளியீட்டின்போது ஆற்றிய சிற்றுரையில், தமிழ்ச் சூழலில் புதிய எழுத்தாளர்களைத் தட்டிக் கொடுப்பது அவசியம், ஆனால் அவனைத் தடவிக் கொடுத்து ஒரேயடியாக படுக்க வைத்துவிடுகிறார்கள், முதல் தொகுப்பு ஏற்படுத்தும் சலசலப்பிற்குப் பின் மறைந்துவிடுகிறார்கள் என ஆதங்கப்பட்டார். படைப்பின் மீதான ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் போல் படைப்பாளியை மேம்படுத்தும் செயலூக்கிகள் பிறிதில்லை.

‘யாவரும்’ பதிப்பக வெளியீடாக எட்டு கதைகள் (ஒரு குறுநாவல் உட்பட) வெளிவந்திருக்கும் தூயனின் முதல் சிறுகதை தொகுப்பு ‘இருமுனை’ வெவ்வேறு களங்களைக் கொண்டது. ‘இன்னொருவனில்’ கதை சொல்லி நகரத்து மேன்ஷனில் பீகாரியுடன் அறையைப் பகிர்ந்து கொள்கிறான். ‘இருமுனையில்’ மனப் பிறழ்வு கொண்ட தகவல் தொழில்நுட்ப பொறியாளனாக இருக்கிறான். ‘முகம்’ குறவர் காலனியில் புழங்கும் பன்றி இறைச்சி சார்ந்த அதிகார போட்டியையும் வன்மத்தையும் களமாக கொண்டது. ‘மஞ்சள் நிற மீன்’ பள்ளிக் கால நினைவுகளை, கடல்புரத்தை களமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘தலைப்பிரட்டைகள்’ சாதியை பேசுபொருளாக கொண்டு, நகரத்து பேருந்து நிலையம் மற்றும் அங்கு நிகழும் பாலியல் தொழிலை சித்தரிக்கிறது. ‘பேராழத்தில்’ சிற்பக்கலையை, தொல்கால சிற்பியின் வாழ்வை, படைப்பூகத்தை, அற சிக்கலை கதையாக்குகிறது. ‘எஞ்சுதல்’ திருமணமான பெண்ணின் குழந்தைக்கான தவிப்பை சொல்கிறது. குறுநாவலான ‘ஒற்றைக்கை துலையன்’ நாட்டாரியல் தொன்மத்தை விரித்தெடுக்கிறது. இக்கதைகளில் ‘எஞ்சுதல்’ மற்றும் ‘இருமுனை’ தவிர பிற கதைகள் ‘தன்மையில்’ எழுதப்பட்டுள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். (’இருமுனையில்’ கூட இறுதியில் ஒரு கதைசொல்லி வந்துவிடுகிறான்). கதைக் களங்கள் வெவ்வேறாக இருப்பினும்கூட நம்பகத்தன்மையை எங்கும் இழக்கவில்லை.

என் வாசிப்பில் தொகுப்பின் சிறந்த கதைகள் என ‘மஞ்சள் நிற மீனையும்’ ‘எஞ்சுதலையும்’ அடையாளப்படுத்தலாம். ‘ஒற்றைக்கை துலையன்’ குறுநாவலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

‘மஞ்சள் நிற மீன்’ விசுவநாதனின் குரலில் பள்ளிப் பிராயத்து நினைவுகளைச் சொல்கிறது. அவனுடைய நண்பன் செபாஸ்டியன் கடற்புரத்தை சேர்ந்தவன். பள்ளிக்கு வரச் சுணங்குபவன். எப்போதும் கற்பனையில் வாழ்பவன். கடல் ஆழத்தில் வாழும், அவன் மட்டுமே அறிந்த வினோதமான மஞ்சள் நிற மீனைப் பற்றி ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கற்பனைகள் புனைகிறான். தந்தையில்லாத செபாஸ்டியன் அன்னை மற்றும் சித்தப்பாவின் அரவணைப்பில் வளர்கிறான். படிப்பு தங்கவில்லை. “மீன்கார பயலுகளுக்கு கடல வேட்டிக்குள்ள மறச்சு வெச்சுட்டு திரிய முடியுமா..?” என்கிறார் அவனுடைய சித்தப்பா. செபாஸ்டியனின் இல்லம் மற்றும் கடற்புரத்தில் அவர்கள் மேற்கொள்ளும் குறும்பயணம் அழகாக இருக்கிறது. வெள்ளந்தியான நட்பும் நினைவுகளும், நுண்மையான புறச் சித்தரிப்புகள் மற்றும் பாத்திரப் படைப்புகள் கதையை நினைவில் நிறுத்துகின்றன. செபாஸ்டியனும் அவனுடைய மஞ்சள் நிற மீனும் புனைவாக எப்போதும் எஞ்சுவதுடன் கதை நிறைவுறுகிறது.

