ஆழ்வகுப்பு
வகுப்பில் அன்றுவரை அமையாக் கவனம்
அவளில் கூர்மை கொண்டிருந்தது
அங்கே
ஆண்பெங்குவின்கள் அடைகாத்தன
வானவில்லின் வண்ணங்கள் கட்டவிழ்ந்தன
பூகோள அட்சரேகைகள் நிரைவகுத்தன
இருபடிச் சூத்திரங்கள் பொலிவு பெற்றன
வேதிச் சமநிலைகள் இறுக்கமடைந்தன
வெண்பாக்கள் வெளிச்சம் கொண்டன
சூரியனின் குறுக்கே கோள்கள் ஓடின
கருந்துளைகள் நட்சத்திரங்களை உண்டன
ஆழ் கிணற்றில் மட்டுமே அமையும்
சலனமின்மை அருகமைய
தன்னைச் சுற்றிப் பார்த்தாள்
வகுப்பெங்கும் அரவங்கள் அமர்ந்து
அசையா விழிகளுடன் பாடம் கேட்டன
சாளரக் கம்பிகளில் சுற்றியிருந்த
அன்னையின் வால்நுனி சுருண்டவிழ்ந்தது
அவள் படம் கூரை மேல் கவிந்திருந்தது
நேற்றிரவு கடவுள் கனவில் தோன்றி
என்ன வேண்டுமென கேட்டபோது
தன்னையும் தன் அன்னையையும்
பாதாள உலகமொன்றில்
அடைத்து விட வேண்டியிருந்தாள்
இவ்வுலகம் மிகவும் பிடித்துப் போயிற்று
இங்கேயே இருந்து விடுவதாக
முடிவெடுத்து விட்டாள்
உயிர்க் கனம்
புதிதாய்ப் பிறந்த ஈசல்கள்
விரைந்தெழுந்து விண்மீன்களை
விழுங்கத் தொடங்கின
விண்மீன்கள் குறைந்த கருவெளி
தன்னை நிரப்பிக் கொள்ள
மேலும் விண்மீன்களைப் பிறப்பிக்க
புதிதாய் பிறந்த விண்மீன்களை
தொடர்ந்து விழுங்கின ஈசல்கள்
பெரும் வெளிச்சக் குவியல் ஒன்று
பிரபஞ்சமெங்கும் அலைந்து திரிந்தது
நிலைகுலைந்து திகைத்த கருவெளி
ஈசல் கூட்டத்துடன்
ஒரு உடன்படிக்கை மேற்கொண்டது
ஈசல்கள் அனைத்தையும்
விண்மீன்களாக மாற்றி
அழியா வரம் அளிப்பதாக
ஒரு நிபந்தனை மட்டுமே;
இடம் பெயரால் ஓரிடத்தில் இருந்து
ஒளிர்ந்து கொண்டே இருப்பது தான் அது.
பெரும் ஆர்ப்பரிப்புடன் எழுந்து
விண்ணை நிரப்பின ஈசல்கள்
தமக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில்
நிலைபெற்று ஒளிரத் தொடங்கின
இயங்காமையின் இயலாமையில்
ஒரு கணத்திலேயே மனம் பிரண்டன
பிரபஞ்ச விதியின் மூர்க்கம்
உயிரின் துள்ளலை நிறுத்திய
அதே கணத்தில்
விண்மீன்களை உமிழ்ந்து
மடிந்து கருவெளியை நிரப்பின
மேலும் மேலும் விண்மீன்கள்
பிறந்த வண்ணம் இருந்தன