என் காலடியில்
பிறந்த ஒரு சொல்
தனிமை துறந்து
கனம் தொலைத்து
கிளம்பியது ஒரு நெடும்பயணம்
விழிகள் நூறாகி
பரிதிச்செம்மை விழுங்க
ஏதோ ஒரு வெளியில்
சுயம்விழித்து
பொறுப்புணர்ந்து
ரதம் பூட்டிய தேரில்
ஏறி வந்த
சிறு வெளிச்சத் தீற்று
பூமித்தளத்திலே
சுடுசொற்களுக்கிடையே
என் சொல்லுக்கு
ஒளி சேர்த்தது.
சூல் கொண்டது என் சொல்
அலைந்த சொல்
கனம் கூடி
விழி திறந்து
பதியமாகத் தேடியது
ஒரு மனவயலை.
ஏதோ ஒரு தோட்டத்திலே
யாருமற்ற நேரத்திலே
புல்தரையில்
பூத்த பூவின் இதழ்களின்
நறுமணமானது
ஏதோ ஒரு பள்ளியில்
ஒற்றைச் சத்தம் ஏறிய
குரலைத் தாங்காது
ஜன்னலுக்கு வெளியே
வகுப்பை கவனிக்கும்
ஓர் மழலையின்
பகல்கனவானது
கடைசி வைகரை
வெளிச்சத்தின்
வரவை காணத் திறக்கும்
தூக்குக்கைதியின்
விழியிலமர்ந்த
நீரானது
ஏதோ ஒரு வீட்டில்
போர்முகம் கொண்ட
ஒருவனின் கையில்
சிக்கிய சிறு மகவின்
குரலின்
உறுமலானது.
என் சொல்
இப்போது என் சொல்லல்ல.
ஏதோ ஒரு சொல்
எங்கோ ஒரு மூலையில்
தானியமாயிற்று.