‘எஞ்சுதல்’ ஐயமின்றி இத்தொகுப்பின் சிறந்த கதை என கொள்ளலாம். தூயனின் பலம் முழுக்க வெளிப்பட்ட கதை. தூயனின் எழுத்தில் வெகு இயல்பாக மனிதர்கள் மீது கரிசனமும் வாஞ்சையும் வெளிப்படுகிறது. புறச் சித்தரிப்பு, பாத்திர வார்ப்பு என எல்லாமும் இக்கதையில் முழுமை அடைந்துள்ளது. திருமணமாகி நான்கு ஆண்டுகளில் குழந்தைப் பேறு இல்லாத மஞ்சுவிற்கு எவர் மீதும் எந்த புகாரும் இல்லை. அவளுக்குப் பின் மணமான நீலாவிற்கு குழந்தை பிறந்திருக்கிறது, மஞ்சுவிற்கு உருவான சிசு தங்கவில்லை. கணவன் சரவண வேலுவுடன் இணக்கமாகவே இருக்கிறாள். மாமியாருக்கு மட்டும் அவள் கருவாகவில்லை என கொஞ்சம் எரிச்சல் இருக்கிறது. கோவிலின் தேர்த் திருவிழாவிற்கு செல்கிறார்கள். விரல்களில் கவிந்திருக்கும் மருதாணி தொப்பி, அதன் இனிய மணம், கருவறையில் அம்மனுக்கு முன் மஞ்சு திகைத்து நிற்பது, சரவணவேலுவுடன் அவளுக்கிருக்கும் நெருக்கம், காரணமற்ற உற்சாகம், ‘ஓம் பொண்டாட்டிக்கு திருவிழான்ன தீட்டாயிடுமே, இன்னிக்கி மொனங்க காணமேன்னு கேட்டேன்,’ என கூறும் மெய்யம்மாள், கதை முடிவில் மஞ்சுவிற்கு ஏற்படும் நிறைவு என நுட்பமான உணர்வுகளைச் சொல்லி செல்கிறது. கருத்தரித்தல் சார்ந்து சமூக அழுத்தம் எப்போதும் இந்திய சூழலில் நிலவி வருகிறது. மனித இனமாக தன் குலத்தை பெருக்குவதை பற்றிய கவனம் என்பதைக் காட்டிலும் மனிதர்களின் வாழ்வை, அவர்களின் பயன்மதிப்பை மதிப்பிடும் கருவியாக இந்திய சமூகம் பிள்ளைப் பேற்றைக் காண்கிறது. ‘எஞ்சுதல்’ நம்பிக்கையின் பாற்பட்டே.

