கார்த்திகை வெளிகாத்துக்கு சிவகாமி அம்மாளின் வெள்ளை நூல்புடவை எத்தனை தூரத்துக்கு தாங்கும். உடலைக் குறுக்கினார். உள்கட்டில் ஜமுனா கண்மூடியிருக்கமாட்டாள் என்று அவர் மனசுக்குள் ஓடியது. சுவத்தில இருக்கற மஞ்ச பல்ப்பைச் சுத்தி வட்டமா வெளிச்சம்.
புகைமூட்டமாட்டம் வெளிச்சம் நெறஞ்சிருக்கு. முற்ற வாசல் மழைச் சத்தத்தால் சலசலங்குது. கேணிப் பக்கத்திலிருந்து ராப்பூச்சிகளோட சத்தம் கேக்குது. சிவகாமி அம்மாள் கண்களை மூடினால் இருட்டுக்குள் இருட்டா அவரின் எண்ணம் விரியுது. ஈரக்காத்து மேல படுறப்ப நெனப்புச் சொக்கிப் போனார்.
“அம்மா”ன்னு கதவைத் தட்டும் சத்தம். திரும்பிப் படுக்கிறேன். “அம்மா… சுருக்க கதவத் தெறன்னா. நனஞ்சு வந்திருக்கேன்,”என்கிறான். என்னால் எழுந்திருக்கமுடியவில்லை. அவன் இம்புட்டு கூப்பிட்டும் நான் எழுந்திருக்காம படுத்திருக்கறது இன்னைக்குதான்.
அவன் உள்ளே வந்து நான் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலில் கிடந்த பச்சை ஈரிழைத் துண்டை எடுத்து தலைய துவட்டுறான். எந்த வேலயாச்சும் துப்பா செய்யறானில்ல… தலைய அழுத்தித் துவட்டறானா பாரு? சொல்லலான்னு வாயெடுத்தா எனக்கு சொல்ல சாயல.
அவன் கைலிய மாத்திக்கிட்டு சட்ட, கால் சராய முற்றத்துக் கொடியில் விரிக்கும் சத்தம் கேக்குது. எதையாவது வயித்துக்குப் போட்டானா என்னவோ? இந்த சிங்காரி ஆக்கற சோத்த வாயில வைக்க முடியல. இத்தன வருசத்தில சோறாக்கத் தெரியாம ஒரு பொம்பள இந்த ஒலகத்தில உண்டா?
மழைச் சத்தம் ஓட்டு மேல கேக்குது. போன வருசத்துக்கும் சேத்துப் பெய்யுது இந்த கிறுப்புடிச்ச வானம். கம்பளிக்குள்ள சுருண்டுக்கிடறேன். அவன் முற்றத்தில் நடந்து வரான். இல்ல பின்கட்டில இருந்து வரான்… சத்தம் எங்க இருந்து வருதுன்னு கணிக்கமுடியல… எங்கிட்டு இருந்தோ வந்துட்டான்.
என் பக்கத்துக் கட்டிலில் ஜமக்காளத்தை விரித்து உட்கார்ந்து, “அம்மாடா…”ன்னு உடம்பை முறுக்கறான். பாவம் பிள்ளை… அவனும் அறுவது வயச பிடிக்கப் போறானில்ல. பொழுதுக்கும் பஸ்ஸில அந்த சூட்டில உக்காந்து ஓட்டறானே. இப்ப என்ன அந்தக் காலமா? நொடிக்கு ஒரு வண்டி. ரோட்டில அத்தன ரஸ்சு. அம்புட்டுக்கும் ஈடு கட்டி வண்டி ஓட்டனுமில்ல…
“அம்மா… நல்லா தூங்கிட்டியா?”
என்னன்னு தெரியாம நான் ஏதாச்சும் சொல்லியிருக்கனும், அவன் பேசறான்.
“அம்மா… இன்னக்கி துறையூரில அந்த வேணுவப் பாத்தேன். சின்னப்பிள்ளையாவே இருக்கான். கோலிக்குண்டு கண்ணுன்னு சொல்லுவியே, அவனேதான்”.
எனக்கு ஒரு பக்கமாக படுத்திருப்பது கையை இறுக்கவும் அவன் கட்டிலின் பக்கம் திரும்பிப் படுத்தேன்.
“கேளும்மா… நாதன் பெரியப்பா இருக்காருல்ல. அவருக்கு மூட்டுவாதம் படுத்துதாம். ஒரு நா பாத்துட்டு வரனும். வேணுதான் சொன்னான்”.
“ஆட்டுக்கால் ரசம் வச்சி குடுக்கனும்டா… ஆனா அவர் செத்து…”
“அம்மா… எனக்கும் இந்த முட்டிக்கு முட்டி வலிக்குது. ரிடையர்டு ஆனப்பிறகு… எங்கயாவது ஆயுர்வேதத்துக்கு போய் பாக்கனும்”.
