சரவணன் அபி கவிதைகள் – இருக்கலாம், இல்லப்பணிப் பெண்டிரின் ஒரு நாள்

 சரவணன் அபி

இருக்கலாம்
இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்
ஒரு காலை நேரச் சலனம்

இருக்கலாம்

வடிவதற்கேதும் வழியின்றி
பொங்கி நிரம்பி
ஆவியாவதொன்றல்லாமல்
தன்னைக் கரைத்துக் கொள்ளவியலா
இந்தக் கடல்
ஈர்ப்பு விசையனைத்துக்கும் மேலென
ஏதோவொன்று அழுத்தி வைத்திருக்கும்
அத்தனை நீரும்
பொதிந்து வைத்திருக்கும் இருள் அறியா
அத்தனை அந்தகாரங்களும்
என் சுயமாகக்கூட இருக்கலாம்.

வெண்ணிற பனித்துகில்
தொங்கும் திரைச்சீலை
அசைவற்ற நிசப்தம்
கொதித்தடங்கிய பாலின்
மென்சருகாடை மோனம்
கரையின் மீது காத்திருந்து
பறக்கத் துவங்கும்
முதல் சிறகசைவில்
கலையும் நீர்ப்பரப்பு
என் சிந்தையாகக்கூட இருக்கலாம்.

அசைந்து கொண்டேயிருக்கும் உணர்வுகளை
அசையா ஒரு காட்சியென
பிழையேதுமின்றி ஒரு முறை
ஒரே முறை
வடிக்க முடிந்துவிட்டால்
ஓய்ந்துவிடும் இதுவென்
ஆவியாகக்கூட இருக்கலாம்.

இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்

எதிரும் புதிருமான
தெருக்களிலெல்லாம்
காலடி ஓசைகள்

அதிகாலை
அத்தனை பாதங்களும்
அழகிய பெரும் வீடுகளின்
தானியங்கிக் கதவுகள் திறந்து
சாலைகள் நோக்கி
சாரி சாரியாக நடக்கும்

பேருந்து நிறுத்தங்கள்தோறும்
இந்தோனேசிய தலைமுக்காடுகள்
இந்திய கைப்பைகள் குளிர்க் கண்ணாடிகள்
பிலிப்பினோ விரிந்த கூந்தல் அலங்காரங்கள்
சந்தனச் சுண்ணம் பூசிய பர்மிய கன்னங்கள்
குறைவும் நிறைவுமாக விதவிதமான ஆடைகள்
ஏதேதோ மொழிகள்

சுழலும் அத்தனைக் கண்களிலும்
ஒன்றே தாபம்
ஊடலும் கோபமும்
மகிழ்வும் பிணக்கும்
பேருந்து நிறுத்தங்களில் தொடங்கி
பேரங்காடிகளில் தொடர்ந்து
நிறுத்தங்களில் நிறையும் இன்று
சிங்கப்பூரில் ஞாயிறு

ஒரு காலை நேரச் சலனம்

அலுவலகம் செல்லும்
அவசரத்தில் அனைவரும்
தத்தம் பேசியில், புத்தகத்தில், உரையாடலில்.
அமர்ந்திருந்த எனக்கெதிரே
தலைநிமிர்ந்து அமர்ந்திருந்தாள்.
மறுமுறை நோக்க வைக்கும் முகம்,
ஏதோவோர் எண்ணம்,
ஏதோவொரு நாடகம்,
எங்கோ நோக்கிய
தளும்பிய விழிகள்
கணப்போதும் இமைக்காமல்,

பார்வையேதும் அசையாமல்
தன்னிச்சையாக மேலெழும்பும் கை
யாருமறியாமல்
நீரூறும் நாசியைத் துடைக்கும்,
சிறிதே விரிந்த உதடுகளிலும்
உறைந்த சலனம்;

யாருமே அவளைப் பார்க்கவில்லை,
அவளைத் தவிர யாரையுமே நான் பார்க்கவில்லை.
இருக்கையைவிட்டு எழாமல்,
வெறித்து எதுவும் பார்த்துவிடாமல்,
வழியப்போகிற அந்தத் துளிகள்
ஏன் என் தோள் விழக் கூடாது?

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.