மாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

“மாசு, எலே, மாசு, எங்கிட்டடா தொலஞ்ச? இன்னெக்கு உன்ன பலி போடாம உங்கறதில்ல”. இரு கைகளாலும் வறட்வறட்டென்று தலையைச் சொறிந்து கொண்டே ராணி குடிசையிலிருந்து கத்திக் கொண்டு தெருவில் இறங்கினாள்.

“அய்ய, இம்மாம் கூப்பாடு ஏன் போடுதே? வருமில்ல. அத்த மணின்னு விளிச்சா என்ன?” என்றாள் கனகு.

“மணியாமில்ல, மணி, தாத்தைக்கு தாத்தன் பேரு நொண்டிப் பயலுக்கு! அவன் உனக்கு மச்சானா, சீறிக்கிட்டு வர, உள்ளார போயி கலயத்தை எறக்கிட்டு வெஞ்சனம் ஆக்கு. நாயம் பேசுதா?”

“குலவயிடாட்டா உனக்கு சாமி ஏறாது, அம்மையும், புள்ளயும் வாய் வலிச்சுக்கிட்டு நில்லுங்க”.

“இந்தா, கனகு, அத்த எம் புள்ளயின்னு இன்னொரு வாட்டி சொன்ன, சூட்டாங்கோலால நாவ அத்திடுவேன், ஆமா”.

ஊரின் கடைசி வீடு அவர்களுடையது. பழவூர் என்ற பெயருக்கு ஏற்றபடி மிகப் பழமையான ஊர் அது. மொத்தமே நாற்பது குடும்பங்கள்தான். புஞ்சையில் அவர்கள் பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. வடக்குத்  தெற்காக ஓடும் வீதிகளில் அவரவருக்குத் தோன்றிய விதங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள், குடிசைகள். சிலது தெருவையும் வளைத்து முன் துருத்தி நிற்கும். சில குடிசைகள் பம்மிக் கொண்டிருக்கும். அதனால் அதிகமாக கிழக்கு பார்த்த வீடுகள் காணப்படும். பெரும்பாலும், நாட்டு ஓடுகள் அல்லது கூரைகள்; தாழ் கூரை அமைப்புகள், குறுக்குச் சுவர் மட்டுமே எடுக்கப்பட்டு இரு அறைகளாகத் தோன்றும் வசிப்பிடங்கள். மிகச் சிறிய ஜன்னல்களும், மேற்கூரையில் ஒளிக்காக சிறு சதுரக் கண்ணாடிகளும் பதிக்கப்பட்டிருக்கும். ராணியின் குடிசைதான் குடித்தனங்களின் எல்லை. அதை அடுத்து பருவங்களில் சடைக்கும் காய்களோடு ஊராரின் பேய்க் கதைகள் வாழும் பெரிய புளிய மரம். அதை அண்டிப்படர யத்தனிக்கும் காட்டுக்கொடி. பிறகு உடைக்காடுகள், முள் மரங்கள், கத்தாழைச் செடிகள், குறும்பூக்களும், காட்டுப் பூக்களும் படர்ந்திருக்கும் பாதை வழிகள். அவற்றின் ஊடாகத்தான் எந்த கிராமத்திற்கும் செல்ல முடியும்.

முருகேசன் செட்டிகிட்ட எண்ணை வாங்கி வருவதற்காக சின்னம்மா கொடுத்தனுப்பிய குப்பியுடனும் பணத்துடனும், தன் வளைந்த காலை இழுத்து இழுத்து குறும்பூக்களிடம் நெருங்கி பேசிக்கொண்டிருந்தான் மாசிலாமணி. ”நீங்க பூமில காங்குறீங்க, என்னய மாரி வளஞ்சு வளஞ்சு அந்த மானத்தையே தொடப் பாக்குது அந்தால நிக்குற தென்ன. குள்ளயன், குள்ளயங்குது என்னய! பாத்துக்கிடுங்க, நான் தென்னய மாரி உசந்து மான நிலாகிட்ட போவன். உங்களுக்கு என்ன வாங்கியாரட்டம்?”

