நனவின் நீட்சி – சரவணன் அபி கவிதை

சரவணன் அபி

கதிரணையும் அந்தி
இலைகளுதிர்த்த எலும்புக்கரங்கள்
பற்றிப் பிடித்திருக்கும்
செந்நிற கருங்கல் கட்டிடம்
கற்பலகைகள் பாவிய படிகளில்
தாவிப் பாய்ந்து இறங்குகிறேன்
யாருமில்லாத தாழ்வாரங்களில்
இறங்கும் படிகள்
மீண்டும் மீண்டும்
கொண்டென்னைச் சேர்க்கும்
அத்தனை வாயில்களுக்குள்ளும்
பார்மலின் திரவக்குடுவைகளில்
மிதக்கும் அரைகுறை உருவங்கள்

புகைவண்டி சன்னல் கம்பிகளின்
காலைநேர குளிர்ச்சியும்
கரிப்புகை தூசியும்
முகம்பூசும் பயணம்
ஏறியதெங்கென்றும்
இறங்குவதெங்கென்றும் அறியாது
இடைவழி நிற்காது நீளும்
இளம்பருவத் தனிமை

சிறுகுழந்தையாய் வாழ்ந்திருந்த
வீட்டின் பின்புறம்
யாருமில்லாத பின்னிரவில்
மரங்களின் பின்னிருந்தும்
தரையின் குழிகளிலிருந்தும்
தீராதெழுந்து
விரட்டும் பிரேதங்கள்

கரைகாணாது
தரை அறுந்து
முடிவற்று வீழ்ந்துகொண்டேயிருக்கும்
இரவின் ஆழங்கள்

விரல் நுழையவியலா
துவாரம்
உடல் சுருக்கிச் செலுத்தும்
விசைகள் வலிகள்

களிப்பூட்டவென்று
ஏறி நின்ற மேடை
ஆயிரம் கண்களின்முன்
ஒரு வார்த்தையும் விரியா
விளங்கவியலா கணம்

போதாமைகள் குறைகள்
அச்சங்கள் இருண்மைகள்
நம்மை நாம் படிக்க
நனவில்லாததும்
ஓர் வழி

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.