‘ஒற்றைக்கை துலையன்’ குறுநாவல் இரண்டு சரடுகளை கொண்டது. ‘மஞ்சள் நிற மீனை’ போலவே பள்ளிப் பருவத்து இளைஞன்தான் கதைசொல்லி. சித்தம் சிதறி இருக்கும் அவனுடைய மூத்த சகோதரி ராசாத்திக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்குமான உறவு, அவளுடைய சிக்கல்கள் என்பது ஒரு பகுதி. நேர்ச்சைக்காக அவர்களுடைய குலசாமியான ஒற்றைக்கை துலையனை வணங்கச் செல்கிறார்கள். மற்றொரு பகுதி துலையனின் தொன்மத்தை சொல்கிறது. கட்டற்ற காமமும் வீரமும் கொண்ட துலையன் போரில் கொள்ளும் எழுச்சி, இளுவத்தி மீது கொள்ளும் காமம், அவனுடைய வீழ்ச்சி என அவனுடைய முழுக் கதையையும் விவரிக்கிறது. வட்டார நாட்டார் தொன்மத்தை பதிவு செய்கிறார். குறுநாவலின் தற்கால பகுதியில் இருக்கும் தெளிவும் தீர்க்கமும் துலையனின் தொன்மத்தை விவரிக்கையில் வெளிப்படவில்லை. துலையனின் கதை தனிச் சரடாக திகழ்கிறது. துலையனின் உருவகத்திற்கும் ராசாத்தியின் மனச் சிக்கலுக்குமான உறவு சரிவர கதையில் நிறுவப்படவில்லை. தந்தைக்கும், பெரியப்பாவிற்கும், சகோதரர்களுக்கும், இடையிலான உறவுச் சிடுக்குகள் உயிர்ப்புடன் சித்தரிக்கப்பட்டுள்ளன. குறுநாவலின் இறுதி பகுதியில் விவரிக்கப்படும் சடங்குகள், அதற்கான தர்க்க காரணங்கள் போன்றவை அமானுஷ்ய தன்மையை அளிக்கின்றன. ஒரு காட்சியாக குறுநாவலின் இறுதி அத்தியாயங்கள் மனதில் பதிந்து விடுகின்றன. மானுட மனதின் அறிய முடியா ஆழங்களை தொன்மத்துடன் இணைத்து வாசிக்கையில் ஏதோ ஒரு பதற்றம் நம்மை தொற்றி கொள்கிறது.

‘பேராழத்தில்’ சிற்பியின் படைப்பூக்கத்தை பற்றிய கதை. கலையும் அதிகாரமும் ஊடுபாவு கொள்வதை பேசுபொருளாக கொண்டது. படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண் காமம் எனும் நம்பிக்கையை ஒட்டி எழுதப்பட்டுள்ள கதை. ‘முதல் ஆற்றல்’ எனும் ஜெயமோகனின் கட்டுரை நினைவுக்கு வந்தது. தொகுப்பின் மிக பலவீனமான கதைகளில் ஒன்று. ஊகிக்கத்தக்க முடிவு மற்றும் வலுவற்ற பாத்திரப் படைப்புகளை காரணமாக சொல்லலாம். அடக்கப்பட்ட காமம் என்பது தூயனின் கதைகளில் ஒரு முக்கிய பேசுபொருளாக வெளிப்படுகிறது. ‘ஒற்றைக்கை துலையன்’ கூட மனப்பிறழ்வுக்கும் காமத்திற்குமான உறவை தொட்டுக் காட்டுகிறது. ‘இன்னொருவன்’ தனது தற்பால் ஈர்ப்பை கதைசொல்லி கண்டுகொள்வதைச் சன்னமாக கோடிட்டுக் காட்டுகிறது. பீகாரிலிருந்தும், வடக்கிலிருந்தும் இங்கு பிழைக்க வருபவர்களைப் பற்றி நமக்கிருக்கும் பொதுச் சித்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் கதை. அம்ரிதி ரோஷனின் பாத்திர வார்ப்பு சற்றே நம்பகத்தன்மை குறைவோடு உருவாகியுள்ளது. இக்கதை ஒருவகையில் ‘வயதுக்கு வருவது’ வகைப்பாட்டைச் சேர்ந்தது.

இவ்வரிசையில் ‘தலைப்பிரட்டை’கதையையும் வைக்கலாம். காமம் ஒரு சரடாக இக்கதைகளைப் பின்னிச் செல்கிறது. கதைசொல்லி பேருந்து நிலையத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பாலியல் தொழிலாளி கோகிலாவை விரும்பி அழைக்கிறான். ஆனால் அவளை நெருங்குகையில் தொலைவில் அவள் அளித்த கிளர்ச்சி மறைந்து வெறுப்பு மேலிடுகிறது. சாதி ரீதியான சீண்டலால் புண்பட்டு வன்முறையில் சென்று முடிகிறது. மெல்லிய குற்ற உணர்வுடன் கதை நிறைவடைகிறது.