“தத்தாரி நாயே! எண்ணக்கு காத்துக் காத்து கூவுதேன். வரப்புல பெனாத்திக்கிட்டு கிடக்க,” என்று கத்திக்கொண்டே அவன் காலை அவள் எத்தவும் அவன் உருண்டு முள் படுகையில் விழுந்தான். உடலை இழுத்து இழுத்து அவன் மேடேறுகையில் அவளுக்கு ஒரு குரூர திருப்தி ஏற்பட்டது. சிராய்ப்புகளில் துளிர்க்கும் குருதிக்கோடுகளில் தன் மனம் கொக்கரிப்பதை அவள் உணர்ந்தாள். அவனை மேலும் இம்சிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. இவனால் அல்லவா அவள் இந்த கேடுகெட்ட ஊருக்கு வாழ வந்தாள்? ”பச்ச புள்ள தாயீ, அப்பன் காட்டுல பாடுபடுதான், புள்ளய எப்படிப் பாக்க; உன்னக்க முறதான் தாயீ” என்று சொல்லிச் சொல்லி அவளை ஒரு பட்டி ஆட்டுக்கு அப்பன் இங்கே பத்தி விட்டு விட்டான். மறு வருடமே சீக்கில் விழுந்து செத்தும் போய்விட்டான். கனகுவும் இந்தப் பொட்டக்காட்டுக்கு வந்துவிட்டாள். ஆனால், இப்போது எண்ணை வேண்டும். இவளே போய் வாங்கி வரலாம். ஆனால், முருகேசன், கையைப் பிடித்து நேரம் காலம் தெரியாமல் வழியத் தொடங்கிவிடுவான். இவள் போய் நின்றால் கொஞ்சம் மளிகை கூடுதல் நிறையுடன் கிடைக்கும். மேலும் வீட்டில் கட்டியவனும், இவள் தங்கையும் தனியாக இருக்கிறார்கள்.

‘அய்ய, சின்னம்மை மூஞ்சி செவசெவன்னு கடக்கே. எண்ணதான இந்தா கொண்டிட்டு வாரேன்”.

‘ஆமா, நொண்டிக்கால வச்சுக்கிட்டு குருதையில வர மகராசரு.’.

அளவு குறைந்திருந்த எண்ணைக் குப்பியைப் பார்த்ததும் அவளுக்கு மீண்டும் ஆவேசம் அதிகமாகிவிட்டது. ”என்னடா எண்ணய குடிச்சுப் போட்டயா, பேதியில போக நீயி, உன்னய பெத்து அதால செத்தும் போனாளே மவராசி, என்னயக் கூட்டிக்கிடு தாயி. உம்மவங்கூட தாளல இம்ச,” என்று அவள் ஒப்பாரி வைக்கவும் அவள் கணவன் மணியை முறைத்தான். “ராஸ்கோல், என்ன முழிக்கே, என்ன புரணி பேசலாம்னு எண்ணிக் கிடக்கீரோ வாத்தியாரு? எண்ணைய எங்க கொட்டின?”

மாசிலாமணிக்கு பொய் சொல்லத் தெரியவில்லை. ”அங்கத்தாளுக்கு களுத்து சுளுக்கிட்டு. அத்தான் எண்ணய தெளிச்சு சுலட்டி விட்டன்,” என்றான். இப்போது அப்பன் பளாரென்று அறைந்தான். “காட்டுல சவமா சாவறேன் இதுல, எவளுக்கோ என்னலே கொடுக்கே? உந்தொடுப்பா அது?”

“ஆமாய்யா, உம்புள்ள மம்மத ராசா, தொடுப்பு வருவாளுகல்லா?” என்றாள் ராணி.

“இந்தா புள்ள, இன்னி முச்சூடும் இவனுக்குத் திண்டியில்ல. கட்ட தொட்டிக்கு உடச்ச ஒடமுள்ளு வோணும். அத்த செய்யச்சொல்லு. சோறு காட்டாதே.”

“கனகு எப்படியும் தின்னக் கொடுக்கும்,” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டே அவன் வேலையைத் துவங்கினான்.

“வெரசா குடிச்சுப் போட்டு சட்டியத் தா. உன் ஆயி பாத்துச்சோ பலி போட்டுடும்,” என்றவாறே வந்தாள் கனகு.

“வவுறு கத்துது கனகு, சோறு, சோறுங்குது. இம்மாம் வேல செய்யச் சொல்ல காந்திக் காந்தி வருது”.

“பொறவு? உன்னயைல்ல சொல்லோணும்? எங்கனாச்சும் ஓடிப் போயிரு, முழு கஞ்சியாச்சும் கிட்டும்.”

