நினைவுகளால்
பாதை
சம்பவங்களை உருவாக்குதல்
கவிதை ஒரு கடலாகிறது
நினைவுகளால்
♪
முதலாம் நிறுத்தத்தில்
நிற்கிறேன்
நீ சொன்ன
பேருந்து வந்துவிட்டது
நான் அதில் ஏறவில்லை
சன்னலுக்கு அருகில்
இருக்கை கிடைத்திருக்கிறது
நான் அதில் உட்காரவில்லை
நகரத்தின் நிசி கடந்திருப்பேன்
வித்தியாசமாக
இரண்டு பாதைகள்
நான் எதையும் தெரிவு செய்யவில்லை
எதை தெரிவு செய்தாலும்
பேருந்தை நடத்துனன்தான் கொண்டு செல்ல போகிறான்
ஊரை விசாரித்துக் கொண்டிருக்கும்போது
பேருந்து அங்கும் இங்கும் அசையவில்லை
நான் வாசலில் விழப் பார்த்தேன்
ஒரு வாசகன் என்னைப் பிடித்துவிட்டான்
இது நகரத்தின்
கடைசி நிறுத்தமென நினைக்கிறேன்
புதிய வாசகன் ஒருவன்
வீட்டை காட்டித் தருகிறான்
பறவைகளின் ரெக்கைகளால்
அது அமைக்கப்பட்டிருக்கிறது
இந்த வீட்டுக்கு ஏன்
பேருந்தில் ஏறாமல் நினைவுகளால்
ஏறி வந்திருக்கிறேன்
நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்
கவிதையை இங்கு வைத்துதான்
நான் எழுதப் போகிறேன்.
பாதை
♪
இந்தப் பாதையை நீங்கள்
கடந்து என்னிடம் வருவதெனில்
காற்றில் ஏறவேண்டும்.
காற்றில் ஏறுவதற்கு
உங்களுக்கு இரண்டு தெரிவுகள் உண்டு
ஒன்று ஏணி தரப்படும்
மற்றொன்று சிறகுகள் தரப்படும்.
பயணத்தைத் தொடரலாம்
வழங்கப்பட்ட நிமிடங்களுக்குள்
பாதையைக் கடக்க வேண்டும்
சரியான தெரிவு முறை அவசியம்
இல்லையெனில்
ஏணியும் சிறகுகளும் மறைந்துவிடும்.
சிறிதளவு யோசிக்க
இலவச நேரம் தரப்படுகிறது
எல்லோரும்
மிக எளிதாகவே
பாதை கடந்து வருகிறார்கள்.
எனக்கு ஒரே ஆச்சரியம்
இது எப்படி சாத்தியமாச்சி
ஒருவனை பிடித்துக் கேட்டேன்
அவன் சிரித்துவிட்டுச் சொன்னான்
நீங்கள் ஏறிய கற்பனையில்தான்
நாங்களும் ஏறிப்
பாதையைக் கடந்து வந்தோம்.
சம்பவங்களை உருவாக்குதல்
♪
காட்சியின் ஒருபுறத்தில்
கடலை பறவைகள்
தம் சொண்டில் அள்ளிச் செல்வதாய்
சம்பவம் தொடங்குகிறது
காட்சியின் மறுபுறத்தில்
எறும்புகள் சில
கடலை இழுத்துச் செல்வதாய்
சம்பவத்தை உருவாக்குகிறேன்
எப்படியாயினும்
சில பொழுது
நான் பறவையாகின்றேன், ஏனென்றால்,
எப்படியாயினும்
சில பொழுது
நான் எறும்பாகின்றேன், ஏனென்றால்,
… …
கடலை அள்ளிச் செல்லும்
பறவைகளுடனும் எறும்புகளுடனும்
புதிய உரையாடலை தொடங்க வேண்டியிருக்கிறது
உரையாடலின் மய்யத்தின்போது
எனது இரண்டாம் பரம்பரை
பறவைகளாய் வனத்தில் வாழக்கூடும்
உரையாடல் முடிவுறும்போது
எனது மூன்றாம் பரம்பரை
எறும்புகளாய் ஆங்காங்கே வாழக்கூடும்
காட்சி வேறு வேறு ஆயினும்
சம்பவம் உங்களைக் கடந்து செல்லும்
சிறு கணத்தில்
கடலை ஒரு கிண்ணத்தில்
நீங்கள் பருகிக் கொண்டிருக்கலாம்.
கவிதை ஒரு கடலாகிறது
கடல் குடித்த
சாம்பல் நிறப் பறவை
என்னை ஊமையாய்க் கடந்து செல்லும் சிறு கணத்தில்
அதன் சொண்டிலிருந்து
மீனொன்று என் அருகில் விழுகிறது.
பேப்பரொன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
சொற்கள் மீனைக் கவ்வி
எனது கவிதையில் அமர்த்துகின்றன.
கவிதை முழுக்க மீன் குஞ்சுகள்
கவிதை ஒரு கடலாகிறது.
மீன்கள் பசியில்
சொற்களை தின்ன
கவிதை மணலாகிவிடுகிறது
மீன்கள் வாழ்வதற்கு நீர் இல்லை
பெரும் துயர் மரண வலி
மீன்களுக்கு வாழ்வு கொடுப்பதற்காய்
எனது பேனா
மேலும் மேலும் கவிதைகளை வரைகிறது.
கவிதை பெரும் கடலாய் வளர்ந்து
நிரம்பித் ததும்புகிறது சொற்கள்.
பேனாவிடம் உள்ள கற்பனைக்கு
மீன்கள் விருப்பம் தெரிவித்தால்
இன்னுமொரு கடலை உருவாக்கவும்
தயாராக இருக்கிறது.