தொகுப்பின் தலைப்பிற்குரிய கதையான ‘இருமுனை’ பை போலார் உளப்பிறழ்வை களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பொதுவாகவே தூயனின் கதைகளில் உளவியல் கூறுகள் சற்று கூடுதலாக தென்படுகின்றன. விபினின் நாட்குறிப்பாக வரும் கதை உண்மையும் புனைவும் கலந்து அவனது சிதைவைக் காட்டுகிறது. மெல்ல மெல்ல உள்ளத்தின் ஆழத்தை நோக்கி கதை திறக்கிறது. ஓவியம், கலை மனம் கொள்ளும் திரிபு எனச் சிறகடித்து பறந்து கொண்டிருந்க்கும்போது கதையின் இறுதிப் பகுதி கதையை கீழிறக்கி விடுகிறது. கதைசொல்லியின் குரலில் ஒலிக்கும் ‘எல்லோருமே பை போலார் தன்மை உடையவர்கள்தானா?’ உட்பட அப்பகுதியே கதைக்கு மேலதிகமாக எதையும் அளிக்கவில்லை. வாசகர் மனதில் வேர்பிடித்து எழ வேண்டிய வினாக்கள் அவை. ஆனாள், கற்பனையைச் சித்தரித்த வகையில் இக்கதை முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.

‘முகம்’ வன்மமும் ஆங்காரமும் நிறைந்த கதை. பாண்டியின் குரலில் அவனுடைய கதையை சொல்கிறது. நுண்தகவல்கள் புனைவை எப்படி வலுப்படுத்துகின்றன என்பதற்கு இக்கதை நல்ல உதாரணம். முற்றிலும் அறியப்படாத தோட்டிகளின் பன்றி வேட்டை சார்ந்த உலகத்தை நுணுக்கமாக சித்தரிக்கிறார் தூயன். அங்கு நிலவும் அதிகார போட்டியும், வன்மமும், குற்றத்தின் குறுகுறுப்பும், அது அளிக்கும் அகங்கார நிறைவும் என பலவற்றை கதை உணர்த்துகிறது. நவரசங்களில் பீபத்சமும் ஒன்று. இலக்கியத்தில் எப்போதும் அதற்கான இடமுண்டு. எனினும் பீபத்சம் இயல்பை மீறி அதிர்ச்சி மதிப்பிற்காக வெளிப்படும்போது அது கதையை பாதிக்கிறது. இக்கதையின் களம் நியாயம் செய்வதாக இருந்தாலும்கூட, தேவைக்கு மிகையான அழுத்தம் சில இடங்களில் தென்படுகிறது. ‘இன்னொருவன்’ கதையிலும் அம்ரிதி ரோஷன் மருத்துவமனையில் இருக்கும் காட்சியை நினைவுபடுத்தலாம், அதேபோல் ‘இருமுனை’ கதையிலும் விதைப்பை புற்று நோய் சார்ந்த சித்தரிப்புகள் மிகையாக வெளிப்படுகின்றன. முதல் மூன்று கதைகளை மீள வாசிக்க முடிவதில்லை, அவை அளித்த ஏதோ ஒரு சுழிப்பு பிற கதைகளை அணுகுவதை வெகுவாக தாமதப்படுத்தியது.