“மெய்யாலுமா சொல்லுறவ?” என்று கேட்டுக்கொண்டே அவன் தன்னை நோக்கி வாலைக் குழைத்து வந்த நாய்க்கு கஞ்சியில் துளாவி சில பருக்கைகளை எடுத்து வைத்தான்.

‘பிச்ச எடுத்த பெருமாளுகிட்ட புடுங்கித் தின்ன கதையாட்டமில்ல இருக்கு? உன் ஆயி வந்துடும், நா வாரேன்’.

“உனக்க அக்கையென சொல்ல நா வல்ல,” என்றவனைப் பார்த்து அவள் கழுத்தை நொடித்துப் போனாள்.

மாசிலாமணிக்கு என்னவோ போலிருந்தது- கனகு ஏன் போகச் சொல்லுது? எங்கிட்டுப் போவன்? என்னா வேல தெர்யும்? இங்கன அதுவாச்சும் கஞ்சி ஊத்துது. முகம் பாத்து சொல் எடுக்குது. அது எம்மாம் அளகாயிட்டே வருது. அதப்பாக்கச் சொல்ல மேலுக்கு சுரம் அடிக்குது, உள்ளுக்கு குளிரெடுக்குது. வடக்கால கோயிலில பாட்டு போடுற மாசம் ஊசிக் குளிரு அடிக்குதில்ல, அத்த மாரி. ஆனா, என்னைய எங்கிட்டு போச் சொல்லுது, அதுக்கும் என்னயப் புடிக்கலையா?

ஊருக்கே ஒரு ஊரணி. ஆடு, மனிதன் யாவரும் சமம். இவர்களைப் போல பாவப்பட்ட பிள்ளையார் தானும் முன்னேறாமல், இவர்களையும் முன்னேற்றாமல் அசையாமல் சலித்துப் போய் உட்கார்ந்திருந்தார். அவருக்கு மாசிலாமணிதான் பேச்சுத்துணை. அவர் இடைத் துண்டையே உருவி அந்த ஊரணியிலேயே அதை நனைத்து அவர் உடம்பை துடைப்பவன் அவன்தான். ஒரு குவளையைக்கூட அவருக்கென கொடுக்காத ஊர் அது. பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டும் எட்டுக்கல் தொலைவிலிருந்து ஒருத்தர் புதுத் துண்டு, மாலை, விளக்கு, சர்க்கரைப் பொங்கல் என எடுத்து வருவார். அன்று மட்டும் ஊரும், பிள்ளையாரும் மகிழ்வாக இருப்பார்கள். படையாச்சி முனி என்ற அவர்கள் ஊரின் தெய்வமும்கூட எட்டுக்கல் தொலைவில்தான் இருந்தது. அந்த ஊர் பங்காளிகள் படையல் வைக்கும்போது இவர்களுக்கும் அழைப்பு உண்டு, விருந்தும் உண்டு.

மணி ஏன் சோகமாக இருக்கிறான் எனக் கேட்க பிள்ளையாருக்கு ஆசை எப்படியும் அவனாக சொல்லத்தானே போகிறான்?

“நீ சொல்லு சாமி, நீ மட்டும் அளகாவா இருக்க? உந்தொப்பை முன் நிக்குது, எம் மண்ட முன் நிக்குது, அம்மாம் பெரிசு நீ, உன் காலு சின்ன சில்லாட்டம் காங்குது. எங்காலு வளஞ்சு நிக்குது. உன்னய தூக்கிக்கிணு அந்த சுண்டெலி ஊர் சுத்துதாம். அய்ய, கோவிக்காத, நான் நாயம்தான் சொல்லுதேன். உன்னய விட்டா ஆரு கேப்பா? ஆனா, நீ சாமி, அல்லாம் உனக்கு அளகு. அல்லாம் உன்னால ஏலும். ஊரு சனம்தான் என்னய காங்கையிலெல்லாம் சிரிக்கு. கனகு இருக்கில்ல, கனகு, அதுக்கும் என்னையப் புடிக்கலை போல. என்னய ஊர விட்டுப் போங்குது. உனக்கும் சோடியில்ல, எனக்குமில்ல”.

தன் தனிமையை அவன் உணர்ந்த விதம் அவருக்குச் சிரிப்பாக இருந்தது. ”சரி, போயாரேன், உனக்கு இருட்ல பயந்து வராதில்ல? ஆமா, நீ சாமியில்ல, கால முச்சூடும் நீ இப்படித்தான்” பிள்ளையாருக்கு இதற்கும் சிரிப்புதான் வந்தது.