“நான் சொன்னா நீ திட்டுவ… நீ மொதல்ல குடிக்கறத நிறுத்து. எல்லா வலியும் தெசைக்கொன்னா போயிரும்”.
“தெனமும் எதுக்குன்னாலும் குடிக்கறதையே சொல்லு. நான் குடிக்கலன்னா எல்லாம் சரியா போயிடுன்னு சொல்லு, குடிக்கல”.
“ஒனக்கு சரியாயிடுண்டா… சரியாயிடும்”.
“வெளிய மழயில நிக்கிற சுண்டக்கா, கருவேப்பில செடிங்கள பஞ்சாயத்துக்காரங்க எடுக்கச் சொல்றாங்கம்மா”.
“என்னவாம் அந்த பழிகாரங்களுக்கு? வெயிலில தாக்கு புடிச்சு நின்னதுகள, மழயில பிடுங்க சொல்றானுங்க. பாவமில்ல… அவனுங்க வீட்டுப் பக்கம் வரட்டும், பேசிக்கறேன்”.
“ஏம்மா ரொம்ப இருட்டா இருக்குல்ல?”
“எத்தன தடவ சொல்றது அமாவாசன்னா இருட்டா இருக்குன்னு. இந்தக் கட்டையில போறவனுங்க முக்கு வெளக்குக்கு எண்ண ஊத்தலயோ என்னவோ?”
வெளியே தெருவில் மின்விளக்குகள் ஔிர்வதை நிறுத்தியிருந்தன.
“ஒனக்கு நாக்குல அக்கா ஒக்காந்துட்டா. கார்த்திக காத்துக்கு அவன் என்ன பண்ணுவான்?”
“என்ன சிலுசிலுப்பு! மூணா வருசம் இப்படி பேஞ்சது. ஏகத்துக்கும் வெயிலில காயவிட்டு இப்ப பெய்யறதால சிலுசிலுப்பு ஒறைக்கிது”.
“அதில்லம்மா… வயசாவுதில்ல?”
“என்ன வயசு… எங்கம்மால்லாம் எப்பிடியிருந்தா?” ங்கறப்பவே எனக்கு தொண்டைய அடச்சுகிட்டு இருமல் வருது. அந்த புடையடுப்பில கிடக்கிற தண்ணியதான் எடுக்க எந்திரிக்கிறானா பாருன்னு நானே எழுந்து தண்ணிய சொம்பில் ஆற்றிக் கொண்டுவந்து கட்டிலில் உட்காரவும், கட்டில் மடமட என்று சத்தம் எழுப்புது. முட்டிஎழும்பும் களுக்களுக்ன்னு புலம்புது.
“சுடுதண்ணி ஒரு மொடக்கு குடிக்கறியாடா… வேணான்னா பதில் சொல்றனா பாரு?”
மழ விட்டுபோச்சு. பூச்சிகளின் சத்தம்கூட இல்லாம தெருவே வாய் மூடிக் கிடக்கு. கிணுகிணுன்னு சின்ன உடுக்கய திருப்பற சத்தம். அது வார வழி காதுக்குத் தெரியுது. பெருமா கோயில் தாண்டி கொழிஞ்சி மரத்து வீட்டுக்குக் கிட்ட கேக்குது. குடுகுடுப்பக்காரன் ஏதோ சொல்றான். தெருவிளக்கு பளீர்ன்னு எரியுதே? உள்ள நடை லைட்டு எரியல, அதான் அவ்வளவு இருட்டு.
“வேலையில்லாம வீட்ல இருக்க கைகாலெல்லாம் உசுறத்துப்போவுதும்மா”.
“அது சின்னப்பிள்ளயா இருக்கயில இருந்து உனக்கு சத்தில்லாத திரேகம்… வயசாவுதில்ல… வயசாறத ஏத்துக்கடா”.
“என் வயசுக்காரங்க எல்லாம் இப்படியா இருக்காங்க…”
“ஆண்டவன் கொடுத்த ஒடம்புடா தம்பி… ஒவ்வொன்னுக்கும் ஒரு சேர்மானம், பிடிமானம் கூடக் கொறய இருக்கும்… ஒன்னு போல இருக்கறது படைப்பில்ல… அது செய்யறது… நம்மள்ளாம் படைப்புடா தம்பி…”
“என் சமாதானத்துக்குன்னு எதையாச்சும் சொல்லு”.
“ஒவ்வொரு சீவன்லயும் ஒன்னத்தேடி கண்டுபிடிக்குமாம் சிவம்… ஒன்னுபோல இருக்கறத விட்டுட்டு போல இல்லாதத… தானா தனக்குள்ள ஆக்கிருமுன்னு எங்க அய்யன் சொல்வாரு…”
“ம்”
“அவரு இதெல்லாம் எங்களுக்கு சொல்லையில உன் பிராயந்தானிருக்கும்,”
“ம்”
“வேல செஞ்சது போதும்… வீட்ல எங்கக்கூட இரு…பேசு”.