தூயனின் மொழி நேர்த்தியாகவும் ஆழமாகவும் இருக்கிறது. சில பயன்பாடுகள் மனதில் தங்கிவிடுகின்றன. ‘படமெடுத்தாடும் குட்டி டேபிள் லாம்ப்’. ‘வயிற்றுக்குள்ளிருந்து வாந்தி, பூனைபோல வாய் வழியே வெளியே எம்பி குதிக்கத் தயாராக இருக்கும்.’ ‘பேருந்துகள் பன்றியின் முலைப்பால் குடிக்க முண்டும் குட்டிகளாக இடம் கிடைக்காமல் திணறியபடி ஒன்றோடொன்று முட்டிக்கொண்டிருந்தன’. நிதம்பம் எனும் சொல்லை பெண் குறிக்குப் பயன்படுத்துகிறார். வேறோர் நண்பரின் கதையில் சிசினம் என்று வாசித்தது நினைவுக்கு வந்தது. ‘குமைதல்’ எனும் சொல் கிளிஷேவாக ஆகிவிடும் அபாயம் உள்ளது. பல கதைகளில் மீள மீள வருகிறது. காமம் – அகங்காரம் – செயலூக்கம் – வன்மம் எனும் சுழல் இத்தொகுதியில் எட்டில் ஆறு கதைகளில் விவாதிக்கப்படுகிறது. தூயனின் கதைகளில் காமம் உடலைக் கடந்து உள்ளத்தின் விழைவாக, அகங்கார வேட்கையாக வெளிப்படுகிறது. மானுட அகத்தின் அறியப்படாத இருண்ட மூலைகளை காமத்தின் மீதேறி நின்று அவர் ஒளிபாய்ச்சக்கூடும். ஆனால், காமம் வெளிப்படாத இரண்டு கதைகளும் இத்தொகுதியின் சிறந்த கதைகளாகவும் திகழ்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தூயன் சிறுகதைகளில் வரும் தந்தையர்கள் முக்கியமானவர்கள். ‘முகம்’ கதையில் வீட்டுக்குள் முடங்கி முடமான தந்தை வருகிறார். பாண்டி வெறுப்பை உமிழ்கிறான். அதே வேளையில் பல்வேறு தருணங்களில் தந்தையின் சொல் உடன் வருகிறது. ‘தலைப்பிரட்டையின்’ நாவித தந்தை காலமாற்றத்தை அனுசரிக்க முடியாமல் வன்மத்துடன் மாய்ந்து போகிறான். ‘ஒற்றைக்கை துலையனில்’ அக்கறையற்ற தந்தையாக தென்படுபவர் மனப்பிறழ்வு கொண்ட மகள் மீது பெரும் பிரியத்துடன் இருப்பது இறுதியில் வெளிப்படுகிறது. இவர்களுக்குள் ஒரு தொடர்ச்சியை உணர முடிகிறது.

வாஞ்சையும் வன்மமும் இருமுனை கொள்வதே தூயனுடைய படைப்புலகம் என வரையறை செய்யலாம். ‘முகம்’ ஒரு முனை என்றால் ‘எஞ்சுதல்’ மறுமுனை. ஒளிக்குத் தக்க நிழலும் உண்டு என்பதே நிதர்சனம். ஒளியை மட்டும் கண்டவர்களும் உண்டு, இருளை மட்டும் அறிந்தவர்களும் உண்டு. வன்மத்தைக் காட்டிலும் வாஞ்சையில் வெளிப்படும்போதுதான் இயல்பாகவும் நளினமாகவும் தெரிகிறார் தூயன். மொழி வன்மை, நுண்ணிய புறச் சித்தரிப்புகள், கூர்மையான அக அவதானிப்புகள், உழைப்பு, பரந்த வாசிப்பு என தேர்ந்த எழுத்தாளருக்குரிய எல்லா இயல்புகளும் தூயனிடம் உள்ளன, அவை இத்தொகுதியில் வெளிப்படவும் செய்கின்றன. விஷால் ராஜாவிற்கு தொழில்நுட்பம் அளிக்கக்கூடிய அடையாளச் சிக்கல் எப்படியோ, சுரேஷ் பிரதீப்பிற்கு நவீன வாழ்வின் போலித்தனமும் பொருளின்மையும் எப்படியோ, அப்படி தூயனுக்கு மண்ணில் வேர் கொண்ட வெக்கையும் ஈரமும் நிறைந்த மனிதர்கள். எழுத்தைப் பொறுத்தவரை தனது உள்ளார்ந்த அழைப்புக்கு செவிமடுத்து அதை இயல்பாக வெளிக்கொணர்ந்தால் போதும், அடுத்த பத்தாண்டுகளில் தூயன் மேலும் பல முக்கியமான கதைகளை எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.