ஆனால், கனகு சிரிக்கவில்லை. கண்களால் சிரித்து, உதட்டைச் சுழிப்பாளே, அது இல்லை. அவனுக்குப் பசித்தது. ஆனால், யாரிடம் கேட்பான் அவன்? அலுமினிய தட்டை ஓசைப்படுத்திப் பார்த்தான். அவள் துளிக்கூட நகரவில்லை. இளித்துக் கொண்டே, அவள் பார்க்கச் சத்தம் செய்து தண்ணீர் குடித்தான். அப்பொழுதும் அசைவில்லை.

எங்கோ சென்றிருந்த ராணி நல்ல சேலை உடுத்தி குடிசையின் உள்ளே வந்தாள். வெளியில் போகப் போகும் சந்தோஷத்தில் அவனிடம், ”எலே, மாசு, அப்பனும் நானும் புல்லூர் கொடைக்கு போயாரோம். சாக்க விரிச்சு தெருவில படு. கனகு பயணம் வல்ல,” என்றாள். அப்பொழுதும்கூட கனகு ஒன்றும் சொல்லவில்லை.

அவள் போனபிறகு, “கனகு, கொடைக்குப் போவணுமா?” என்று கேட்டான். அவள் கண்களில் நீர் திரண்டது. “அழுவாத, புள்ள, உன் மாப்பிள உன்னய ப்ளேனில்ல அதிலயே கூட்டிப் போவான்.” அவள் இன்னமும் அழுதாள். மணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வயிறோ கத்துகிறது, இவளோ அழுகிறாள். அவன் பிள்ளையாரை நினைத்துக் கொண்டான். தூக்கம் வரவே சாக்கை எடுத்துக்கொண்டு வெளியில் போனான்.

பூமியில் பார்க்கும் குறும்பூக்கள் வானத்திலும் சிதறிப் படர்ந்திருந்தன. காற்றில் பூக்களின் உயிர் தெரிவதைப் போல் அவைகளின் கண் சிமிட்டல்களில் உயிர் இருந்தது. ஆனால், இரண்டுக்குமே வாசமில்லையோ?கனகு வருவதை அவன் கவனிக்கவில்லை.

‘வா, உள்ளார, சோறு துன்ன,’ என்றாள்.

“நீ உங்கலயா?”

‘அத்தவிடு, நீ துன்னு. மெய்யாலுமே கொடைக்கா போறாஹ?’

“பொறவு?”

‘எனக்க பயந்து வருது. மாமாவும், அக்கையும் என்னைய என்னைய…’ அவள் விசும்பினாள்.

அவன் விழித்தான். ”அளுவாதே, அளுவாதே,” என்று சொல்வதைத் தவிர அவனுக்கு ஒன்றும் சொல்ல வரவில்லை.

பல நொடிகளுக்குப் பிறகு அவள் சொன்னாள், ‘நமக்கு கண்ணாலம் கட்டி விடுவாஹ போல’

மணியின் உணர்ச்சிகள் கலவையாயின. சின்னம்மையா கனகுவ எனக்குக் கட்டி வக்கும்? அப்பன் ஒக்கவே மாட்டாரு. இது சின்னப் புள்ள,என்னாத்தையோ போட்டு மசக்குது. “அய்ய, என்னய ஆருக்கும் புடிக்காது புள்ள. குருதயில வந்து மானத்ல உன்ன மவராசா தூக்கிக்கிணு போவாருங்கேன்.என்னயக் கட்டிக்கிட வேணாம் ஆத்தா, இதுக்கா அழுவரவ”

“உன்னய எனக்கு புடிக்கும். முன்னால எனக்கும் கட்டிக்கிட ஆசதான். ஆனா, இப்ப உன்னைய மோசம் செய்யப் பாக்குறாங்க.”

மாசிலாமணிக்கு அவள் சொல்வது புரியவில்லை. கனகுவை கண்ணாலம் செஞ்சா அது அவனுக்கு சோறு தரும், சிரிக்கும். அது தன்ன கட்டிக்கிட விரும்பலயா?முன்னால ஆசைன்னு ஏதோ சொல்லுது? கனகு பிச்சியைப் போல வெறித்துக் கொண்டிருந்தாள். “கனகு, நம்ம கண்ணாலம் வோணாம், அம்புட்டுத்தானே? நா ஓடிப்போயிடுதேன். அளுவாத புள்ள,” என்றான்.