“வேல இல்லன்னா மரியாத இல்லம்மா. ஒடம்பும் பலமில்ல…”
“ஏண்டா ருசியில்லாம போற… அது அப்படியே உன்ன இழுத்துக்கிட்டு போய் சலிப்பில நோயில தள்ளிரும்…”
“இப்ப மட்டும் நல்லாவா இருக்கேன்…”
“இது நோயில்ல… அதுப்பக்கமா போற…”
“என்னமோ போம்மா… இந்த வயசில நடக்க முடியாத நீ வாழ்க்கய பிடிச்சு வச்சிருக்க. எனக்குதான் விட்டுப்போச்சு”.
“நீ குடிக்கறத விடுடா”.
“கைகாலெல்லாம் நடுங்குதும்மா… விளையாட்டா பழகினது…”
அவன் குரல் தேயத்தேய புதர்லருந்து பாஞ்சு வராப்ல நாய் ஒன்னு கத்துது. நிறுத்தாம கத்துது. மத்ததெல்லாம் எங்க சுருண்டு கெடக்குதுக? ஒன்னு மட்டும் உயிரவிட்டு கத்துதேன்னு நெனக்கறதுக்குள்ள நாலஞ்சு நாய்ச் சத்தம் கேக்கவும் சரியா இருக்கு.
“பாத்தியாடா… மனசில நெனக்கறது நாய்க்கூட கேக்குது… நீ பேசி முடிச்சிட்டா வாய தெறக்க மாட்டியே?”
மறுவ மறுவ உடுக்கய அடிவயிறு கலக்க ஆட்டியபடி குடுகுடுப்பக்காரன் வரான்.
பெருமாளே… எதுமலயானே அவன அப்படியே எங்கவீட்டத் தாண்டி கடத்தி வுட்டுடேன். பாவி கருநாக்கு வச்சிடப் போறான்.
பக்கத்தில வந்திட்டான். நெசத்த ஒத்த சொப்பனம். எழுந்திருச்சி கதவுக்கிட்ட காத வச்சி ஏதாச்சும் சொல்றானான்னு கேக்கனும். நடராசு…ஏடா நடராசு ன்னு இவன கூப்பிட வாயெடுத்தா தொண்டய விட்டு சத்தம் வரல. கைகால உதறி எழுந்திருக்க உந்தறேன். கூப்பாடு போட்டுட்டேன்னு விருட்டுன்னு எழுந்திருக்கயில வாயே திறக்கல. கண்ணத் திறந்தா பாக்கறதுக்கு எதுவுமில்ல… கண்ண மூடிக்கிட்டா எத்தனையோன்னு கண்ணை மூடிக்கிட்டேன்.
மெல்ல நடராசு… நடராசுன்னே மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. அதத் தாண்டி ஒரு நெனப்புமில்ல. அவனயே கூப்புட்டுக்கிட்டே இருந்தா வந்துருவானா?தலைக்கு மேல நிக்கற காத்தாடியில தொங்கறான் அவன். அவன வாசலத் தாண்டி கொண்டு போறாங்க.
வரவேமாட்டானா? வரவேமாட்டானா? ஓங்கி மாரில் அடிச்கிக்க எடுத்த கையால் ஒன்றும் செய்யமுடியல. நானே கொன்னுட்டேன்… நாந்தான்… வளஞ்ச தளிர நிமுத்தாம முதுந்து காஞ்சத நானே சாச்சுட்டனே…
ஒடம்பு முழுக்க தடதடப்பு. மண்டக்குள்ள மின்னல் வெட்றாப்பல, யாரோ கூப்படறாப்ல இருக்கு. படபடன்னு மாரடிக்குது. சிவனேன்னு அப்படியே படுத்துக்க ராசாத்தின்னு படுத்துக்கிட்டேன். கட்டில் சட்டத்தைப் பிடிச்ச கை நடுங்கிக் கொண்டேயிருந்தது. யாரையும் கூப்பிடத் தோணல… சின்ன சத்தம்கூட கேக்கல. இருட்டுக்குள்… இருட்டு.
காலை வெளிச்சம் விழுந்த முற்றம் இரவின் ஈரத்தில் மினுக்கியது. சிவகாமிஅம்மாள் நெஞ்சு தடதடங்க எழுந்து உட்கார்ந்தார். அவர் உடம்பு முழுக்க தடதடப்பு இருந்தது. எழுந்து நிற்க முடியாமல் மீண்டும் உட்கார்ந்தார். ஐமுனா சுடுதண்ணியோடு முத்தத்தில் இறங்கி வருகிறாள். அம்மாளுக்கு அவளைக் கண்டதும் உள்ளுக்குள் ஒரு ஆசுவாசம். இரவைச் சொல்ல வார்த்தைகளை தேடிச் சேர்க்கத் தொடங்கினார்.