“எம்மேல ஆண. நீ எங்கிட்டும் போயிடாத. நம்ம புள்ளயாருக்கு பூச செய்வாங்கள்ள, அது நெனைப்பிருக்கா?”

அவன் மறுபடியும் முழித்தான்.

“அந்த அய்யரு, அல்லா எடத்தையும் பெருக்கி, நீரு தெளிச்சு, கோலம் வரஞ்சு, சாமிக்கு குளியாட்டி, துண்டு கட்டி, பத்தி கொளுத்தி, தென்னங்காய் ஒடச்சு, பளம் வச்சு, சூடம் கொளுத்தி, அதான் பொங்கலு படயல் காட்டி நமக்கெல்லாம் தருவாரில்ல’.

“ஆமாங்கேன், அதுக்கு நா கெடக்கு”.

“அத்த மாரி நீ! உனக்கு பளுத என்னாத்துக்கு? என்னய உனக்கு கட்டி ஏமாத்தப் பாக்குறாவ,” என்றாள் கனகு.

“என்னா பேசுறவ, நீயி அம்சமில்ல!”

“இல்ல, மணி நானு அப்படியில்ல”.

சுவர்க்கோழிகளும், தெரு நாயின் ஊளையும் இவர்களின் ஊமைப் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருந்தன.

சில நாட்கள் ஒன்றும் சலனமில்லாமல் சென்றன.

அதிகாலையில் ஒரு நாள் கனகுவையும், மாசுவையும் புளிய மாரால் அடித்துக் கொண்டே குடிசையின் வாயிலுக்கு வந்த ராணியின் பெருங்குரல் ஊரை எழுப்பியது. “சீமயில வளந்த புள்ள சீப்பட்டுப் போனாளே! நொண்டி முடத்துக்கு முந்தி பந்தி விரிச்சாளே!”

“என்னாலே, முழிக்கச் சொல்ல ஒப்பாரி வக்கறவ,” என்றாள் அங்கத்தாள்.

“வாரி முடிஞ்சுக்கிட்டு வந்துட்டாளுக! சிரிச்சுப் போச்சே எம் பொளப்பு! அட, மாசு,எம்புட்டு நா கருவின நீ, சின்னப் புள்ளய… சீச்சீ…” என்று ராணி கூவுகையில் அவன் நடுங்கினான். இதெல்லாம் என்ன என்று மலைத்தான். தெரு நாய் அவனைப் பாவமாகப் பார்த்துவிட்டு கல்லடிபட்டு ஓடியது.

“இந்தக் குள்ளனா, இந்த மாசுவா, நொண்டிக்காலனா, அந்த சிறுக்கியா, எடுபட்ட கைகாரி” என்று ஊர் சுவாரசியமாக மேய்ந்தது. ஊர்ப்பெரியவர்கள் மாசுவை தாறுமாறாகக் கேள்வி கேட்டார்கள்.

“அது எனக்க சின்னம்ம மாரி. சின்னம்மைக்கு அது உடம் பொறப்புல்ல, அதும் புள்ளாட்டமா நானு. அதும் புள்ள என்னக்க தம்பி,’ என்றான் மாசு. “அவன் கிறுக்கன், நீ சொல்லு தாயீ,” என்றார் தலைவர்.

துடிக்கும் உதடுகளோடு கண்ணீர் மல்க நின்ற கனகு, மணியை ஏறிட்டுப் பார்த்தாள். “என்னய விட்டுப் போடாத, அன்னைக்கு நானு சொன்ன பேச்சு கியாபகம் வருதா?” என்று அவள் கண்ணீர் கேட்டது.

“பச்சப் புள்ளய கேக்குறீக நல்லா? அது தாயீ, நா மக்க. அம்புட்டுத்தான். அது இத ஒத்துக்கிடுச்சுன்னா நாயம் பேத்தறத நிப்பாட்டுங்க,” என்றான் மாசிலாமணி.

“கனகு, நீ என்னலே, சொல்ற, அந்தத் திருட்டுப் பயல தண்டிக்க வேணாம்?”

“வேணா, மணி சொன்னா சரி,” என்றாள் கனகு.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.